Saturday, June 2, 2018

தனுஷ்கோடி – அரிச்சல் முனை

——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்


தனுஷ் என்றால் வில். கோடி என்றால் முனை.



இராமேஸ்வரம் தீவு, மேல் நோக்கிக் குவிந்து வில் போல் வளைந்திருப்பதால் இந்தத்தீவு ஒரு வில்; வில்லின் தென்கிழக்குக்  கோடியில்  இருப்பதால் இந்த ஊர் தனுஷ்கோடி.  இந்த தனுஷ்கோடிக்கு  செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கனவு. 1964 டிசம்பரில் பெரும் புயல் ஒன்று  தனுஷ்கோடியைப் புரட்டிப் போட்டது.  இந்த ஊர் உருக் குலைந்து அழிந்து போனது. இந்தத் தீவின் படங்களைச்  செய்தித்தாள்களில் பார்த்த போது சிறுவனான எனக்கு, ஒருமுறை இங்கே சென்று இந்தத் தீவினை பார்க்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் இராமேஸ்வரம் சென்றபோது அங்கிருந்து 25 கி.மீ. பயணித்தால்தான் முனைக்குச் செல்ல முடியும் என்றார்கள். போகலாம் என்றேன். இங்கிருந்து 15 கி.மீ.யில் உள்ள முகுந்தராயன் பட்டிணம் வரைதான் சாலை வசதி உள்ளது. அதற்கு மேல் FOUR-WHEEL  drive உள்ள ஜீப்பில்தான் போக முடியும். அதவும் முழுமையாகப்  போக முடியாது. மழை பெய்தால் சிக்கல் என்று வேன்காரர் கையை விரித்துவிட்டார். ஏமாந்து திரும்பினேன்.


ஆனால் தற்போது  ஆட்டோ கூட முனைக்கு செல்கிறது, சென்ற ஆண்டு அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவகத்தைத் திறக்க வந்த பிரதமர்  இந்த சாலையையும் திறந்த வைத்திருக்கிறார். முகுந்தராயன் பட்டினத்திற்கும் கடைக்கோடி முனைக்கும் ஒன்பதரை கி.மீ. தூரம்தான். ஆனால் எழுபத்து ஐந்து கோடி ரூபாய் செலவு பிடித்திருக்கிறது. அருமையான சாலை. அழிந்துபோன சாலையின் மேல் இருந்த மணலை அகற்றி புதியதாக மேடிட்டு அருமையாக அமைத்திருக்கிறார்கள். சாலை நெடுகிலும் இருபுறமும் கேபியன் சுவர் (CABION BOX)  அமைத்திருக்கிறார்கள். இந்த சுவர் பூமிக்கு அடியில் ஒரு மீ. ஆழம் செல்கிறது. ஒன்றின் மேல் ஒன்றாகப் பாறைகளை அடுக்கி அவற்றை GEOTEXTILE எனப்படும் இழைகளால் பிணைத்திருக்கிறார்கள். உயர் ஓதங்களின் போதும் சூறாவளிக் காற்றின் போதும்  கடல் நீர் உட்புகாமல் தடுக்கவும், அப்படி மீறி உட்புகும் நீர் சாலையை அரிக்காமல் வழிந்தோடவும் இந்த ஏற்பாடு.



தனுஷ்கோடியிலேயே  சாலையின் இருபுறமும் சற்று தொலைவில் கடல் தெரிய ஆரம்பித்து விடுகிறது. இங்கிருந்து முனை ஐந்து கி.மீ.. மாலை நேரத்து மஞ்சள் வெயிலில் தக தக வென மின்னும் பொன்னிற மணல் திட்டுகள். முனையை நெருங்க நெருங்க இருபுறமும்  சாலையை நெருங்கி வரும் கடல் முனையை அடைந்தவுடன் சேர்ந்து நம் கண்முன்னே பெரும் நீர்பரப்பாய் விரிகிறது.

இந்த முனைக்கு அரிச்சல் முனை என்று பெயர். கடல் நீரால் அரிக்கப்பட்ட முனை- ஆதலின் அரித்த முனை - அரிச்ச முனை – அரிச்சல் முனை. இது ஒரு யூகம்தான். நம் நாட்டின் எல்லை இந்த  முனை என்பதால் இங்கே இந்திய தேசிய சின்னம் ஏந்திய தூண் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். இங்கிருந்து இலங்கையின் தலைமன்னார் வெறும் 15 கி.மீ. தான்.



அரிச்சல் முனையிலிருந்து பார்க்கும் போது இடதுபுறம் அமைதியாக ஓர் ஏரியைப்போல்  காட்சி அளிக்கும் வங்கக்கடலின் பாக் நீரிணை.  வலதுபுறம்  ஆர்ப்பரிக்கும் இந்துமாக்கடலின் மன்னார் வளைகுடா.



இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது அரிச்சல் முனைக்கும் படையெடுக்கத் துவங்கி விட்டார்கள். மாலை ஐந்து மணிக்குமேல் கடற்கரைப் பகுதியில் மக்களை அனுமதிப்பதில்லை, இன்னும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்காததால் கடற்கரை தூய்மையாக அழகாக இருக்கிறது. போய் பார்த்துவிட்டு வாருங்களேன்.






படம் உதவி:  
சாலை குறித்த படங்கள், இராஜ வன்னியன் என்பாரின் “தனுஷ்கோடி உன்னைத்தேடி” எனும் வலைத்தளத்தில் எடுக்கப்பட்டவை



________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)



No comments:

Post a Comment