Tuesday, August 22, 2017

வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு


-- ஆமோஸ் நவீன் இளையராஜாதிருநெல்வேலி கிராமப்புற விவசாயிகள் பேச்சு வழக்கில் வரும் சொற்கள்:

1. அடிதண்டா - பழையகால மரக்கதவுகளை உட்பக்கமாக பூட்டப் பயன்படும் இரும்பாலான தாழ்ப்பாள்       
2. ஆட்டு உரல் - தானியங்களை இடிக்கப் பயன்படுத்தும் கல்லினால் ஆன பொருள்       
3. இரைப்பெட்டி - கிணற்றிலிருந்து தண்ணீர் இரைக்கப் பயன்படும் வாளி       
4. ஈருவலி - பெண்கள் தலைமுடியில் இருக்கும் ஈரு,பேன் போன்றவற்றை எடுக்கப் பயன்படுத்தும் மரத்தாலான பொருள்       
5. உரக்குழி,எருக்கிடங்கு - ஆடு,மாடுகளின் கழிவுகளை உரமாகத் தேக்கிவைக்கும் குழி,பள்ளம் ஆகும்       
6. உரப்பெட்டி - உரலில் தானியங்களை அரைக்கும்போது அவை உரலை விட்டுச் சிந்தாமல் இருக்க உரலை மூடும் மூடி       
7. உலைமூடி - சோற்றுப் பானையை மூடப்பயன்படும் மரக்குச்சியால் ஆன முடி       
8. ஊதி(சீட்டி) - சீழ்கை, விசில்       
9. எருதுப்பறை - எருதுகளைக் கட்டி வைக்கும் அறை, தொழுவம்       
10. எறப்பு  - ஓலைக் குடிசைகளில் மேற் கூரையில் பொருட்கள் வைக்கக் குழிபோல் அமைத்த இடம்       
11. ஏர்மாடு - வயல்வெளியை உழுவதற்குப் பயன்படும் மாடு       
12. ஓலைப்பாய் - பனையோலையில் செய்யப்பட்ட பாய்       
13. கங்காணி  - வயல் வேலை செய்யும் பணியாளர்களைக் கண்காணிப்பவர்       
14. கருக்குமட்டை - பனை ஓலைகளைத் தாங்கி நிற்கும் தண்டுப்பகுதி       
15. கழுந்து - உரலில் தானியங்கள் இடிக்கப் பயன்படுத்தும் சிறிய அளவிலான உலக்கை       
16. காவோலை - பனைமரத்தின் காய்ந்த ஓலை       
17. கிண்ணிப்பெட்டி - பனை ஓலையால் செய்யப்பட்ட சிறிய கிண்ணம் போன்றது       
18. குடைவண்டி - மாடுகள் மிரண்டு மாட்டுவண்டி குடைசாய்தல்       
19. கூறுவடி - அறுவடை செய்யும் ஆட்களைத் தலைமையேற்று நடத்துபவர்       
20. கெண்டி - சிறு குழந்தைகள் பால்,நீர் அருந்தப் பயன்படுத்துவது       
21. கைவண்டி - மனிதர்கள் இழுக்கும் சுமை வண்டி       
22. கொங்கணி - விவசாயிகள் மழையில் நனையாமல் இருக்கத் தலையில் போட்டுக் கொள்வது       
23. கொத்து - நெல் அறுவடை வேலை செய்தவர்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்படும் நெல்மணிகள்       
24. கோஸ்பெட்டி - வில் வண்டி ஓட்டுநர் அமரும் இடம்       
25. சக்கடா வண்டி - பொருட்களைச் சுமக்க பயன்படும் மாட்டு வண்டி       
26. சரப்பள்ளி - கழுத்தில் அணியும் அணிகலன்(நெக்லஸ்)       
27. சருவச்சட்டி - நீர் பிடித்து வைக்கப் பயன்படும் பாத்திரம்       
28. சால் ஓட்டுவது -  உழுது நீர் பாய்ச்சிய வயல் வெளியை சமன்படுத்துவது       
29. சிப்பல் தட்டு - சோற்றை வடிக்கச் சிறிய ஓட்டைகள் அடங்கிய மூடி       
30. சில்லாட்டை - பனைமர பாளையின் மேல் சுற்றியிருக்கும் தண்டுப்பகுதி       
31. சினுக்குவாலி - பெண்கள் தலை முடியில் சிக்கெடுப்பதற்கு பயன்படுத்தும் கம்பி       
32. சும்மாடு - தலையில் பாரம் சுமப்பவர்கள் துணியை சுற்றி தலை மேல் வைப்பதைக் குறிக்கும்       
33. சுளவு - தானியங்களைப் புடைக்க பனையோலையால் செய்யப்பட்ட பொருள்       
34. செரட்டாப்பை/செரட்டகப்பை - தேங்காய் முடியால் செய்யப்பட்ட கரண்டி       
35. தலைப்பாக்கட்டு - துண்டு போன்ற துணியைத் தலைப்பாகையாக கட்டுவது       
36. தார்க்கம்பு - மாட்டை அடிக்கப் பயன்படுத்தும் சாட்டைக் கம்பு       
37. தார்பாய்ச்சி கட்டுவது - விவசாய வேலை செய்யும்போது வேட்டி அவிழ்ந்துவிடாமல் இருக்கக் கால்களுக்கு இடையே கொண்டு போய் முதுகுப்பக்கம் சொருகிக் கொள்வது       
38. திருவல் - தானியங்களை திரிக்கப் பயன்படும் கல்லால் ஆன பொருள்       
39. தீயிடுக்கி - விறகு அடுப்பில் விறகு எரியும்போது அதை ஒழுங்கு படுத்த பயன்படும் பொருள்       
40. துவையல் - கெட்டி சட்னி       
41. தேங்காய்ச்சில்லு- பாதி தேங்காயில் பாதியாக வெட்டிய தேங்காய் பத்தை       
42. தோண்டி - சிறு குழந்தைகள் நீர் பிடிக்கப் பயன்படுத்தும் சிறிய குடங்கள்       
43. நார்க்கட்டில் - பனைஓலை  மட்டையை உரித்து எடுக்கும் நாரில் இருந்து செய்யப்படும் கட்டில்       
44. நார்ப்பெட்டி-  பனைநாரில் செய்த சிறிய பெட்டி       
45. நெத்து - உளுந்து அறுவடைக்குத் தயாராக இருப்பதைக் குறிப்பது       
46. நொங்கு - நுங்கு       
47. நோக்கா - வண்டியுடன் மாடுகளை இணைக்கும் தடித்த மரக்கட்டை       
48. பப்பாங்கி - வாகனங்களின் ஒலிப்பான்(ஏர் ஹார்ன்)       
49. பயித்தங்கா - உளுந்து செடியில் உளுந்து காயாக இருப்பதைக் குறிப்பது       
50. பன்னருவா - நெற்கதிரை அறுவடை செய்யப் பயன்படும் அரிவாள்       
51. பாம்படம் - வயோதிக பெண்களின் காதணிகள்       
52. பாளையருவா - பனைமரத்தின் பாளையை சீவப் பயன்படுத்தும் அரிவாள்       
53. பிரிமனை - சாதம்,குழம்பு செய்த பாத்திரங்கள் தரையில் விழாமல் இருக்க அடியில் வைக்கப்படும் பொருள்       
54. பைதா வண்டி- மாட்டு வண்டிகளில் மரச்சக்கரங்களுக்கு பதிலாக லாரி டயர்கள் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும்       
55. பைனி - பதநீர்       
56. பொட்டணம் - பொட்டலம், பார்சல்       
57. பொட்டிக்கடை - சிறு கடைகள்       
58. பொறவாசல் - வீட்டின் பின்புற வாசல்       
59. மம்பட்டி - மண்வெட்டி       
60. மறுகால் பாயுது - குளத்திலுள்ள நீர் கால்வாய்க்கும் போவதைக் குறிப்பது       
61. முளவாட்டி - வீடுகளில் சமையல் பொருட்களை வைக்கப் பயன்படுத்தும் பெட்டி       
62. மூக்கனாங் கயிறு - மாடுகளின் மூக்கில் ஊணைத்து கட்டப்பட்டிருக்கும் கயிறு    சரடு என்றும் கூறுவர்   
63. லோட்டா - தண்ணீர்,காபி போன்ற பானங்கள் அருந்தப் பயன்படும் டம்ளர்       
64. வட்டல் - சாப்பிடப் பயன்படும் தட்டு       
65. வண்டிப் பைதா - வண்டி சக்கரங்கள்       
66. வண்ணான் தாழி - சலவைத் தொழிலாளிகள் துணிகளை நனைத்து வைக்கும் மண்பாண்டம்       
67. வயக்காடு - வயல் வெளியைக் குறிப்பது       
68. வில்வண்டி - பயணம் செய்ய பயன்படும் மாட்டுவண்டி       
69. வெங்கல உருளி - சமையலுக்குப் பயன்படுத்தும் வெண்கலத்தால் ஆன பாத்திரம்       
70. வெஞ்சனம் - குழம்பு        

 _______________________________________________

ஆமோஸ் நவீன் இளையராஜா
 _______________________________________________

1 comment: