Wednesday, May 21, 2014

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் -- நாடகம் பார்க்கலாம் வாங்க!

நாடகம் பாக்கலாம் வாங்க


பொன்மலை திருச்சியின் தென் பகுதியில் உள்ள ஒரு ஊர்.  அந்த ஊரின் முக்கியமே அங்குள்ள ரயில்வே தொழிற்சாலைதான். 1930 – 40 களில் இந்தியாவிலேயே மிகப் பெரிய ரயில்வே தொழிற்சாலை என்று சொல்வார்கள் அதை.  மற்ற ஊர்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு அந்த ஊரில் இருந்த மூன்று வித இருப்புப் பாதைகள், அகல, குறுகிய மற்றும் நடுத்தர என்று.

இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் ரயில்வே எஞ்சின்கள், பயணிகள் செல்லும் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் இவை எல்லாமே பழுது பார்க்கப் படுவது பொன்மலை தொழிற்சாலையில் தான்.  பழுது பார்க்கப் பட்ட பின் அந்த எஞ்சின்களை ஓட்டிப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத்தான் முன்று வித இருப்புப் பாதைகளும் இருந்தனவோ இவ்வூரில்?

பொன்மலை முற்றிலுமாக ஒரு ரயில்வே காலனி.  ஊருக்குத் தென் பகுதியில் வேலி போட்டு தடுத்திருக்கும்.  அதற்குப் பின் இருந்த இடம் பொன்மலைப் பட்டி.  அங்குதான் என் தந்தையும் சித்தப்பாவும், நடிகர் ஜெயஷங்கரின் தாத்தாவும் வீடுகள் கட்டி இருந்தனர்.

எங்கள் வீடும் சித்தப்பாவின் வீடும் அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் இவை இரண்டுக்கும் இடையே வேலி எதுவும் கிடையாது.

பொன்மலைப் பட்டியிலும், அதன் பக்கத்து கிராமமான கொட்டைப் பட்டியிலும் மற்றும் ரயில்வே காலனியிலுமாக இரண்டு கோஷ்டிகள்.  ஒன்றின் தலைவன் மருதை.  மற்றொன்றின் தலைவன்........ பெயரை மறந்து விட்டேன்.  இந்த இரு கோஷ்டிகளிடையே அடிக்கடி மோதல் எற்படும்.  வெட்டு குத்து கொலை சர்வ சாதாரணம்.

ஓர் இரவு கோஷ்டி சண்டை எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து விட்டது.  ஒருவரை ஒருவர் செங்கல்லாலும் வேல் கம்புகளாலும் தாக்கிக் கொண்டனர்.  சில கற்கள் எங்கள் வீட்டின் வாசல் கதவின் இரும்பு வலையினைப் பதம் பார்த்தன.   எங்களுக்குக் கொலை நடுக்கம்.  அப்பா ஊரில் இல்லை. சித்தப்பாவுக்கு செய்தி சென்றது.  சித்தப்பவிடம் ஒரு துப்பாக்கி உண்டு.  அவர் அதை தென்னை மரங்களில் கூடு கட்டி அவ்வப்போது எங்கள் தலைகளைப் பதம் பார்க்கும் கழுகுகளை சுடுவதற்கு உபயோகிப்பார்.  ஒரே குண்டில் கழுகினை சுட்டுத் தள்ளுவார் சித்தப்பா.

துப்பாக்கியுடன் வந்த சித்தப்பா இரு முறை எச்சரிக்கைக்காக வானை நோக்கி சுட்டார்.  மின்னல் வேகத்தில் மறைந்தது சண்டை கோஷ்டிகள்.  மறுநாள் காலை வாசலில் சென்று பார்த்தால் செங்கற்களும், கூரிய இரும்பு வேல் முனை கொண்ட ஒரு ஒடிந்த வேல் கம்பும் எங்கள் வீட்டு வாசல் கதவு முன்.

எங்கள் சித்தப்பா பார்ப்பதற்குப் புலி.  ஆனால் உள்ளத்தளவில் அவர் ஒரு குழந்தை.  மானின் மென்மை உண்டு அவர் குணத்தில்.  சித்தப்பா வீட்டில் எந்த வேலையாக இருக்கட்டும், பல்பு மாற்றுவதில் இருந்து பம்பு ரிபேர் செய்வதுவரை, எனது மூத்த அண்ணனும் நானும் ஆஜராகி விடுவோம்.  மூத்த அண்ணன் சீனியர் மெகேனிக்.  நான் ஜூனியர் அசிஸ்டன்ட்.

நாங்கள் இருவரும் வேலையில் முனைந்திருப்போம்.  சித்தப்பா திடீரெனெ, “அம்மங்காரே” (அவர் சித்தியை அப்படித்தான் கூப்பிடுவார், ஒன்று விட்ட மாமாவின் மகள்தானே அவள்) “காபி கொண்டுவா” அல்லது “ஜூஸ் கொண்டுவா” என்று உரத்த குரலில் ஆணை இடுவார்.  தனக்காகத் தான் கேட்கிறார் என்று நினைத்தால் காபியோ, ஜூஸோ வரும்போது, “பையா எறங்கி வா.  ஒர்க்கர்ஸ் டீ”, என்பார்.

எங்களுக்கும் சித்தப்பா இல்லாமல் ஒரு வேலையும் ஆகாது.  எங்கள் வீட்டின் எதிரே இருந்த பெரிய காலி இடத்தைத் திருத்தி பூப்பந்து களமோ, கால் பந்து களமோ அமைப்பதற்கும்,  மட்டைகள், பந்துகள் வாங்குவதற்கும் சித்தப்பாவின் கை தேவையான ஒன்று.  அவ்வளவு ஏன்?  கால் பந்தின் உள்ளிருக்கும் ரப்பர் உறை பஞ்சர் ஒட்டி ரிபேர் செய்ய முடியாத அளவுக்குக் கிழிந்த பின் அதற்குள் வைக்கோலை அடைத்து விளையாடுவதிலும் கூட அவரும் பங்கு கொள்வார்.

பொன்மலைப் பட்டியில் அன்நாடகளில் இருந்த வீடுகளில் எங்கள் வீட்டு நடுக் கூடம் தான் மிகப் பெரியது, 32 அடி நீளம். 16 அடி அகலம்.  மற்ற அறைகளின் ஒட்டுக் கூரை 11 அடி இருந்தபோது நடுக் கூடம் மட்டும் 15 அடி உயரம் கொண்டது.  நீண்ட இரு பக்கங்களிலும்  மேலாக ஆறு சிறிய ஜன்னல்கள் இருக்கும் உஷ்ணக் காற்று வெளியேறுவதற்காக.  மாடியில் இருந்து கூடத்தில் நடப்பதை அந்த ஜன்னல்கள் வழியே பார்க்கலாம்.

ஒரு நாள் திடீரென இரு வண்டிகளில் நாடகம் போடுவோர் உபயோகிக்கும் திரைகளும், நாற்காலிகளும், பெஞ்சுகளும் வந்திறங்கின.  பெரிய அண்ணனின் ஏற்பாடு அது.  அவனும் அவனது சகாக்களுமாக சேர்ந்து நாடகம் போட ஏற்பாடு செய்திருந்தனர்.  சித்தப்பாவுக்கும் பரம சந்தோஷம்.

டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்கப் பட்டிருந்தன.  ஒரணாவுக்குத் தரை, இரண்டணாவுக்கு பெஞ்சு, நாலணாவுக்கு நாற்காலி. (இன்றைய 6, 12 மற்றும் 25 காசு)

குறித்த நேரத்தில் நாடகம் ஆரம்பித்தது.  டிக்கெட் வாங்காததால் நான், என்னை விட இரண்டு வயது பெரிய ஒரு அண்ணன், எனது மூன்று தங்கைகள் எல்லோருக்கும் பால்கனி சீட், அதான் மாடியில் இருந்து ஜன்னல் வழியே பார்க்கும் இடங்கள்.

நாடகத்தில் என் பெரிய அண்ணனின் பாகம் கதா நாயகனின் நண்பனாக.  ஆனால் பாவம் மூன்று நாட்கள் முன்னதாக அவனது ஒரு கண்ணில் பெரிய கிருக்கட்டி ஒன்று தோன்றவே தலையில் பெரிய கட்டு இருந்ததால் அவனுக்கு வேறு பாகம் அளிக்கப் பட்டது.  ஒரு விதவையின் பாகம்.  அந்த விதவை பாகம் ஏற்க வேண்டிய பையன் எக்காரணத்தாலோ அன்று வரவில்லை.

குறித்த நேரத்திற்கு மணி அடிக்க நாடகம் துவங்கியது.  கூடவே பீடிப் புகையும்.  நாலணா கொடுத்து நாடகம் பார்க்க வருபவர்கள் கோல்ட் ஃப்ளேக் சிகெரெட்டும், ஹவானா சுருட்டுமா பிடிப்பார்கள்?  கிளாவர் பீடியும், ஹாட்டின் பீடியுந்தான் அவர்கள் கையில்.

எங்களுக்கு பீடி புகை அவ்வளவும் வந்தது.  எங்கள் வயிற்றில் குமட்டல் எடுத்தது.  நாடகம் பார்க்கும் ஆவலில் அதைப் பொருத்துக் கொண்டோம்.


காட்சிகள் மாறிக் கொண்டே போக நாடகமும் சூடு பிடித்தது.  என் அண்ணன் நடிக்கும் காட்சி வந்தது.  தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வெள்ளைப் புடவையில் காட்சி தந்த என் அண்ணனைப் பார்த்ததும் அதுவரை பீடிப் புகையை சகித்துக் கொண்டு தன் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த சித்தப்பா எரி மலையென வெடிக்க ஆரம்பித்தார் தன் சிம்மக் குரலில்,  “மொட்டெச்சி வேஷம் போடவாடா இத்தெனெ ஆர்பாட்டம்?  இத்தெனெ செலவு?  எவண்டா அவன் இங்கெ வீட்டுக் குள்ள பீடி குடிக்கிறது?  போங்கடா எல்லாம் வெளிலெ” என்று கத்தினார்.

அவ்வளவுதான்.  திரை விழுந்தது. நாடகம் பார்க்க வந்தவர்களெல்லாம் அடித்துப் பிடித்து வெளியே ஒடினர்.  நாங்களும் பால்கனியில் இருந்து கீழே இறங்கினோம்.

நாடகந்தான் முடிஞ்சிடுச்சே.  நீங்களும் கிளம்புங்க ஒங்க ஊட்டெப் பாக்க.


(பி.கு.  இது கற்பனைக் கதை அல்ல.  எங்கள் வீட்டில் ஆயிரத்தித் தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.)

ஆக்கம்:  திரு நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

5 comments:

 1. அருமையான மலரும் நினைவுகள்...

  ReplyDelete
 2. பெரியவருக்கு இங்கே வந்து பதில் சொல்ல வருமானு புரியலை. நான் சொல்றேன். :)

  ReplyDelete
 3. அரிய பதிவு, கல்பற்று ஐயா. Thanks.

  அம்மங்கார் என்ற சொல்லும், அவைபோன்ற அம்- முன்னொட்டு பெற்ற சொற்களில் சிலவற்றையும் (உ-ம்: அந்தை = அம்+ தை) பற்றி விரிவாக நேற்று எழுதினேன்:
  https://groups.google.com/d/msg/mintamil/x8Ic1liNC4M/KrX_Ro_IxbIJ

  அம்+தை = அந்தை, இது சங்ககாலக் கல்வெட்டுக்களில் வருவது (பார்க்க: ஐராவதம் மகாதேவனின் சங்கக் கல்வெட்டுக்கள் மாஸ்டபீஸ்.). இன்னும் பழங்குடிமக்களிடம் இருப்பது அந்தை என்கிறார் பேரா. தொ.ப.. அணுங்கு என்ற சொல் Indian Pangolin-க்கு பழங்குடி மலைமக்களிடம் இருப்பதானது இந்தியாவின் பழைய சொற்களாம் அணு (கணாத அடிகளின் அணுக் கோட்பாடு), சங்ககாலச் சாதி பற்றிய அடித்தளமாக இருக்கும் அணங்கு என்ற சொல்லின் விளக்கமாக இருப்பதும் அறியற்பாலது.

  நா. கணேசன்

  ReplyDelete
 4. பின்னூட்டம் அளித்து ஊக்கம் தந்த திருமதி இராஜராஜேஸ்வரி, துளசி கோபால், கீதா சாம்பசிவம் மற்றும் ந. கணேசன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete