-- தேமொழி
வைதீக இந்து சமயமும், அதன் உட்பிரிவுகளும் எண்ணிலடங்கா புராணங்கள் என்ற தொன்மப்புனைவுகளின் பிறப்பிடம். தொன்மப் புனைவுகளின் நோக்கம் சமயப்பற்றை, இறைநம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கற்பனையுடன் இணைத்து, அவற்றில் சில நன்னெறிகளைக் கலந்து மக்களுக்குக் கதைவடிவில் கொடுப்பது. வெறும் கருத்துகளாகப் படிப்பதைவிட கதைகள் வடிவில் கொடுக்கப்படும் கருத்துகள் மக்கள் நினைவில் தங்கும்.
எடுத்துக்காட்டாக, ஒற்றுமையாய் வாழவேண்டும் என்பதை வலியுறுத்த வேடனின் வலையில் அகப்பட்ட பறவைகள் அனைத்தும் ஒன்றாகப் பறந்து தப்பிவிடுவது, பிரிந்திருந்த காளைகள் சிங்கத்தை எதிர்கொள்ள ஒற்றுமையாக அதனை எதிர்ப்பது, வெற்றி உறுதி என நினைத்துத் தூங்கி ஓய்வெடுத்த முயலை, மிக மெதுவாக ஊர்ந்தே வெற்றி கண்ட ஆமையின் கதை எனச் சிறுவயதிலிருந்து பலகதைகள் நன்னெறிக் கதைகளாகப் படித்துள்ளோம்.
சமயம் அடிப்படையில் உள்ள கதைகளும் நன்னெறிகளை நுழைத்துச் சொல்லும் வகையில் அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாகத் தந்தை சொல் மீறாத இராமன் அரசபதவியை விட்டு காட்டுக்குச் சென்றது, எத்தகைய இடர் ஏற்பட்டாலும் உண்மையையே பேசிய அரிச்சந்திரன், ஏழை நண்பன் குசேலன் தன்னைக் காணவந்த பொழுது பேதம் பாராமல் நட்புப் பாராட்டி, நண்பன் கொண்டு வந்த அவலை விருப்பத்துடன் ஏற்று உண்ட கண்ணன், தனக்கு வாழ்வளித்த காரணத்திற்காக தன் சகோதரர்களையும் எதிர்த்துப் போரிட்டக் கர்ணன் என்ற கதைகளும் காட்ட விரும்பியது அது போன்ற நன்னெறிகளே.
இருப்பினும் காலப்போக்கில் தங்கள் நோக்கங்களை மக்களின் மனதில் திணிக்கும் நோக்கில் மனிதநேயத்திற்குப் புறம்பான கதைகளும் புராணங்களில் இடம்பெறத் துவங்கின. இவை இக்கால மறுவாசிப்பில், உள்நோக்கத்துடன் சமூகத்தில் ஒரு சிலரை ஒடுக்கும் நோக்கில் புனையப்பட்டவை என்று அறியும் பொழுது, இன்றைய சூழல் அவற்றை ஏற்க மறுக்கும் மனப்பான்மையையும் தோற்றுவித்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, வர்ணாசிரமக் கொள்கைகளை வலியுறுத்தும் நோக்கில், துரோணரை மானசீகக் குருவாக மனதில் ஏற்றுக் கொண்டு, சத்திரியர்கள் மட்டும் கற்க வேண்டிய வில்வித்தையைத் தானே தன்முயற்சியில் கற்று அதில் சிறந்து விளங்கிய ஏகலைவனின் கட்டைவிரலை காணிக்கையாகக் கேட்ட துரோணரின் செய்கை, கற்பைச் சோதனை செய்யும் நோக்கில் சீதை தீக்குளிக்க வேண்டிய கட்டாயத்தைக் காட்டும் கதை, குலநெறிகளுக்குப் புறம்பாகத் தவம் செய்த காரணத்திற்காக இராமனால் கொல்லப்பட்ட சம்பூகன் போன்ற கதைகள் கூறப்பட்டதன் நோக்கம் இக்கால வாசிப்பாளர்களுக்கு அதிர்ச்சியைத் தரும்.
தலபுராணங்கள்:
இவ்வாறே, புராணங்களின் வரிசையில் திருத்தலங்களின் பெருமை கூறும் தலபுராணங்கள் எனப்படும் தொன்மப்புனைகதைகள் ஒவ்வொரு கோயில்களுக்கும் உண்டு. இது கோயிலொழுகு, அதாவது கோயிலின் தொன்ம வரலாறு கூறுதல் என அறியப்படும். கோயிலொழுகுகள் கொண்ட தொன்மப்புனைவுகளில் ஊரின் வரலாறும் கலந்து இயற்றப்படுவதன் நோக்கம் கோயில்களின் பழம்பெருமையினையும் வரலாற்றுச் சிறப்பினையும் மக்களுக்கு விளக்குவதற்காக எடுக்கப்படும் ஒரு முயற்சி. இக்கதைகளில் வரலாற்றுக் குறிப்புகளுடன் இயற்கையில் நிகழ இயலாத நிகழ்வுகளும் பிணைந்திருப்பது வழக்கம்.
தேவாரப்பாடல்களில் பாடப்படும் பாடல்பெற்ற தலங்கள் என்ற முறையை ஒட்டி பிற்காலத்தில் எழுதப்பட்டவை திருத்தலபுராணங்கள். எழுதப்படும் பாடல்கள் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன், இறைவி ஆகியோரின் அருட்செயல்கள், அடியார்களை ஆட்கொண்ட முறை, தேவர்கள் மற்றும் முனிவர்களுக்குக் கருணையுடன் துயர் தீர்த்த செய்கைகள் அதற்கு உதவிய கோயிலின் குளம், மரம், விலங்கு ஆகிய சிறப்புக்களை எடுத்தியம்பும். மனிதர்கள் மட்டுமன்றி விலங்கினங்களையும் கடவுள் உய்வித்த கதைகளும் பல உள்ளன. மேலும் இந்திய அளவிலான இதிகாச புராணக்கதைகளின் சிற்சில பகுதிகள் குறிப்பிட்ட ஊர்களில் நிகழ்ந்ததாகவும் காட்டப்படும். எடுத்துக்காட்டாகப் பாண்டவர்கள் வனவாசம் இருந்த பகுதி, சீதையைத் தேடி இராமன் சென்ற வழியில் உள்ள இடங்கள் என இந்துமதக் கதைகள் இந்தியமண்ணில் பல பகுதிகளுடன் தொடர்பு காட்டி இணைக்கப்படும். வசிட்டரும், அகத்தியரும், விசுவாமித்திரரும் பல கால எல்லைகளையும் கடந்து இந்தியாவின் பல பகுதிகளில் பயணித்திருப்பதும் வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கும். இத்தகைய தலவரலாறு கூறும் செய்திகளை, ஐதீகங்களை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூசை, விழாக்கள், விரதங்கள், சாங்கியங்கள், சடங்குகள் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன.
கோயிலொழுகு இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பொது ஆண்டு பன்னிரண்டாம் நூற்றாண்டு காலகட்டத்திற்குப் பிறகு எனக் கருதப்படுகிறது. தமிழில் பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடற்புராணம் இவ்வரிசையில் முதலாவது எனப்படுகிறது. இடையே தலபுராணங்களின் வளர்ச்சி சற்றே தொய்வடைந்தாலும், விஜயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சியில் தமிழகத்தில் மீண்டும் அவை வளர்ச்சியடைந்தன. நாட்டுப் படலம், நகரப் படலம் போன்றவற்றை உள்ளடக்கி இலக்கியச் சுவையுடன், குறிப்பிட்ட ஊரின் இயற்கையழகு பற்றியும், நிலவளம் பற்றியும், மக்களின் வாழ்க்கை பற்றியும் சிறப்பித்து மிகச் சிறந்த புலவர்களால் பாடப்பட்ட தலபுராணங்கள் அவ்வூர் மக்களைக் கவர்ந்தன, பெருமை கொள்ளச் செய்தன.
டாக்டர். உ.வே.சாமிநாதையரின் ஆசிரியரும், 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவருமான திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் (1815-1876) திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தலபுராணங்கள் பாடினார். தங்கள் ஊர்களின் கோயில்களுக்கு இவரால் திருத்தல வரலாறு பாடப்பெறுவதை அவ்வூர் மக்கள் பெருமையாகக் கருதியதாகவும் தெரிகிறது. "தமிழ் மரபு அறக்கட்டளை" நிறுவனம் தமிழக கோயில்களின் தலபுராணங்களை திரட்டும் திட்டத்தின் கீழ் பல திருத்தலபுராணங்களை (http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-09-27-01-35-50) சேகரித்துள்ளது.
வரலாறும் புனைவும் கலப்பதால் இந்த இலக்கியங்களில் பொதுவாக வழக்கில் உள்ள பல கதைகளின் சாயல்கள் அமைந்துவிடும். அத்துடன் காலக்கோட்டில் அக்கறை செலுத்தாமல் புனையப்பட்ட வரலாறுகள் வரலாற்றுக் குழப்பத்தையும் உருவாக்கும். கதைகளைப் பிணைத்து ஒன்றின் மீது ஒன்று ஏற்றி கால எல்லைகளைப் பற்றிக் கவலை கொள்ளாது திருத்தல வரலாறுகள் புனையப்பட்டதற்கு ஓர் எடுத்துக்காட்டாக கோழியூர் என்னும் உறையூர் குறித்த தலவரலாற்றுக் கதைகளை அடுத்து நாம் காணுவோம்.
பீடார் உறந்தை என்ற கோழியூரின் தலவரலாற்றுக் கதைகள்:
சோழநாட்டின் மிகப்பழமையான தலைநகர் உறந்தை என்றழைக்கப்பட்ட உறையூர். சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய, கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றியப் பட்டினப்பாலை என்ற நூலில்,
"குளம் தொட்டு வளம் பெருக்கி
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி
கோயிலொடு குடி நிறீஇ
வாயிலொடு புழை அமைத்து" ( பட்டினப்பாலை: 284-287)
எனக் கரிகாலன் காலத்திலேயே உறந்தை புதுப்பிக்கப் பட்டதாகப் பட்டினப்பாலை கூறுகிறது.
உறையூருக்குக் கோழி அல்லது கோழியூர் என்ற பெயரும் உண்டு. உறைந்தை, குக்கிடபுரி, வாரணபுரி, வாரணம், உரபுரம், திருமுக்கீசுரம், நிகளாபுரி என்று மேலும் பல பெயர்களும் உறையூருக்கு உண்டு. சேவல் ஒன்று யானையைத் தனது கால் நகங்களினாலும் அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடுமாறு துரத்தி வெற்றிகொண்டதால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படும். இக்கதையை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.
"காவுந்தி யையையுந் தேவியுங் கணவனும்
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்"(246-248)
(சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/10. நாடுகாண் காதை)
என்ற வரிகளில், தவத்தானே மிக்க சிறப்பினையுடைய கவுந்தியடிகளும் கண்ணகியும் கோவலனும், முறம் போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின்கண் விரும்பிப் புக்கார் என இளங்கோவடிகள் கோழியூர் கதையையும் குறிப்பிடுகிறார்.
உறையூரில் வாழ்ந்தவர்களாகப் பல சங்ககாலப் புலவர்களையும் அவர்கள் பெயரில் இருந்து நாம் அடையாளம் காணலாம். ஏணிச்சேரி முடமோசியார், கதுவாய்ச் சாத்தனார், சல்லியங்குமரனார், சிறுகந்தனார், பல்காயனார், மருத்துவன் தாமோதரனார், முதுகண்ணன் சாத்தனார் போன்ற புலவர்கள் பெயருடன் உறையூர் இணைந்தே வரும்.
சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் காலத்தே, சோழர்களுக்கு உறந்தை, பூம்புகார் என இரண்டு தலைநகர்கள் இருந்தன. அவற்றில் ஒன்றான உறந்தை என்னும் உறையூர், பண்டையச் சிறப்பு நலிவுற்று இக்காலத்தில் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகிப்போனது.
"மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்"(3-4)
(சிலப்பதிகாரம்/புகார்க் காண்டம்/8. வேனிற் காதை) எனச் சோழர் தலைநகராகப் புகாரும், உறந்தையும் இருந்தது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. மேலும்,
"............... பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்,
கோழி யோனே, கோப்பெருஞ் சோழன்"
(புறநானூறு - 212 பாடல்)
பாணரின் சுற்றத்திற்கு வழங்கி உதவுபவனாக இருக்கின்ற கோழியூரின் கோப்பெருஞ்சோழன் எனப் பிசிராந்தையார் பாடும் பாடலை புறநானூறு காட்டுகிறது.
கொல்லி காவலன் கூடல் நாயகன்
கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ் மாலை வல்லவர்
தொண்டர் தொண்டர்க ளாவரே
(பெருமாள் திருமொழி 2ம் பத்து 10 ஆம் பாடல்)
என்ற பெருமாள் திருமொழி பாடல் கோழியின் மன்னவன் குலசேகரன் என்ற செய்தியைக் கூறுகிறது.
இனி கோழியூரின் திருத்தலவரலாறு என்று "108 - வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு" என்ற நூல் காட்டும் பகுதியைக் காணலாம்.
உறையூர் என்னும் திருக்கோழி:
" கோழியும் கடலும் கோயில் கொண்ட
கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியும் தோழுமோர் நான்குடையர்
பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ண மென்னில்
மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா" (1762)
(பெரிய திருமொழி 9-2-5)
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார், திருநாகையில் (நாகபட்டினம்) உள்ள சுந்தர்ராஜப் பெருமாளின் பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.
வரலாறு:
(தலவரலாறு கூறும் இப்பகுதி, நூலில் உள்ளவாறே எழுத்து மாறாமல் இங்குக் கொடுக்கப்படுகிறது - [1])
........ உறையூரில் தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த நந்தசோழன் என்னும் மன்னன் மிகச் சிறந்த பக்திமானாக அரங்கனுக்குத் தொண்டு செய்வதில் பேரவா கொண்டவனாயிருந்தான். புத்திரப்பேறில்லாத பெரும் கவலை மட்டும் அவன் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கவே இதற்கும் ஸ்ரீரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான். பக்தனுக்கருளும் பரந்தாமன் வைகுண்டத்தில் இலட்சுமி தேவியைக் கடைக்கண்ணால் நோக்கி நந்தசோழனுக்கு புத்திரியாகுமாறு அருள, உறையூரில் தாமரை ஓடையில் தாமரைப் பூவில் குழந்தையாக அவதரிக்க வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அம்மகவைக்கண்டெடுத்தான். கமல மலரில் கண்டெடுத்தமையால் கமலவல்லி என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வர, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கமலவல்லி திருமணப் பருவம் எய்தினாள்.
ஒருநாள் ஸ்ரீரெங்கநாதன் குதிரை மீதேறி பலாச வனத்தில் வேட்டைக்கு வந்ததுபோல் உலாவர, தோழிமாருடன் அப்பக்கம் வந்த கமலவல்லி, எம்பெருமான் பேரழகைக்கண்டு யார் இவர் என வியந்தனள். தன் பேரழகை முழுவதும் எம்பெருமான் கமலவல்லிக்கு காட்டிமறைய, காதல் மோகத்தில் பக்தி வெள்ளத்தில் கலக்கலானாள் கமலவல்லி. மகளின் நிலைகண்டு என்னசெய்வதென்று தெரியாது மன்னன் திகைத்து சிந்தனையில் மூழ்கியிருக்க, அவன் கனவில் வந்த பெருமான் குழந்தைப் பேறில்லா நின் குறை தீர்க்கவே யாம் திருமகளை அனுப்பினோம். என் சன்னதிக்கு அழைத்துக் கொண்டுவா, ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்ல, மிகவியந்து மகளைப் பலவாறாய் துதித்துப் போற்றி நகரை அலங்கரித்து கமலவல்லியைத் திருமணக்கோலத்தில் ஸ்ரீரங்கம் அழைத்துவர, கோவிலினுள் நுழைந்ததும் கமலவல்லி மண்ணில்புக்கு மறைந்து அரங்கனோடு இரண்டறக் கலந்தாள். சேனை பரிவாரங்களுடன் இந்தக் காட்சியைக் கண்ட மன்னன் தான் பெற்ற பெரும் பேற்றை எண்ணி வியந்து ஸ்ரீரங்கத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்து உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக மாபெரும் கோவில் எழுப்பினான். ஸ்ரீரங்கநாதனே அழகொழுகும் மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால் அழகிய மணவாளன் ஆனார் (இவரே மீண்டும் ஒரு முறை வயலாளி மணவாளன் ஆவார். அதனைத் திருவாலி திருநகரி ஸ்தல வரலாற்றில் காணலாம்).
இந்நிகழ்ச்சி நடைபெற்றது துவாபரயுகத்தின் முடிவிலென்பர். கலியுகத்தில் ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டனம் முழுகிப்போக அதன்பின் சோழ மன்னர்கள் கங்கை கொண்டானைத் தலைநகர் ஆக்கி ஆண்டுவருங்காலை இந்த உறையூரில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவிலைத்தான் இப்போது நாம் காண்கிறோம். இவன் இக் கோவிலில் அழகிய மணவாளனையும் (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) கமல வல்லியையும் பிரதிட்டை செய்தான். இம்மன்னனின் பெயர் இன்னதென்றறியுமாறில்லை. ........
'இம்மன்னனின் பெயர் இன்னதென்றறியுமாறில்லை' என்று சொல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை, கற்பனைக் கதைகளை வரலாற்றுடன் ஒப்பிட்டு சான்று காண முயலும் பொழுது ஏற்படும் துயரன்றி வேறில்லை. துவாபரயுகத்தின் முடிவில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி என்றால், கமலவல்லியின் தந்தையான உறையூர் நந்தசோழன் பற்றிய குறிப்புகள் சங்கப்பாடல்களில் ஏன் இடம்பெறவில்லை என ஓரிருவருக்கு ஐயம் வந்தால் கூட போதுமானது. ஸ்ரீரெங்கநாதன் குதிரை மீதேறி வந்தார் என்பதில் இருந்து, தற்கால குதிரை என்ற விலங்கை மக்கள் அறிந்திருந்ததாகக் காட்டப்படும் நந்தசோழனின் காலத்தை, இந்தியாவில் குதிரைகள் இருந்திராத காலமான சிந்து சமவெளி நாகரிக காலத்திற்கும் பிற்பட்ட காலத்திற்குத் தள்ளலாம். அதாவது இந்த நிகழ்ச்சியை பொது ஆண்டுக்கு முன் கி.மு. 3,000 ஆண்டுகள் காலகட்டத்திற்குப் பின்னர் என நாம் கொள்ள வேண்டும். சிந்து சமவெளி நாகரிக காலம் என்பது இந்தியாவில் குதிரைகள் அற்ற காலம் என அறியப்படுகிறது, சிந்துசமவெளி அகழகாய்விலும் குதிரை இருந்ததற்கான தடயங்கள் இன்றுவரை கிடைத்ததில்லை. அப்படி என்றால், கி.மு. 3000 க்குப் பின்னர் என்பதுதான் துவாபரயுகமா?
மேலும், துவாபரயுகத்தின் முடிவில் உறையூரில் நடைபெற்ற நிகழ்வாகக் கூறப்படும் இதே கதை, திருவாலி திருநகரி வயலாளி மணவாளன் என மற்றொரு கதையிலும் காட்டப் படுவதாகவும் தெரிகிறது. மேலும் குழந்தையற்றவர் ஒருவர், மாலவனின் அருளலால் அவருக்கு மகளாகத் திருமகள் பிறக்கிறார், திருமாலை அவள் மணக்க விரும்புவது, திருவரங்கத்திற்கு அவளை அழைத்துவரச் சொல்லி மணமுடிக்கத் திருமால் வேண்டிக் கொள்வது, திருவரங்கக் கோவிலில் மணமகள் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்துவிடல் என்பது போன்ற நிகழ்வுகள் தவறாமல் அனைவருக்கும் பெரியாழ்வார் அவர் மகள் ஆண்டாள் கதையையும் நினைவூட்டும். ஒத்த சாயல் கொண்ட கதைகள் திருத்தல தொன்மப் புனைவுகளில் இருப்பதற்கு இத்தலவரலாறு சான்றாக அமைகிறது.
மேலும் சில உறையூர் தலவரலாற்றுக் கதைகள்:
இளவரசி கமலவல்லி, அவளது தந்தையாகிய உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னன் நந்தசோழன், அவரது மாப்பிள்ளை திருவரங்கம் அழகிய மணவாளன் குறித்த தலபுராணக் கதையுடன் மேலும் சில உறையூர்க் கதைகளும் உள்ளன.
சிபிச் சக்கரவர்த்தி இந்த உறையூரிலிருந்து ஆட்சி புரிந்ததாகவும் கூறப்படுவதுண்டு. மற்றொரு கதையில், சோழன் இளஞ்சேட்சென்னி உறையூர் மன்னனாக இருந்த பொழுது, இறைவனின் பூஜைக்கு வைத்திருந்த மலர்களை அரசி தலையில் சூடிக்கொண்டதால் இறைவன் சினந்து இந்த ஊரை அழித்துவிட்டதாகவும், இறைவன் சினத்தால் நெருப்பு மாரி பெய்து உறையூர் அழிந்ததாக மற்றுமொரு தலவரலாறுமுண்டு. பலவகையில் கூறப்படும் இக்கதையில் மலைக்கோட்டை இறைவன் தாயுமானவரான சிவனும், சில சமயம் உறையூர் வெக்காளி அம்மனும் வருவதுண்டு. உறையூரில் நெருப்புமழைக்குப் பதிலாக மண்மழை பொழிந்ததாகவும் கதையுண்டு. மண்மழை கதை பல வேறுபாடுகளுடன் கூறப்படுகிறது.
இக்கதைகளில் ஒன்றில், நாகலோகத்திலிருந்த செவ்வந்தி மலர்ச்செடி ஒன்று சாரமா முனிவரால் உறையூருக்குக் கொணரப்பட்டு இறைவனுக்காகப் பராமரிக்கப்படும் அவரது பூந்தோட்டத்தில் வளர்கிறது. பூவணிகம் செய்யும் பிராந்தகன் என்பவன் இறைவன் பூசைக்காக உள்ள அம்மலர்களைத் திருடுவதைத் தொழிலாகக் கொள்கிறான். அவற்றை அரசியாருக்குக் காணிக்கையாகக் கொடுத்து அவரது நன்மதிப்பைப் பெறுகிறான். மலர்கள் மறைவதன் உண்மைப் பின்புலம் அறிந்த முனிவர் உறையூரை ஆட்சி செய்யும் பராந்தகச் சோழ மன்னனிடம் முறையிடுகிறார் (வன்பராந்தகன் என்றும் இந்த மன்னனின் பெயர் குறிப்பிடப்படுகிறது, அத்துடன் இளஞ்சேட்சென்னி என்று கூறப்பட்டவரும் இக்கதையில் பராந்தகனாக மாறிவிட்டார்). மன்னன் முனிவரது குறைக்குச் செவிசாய்க்கவில்லை. உள்ளம் நொந்து இறைவனிடம் முறையிடுகிறார் முனிவர். தனது அடியாரை நோகவைத்த மன்னனின் மேல் சினம் கொண்ட திருசிரமலை சிவன், அமர்ந்திருந்த கிழக்கு நிலையில் இருந்து மேற்கில் உள்ள உறையூரை நோக்கித் திரும்பியமர்ந்து உறையூரில் மண்மழை பொழியச் செய்கிறார். அரசன் உறையூருடன் அழிகின்றான்.
கருவுற்றிருந்த அரசி புவனமாதேவி காவிரியில் தற்கொலை செய்யக் குதிக்கின்றாள். ஆனால், பார்ப்பனர் ஒருவரால் காப்பாற்றப்பட்ட அரசி ஆண் முழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறாள், இக்குழந்தையே சோழர்களில் சிறந்த மன்னனாகக் கருதப்படும் திருமாவளவன் என்னும் கரிகால் சோழன். வீடு வாசலை இழந்த உறையூர் மக்கள், அவர்களை எல்லையம்மனாக காத்து வரும் வெக்காளி அம்மனிடம் தஞ்சம் புகுந்தனர். அம்மன் தாயுமானவரிடம் சினம் தவிர்த்து மக்களிடம் கருணை காட்டும்படியாக வேண்ட, சிவன் சினம் தணித்து மண்மாரியை நிறுத்தினார். வீடின்றி வெட்டவெளியில் துயருற்ற மக்களுக்காக வெக்காளியம்மன், தானும் வானத்தையே கூரையாகக் கொண்டு, கூரையற்ற கோவிலில் குடியிருக்கத் தொடங்கினார் (உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு கூரையில்லாத தலவரலாறு இது).
தங்கள் தவவலிமையால் கல்மழையும், மண்மழையும் பெய்வித்து சமணர்கள் உறையூரை அழித்தார்கள் என்பது ஒரு கதை. உறையூர் அழிந்ததாக வேறுசில இலக்கியக் குறிப்புகளும் உள்ளன. சமணர் தவ வலிமையினால் கல்மழையும் மண்மழையும் பொழியச் செய்து உறையூரை அழித்தார்கள் என தக்காயபரணி கூறுகிறது.
மலைகொண் டெழுகுவார் கடல்கொண் டெழுவார்
மிசைவந்து சிலா வருணஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுவார்
இவறிற் பிறர் யாவர் நிசாசரே(தக்கயாகப்பரணி 70)
இப்பாடலின் பொருளைக் கொண்டு அபிதானசிந்தாமணி ஆசிரியர் உறையூர் மண்மாரி பொழிந்ததில் அழிந்தது என விளக்கம் தருகிறார் எனவும் கருதப்படுகிறது.
பராந்தகச் சோழனின் (கி.பி 907-953) தலைநகரம் உறையூர் என்பது உதயேந்திரச் செப்பேடு அளிக்கும் தகவல். பின்னர் முதலாம் மாறவர்மன் சுந்த பாண்டியன்(கி.பி 1216 – 1235) உறையூரையும் தஞ்சையையும் தீக்கிரையாக்கினான் என்பது திருக்கோயிலூர் கல்வெட்டு தரும் செய்தி.
சங்க காலச் சோழ மன்னர்களுள் காலத்தால் முதற்கண் வைத்துச் சிறப்பிக்கப் பெறுபவனான உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, "உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் தாய்வயிற் றிருந்து தாயம்" எய்திய (பொருநராற்றுப்படை: 130,132) கரிகால் வளவன் பிறப்பு குறித்த கதை, தக்கயாகப்பரணி செய்தி, அபிதானசிந்தாமணி சமணர் மண்மழை குறிப்பு, உதயேந்திரச் செப்பேடு குறிப்பிடும் பராந்தகனின் தலைநகர் உறையூர் என்ற தகவல், தீயால் அழிந்த உறையூர் குறித்த திருக்கோயிலூர் கல்வெட்டு செய்தி இவையாவற்றையும், வரலாறு குறிப்பிடும் வரிசையில் காலக்கோட்டில் கொள்ளாமல் இணைத்தவை உறையூர் கதைகள், அதனுடன் உறையூர் சோழ மன்னனின் மகளின் திருவரங்கத் திருமணக் கதையையும் இணைந்துள்ளவை திருச்சிப் பகுதி ஊர்களின் தலபுராணக் கதைகள்.
இதில் கோழியூரின் தலவரலாறுகளில் ஒன்றான, சிலப்பதிகாரம் காட்டும் யானையைத் துரத்திய கோழியின் கதை மற்றொருவடிவம் பிற்கால சோழ மன்னனான ஆதித்த சோழனுடனும் இணைக்கப்படுகிறது. உறையூரை ஆண்ட ஆதித்த சோழன் தன் பட்டத்து யானையின் மீது வரும்போது, வில்வ மரத்தின் நிழலில் மறைந்து இருந்த சிவன் உறையூரின் மேன்மையை மன்னனுக்கு உணர்த்த விரும்பி, அம் மரத்தின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை நோக்க, அது வெறிகொண்டு கொண்டு பட்டத்து யானையைக் குத்தி வீழ்த்தியது. இச்செயலைக் கண்டு வியந்த ஆதித்த சோழன் உறையூருக்குக் கோழியின் வீரத்தைச் சிறப்பிக்க திருக்கோழி எனப் பெயரிட்டான் என்கிறது இக்கதை. கோழியும் யானையும் போரிடும் கதையைக் கூறும் சிற்பமொன்று உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது. பரகேசரி விசயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் (கி.பி 871 - 907) ஆட்சி புரிந்தது பிற்காலம். ஆனால் கோழி யானை கதை சிலப்பதிகாரத்திலேயே இளங்கோவடிகளால் கூறப்படுகிறது என்பது ஒன்றே தலபுராணக் கதைகள் தொன்மப்புனைவுகளும் வரலாறும் கலந்து இயற்றப்படுவதைக் காட்டும் சான்று.
[1] 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு, பக்கம் 54 - 57: http://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584
[2] திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவர், சக்தி விகடன் - 26.09.2007: http://www.vikatan.com/news/article.php?aid=18882
படம் உதவி:
http://www.shivatemples.com/sofc/sc005.php
(http://4.bp.blogspot.com/-JUKuFxAD-Q0/UpItWGwUl2I/AAAAAAAAAH4/XeGCP__iMt4/s320/2.jpg)
______________________________________________________________________
தேமொழி
themozhi@yahoo.com
themozhi@yahoo.com
No comments:
Post a Comment