Saturday, June 30, 2018

செந்தாழை-பெயரும் பொருளும்

——    கவின்மொழிவர்மன்


பெயர்க்காரணம்:
செந்தாழை மணங்கமழும் திரிவிதகங் காநதி சூழ் தேவர் போற்றும்,
செந்தாழாம் பிகைபாகன் தாழைபுரீ சன்றிருமால் தேடிக் காணாச்
செந்தாளன் றிருவடிக்கு அடியார்கள் அடியார்தந் திறத்தைப்பேணி
செந்தாழைப் பணிந்துபவந் தீர்த்தின்ப வீட்டுநலஞ் சேர்ந்து வாழ்வாம்!

பொருள்:
தாழை மலர்களில் கிடைத்தற்கரிதான ஒன்று செந்தாழை மலர். இயல்பாக எல்லா இடங்களிலும் வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணத் தாழை மலர்களையே காணவியலும். இந்த ஊரில் சிறப்பாக செந்தாழை காணப்பட்டதால் மலரின் பெயரே ஊருக்கும் அமையப்பெற்றது. இப்போது பாடலின் விளக்கத்தைக் காண்போம்.

செந்தாழை மணங்கமழும்-செந்தாழம்பூவின் மணம் வீசுகின்ற, திருவிதகங் காநதி சூழ் தேவர் போற்றும்-கங்கையில்கூட இறைவனுக்குக் கங்கையானவள் ஒரே பக்கமிருந்து வந்து மாலை அணிவிப்பதுபோல் இறைவனின் கழுத்தில் சூடிக்கொள்வாள். ஆனால், இங்குக் கங்கையானவள் மூன்று புறமிருந்தும் வந்து ஒருசேர இறைவனின் பாதகமலத்தில் மாலையென நின்று வெளியேறுகிறாள். அத்தகைய பெருமைவாய்ந்த இவ்வூருக்குத் தேவர்கள் புடைசூழ வந்து வணங்கி இங்கு வரும் பக்தர்களுக்கு சகல செல்வங்களும் வழங்குவர் என்பது பொருள்.

செந்தாழாம் பிகைபாகன் தாழைபுரீ சன்றிருமால் தேடிக் காணா, இங்கு வீற்றிருக்கும் அம்பிகையின் பெயர் செந்தாழாம்பிகை. செந்தாழாம்பிகையின் பாகன் என்பது அம்பிகைக்குத் தனது சரிபாதியைக் கொடுத்தவன் என்பது பொருள். அத்தகைய செந்தாழாம்பிகை பாகனை தாழைபுரீசனை, செந்தாழையில் நிலைபெற்றிருக்கும் ஈசனைத் திருமால் தேடியும் கிடைக்காத என்பதுபோல் பாடல் தொடர்கிறது.

செந்தாளன் றிருவடிக்கு அடியார்கள் அடியார்தந் திறத்தைப்பேணி-அதாவது சிவனது அடியையும் முடியையும். காணவேண்டி திருமால் இந்த செந்தாழைவாசனின் அடியைக் காணமுடியாமல் இருக்கும் இந்த நாதனுக்கு ஈசனின் அடியார்களாகிய நாங்கள் அவரவர் எங்களின் சக்திக் கியன்றவாறு

செந்தாழைப் பணிந்துபவந் தீர்த்தின்ப வீட்டுநலஞ் சேர்த்து வாழ்வாம்-இங்குச் செந்தாழை என்பது இறைவன் வாழும் இடத்தையும் சொல்லலாம். மூன்று கங்கையானவள் கூடுவதையும் கூறலாம். தாழைவா ழீசனையும் கூறலாம். அவ்வாறெனின் செந்தாழைப் பணிந்து-ஈசனை வணங்கி, பவந்- பிறப்பு இல்லாத முக்தி நிலையை அடைந்து, வீட்டுநலஞ் சேர்த்து வாழ்வாம், வீடுபேறு அடைந்து இனிப்பிறவா நலம்பெற்று வாழலாம் என்று இப்பாடல் முடிவடைகிறது.

குறிப்பு: தற்போதுள்ள தாழைபுரீஸ்வரர் ஆலயம் அடியார்களால் எடுத்துக்கட்டப்பட்டது என்பதும் ஊரின் பழைய பெயர் செந்தாழைதான் என்பதும் பாடலின் மூலம் உறுதியாகிறது. மேலும்,  இந்தக் கோவிலில் உள்ள லிங்கத்தில் பாணலிங்கமும் நந்தியும் மட்டுமே பழமையானது. மேலும் இதன் மூலக்கோவிலானது தற்போது உள்ள கோவிலுக்கு தெற்கே மலையடிவாரத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் அமைந்திருந்திருக்கின்றது.

செந்தாழை:
முகாலய படையெடுப்பில் கோவில்களெல்லாம் அழிக்கப்பட்டபோது எஞ்சிய பாகங்கள் தாழையாற்றின் வழியே அடித்துச்செல்லப்பட்டு மண்ணில் புதையுண்டுக்கிடந்ததை மீட்டெடுத்து அடியார்கள் ஒன்றுகூடி தங்கள் திறமைக்கேற்ப இப்போதுள்ள ஆலயத்தை எடுப்பித்துள்ளனர். முன்பு கோவில் இருந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டோமேயானால் மேலும் தகவல்கள் அறியப்படலாம். இன்றளவும் ஆலயத்தில் பலவித வழிபாடுகளும் விழாக்களும் நடைபெறுகின்றன. மாசி மாதத்தில் சோமவார வழிபாடு வாரந்தோறும் நடைபெறும். தைமாதத்தில் கண்ணப்பநாயனார் குருபூஜை நடைபெறும்.மேலும் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட ஒரு தினத்தில் மட்டும் அதிகாலையில் சூரியனின் கதிர்கள் கருவறைவரை சென்று சிவலிங்கத்தின் உச்சிவரை முன்னேறி மீண்டும் அதேபோல் நடக்கும் இந்த நிகழ்வு சிலமணித்துளிகள் தொடர்ந்து இருக்கும்.அந்த அளவிற்கு  ஆலயத்தின் வடிவமைப்பு அந்தநாளில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும். மேலும் செந்தாழையில் இன்றளவும் பல்லவர்கால நடுகற்கள் சிலவும் காணப்பெறுகின்றன.

விவசாயம் ஊரின் முக்கிய தொழிலாக காணப்படுகிறது.அந்த காலங்களில் இங்கு விளைந்த புகையிலைகள் உலகப் பிரசித்தம் என்றால் மிகையில்லை.அந்த நாட்களில் சிங்கப்பூரில் விளைந்த புகையிலைகள் உலகத் தரத்தில் முதலிடம் வகித்தன.அதற்கடுத்த இரண்டாவது நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள  செந்தாழை நகர் தற்போதுள்ள செந்தாரப்பட்டியில் விளைந்த புகையிலை என்பது வாய்வழிச் செய்தியாகும். தற்காலத்திலும்கூட ஊரில் புகையிலையில் தயாரிக்கப்படும் சுருட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கிவருவது குறிப்பிடத் தக்கது. மேலும் மரவள்ளிக் கிழங்கில் ஸடார்ச் தயாரிக்கும்  நிறுவனங்களும் இயங்கிக் கொண்டுள்ளன. ஏரியைச் சுற்றிலும் உள்ள நிலங்களில் வாழை, நெல், பாக்கு போன்ற நன்செய் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயம் செழித்துக் கொழிக்கும் ஊராகவே இன்றளவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஊரைச் சுற்றிலும் உள்ள மலைத்தொடர்களும், குன்றங்களும் ஊருக்கு இயற்கை அரணாய் அமைந்துள்ளது. ஊரின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது.  சேலம் மாவட்டத்திலேயே உள்ள மிகப்பெரிய ஏரிகளின் வரிசையில் இங்குள்ள ஏரியும் ஒன்றாகும்.

ஊரிலுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் பதினெட்டு ஆண்டுக்கொருமுறை திருவிழாத் தேரோட்டம் நடைபெறும். இந்த விழாவானது தொடர்ந்து பதினெட்டு நாட்களும் நடைபெறுகிறது. இந்த நாட்களில் பலவித மகாபாரத நிகழ்வுகள் நடைபெறும். தினந்தோறும் தெருக்களில் பாரதக்கதைகள் வாசிக்கப்படுகின்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஒருநாள் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மயானக்கொள்ளை நடைபெறும். ஊரின் பாரம்பரிய விழாக்கள் காமன்பண்டிகை, சித்திரைத்தேர், ஆடிப்பெருக்கு, மார்கழி உற்சவம், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற பாரம்பரிய விழாக்கள் யாவும் அந்தந்த காலங்களில் நடந்தவண்ணம் இருக்கும். ஊரில் அனைத்து விதமான  சமூகத்தை சேர்ந்த மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.அந்தந்த காலகட்டங்களில் அவரவருடைய விழாக்களும் எந்தவித பேதங்களுமின்றி கொண்டாடப்படுகிறது.கவின்மொழிவர்மன், செந்தாழை.

No comments:

Post a Comment