Friday, January 26, 2018

யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு பெறுவிழா

உலகத் தமிழ் பண்பாட்டு பெருவிழா மலருக்கான என் வாழ்த்துச் செய்தி!!

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கலை பண்பாட்டுப் பெருவிழாவிற்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் துணைச்செயலாளர் என்ற வகையிலும், உலகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் என்கின்ற வகையிலும், மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர் பெருமக்களுக்கும், பேராளர்களுக்கும், உலகத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் என்னுடைய அன்பினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்ற இத்தருணத்தில் இப்பெருவிழாவிற்கான எனது செய்தியாக பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

வங்கக்கடல் பரப்பின் ஒரு முனையில் வாழும் தமிழர்கள் உலக சமுதாயங்களோடு போட்டியிட்டும், இயைந்தும் உலகளாவிய தமது பெருவாழ்வை கட்டமைத்துக் கொள்ளவேண்டிய காலத்தில் நாம் இன்று இருக்கின்றோம். தமிழகம், இலங்கை ஆகிய இரு பகுதிகளின் ஊடாக மட்டுமே உலகத்துக்கான தமிழர் பார்வை கட்டமைக்கப்படும் நிலை இனி வரும் காலத்தில் நீடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. உலகின் பல பாகங்களில் தமிழர்கள் குடியேறி புதுவிதமான உலகைப் படைப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அப்படிப் பார்க்கின்ற போது தமிழகம், இலங்கை , மலேசியா, சிங்கை, கனடா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ், ரீயூனியன் தீவுகள், ஆகிய நாடுகளிலுள்ள தமிழர்களிடையே ஒருங்கிணைப்பு உருவாகி உலகத்தமிழர் பண்பாடு கட்டமைக்கப்படும் என உறுதியாக நம்புகிறேன்.


மேலும், தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து உலகிற்குக் காட்டப்படும் பண்பாட்டு அடையாளங்கள் இன்னும் சீர்தூக்கிப்பார்க்கவேண்டிய அவசியம் இருக்கின்றது. சாதி, மற்றும் அது உருவாக்கிய ஏற்றத்தாழ்வுகளை உலகிற்கான பண்பாடாக இனிமேலும் தமிழர்களால் முன்வைக்க முடியாது. அதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர்கள் முன்னெடுத்துச் செல்வார்களேயானால் உலக அரங்கில் தமிழினம் தனிமைப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. மாறாக, நமது ஆதித்தமிழர் மரபில் இருந்த சமத்துவ பண்பாட்டுக் கூறுகளையே உலகிற்கான நமது அடையாளமாக நாம் முன்வைக்க வேண்டும். தமிழ் மரபினைத் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்திவரும் எம் போன்ற ஆய்வாளர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து தமிழ் பண்பாட்டின் அடையாளங்களின் மூல வடிவங்களைக் கண்டறியும் முயற்சியில், புதிய வெளிச்சங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன.


கிழக்காசிய நாடுகளின் பண்பாடுகளைக் கட்டமைத்ததில் பண்டைய கால தமிழர்கள் மிகப் பெரும் பங்காற்றியிருக்கின்றார்கள் என்கின்ற ஆச்சரியப்படத்தக்க உண்மைகளை இந்த உலகம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தூரம் இல்லை. கிழக்காசிய நாடுகளில் தமிழர்கள் கூலிகளாகவும் கொத்தடிமைகளாகவும் தாம் போய் சேர்ந்தார்கள் என்கின்ற அண்மைய வரலாறு ஒரு சிறு அளவிலான உண்மை மட்டுமே. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் உருவாக்கிய கிழக்காசிய பாதைகளின் வழியேதான் நாம் இன்னமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இது சீனர்கள் உருவாக்கிய பட்டுசாலைகளை விட மிக நீண்டதும் மிகப்பழையதுமானதுமாகும். இந்தத் தமிழச் சாலைகள் கிழக்காசியா மட்டுமன்றி மேற்கு நோக்கி ஐரோப்பிய, ஆப்பிரிக்க எல்லைகள் வரை போயிருக்கின்றன என்கின்ற வரலாற்று உண்மையை உங்களிடம் இந்த வாழ்த்துச் செய்தி வழியாகப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

வருங்காலத்தில் நமது தற்காலத்து மத அடையாளப் பார்வைகளை விலக்கி ஒரு மதச்சார்பற்ற, சாதிசார்பற்ற பண்பாட்டினை முன்னிறுத்தும் வரலாற்றுப் பார்வையைத் தமிழர்கள் முன்னெடுப்பார்களேயானால் உலக பண்பாட்டைக் கட்டமைப்பதில் நாம் முன்னோடிகளாக இருக்க முடியும் என்ற உண்மையை உரத்துச் சொல்ல முடியும். எனவே முன் நிபந்தனைகளின்றியும் முன்சாய்வு இன்றியும் நாம் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் முன்னெடுப்போம் என்ற அறைகூவலோடு இந்தப் பெருவிழாவிற்கு எனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
(துணைச்செயலாளர், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை )

No comments:

Post a Comment