Saturday, July 28, 2018

கவிதையில் பயின்றுவரும் பாவகை

——    வலங்கைமான் இராம.வேல்முருகன்


முன்னுரை:
கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த மொழியான நமதன்னைத் தமிழ்மொழியில் ஆதிகாலந்தொட்டே கவிதைகளில் பாவகைகள் எவ்வாறு அமைந்துவந்தன என்பதையும் தற்போது அவற்றின் நிலை என்ன என்பது பற்றியும் சற்றே ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகக் கொண்டு சங்க காலம் முதல் தற்போதைய காலம் வரை ஒருசில கவிதை நூல்களில் இலக்கியங்களில் கையாளப்பட்டு வந்த பாவகைகளை மட்டும் சற்றே விளக்கமாகக் காண்போம்.

சங்ககாலப் பாடல்களில் பாவகைகள்: 
பெரும்பாலான சங்ககால பாடல்களில் ஆசிரியப்பா வகைகளே பயன்படுத்துப்பட்டுள்ளன.  ஆசிரியப்பா அந்தக் காலகட்டத்திலும் தற்பொழுதும் கூட மிக எளிமையாக எழுதக் கைவரும் என்பதாலும் சந்தம் இசை போன்றவை இதற்குத் தேவையில்லை என்பதாலும் இப்பாவகைப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம் என்றே கருதப்பட்டு வருகிறது. அகநானூறு புறநானூறு பாடல்களில் காதலானாலும் வீரமானாலும் இப்பா வகைதான் துணைசெய்துள்ளது.  ஆசிரியப்பாவின் அனைத்து வகைகளும், நிலைமண்டில, அறிமண்டில, நேரிசை ஆசிரியப்பா வகைகளே பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன.  ஈரசைச் சீர்களை வைத்து எழுதுவது எளிதாக கைவரப் பெற்றதால் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம்.

எட்டுத் தொகை நூல்களில் அகப்பொருள் பாடிய ஐந்து நூல்களில் 13 அடி முதல் 31 அடி வரை உள்ள நானூறு பாடல்களின் தொகுப்பு அகநானூறு எனவும் 9 அடி முதல் 12 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் நற்றிணை எனவும் 4 முதல் 8 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் குறுந்தொகை எனவும் 3 முதல் 5 அடி வரை உள்ள நானூறு பாடல்கள் ஐங்குறுநூறு எனவும் தொகுக்கப்பட்டன.  சேரநாட்டரசர் பதின்மரைப் பற்றி பதிற்றுப்பத்தும் சங்க கால மன்னர்கள் சிற்றரசர்களைப் பற்றியும் அவர்களது வீரம் பற்றியும் பாடப்பட்ட நானூறு பாடல்கள் புறநானூறு எனவும் தொகுக்கப்பட்டன.  இவையாவும் ஆசிரியப்பா வகையானாலும் பரிபாடல் கலித்தொகை இரண்டும் இனிய ஓசை நயம் மிகுந்த செய்யுட்களால் ஆக்கப்பட்டவையாகும்.

திருக்குறள்- நாலடியார்:
திருக்குறளில் குறள்வெண்பா பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது உலகறிந்த உண்மை. இரண்டு அடிகளில் உலகை அளந்த ஒப்பற்ற நூலாகத் திருக்குறள் சிறப்பதற்கும் வியப்பதற்கும் குறள் வெண்பாவில் அந்நூல் அமைந்ததும் ஒரு காரணமாகும்.  குறள்வெண்பாவில் சிறந்த ஒரு நூலாகவும் ஈடு இணையற்ற நூலாகவும் திகழும் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் யாதொரு குறள்வெண்பாவில் எழுதப்பட்ட நூலும் இல்லை என்றே சொல்லலாம். வெண்பாவில் எழுதப்பட்ட நாலடியார் போன்ற நூல்களும் சிறப்புற்ற நூல்களே.

சிலப்பதிகாரம்:
இளங்கோவடிகளே செய்யுள் வகைகளில் புதுமை செய்தவர் எனச் சொல்லலாம். அவருக்கு முற்பட்ட புலவர்கள் அகவலையும் வெண்பாவையுமே பெரும்பாலும் கையாண்டு வந்தனர்.அதன்பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் என்ற நிலையில் பெரும்பாலான பாடல்கள் அமைந்திருந்தாலும் அவை ஆவணப்படுத்தப்படவில்லை.  ஆனால் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் புதிய பலவகைச் செய்யுள் வடிவங்களைக் கையாண்டுள்ளார்.  கடற்கரையில் பாடும் இசைப்பாடல்களைக் கொண்ட கானல்வரியிலும் ஆய்ச்சியர் குரவை முதலியவற்றிலும் அந்தந்தப் பகுதியில் வழங்கிய நாட்டுப் பாடலிலிருந்தே புதிய செய்யுள் வடிவங்களைத் தந்தார். ஆனால் இதனுடன் இரட்டைக் காப்பியமாகச் சிறப்பிக்கப்படும் மணிமேகலையில் அகவல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பக்திஇலக்கியங்களில் பாவகை:
பிற்காலத்தில் வந்த பக்தி இலக்கியங்களில் இசைப்பாடல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.  திருக்கோயில்களில் இறைவனைப் பாடுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.  ஒரே மாதிரியான நடையில் அமைந்த மூவாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரம் அதற்குப் பின்வந்த பக்தி இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது என்றால் மிகையாகாது.  ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைப் பாடல்களாகவே அனைவரும் பாடும் வகையில் பாடல்களைப் பதிகங்களாகவும் பாசுரங்களாகவும் எழுதிவந்தனர்.  புதிய இலக்கிய வகைகள் இடைக்காலத்தில் தோன்றின.அவற்றில் பலவகையான செய்யுள்களும் பயன்படுத்தப்பட்டன.  கலம்பகங்களில் வெவ்வேறு வகையான செய்யுள்வகைகள் நிறைந்த நூறு பாடல்கள் இடம்பெற்றன.  அந்தாதி வகையிலும் செய்யுள்கள் யாக்கப்பட்டன.  யமகம் எனும் சொல்லணிகளை அமைத்தும் புலவர்கள் பாடியுள்ளனர்.  பின்னர் பரணி எனப்படும் நூல்வகையில் இரண்டிரண்டு அடிகளாலான தாழிசை எனும் செய்யுள்வகைப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

விருத்தம்:
சீவக சிந்தாமணியில் விருத்தம் என்ற பாவகை பயன்படுத்தப்பட்டது என்றாலும் கம்பராமாயணத்தில் தான் விருத்தம் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.  சூளாமணியும் வளையாபதியும் விருத்தப்பாவால் அமையப்பெற்றவையே;  பின்னர் நாயன்மார்களின் வரலாற்றைப் பாடிப்புகழ் பெற்ற சேக்கிழாரும் விருத்தப் பாவகையைத்தான் பின்பற்றியுள்ளார்.  வில்லிப்புத்தூரார் எழுதிய பாரதமும் விருத்தப்பாக்களினால் ஆனதேயாம்.  பின்னர் சந்தப்பாடல்கள் எழுதப்பட்டன.  அருணகிரிநாதர் சந்தப்பாடல்கள் எழுதுவதில் சிறந்து விளங்கினார்.  16 ஆம் நூற்றாண்டில் புகழேந்தி என்பவர் வெண்பாவைப் பயன்படுத்தி நளவெண்பாவைப் படைத்துள்ளார்.  காளமேகப்புலவர் பழைய இலக்கிய மரபை ஒட்டி நூல்கள் எழுதியுள்ளார்.  சிலேடையிற் சிறந்த காளமேகம் வெண்பாவையே பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளார்.  பிற்காலத்தில் வந்த தாயுமானவர் இரண்டு அடிப்பாடல்களான கண்ணிப்பாடல்களைப் பாடியுள்ளார்  389 கண்ணிகள் கொண்ட பராபரக்கண்ணி இவர் பாடியதே.

இராமலிங்க அடிகளார்:
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அனைத்துவகைச் செய்யுள்களுமே கையாளப்பட்டுள்ளன.  இராமலிங்க அடிகளார் எழுதிய பாடல்களில் அகவற்பாக்கள் விருத்தங்களோடில்லாமல் இசைப்பாடல்களின் வடிவங்களான கும்மி, சிந்து, கண்ணி மற்றும் கீர்த்தனைகளும் காணப்படுகின்றன.  பின்பு  வந்த பெரும்பாலான கவிஞர்கள் இசைப்பாடல்கள் கீர்த்தனைகளையே பாடியுள்ளனர்.

பாரதியார்:
பாரதியார் வந்தபிறகுதான் பாடல்களில் புரட்சியும் வந்தது.  சந்தப்பாடல்களுக்கு முன்னோடி என்றே பாரதியைச் சொல்லலாம்  அருணகிரிநாதர் சந்தப்பாடல்களைப் பாடினாலும் சாதாரணப் பாமரமக்களைச் சென்றடைந்தவை பாரதியின் பாடல்களே.  விருத்தப்பாடல்கள் சந்தப்பாடல்கள் இசைப்பாடல்கள் நொண்டிச்சிந்து என எல்லா வகைப் பாடல்களையும் எழுதிச் சிறந்தவர் பாரதியாரே.  இவருக்குப் பின் வந்தவர்களும் பெரும்பாலும் இவரைப் பின்பற்றியே எழுதிவந்துள்ளனர்.  அறுசீர் எழுசீர் மற்றும் எண்சீர் விருத்தப்பாடல்களையே பெரும்பாலானோர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முடிவுரை:
எந்தவகைப் பாவகையாக இருப்பினும் சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதுவதே சிறந்தது. எனினும் ஒரு கவிஞன் என்பவன் அனைத்து வகைப் பாவகைகளையும் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். இதுவே தமிழ் மரபை என்றும் காக்கும் வழிகளில் ஒன்றாகும்.




வலங்கைமான் இராம. வேல்முருகன்

No comments:

Post a Comment