Sunday, July 8, 2018

சாத்தன் ——   இராம.கி.


”சாத்தன் என்றசொல் தமிழா?” என்றும், ”இதற்கும் மேலைநாகரிகத்தில் சொல்லப்படும் சாத்தானுக்கும் தொடர்புண்டா?” என்றும் முகநூல் சொல்லாய்வுக் குழுவிற் கேட்கப்பட்டது. இதன் மறுமொழியை சட்டெனச் சொல்லமுடியாது. பழங்குடிகளின் தொழிற்பிரிவு, சாதி/வருணத் தோற்றம், தமிழ்/சங்கத ஊடாட்டமெனப் பலவும் சொன்னாற்றான் ”சாத்தனின்” ஆழம் புரிபடும். சாத்தான் தொடர்பு வேறு வழிப்பட்டது. ஏற்கனவே தப்புந்தவறுமாய் நம்மைச் சுற்றியும், இணையத்திலும் ஏராளம் சொல்லப் பட்டுள்ளது. இவற்றையும் மீறி ஒழுங்குறப் புரிந்துகொள்ளப் பெருமுயற்சி தேவை. மெதுவாய்ப் படித்து, அசைபோட்டு ஓர்ந்துபார்த்துப் புரியவேண்டும், சாத்தனைத் தனிவாணிகனென்றும் வணிகக்கூட்டத்தில் ஒருவனென்றும் 2 விதங் காணலாம். வணிகத்தையும் 2-ஆய்ப் புரிந்துகொள்ளலாம். வாணியம்/வாணிகத்தின் குறுக்கமென்பது ஒன்று. பண்ணியம்/பண்ணிகம்>பணிகம்>வணிகம் எனுந் திரிவு இரண்டாவது. ’பண்ணிகத்தை’ விட ’வாணியம்’ மாந்தர் சிந்தனையில் முந்தையது. இவற்றைப் புரிந்துகொள்ள, பழந்தமிழர் குமுகாயப் பழக்கங்களை அறியவேண்டும்.

புதுக் கற்கால நாகரிகத்தில் வெவ்வேறு இனக்குழுக்களாய் (பொ.உ. மு 2000 க்கும் முன்னர்) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனத் திரிந்த காலையில், கூர்த்த கல்முனைகொண்ட சூலம்/வேல் போன்றவற்றால் விலங்குகளை வெட்டித்தின்றதும். மீன்களைக் குத்திக்கொன்றதும் போக, குழுக்கள் தம்மிடையேயும் சண்டை/போட்டி போட்டுக்கொண்டார். பிழைபட்டுச் சரிசெய்யும் முறையில் செம்பும், இரும்பும் ஆக்கும்நுட்பத்தைக் கற்றதால், கல்முனைகள், பொ.உ.மு. 2000 க்கு அருகில், மாழைமுனைகளாய் மாறி, மாந்த நாகரிகத்திற்குப் பெரும் உந்தலைக் கொடுத்தன. விலங்கு வேட்டையிலும், மாற்றாரை வெல்வதிலும் வெற்றி கூடின. ஒவ்வோர் இனக்குழுவினரும் அவரவர் புழங்கும் நிலம் அவர்க்கே சொந்தமென உரிமை பாராட்டத் தொடங்கினர். தனிச்சொத்து கூடக்கூடக் குழுக்களின் கட்டமைப்பு, குறிப்பாக அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்னும் அகன்று, இறுகியது; அதிகாரம் கூடியது.

சூலம்/வேலுக்கு அடுத்ததாய்த் தென்னக மேற்குக்கடற்கரை நெய்தலிலும், அதையொட்டிய குறிஞ்சியிலும் வில்/அம்பு ஆயுதமெழுந்தது. (வில்லடையாளம் சேரருக்கு.) விலங்குகளையும், வேற்றுமாந்தக் கூட்டத்தையும் அருகிற் சென்று கொல்வதினும் தொலை நின்று, வில்வளைத்து, அம்பெய்திக் கொல்வது இன்னும் நேர்த்தியென ஒருவேளை நினைத்தரோ?!? தெரியாது.! தம் குழுவிழப்பைக் குறைத்து, மாற்றாரிழப்பைக் கூட்டப் பழந்தமிழருக்கு வில்/அம்பு உறுதியாய் வகைசெய்தது. இதற்கப்புறம் நேரடிச்சண்டையிற் கொலைசெய்யச் சூலம்/வேலை விடச் செம்பு/இரும்பால் ஆன அரிவாள்/கத்தி வாகாய் ஆனது. (ஆதிச்சநல்லூரின் செம்பும், கொங்கின் இரும்பும் ஆயுதம் நாடி உருக்கப்பட்டதை ஆய்வாளர் மறவார். ஆதிச்ச நல்லூரின் காலம் பொ.உ.மு.2000க்கும் முந்தையது. இரும்புசெய்தது பொ.உ.மு.1500/1200 ஆக இருக்கலாம். கொங்கில் இரும்பு, தங்கம், மணிகள் என்பவற்றிற்கே தமிழக இனக்குழுக்கள் தொடர்ந்து மோதின.)

இம்மோதல்களின் முடிவில் சேர, சோழ, பாண்டியப் பெருங்குடிகள் எழுந்தன. இவற்றுள் வேளிரும் பிறருங் கொஞ்சங் கொஞ்சமாய் கரைந்துபோனார். சேர, சோழ, பாண்டியர்க்கு முன் கணக்கற்ற இனக் குழுக்கள் தமிழகத்துள் இருந்திருக்கும். அவற்றின் பாதுகாப்பைக் கவனிக்க அக்குழுக்களுள் மூவேறு வகையார் விதப்பாய் எழுந்தார். ஆயுத வழி பார்த்தால் முதல்வகையாரைச் சூலத்தார் (= வேலார்) என்றும், இரண்டாம் வகையாரை வில்லியர் (=அம்பார்) என்றும், மூன்றாம் வகையாரைக் கத்தியர் (=அரையர்) என்றும் அழைக்கலாம். முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் இன்னுங் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை குறைந்த பெருமானரின் (இவரேதோ வடக்கிருந்து வந்தாரென்பது ஒருதலைச் செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்துசேர்ந்தவர் இணைந்துகொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியலதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக்குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்தவிடத்தில் ஓர் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லைதாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலையும் வில்லியரே செய்தார்.

{{இங்கோர் இடைவிலகல். சங்கதம் கத்தியரைக் கத்ரியர்>க்ஷத்ரியர் என்றாக்கும். (தமிழில் நாம் அவரை அரயர்>அரசர் என்போம். வேறு வகையில் கத்தியின் இன்னொரு வடிவான வாளைக் கொண்டு வாள்மர்>வார்மர்>வர்ம என்றும் சங்கதம் கையாளும்) இதேபோல் வித்தையரை/விச்சியரை சங்கதம் விசையர்/வைசியர் என்றாக்கும்.(தமிழில் நாம் அவரை வாணிகர் என்போம்.) சூலத்தரைச் சங்கதம் சூல்த்தர்/சூத்தர்/சூத்ரர் என்றாக்கும். (தமிழில் வேலரை வேல்>வேள்>வேளாளர் என்போம்.). ”வேலைப்பகிர்வில்” தொடங்கிய தொழிற்பிரிவு நெடுங்காலங்கழித்து, பொ.உ.300 இல் குப்த அரசுகாலத்தில் இந்தியா எங்கணும் அகமுறைத் திருமணத்தால்/ பிறப்புமுறைப் பிரிவால் நிலைப்படுத்தப்பட்டது. முட்டாள்தனமான சாதி/வருணத் தோற்றம் நம்மூரில் இப்படி எழுந்ததே.

சங்ககாலத்தில் அகமுறைத் திருமணங்கள் மிகக் குறைவு. சங்க இலக்கியத்தில் கற்பிலும் மேலாய்க் களவே கொள்ளப்பட்டது. இன்றுங் கூட அகமுறைத் திருமணம் ஒழிந்தால் (காதல் திருமணங் கூடினால்) தமிழ்க் குமுகாயத்தில் சாதி/வருணம் இல்லாதுபோகும். அப்பன் வேலையை மகன்செய்வது இன்று மிகக் குறைந்துபோனது. ஆனாலும் வருக்கத் தாக்கம் அழியவில்லை.) பழந்தமிழ்க் குடிகளிடம் ஏற்பட்ட அதே தொழிற்பிரிவு தமிழகம், வட இந்தியா, உலகின் மற்ற குடியினரென எல்லோரிடமும் இருந்தது. அவரவர் கையாண்ட பெயர் வேறாகலாம். ஆனால் கருத்தீடு ஒன்றே. நால்வகையார் இருந்த குழுக்கள் பெருகி பல்வேறு சண்டைகளில் ஒருகுழு இன்னொன்றிற் கரைந்து அதிகாரக் கட்டுமானம் கூடிக் கிழார், அரயர்(>அரசர்), மன்னர், வேந்தரென மேலும் இறுகியது. வேந்தர் சங்க காலத்திலேயே வந்துவிட்டார்.}}

நாளா வட்டத்தில் அடுத்த இனக்குழுக்களுடன் எப்போதுமே போர்செய்ய முற்படாது, சிலபோது ஒன்றுகூடி உறவாடிப் பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றார் பொருள்/பண்டத்திற்கு மாற்றி வரவும் வில்லியர் முற்பட்டார் கொஞ்சங்கொஞ்சமாய் இனக்குழுக்களிடை பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதனால் ஏற்பட்ட பண்டமாற்றில் சில குறிப்பிடத் தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம்பெற்றார். வில்லறிவு, இங்கு வில்+தை= விற்றை>வித்தை>விச்சை எனச்சொல்லப்படலாயிற்று. வில்லியர், வித்தையர்> விச்சையர் என்றும் சொல்லப்பட்டார். வில்+தல் விற்றலாயிற்று. விற்றையும் விற்றலும், (போர்த்திறமை, பண்டமாற்று என்ற) 2 வேறு வில்லியர் செயல்களையுந் தொடக்கத்திற் குறித்தன முடிவில் தகரம்பயின்ற சொல் போர்த்திறமையையும், றகரம்பயின்ற சொல் பண்டமாற்றையும் குறிக்கத் தொடங்கிற்று. (இம்மெய்வேறுபாட்டை இன்றும்நாம் பயில்கிறோம்.) வில்லியருக்கு இன்னொரு பெயரும் அவர்கையாண்ட, சிறுவுருவங் கொண்ட கூர் அம்பு/வாளி/வாணியால் ஏற்பட்டது. வில்லியர் என்பார், வாணியர் என்றும் இங்கு சொல்லப்பட்டார். பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப்பெயர் உருவானது. [ஆங்கிலத்தில் இவரை trader என்பார்.]

2 ஆம் வகை வளர்ச்சியாய்ப் பிற்காலத்தில் இயல்பொருள்களின் மேல் மாந்தவுழைப்புச் செலுத்தி நெளிவு சுளிவு, சுவை, நேர்த்திகளைக் கூட்டிப் பயனுறப் பண்ணும் நுட்பம் சிச்சிறிதாய்ப் பிழைபட்டுச் சரிசெய்வதாய் எழுந்தது. பண்ணல் பழகாக் காலத்தில் உலர்ந்து வறண்டு, சருகாகிய (உப்புக்கண்டம், கருவாடு, தோல், எலும்பு, கொம்பு, உலர்காய்கள், இலைகள், பயிர்கள், கூலங்கள் போன்ற வறள்/ வறைப் பொருள்களையே மாந்தர் பரிமாறிக்கொண்டார். இப்பரிமாற்றமே வாணிகம் எனப்பட்டது. பின்னால் பண்ணல் பழகியகாலத்தில் பண்ணம்>பண்டம் என்றசொல்லும், பண்ணிகம்>பணிகம்>வணிகம் (= பண்ணி விற்பது; manufacture and sale) என்றசொல்லும் எழுந்தன. முடிவில் வாணிகம், வணிகமென்பன ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தன. அவற்றின் வேறுபாட்டை இன்றுநாம் உணர்வதில்லை.

விற்றலிற் கிளைத்த சொல் விலை. இதையொட்டிய கூட்டுச்சொற்களும் தமிழிலுண்டு. எல்லோருமறிய விலைபகர்வது பகர்ச்சி (=price). விலை ஏல்த்துவது ஏற்றல்/ஏலம். இந்தையிரோப்பியனில் கீழே சொல்லப்படும் சாலும் ஏலும் கலந்து sale ஆகும். வில்கொண்டு விற்பென்றுஞ் சொல்வோம். விற்பிப்பது விற்பனை. விலை படியும்வரை, நிறையும்வரை, சாலும்வரை பரக்கப்பேசுவது சால்+தல்= சாற்றல்/ சாத்தலாயிற்று. சால்தல், விற்பனையாளருக்கு இருக்கவேண்டிய இயல்பு. சாத்தல் தொழில் செய்வோன் சாத்தன். இன்னொரு பக்கம் வில்லால் வேட்டையாடும் தொழிலில், வில்லிற்சிக்கியது (அங்கியது)/ வில்லாலழிப்பது விலங்கு. (பாணிக்கிற/அசைகிற காரணத்தால் சங்கதத்தில் ப்ராணி என்றார். உய்கின்ற/மூச்சு விடுகின்ற காரணத்தால் தமிழில் உயிரி.) ஓரிடத்தின் எல்லையை அம்பு தைத்து அக்காலங் குறித்ததால், வில்லால் அங்கப்பட்ட (உறுப்பாக்கிய) நிலம், முன்னுரிமையைக் குறிக்கும். தற்கால வில்லங்கப்பொருளும் வில்லடி, வில்லடை போன்றனவும் தொடர்பொருள்களைக் குறிக்கும். வில்லியரின் பண்டமாற்றில் நடக்கும் கூடல், சொலல் குறித்தே மேற்சொன்ன ”சால்” வினையெழும். அகரமுதலிகளில் ”சாலுக்கு” 2 வகைப் பொருள்சொல்வர். முதல் வகை நிறைதல், பொருந்தல், முற்றல், மாட்சி பெறுதல் என்பதாகும். இரண்டாம் வகை விளம்பரப்படுத்தல், விரித்துரைத்தல், சொல்லல், நிறைத்தல், அடித்தல், புகழ்தல், அமைத்தல் போன்றவையாகும்.

முதற்சொல் சால்>சார்>சார்தலெனத் திரியும். 2 ஆவது சால்+தல்/சாற்றலாகும். அணிதல், தரித்தல், பூசுதலென்பது சார்த்தலாகும். மனம்நிறைதலுக்கு/ அமைதியடைவதற்கு ஆடுங்கூத்து சா(ர்)ந்திக்கூத்து. ஏற்கனவே கல்யாணமாகி, 60 அகவை நிரம்பியவன் மனைவியோடு மீளத்திருமணஞ் செய்வது சாந்திக் கல்யாணம். இளம் ஆணும் பெண்ணும், திருமணத்தின்பின் கூடுவதும் சாந்திக் கல்யாணமே. சார்= கூடுகை. சார்தல்= சென்றடைதல், புகலடைதல், அடுத்தல், பொருந்தியிருத்தல், சார்பெழுத்து= முப்பது தலையெழுத்துக்களைச் சார்ந்த குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம். சால்= நிறைவு; சால்பு= மேன்மை, சான்றாண்மை, தன்மை, மனவமைதி; சாலை= ஓரிடத்திலிருந்து இன்னோரிடங் கூட்டிச்சொல்லும் பாதை. சான்றார்/சான்றோர்= (நற்குணங்கள்) நிறைந்தவர். சாதுவன்= நல்லவன், ஐம்புலன் அடக்கியவன், அருகன், ஆதிரை கணவன்; சாந்தன்= அமைதியுடையோன், அருகன், புத்தன்; சாந்தி= அமைதி, தணிவு, மேல் சா(ர்)ந்தி= மேலேயுள்ள ஐயனார்கோயிலில் பூசைகளைச் செய்கிறவன்.

பலரறிய வெளிப்படச் சொல்லலால் சாற்றல்/ சாத்தலுக்கு வேதமென்ற பொருளுமுண்டு. வேதத்தின் இறைச்சிப் பொருள் கருதி மறையென்பார். (நாளாவட்டத்தில் வேதமுடிவான வேதாந்தம், தருக்கம் போன்ற நூல்களும் சாற்றமாயின. சாற்றம்>சாத்தம்>சாத்ரம்> சாஸ்த்ர என்று சங்கதத்தில் வரும். சாஸ்த்ரம் தெரிந்தவன் சாஸ்த்ரி. பெருமானரிற் படித்தவன். இவனே சால்மன்>சார்மன்>சர்மனும் ஆனான். படித்தவன் என்பது பொருள். ”முதலிற் சொல்வது, அடுத்தது, அடுத்தது” என வெவ்வேறு தோத்திரங்களையும், பாசுரங்களையும் பெருமாள் கோயிலிற் சொல்லும் முறைக்குச் சாற்றுமுறை என்று பெயர். சால்ந்ததை, நிறைந்ததை, முடிந்ததைச் சொல்வது சான்றானது. இதைச் சால்க்கு>சாக்கு என்றுஞ்சொல்வர். சால்க்கைச் சொல்பவன் சால்க்கி>சாக்கி. சங்கதத்தில் இது சாக்ஷியாகும். முடிக்கத் தகுந்தது சால்த்த>சார்த்தத் தகுந்தது எனப்படும் சாத்து>சாத்தியம் இப்படியெழுந்ததே. “இப்படி நடக்கக் கூடுமா? இது சாத்தியமா?” எனும்போது உள்ளிருப்பது சாலெனும் வினையடியே.

சாத்தவன்/சாத்தன் = வாணிகன், ஐயனார், அருகன், புத்தன், வாணிகக்கூட்டத் தலைவன். சாத்து = வணிகர் கூட்டம். ஐயனார் கோயில் பூசாரி சாமியாடி எதிர்காலம் பற்றி ஏதேனுஞ் சொல்வானானால் அவனும் சாத்தன் எனப் படுவான். ஐயனார்கோயில் சாத்தன் சாமி (இதையே பழந்தமிழ் இலக்கியம் அணங்கு என்னும்) ஆடுவான். சாலினி= தேவராட்டி, சாமியாடும் பெண்பூசாரி. குறிப்பிட்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பலவிடங்களில் வேதநெறி ஏற்க அரையர் தயங்கினர். பொ.உ.மு.800-500 களில் வேதமறுப்பு வடக்கே பெரிதாகிப் போனது. அற்றுவிகம் (=ஆசீவிகம்), செயினம், புத்தம் என்ற மூன்றும், இவற்றுக்கு முந்தைய சாங்கியம், விதப்பியம் (வைஷேஷிகம்), சாருவாகம் (உலகாய்தம்), ஞாயம் (ந்யாயம்) போன்றவையும் வேதமறுப்பு நெறிகள் என்பார். இவற்றை முதலில் வாணிகரே பெரிதும் புரந்தார். பின் அரசரும் சேர்ந்துகொண்டார். வடமேற்கிருந்து வந்த வேதருக்கு இந்தியக் கிழக்கில் புரவலர் குறைந்ததால், வேறு வழியின்றி தெற்குநோக்கி வரத் தொடங்கினார்.

வேதமறுப்பு நெறிகள் அடிப்படையில் கடவுள் மறுப்பு நெறிகளே. தம்முள் அவை வேறுபடினும், சில பொது ஓர்மைகளைச் சுட்டின. பொ.உ.மு.500 களில் வேதமறுப்பு ஆசான்களின் பாதப்படிமங்கள் வைத்தும், பின் உருவங்கள் வைத்தும் மக்கள் தொழத்தொடங்கினர். கொஞ்சங்கொஞ்சமாய் பள்ளிகள் கோயிற் கருத்தீட்டுள் வந்தன. இனக்குழுப் படையல்கள், பழக்கவழக்கங்கள், கொண்டாட்டங்கள், நினைவேந்தல்கள் பள்ளிகளில் நடக்கத்தொடங்கின. (நிக்கந்தநாதர்/ மகாவீரர் உட்பட்ட) செயினத் தீர்த்தங்கரர், அற்றுவிகத்தின் மற்கலி கோசாளர் (மகாவீரர் தவிர்த்த தீர்த்தங்கரர் அனைவரும் அற்றுவிகத்திற்கும் ஏற்றவரே), பூரணகாயவர், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூஉத் தலையார் (எனப்பட்ட அஜிதகேச கம்பலர்), சஞ்சய பேலட்ட புத்தர், (இன்று நாமெல்லோரும் அறிந்த) கோதம புத்தர் (முந்தைய 23 தீர்த்தங்கரர் பற்றிப் புத்தருங் கேள்வி கேட்கமாட்டார்.) ஆகியோர் அனைவரும் நாளாவட்டத்தில் ”ஐயன்= ஆத்தன்/ஆதன்/ ஆசான்/ஆசன்/ ஆஸ்ரியன்” என அறியப்பட்டார்.  (தமிழ் ஐயனும் பாகதப் பகவானும் ஒரே பொருளன) இக்காலத்தில் சில பெருமானரை ஐயரென்கிறோம் இல்லையா? பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உபஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளாவட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய்ச் ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக நீலகேசி மொக்கல வாதம் 413 ஆம் பாட்டில்,
ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்
சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?
வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன
ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்
என்று வரும். 50 ஆண்டுகள் முன் நம்மூரில் ’குப்பன், சுப்பன்’ பழகியது போல் (இப்போது இஷ்/புஷ் என்று பொருள்புரியாது வடமொழிப்பெயர் இடுகிறார்.) சங்ககாலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. இன்றைக்கும் மிச்ச சொச்சங்களாய், திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனவுண்டு.]

நந்தர் காலத்தில், அவர்தவிர்த்த வடபுலத்தரசர் வடமேற்கிருந்து வந்த வேதநெறியால் கவரப்பட்டு ஏராளம் வேள்விகளை பென்னம்பெரிதாய்ச் செய்யத் தொடங்கினார். பல்வேறு விலங்குகள் குறிப்பாய் ஆடு, மாடு, குதிரைகள் ஆகுதிகளாகின. கொஞ்சம் அசந்தால் இவற்றை அரசச்சேவுகர் பிடித்துப்போகும் நிலை ஏற்பட்டது. கால்நடைகள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் தேவையான குமுகாயத்தில் இந்நடவடிக்கை பெரும் இடரை ஏற்படுத்தியது. மக்கள் கொதித்தெழுந்தார். பார்சுவநாதர் கூற்று பொதுமக்களுக்குப் பெரிதானது. கொல்லாமை பெரும் அறமாய் நாடெங்கும் போதிக்கப்பட்டது. ஓரிடந் தங்காது ஊரூராய் பரிவரைந்து அலைந்த பரிவரையர் (>பரிவ்ராஜக) சொல்வது வட இந்தியாவெங்கணும் எடுபட்டது. வேதநெறி தாக்கிற்கு இலக்கானது. வேத நெறியைக் கேள்விமேல் கேள்விகேட்டு கொக்கிபோட்ட எழுவரும் சம்மணங்கூட்டித் தானத்தில் (த்யானத்தில்0 ஆழ்ந்ததால் சமணர் எனப்பட்டார். இவரைப் பின்பற்றியோரும் சமணரானார். பொ.உ.800 க்கு அருகிற்றான் சமணர்>ஸ்ரமண என்பது செயினரை மட்டும் விதப்பாய்க் குறித்தது. (ஒருகாலத்தில் புத்தரையே சமண என்றார்.)

சமணருக்குச் சாத்தரே பெருமாதரவு. நந்தரை எதிர்த்தெழுந்த மோரியருக்கு வேறுவழியில்லை. அவரும் வேதமறுப்பு நெறிகளைச் சாரவேண்டியிருந்தது. வேதநெறியை முற்றிலும் சாடாது, அதேபோது வேதமறுப்பு நெறிகளைப் புரந்து மோரியர் ஆட்சிநடத்தினார். வேதநெறியினர் மோரியரின் கீழிருந்த படைவல்லுநரின் உதவிநாடிக் காத்திருந்தார். சுங்கரும், கனகரும் மகதத்தில் அரசேறிய காலத்தில் வேதநெறி மீண்டும் தழைக்கத் தொடங்கியது. இவ்விரு குலத்தாரும் மோரியருக்கு அப்படியே தலைகீழாய் மாறினர். வேதமறுப்பு நெறிகளை முற்றிலும் சாடாது, அதேபொழுது வேதநெறி புரந்துவந்தார். நந்தர்/மோரியர் காலத்தில் தம் இயக்கவெளி குறைந்த காலத்தில் தமிழகம் நோக்கியும் வேதநெறியார் நடந்துவந்தார்.

சங்க இலக்கியத்தில், உலகாய்தம், சாங்கியம், ஞாயம், விதப்பியம், அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நெறிகளின் கருத்துகளோடு வேதநெறியும் இழையும். இப்பொதுமையை உணராது சங்ககாலக் குமுகாயம் ஒருநெறி மட்டுஞ் சார்ந்ததென்பது குறை அவதானிப்பு. சங்ககாலத்தில் சிவ, விண்ணவ வழிபாடுகள் உண்டு. ஆனால் சிவ, விண்ணவ நெறிகள் கிடையா. சங்கம் மருவிய காலத்திற்றான் அவையெழுந்தன. ஆழ்ந்து நோக்கின் அவை இளைய நெறிகள்; தனிப்பட்டு எழுந்தவையாகவும் தெரியவில்லை. வேத நெறியின் அடிதொட்டு மேற்கட்டுமானமாய்ச் சிவ, விண்ணவ வழிபாடுகளைக் கொண்டு, பின்னாற்றான் தம் மெய்யியல்களை எழுப்பின. நானறிய மாணிக்கவாசகரும் (அவரைநான் 4/5 ஆம் நூற்றாண்டாய்க் கொள்வேன். நானெழுதிய ’மாணிக்கவாசகர் காலம்’ தொடர்கட்டுரை இன்னும் முடிபடாதிருக்கிறது) திருமூலருமே சிவநெறி மெய்யியலுக்கு வழிவகுத்ததில் முதன்மையானவர். மணிமேகலையே (பொ.உ.450) சிவநெறி இருப்பை முதன்முறையாகத் தமிழிற் சொல்லும்.
இனி வாணிகத்தைப் பார்ப்போம். அற்றைமக்கள் ஊடாட்டத்தில், பொருள்பரிமாறும் வாணிகத்தில் பெரிதாய் இருந்தவை 3 பகுதிகளே. ஒன்று மகத நகரங்கள், இன்னொன்று தக்கசீலம், மூன்றாவது நூற்றுவர்கன்னரின் (சதகர்ணிகளின்) படித்தானம்/Paithaan nearer to Modern Aurangabad (மேலும் அது அழைத்துச் செல்லும் தமிழக நகரங்கள்.) இருவேறு வாணிகப்பாதைகள் அன்று இயல்பாய் எழுந்தன. (”சிலம்பின் காலம்” நூலில் விரிவாய்ப் பேசினேன். ஆர்வலர் அதைப் படியுங்கள்.) உத்தரப்பாதை, மகதத்தைத் தக்கசீலத்தோடு கணுத்தும் (connect). தக்கணப்பாதை மகதத்தைக் கோதாவரிக் கரையிலுள்ள படித்தானத்தோடு இணைக்கும். படித்தானத்திலிருந்து இற்றை கர்நாடக ஐஹோலெ (=ஐம்பொழில்) வழி தகடூருக்கு நீட்சி ஏற்பட்டது. மூவேந்தர் நகர்களிலிருந்து தகடூருக்குத் தனித்தனிச் சாலைகள் இருந்தன. மூவேந்தருக்குச் சமமாய் வடக்கே அதியமான் (சத்யபுத்ரன் என்று) சிறப்புப் பெற்றது பூகோளத்தால் மட்டுமே. தெற்கிருந்து சாத்துக்கள் தகடூர், ஐம்பொழில், படித்தானம் போய் மகதம் போகும். தமிழகத்தில் உருவான ஏதொன்றையும் விற்க வேண்டுமெனில் உள்ளூரை விட்டால் மகதமே போகவேண்டும். இல்லையேல் கலமேறி கடல்கடந்த வெளிநாடுகள் போகவேண்டும்.

{{சிலப்பதிகாரத்தில் கோவலன் தந்தை மாசாத்துவான் உள்நாட்டு வாணிகன். சிலம்பு முழுக்க அவன் இயற்பெயர் தெரியாது. அவன் தொழிற்பெயர் பாண்டிநாட்டிலும் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் பாண்டியனவையில் கண்ணகி தன்னை அறிமுகப்படுத்துகையில் “மாசாத்தன் மருமகள்” என்று சொல்லிக்கொள்கிறாள். கோவலன் அவ்வளவாய் அடையாளந்தெரியாத ஆள். கண்ணகி தந்தை பெருங்கடலோடி. (மாநாய்கன்/மாநாவிகன். பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன்.. நாவுதல்=கொழித்தல், கப்பலோட்டல். பல தமிழாசிரியரும் தவறாக அவனைக் கடல்வாணிகன் என்பார். அவ்வளவு பேரெடுக்காது, தன் வாணிகத்தைச் சரியே கவனிக்காது கோட்டைவிட்ட கோவலனே கடல்வாணிகன்.}}

சங்க இலக்கியத்தில் 50 விழுக்காட்டுப் பாட்டுகள் பாலைப் பாட்டுகளே. அதில்வரும் பாலை இன்றும் பெரிது சொல்லப்படும் இராயல சீமையே. ஐம்பொழில், இற்றை பெல்லாரி மாவட்டத்திற்கு இட்டுச் செல்லும். அதையொட்டிய இற்றை ஆந்திரக் கர்நூல், கடப்பா மாவட்டங்களும் இதிற்சேரும். இவற்றின் விவரிப்பும் சங்க இலக்கியங்களில் உண்டு. சாத்து வேலை என்பது அவ்வளவு எளிதானதல்ல. முதலில் கடினவேலை என்று பொருள்பட்டுப் பின் பல்வேறு சாத்தரும் தக்கணப்பாதையின் நெளிவுசுளிவு தெரிந்து போய்வந்த காரணத்தால் சாத்தார வேலையானது. (சாத்தம்>சாத்தாரம்>சாத்தாரன்> சாதாரண். இதன் இற்றைப்பொருள் சாதாரணம்= எளிமை என்பதே) இதற்கு இன்னொரு பெயருமுண்டு. சமண>சாமாண>சாமண்ய>சாமான்ய வேலை. வேடிக்கை என்னவென்றால், சமணர் என்ற சொல் பொதுமக்களையே குறித்திருக்கிறது என்பது தான். சாதாரணம், சாமான்யம் என்ற இரு சொற்களும் வடமொழி போல் தோற்றம் கொண்டாலும் அடிப்படை தமிழிற்றான்.      
  
இனி சாத்தாரின் கோயில்களுக்கு வருவோம். இன்றைக்கு நாம்பார்க்கும் பல்வேறு ஐயனார் கோயில்களிற் சில பார்சுவருக்கு எழுந்தவை சில மற்கலிக்கு எழுந்தவை, சில பூரணருக்கு எழுந்தவை சில பக்குடுக்கை நன்கணியாருக்கு எழுந்தவை, சில நிக்கந்த நாதருக்கு எழுந்தவை, சில கோதம புத்தருக்கு எழுந்தவை. (தென்பாண்டி நாட்டில் பல்வேறு சாத்தருக்கும் ஐயனார் கோயில்களும் காளி கோயில்களுமே குலதெய்வக் கோயிலாகும்.) சாத்தன் கோயில்களைச் சாஸ்தா கோயில் என்று சங்கதஞ் சொல்லும். பொ.உ.500-900 களில் எழுந்த பக்தியியக்கத்தில் ஐயனார் கோயில்களிற் பல சிவன் கோயிலாகவும், சில விண்ணவன் கோயிலாகவும் மாறின. (அவற்றை நானிங்கு சொன்னால் பலருக்கும் வியப்பாகும்.) சில இரண்டுங்கெட்டான் ஆயின (ஐயனார் கோயிலில் ஐயனாருக்கு முன் யானை வாகனத்திற்குப் பின்னால் இலிங்கம் வைக்கப்பட்டிருக்கும்.) நடைமுறைகள் திரிந்து, ஐயனாருக்கு தீவங் காட்டித் திருநீறு கொடுப்பார்.

ஆனாலும் இன்னொரு பக்கம் இக்கோயில்களுக்கே சிறப்பாய்ப் பெரியகருப்பர், சின்னக்கருப்பர், பதினெட்டாம்படிக் கருப்பர், தொட்டியக்கருப்பர் எனப் பல்வேறு காவல்தெய்வங்கள் இருக்கும். காவல் தெய்வங்களுக்கெனக் களிமண் புரவி, களிறு பொம்மைகள் வைக்கப்படும். புரவியின்முன் அரிவாள் ஏந்திய கத்தியரும், வேலேந்திய சூலத்தாரும் காட்சி தருவர். ஆண்டுக்கொருமுறை ஊரில் யாரேனும் வேண்டிப் புதிய புரவியெடுப்புகள் நடக்கும். ஆண்டுக்கொருமுறை சிவன் இராத்திரி அன்று படையல் கொடுக்கப்படும். கருப்பருக்கு அலங்காரஞ் செய்வர். கோழி, ஆடு படைப்பர், ஆனால் ஐயனார் திருநிலைக்கு முன் திரைபோட்டு மறைத்துவிடுவார். ஐயனார் முற்றிலும் மரக்கறி அல்லவா? அவருக்குக் கறி ஆகாது.

கொஞ்சம் ஆழப்பார்த்தாலே இற்றை வேதநெறி தழுவிய சிவநெறிக்கும், விண்ணவநெறிக்கும் புறம்பான பல செய்முறைகள் ஐயனார் கோயில்களில் நடைபெறுவது தென்பட்டுவிடும். ஆனாலும் எல்லாம் மேலோட்டச் சிவநெறிப் பூச்சுகொள்ளும். ஓவென்று பெரிதாயெழுந்த சிவநெறிக்கு முன் தம் அடையாளத்தை மூடிமறைத்து வெளித்தோற்றங்காட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளோ என எண்ணவைக்கும். எத்தனை ஊர்களில் மகாவீரருக்கும், பார்சுவருக்கும், நேமிநாதருக்கும், ஆதிநாதருக்கும். புத்தருக்கும் மற்கலிக்கும், பூரணருக்கும், நன்கணியாருக்கும் நெற்றியில் திருநீறு பூசி துணிசுற்றி இன்னும் இரு கைகளை வலிந்து பூச்சில் ஏற்படுத்திக் கலிகாலத்தில் காப்பாற்றினாரோ? தெரியாது. சில வேதமறுப்பு நூல்கள்கூட அங்குமிங்கும் வேதம் போற்றும் சில சொலவங்களை, பாட்டுக்களைத் தூவிக்கொண்டு, தம்மைக் காப்பாற்றிக் கொண்டன. 2600 ஆண்டுகளிற் சிலபோதுகளில் சாத்தார மதங்களால் (வேதமறுப்பு நெறிகளால்) தம்வளர்ச்சி தடைப்பட்டதால், வேதநெறிக்கு இந்நெறிகளின் மீது பெரும் முரண் உண்டு. ”இச்சாத்தான்கள் நம்மைச் சாடுகிறாரே?” என்ற கோவமுமுண்டு. வேதநெறிப்பட்ட சிவநெறியும், விண்ணவநெறியுங்கூட வேதமறுப்பு நெறிகளை எதிரிகளாகவே பார்த்தன. பொ.உ.500-இலிருந்து பொ.உ.1000 வரை தெற்கே நம்மிடை நடந்த பக்தி இயக்கம் சாத்தாரமானதில்லை. இது பற்றிய ஆய்வுங் கூடக் குறைவு. ”இந்துத்துவம்” கூடியுள்ள இந்நாளில் இதைச் செய்யப் பலரும் தயங்குகிறார்.

அடுத்தது சாட்டுதல். சால்>சாள் என்பது இன்னொருவகையில் சார்தலை/சார்த்த்தலைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்டு அடையாளங் காட்டுவது சாட்டுதலாகும். சாட்டுதல் = பிறனிடம் சார்த்துதல், குற்றஞ் சுமத்தல், அடித்தல். ஏதோவொன்று விரும்பியவகையில் நடக்காமற் போவதற்கு ஒருவன் காரணனென்று பேசுவது சாடுதலாகும். to accuse என்று ஆங்கிலத்தில் பொருள்கொள்ளும். சாடுதல் = அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக்கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், ஆசைதல், ஒருகட்சிக்குச் சார்பாய் இருத்தல். சாட்டியம் = வஞ்சகம், பொய். சாத்தான் என்ற சொல்லிற்கு மேலை நாகரிகங்களில் தொடக்கமில்லை. அது யூத வழக்கத்திலிருந்து மேலை நாகரிகத்திற்கு வந்தது. தேவனை ஏற்காதவர் சாத்தர் எனப்பட்டார். சாத்தரின் தலைவன் சாத்தான் எனப்பட்டான். சாத்தான் தேவனைச் சாடுகிறானாம் என்றே மேலையரின் கிறித்தவ, யூதச் சிந்தனை இருந்தது. நம்மூர்ச் சாடலும், மேலையர் சாடலும் ஒன்று போலவே தெரிகிறது. இரு நிலங்களிலும் இருந்த சாத்தான் -சாடல் தொடர்பு காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா? அல்லது இரண்டிற்கும் ஏதோவொரு காலத்தில் தொடர்புண்டா? தெரியாது. வரலாற்றின் எத்தனையோ கதவுகள் திறக்காமலேயே போயுள்ளன. அவற்றில் இதுவொன்றோ?________________________________________________________________________
தொடர்பு: இராம.கி. <poo@giasmd01.vsnl.net.in>
http://valavu.blogspot.com
No comments:

Post a Comment