Showing posts with label முனைவர் கி. காளைராசன். Show all posts
Showing posts with label முனைவர் கி. காளைராசன். Show all posts

Thursday, December 20, 2018

குடிசைத் தொழில்: முந்திரிப் பருப்பு தயாரிப்பு



  —   முனைவர் கி. காளைராசன்


புதுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் பெருங்களூர் - ஆதனக்கோட்டை அருகே சாலை யோரம் முந்திரிக்கொட்டை யிலிருந்து பருப்பு எடுத்து விற்கின்றனர். சுமார் 45 செ.மீ. விட்டமுடைய அலுமினியச் சட்டியின் அடிப்பாகத்தில் சிறுசிறு துவாரங்கள் (ஓட்டைகள்) இட்டுள்ளனர். இந்தச் சட்டியில் முந்திரிக் கொட்டைகளைப் போட்டு அடுப்பில் வைத்து சூடாக வறுக்கின்றனர். தீயும் இந்தச் சட்டியில் உள்ள துவாரங்கள் வழியாக சட்டிக்கு உள்ளேயே வருகிறது. இதனால் சட்டியின் உள்ளேயும் நெருப்பு எரிகிறது. இவ்வாறு நெருப்பில் முந்திரிக் கொட்டை எரியும் போது அதன் மேலோடு எரிந்து அதிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் கசிந்து வருகிறது. இந்த எண்ணையுடன் சேர்ந்து நெருப்பு நன்றாகச் சுடர்விட்டு எரிகிறது.

சட்டியில் உள்ள துவாரங்கள் வழியாக இந்த எண்ணெய் அடுப்பிற்குள் விழுகிறது. இதன் காரணமாக அடுப்பும் எரிகிறது. முந்திரிக் கொட்டையின் மேல் உள்ள ஓடுதான் அடுப்பிற்கான எரிபொருள் ஆகப் பயன்படுகிறது. விறகு அல்லது வேறு எந்தவொரு எரிபொருளும் பயன்படுத்தப்படுவதில்லை. கையில் வைத்துள்ள நீண்ட இருப்புக் கம்பியின் முனையைச் சற்று வளைத்து வைத்துள்ளனர். இந்தக் கம்பிக் கொண்டு சட்டியில் உள்ள முந்திரிப் பருப்பு முழுமையாக எரிந்துவிடாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்கின்றனர். உடைத்து எடுக்கக்கூடிய பக்குவத்திற்கு வந்தவுடன் சட்டியில் இருக்கும் வறுத்த கொட்டைகளைத் தனியாகக் கொட்டி வைக்கின்றனர். புதிய கொட்டைகளை எடுத்து வறுக்கத் துவங்கிவிடுகின்றனர். 



வறுத்தெடுக்கப்பட்ட முந்திரிக் கொட்டைகளை எடுத்து சிறிய கல்லில் வைத்து உடைத்து முந்திரிப் பருப்பைப் பிரித்து எடுக்கின்றனர். முந்திரிக் கொட்டையின்கூடு எரிபொருளாகப் பயன்படுகிறது.
பிரித்து எடுக்கப்பெற்ற முந்திரிப் பருப்பைக் காயவைக்கின்றனர். அந்த முந்திரிப் பருப்பின் மேல் மெல்லியதான ஒரு தோல்போன்ற பகுதி மூடியுள்ளது. அதை ஒரு கல்லில் வைத்துத் தேய்த்து உரித்து எடுக்கின்றனர். இவ்வாறு தோல் உரிக்கப்பட்டவுடன் வெள்ளை நிறத்தில் முந்திரிப்பருப்பு விற்பனைக்கு வருகிறது. விலை - கால் கிலோ ரூ.220/-

குடிசைத்தொழில். 15-20 குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகின்றனர். குறைந்தவிலையில் சுத்தமாக சுவையாகக் கிடைக்கிறது.  புதுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் ஆதனக்கோட்டை  (Adhanakkottai, Tamil Nadu 614902) அருகே சாலையோரம் தயாரிக்கப்படும் இந்த முந்திரிப்பருப்பை வாங்கிப் பயனடையலாம்.



தொடர்பு:  முனைவர் கி. காளைராசன் (kalairajan26@gmail.com)

Sunday, January 28, 2018

திருவாடானைக் கோயில் கல்வெட்டுகள்


——   முனைவர் கி. காளைராசன்

    பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற தலங்கள் பதினான்கு.  அதில் திருவாடானைத் திருத்தலமும் ஒன்று (புவியிடக் குறிப்பு: 9.783656, 78.919450).  

    திருவாடானையில் சுவாமியின் பெயர் ஆதிரெத்னேசுவரர்.  ஞானசம்பந்தரின் பதிகமும், அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழும், திரு உ.  வே.  சா.  அவர்களின்  திருத் தலங்கள் வரலாறும், சேக்கிழார் பெரியபுராணமும்,  திருவாரூர் சாமிநாத தேசிகர் இயற்றிய திருவாடானைப் புராணமும் இக்கோயில் உறையும் இறையின்  சிறப்பைக் கூறுகின்றன. 




1) திருவாடானை சுவாமி சந்நிதிக்கு அருகே மண்டபத்தின் தரையில் உள்ள கல்வெட்டு



முதல் கல்வெட்டின் பாடம்:
1 .....த்தான் எழுத்து
2  ...எழுத்து படைமுகமழ(கி)ய..
3  தேவன் பொன்னாண்டான்  தற்குறியு
4  த்தான் எழுத்து வத்தராய கங்கன் எழுத்து
5  (யான் போ..)ழகியாள் தற்குறி
6  ருமாள் எழுத்து இன்னாட்டுக்கு
7  சொல்ல இப் ப்ரமாணம்  எழுதி
8  ட்டுக் கணக்கு கூத்தாடுவான் வி
9 ன் சேனாவரையன் எழுத்து

குறிப்பு: இது கல்வெட்டின் இறுதிப்பகுதி. சாட்சிக் கையொப்பம்  இட்டவர்களின் விவரம். தேவன் பொன்னாண்டான், வத்தராய கங்கன்,  (அ)ழகியாள், (பெ)ருமாள், சேனாவரையன் போன்றோர் கையொப்பம் இட்டுள்ளார்கள். இவர்களில், படிப்பறிவு பெறாதவர்கள் இருவர்; இவர்கள் இருவரும் கையொப்பம் இடாமல் தம்முடைய அடையாளத்துக்கென்று தம் குறிகளை (கீறல்களை?) இட்டுள்ளார்கள. இதை “தற்குறி”  என்று  மூல ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பர். இதன் அடிப்படையிலேயே, இந்த மரபு தொடர்ந்து, இன்றும் எழுத்தறிவில்லாதவர்களைத் “தற்குறி” என்று வழங்கும் வழக்கு நிலைபெற்றுவிட்டது. தற்குறிப் பெண்மணி ஒருத்தி சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் நிர்வாகத்தில் ஏதோவொரு பணியில் ஈடுபட்டவளாக இருக்கலாம். பிரமாண ஓலை எழுதியவன், நாட்டுக்கணக்கு (கணக்கன்) கூத்தாடுவான் என்பவன் ஆவான்.  ஒவ்வொரு ஊருக்கும் ஊர்க்கணக்கு இருப்பர்; ஒவ்வொரு நாட்டுப்பிரிவுக்கும்  ஒரு நாட்டுக்கணக்கு இருப்பர். நாட்டுக் கணக்கு இந்த ஆவணத்தை எழுதியதாலும், சாட்சிக் கையெழுத்து பலர் இட்டதாலும், இக்கல்வெட்டு குறிப்பிடும்  நிவந்தம் பெரிய அதிகாரி ஒருவராலோ, அல்லது அரசனின் நேரடி ஆணை மூலமாகவோ அளிக்கப்பட்டிருக்கவேண்டும் எனலாம்.

-------------------------------------

2) அம்மன் சந்நிதியில் உள்ள பிள்ளையாருக்கு அருகே மண்டபத்தின் தரையில் உள்ள கல்வெட்டு




இரண்டாவது கல்வெட்டின் பாடம்:
1 ............(நாட்டு கீழ்)..
2 .... ...களப்பாளராயன் எழுத்தெ...
3 ..........ழகிய பெருமாளான (வீர)
4 ..   (திரு) வாடானைத் தா....கண்....
5 ..... முத.... யார்....சிஷ்யப்ர....
6 ..........ல் விலைகொண்ட ....
7 ..................
8 ......................

குறிப்பு: திருவாடானை ஊர்ப்பெயர் காணப்படுகிறது. களப்பாளராயன் என்பவன் பெயரும் உள்ளது. செய்தியைச் சரியாக அறிய இயலவில்லை. 


    துண்டான கல்வெட்டுகள் தரையில் பதிக்கப் பெற்றிருப்பதால், இதுபோன்ற கல்வெட்டுகள் நிறையவே இருந்திருக்கலாம் என்றும், அவையனைத்தையும் புதுப்பித்தே இத்திருக்கோயில் புனர்நிர்மாணம் செய்யப் பெற்றுள்ளது என்றும் உணர்ந்து கொள்ள முடிகிறது.


நன்றி:
கல்வெட்டுகளைப் படித்து உதவியவர்
——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
தொடர்பு:  doraisundaram18@gmail.com அலைபேசி :  9444939156.


________________________________________________________________________
தொடர்பு:  முனைவர் கி. காளைராசன்
kalairajan26@gmail.com
http://kalairajan26.blogspot.in/ 






Wednesday, December 20, 2017

இழையெடுத்தல் (பிள்ளையார் நோன்பு)


——  முனைவர் கி. காளைராசன்




          வழிவழியாக, வாழையடி வாழையாக முன்னோர் செய்த செயல்களைத் தொன்று தொட்டுச் செய்து வருவதை மரபு என்கிறோம்.  மரபுகளைப் பேணிக்காப்பதில் இந்தியர் அதிலும் குறிப்பாகத் தமிழர் தனியிடம் பெறுகின்றனர்.  தமிழருள்ளும் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது முன்னோர்கள் செய்து வந்தனவற்றை அப்படியே மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து மரபுகளைக் காத்து வருகின்றனர்.‘

          இவ்வாறாக நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறைதான் “பிள்ளையார் நோன்பு“.  இவ்விழாவினைப் “பிள்ளையார் சஷ்டி“ என்றும் “இழை எடுத்தல்“ என்றும் கூறுகின்றனர்.

          பிள்ளையார் நோன்பின் போது வழிபடுவதற்கு என உள்ளங்கைக்குள் அடங்கும் அளவிற்கு ஒரு வெள்ளியிலான பிள்ளையாரைரோ அல்லது தங்கத்தினாலான பிள்ளையாரையோ பிறந்தவீட்டுச் சீராகக் கொடுக்கின்றனர். அந்தப் பிள்ளையாரின் பின்புறத்தில் தங்களது பெயர் முகவரியையும் (initials) பொறித்து வைத்திருக்கின்றனர்.

          பெரிய கார்த்திகை என்றழைக்கப்படும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் மறுநாளிலிருந்து பிள்ளையார் நோன்பு விரதத்தை ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாள் முழுதும் விரதமிருந்து மாலைப் பொழுது சாய்ந்ததும் பிள்ளையாரை வழிபடுகின்றனர்.

          ஒவ்வொரு நாள் வழிபாட்டின்போதும் புதுத்துண்டு அல்லது புதுவேட்டியிலிருந்து ஒரு சிறிய நூல் இழையை எடுத்து வைக்கின்றனர். இதனை “இழையெடுத்தல்“ என்கின்றனர். இவ்வாறு 21 நாட்கள் இழையை எடுத்து வைத்து வழிபடுகின்றனர்.  இதனால் 21 சிறிய நூலிழைகள் சேர்ந்து விடுகின்றன.  இந்த இழைகளை ஒன்றாக்கி, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி பல இழைகளாக நறுக்கி வைத்துக் கொள்கின்றனர். கருவுற்ற பெண்ணிற்கு ஒன்று என்றும் அவளது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஒன்று என்றும் கணக்குப் போட்டுக் கொள்கின்றனர். கைம்பெண்களை மட்டும் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வதில்லை.  எண்ணிக்கையை விடக் கூடுதலாகவோ குறைவாகவோ இழையை நறுக்குவது இல்லை.

          21ஆவது நாள் முடியும் போது சதயநட்சத்திரமும் சஷ்டி திதியும் ஒன்றாக வரும் நாள் இரவு பிள்ளையாரை வழிபட்டு நோன்பினைப் பூர்த்தி செய்கின்றனர். 21 நாட்களும் வழிபடாவிட்டாலும் கடைசிநாள் அன்று நகரத்தார் அனைவரும் எங்கிருந்தாலும் தவறாது பிள்ளையாரை வழிபட்டு இழையெடுத்துக் கொள்கின்றனர்.  வெளிநாட்டில்  உள்ளோரும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி இழையெடுத்துக் கொள்கின்றனர்.

          வாக்கப்பட்டுச் (வாழ்க்கைப்படுதல்) சென்ற மகள் வீட்டிற்குப் பொங்கல் தீபாவளி  முதலான பண்டிகைகளுக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர் அனுப்புவர்.  அதுபோல இந்தப் பிள்ளையார் நோன்பிற்கும் பிறந்த வீட்டிலிருந்து இந்தப் பிள்ளையார் நோன்பினை மேற்கொள்வதற்கான அனைத்துப் பொருட்களையும் வைத்துச் சீர் அனுப்புகின்றனர்.

          குடும்பத்தலைவன் (கணவன்), குடும்பத் தலைவி (மனைவி) மற்றும் பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி வழிபாட்டிற்கான வேலைகளைச் செய்கின்றனர். பிள்ளையார் நோன்பு அன்று, மாலை நேரம் வீட்டினைக் கழுவித் துடைத்துச் சுத்தம் செய்து பூசையறையில் ஒரு பெரிய கோலம் போடுகின்றனர். அதன் பின்னர் பூசைக்குத் தேவையான கருப்பட்டி அப்பம், பொரி, அவல், எள்ளுப் பொரி முதலான 21வகை உணவுப் பொருட்களைப் பிள்ளையாருக்குப் படைக்க எடுத்து வைத்துக் கொள்கின்றனர்.  இதில் ‘எள்ளுப் பொரி‘ விசேடம்.

          பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலும், தீபாவளியன்று எண்ணைப் பலகாரங்களும் சிறப்புடையன.  பிள்ளையார் நோன்பில்  கருப்பட்டியப்பம் சிறப்புடையது. கருப்பட்டியைக் காய்ச்சிப் பாகு எடுத்து அதில் அரிசிமாவையும் சேர்த்து மாவுபிசைந்து அப்பம் சுட்டு வைத்துக் கொள்கின்றனர்.  இவ்வாறு அப்பம் சுடுவதற்கு எண்ணைய்ச் சட்டியில் மாவை ஊற்றுவதற்கு முன்பு சங்கு ஊதுகின்றனர்.  பொங்கல் விழாவின் போது, பால் பொங்கி வரும்போது சங்கு ஊதுவோம், பிள்ளையார் நோன்பின்போது சங்கு ஊதிய பின்னரே அப்பம் சுடுகின்றனர்.

          வீட்டில் உள்ள பழமையான ஏடுகளை எடுத்து, அதில் சுற்றியிருக்கும் நூல்கயிற்றைப் பிரித்து, அந்த நூல்கயிற்றை பச்சரிசியை அரைத்து எடுத்த மாவில் முக்கி எடுக்கின்றனர். அந்தக் கயிற்றை (தும்பு) ஆளுக்கு ஒருபக்கமாகப் பிடித்துக் கொண்டு சுவரில் ஒட்டினார் போல் வைத்துக் கொண்டு,  ஒரு கையினால் சுண்டி விடுகின்றனர்.  இவ்வாறாக பூசையறையில் உள்ள சுவரில் இரண்டு இடங்களில் வீடு போன்று மாக்கோலம் போடுகின்றனர். இதனைத் “தும்பு பிடித்தல்“ என்று குறிப்பிடுகின்றனர்.  தும்பு பிடித்தல் மூலமாகச் சுற்றில் வீடுபோன்றதொரு மாவுக்கோலம் போட்டுவிடுகின்றனர்.

          ஆவாரம்பூ, கண்ணுப்பிள்ளைப்பூ (கண்ணுப்பூளைப்பூ), நெற்கதிர் இவற்றைச் சேர்த்து ஒரு சிறிய ஆவாரங் குச்சியில் கட்டி இரண்டு பூச்செண்டு தயார் செய்து வைத்துக் கொள்கின்றனர்.  இந்த ஆவாரம்பூவில் மொத்தம் 21 உறுப்புகள் உள்ளன.

அதைக் குறித்த பாடல் ஒன்று.

“ஏற்ற இறக்கம் இல்லாத
ஒக்கப் பிறந்தவர் இருவர்
உடன் பிறந்தவர் மூவர்
செக்கச் சிவந்தவர் ஐவர்
செவ்வாழைப்பழம் மூன்று
நமரி வாழைப்பழம் நான்கு
பச்சைப் பாம்புக்குட்டி ஒன்று
படமெடுத்த பாம்புக்குட்டி மூன்று“ 
என்று மொத்தம் 21 உறுப்புகள் ஆவாரம்பூவில் உள்ளன.

          குடும்பத்தின் மூத்த செட்டியார் தலைப்பாகை கட்டிக் கொண்டு கையில் ஆவாரம்பூச் செண்டைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வருகிறார்.  அவரைப் பின்தொடர்ந்து வீட்டில் உள்ள ஆண்களும் வீட்டிற்குள் வருகின்றனர்.  மூத்த செட்டியார் பூசையறைக்குள் வந்து பிள்ளையார் அருகில் போடப்பட்டிருக்கும் தடுக்கின் மீது அமர்ந்து கொள்கிறார்.  பிள்ளையார் கிழக்குப் பார்த்தபடி இருக்கிறார். பிள்ளையாரை (மேற்குப்)  பார்த்தபடி, வயது மூப்பு அடிப்படையில் எல்லா ஆண்களும் வரிசையாகத் தடுக்கில் அமர்ந்து கொள்கின்றனர்.   பெண்கள் உட்கார்வது இல்லை.

          வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி கருப்பட்டிப் பாகையும் அரிசிமாவையும் பிசைந்து செய்த மாவினால் கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து வைக்கின்றனர்.  இந்தப் பிள்ளையார் பூசையைச் செய்யும் தலைவன் (பெண்கள் இதைச் செய்யக்கூடாது) இந்தக் கருப்பட்டிப் பிள்ளையாரின் மீது 21 நூலிழைகள் கொண்ட திரியைப் போட்டு நெய் ஊற்றி நுனி வாழையிலையை விரித்து வைத்து அதன் நுனியில் வெள்ளி அகல் விளக்கு வைத்து மலர்ச்செண்டு சாற்றி, தீபம் ஏற்றி வைக்கின்றனர். பிள்ளையாருக்குப் பொரியினால் அபிஷேகம் செய்கின்றர்.  அபிஷேகம் செய்யும் போது சங்கு ஊதுகின்றனர்.  கருப்பட்டி அப்பம், பொரி, முதலான 21வகைப் பலகாரங்களை நிவேதனம் செய்து,  தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்கு வைத்துப் படைத்துத் தீபம் காட்டி வழிபடுகின்றனர்.


          வழிபாட்டின் நிறைவாக, இந்த வழிபாட்டினை முன்னின்று செய்யும் குடும்பத் தலைவன், கூம்பு வடிவான பிள்ளையாரின் உச்சியில் தீபம் எறிந்து கொண்டிருக்கும் போது சோதியுடன் சுடரோடு பிள்ளையாரை எடுத்து அப்படியே தனது வாயினுள் போட்டுக் கொள்கிறார்.  அவர் ஒவ்வொரு பிள்ளையாராக எடுத்துக் கொடுக்க, வீட்டில் உள்ளோர் அனைவரும் வரிசையாக வந்து பிள்ளையாரை பெற்றுக் கொண்டு தீபத்துடன் தங்களது வாயில் போட்டுக் கொள்கின்றனர்.  நிறைவாக, பிள்ளையாருக்கு என ஏற்றிவைக்கப்பட்ட பிள்ளையாரையும் குடும்பத் தலைவன் எடுத்து தனது வாயில் போட்டுக் கொள்கிறார்.  வழிபாடு நிறைவடையும் போதும் சங்கு ஊதுகின்றனர்.  இந்த நிகழ்ச்சியை “இழையெடுத்தல்“ என்கின்றனர்.  இவ்வாறு இழை எடுக்கும் போது குடும்பத்தினர் விநாயகர் அகவல் படிக்கின்றனர்.

          இவ்வாறாக இழையெடுத்தல் என்றழைக்கப்படும் இந்தப் பிள்ளையார் நோன்பு விழா இனிதே முடிவடைகிறது.  நோன்பு முடிவடைந்தவுடன், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பட்சணங்களை உண்டு மகிழ்கின்றனர்.

          பூம்புகாரில் தங்களது மூதாதையர்கள் செய்து வந்த வழிபாட்டை அப்படியே இன்றளவும் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர்.  பிராமண சமூகத்தினர் ஆண்டுக்கு ஒரு முறை பூணூல் போட்டுக் கொள்வதைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பது போல், நகரத்தார் சமூகத்தினர் இழையெடுத்தலைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

“வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ வேண்டிய புத்தி மிகுந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத் துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே
அப்பம் முப்பழம் அமுதுசெய் தருளிய தொப்பை யப்பனைத் தொழவினை யறுமே“


குறிப்பு: முனைவர்  வள்ளி அவர்கள் பிள்ளையார் நோன்பு குறித்து அளித்த பேட்டி,  வள்ளி அவர்கள் சொல்லியபடி முனைவர் கி. காளைராசன் அவர்களால் பதிவு செய்யப்பட்ட கட்டுரை. 







________________________________________________________________________
தொடர்பு: முனைவர் கி.காளைராசன் (kalairajan26@gmail.com)
http://kalairajan26.blogspot.in/  





Friday, May 5, 2017

மூன்றாம் குலோத்துங்கன்

 -- முனைவர் கி. காளைராசன்

திருவாலங்காட்டில் மூன்றாம் குலோத்துங்கன் (காலம் கி.பி. 1178-1218)

கும்பகோணம் அருகே திருபுவனத்திலிருந்து கிழக்கே நான்கு கல் தொலைவிலுள்ள ஓர் ஊர் திருவாலங்காடு ஆகும்.  இத்திருவாலங்காட்டில் உள்ள சிவாலயம் குலோத்துங்கன் காலத்தில் ஏற்றம் பெற்று திகழ்ந்ததாகும்.  இது இம்மன்னனால் பல திருப்பணிகள் செய்யப்பட்டு சிறப்படைந்தது.

ஸ்ரீ வடவாராண்யேசுவரர் எனும் இத்திருக்கோயில் திருவாடுதுறை ஆதீன அருளாட்சியில் இயங்கி வருகின்றது. இத் திருக்கோவிலினுள் இடம் பெற்றுள்ள குலோத்துங்கனின் உருவச்சிலை இதுவரை நமக்கு கிடைத்துள்ள உருவச்சிலைகளின் வரிசையில் கலைச் சிறப்பால் முதன்மையாக மதிக்கப்படுவதாகும். 


திருவாலங்காட்டுப் படிமத்தில் மாமன்னன் தன் கூப்பிய கரங்களால், மார்பில் வீரவாள் ஒன்றினை அனைத்துள்ளான்.  எழில்மிகு இச்சிலைக்கு மகுடமாகத் திகழ்வது முடிபோட்ட கொண்டைக்கு மேல் திருவடிகள் இரண்டினைச் சுமந்து நிற்பதே ஆகும். தாடி மீசைகள் திகழ, மார்பில் உத்திராக்க மாலைகள் அணி செய்ய பல மடிப்புகளுடன் நீண்ட ஆடை உடுத்தி நிற்கிறான்.  மாவீரன் ஒருவன் சைவ செம்மலாய் கயிலைநாதனின் திருவடிகளைச் சுமந்து நிற்கும் இக்கோலக் காட்சியில் இதுவரை வேறு எந்த ஒரு மன்னனது சிலையும் நமக்குக் கிடைக்கவில்லை.  திருவாலங்காடு ஆலயத்தில்  குலோத்துங்கனின் இடதுகைக் கக்கத்தில் உடைவாள் உள்ள அமைப்பு  சிறப்புடையது.

இத்தகைய கோலத்தில் தனது சிலையைப் படைத்துக் கொண்ட குலோத்துங்கனின் பெருமை சாதாரண ஒன்றா?  பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பாவினை வகுத்த கண்டராதித்த சோழர் சிவபாதசேகரன் எனத் தன்னைக் கூறிக் கொண்ட முதலாம் இராசராசசோழன் திருத்தொண்டர் மாக்கதை எழுதச் செய்து தில்லையம்பலக் கூத்தனின் பொற் பாதங்களாகிய தாமரைமலரை மொய்க்கின்ற வண்டு தான்தான் எனக் கூறிக் கொண்ட இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய மாமன்னர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றியவன் அல்லவா இவன்?

அதனால்தான் தனது உருவச்சிலையில் சிவனடிகளை தன்னுடைய தலையால் தாங்கும் கோலம் பெற்றான். பா தொடுப்பவராகவும் பாதசேகரராகவும், பாதகமலங்களை மொய்க்கும் வண்டுகளாகவும் தங்களை பெருமைப் படுத்திக் கொண்ட சோழர்களின் வழிவந்த இம்மன்னன் சிவபெருமானின் திருவடிகளைத் தன் தலைமேல் சூடிக் கொண்டு சிலையாக திருவாலங்காட்டில் நிற்பதைக் காணும் போது....
“நனைந்து அனைய திருவடி என் தலைமேல் வைத்தாய்
நல்லூரெம் பெருமானார் நல்லவாறே“
என்ற அப்பர் பெருமானின் நல்லூர் பதிகமும், திருச்சிராப்பள்ளி வலிதாங்குர பல்லவேசுவர கிருகத்தில் சிவபெருமானின் திருவடிகளை தன் தலையால் தாங்குகிறேன் என்று கல்வெட்டுப் பாக்களால் கூறி அவ்வாறே தாங்கிச் சிலையாக நிற்கும் மகேந்திர போத்தரையனின் சிற்பமும் நம்முன் தோன்றி தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவும் ஒரு பண்பு நலனை நம் நினைவிற்குக் கொணர்கின்றன.

(திருவாலங்காட்டுக் கோயிற்சுற்றில் உள்ளபடி)

குருசாமி ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடை வீட்டிற்கான பாதயாத்திரை சென்ற போது துன்முகி வைகாசி 2ஆம் நாள் (15.05.2016) ஞாயிற்றுக் கிழமை திருவாலங்காட்டில் வழிபாடு செய்யும் பேறு கிடைக்கப் பெற்றேன்.  அப்போது பார்த்து வணங்கியதை இப்போது பதிவு செய்கிறேன்.




மேலும், மூன்றாம் குலோத்துங்கனின் சிலைகள் தமிழகத்தில்,
கீழக்குறுக்கையிலும்
(http://aalayamkanden.blogspot.com/2012/03/where-short-hands-grew.html)



திருவிடை மருதூரிலும்
(https://www.quora.com/How-did-the-Chola-dynasty-meet-its-doom)

காணக் கிடைக்கின்றன.





__________________________________________________________
முனைவர் கி.காளைராசன்
kalairajan26@gmail.com
__________________________________________________________

Sunday, April 23, 2017

கிராதன்

 -- முனைவர் கி. காளைராசன்


 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அடியார்களால் சிறப்பித்துப் பேசப்படும் கோயில்.

இத்திருத்தலத்தில், சமயக்குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமானுக்குச் சிவபெருமான் குருவாக வந்து குருந்தை மரத்தின் அடியிலிருந்து உபதேசம் வழங்கியருளினான் என்கிறது புராணம்.  இத்தலத்தில் உள்ள ஆத்மநாதர் (ஆவுடையார்) கோயில் தெற்குப் பார்த்தது.  சிவலிங்கம் இருக்காது. பீடம் (ஆவுடை) மட்டுமே இருக்கும்.  இதனால் இக்கோயிலை ஆவுடையார் கோயில் என்கின்றனர்.  அன்னை யோகாம்பாளுக்கு உருவம் இல்லை.  பாதங்கள் மட்டுமே உண்டு.  இவ்வாறு பார்வதி பரமேசுவரர் அருவமாகவே காட்சியருளுகின்றனர்.  மாணிக்கவாசகப் பெருமானே உற்சவராக உள்ளார்.  எல்லாத் திருவிழாக்களும் மாணிக்கவாசகப் பெருமானுக்கே நடக்கின்றன.

இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் நுணுக்கமானவை.  அதி அற்புதமானவை.  இச்சிற்பங்களுள் மிகவும் அபூர்வமான சிற்பமாக அதீதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இரண்டு சிற்பங்கள் உள்ளன.   இச்சிற்பங்கள் இரண்டையும் கம்பிவலை கட்டிப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.  அதில் “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதப்பட்டுள்ளது.

கிராதன்



கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர்.  நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.  நெற்றியில் நீரு இல்லை.  நெற்றிக் கண் உள்ளது.  மீசை உள்ளது.  காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன.   உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும்.  கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும்  பூணூலும் உள்ளன.  இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.



இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்).  பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும்.   இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை(?)த் தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை.


கிஞ்சுகவாய் அம்மன்
"கிஞ்சுக வாயவள்" - முருக்கம்பூப்போன்ற உதட்டையுடைய உமாதேவி என்பது பொருள். சர்வ அலங்காரத்துடன் கொண்டை.  நெற்றியில் அழகாக நாமம்.  கண் புருவத்திற்கு மேல் புருவத்திற்கு மை தடவிய ஒப்பனை.  ஒவ்வொரு காதிலும் மூன்று பெரிய தோடுகள்.  கழுத்தே தெரியாமல் ஆபரணம், மணிமாலைகள்.  மாராப்பு அணியாத மார்புகள்.  வலதுகையில் பனையோலைக் கூடை. விரல்களில் நீண்ட  நகங்கள்.



இடது கையில் காப்புகளும் வளையல்களும், விரல்களில் மோதிரம்,   இடுப்பில் ஒட்டியாணம், சர்வ அலங்கார ஆடை,  முழங்காலுக்குக் கீழே பட்டை,  காலில் தண்டை,   கால்விரல்களில் மிஞ்சி.



சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர்  என்று பொருள் கூறுவர்.   ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு.  "கிராதன்" என்பதுவே  சரி. சிவனின் இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்களுள் ‘கிராத’ மூர்த்தமும் ஒன்று  (இருபத்தைந்து மஹேசுவர மூர்த்தங்கள்: சந்திரசேகரர், உமாமகேசர், ரிஷபாரூடர், ஸபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, த்ரிபுராரி, ஜலந்தராரி, மாதங்காரி, வீரபத்ரர், ஹரி அர்த்தர், அர்த்தநாரீசுரர், "கிராதர்", கங்காளர், சண்டேசாநுக்ரஹர், நீலகண்டர், சக்ர ப்ரதர், கஜமுகாநுக்ரஹர், ஸோமாஸ்கந்தர், ஏகபாதர், ஸுகாசீனர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர்).  இந்த்ரகீல பர்வதத்தில் தவம் புரிந்த அர்ஜுனருக்கு சிவபெருமான் கிராத வடிவில் தோன்றிப் பாசுபத அஸ்த்ரம் அளித்தார் என்பது மஹாபாரதச் செய்தி.

கோயிலில் இச்சிற்பத்தின் அருகே “கிராத வேடமொடு கிஞ்சுகவாய் அம்மையுடன் அர்ச்சுனர்க்குப் பாசுபதம் கொடுத்தல்“ என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், கிராதனிடம் பாசுபத ஆயுதம் போன்றதொரு ஆயுதம் எதையும் காணவில்லை.  மேலும், கிராதன் அருகில் அர்ச்சுனன் போன்று யாரும் காட்டப்பட வில்லை. 

அர்ச்சுனனுக்குப் பாசுபத ஆயுதம் வழங்க வந்த சிவபெருமான் பன்றிமேல் அம்பு  எய்திருப்பார்.  ஆனால் இச்சிற்பத்தின் அருகே பன்றியேதும் காட்டப்பட வில்லை.  மேலும் வாளால் ஒரு மனிதனையே கொன்றிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த அரியச் சிற்பம் கிராதன் அல்ல என நினைக்கத் தோன்றுகிறது. மேலும், கோயிலில் இருந்த நிருவாகிகளுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை.


-=o0O0o=-




திருவைக்குண்டம் 
அருள்மிகு கள்ளபிரான் திருக்கோயிலில் கிராதன் சிற்பம்






இந்தக் கோயிலின்  அரியச் சிற்பங்களை வாழ்வில் ஒருமுறையேனும் நேரில் சென்று பார்க்க வேண்டும்.

__________________________________________________________
முனைவர் கி.காளைராசன்
kalairajan26@gmail.com
__________________________________________________________