Saturday, June 30, 2018

உழவு

——     விஜயகுமார்




எனது பார்வையில் விவசாயமும் விவாகமும் ஒன்றே ஆகும். விவாகம் என்றால் திருமணம். விவ+சாயம்= வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருமணம் என்பேன்.ஆம். இதுவும் திருமணவாழ்வு போலத்தான். சந்தோசங்களும் சம்பிரதாயங்களும் மூன்றாம்நாள் முளைவிடும் பயிரைக் காணும்போது ஒவ்வொரு உழவனுக்கும் ஐயிரு திங்கள் காத்திருந்து தன் மகவைக் கண்ட சந்தோசம் இருக்கும். பின் அது வளர்ந்து அறுவடை செய்து மகசூலைக் கையில் எடுக்கையில் தன் பரம்பரையே அகக்கண் முன்னே திரைப்போடும். விவசாயம் குறித்து மூதுரை முன்னவர்களின் சில முன்னுரைகளைக் காண்போம்.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்" என்று வள்ளுவரும்,
"பலகுடை நிழலும் தன்குடைக் கீழ் காண்பர்"  எனத் தமிழ் பெருமாட்டி ஔவையாரும் கூறியுள்ளனர்.

முதலில் வெற்று நிலத்தில் ஆடுமாடுகளை அடைத்து பட்டியிடுதல் (அ) கிடைபோடுதல் நடைபெறும். ஆநிரைகளின் கழிவுகள் நிலத்திற்கு அடியுரமாகப் பயன்படுத்தப்படும்.
"ஆடு பயிர்காட்டும் ஆவாரை நெல்காட்டும்"
"கார் ஆடு பீசாணம் குழை"
இவ்வாறு பதப்படுத்தப்பட நிலத்தில் ஏற்றம் கொண்டு நீர்ப்பாய்ச்சி நிலத்தில் மூன்றுநாட்கள் நீர் தேக்கிவைக்கப்படும்.

ஏற்றம் இறைப்பதை இலக்கியங்களில்;
"ஆம்பியும் கிழாரும் வீங்கின ஏற்றமும்" (சிலம்பு)
என்பது, உழவு செம்மைப்படுவதற்கு உழவின் எண்ணிக்கை இடத்திற்கு இடம் மாறினாலும்கூட பொதுவாக நான்கு உழவோடு பயிர்செய்வது போதுமானது.

"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்" (குறள்-1037)

ஒரு பலம் எடையுள்ள கட்டியை கால் பலம் எடையுள்ளதாக மாறும்வரை உழவேண்டும்.
"முந்தித் தரிசடித்து முச்சாரியாய் மறித்து
நைந்திடவே சேறுகலக்கி நயமாக நாலுழவு"
என செங்கோட்டுப்பள்ளு வலியுறுத்துகிறது.

ஏர் உழுவதற்குப் பயன்படும் கொழுவானது எப்படியிருக்கவேண்டும் எனில்
" பிடிக்கணத்து அன்னக் குதிருடை மூன்றில்
களிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்
குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பைச் சார்த்தி" (196-199)
என பெரும்பாணாற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது.

இப்போது திருமணம் என்னும் ஆயிரங்கால் பயிரைப்பற்றிக் காண்போம். முதலில் பெண்தேடும் படலம்.இதோ இரண்டு மாதத்திற்கு முன்பே விதைப்புக்கென்று நெல்லைத்தேடிப் பதப்படுத்தி தயார் செய்வர். பெண்பார்த்தாகி விட்டது. பெண்ணையும் பிடித்துவிட்டது. அடுத்து என்ன? பரிசம்தானே! கதிரவனுக்குப் படையல் போட்டு நிலத்தின் ஒருபகுதியில் விதைவிதைத்து வளர்த்துவருவர். திருமணத்திற்குப் பெண் காத்திருக்கட்டும்.நாம் மண்வேலையைப் பார்ப்போம் வாருங்கள்.

நாள்குறிக்கவேணும், பத்திரிக்கை அடிக்கவேணும்,பந்தல் போடவேணும் , உறவுகளை அழைக்கவேணும்,விருந்து வைக்கவேணும், இப்படி எவ்வளவோ வேலையிருக்கு. நான்குமுறை நன்கு நைந்து கூழாக உழுத நிலத்தை நீர்தேக்கி மண்ணை ஆறப்போடுவர்.அருகேயுள்ள மரஞ்செடி கொடிகளிலிருந்து இலைதழைகளை வெட்டி நீர்தேக்கிய நிலத்தில் தூவி நன்கு மண்ணுக்குள் செல்லுமாறு அழுந்தமிதிப்பர். இதுவே முகூர்த்தக்கால் நடுதல்.பிறகு இதுவரை சேகரித்து வைத்திருந்த ஆநிரை கழிவுகள் எருவாகப் பதப்படுத்தப்பட்டு உருமாறியிருக்கும். இதையும் நிலத்தில் தூவுவர். இதுவே நலுங்கு வைத்தல் நிகழ்வு. இனி என்ன?  பெண் அழைப்பு, உறவினர் வருகை, திருமணம்தானே!

நடவுக்குக் காத்திருக்கும் பயிரைப்பிடுங்கி முடிச்சிட்டு நடவு நிலத்தில் ஆங்காங்கு போட்டுவைப்பர்.இதுவே பெண் அழைப்பு.மணப்பெண் மண்டபத்தில் காத்திருக்கிறாள். அதிகாலை மங்கள வாத்தியம் முழங்க மந்திரங்கள் ஓத,பூமித்தாய்க்குப் படையல் போட்டு திருமண வைபவம் தொடங்குகிறது. அதிகாலையிலேயே உறவுகள் புடைசூழ நடவுவேலை தொடங்குகிறது. முதல் பயிறு நடுவதுதான் மங்கல நாண் பூட்டுதல்.அடுத்தடுத்து திருமணச் சடங்குகள். இயற்கையாகிய முகில்கள் மழையென்னும் மலர்கொண்டு  அட்சதைத் தூவ, இடியென்னும் மத்தளம் முழங்க, மின்னலென்னும் புகைப்படக்காரர் நிழற்படமெடுக்க திருமணம் இனிதே நடந்தேறியது.

இவ்வாறு மழைப்பொழிவதை பட்டினப்பாலையில்
"வான்முகந்த நீர் மழை பொழியும்
மழைபொழிந்த நீர் கடற்பரப்பும்"
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடியில் விதைவிதைப்பது ஏன் தெரியுமா? 
அதிலிருந்துதான் கூதிர்காலம். தொடங்குகிறது.ஆடியிலிருந்து ஆறு மாதத்திற்கு வெப்பம் குறைந்து இயற்கை உழவுக்குத் துணைபுரியும்.இதையே. ஆடிப்பட்டம் தேடிவிதைக்வேணும் என்று கூறுவர். பயிரிட்ட முப்பது நாட்களில் முதல் களையெடுப்பர்.அதைத்தொடர்ந்து மாதாமாதம் களையெடுப்பு நடைபெறும்.மூன்று மாதத்தில் பயிரானது பால் பிடிக்கும்.இதுவே பெண்ணானவள் கருவுறுவதாகும். அப்போது ஒரு கர்ப்பவதியைப்போல் பயிரைப் பாதுகாக்கவேண்டும். அந்த நேரத்தில் பயிரை பூச்சியினங்களிலிருந்து பாதுகாக்க வேப்பம்புண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் மண்புழு உரங்களும் பயன்படுத்தப் படுகின்றன.இவ்வாறு பால்கட்டிய தானியங்கள் சிறிதுசிறிதாக முதிர ஆரம்பிக்கும்.. இந்தக் காலங்களில் நெற்பயிருக்கு இணையான நெற்மிரட்டி எனப்படும் ஒருவகைப் புல்லும் சேர்ந்தே வளரும். இவை பயிருக்குக் கிடைக்கக்கூடிய சத்துக்களை உறிஞ்சி வாழ்வதால் நெற்தானியத்திற்கு கிடைக்கக்கூடிய சத்துக்கள் குறைந்து தானியங்கள் பதராவதற்கு வாய்ப்பு உண்டு.இப்போது களையெடுப்பு நடப்பதுதான் கடைசி.ஆறுமுதல் ஏழாவது மாதத்தில் தானியங்கள் முதிரத்தொடங்கிப் பயிரானது கொஞ்சம்கொஞ்சமாக தலைசாய ஆரம்பிக்கும்.இந்த நேரங்களில் பறவைகளும் விலங்குகளும் நிலத்தை நோக்கிப் படையெடுக்கும்.அவை தானியங்கள் வீணடிப்பதைத் தடுப்பதற்காக வயல்களின் வரப்புகளில் பரணமைத்து பகலில் பெண்களும் இரவில் ஆண்களும் பயிரை காவல் காப்பர்.

"களிச்சுற்றிய விளைக்கழனி அளிப்பறையாற் புள்ளோப்பந்து" எனப் புறநானூறு 396 எடுத்தியம்புகின்றன. இப்போது வளைகாப்புக்கு நாள் குறிப்போம்.  ஆம் பயிர் நன்கு பழுத்து கதிரானது முழுவதுமாக முற்றி நிலத்தில் முழுவதுமாகப் பயிர்கள் சாய்ந்துவிடும்.அதனால் கதிர் அறுக்க நாள் குறித்துவிடுவர். கதிரறுக்கும் நாள் வந்தவுடன் காலையிலேயே படையலிட்டு கதிரறுக்கத் தொடங்கிவிடுவர்.அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கட்டுகளாகக் கட்டப்பட்டு களத்தில் அனைத்தும் அடுக்கப்படும். அவை நெற்தாளானது நன்கு வதங்கும்வரை அங்கேயே பாதுகாக்கப்படும்.அப்போதுதான் கதிரடிக்கும்போது நெல்மணிகள் எளிதாகப் பிரியும். இப்போது கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக காத்திருக்கிறாள்.தாள் நன்கு வதங்கியபிறகு கதிரடிப்பது தொடங்கப்படுகிறது. இதுதான் பிள்ளைப்பேறு நிகழ்வு. கதிரடித்தபிறகு தாளில் மீதமிருக்கும் ஓரிரண்டு தானியங்களை நீக்குவதற்குத் தாள்களை களத்தில் பரப்பி மாடுகளைக்கொண்டு பிணையிலடிப்பர். சில இடங்களில் வெள்ளாமை அதிகமாக விளைந்த இடத்தில் யானைகளைக் கொண்டு பிணையிலடிப்பர்.

இதையே "யானைகட்டி போராடித்தக் கூட்டம்" என ஒரு வழக்குமொழியும் உண்டு; கவிக் காளமேகத்தின் சிலேடைப்பாடல்:
"வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரிற்சிறந்து பொலிவாகும்-சீருற்ற
செங்கோல் மேனித் திருமலைராயன் வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்"

வாரிக் களத்தடிக்கும்;
வயலில் உள்ள கதிரானது கட்டாகக் கட்டி களத்துமேட்டிற்குக் கொண்டுவந்து கதிரடிக்கப்படுகிறது/எதிரிகளைப் போர்க்களத்தில் தன் துதிக்கையால் தூக்கி அடித்துக் கொள்ளும்(யானை)
வந்தபின்பு கோட்டைபுகும்;
வைக்கோலிலிருந்து பிரித்த நெல்லானது சேகரிக்கப்பட்டு கோட்டைப்புகும்/ எதிரிகளைக் கொன்று வெற்றிவாகையோடு எதிரியின் கோட்டைக்குள் புகும்(யானை)
போரிற் சிறந்து பொலிவாகும்;
பெரிய வைக்கோல் போர்களாக அடுக்கி வைத்துச் சிறப்புற்று அழகாய் விளங்கும்./யானையின் அங்கம் போரில் முக்கியம் என்பதால் போரில் சிறப்புற்று அழகாகத் திகழும்.
இவ்வாறு சிறப்புற்ற சிவந்த தேகம் கொண்ட திருமலைராயன்  மலைச்சாரலில் வைக்கோலும் யானையும் நிறைய இருக்கிறதென்று திருமலைராயன் மலையின் தானிய வளத்தை சிலேடையாகப் பாடினார் கவிக் காளமேகம்.



விஜயகுமார், செந்தாழை.

No comments:

Post a Comment