—— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
முன்னுரை:
நண்பர் துரை.பாஸ்கரன் ஒரு வரலாற்று ஆர்வலர்; பசுமை பேணும் சூழலியலாளர். அவர் அண்மையில் பேசியில் அழைத்து, “தொல்லியல் தடயங்களைத் தேடும் பயணங்களில் கோவையின் புறவூர்ப் பகுதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறீர்களே, கோவையின் நகரப் பகுதியிலேயே தொல்லியல் எச்சமான புலிகுத்திக்கல் என்றழைக்கப்படும் ஒரு நடுகல் சிற்பம் பார்க்கப்படாமல் உள்ளது தெரியுமா?” எனக் கேட்டபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டதோடல்லாமல் அதைப் பார்க்கவேண்டும் என்னும் ஆவலும் மிகுந்தது. அவரையும், இதழியலாளர் நண்பர் ஒருவரையும் உடன் அழைத்துக்கொண்டு கட்டுரை ஆசிரியர் நடுகல் சிற்பம் இருக்கும் இடத்துக்குச் சென்றார். நடுகல் சிற்பத்தை ஆய்வு செய்து மேலும் பல தரவுகளைத் துணையாகக் கொண்டதில் புலப்பட்ட செய்திகள் இக்கட்டுரையில் பதிவு செய்யப்படுகின்றன.
கோவை நகரத்தின் மையப்பகுதியில் ஒரு புலிகுத்திக்கல்:
கோவை. மக்கள் கூட்டமும், வண்டிகளின் நெரிசலும் கலந்த ஆரவாரம் நிறைந்த தொழில் நகரம். நகரத்தின் மையப்பகுதியைத் தொட்டு அமைந்திருக்கும் பகுதி உக்கடம். இங்கு அமைந்துள்ள ஒரு குளம் வாலாங்குளம். இக்குளத்தின் தென்கரையை ஒட்டியுள்ள புறவழிச்சாலையில் தென்கரைச் சரிவில்தான் நாங்கள் பார்க்க விரும்பிய நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. சாலையின் சரிவில் கீழிறங்கிச் சென்றதும் ஒரு சிறிய திடல் காணப்பட்டது. திடல் அல்லது வெளி என்னும் அப்பகுதி ஒரு பெரிய அரசமரத்தைச் சூழ்ந்திருந்தது. மரத்தடியில் அந்தப் புலிகுத்திக்கல் இருந்தது.
புலிகுத்திக்கல் - கோயிலின் தோற்றம்
புலிகுத்திக்கல்-நடுகல்:
ஏறத்தாழ நாலரை அடி உயரத்தில் மூன்றடி அகலத்தில் முக்காலடிப் பருமன் கொண்ட தடித்த பலகைக்கல்லில் வடிக்கப்பட்டிருந்த புலிகுத்திக்கல் சிற்பம் ஒரு மேடையில் நிறுத்தப்பட்டிருந்தது. மேடையை அணுக இரண்டு படிக்கற்களும் இருந்தன. மேடையைச் சுற்றிலும் நான்கு பக்கங்களில் கற்றூண்களை நட்டு அவற்றை வலைக்கம்பி வேலியால் இணைத்து அரண் செய்திருந்தனர். ஒரு செவ்வக வடிவில் நின்றிருந்த அப்பலகைக்கல்லின் சுற்று விளிம்புகள் புடைப்பு நிலையில் அமைக்கப்பட்டுச் சிற்பத்தொகுதிக்குச் சட்டமிட்டாற்போலச் செதுக்கப்பட்டிருந்தது. உச்சிப்பகுதியின் இரு முனைகள் சற்றே வளைவாக வடிக்கப்பட்டிருந்தது. பலகைக்கல்லின் உட்பரப்பு இரு அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. பிரிவுப்பகுதியிலும் சட்டம் போன்ற விளிம்பு உள்ளது. கீழடுக்கில், வீரன் ஒருவன் ஈட்டியால் புலியைக் குத்திக்கொண்டிருப்பதுபோல் ஒரு சிற்பம். வீரனின் முகம் முன்புறமாக நம்மை நோக்கியவாறு அமைந்துள்ளது. முகத்தில் கண்கள், மூக்கு போன்றவை தெளிவாகப் புலப்படவில்லை. மழுங்கியிருக்கிறது. அவனுடைய கால்களின் நிலை முன்புற நோக்கில் இல்லாமல் பக்கவாட்டில் புலியை எதிர்கொள்ளும் கோணத்தில் உள்ளது. வீரன் தன் தலை முடியை அவனது வலப்புறத்தில் கொண்டையாக முடிந்துள்ளான். செவிகளில் காதணிகள் உள்ளன. கால்களில் கழல் அணிந்திருப்பதாகக் காணப்படுகிறது. இடையில் அரையாடை அணிந்துள்ளான். இடைக்கச்சில் குறுவாள் காணப்படுகிறது. கீழாடை முழங்கால் வரை உள்ளது. எதிரில் புலியின் உருவம், அவனது உயரத்துக்குச் சமமாகத் தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி நின்று, முன்னங்கால்களால் வீரனைத் தாக்கியவாறு காணப்படுகிறது. புலியின் வால் மேற்புறமாக உயர்த்திய நிலையில் உள்ளது. பெரும்பாலான புலிகுத்திக்கல் சிற்பங்களில் புலியின் வால் உயர்த்தியவாறு காட்டப்பெறுவதே வழக்கம். இந்த அமைப்பு, புலியின் சீற்றத்தைக் குறிக்கவந்தது. புலியின் உடல் நீளமாகக் காணப்படாததும், அதன் தலை சற்றுப் பெரிதாகக் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்த எண்ணெய்ப் பூச்சின் காரணமாகச் சிற்பங்களின் நுணுக்கமான வடிவமைப்பு புலப்படவில்லை.
புலிகுத்திக்கல் - அண்மைத் தோற்றங்கள்
நடுகல்லின் மேலடுக்கில், இரண்டு பெண்கள் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நின்றுகொண்டிருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இருவரும் தங்கள் தலை முடியை இடப்புறமாக முடிந்திருக்கின்றனர். காதில், கழுத்தில், கைகளில், காலில் அவர்கள் அணிந்திருக்கும் அணிகள் தெளிவாகப் புலப்படவில்லை. அவர்களது ஆடை அமைப்பும் புலப்படவில்லை. காரணம் முன்னரே குறித்தவாறு, சிற்பங்களின் மேல் தொடர்ந்து பூசிய எண்ணெய்ப்பூச்சே. வணங்கிய நிலையில் உள்ள இரண்டு பெண்களின் சிற்பம், வீரன் மேலுலகம் சென்றதைக் குறிக்கும். இவ்வகை அடுக்குநிலை நடுகல் சிற்ப அமைப்பு, நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கருநாடகத்திலிருந்து பின்பற்றிய பாணியாகும். தமிழகத்தில், தமிழகப்பாணியில் நிறுவப்பட்ட நடுகற்களில் இந்த அடுக்குகள் இரா.
பெண்களின் சிற்பம்
நாட்டார் வழிபாடும் நடுகல்லும்:
நடுகல் வழிபாடு தொன்றுதொட்டு இருந்து வருகின்றது. போரில், பூசலில் இறந்து படும் வீரனுக்கு வீரக்கல் என்னும் நடுகல் எடுக்கப்படுவது வழக்கம். சங்ககாலப் பாடல்களில் நடுகல் பற்றிய செய்திகள் நிறையக் காணப்படுகின்றன. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட காலங்களில், கால்நடைகளைக் காத்தல் பெரும்பணியாயிருந்தது. கால்நடைகளைக் கவர்வதிலும், அவற்றைக் காத்தலிலும் வீரர்கள் போரிடுதல் இயல்பான சமூக நிகழ்வாயிருந்தது. அது போலவே, கால்நடைகளைக் காட்டு விலங்குகளினின்றும் காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குளைக் கொல்லுதலும், சண்டையின்போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கும் நடுகல் எடுப்பித்து நாட்டார் வழிபடும் மரபு நாயக்கர் காலம் வரை தொடர்ந்தது.
மதுரை வீரன் சாமி:
உக்கடம் நடுகல்லும், இவ்வகையில் வழிபட்டுவந்துள்ளதாகக் கருதலாம். ஒரு வகையில், வழிபாடு காரணமாகவே இந்த நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப் பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது. நடுகல்லின் அமைவிடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கிருந்த ஒரு இசுலாமியப் பெண்மணி ஒருவர், இந்த நடுகல் சிற்பம் மதுரை வீரன் சாமி என்னும் பெயரால் வழிபடப்பட்டு வருவதாகவும், அருகிலேயே இருப்பதால் நாள்தோறும் அப்பெண்மணி அவ்விடத்தைப் பெருக்கித் தூய்மை செய்து, ஒரு கற்பூரத்தையும் ஏற்றி வைப்பதாகவும் கூறியது அவரது நல்லெண்ணத்தையும், மத நல்லிணக்கத்தையும் நமக்கு உணர்த்தியது.
கோவையும் கோவன்புத்தூரும்:
கொங்குநாட்டின் கோவைப்பகுதி பண்டைய நாள்களில், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை அரணாகக் கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத்தால், கால்நடை வளர்ப்புச் சமுதாயமே மேலோங்கியிருந்தது. வளமான வேளாண்மை இல்லை. இடைக்காலக் கொங்குச் சோழரின் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்த பின்னரே வேளாண்மை செழிப்புற்றது. கொங்குச் சோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி முன்னிலையில் ஒரு நகரப்பகுதியாக் இருந்திருக்கவில்லை. கோவைக்கருகில் அமைந்துள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது. கொங்குநாட்டின் இருபத்து நாலு நாட்டுப்பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது. கோவைப்பகுதி, காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கால்நடை வளர்ப்புப் பகுதியாகவும் இருந்துள்ளது. பின்னரே, கொங்குச்சோழர் காலக்கல்வெட்டுகளின்படி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கோவன்புத்தூர் என்று புதியதாக ஓர் ஊர் அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது. காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும், காடுகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே, மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாகும்.
உக்கடம் புலிகுத்திக்கல்லின் காலம்:
இந்த நடுகல்லின் காலத்தை, இதைப் பார்வையிட்ட வரலாற்றுப்பேராசிரியர் திரு. இளங்கோவன் அவர்கள், இந்நடுகல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது எனத்தெரிவித்துள்ளார். எனவே இந்நடுகல், கி.பி. 16-17 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
கோவை கிழாரும் உக்கடம் புலிகுத்திக்கல்லும்:
மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் பற்றிக் கோவை கிழார் என்னும் பெயரில் அறியப்படுகிற கோவையின் வரலாற்றினை ஆய்வு செய்த சி.எம். இராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் தம்முடைய ”இதுவோ எங்கள் கோவை” நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி. அவர் கூற்றிலேயே அக்குறிப்பைக் காணலாம்:
“ஊராரின் பாதுகாப்பிற்காகப் புலியுடன் போர்புரிந்த வாலிபனுடைய உடலைக் கிராமப் பொது இடத்தில் புதைத்துவிட்டு அவனைப்போல் ஒரு கல்லுரு அமைத்து ஊர்ப்பொது இடமான அக்குளக்கரையின் தென்சரிவில் நட்டுப் பூசை செய்தார்கள். இப்போது அவ்வீரனின் கல் அதே இடத்தில் நிற்கிறது. இப்போதும் சில தடவைகளில் அதற்குப் பூசை நடப்பதுண்டு. ஒரு வாலிபன் புலியுடன் போர்புரிந்ததும் அவன் அடக்கமானதும் அடங்கிய சமாதிக்கருகில் இரண்டு பெண்கள் கும்பிடுவதும் அக்கல் சிலையில் செதுக்கப்பட்டிருக்கிறது.”

களப்பணியாளர்கள்
முடிவுரை:
பல ஆண்டுகளுக்கு முன்பே, கோவை கிழார் உக்கடம் நடுகல்லை அறிந்துவைத்திருக்கிறார். ஆனால் அது, வரலாறு தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இதுவரை புலப்படாமல் இருந்துள்ளது. அதன் அமைப்பு, இருப்பிடம் ஆகியவை அவர் பார்த்தவாறே இருப்பதும் அவருடைய காலடித் தடத்திலேயே நாங்கள் கோவை நகர மையப்பகுதியில் இந்தப் புலிகுத்திக்கல்லைக் கண்டறிந்ததும் ஒரு வியப்பான நிகழ்வே.
________________________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம் <doraisundaram18@gmail.com>
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

No comments:
Post a Comment