Friday, May 2, 2014

தமிழ் இலக்கியங்களில் யாழிசை

http://blog.dinamani.com/?p=3634
சுமேரியா பற்றிய குறிப்புகள் உள்ளன

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள். பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். நரம்புக் கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ் முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.

இந்த யாழ் கருவியின் பெருமையை தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு எடுத்துரைக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த கட்டுரை அமைந்துள்ளது.

இயற்கையோடு எழுந்த இசை தமிழிசை. ஆற்றொலி, அருவியொலி, வண்டொலி, தும்பியிசை, குயிலின் கூடி ஒலிக்கும் இசை தமிழிசையாம்.

யாழ் நூல் என்ற பழந்தமிழ் நூல் விபுலாநந்தரால் இயற்றப்பட்டதாம். அதன் சிறப்பியல்புகளை விபுலாநந்தர் விளக்கியுரைத்தபோது ஈர்க்கப்பட்ட பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், யாழை மீட்டுருவாக்கம் செய்ய முயற்சி செய்தது தனிச் சிறப்புடையதாம். வில்யாழ், பேரியாழ், சீறியாழ், செங்கோட்டியாழ், மகரயாழ், சகோடயாழ் என அதன் பகுப்புகள் அமையும்.

பண்டை நாளில் சிறப்புப் பெற்றிருந்த மிசரம் என்னும் எகிப்து நாட்டிலும், பாரசீகக் கடற்கரை நாடான அழிந்து விட்ட சுமேரியாவிலும் “சால் தேயா’ எனச் சிதைந்த சோழ தேசத்திலும், சேரர் வென்று ஆட்சி புரிந்த கிரேக்கத் தீவு, அதனருகே இருந்த யவனபுரத்திலும், உரோமர் வருதற்கு முன் இத்தாலியிலும், பழைய ஸ்பெயின் தேசத்திலும், தமிழ் மக்கள் வாழ்ந்து நாகரிகம் பரப்பினர் என மேற்றிசை அறிஞர்கள் தம் ஆராய்ச்சியில் கண்டு வெளியிட்டுள்ளனர். இந்நாடுகளில் யாழிசைக் கருவி தெய்வமாகவே போற்றப்பட்டது என விபுலாநந்தர் அறுதியிட்டுக் கூறுகின்றார். சிந்து நதி தீரத்தில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் “முகிஞ்ட தரை’ எனப் பொருள் தரும் மொகஞ்சதாரோவின் இறந்தோர் மேடான இடத்திலும் மிதுனராசி யாழ் என்ற பெயரால் அழைக்கப்பட்டு திணையாழுருவக் குறியீடு செய்யப்பட்டுள்ளதை விபுலாநந்தர் சுட்டிக் காட்டுவது காணத்தக்கது. அடிகளார் பத்து ஆண்டுகள் யாழ் நூலை ஆய்ந்து பல நுண்ணிய விளக்கங்கள் தருதல் காணலாம்.

கி.மு.3000-த்தில் சுமேரியர் பயன்படுத்திய கலைப்பொருள்களுள் யாழும் ஒன்றாம். அது ஆங்கிலத்தில் “ஆர்ப்’ எனப்படும். எகிப்தியர் பயன்படுத்திய யாழ், பிரமிடுகள் எழுந்த காலத்தில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. யாழ் பழந்தமிழகத்தில், சங்க காலத்திற்கு முன்னரே காணக் கிடைத்துள்ளது.

யாழ் உருப்பியலுள் வில்யாழ் பற்றிய விளக்கம் கடைச்சங்கப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய பெரும்பாணாற்றுப்படை பாடலடிகளில் காணலாம்.

“”தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
ஒன்றமர் உடுக்கை கூழார் இடையன்
கன்றமர் நிரையொடு கானத் தல்கி
அந் நுணவிர் புகை கமழகத்தை முயன்று
ஞெலி கோற் கொண்ட பெரவிறல் நெகிழா
செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின்
இன்தீம் பாலை முனை குமிழின்
புழற்கோட்டுத் தொடுத்த மரபுரி நரம்பின்
வில்யாழ் இசைத்தம் விரலெறி குறிஞ்சி
புல்லார் வியன்புலம் போகி”  என்பதாம். வில்யாழின் இசை வண்டின் இமிரிசையை ஒத்த காரணம் ஒலியைப் பெருக்கிக் காட்டக் கூடிய பத்தர் குமிழும் கொம்பே இதில் கோடாக-பத்தராக அமைந்துள்ளது. புதியதாகச் செய்யும் முறைக்குரிய அளவுகளையும் நூலில் தந்துள்ளமையைக் காணலாம்.

கல்லாடம் கூறும் நாரதப் பேரியாழ் 32 விரல் அளவு அகலம், நான்கு விரல் அளவு நீளம்  முனைகளைக் கொண்ட இந்த யாழ் ஆயிரம் தந்திகளைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதில் 1008 விதமாக இசை வேதங்களை வாசிக்க இயலும் மும்முனை என்பது மந்திர, மத்யம் கேட்க அமைக்கப்பட்டிருந்தது. இக்கருவி இத்தாலி தேசத்தவர் பயன்படுத்தும் அரமண்டிலம் என்ற கருவியை ஒத்தது என ஆபிரகாம் பண்டிதர் கருத்துத் தெரிவிக்கின்றார்.

தொல்காப்பியம் தொடங்கி பல சங்க இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் யாழைப் பற்றிய இனிய செய்திகளை நமக்குத் தருகின்றன. தொல்காப்பியத்தில்,
…………இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்

எனவரும் நரம்பின் மறை என்பது இசைக்குறிப்பு மட்டுமன்று, நச்சினார்க்கினியர் கூறும் யாழ் நூலையும் நினைக்கச் செய்யும். குழலை விட யாழை விட இனியது மழலை என்பார் திருவள்ளுவர். இக்கருவிகளில் வரும் ழகரச் சிறப்புப் போன்றே மழலைச் சிறப்பு இனியதாம். மழலை மொழிச் சிறப்பு எவ்வாறோ அவ்வாறே யாழிசைச் சிறப்பு.

பதிற்றுப்பத்தில் பகைவர்க்குப் பணியாத தன்மையுடைய மன்னரை பேரியாழ் துணையுடன் பாணர் பண்பாடிப் போற்றுவதாக அமையும் பாடலொன்று,
வண்டுபடு கூந்தல் முடி புனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலைப் பண்ணிப்
பணியா மரபின் உழிஞை பாட
இனிது புறந்தந்தவர்க் கின்மகிழ் சுரத்தலின்
என அமையும். நெடுநல்வாடையில் ஆடல், பாடல் இரண்டிலும் வல்லமை வாய்ந்த மகளிர், யாழை மீட்டி, இனிமையுறப் பாடல் பாடும் செய்தி குறிப்பிடப்படுகிறது. யாழின் நரம்புகள் முறுக்கவிழ்ந்திருந்தால், தம் மார்பில் ஒற்றிச் சூடுபடுத்தி யாழை மீட்டிய நிலையினை,
ஆடல் மகளிர் பாடல் கொண் புணர்மார்
தண்மையில் திரிந்த தண்குரல் தீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையில் தடைஇ
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப
(நெடுநல்.67-70)

என விளக்கும். யாழின் கோடாகிய கொம்பு பெரும்பாலும் கரிய நிறத்துடன் விளங்கியமையைப் பல சங்க இலக்கியங்கள் சான்று காட்டுகின்றன.yazh

யாழின்  இனிமைக்கு விளக்கம் காட்டும் மதுரைக் காஞ்சிப் பாடலொன்று,
தாதுண் தும்பி போது முரன்றால்
கோதில் அந்தணர் வேதம் பாட
சீரினது கொண்டு நரம்பின் தியக்கி
யாழோர் மருதம் பண்ண
(மதுரை.655-658)   எனக்கூறும்.

வேதம் பாடுநர் இசையுடன் மருதப் பண்ணும் கலந்து ஒலிப்பது யாழிசையின் சிறப்பாக உள்ளது. யாழில் பண்ணல், பரிவட்டணை ஆராய்தல், தைவரல், நண்ணிய செலவு, குறும்போக்கு ஆகிய குற்றங்கள் நீங்கிய யாழைக் கையில் தொழுது வாங்கும் இயல்பால் யாழின் தெய்வீகத் தன்மை புலனாகும். அத்தகைய யாழை பண்ணாராய்ச்சி வித்தகர் விருப்பப்படி மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியும் தக்கதே எனக் கருதத் தோன்றுகிறது.

 நன்றி : தினமணி  http://blog.dinamani.com/?p=3634

பகிர்வு:   பேராசிரியர் நாகராஜன்

No comments:

Post a Comment