Saturday, June 30, 2018

தமிழரும் விருந்தோம்பலும்

——    சரஸ்வதிப்ரியா


தமிழரின் தலையாயப் பண்பாட்டுக் கூறு விருந்தோம்பல்.  உணவு கொடுத்து உயிர் ஓம்புதல் தமிழர் வாழ்க்கை முறை. இது ஒவ்வொரு தலைவன், தலைவியின் தலையாயக் கடமையாகச் சங்க காலத்தில் போற்றப்பட்டது. இல்லற அறத்தில் விருந்தினரைப் பேணுதல் முக்கியக் கடமை. இதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் ஏராளமாகக் காணக்கிடக்கிறது. விருந்து என்றால் 'புதுமை' என்று பொருள். வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கு உணவு அளித்தல் விருந்தோம்பல் ஆகும். சங்க காலத்தில் ஐவகை நிலப்பகுதியிலும். அந்த நிலத்திற்கு ஏற்ப உணவு விருந்தாக அளிக்கப்பட்டிருப்பதாகச் சங்கப் பாடல் கூறுகிறது.

"அறம் எனப்படுவது யாது எனக்கேட்பின்
மறவாது இதுகேள் 
மண் உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் "
(மணிமேகலை 25.288_291)
அறம் என்று சொல்லப்படுவது உலகில் வாழும் உயிர்களுக்கு உணவு , உடை,  உறங்க இடம் வழங்குதலே என்பதை அழகாக விளக்குகிறது மணிமேகலை.

இதையே திருவள்ளுவரும்; 
"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு " (குறள் 81) என்று கூறியுள்ளார்.

"நெல் பல பொலிக! பொன் பல
"விளைக வயலே! வருக இரவலர்
"பால்பல ஊறுக ! பகடுபல சிறக்க" 
(ஐங்குறுநூறு_ 1_3)

"விருந்து புறத்தருதலும் சுற்றம் ஓம்பலும்"
(தொல்.கற்பு11) என்று பலவாறு மனையறம் போற்றும் தலைவியின் சிறப்பு கூறப்பட்டு உள்ளது.

விருந்தினர் எந்த நேரத்தில் வந்தாலும், தலைவி இன்முகத்துடன் விருந்து பரிமாறுவாள் என்று நற்றிணையில் விருந்தோம்பலின் சிறப்பை, 'அல்லி லாயினும் விருந்துவரின் ........' என்று சிறப்பித்துக் கூறுகிறது.


இல்லம் தேடிவரும் விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று உபசரிப்பதே விருந்தோம்பல் ஆகும். இதையே திருவள்ளுவர்  
"மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து".
என்றும் கூறியுள்ளார்.

"விருந்தே தானும்
புகுவது புனைந்தே யாப்பின் மேற்றே"  (தொல் _231)

புதிய மன்னர்கள்  கொடுத்த திறைப் பொருள்களால் மன்னன் பகை தணிந்ததை அகநானூறு 54ல்  "விருந்தின்......வெம்பகை தணிந்தனன் " என்று கூறப்பட்டுள்ளது.

"அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெளிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை."
(சிலம்பு. கொலை.காதை 71_73) என்று கண்ணகியின் நிலையையும்

"விருந்து கண்ட போது என்னுறுமோ வென்று விம்மும்" (கம்ப. சுந்தரகாண்டம் கா.ப.15:2) என்று கணவனைப்பிரிந்த சீதை விருந்து ஓம்ப முடியாத நிலையையும்

"...............நாளும்
மனைமுதல் வினையெடும் உவப்ப
நினை_மாண்நெஞ்சம் நீங்குதல் மறந்தே "(அகம் 51) 
என்பதிலிருந்தும் கணவனும் மனைவியும் சேர்ந்தே விருந்தோம்பியுள்ள நிலை புலப்படுகிறது.
பாலைத்திணைப் பாடிய பெருந்தேவனாரும் விருந்தோம்பல் "இல்லத்துக் கடனே " என்கிறார்.எப்படியெல்லாம் உபசரிப்பு இருக்க வேண்டும் என்பதை விவேக சிந்தாமணி
"ஒப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து
உண்மை பேசி உப்பில்லாக் கூழிட்டாலும் 
உண்பதே அமுதமாகும். முப்பழமொடு பாலன்னம் முகம் கருத்து ஈவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகுமன்றோ?"
என்று கூறுகிறது.

ஊடலைக்கூட விருந்தோம்பல்
கூடலாக்கிறதாம்.
"தடமருப்பு எருமை மடநடைக்குழவி
....................................
சிறியமுள் எயிறு தோன்ற 
முறுவல் கொண்ட முகம்காண்கும்மே."
(நற்றிணை 120) மருத நிலத் தலைவியின் ஊடலை விருந்தோம்பல் நீக்கியதாக இப்பாடல் உணர்த்துகிறது.
விளையாட்டின் மூலம் சிறுவயது முதலே தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விருந்தோம்பல் உணர்வு ஊட்டப்பட்டிருக்கிறது என்பதை
"தொடலை ஆயமொடுகடல் உடன் ஆடியும்
சிற்றில் இழத்தும் சிறுசோறு குவைஇயும்
...........................................
மெல்இலைப் பரப்பின் 
விருந்துஉண்டு யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ ?" (அகம்-10)
என்ற பாடல் விளக்குகிறது.

குறிஞ்சிப்பாட்டில் உணவு வேண்டி வரும் விருந்தினர்கள் உண்டு செல்வதற்காக செல்வந்தர்களின் மனைகளின் வாயில்கள் திறந்தே இருக்குமாம். இது குறிஞ்சிப் பாட்டில் (201-205)
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இல்லறக் கடமையாற்றக் காத்திருக்கும் அடையா வாயில்கள் விருந்தோம்பலுக்குச் சான்றாக அமைந்துள்ளது .

நெய்தல் நிலத்தலைவி தன் தோழியிடம் பலர்புகும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை அடைப்பதற்கு முன்னர் உணவருந்த வரவிருக்கும் விருந்தினர் யாரேனும்  உள்ளனரோ? என அறிவிக்குமாறு வினவுவதாக
"புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
......................................
வருவீர் உளரோ? எனவும்
வாரார் தோழி நம் காதலரே"
(குறுந்-118) என்ற பாடல் வழி அறிய முடிகிறது. சங்க கால மக்கள் தன்வீடு, தன்மக்கள் என வாழாமல், தான் தேடிய செல்வத்தைச் சுற்றத்தார்களுக்கும் ஈந்து வாழ்ந்து உள்ளனர் என்பதை
"பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்
அன்பெனப்படுவது தன்கிளை செறாமை"(கலி.133) 
என்ற பாடல் வழி அறியமுடிகிறது .

தொல்காப்பிய விதிப்படி ஐந்திணைகளில் அறம் பாடுதல் மரபாகி உள்ளது. 
"தொலைவாகி இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு"
"இல்லென இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு " (கலி.2:15)
"இடனின்றி இரந்தோர்க்கு ஒன்றுஉ ஈயாமை இழிவு" (கலி 2:19)
ஆடவர் பொருள் தேடச் செல்லும் நோக்கம் ஆதரவற்றவர்க்கு உதவவே என்பதையே இப்பாடல்கள் உணர்த்துகின்றன.
        
    "  .......கானவர்
வில்லில் தந்த வெண்கோட்டேற்றைப்
புனையிருங் கதுப்பின் மனையோள் கெண்டிக் 
குடிமுறைப் பகுக்கும் ." 
(நற்றிணை-336)
கானவர்கள் தான் வேட்டையாடிக் கொணர்ந்த ஆண்பன்றிக் கறியை அவர்களின்  மனைவிமார்களின் ஊரில் வாழும் ஏனையோருக்குப் பகுத்துக் கொடுத்து விருந்தோம்பியுள்ளனர். நெய்தல் நில பரதவர்கள் தங்களின் மீன் வேட்டையில் கிடைத்த மீன்களைச் சுற்றத்தார்களுக்கு பகுத்துக் கொடுத்து உள்ளனர் என்பதை அகநானூறு-70 கூறுகிறது. பாலை நில இடைச்சியர் வரகரிசி சோற்றை பாலோடு தருவார்கள் என்று அகநானூறு பதிவு செய்துள்ளது.

தொகுப்பு:
தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கியுள்ளனர்.
குழந்தை பருவத்திலிருந்தே விளையாட்டிலும் விருந்தோம்பல் கற்பிக்கப்பட்டுள்ளது.
ஊடலிலும் கூடலிலும் விருந்தோம்பலே சிறப்பிடம் பெற்றுள்ளது.
சங்க கால தமிழரின் வாழ்வில் கணவனும் மனைவியும் சேர்ந்தே ஆற்ற வேண்டிய அறமாக விருந்தோம்பல் இருந்திருக்கிறது. ஈட்டிய பொருளை இரப்போர்க்கு ஈந்தே மகிழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

இன்றைய நிலையில் தமிழரின் விருந்தோம்பல்:
தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றான் முண்டாசுக் கவி பாரதி. பசி என்ற ஒரு வார்த்தையாலேயே பரிதவித்து நிற்கிறது இந்த விஞ்ஞான உலகம். முண்டாசுக்கவிஞன் பாரதி அழகாக எவ்வாறு உணவு படைக்க வேண்டும் என்பதை அற்புதமாகக் கூறுகிறார்.
"பாய்ச்சும் பசும்பயிற்றுப் பாகுக்கும் நெய்யளித்துக்
காய்ச்சும் கடிமிளகு தொன்னை பல வைத்திடுவாய்
ஆயுணவு திரிந்தே அவர் எழுமுன் - தாயே
அவ்வகைக்கு நீரேந்தி நெய்ப்பசை அகற்ற 
உவர்கட்டி தன்னை உதவு - துவைத்த துகில்
ஈரம் துடைக்க எனஈந்து,மலர்ச் சந்தனமும் 
ஓரிடத்தே நல்கியே ஒளி இலைகாய் சேரவைத்து
மேல் விசிறி வீசுவிப்பாய் மெல்லியலே!”

இப்படி ஒரு கவனிப்பினை நாம் நம் விருந்தினருக்கு அளிப்போமாயின் அவ்வுலகில் உள்ள தேவர் அருந்துவதாகக் கருதப்படும் அமிழ்தினை உண்ட பெருமயக்கம் உண்டாகும் என்பது திண்ணம். இன்றைய நவீன உலகில் மனிதத்தைப் பேணுவதற்கான முதற்படியும் முழுமுதற்படியும் விருந்தோம்பல் தான்  என்பதை  உணர்வோம் . ஏழைகள், அனாதைகள், நோயாளிகள், குற்றவாளிகள் போன்ற"அந்நியர்களுக்கு" பிரத்தியேகமான இடங்களில் அளிக்கும் உதவிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம். இத்தகைய நிறுவனமயமான விருந்தோம்பலே மத்திய காலங்களிலிருந்து மறுமலர்ச்சிக் கால மாற்றத்துடன் இணைவதாக இருக்கலாம். (இவான் இல்லிச் தி ரிவர்ஸ் ஆஃப் தி ஃப்யூச்சர் - (Ivan Illich, The Rivers North of the Future) விருந்தோம்பலுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.

வடலூர் வள்ளலார் மடத்தில் இன்றும் அணையா அடுப்பு. முகம் சுழியா உபசரிப்பு... முன்னோர் சொல் மந்திரம் என்பதை இன்றும் நடைமுறையில் கடை பிடிப்போரும்  உண்டு.நம்மில் மரபு மாறா மரத் தமிழரும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர்.

பயன்பட்ட நூல்கள்:
1. அகநானூறு -வர்த்தமானன் பதிப்பகம்.
2. புறநானூறு -வர்த்தமானன் பதிப்பகம்.
3. ஐங்குறுநூறு-வர்த்தமானன் பதிப்பகம்.
4. குறுந்தொகை-வர்த்தமானன் பதிப்பகம்.
5. கலித்தொகை-வர்த்தமானன் பதிப்பகம்.
6. குறிஞ்சிப்பாட்டு-வர்த்தமானன் பதிப்பகம்.
7. நற்றிணை-வர்த்தமானன் பதிப்பகம்.
8. விவேக சிந்தாமணி-கழக வெளியீடு.
9. சிலப்பதிகாரம்-கழக வெளியீடு.
10. மணிமேகலை-கழக வெளியீடு.
11. கம்பராமாயணம்- கழக வெளியீடு.
சரஸ்வதிப்ரியா
நாமக்கல்

No comments:

Post a Comment