Monday, January 15, 2018

பொங்கலோ பொங்கல்!


——   இராம.கி.

    பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல, சரியானபடி அறிய, இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக "தை முதல் நாளில் இவ்விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும், இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முற்காலத்தில் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.

    சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் = star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve) கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ”ஏகலோடி” என்று வானியலிற் சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் = செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்புறுத்தும் முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது வேறு ஒன்றும் இல்லை; புவிக் கோளத்திற் கற்பிக்கும் ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவிற் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான் நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவதாகும். இந்த வான் நடுவரையை, இன்னொரு விதமாய், விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்றும் சொல்லுவதுண்டு.

    விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களும் சுற்றும் ஒரு வலயத் தளம். இந்த விசும்பு வட்டம், ஏகலோடி என்ற இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ”ஒருக்களித்தல்/ ஒருக்கணித்தல்” என்று புழங்கும் வினைச்சொல் ”சாய்ந்து இருத்தல்” என்ற பொருளைக் காட்டும். ”ஒருக்களித்துப் படுத்தான்” என்றால், ”மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்று பொருள் கொள்ளும்) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால் கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய) தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச் சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக் குறையப் போகிறது" என்று உணர்த்தும் நாளாகும். அந்த நாள் வரும் போது, "இனிமேல் வரப் போவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்" என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.

    இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின் அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.

    ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் (=ஒரே அளவுள்ள) ஒத்த நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.

    இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும்,இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22ம் நாள்) நாம் சொல்லுகிறோம்.

    புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் செல்லச் செல்ல இந்த ஒக்க நாட்கள் சிறிது சிறிதாக முன் நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.

    இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் விழுகிறது (=ஏற்படுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில் கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் சொல்லுவார்கள்.) என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும், சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.

    இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடியக் கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த முற்செலவு இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித் தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில் அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;

    இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு ”உடன் அயன முறை” (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் காலங்களையும்க் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தை முற்றாகக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பதே விதப்பாகப் பின்பற்றப்படுகிறது.

    நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். நில்லயன முறையின்படி, தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவைச் சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது இந்தக் காலத்தில் உடன் அயன முறையின்படி, வடசெலவு தொடங்குவது திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது.

    இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும்.

    அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய ஆண்டு கி.பி. 285 ஆகும்.

    இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்கிய நிலையை நினைவு படுத்தி, ”பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் கி.பி.285 இல் ஒன்று சேர்ந்திருந்தன” என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவது வானியல் முறை. மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)

    மேலவிழு, துலை விழு ஆகியவற்றைச் சொன்னது போலவே, “பொங்கல் நாள்” என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) ”பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை” என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.

    அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் ”பொங்கல் விழாவை கி.பி.285 ற்கு முன் தமிழர் என்ன சொல்லிக் கொண்டாடினர்?” என்ற கேள்வி எழுகிறது.

    அந்தக் கேள்விக்கான விடையை, விழாவைக் கொண்டாடும் முறையிலிருந்து புரிந்து கொள்ளலாம். பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ, பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.

    இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவைத் தமிழர் என்னும் இனக்குழு (tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளுகிறோம். ”அந்த வேறு எது?” என்பது அடுத்த கேள்வி.

[இன்றைக்கும் கூட இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும் கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]

[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள் நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில் விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே.

    மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப் பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும்ம முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற் சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும் இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்) சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியற்காரர்.)

    கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம் என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும் பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில் என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது. ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின் அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.

    அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப் பொருள்கள் பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா), பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள் சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில் உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு ஒரு பொழுது பார்க்கலாம்.

    இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப் படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச் சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும், தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும், திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை நான் தமிழில் கண்டதில்லை.]

    ”சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும்?” என்பதை இனிப் பார்ப்போம்.

    கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப் பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம் முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.

    இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலிற் தொடங்கியது சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா இளவேனிலில் தொடங்குகிறது.)

    எந்தவொரு சூரிய ஆண்டுத் தொடக்கமும் (tropical year beginning) பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில் கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும் குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும்.

    இனக் குழுக்களாய் வாழ்ந்த காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய வானியலில் சாய் என்ற சொல் நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும். (சாய் என்பது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்; வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று மேலை நாடுகளிற் sine ஆகி நிற்கிறது.)

    பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது சூரியனின் வட செலவில் இருந்து தொடங்குவதற்கு இணையானது. அப்படியானால் தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத் தொடக்கத்தைக் குறித்தது என்ற பொருளையே ஏரணத்தின் மூலம் நாம் பெறுகிறோம். ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில் தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு பெரும்பொழுதுகளுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும் தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே. இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும் இருக்கின்றன.

    பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில் (மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி), (ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக் குறிப்பிடுவார்கள். இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார் என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும் குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல் நாளே என்பது புரியும்.

    பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில்,

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----

என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.

    அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில் தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில் இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத் தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக் குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று போலும்.

    சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]

    இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1 தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல் மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும் விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!

    கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.

    பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]



    பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.

பொங்கலோ பொங்கல்!



(குறிப்பு: இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், 10 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவில் சேர்த்து வைப்பதற்கும், பின்னூட்டு இருந்தால் மறுமொழிக்கவும் வேண்டி, அங்கு பதியப்பட்டது.)



படம் உதவி: விக்கிப்பீடியா
https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2b/Preparation_of_Pongal.jpg

________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com






No comments:

Post a Comment