Wednesday, May 28, 2014

சிற்பம்/ஓவியம்/ ரசனை/ மஹாபலி புரம் 05

வாள் நட்சத்திரம் எனும் CRUXன் கதை - மகாபலிபுரம் -06

கவனிக்க : இது  ஒரு வால் நட்சத்திரம் அல்ல, வாள் நட்சத்திரம் ஆகும்என்னடா இது நட்சத்திரக் கூட்டத்தைக் காண்பித்து ஒரு சிற்பத்தின் குறியீடாகக் காட்டுகின்றேனே என்று குழப்பம் அடைய வேண்டாம். இதைக் குறியீடாக நான் புனைவு கொள்ளும் போது தான் இந்த சிற்பத் தொகுதியின் பிரம்மாண்டம் விஸ்தீரணமாகின்றது.குறிப்பு: வலது புறம் கீழ் இருப்பவன் இந்திரன் (வாளின் பிடியில் கைவைத்தபடி)

சென்ற பதிவில் நாம் விவரித்தோமே!! விஸ்வரூபம் கொண்ட திருமாலின் இரண்டடிகளைக் கண்டு அசூரர்கள் கவலை கொண்டிருக்க அவர்களைப் பார்த்துக் கொண்டு சற்றுத் திரும்பியபடி இருக்கும் சிற்பமான இந்திரனைக் கொல்லத் துடிப்பது போல அந்தரத்தில் நிலையில்லாத ஒருவன் கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரியும்.

அவனை நன்றாகப் பார்த்தால், அவன் தொங்கிக் கொண்டிருக்கும் உயரம், தேவர்களான சூரியன், சந்திரன் ஆகிய இருவருக்குமான மேலோகம் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம், ஆனால அவன் அதே திசையில் தொங்கவில்லை, மேலுலகத்தில் ஈர்ப்பு விசை இல்லை என்றாலும் அவன் மற்றவர்களுக்கு எதிரான திசையில் தொங்குவது போல் தெரிகிறது... இந்தச் சிற்பத் தொகுப்பைப் பற்றி சில நூலகள் மற்றும் இணையம் வாயிலாகத் தேடியதில் ஒரே மாதிரியான தகவல்கள் எனக்குக் கிடைக்கவில்லை, அதாவது அங்குத் தொங்கிய வண்ணம் இருப்பவனைப் பற்றி பல்வேறு கருத்துகள் வருகின்றன, முனைவர் சா.பாலுச்சாமியின் ”அர்ச்சுனன் தபசு” எனும் நூலில் அவனை நமுச்சி எனும் அசுரனாகவும், அவனை மகாபலியின் மகன் என்றும் கூறுகின்றார். ஆனால் மாபலிச் சக்ரவர்த்தியின் ஒரே மகன் என்று சொல்லப் படுபவன் பாணாசுரன் என்று சொல்லப் படுகிறது.

சில நூல்களில் மாபலியின் மகனாக வாமனன்  மீது கோபம் கொண்டு வருபவனை, வாமனன்  எட்டி உதைத்து விட அவன் அந்தர லோகத்தில் பறக்கிறான் என்று சொல்லப் படுகிறது, நான் ஏற்கும் கூற்றாக இவனை திரிசங்கு என்று வைத்துக் கொள்ளவே இச்சிற்பம் இடமளிக்கிறது. திரிசங்கு எனப்படும் மன்னன் பூதவுடலோடு சொர்க்கம் செல்லும் பேராசையில், விஷ்வாமித்ரரின் ஆசை பெற்று சொர்க்கத்திற்குச் செல்லும் பொழுது அவன் இந்திரனால் தடுக்கப் படுகிறான், பின்னர் அவனுக்கு மேலுலகமும் அல்லாமல் பூவுலகும் இல்லாமல் அந்தரத்தில் ஒரு சொர்க்கம் விஸ்வாமித்ரரால் சிருஷ்டித்துத் தரப் படுகிறது. அந்த திரிசங்கு தான் மகாபலியின் அசுர கணங்களை எதிர்க்க தயாராக இருக்கும் இந்திரனின் சிலைக்கு மேலே கையில் வாளுடன் தொங்கிக் கொண்டிருக்கும் சிற்பம் என்று சொல்வது சிறப்பான பதிலாகக் கிடைக்கிறது.

புனைவுகள் :

புராணங்களில் மறைந்திருக்கும் அல்லது மறைந்திருப்பதாகத் தோன்றும் குறியீடுகள் யாவுமே சமகாலத்து வாசிப்பிற்கான இடத்தை அளிக்கின்றன என்பது என் கருத்து, அதன் மூலம் நமது அறிவியல், சமூகப், பொருளாதார வாழ்க்கை முறைமை பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன. அசுரர்கள் யாவருக்கும் (தலித்தியக்) குறியீடுகள் பொருந்திப் போகின்றன, இணையத்தில் மகாபலியை நான்காம்  வர்ணத்தைச் சேர்ந்தவனாகவே காட்டுகின்றனர், இராவணனை அந்தணர்  என்று சொல்லியும் கேட்டிருக்கிறேன், பிறப்பால் வேறு வர்ணத்தைச் சார்ந்தவன் வேறு தொழில்களில் இருப்பதை இப்புராணங்கள் காட்டுகிறது. கிருஷ்ணனும், பலராமனும், வராக மூர்த்தியும், மாருதியும் நான்காம் வர்ணம் தானே!! இறைவனுக்குப் பெரும்பாலும் நடக்கும் திருமணம், பெரும்பாலும் வேறு ஒரு குடி(Clan)யைச் சேர்ந்த தலைவியோடு தான். ஆனால் அவர்கள் ஏன் அசுரர்களாகவே சித்தரிக்கப் படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறதே!! அதே சமயம் அவர்கள் எல்லோருமே வினை முடித்து நட்சத்திரமாகுவதாகவும், இறைவனோடு சேர்ந்து விடுவதாகவும் வருகின்றது.

இந்த நட்சத்திரம் பற்றி தானே சென்ற தொடரில் விவாதித்தோம் எதற்காக நட்சத்திரத்தின் குறியீடாக அங்கு அந்தரத்தில் தொங்குபவனைக் காட்டினோம்?? திரிசங்கு என்று சொல்லப் படுதல் ஒரு நட்சத்திரக் கூட்டமைப்பு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை வெறும் கட்டுக்கதை என்று புறக்கணித்தல் ஆகாது, உலகம் முழுவதுமுள்ள பண்டையக் கலாச்சாரங்களில் த்ரிசங்கு என்று சொல்லப் படும் நட்சத்திரக் கூட்டம் பற்றிய புராணக் க்தைகளும், நம்பிக்கைகளும் இருக்கின்றன.

சொல்லப் போனால் கி.மு 15ம் நூற்றாண்டுக்கு முந்தைய பாபிலோனிய, கிரேக்க, எகிப்திய சீன நாகரிகங்களிலும், தொல் ஆஸ்திரேலியப் பழங்குடி, மாயன், அர்ஜெண்டினா என்று இந்த நட்சத்திரக் கூட்டம் (CRUX) பற்றிய கதைகள் இருக்கின்றன.இன்று வரை இந்த நட்சத்திரக் கூட்டத்தின் முக்கியத்துவம் இருக்கிறது, இதை நீங்கள் இந்த நாட்டுக் கொடிகளில் காணலாம்.
எப்படி இந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்தது என்று பார்த்தோமேயானால்? அதற்கு கிடைக்கும் விடை மிக எளிமையானது, இரவு நேரங்களில் சம வெளியிலோ அல்லது பாலைவனத்திலோ ஏன் முக்கியமாக கடல் பயணங்களில் கூட இந்த நட்சத்திரக் கூட்டம் தான் தெற்கு திசையினைக் காட்ட உதவும், அதனால் தான் இதனை Southern Cross என்றும் சொல்லுவர்.  கிரேக்க மற்றும் எகிப்திய நாகரிகங்கள் அதை ஒரு (இறந்த பின்னும் அவர்களைக் காக்கும்)அரசன் கையில் வாள் ஏந்தி நிற்பது போல உருவகப் படுத்தினர், என்ன இத்தொகுப்பில் தொங்கும் திரிசங்கும் அப்படித் தானே இருக்கிறான். சமீபத்தில் இந்தக் கதையினை (Ancient Aliens) எனும் tv Seriesலும் இதைப் பார்த்தேன்.

சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் அவன் தலை கீழாகத் தான் தொங்கிய படி இருப்பான், நமது நம்பிக்கைகளின் படி 88 நட்சத்திரக் கூட்டம் இருக்கும் பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் (அது உண்மையில் நட்சத்திரத் தொகுப்பு) தானே பெயர் சொல்லியுள்ளோம், அப்படியென்றால் இந்த CRUX  எனும் நட்சத்திரக் கூட்டம் என்ன நட்சத்திரமாக இருக்கும், அந்த 22வது நட்சத்திரமா ?? ஆமாம் அதன் பெயர் என்ன திருவோணம்...

அட அது தான் திருவோணம்!!! வாமனனின் மூன்றாவது அடியால தலைக்கனம் ஒழித்த மாபலிச் சகரவர்த்தி, இறந்த பின் தன் பாட்டனாராகிய பிரகலாதனைப் போன்று நட்சத்திரமாக இறைவன் வரமளிக்கிறார், அது தான் திருவோணம் என்று கூறுகின்றனரே என்றும் கேள்வி எழுந்தது என்னுள். ஆம் அதுவும் சரி தான் பிரகலாதன், மாபலியைப் போல நட்சத்திரமாகுவதும், திரிசங்கு எனும் நட்சத்திரமும் அவர்களோடு சேர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் CRUX என்பது நட்சத்திரக் கூட்டம் தானே!! இப்படி வெவ்வேறு புராணங்களில்; நம்பிக்கைகளில் நட்சத்திரங்களும், மண்டலமும், வெளியுமாக பரந்து கிடக்கும் பாரத நம்பிக்கைகள் ஒரு மதத்திற்கானவை மட்டுமன்று, ஏனென்றால் இந்நாடு பிரபஞ்சத்தைக் காட்டிலும் மிகப் பெரியது..

ஒரு சிற்பத் தொகுதியானது, புராணத்தின் கதையினை மெருகூட்டி செதுக்கப்பட்டப் படைப்பாகவே இருக்கிறது என்று நான் உணர்கிறேன். ஆனால் புவியில் துருவ மாற்றம் மற்றும் பூமியின் சுற்றுப்பாதையின் இடப்பெயர்வு என்று 26000 வருடங்களுக்கு ஒரு முறை நிகழக்கூடிய shift-ஆக இதைப் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் ஏற்றுக் கொள்ள இடமளிக்கிறது. இதைத் தான் Precession of Equinox என்று சொல்வார்கள். அந்த 26000 வருடங்களுக்கு ஒரு முறை பூமியின் நிலத்தட்டுகளிலும் பெரியதொரு மாற்றங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆன்மிகம் மற்றும் புராணங்களில் மட்டுமல்லாது எல்லா பேரிடர்களிலும், துயரங்களிலும் இறைவன் மீது இருக்கும் நம்பிக்கை தான் கடைசி முயற்சியாக இருக்க முடியும், சமீபத்தில் ரிஷிகேஷில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஒரு கோயிலின் மணியைப் பிடித்தாவாறே பல மணிநேரங்கள் தொங்கிக் கொண்டிருந்தவனை நினைவு கூர்ந்தேன், அவன் உயிர் பிழைத்தது யாரின் செயல்??.


தொடரும்....

ஜீவ.கரிகாலன்


கவனிக்க : //சாதாரண கண்களால் பார்க்க முடியும் இந்த சிறிய நட்சத்திரக் கூட்டத்தின் புள்ளிகளை வைத்து நாம் கூட ஒரு வாள் ஏந்திய வீரனை வரைய விரும்பினால் ”அவன் தலை கீழாகத் தான் தொங்கியபடி இருப்பான்” // இதில் மாற்றுக் கருத்தும் இருக்கிறது , நட்சத்திரங்களை இணைத்து வரையும் பொழுது அவன் கையில் வாள் ஏந்தியபடி தான் இருப்பான்,  பூமியின் வேறு ஒரு பகுதியில், சமவெளியில் நின்று இதைப் பார்க்கும் பொழுது அவன் தலை கீழாய்த் தொங்குவான் என்கிற உருவாக்கம் சரியானது என்று சொல்ல முடியாது.

ஒருவேளை அவன் தெற்கு திசை நோக்கி வாள் நீட்டி இருப்பதால்... அது இச்சிற்பத் தொகுதியில் வடிக்கப் பெறும் போது தெற்குத் திசையினைக் குறிப்பதற்குப் பயன்பட்டிருக்கும். இந்த நட்சத்திரத்தினைக் கொண்டு தான் முன்னோர்கள் இரவில் திசை அறிவதற்கு  பயன்படுத்தி வந்தனர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது

- ஜீவ.கரிகாலன்
www.thoyyil.blogspot.com

kaalidossan <kaalidossan@gmail.com>

1 comment:

  1. மிகவும் சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு...பாராட்டுக்கள்..

    ReplyDelete