Saturday, March 21, 2020

திருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும் ——    துரை.சுந்தரம்   


அவிநாசி:
            ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் அமைந்திருந்த ஊர் அவிநாசி. இது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் ஒரு புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.  விநாசம் என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு அழிவு என்பது பொருள்.  வினைக்கோட்பாடு என்னும் ஒரு மெய்யியல் கோட்பாடு உண்டு. நாம் ஆற்றும் வினைகளுக்கேற்ப நம் வாழ்க்கை அமையும் என்பது அதனுடைய எளிய விளக்கம். நல்வினை நன்மையையும், தீவினை தீமையையும் பயக்கும். விநாசம் என்னும் அழிவுக்கு எதிர்ச்சொல் அவிநாசம். நாம் ஆற்றிய தீவினைகளை அழித்து என்றும் அழியா நன்மையை (புண்ணியம்) நமக்கு அளிக்கும் அழிவிலாப் பூமியாக அவிநாசி ஊர் விளங்குவதால் அப்பெயர் பெற்றது எனலாம். அத்தகு ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஈசன் அவிநாசியப்பன். அவிநாசி என்னும் நிலையான பெயர் கொண்ட இவ்வூருக்கு ஒரு இயற்பெயர் இருந்தது. இப்பெயர் பலரும் அறியாப் பெயராகும். திருப்புக்கொளியூர் என்பதே அவ்வியற்பெயர். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் இவ்வூர்க் கோயிலுக்கு வந்து வழிபட்டுப் பாடிய தேவாரப் பதிகத்தில் ”திருப்புக்கொளியூர் அவிநாசி”  என்றே குறிப்பிடுகிறார். கி.பி. 1350-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இவ்வூரை  “வடபரிசார நாட்டுப் புக்கொளியூர்”  என்றே குறிப்பிடுகிறது.

அவிநாசிக் கோயிலின் பழமை:
            வரலாற்று ஆய்வாளர் குடந்தை சேதுராமன், சுந்தரரின் காலத்தை கி.பி. 700-728 எனக் கணித்துள்ளார். எனவே, அவிநாசிக்கோயில் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கொள்ளலாம். ஆனாலும், கோயில், கற்கட்டுமான அமைப்பைப்பெற்றுக் கல்வெட்டுகள் பொறிக்கப்படும் காலகட்டத்தைக் கொங்குச் சோழர்  ஆட்சியின்போதே அடைந்தது. காலத்தால் பழமையான கல்வெட்டு கொங்குச் சோழ அரசன் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்தது. (கி.பி. 1152).

கல்வெட்டுச் செய்திகள்:
            சிறப்பான செய்திகளைத் தாங்கிய பல கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. அவிநாசி, கொங்குநாட்டில் இருந்த நிருவாகப் பிரிவுகளான இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்றான வடபரிசார நாட்டில் அமைந்திருந்தது. இந்த நாடுகளுக்கு நாட்டுச் சபைகள் என்னும் நிருவாகச் சபைகள் இருந்தன.  இருப்பினும், வெள்ளானூர், பூலுவனூர் ஆகிய இரு ஊர்களுக்குத் தனித்து ஊரளவில் சபைகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.  இச்சபையினர் வரியாகக் கிடைத்த கம்பினை (கண்பு என்று கல்வெட்டு குறிக்கிறது) அவிநாசிக் கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர்.  கோயிலுக்கு அரசன் பசுக்களைக் கொடையாக அளித்த செய்தி, கொங்கு நாட்டில் இக்கோயில் கல்வெட்டில் மட்டுமே காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு, பாண்டிமண்டலத்தைச் சேர்ந்த காளையார்கோயில் அதளையூர் நாடாள்வான் என்னும் தலைவன் கோயிலுக்கு விளக்கெரிக்க காசுக்கொடை அளித்ததைக் கூறுகிறது. காளையார்கோயிலின் பழம்பெயர் திருக்கானப்பேறு என்பதாக இக்கல்வெட்டால் அறிகிறோம். இன்னொரு கல்வெட்டு, கோயிலில் பணி செய்து வருமானம் பெறுவதற்கான உரிமையான “காணி” யுடைய தச்சர், கொல்லர், தட்டாருக்கு அரசன் நேரடி ஓலை ஆணை பிறப்பித்துச் சில உரிமைகளை அளிக்கிறான் என்பதைக்கூறுகிறது. இவர்கள், தங்கள் வீடுகளில் நன்மை தீமை நிகழ்வுகளின் போது பேரிகை என்னும் இசைக்கருவியைக் கொட்டிக்கொள்ளலாம் என்பதும், சங்கு ஊதிக்கொள்ளலாம் என்பதும் அந்த உரிமைகளாகும். 16-ஆம் நூற்றாண்டு விஜய நகரர் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டு ஒன்று, குளம் வெட்டி, அதன்மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் வருவாயில் அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியில் பாதியை அவிநாசிக் கோயிலுக்கு அளித்ததைக் கூறுகிறது.  சுந்தரர் முதலை வாய்ப்பிள்ளையை மீட்ட நிகழ்வைக் குறித்து ஒரு கல்வெட்டு, “முதலைக் குளத்திலே முதலைவாய்ப் பிள்ளைக்கு”   என்று கூறுகிறது.

சீனக்குடை பற்றிய கல்வெட்டு:
            மிகச் சிறப்பான கல்வெட்டுச் செய்தி ஒன்றை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.  கொங்குச்சோழ அரசரில் வீரராசேந்திரன் காலத்துக் கல்வெட்டு ஒன்று.  கி.பி. 1222-ஆண்டில் பொறிக்கப்பட்டது. வடபரிசார நாட்டிலிருந்த பார்ப்பார் சான்றார்க்குச் சில உரிமைகளை வழங்கி அரசன் ஓலை வழி ஆணை பிறப்பிக்கிறான்.  அரசன் யானை மீது அமர்ந்து உலா வருகையில் அவனுக்கு முன்னும் பின்னும் சாமந்தர், படை வீரர், பிரதானிகள் புடை சூழ உலா வருதல் நடைமுறையாய் இருந்துள்ளது.  பொது மக்களின் காட்சிக்காக எனலாம்.  இதைக் கல்வெட்டு ”உலாகம்”  என்று குறிப்பிடுகிறது. அது சமயம், மேற்சுட்டிய பார்ப்பார் சான்றார் அரசனின் ஊர்வலத்தில் குதிரை மீதமர்ந்து செல்லும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறான். மேலும் அவர்கள் சீனக்குடை பிடித்துக்கொண்டு வரும் உரிமையையும் அளிக்கிறான். அந்நாள்களில், அணி மணிகளால் அழகுபடுத்தப்பட்ட குடைகள் பிடித்து அணிவகுப்பில் கலந்துகொள்ளல் மிகப்பெரிய சிறப்பாகவும், பெருமையாகவும் கருதப்பட்டது. அதிலும், சீனக்குடையான பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை மேன்மைக்குரியது. இவ்வுரிமையைப் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள்.  பல்வேறு வரிசைகள் (உரிமைகள்) மற்ற சாதியார்க்கு அளிக்கப்பட்டிருந்த போதிலும் சீனப்பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது. வேறு பல உரிமைகளும் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள். தழைக்குடை (பனையோலைக் குடை) பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் சுவர்களுக்குச் சாந்து (காரை அல்லது சுதை) பூசிக்கொள்ளலாம். வீட்டின் இரு வாசல்களிலும் கொடி கட்டிக்கொள்ளலாம். படை அணிவகுப்பின்போது ஆரம் பூணலாம். நன்மை தீமை நிகழ்வுகளில் சேகண்டி ஒலிக்கும் உரிமை உண்டு. பச்சைப்பட்டு மேலாடையாக அணிந்துகொள்ளலாம். அவர்களின் குழந்தைகளுக்குப் பொன்னாலான காறை என்னும் அணிகலன் அணிவிக்கலாம். திருமணத்தின்போது கட்டணம் கட்டி ஊர் சூழ வலம் வரலாம்.

 
            இந்த உரிமைகளை எல்லாம் பார்ப்பார் சான்றார்கள் இலவசமாகப் பெறவில்லை.  அரசனுடைய கருவூலத்தில் பொருள்(பொன்) வைத்த பின்பே இத்தகைய வரிசைகள் அளிக்கப்பட்டன. தற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்காகப் பல கோடிப் பணம் முதலீடு போலச் செலுத்தி இருக்கை அமைக்கும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். அண்மையில், இவ்வாறு அமெரிக்க ஹார்வர்டு பல்கலையில்  இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது போலத்தான், சில குடிகள் தங்கள் உரிமைக்காக அரசனின் கருவூலத்தில் பொருள் செலுத்தியுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம். அரசனுடைய கருவூலம் கல்வெட்டில் “சரக்கு”  என்னும்  பெயரில் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு, அரசன் நேரடியாகக் கூறுகின்ற பாணியில் அமைந்திருப்பதால், கல்வெட்டில் “நம் ஓலை குடுத்தபடியாவது” என்றும், “நம் சரக்குக்குப் பொருள் வைத்தமையால்”  என்றும், “நாம் குடுத்த வரிசையாவது”  என்றும்  எழுதப்பட்டுள்ளது.  

கல்வெட்டறிஞர் மா.கணேசனார்:
            அவிநாசிக் கோயிலின் கல்வெட்டுகளை ஆய்வு செய்த பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள், 1980களில் இக்கல்வெட்டினை ஆய்வு செய்து சீனக்குடை பற்றிய செய்தியை நாளிதழில் வெளியிட்டுக் கோயிலின் பெருமையை எடுத்துரைத்தார். அச் செய்திக் குறிப்பில், சீனாவுடன் இக் கொங்குப்பகுதிக்கு வணிகத்தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்னும் ஆய்வுக்கருத்தை முன்வைத்தார். சீனாவுடனான வணிகத்தொடர்பால் சீனப்பட்டு இங்கு வந்திருக்கவேண்டும் என்பது அவருடைய ஆய்வுக்கணிப்பு.  இதற்கு மாற்றுக்கருத்தாக,   சீனம் என்னும் சொல் “ஜைனம்”  என்னும் சொல்லின் மாற்று வடிவம் என்றும், சீனக்குடை என்பது “ஜைனக்குடை”  என்பதைக் குறிக்கும் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  இரண்டுமே ஆய்வுக்குரியன.  ஜைனம் -  அதாவது சமண சமயம் -   கொங்குப்பகுதியில் செல்வாக்குடன் இருந்துள்ளது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. அதற்கான சான்றாதாரங்கள் கொங்குப்பகுதியில் மிகுதியும் கிடைத்துள்ளன.   விஜயமங்கலம் என்னும் ஊரருகில் சீனாபுரம் என்னும் ஓர் ஊர் உள்ளது.  அவ்வூருக்கும் சீனத்துக்கும் தொடர்பேதுமில்லை என்றும், அவ்வூர் “ஜைனபுரம்”  என்று வழங்கிப் பின்னர், “ஜீனபுரம்”  என்று மருவி இறுதியில் “சீனாபுரம்”  என்று திரிந்துள்ளது எனக் கூறப்படுகிறது.  சீனாபுரத்தில் ஜைன சமயத்து எச்சங்கள் உள்ளன.  இருப்பினும், “ஜைனக்குடை”  என்பது யாது என விரிவாக ஆராயப்படல் வேண்டும். ஜைனத் தீர்த்தங்கரர் சிற்பங்களில் அவ்வுருவங்களுக்கு மேற்புறம் தலைக்கு மேல் மூன்று குடைகள் ஒன்றை அடுத்து ஒன்றாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  ஜைன மதத்துத் துறவிகளுக்கும் பெரியார்களுக்கும் இவ்வகையான முக்குடைச் சிறப்பு வழங்கப்படுவதில்லை.  தீர்த்தங்கரர் நிலைக்கு உயர்ந்த இருபத்து நான்கு பேர்க்கு மட்டுமே இச் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.  முக்குடை அமைப்பு சிற்பங்களில் மட்டுமே காணப்படுவதொன்று.  ஜைனக்குடை என்று ஒரு குடை இருந்துள்ளது என்பதற்கும், அது எவ்வகையில் சமுதாயத்தில் பயன்பாட்டிலிருந்தது என்பதற்கும் சான்றாதாரங்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. இந்நிலையில், கல்வெட்டில் வரும் குடை சீனப்பட்டுக்குடை அல்ல என்று அறுதியாக மறுக்க இயலாது.  ஜைனக்குடை பயன்பாட்டில் இருந்திருந்தாலும், அக்குடையை ஜைனரல்லாத பார்ப்பார் சான்றார்க்கு அரசன் ஏன் உரிமையாக வழங்க வேண்டும் என்னும் கேள்விக்குத் தகுந்த விடை தேடப்படல் வேண்டும். சீனப்பட்டு ஒரு வணிகப்பொருளாக இங்குப் புழக்கத்தில் இருந்துள்ளது என்பதைப் புறம் தள்ள இயலாது. சோழர் காலத்தில் கடல் கடந்து வணிகம் நடைபெற்றது. வணிகம் 13-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்திருக்கலாம். வணிகப் பொருளாகச் சீனப்பட்டு இங்கு வந்திருக்கலாம். 

முடிவுரை:
            கட்டுரையின் முடிப்பாக, ஜைனக்குடை பற்றிச் சமண அறிஞர் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்த செய்திகளை இங்குக் குறிப்பிடுதல் நலம். சமணத்தில் போற்றப்படும் முக்குடை என்பது தீர்த்தங்கரர்களுக்கு மட்டுமே உரித்தானது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களில் முக்குடை அமைப்பைக் காணலாம். சமணப்பெரியார்களைக் கற்சிலையாக வடிக்கும்போது, ஒற்றைக் குடை காட்டப்படுவதுண்டு. சமணத்தில் விழாக்களின்போதோ, சடங்குகளின்போதோ சமணப்பெரியோருக்குக் குடை நிழல் காட்டும்  நிகழ்வுகள் வழக்கத்தில்  இல்லை. இச்செய்திகள், கல்வெட்டறிஞர் கணேசனார் அவர்களின் ஆய்வுக்கணிப்புக்கு வலு சேர்க்கின்றன. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சீனத்தில் தமிழ் வணிகர்களின் செயல்பாடுகள் இருந்துள்ளமைக்குச் சான்றாக, அண்மையில் சீனாவின் ஃபியூஜி (FUJIYAN) மண்டலத்தில் குவான் ஜௌ (QUANZHOU) நகரத்தில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வெளியானதைக் குறிப்பிடலாம். இவ்வாறாக, அவிநாசிக் கோயிலின் சீனக்குடை பற்றிய கல்வெட்டு ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியை முன்வைத்து ஆய்வுக் களத்துக்கு வழியமைக்கிறது  எனலாம்.


நன்றிக்குரியவர்கள் :  
1.  மறைந்த கல்வெட்டு அறிஞர்  முனைவர் மா. கணேசனார்.
2. திரு பானுகுமார் அவர்கள்,  சமண அறிஞர், சென்னை.தொடர்பு: 
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.


No comments:

Post a Comment