Monday, July 9, 2018

பெரியபுராணம் காட்டும் பாலி ஆறு

——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்பெரியபுராணம் காட்டும் பாலி ஆறு


இலக்கியங்களில் கூறப்படும் பாலி ஆறும், இன்றைய பாலாறும் ஒன்றா எனும் கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும். காரணம் தேவாரத்திலும் பெரிய புராணத்திலும் காட்டப்படும் பாலி ஆறு, இன்றைக்குக் காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் தெற்கேயுள்ள பாலாற்றிலிருந்து முற்றிலும் வேறு பட்டது. 

பண்டைத் தமிழ் இலக்கியங்களில், பாலி  ஆற்றைப்பற்றிய முதற் குறிப்பு தேவாரத்தில் காணக்கிடைக்கிறது. தொண்டை மண்டலத்தில் காஞ்சிக்கு வடக்கேயுள்ள திருமாற்பேறு எனும் திருத்தலத்தைப் பாடும் திருஞானசம்பந்தர்,
“உரையாதாரில்லை யொன்றும் நின் தன்மையை
பரவாதாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்று
அரையானே அருள் நல்கிடே . “  
(திருமாற்பேறு-சம்பந்தர் தேவாரம் (1.55.6-7))
என்று அத்தலத்து ஈசனைப் பாடிப் பரவுகிறார்.
(அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும், திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் யாருமில்லை. நாள்தோறும் உன் பெருமையை பரவாதார் யாருமில்லை. அருள் நல்கிடுக.)

இப்பாடலில் திருமாற்பேறு எனும் திருத்தலத்திற்கு வடக்கே பாலியாறு ஓடியது எனும் செய்தி நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பன்னிரண்டாம்  நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் தான் பாடிய பெரியபுராணத்தில், 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்' என்ற பகுதியில் திருமாற்பேறு திருத்தலம்  பற்றிக் கூறும் போது பாலியாற்றின்  வளத்தையும்  அது பாய்ந்தோடிய தொண்டைமண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.
'துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி' – 1098
(விளக்கம்: உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனு சொரிந்த பாலானது, பெருகும் தீர்த்தமாக உருபட்டு நந்தி மலையினின்றும் இறங்கி, அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது பாலாறு).

கர்நாடக மாநிலம் நந்தி மலையினின்றும் இறங்கி வரும் ஆறு என்பதால் இங்கே பாலி ஆறு என்பது பழைய பாலாற்றையே குறிக்கிறது எனலாம்.
அடுத்து,
“பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி”
எனும் பாடலில் வெள்ள நீர் இரு கரைகளிலும் சென்று வயல்வெளிகளில் உள்ள மடைகளை உடைத்தது என்ற கூறுவதன் மூலம் இது ஒரு பெரிய ஆறாக இருந்திருக்கும் எனக் கணிக்க முடிகிறது.

மேலும்,
“பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையில்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறாம்
பொருவில் கோவிலும் சூழ்ந்த பூம்பனை  மருதம்
விருப்பு மேன்மைஎன் பகர்வது விரிதிரை நதிகள்”
(திருக்குறிப்பு தொண்டர் புராணம் – 1113)
எனும் பாடலில் பல ஓடைகள் நிறைந்து இறங்கி உருவான பாலி  ஆறு என்கிறார் சேக்கிழார், ஆதலின் அவர்காலத்தில் பாலி ஆறு ஒரு பெரிய ஆறாகவே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது. இன்றைக்கு திருமால்பூர் என்றழைக்கப்படும் திருமாற்பேறு காஞ்சிபுரத்திற்கு 22 கி.மீ. வடக்கே, பழைய பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஆதலின், இன்றைக்குப் பழைய பாலாறு என்று வழங்கப்படும் ஆறு, கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலி என அழைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

இனி, சம்பந்தரை விட்டு விட்டு சுந்தரமூர்த்தி நாயனாரிடம் வருவோம். சென்னைக்கு அருகேயுள்ள திருமுல்லைவாயில் பற்றிப் பாடவரும் சுந்தரர்,
“சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்  கொடிகளும் சுமந்துகொண்டுந்தி
வந்திழிபாலி  வடகரை முல்லை வாயிலாய் மாசிலாமணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே”
(திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம் 7.69.5)

எவ்வளவு அழகான பாடல். பாலி ஆற்றின் வடகரையில் திருமுல்லைவாயில் அமைந்திருந்ததாகப் பாடல் கூறுகிறது. ஆனால் இன்று இதே திருத்தலம் கூவம் ஆற்றின்  வடகரையில் அமைந்துள்ளது. எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இன்றைய கூவம் ஆறு, பாலியாறு என்று வழங்கப்பட்டதை அறிந்து கொள்ளலாம்.


 திருமுல்லைவாயில் விடுத்து அருகேயுள்ள திருவேற்காடு செல்வோம். திருத்தொண்டர் புராணத்தில் வரும் மூர்க்க நாயனார் புராணத்தின் முதல் பாடலில்,
“மன்னிப் பெருகும் பெரும் தொண்டைவளநாடு அதனில் வயல் பரப்பும்
நல்  நித்திலம் வெண் திரைப் பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி
அன்னப்பெடைகள்  குடைவாவி அலற புக்காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துளிர்கொடிகள் விழவிற்காடு வேற்காடு
செம்பொற்புரிசை திருவேற்காடு.......”
என்கிறார் சேக்கிழார்.

 பாலி ஆற்றிற்கு வடக்கே திருவேற்காடு இருந்திருக்கிறது. இன்றைக்கு திருவேற்காட்டிற்குத் தெற்கே கூவம் ஆறு செல்கிறது என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் இன்றைய கூவம் ஆறு எட்டாம்  நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலி ஆறு என்றே அழைக்கப்பட்டிருக்கிறது எனத்  தெளியலாம்.

இதுவரை நாம் பார்த்த தேவாரப்பாடல்களிலும், பெரியபுராணப் பாடல்களிலும் பாலி எனும் சொல்லே ஆளப்பட்டிருக்கிறது. பாலாறு என்ற சொல் இல்லை .தமிழ் இலக்கியங்களில், கலிங்கத்துப்பரணியில்தான் முதன் முதலில்  ‘பாலாறு’ காணப்படுகிறது. காஞ்சியிலிருந்து கலிங்கம் நோக்கிப் படையெடுத்து செல்லும் கருணாகரத் தொண்டைமான், வடபெண்ணையாற்றை அடையும் முன் வழியில் எந்தெந்த ஆறுகளைத் தாண்டினான் எனும் குறிப்பு, பரணியில் 376 ஆவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பாலாறு  குசைத்தலை பொன் முகரிப் பழவாறு
படர்ந்தெழு கொல்லிஎனும்
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும்
நதியாறு கடந்து நடந்துடனே .....”..                                                        
                                           (கலிங்கத்துப்பரணி 367).

கலிங்கத்துப் பரணியின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி. இன்றைக்குப் பாலாறு காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாய்ந்து கொண்டிருப்பதால் பரணியில் பாடப்படுவது இந்தப் பாலாறு அல்ல எனக் கூறலாம். மாறாக, காஞ்சிபுரத்திற்கும் குசைத்தலை ஆற்றிற்கும் இடையே பாலாறு காட்டப்படுவதால், இது பாலி ஆற்றையே (பழைய பாலாற்றை) குறிக்கிறது என்பது தெளிவு.

இதுகாறும் பேசப்பட்ட இலக்கியக்  குறிப்புகளால், பாலி ஆறு என்பது பழைய பாலாற்றினையே குறிக்கிறது என்றும், தக்கோலத்திற்குக்  கிழக்கேயுள்ள பழைய பாலாற்றின்  பகுதி இன்று  கூவம் ஆறு என்று வழங்கப்படுகிறது என்றும் அறியலாம்.

தேவாரம் – பெரியபுராணம் காட்டும் பாலி ஆறு, பழைய பாலாறு, கூவம்.

(மயிலை திரு நூ.த. லோகசுந்தரம் அவர்கள் அளித்த குறிப்புகளின் அடிப்படையில் எழுதியது )

________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)

1 comment: