Thursday, June 21, 2018

மேகம் கருக்குது

——    பழமைபேசி

கோயமுத்தூரில் கனமழை
பள்ளிகளுக்கு விடுமுறை
என அறிய நேர்ந்ததும்
வாய்விட்டுச் சிரித்தேன்!
மூங்கில்தொழுவு 
சிக்கல்நூத்து துவக்கம்
எட்டு கிலோ மீட்டர்
தொலைவில் இருந்து
இட்டேரி வழியே
கெளதாரிகள் துணையோடு
ஓணான்களின் நட்போடு
பாம்புகள் தேள்களின்
அணுக்கத்தோடு
தாவரவேலிகளின் கதகதப்பில்
வாகைத்தொழுவு வேலூர்
பள்ளிக்கு காலார நடை 
போட்டு போனதென்ன?!

கோடை விடுமுறைக்கு
முந்தைய நாள்
நோட்டுகளுக்கும்
புத்தகங்களுக்கும்
பழுப்புவண்ணப் புத்தாடை 
பூட்டினோமோ
இல்லையோ
பாக்டம்பாசு சாக்குப்பை
நெகிழிச்சீவல் சாக்குப்பை
நெடுவாக்கில் இரண்டாக மடித்து
குறுக்காக மடிப்பு மேல் மடிப்பிட்டு
மனங்கொண்ட பைக்கட்டுக்குள் 
சொருகிவிட்டுக் கொண்டதென்ன?!

எட்டாம் வகுப்பு வரை
தரை வகுப்புத்தான்!
வகுப்புக்குள் சென்றானதும்
பாக்டம்பாசு சாக்குப்பை
விரிக்கப்பட அதுவே
தரைவிரிப்பாகி விடும்.
தரை விரிப்பு மட்டுமென
நீங்கள் நினைத்திருந்தால்
அது காலமாற்றத்தின்
உருமாற்றம் என்றிடவேண்டும்,
கோடை விடுப்பு முடிந்ததுமே
கச்சான் காற்று வீச
பாலக்காட்டு கிணத்துக்கடவு
சாரமழை பெய்யுமென
எஞ்சோட்டுப் பையன்களென்ன
குஞ்சுகுளுவான்கள் கூடத்தானறியும்!
கொசுறுச்சாரலுக்கெல்லாம்
துள்ளி விழுவதில்லை நாங்கள்!
முகில் கவுந்து(கவிழ்ந்து) கிடந்தால்
பாக்டம்பாசு பையை நெடுவாக்கில்
ரெண்டாக மடித்து  மூலை முனைக்குள்
தலையை விட்டுக் கொள்ளப் பிறந்துவிடும்
கொங்கர்களின் கொழுவலான கொங்காடை!!
கொங்கர்களின் கோடைமழைக் கொங்காடை
காட்டுவழி ஊர்வழி போனதென்ன போனதென்ன?!!

கச்சான்(மேற்கு) காற்று வீசப் பெய்யும்
கோடைமழைக்கு கொங்காடை!
கொண்டல்(கிழக்கு) காற்று வீசப் பெய்யும்
கொண்க மழைக்கு(கொங்கமழ) நல்லகுடை!!
குளுந்துவரும் கோடைமழை சிலுசிலுப்பு
உருட்டுமிரட்டு கொங்கமழை படபடப்பு!!

இன்று சொல்கிறார் கனமழையாம்
பள்ளிகளெல்லாம் விடுமுறையாம்
காலத்தின் கோலமடா நண்பா
நீர்வடியும் மண்ணெல்லாம் 
கட்டுக்கட்டுச் கல்விச்சாலைகள்
சின்னசின்ன மழைக்கே
தாக்குப்பிடிக்க இயலாத
ரோட்டுவழி தண்ணிக்குழி
கொசுறு மழை கனமழை
தத்தளிக்கும் தமிழனுக்கு
அளவீட்டு உணர்வில்லை
பருவகாலத் தெளிவில்லை
எல்லாரும் தப்புகையில்
எல்லாமும் தப்புவதில்
தவறில்லை தவறில்லை
கொங்காடை பெருமை சொல்லி
கொங்காடை சொல் பதிந்தோமென
வணக்கம் சொல்லி விடைபெறுவோம்!

தேருமுட்டியில்
தேங்கா வெல பேசும்
தேவராசு பெருங்குரலெடுத்து
என்றா நாயம் பேசறீங்க பெருசா?
எந்தூட்ல ஒல்லிருக்குது? ஒரலிருக்குது??
செக்கிருக்குது? கல்லிருக்குது?
ஒழவுமழ, கனமழன்னு
வேகடத்தனமா வெறும்பேச்சு?!
நச்சு மழை நசநசன்னு,
எதொ மண்ணு நனையுது!!
மச்சானுக்கு கவுறுகளோட
வெள்ளண்ண ஓரியாட்டம்
கனகனத்தாள் கனகவல்லி!
கோடைமழ,
அப்பப்ப,
படபடன்னு தூத்தலு,
அலுப்பைக் கூட்டி
அரற்றிக் கொண்டான் திருமூர்த்தி!!
பொன்னீந்தண்ணனூட்டு அக்கா,
ஒரு ஒழவுமழ இருக்குமுங்ளா?
அடப் போடி வெவரங் கெட்டவளே
உடுத்தியிருக்குற
சீல நனையுறாப்ல பொசும்பல்
சித்தங்கூரம்!
இலாடமடிக்க
அண்டையூர் போனபொழுதில்
எதிர்கொண்ட உறவொன்று!
ஒழவுமழ இருக்குமுங்ளா?
அதென்னுங்
வாசத்தெளிச்சமாரி எறிதூறல்
மூச்சுவாங்கி மூச்சுடுற நேரம்!
சந்தையிலே
நயம் சோளம்
ஒரு படி அளக்கையிலே
அக்கா, ஒரு ஒழவுமழ இருக்குமுங்ளா?
அதென்ன சின்ராசூ,
வாசத்தண்ணி வெளியில போறமாரி பொடித்தூறல்
பொலபொலன்னு!!
அம்பளி கரைத்துக் கொண்டிருந்தவன்
அணுசரணையாய்ப் பழமை வீசினான்
வாங் மாப்ள,
ஊர்ல ஒழவுமழ இருக்குமுங்ளா?
மச்சே,
அதென்னுங் வீதித்தண்ணி
குட்டைக்குங்கோடப் போய்ச் சேர்லீங்
இரவைத்தூறல்
காக்கா எழும்பி உக்கார்றாப் போல!!
மேழி செதுக்க வந்தவனை
தச்சுத்தங்கான் இடைமறித்தான்
ஏனுங் சின்னவரே
ஊர்ல ஒழவுமழ இருக்குமுங்ளா?
இக்கும்,
காட்டுத்தண்ணி வெளீல போகுல
வெறும் எறசலு
ஒருசால்த் தண்ணி எறைச்சுட்டாமாரி!!
பட்டத்துமழை
பருவந் தவறாமப் பேஞ்சிருக்கு!
ஒழவுமழ கனமழ வதிமழ
கல்மழ நீரூத்துமழ பேமழன்னு
நாக்குல நரம்பில்லாம?!
சுழிமழ, சுழிச்சு சுழிச்சு சித்தங்கூரம்!
சாரமழ, சரசரன்னு சலசலப்பு சித்தங்கூரம்!!
வர ஒழவுன்னாவது இருக்கட்டு
கோவணத்தை
இழுத்துப் பூட்டினார் கோபண்ணா!!

_____________

வட்டாரவழக்குச் சொற்களுக்குப் பொருள் விளக்கம்:
வதிமழை = மழையால் மண்ணெல்லாம் வத வதன்னு சேறும் சகதியுமாக இருப்பது
நீரூத்து மழை = பூமியிலிருந்து தண்ணி ஒறம்பெடுத்து, நீர் சுரந்து சுரந்து  வருவது, ஒறம்பு, உறம்பு... நீர் கோர்த்துச் சுரத்தல்
ஒல்லு ஒரல் = உரல்
கவுறு = கயிறு
வெள்ளண்ண = விடியற்காலை
ஓரியாட்டம் = அக்கப்போர்
சித்தங்கூரம் = சிறிது நேரம்
அம்பிலி = கூழ்
காகம்  = மேலெழுந்து உட்காரும் நேரம்
பட்டத்துமழை = பருவம் தவறாத மழை

________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)
1 comment:

  1. கொங்கு தமிழ் கொஞ்சும் தமிழ் வரிகள் மீண்டும் மீண்டும் படிக்க இனிமை...மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்....

    ReplyDelete