Sunday, May 25, 2014

நாடகமே உலகம் -- திரைக்குப் பின்னால் -- நாடகம் போடலாம் வாங்கடா! 6





“டேய்….. குண்டுமணி, கோவாலு, பாண்டி, மாரி வாங்கடா பிச்சுக்குப் போயி காத்து வாங்கலாம்.  வெளிலெ வெய்யிலு தாங்கல.  பம்பரம், கோலி குண்டு, கிட்டிப் புல்லுன்னு ஆடவும் முடிலெ.”

“பீச்சு வெட்ட வெளிலெ இன்னும் வெய்யிலு ஜாஸ்தியா இருக்காது?”

“இருக்காதுடா.  அங்கெ கடல் காத்து வீசு மில்லெ?  அங்கெ இருக்குற மரத்தடி ஒண்ணுலெ ஒக்காந்து யோசிப்போம் இன்னி போதெ எப்பிடிப் போக்குறதுன்னு.”

“அதுவும் சர்தாண்ணே”,  ஏக காலத்தில் நால்வர் சொல்ல மெரீனா பீச்சை நோக்கி நடக்கிறார்கள் ஐவரும்

அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்ததும், ஆரம்பிக்கிறான் கோவாலு, “அண்ணே சீட்டு ஆடலாமாண்ணே?”

“வாணாண்டா.  ரோந்து வர மாமூங்க நாம மூணு சீட்டு ஆடுறோம்னு நம்மெ வேனுலெ அள்ளிகிட்டுப் போயி நல்லா கவனிச்சு உட்டூடுவாங்க.”

“அதுவும் சரிதாண்ணே.  அப்பொ இன்னா பண்ணலாம் போது போக?”

“சொல்றேண்டா.  வெச்சிருக்கேன் வளி ஒண்ணு.  நாடகம் போடலாம்” என்று சொல்லியபடி தன் அரை நிஜார் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்கிறான் கபாலி ஒரு கட்டுக் காகிதத்தை.

“நாடகமா?  என்னா நாடகம்ணே?”

“கண்ணகி நாடகம்டா.”

“சரி….நாடகம் போடுறதுன்னா அதுக்கு கதெ, வசனம், நடிகருங்கன்னு வேணுமேண்ணே?”

“எல்லாம் இருக்குடா தயாரா” என்றபடி ஒவ்வொருவர் கையிலும் ஒரு காகிதத்தைத் திணிக்கிறான் கபாலி.

“அண்ணே இது யாரு அண்ணே கதெ வசனம் கா.கா. ந்னு?”

“தெரிலெ?  கஸ்மாலம்…கஸ்மாலம்.  க.க, ன்னா கருப்புக் கபாலிடா.  ஒரு ஸ்டைலா இருக்கணும்னுதான் அப்பிடி வெச்சுகிட்டேன் என் பேரெ."

“ஆமாம்.  ஆளு இருக்குறதே நெருப்புக்குக் குளிப்பாட்டினாப்புளெ.  இதுலெ பேரெ வேர காக்கான்னு வெச்சுக்கணு மாக்கும்?” முண முணக்கிறான் குண்டு.

“டேய் என்னடா குண்டு மொண மொணக்குறே?”

“ஒண்ணு மில்லேண்ணே.  அங்கினெ ஒரு காக்கா கருவாட்டெக் கொத்திகினு போவுதுன்னேன்.  அண்ணே யாருக்கு என்ன பார்ட்டு?”  ”

“சொல்றேன்.  டேய் கோவாலூ நீ தான் கோவலன்.  கண்ணகிக்கு யாரெப் போடலாம்?” தலையைச் சொரிகிறான் கபாலி.

“அண்ணே குண்டுமணியெப் போடலாண்ணே.”  இது கோவாலூ.

“ஆமாண்டா…..நான் கண்ணாம்பா வாட்டம் ஒரு ஃபிகரு தேடிகிட்டு இருக்கேன்.  குண்டு கல்யாண மாட்டம் ஒரு ஆளெக் காட்டுறான் இவன்.  சரி வேறெ வளி இல்லெ.  சமாளிச்சுப்போம்.  ஆரு பாத்திருக்காங்க நேரிலெ கண்ணகியெ?”

“அண்ணே எனக்குப் பயாமா இருக்கண்ணே சூசூ வந்துடுமோன்னு.”

“என்னடா பயம்?”

“அந்தம்மா மறுபடி ஆட்சிக்கு வந்தூட்டாங்க.  என்னெயெக் கொண்டு போயி எங்குனா ஒளிச்சு வெச்சுடு வாங்களோன்னு பயமா இருக்கண்ணே,”

“அதெல்லாம் ஒண்ணியும் ஆவாதுடா.  சூடுண்ட பூனெ அடுப்பாண்டெ போகாதூன்னு சொல்லுவாங்க இல்லெ?  அவுங்க ஒண்ணும் பண்ண மாட்டாங்க ஒன்னியெ.  சரி………அது என்னமோ சூசூன்னியே. என்னடா அது?”
“அதுவாண்ணே?  நான் வேலெ செஞ்சுகிட்டு இருக்குற பஞ்சாபி ஊட்டுலெ கொளெந்தெயெ அந்த ஊட்டு அம்மா பாத் ரூமுலெ கொண்டு போயி நிறுத்தி வெச்சுகிட்டு ‘சூசூ கரோ… சூசூ கரோ…’ ம்பாங்க.  கொளெந்தெ சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ஒண்ணுக்குப் போகும்.  அதான் நானும் பேண்டெ நனெச்சிக்கிடு வேனோங் கெறதெ நாசூக்கா சூசூப் போயிடு வேனோன்னு சொன்னேண்ணே.”

“டேய் குண்டு நீ மொதல்லெ ஒரு ஓரமாப் போயி ஒண்ணுக்கடிச்சூட்டு வாடா.”

“வாணாண்ணே.  சமாளிச்சுக்குவேன்.”

“சரி.  குண்டு நீ கோவலனக் கூப்டு ஒன் டயலாகெ ஆரம்பி.”

“சரீண்ணே.  நாதா…”

“கட் கட்.  நீ எந்த நாளுலெடா இருக்கே?  சிலப்பதிகாரக் காலத்துலெயா? ‘நாதா…’ ங்குறான்.”  இந்த காலத்துக்கு ஏத்தாப்புளெ கூப்பிடுடா.”

“சரீண்ணே, கோவல்ஸ்…’

“டேய் நிறுத்துடா.  இப்பொதான் அமெரிக்காவுலேந்து வந்து குதிச்சாப்புளெ கோவல்ஸ்….கேவல்ஸ் ஸுங்கறான்.’

அதற்குள்ளாக அங்கு ஒரு போலீசு வேன் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய இரண்டு கான்ஸ்டேபிள்கள் அவர்களுக்கே உரித்தான பாணியில் தங்கள் கைத் தடிகளைச் சுழற்றிய படி நாடகக் குழு அருகே வந்து, “ஏய் என்னடா இங்கெ அஞ்சு பேரு கூட்டம் போடுறீங்க?  ஊருலெ 144 போட்டுருக்குறது தெரியாது?  நாலு பேருக்கு மேலெ ஒண்ணு சேரக் கூடாதூன்னு சட்டம் சொல்லுது.  ஏறுங்கடா வண்டீலெ” என்று சத்தம் போட தலை தெரிக்க ஓடுகிறார்கள் ஐவரும் தங்கள் வீடுகளை நோக்கி.

நாடகம் முடிஞ்சாச்சுங்க.  ஏந்து போயி ஒங்க வேலெயெப் பாருங்க வெட்டிலெ போது போக்குறதெ உட்டூட்டு.


15-05-2011                                              நடராஜன் கல்பட்டு

Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

1 comment: