Wednesday, October 28, 2020

டிக்..டிக்... திக்...திக்...

டிக்..டிக்... திக்...திக்... 

-- பாளை ப. இசக்கி ராஜன் 


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சாமானியர்  வீடுகளில் நேரம் பார்க்கக் கடிகாரங்கள் எல்லாம் கிடையாது. அதனால் ஊரின் மையமான பொது இடம் ஒன்றில் பெரிய வெண்கல மணி ஒன்றை நிறுவி இருப்பார்கள். அதன் மூலம் ஒலியை எழுப்பி, மக்கள் நேரத்தைத் தெரிந்து கொள்ள வகை செய்திருந்தார்கள். அது எத்தனை முறை அடிக்கிறது என்பதை வைத்து,  பொதுமக்கள் நேரத்தைத் தெரிந்து கொண்டார்கள்.

கல்வி நிலையங்களில், தோசைக்கல் அளவிலான ஒரு பொருள் வெண்கலத்தில் இருக்கும். அதில் ஒரு இரும்புக் கம்பி கொண்டு ஓங்கி அடிப்பார்கள். அதில் வரும் ஒலி தான், வகுப்பு துவங்குவதற்கும், முடிவதற்குமான அறிவிப்பு. சில இடங்களில், பேருந்துச் சக்கரத்தின் மையப் பகுதியில் இருக்கும் இரும்பு பைதாவைத் தொங்க விட்டு அதைத் தட்டி ஒலி எழுப்புவார்கள். வேறு சில இடங்களில் ரயில் தண்டவாளத்தின் துண்டுகளைப் பயன் படுத்துவார்கள். வெண்கல மணி, தண்டவாளத் துண்டு எல்லாம் இப்போது முழுவதுமாக மறைந்து விட்டன. பல அளவுகளில் கைக் கடிகாரங்கள், சுவர்க் கடிகாரங்கள் இப்போது  வந்து விட்டன. 

அந்தக் காலத்தில் சுவர்க் கடிகாரம், (Wall clock), மேஜைக் கடிகாரம் (Table clock,) கைக்கடிகாரம், (Wrist watch) என்று பல வகைக் கடிகாரங்கள் இருந்தன. இவை இயங்குவதற்குச் சாவி கொடுக்க வேண்டும்.  இப்போது வருகின்ற சுவர்க்கடிகாரங்கள், Table Top கையடக்கக்  கடிகாரங்கள், பேட்டரி மூலம் இயங்குகின்றன. சுவர்க் கடிகாரத்தில் பெண்டுலம் என்று ஒரு தொங்கட்டான் உண்டு. அது வலது பக்கமும், இடது பக்கமும் சீராக அசைந்தாடும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு ஒலி ஒன்றை எழுப்பி நேரத்தைத் தெரிவிக்கும்.  நமக்குத் தேவைப்படும் நேரத்தில் ஒலி எழுப்பும் வகையில் மேஜைக் கடிகாரத்தில் ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் படிக்கின்றன காலத்தில், அதிகாலையில் எழுந்து படிப்பதற்காக இந்த வசதியைப்  பயன் படுத்தியிருக்கிறேன். 

சில நாட்கள் பல் வேறு காரணங்களுக்காக, அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். இதற்காகக் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒலி வரும் வகையில் மேஜைக் கடிகாரங்களில் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இந்த மேஜைக் கடிகாரங்களைச் சிலர் Time piece என்று சொல்வார்கள். இப்போது கைபேசிகளிலும் குறிப்பிட்ட நேரத்தை நினைவூட்டும் வகையில் ஒலி எழுப்பும் வசதி உள்ளது. நான் படித்த பாளை தூய சவேரியார் பள்ளி ஆசிரியரும், என் வகுப்புத்தோழனுமான அனந்த கிருஷ்ணனின் அப்பா திரு H. ராமநாதன் ஐயா அவர்கள், வானத்தைப் பார்த்தே, நேரத்தைத் துல்லியமாகச் சொல்லி விடுவார். 

நள்ளிரவு, அமைதி சூழ்ந்துள்ள பொழுதில், இந்த கடிகாரங்கள் வினாடிக்கொருமுறை டிக் டிக் என்று ஓசை எழுப்பும். இந்த ஓசையைக் கேட்கும் போது மனது திக் திக் என்று துடிக்கும். தொழில் நுட்ப வளர்ச்சியினால், இப்போது கைபேசி, தொலைக் காட்சிப் பெட்டி, போன்று நிறைய  electronic பொருட்களும் நேரம் காட்டும் வேலையைச்  சிறப்பாகச் செய்து வருகின்றன. அவை GPS மூலம், நேரத்தைத்  துல்லியமாகக் காட்டி வருகின்றன. 

நாம் எந்த நாடுகளுக்குச் சென்றாலும், அந்த நாடுகளுக்கு உண்டான நேரத்திற்குத் தானாகவே மாறிக் கொள்ளும் வசதிகள் வந்து விட்டன. சில நாடுகளில் Daylight Savings Time முறை நடைமுறையில் இருக்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டின் NSW மாநிலத்தில் ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய ஆறு மாத காலத்திற்கு நேரம் GMT + 10.00 Hrs என்ற கணக்கில் வரும். அக்டோபர் முதல் மார்ச் முடிய நேரம் GMT + 11 Hrs என்ற கணக்கில் வரும். ஏப்ரல் மற்றும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் கைபேசி போன்ற கருவிகளில் எலக்ட்ரானிக் கடிகாரம் தானாகவே பின்னோக்கிச் செல்வதையும் முன் நோக்கிச் செல்வதையும் கண்டு மகிழலாம். 

பொது இடங்களில் கடிகாரங்கள் வைத்து அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரங்கள், மணிக்கூண்டு என்ற பெயரில் இன்றைக்கும் அழைக்கப் பட்டு வருகின்றன. லண்டன் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 96 மீட்டர் உயரமுள்ள மணிக்கூண்டில், நான்கு பக்கங்களிலிருந்தும் தெரியும் வகையில் பெரிய கடிகாரங்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்த கடிகாரத்தின் குறுக்களவு 7 மீட்டர் ஆகும். இந்த மணிக்கூண்டு 31-5-1859 ல் துவங்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில்  மணிக்கூண்டு என்று அழைக்கப்பட்டது. பிறகு  Big Ben என்று பெயர் மாறியது. 2012 ம் ஆண்டு முதல், இங்கிலாந்து பேரரசி யான எலிசபெத்தைப் போற்றும் வகையில், எலிசபெத் கோபுரம் என்று அழைக்கப் பட்டு வருகிறது. 
clocks.jpg
clocks2.jpg
எங்களது வீடு  பாளை சாந்தி நகரில் இருக்கிறது. வீட்டுக்கு அருகில் உள்ள சீவலப்பேரி சாலையில், திம்மராஜபுரம் விலக்கு வரும். அங்கு நல்ல உயரமான மணிக் கூண்டு ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த மணிக் கூண்டை அடையாளம் காட்டித்தான், எங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு வழி சொல்லவேண்டும்.இந்த மாதிரியான மணிக் கூண்டுகள் இப்போது, நேரத்தைச் சரியாகக் காட்டி உதவுகிறதோ இல்லையோ, வீடுகளுக்கு வழி காட்டி மக்களுக்கு உதவுகின்றன.
----No comments:

Post a Comment