-- திரு. துரை சுந்தரம்; திரு. நூ.த.லோக சுந்தரம்
முன்னுரை:
இணையக் குழுக்களுள் ஒன்றான மின்தமிழ் குழுவின் உறுப்பினர் திரு. நூ.த.லோக சுந்தரம் அவர்கள் ஒரு கல்வெட்டுப் படத்தை வெளியிட்டு அதன் பாடத்தைப் படித்துத் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கல்வெட்டு, பல சுவையான செய்திகளுக்கு அடித்தளமாய் இருந்தது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.
படம் தெரிவு: மயிலை நூ த லோ சு
கல்லணையில் ஓர் ஆஞ்சநேயர் கோயில்:
கல்லணை வரலாற்றுப் புகழ்பெற்றது. சோழ மன்னன் கரிகாலன் கட்டியது. கல்லணையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலின் ஒரு மூலையில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 1804-ஆம் ஆண்டு, கல்லணையில் இருக்கும் ஒரு மதகு ஆங்கிலேயர் ஒருவரால் செப்பனிடப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கிறது.
கல்லணைக் கல்வெட்டு
படம் தெரிவு: மயிலை நூ த லோ சு
கல்வெட்டின் செய்திகள்:
கல்வெட்டின் படத்தைக் கீழே காணலாம். கல்வெட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு வரிகள் ஆங்கிலத்திலும், அவற்றை அடுத்து ஐந்து வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் வருமாறு:
அ) ஆங்கிலக் கல்வெட்டின் பாடம்:
1 Repaird this COLLING
2 LAH & Erected the 268
3 Upright Stones
4 By Capt. J.L. Calddel
5 A.D. 1804
ஆங்கிலக் கல்வெட்டு, கி.பி. 1804-ஆம் ஆண்டில் கல்லணையின் மதகு ஒன்றை ஆங்கிலேயரான காப்டன் ஜே.எல். கால்டெல் என்பவர் செப்பனிட்டதாகக் கூறுகிறது. செப்பனிடும் பணியின்போது 268 கற்கள் சீரமைத்து வைக்கப்பட்டன என்பதாகக் கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக அறிகிறோம். ஆங்கிலக் கல்வெட்டில் மதகு என்பதற்கு ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சொல்லான “கலிங்கு” என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பானதொன்று. அதை ஆங்கில எழுத்துகளால் ”கலிங்” என்று எழுதியுள்ளனர். “கலிங்கு” என்னும் சொல் மதகைக் குறிக்கும். இச்சொல், கல்வெட்டுகளில் மிகுதியாகப் பயின்றுவரும் சொல்லாகும். ஆங்கிலக் கல்வெட்டில் எழுத்துப்பிழை இருப்பதைக் காணலாம்.
ஆ) தமிழ்க் கல்வெட்டின் பாடம்:
1 1804 இல் - த.ர
2 ராச (?) - கெவுணர்
3 மெண்டாரவற்க
4 ள் உத்திரவுப்படி
5 க்கி மகண ச- ராச -மே
6 ம்பன் ஜெம்சு (?) ல
7.......................
தமிழ்க் கல்வெட்டு வரிகளிலிருந்து, முழுமையான செய்தியை அறிய இயலாது. சொற்றொடர்கள் முழுமையானதாக இல்லை. கி.பி. 1804-ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. மதகு செப்பனிடுதல் பற்றிய சொற்றொடர்கள் இல்லை. அரசு ஆணையின்படி என்னும் தொடர் மூலம் செப்பனிடும் பணி அரசு ஆணையின்படி நிறைவேற்றப்பட்டது. என்பது அறியப்படுகிறது. தமிழ்க் கல்வெட்டில், ஆங்கில அதிகாரியின் பெயர் முழுமையானதாக இல்லை. அவருடைய பெயரின் முன்னொட்டாகவுள்ள “ஜே” என்னும் எழுத்தின் விரிவான “ஜேம்சு” என்பது குறிக்கப்பட்டுள்ளது. 1800 களில் “ஜே” என்பது போன்ற நெடில் எழுத்துகளைக் குறிலாகவே எழுதும் வழக்கம் இருந்துள்ளது. முதல் வரியின் இறுதி எழுத்துகளும், இரண்டாம் வரியின் முதலில் உள்ள ”ராச” என்னும் எழுத்துகளும், சென்ற நூற்றாண்டு வரை மூத்த வயதினர் எழுதும் வழக்கப்படி “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ” என்பது போன்ற ஒரு தொடரைக் குறிப்பதாகலாம். 2, 3 , 4 வரிகளில் உள்ள “கெவுணர்மெண்டாரவற்கள்” என்பது, ”கெவர்ண்மெண்(ட்)டாரவர்கள்” என்பதன் பிழையான வடிவம் என்று கூறலாம். மேம்பன் என்னும் சொல், ”கேப்டன்” என்பதைக்குறிப்பதாகலாம். ஐந்தாம் வரியில் காணப்படும் தொடரான “மகண ச-ராச-” என்பது, மீண்டும் “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ” என்பதையொத்த ஒரு தொடராகலாம்.
ஆஞ்சநேயர் கோயிலின் பின்னணி:
கல்லணையைச் செப்பனிடும் பணியின்போது, 19-ஆவது திறப்பில் நடைபெற்ற பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எத்துணை முயன்றும் பணியை முடிக்க இயலவில்லை. ஆங்கிலேய அதிகாரி ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் காட்சியளித்த ஆஞ்சநேயர், 19-ஆவது திறப்புக்கருகில் தமக்கு ஒரு கோயில் எழுப்புமாறும் அந்தத் திறப்பைத் தாம் காத்துத் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். அதிகாரி அதைப் பொருட்படுத்தாமல் பணியைத்தொடர்ந்துள்ளார். ஓரிரு நாட்களில், குரங்குகள் சில குழுவாக அவரைத் தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது. அவருக்கு வந்த கனவு மேஸ்திரி ஒருவருக்கும் வந்துள்ளது. பணியின்போது ஓரிடத்தில் தோண்டியதில் அங்கு ஓர் ஆஞ்சநேயரின் திருமேனி கிடைத்துள்ளது. அதன் பிறகே, கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், வேளாண்மைக்காக இவ்வணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும்போது, இந்த ஆஞ்சநேயருக்குப் பூசைகள் நடைபெறுவதும், ஒவ்வோர் ஆண்டும் பயிர் விளைந்ததும் முதல் நெற்கதிரை ஆஞ்சநேயருக்குப் படையலிட்டுப் பூசை நடைபெறுவதும் வழக்கம்.
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலும் ஜே.எல். கால்டெல்லும்:
சென்னையில் கதீட்ரல் சாலையில் அமைந்திருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலைக் கட்டியவர் ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்பவராவர். கி.பி. 1815-இல் முதன் முதலாக இக்கிறித்தவக்கோயில் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்டது. 200 ஆண்டுகளைத் தாண்டிய இக்கோயிலைக் கட்டிய ஜேம்ஸ் கால்ட்வெல், இந்த ஆகஸ்ட் மாதம் 20-27 தேதிகள் அடங்கிய சென்னை வாரக்கொண்டாட்டங்களின்போது நினைவு கூரத்தக்கவர். இந்த ஜேம்ஸ் கால்ட்வெல்லும், கல்லணையைச் செப்பனிட்ட ஜேம்ஸ் கால்டெல்லும் ஒருவராயிருக்கக் கூடுமா? ஆய்வுக்குரியது.
31-08-2017 அன்று இணைத்த புதிய செய்தி:
முனைவர் நா.கணேசன் (ஹூஸ்டன்) அவர்கள் ஜேம்ஸ்.எல். கால்ட்வெல் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர், செயிண்ட் ஜார்ஜ் கதிட்ரலைக் கட்டியவரும் கல்லணையைச் செப்பனிட்டவரும் ஒருவரே என்று கருதி இப்புதிய செய்தி இணைக்கப்படுகிறது. கால்ட்டெல் என்னும் ஆங்கிலப்பெயர் இதுவரை கேள்விப்பட்டிராத, எங்கும் படித்திராத பெயர் என்பதையும் இங்கு கருதவேண்டும்.
ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்னும் பொறியாளரின் முழுப்பெயர் ஜேம்ஸ் லில்லிமேன் கால்ட்வெல் (JAMES LILLIMAN CALDWELL) என்பதாகும். 1799-ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் மீது ஆங்கிலேயர் படையெடுத்து நடந்த போரில் (போரில் திப்பு இறந்துபடுகிறார்) கலந்துகொண்டு காயமுற்றவர். பின்னர், கல்லணையை ‘சர்வே’ செய்து 1804-இல் கல்லணையை மேம்படுதினார். அதன்பிறகு, சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலை வடிவமைத்தார். 1858-இல் ‘ஜெனரல்’ என்னும் உயர்பதவி பெற்றார். 1863-இல் மறைந்தார்.
இக்கருத்தில் வரலாற்றுப்பிழை நேர்ந்துள்ளதாகக் கருதும் வரலாற்று ஆய்வாளர்கள் தகுந்த சான்றுகளை முன்வைக்கும்போது கருத்துகள் மாறக்கூடும். வரலாற்றைச் செப்பனிடத் தொடர்ந்த ஆய்வுகளும் தேவை. ஆய்வு முடிவுக்ள் மாறுவதும் இயல்பு.
துணை நின்றவை :
1 www.Columbuslost.com (https://www.columbuslost.com/Temples/Hanuman-Temple-inside-a-Dam-in-Kumbhakonam/info) & http://devrajbandla.photoshelter.com/image/I0000TLhINGvhwIw
2 An Anglican treasure –Article by Sriram V. The Hindu-April 24, 2015.
நன்றி : முனைவர் திரு.நா.கணேசன், ஹூஸ்டன்.
___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
___________________________________________________________
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
___________________________________________________________
No comments:
Post a Comment