Showing posts with label து. சுந்தரம். Show all posts
Showing posts with label து. சுந்தரம். Show all posts

Friday, July 20, 2018

கரூர் அரவக்குறிச்சியில் ஸ்ரீபுராணக் கருத்தை வெளிப்படுத்தும் அரிய சமணச் சிற்பம் கண்டுபிடிப்பு

—  துரை. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை:
அண்மையில், அரவக்குறிச்சியைச் சேர்ந்த சுகுமார் பூமாலை என்னும் வரலாற்று ஆர்வலர் தம்முடைய ஊர்ப்பகுதியில் சமணர் குகைத்தளம், சமணச் சிற்பம் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளார். செய்தியைக் கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை.சுந்தரம் அவர்களுக்குத் தெரிவித்தார். சுகுமார் பூமாலையோடு சேர்ந்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் துரை. சுந்தரம் ஆய்வு செய்ததில் அறியப்பட்ட செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.

சமணக்குன்றும் முருகன் கோயிலும்:
அரவக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் கணக்குவேலம்பட்டி. இவ்வூரில் மொட்டையாண்டவர் திருக்கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு சிறிய கரட்டுக் குன்று இருக்குமிடம் ஆகும். குன்று நோக்கியுள்ள சிறிய ஏற்றப்பாதையில் மேலே செல்லுமுன் சமதளத்திலேயே  மிகப்பெரியதொரு பாறை காணப்படுகிறது. மதுரை-ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலில் அமைந்துள்ள பாறை போலச் சரிந்து பெரிய சுவர் போலத் தோற்றமளிக்கிறது. பாறையில் சற்றேறத்தாழ ஏழு அடி உயரத்துக்கு மூன்று சமணச்சிலைகள் ஒரே இடத்தில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று சிற்பங்களும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றன. நடுவில் ஓர் ஆண் உருவமும், அதன் இரு பக்கங்களிலும் இரு பெண் உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. நடுவில் ஆணும், பக்கங்களில் இரு பெண்களும் காணப்படுவதால், சமண வரலாறு அறியாத கிராமத்து மக்கள், இந்தச் சிற்பத் தொகுதியை முருகன், வள்ளி, தேவயானை ஆகிய கடவுள்களாகக் கருதி முருகன் கோயில் எனப் பெயரிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்

சமணச் சிற்பங்கள்:
சிற்பங்களை ஆய்வு செய்ததில், இச்சிற்பங்கள் சமணச் சிற்பங்கள் என்பது புலப்பட்டது. நடுவில் இருக்கும் ஆண் சிற்பத்தின் தலைக்கு மேல் சமணத்துக்கே உரிய முக்குடை அமைப்புக் காணப்படுகிறது. சமணத் தீர்த்தங்கரர் சிலைகளில் இது போன்ற முக்குடை அமைப்பைக் காணலாம். இங்கு, சிற்பத்தில் ஆடை அணியாத சமணத்துறவியின் நின்ற கோலமும், அவரின் தலைக்குமேல் காணப்படும் முக்குடை அமைப்பும் இச் சிற்பம் ஒரு சமணத் தீர்த்தங்கரரின் சிற்பம் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சிற்பங்களில் இருப்போர் யார்?
1) பாகுபலியும் அவரின் சகோதரிகள் இருவரும்:
சமணத் தீர்த்தங்கரரின் இரு பக்கங்களிலும் இரு பெண்ணுருவங்கள் உள்ளன. சமணத்தில் இரு பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் ஆதி நாதர் என்னும் ரிஷபதேவர் ஆவார். இவர் ஒரு அரசர். இவருக்கு மக்கள் இரு மகன்களும், இரு மகள்களும். பாகுபலி மூத்த மகன்; பரதன் இளைய மகன். பிராமி, சுந்தரி இருவரும் மகள்கள். ஆட்சியை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு ரிஷபதேவர் துறவறம் மேற்கொள்கிறார். சக்கரவர்த்தியாகும் எண்ணத்தில் பரதன், பல நாட்டு அரசர்களை வெல்கிறார் உடன்பிறந்த பாகுபலியையும் கொல்ல நினைக்கிறார். மனம் வெறுத்த பாகுபலி, தன் பங்குக்கான ஆட்சிப்பரப்பையும் உடன்பிறந்தானுக்குக் கொடுத்துவிட்டுக் காட்டுக்கு ஏகித் தவத்தில் ஈடுபடுகிறார். சகோதரிகள் பிராமி, சுந்தரி ஆகிய இருவரும், தவத்தைக் கைவிடுமாறு பாகுபலியை   வேண்டிக்கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, நடுவில் பாகுபலியும், அவரது பக்கங்களில் அவரது சகோதரிகளும் நின்றுகொண்டிருப்பது போன்ற தோற்றத்தில், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் சமணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இராஜஸ்தானில் ஜோத்பூர், கருநாடகத்தில் அய்ஹொளெ, எலோராக் குடைவரை, பாதாமிக் குடைவரை, தமிழகக் கழுகுமலை ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம்.

மேற்குறித்த சமணச் சிற்பங்களின் தோற்ற அமைப்பை ஒப்புநோக்கிப் பார்க்கையில், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச்சிற்பத்தின் நடுவில் இருப்பவர் பாகுபலி என்னும் சமணத்துறவி என்பதாகவும், அவருக்கு இரு பக்கங்களிலும் நிற்கும் பெண் சிற்பங்கள் பாகுபலியின் சகோதரிகளான பிராமி, சுந்தரி ஆகியோர் என்பதாகவும் கருத நேர்கிறது.

சிற்பங்களில் இருப்போர் யார்?
2) ரிஷபதேவரும் அவரின் மகள்கள் இருவரும்:
ஆதிநாதர் என்னும் ரிஷபதேவர், சமணத்தில் முதலாம் தீர்த்தங்கரர் எனப்பார்த்தோம். தீர்த்தங்கரர் என்னும் உயர்நிலை பெற்ற இருபத்து நான்கு பேரின் சிற்ப,ஓவிய உருவங்களுக்கு அடையாளமாக அவர்களின் தலைக்கு மேல் முக்குடை அமைப்புக் காணப்படும். பார்சுவ நாதருக்கு மட்டும் முக்குடையும் அதன்கீழே அவரைக் காக்கின்ற நாகமும் தலைமேல் காட்டப்பட்டிருக்கும். பாகுபலி தம் தந்தையாகிய ரிஷபதேவரைப் பின்பற்றித் துறவறம் பூண்டு தனிப்பெரும் சிறப்பைச் சமணத்தில் பெற்றிருப்பதால் அவருக்கு ஒரு குடை காட்டப்படுவதுண்டு. ஆனால், அவர் தீர்த்தங்கரர் அல்லர் என்னும் காரணத்தால் அவருக்கு முக்குடை இராது. பாகுபலியின் நீண்ட தவம் காரணமாக அவர் உடலைச் சுற்றிக் கொடிகள் படர்ந்தமையால், பாகுபலியின் சிற்ப உருவங்களில் ஆடையற்ற அவரது உடலைச் சுற்றிக் கொடிகள் தோன்றுமாறு சிற்ப வேலைப்பாடு  காணப்படும். இந்த அமைப்பு, மாறா அமைப்பு. எனவே, அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம், முக்குடையோடு இருப்பதாலும், சிற்பத்தின் உடலில் சுற்றிய கொடிகள் இன்மையாலும் தீர்த்தங்கரரான ரிஷபதேவரே என்று கருத நேர்கிறது. மேலும், ரிஷபதேவர் தம் மகள்களுக்கு எண்ணும் எழுத்துமாகிய கல்வியைப் புகட்டியவர் என்று ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்பெறுகிறது. பெண் கல்வி என்பது சமணர் போற்றும் ஒரு கருத்து. பெண் கல்வியின் மேன்மையையும், அருமையையும் தமிழ்ச் சமணர் போற்றியதன் குறியீடாகவே சமணரான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் காட்டியுள்ள கவுந்தியடிகளைக் கொள்ளலாம். ரிஷபதேவர், தம் மகள்களுக்குக் கல்வி கற்பிக்கையில், பிராமிக்குத் தம் வலக்கையால் எழுத்தையும், இடக்கையால் எண்ணையும் (கணிதத்தையும்) கற்பித்ததாக ஸ்ரீபுராணம் குறிப்பிடுகிறது.

ஸ்ரீபுராணத்திலிருந்து சில வரிகள்
” பகவான் ....................   ஸ்ரீஅஸ்தமிரண்டுனாலும் ஒரு முறையிலேயே எழுத்தினையும் எண்ணையும் அவர்கட்குக் காட்டியருளினர்.
அங்ஙனம் காட்டி அவருள்  பிராம்மியென்னும் பெண்ணிற்கு தக்ஷிண அஸ்தத்தால், ‘சித்தந்நம:’ என்றெடுத்துக் கொள்ளப்பட்ட மங்களத்தையும், ........... அக்ஷரமாலையினையும், சம்யோகாக்ஷரங்களது பிறப்பினையும் உபதேசித்தனர்.
சுந்தரியென்னும் பெண்ணிற்கு வாம அஸ்தத்தினால் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமுதலாக ஒன்றிற்கொன்று பதின்மடங்காகிய கணிதஸ்தானங்களையும். பெருக்குதல், ஈதல் முதலாகிய ஷோடச பரிகர்மங்களையும் உபதேசித்தருளினார். இங்ஙனம் ஸ்வாமி தமது தக்ஷிண அஸ்தத்தினால் எழுத்துக்களை உபதேசித்ததால் எழுத்துக்கள் வலமாக வளர்ந்தன; வாமஹஸ்தத்தினால் எண்களை உபதேசித்தருளியதால் எண்களது ஸ்தானம் இடமாக வளர்ந்தது. ”

தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டன; எழுதப்படுகின்றன. தமிழில் எண்கள் வலமிருந்து இடமாகச் சுட்டப்பட்டன. இன்றும் எண்களின் ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் ஆகிய பகுப்புகளில், வலப்புறம் முதலிடத்தில் ஒன்று, அடுத்து, வலப்புறத்திலிருந்து இடப்புறமாகப் பத்து, நூறு, ஆயிரம் என எண்கள் எழுதப்படுவது ஆராயத்தக்கது. தொல்காப்பியத்திலும், எழுத்து இடமிருந்து வலப்புறமாகவும், எண்கள் வலமிருந்து இடப்புறமாகவும் படிக்கப்படுதலைப் பற்றிய குறிப்பு உள்ளது. அரவக்குறிச்சியின் சமணச் சிற்பத்தில், தீர்த்தங்கரருக்கு வலப்புறம் நிற்கும் (ஒளிப்படத்தைப் பார்க்கும் நம் பார்வையில் அல்ல) பிராமி தன் வலக்கையை எழுதும் பாணியில் உயர்த்தி வைத்துள்ளதையும், இடக்கையை, எழுதப்படுகின்ற ஏட்டினை ஏந்தும் பாணியில் தாழ்த்தி வைத்துள்ளதையும் காணலாம். இதைப் பிராமி என்பவள் எழுத்தைக் கற்றதைக் குறிப்பால் உணர்த்தும் குறியீடாகக் கொள்ளலாம். தீர்த்தங்கரருக்கு இடப்புறம் நிற்கும் சுந்தரியின் சிற்பத்தில், சுந்தரி தன் இடக்கையை உயர்த்தியும், வலக்கையைத் தாழ்த்தியும் வைத்துள்ளதைக் காணலாம்.

பழஞ்சிற்பம்-திருத்துவதற்கு முன்னர் - தோற்றம் 

சிற்பத்தொகுதியில் நடுவில் இருப்பவர் ரிஷபதேவரா? அல்லது பாகுபலியா?
கீழ்க்காணும் தரவுகள் ஆய்வுக்குரியன.
1) ஆண் சிற்பத்தில் முக்குடை காணப்படுகிறது.
2) ஆண் சிற்பத்தில் உடலில் கொடிகள் காணப்படவில்லை.
3) பெண்கள் இருவரின் கைப்பாணி அல்லது முத்திரை, ஆதிநாதர்  எண்ணும் எழுத்தும் கற்பித்த மகள்களாகச் சுந்தரி, பிராமி இருவரைக் குறிப்பதாக உள்ளது.
மேற்காணும் தரவுகள், அரவக்குறிச்சியில் இருக்கும் சமணச் சிற்பம் ஆதிநாதருடையது என்னும் முடிவை நோக்கி நம்மை நகர்த்துகின்றன. இரு வேறு கருதுகோள்களையும் ஆய்வறிஞர்கள் சிலர் இன்னும் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். ஆய்வு என்பது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் முடிந்து போவதல்ல. மீளாய்வுகள் தொடரும் நிலையில், நாம் எட்டிய (அல்லது நாம் எட்டியதாக எண்ணிய ) முடிவுகள் மாறக்கூடும். தமிழகத்தில், ஆதிநாதர், மகள்களான பிராமி, சுந்தரி ஆகியோர்  இணைந்த அரிய சிற்பம் இது ஒன்றே எனக் கருதலாம். இவ்வரிய சமணச் சிற்பம் கொங்குப்பகுதியில் அமைந்துள்ளது என்பது கொங்கு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

சமணக்குன்று -  சமணச் சிற்பம் - திருத்தியபின்னர்



சமணச் சிற்பத்தின் காலம்:
சமணம், தமிழகத்தில், குறிப்பாகப் பாண்டிநாட்டிலும் கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்துள்ளது என்று வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிகிறோம். இதன் அடிப்படையில், இச் சமணச் சிற்பத்தின் காலத்தைக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகக் கொண்டு செல்லலாம். சிற்பத்தின் பழமையான ஒளிப்படம் ஒன்று, மிகுதியான சிதைவுகளைத் தெளிவாகக் காட்டுகிறது. ஒட்டு மொத்தச் சிற்ப அமைதியையும் சமணத்தின் மறுமலர்ச்சிக் காலத்தையும் கருத்தில்கொண்டால், சிற்பத்தின் காலம் கி.பி. 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டு எனக் கருதக் கூடுதல் வாய்ப்புள்ளது. 

முடிவுரை:
தமிழகத் தொல்லியல் துறையினர் இச் சிற்பத்தை மீளாய்வு செய்து மேலும் புதிய செய்திகளை வெளிக்கொணர ஆவன செய்யவேண்டும்.

 


நன்றி -துணை நின்றவர்கள் :
1) "மின்தமிழ்"  இணையக்குழுவினர்
2) திரு. பானுகுமார், சமண அறிஞர், சென்னை.
3) திரு நா.கணேசன், தமிழறிஞர், ஹூஸ்டன்.
4) திரு. கனக அஜித தாஸ், பேராசிரியர், சென்னை.
5) திரு. இராமச்சந்திரன், தொல்லியல் துறை (பணி நிறைவு), சென்னை.

நன்றி - தொல்லியல் தேடலுக்கு மூலமாய் நின்றவர்:  திரு. சுகுமார் பூமாலை.
 



___________________________________________________________
தொடர்பு: 
துரை. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.




Tuesday, August 29, 2017

கல்லணை ஆஞ்சநேயர் கோயில் கல்வெட்டு

-- திரு. துரை  சுந்தரம்;  திரு. நூ.த.லோக சுந்தரம்


முன்னுரை:
இணையக் குழுக்களுள் ஒன்றான மின்தமிழ் குழுவின் உறுப்பினர் திரு.
நூ.த.லோக சுந்தரம் அவர்கள்  ஒரு கல்வெட்டுப் படத்தை வெளியிட்டு அதன் பாடத்தைப் படித்துத் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கல்வெட்டு, பல சுவையான செய்திகளுக்கு அடித்தளமாய் இருந்தது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.




படம் தெரிவு: மயிலை நூ த லோ சு


கல்லணையில் ஓர் ஆஞ்சநேயர் கோயில்:
கல்லணை வரலாற்றுப் புகழ்பெற்றது. சோழ மன்னன் கரிகாலன் கட்டியது. கல்லணையில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலின் ஒரு மூலையில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 1804-ஆம் ஆண்டு, கல்லணையில் இருக்கும் ஒரு மதகு ஆங்கிலேயர் ஒருவரால் செப்பனிடப்பட்ட செய்தியை அக்கல்வெட்டு சொல்கிறது.
கல்லணைக் கல்வெட்டு
 படம் தெரிவு: மயிலை நூ த லோ சு

கல்வெட்டின் செய்திகள்:

கல்வெட்டின் படத்தைக் கீழே காணலாம். கல்வெட்டு ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது. முதல் ஏழு வரிகள் ஆங்கிலத்திலும், அவற்றை அடுத்து ஐந்து வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் வருமாறு:

அ) ஆங்கிலக் கல்வெட்டின் பாடம்:

       1 Repaird this COLLING
       2  LAH & Erected the 268
       3  Upright Stones
       4   By Capt. J.L. Calddel
       5   A.D. 1804

ஆங்கிலக் கல்வெட்டு, கி.பி. 1804-ஆம் ஆண்டில் கல்லணையின் மதகு ஒன்றை ஆங்கிலேயரான காப்டன் ஜே.எல். கால்டெல் என்பவர் செப்பனிட்டதாகக் கூறுகிறது. செப்பனிடும் பணியின்போது 268 கற்கள் சீரமைத்து வைக்கப்பட்டன என்பதாகக் கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக அறிகிறோம். ஆங்கிலக் கல்வெட்டில் மதகு என்பதற்கு ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தாமல் தமிழ்ச் சொல்லான “கலிங்கு” என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது சிறப்பானதொன்று. அதை ஆங்கில எழுத்துகளால் ”கலிங்”  என்று எழுதியுள்ளனர். “கலிங்கு” என்னும் சொல் மதகைக் குறிக்கும். இச்சொல், கல்வெட்டுகளில் மிகுதியாகப் பயின்றுவரும் சொல்லாகும். ஆங்கிலக் கல்வெட்டில் எழுத்துப்பிழை இருப்பதைக் காணலாம்.

ஆ)  தமிழ்க் கல்வெட்டின் பாடம்:

1 1804 இல் - த.ர
2 ராச (?) - கெவுணர்
3 மெண்டாரவற்க
4 ள் உத்திரவுப்படி
5  க்கி மகண ச- ராச -மே
6 ம்பன் ஜெம்சு  (?) ல
7.......................


தமிழ்க் கல்வெட்டு வரிகளிலிருந்து, முழுமையான செய்தியை அறிய இயலாது. சொற்றொடர்கள் முழுமையானதாக இல்லை. கி.பி. 1804-ஆம் ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. மதகு செப்பனிடுதல் பற்றிய சொற்றொடர்கள் இல்லை. அரசு ஆணையின்படி என்னும் தொடர் மூலம் செப்பனிடும் பணி அரசு ஆணையின்படி நிறைவேற்றப்பட்டது. என்பது அறியப்படுகிறது. தமிழ்க் கல்வெட்டில், ஆங்கில அதிகாரியின் பெயர் முழுமையானதாக இல்லை. அவருடைய பெயரின் முன்னொட்டாகவுள்ள “ஜே”  என்னும் எழுத்தின் விரிவான “ஜேம்சு”  என்பது குறிக்கப்பட்டுள்ளது. 1800 களில் “ஜே”  என்பது போன்ற நெடில் எழுத்துகளைக் குறிலாகவே எழுதும் வழக்கம் இருந்துள்ளது. முதல் வரியின் இறுதி எழுத்துகளும், இரண்டாம் வரியின்  முதலில் உள்ள ”ராச”  என்னும் எழுத்துகளும்,  சென்ற நூற்றாண்டு வரை மூத்த வயதினர் எழுதும் வழக்கப்படி “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ” என்பது போன்ற ஒரு தொடரைக் குறிப்பதாகலாம். 2, 3 , 4  வரிகளில் உள்ள  “கெவுணர்மெண்டாரவற்கள்” என்பது,  ”கெவர்ண்மெண்(ட்)டாரவர்கள்”  என்பதன் பிழையான வடிவம் என்று கூறலாம்.  மேம்பன் என்னும் சொல்,  ”கேப்டன்” என்பதைக்குறிப்பதாகலாம்.  ஐந்தாம் வரியில் காணப்படும் தொடரான “மகண ச-ராச-”  என்பது, மீண்டும்  “மகா-ராஜ=ராஜ-ஸ்ரீ” என்பதையொத்த ஒரு தொடராகலாம்.


ஆஞ்சநேயர் கோயிலின் பின்னணி:
கல்லணையைச் செப்பனிடும் பணியின்போது, 19-ஆவது திறப்பில் நடைபெற்ற பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எத்துணை முயன்றும் பணியை முடிக்க இயலவில்லை. ஆங்கிலேய அதிகாரி ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் காட்சியளித்த ஆஞ்சநேயர், 19-ஆவது திறப்புக்கருகில் தமக்கு ஒரு கோயில் எழுப்புமாறும் அந்தத் திறப்பைத் தாம் காத்துத் தருவதாகவும் சொல்லியிருக்கிறார். அதிகாரி அதைப் பொருட்படுத்தாமல் பணியைத்தொடர்ந்துள்ளார். ஓரிரு நாட்களில், குரங்குகள் சில குழுவாக அவரைத் தாக்கிய நிகழ்வு நடந்துள்ளது. அவருக்கு வந்த கனவு மேஸ்திரி ஒருவருக்கும் வந்துள்ளது. பணியின்போது ஓரிடத்தில் தோண்டியதில் அங்கு ஓர் ஆஞ்சநேயரின் திருமேனி கிடைத்துள்ளது. அதன் பிறகே, கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும், வேளாண்மைக்காக இவ்வணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும்போது, இந்த ஆஞ்சநேயருக்குப் பூசைகள் நடைபெறுவதும், ஒவ்வோர் ஆண்டும் பயிர் விளைந்ததும் முதல் நெற்கதிரை ஆஞ்சநேயருக்குப் படையலிட்டுப் பூசை நடைபெறுவதும் வழக்கம்.

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலும் ஜே.எல். கால்டெல்லும்:
சென்னையில் கதீட்ரல் சாலையில் அமைந்திருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலைக் கட்டியவர் ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்பவராவர். கி.பி. 1815-இல் முதன் முதலாக இக்கிறித்தவக்கோயில் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்டது. 200 ஆண்டுகளைத் தாண்டிய இக்கோயிலைக் கட்டிய ஜேம்ஸ் கால்ட்வெல், இந்த ஆகஸ்ட் மாதம் 20-27 தேதிகள் அடங்கிய சென்னை வாரக்கொண்டாட்டங்களின்போது நினைவு கூரத்தக்கவர். இந்த ஜேம்ஸ் கால்ட்வெல்லும், கல்லணையைச் செப்பனிட்ட ஜேம்ஸ் கால்டெல்லும் ஒருவராயிருக்கக் கூடுமா? ஆய்வுக்குரியது.

31-08-2017 அன்று இணைத்த புதிய செய்தி:
முனைவர் நா.கணேசன் (ஹூஸ்டன்)  அவர்கள் ஜேம்ஸ்.எல். கால்ட்வெல் பற்றிய செய்திகளைப் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர், செயிண்ட் ஜார்ஜ் கதிட்ரலைக் கட்டியவரும் கல்லணையைச் செப்பனிட்டவரும் ஒருவரே என்று கருதி இப்புதிய செய்தி இணைக்கப்படுகிறது. கால்ட்டெல் என்னும் ஆங்கிலப்பெயர் இதுவரை கேள்விப்பட்டிராத, எங்கும் படித்திராத பெயர் என்பதையும் இங்கு கருதவேண்டும்.


ஜேம்ஸ் எல். கால்ட்வெல் என்னும் பொறியாளரின் முழுப்பெயர் ஜேம்ஸ் லில்லிமேன் கால்ட்வெல் (JAMES LILLIMAN CALDWELL)  என்பதாகும். 1799-ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் மீது ஆங்கிலேயர் படையெடுத்து நடந்த போரில் (போரில் திப்பு இறந்துபடுகிறார்) கலந்துகொண்டு காயமுற்றவர். பின்னர், கல்லணையை ‘சர்வே’ செய்து 1804-இல் கல்லணையை மேம்படுதினார். அதன்பிறகு, சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலை வடிவமைத்தார். 1858-இல் ‘ஜெனரல்’  என்னும் உயர்பதவி பெற்றார். 1863-இல் மறைந்தார்.
இக்கருத்தில் வரலாற்றுப்பிழை நேர்ந்துள்ளதாகக் கருதும் வரலாற்று ஆய்வாளர்கள் தகுந்த சான்றுகளை முன்வைக்கும்போது கருத்துகள் மாறக்கூடும். வரலாற்றைச் செப்பனிடத் தொடர்ந்த ஆய்வுகளும் தேவை. ஆய்வு முடிவுக்ள் மாறுவதும் இயல்பு.

துணை நின்றவை :

1  www.Columbuslost.com (https://www.columbuslost.com/Temples/Hanuman-Temple-inside-a-Dam-in-Kumbhakonam/info)   http://devrajbandla.photoshelter.com/image/I0000TLhINGvhwIw  

2 An Anglican treasure –Article by Sriram V. The Hindu-April 24, 2015.
நன்றி :  முனைவர் திரு.நா.கணேசன், ஹூஸ்டன்.

___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156


நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com

___________________________________________________________

Monday, August 28, 2017

அரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்



-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

 
முன்னுரை:
அண்மையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் வெளியீடான “நிகமம்”  என்னும் நூலைப் படித்துக்கொண்டிருந்தபோது, அந்நூலில் மேற்படிப் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் வீ.செல்வகுமார் என்பவர் எழுதிய ”கெனிசா தாள் ஆவணங்கள்” என்னும் ஆய்வுக்கட்டுரை ஈர்த்தது. வணிக வரலாற்று ஆய்வுகளை உள்ளடக்கிய பல கட்டுரைகளின் தொகுப்பு நூலே “நிகமம்”.  அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.  ”நிகமம்” என்னும் சொல் வணிகக் குழுவினரைக் குறிப்பதாகும். தமிழ் நாட்டில் பல இடங்களின் பெயர்கள் நெகமம் என்றிருப்பதைக் காணலாம். நிகமம் என்பதே நெகமம் என் மருவியுள்ளது. தமிழகத்தில், சமணக்குகைத்தளங்களில் காணப்பெறும் தமிழ்த் தொல்லெழுத்தான தமிழியில் (தமிழ் பிராமி) பொறிக்கப்பட்ட, மாங்குளம் கல்வெட்டில் “வெள் அறை நிகம(த்)தோர்”  என்னும் தொடர் உள்ளது. தமிழகத்தின் கடல்சார் வணிகம் பற்றிய செய்திகளுக்கு அயல்நாடுகளில் சான்றுகள் கி.மு. முதல் நூற்றாண்டளவிலேயே கிடைத்துள்ளன. மேற்படி ”கெனிசா தாள் ஆவணங்கள்” என்னும் ஆய்வுக்கட்டுரை, இடைக்காலத் தென்னிந்திய வரலாற்றை (வணிக வரலாற்றை) அறிய உதவும் அரேபிய ஆவணங்களைப் பற்றிக் கூறுகிறது.

கெனிசா தாள் ஆவணங்கள்-Genizah manuscripts:


எகிப்து நாட்டின் பழைய கெய்ரோ நகரில், பென் எஸ்ரா (Ben Ezra) என்னும் பெயரில் யூதர்களின் வழிபாட்டிடம் (யூதப்பள்ளி) (Synagogue) ஒன்றுள்ளது. அங்கு, 1890-இல் இலட்சக் கணக்கான துண்டுத் தாள் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கடித ஆவணங்கள். ஹீப்ரு, அரபு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டவை. கெனிசா (Genizah) என்பது யூதப்பள்ளிகளில் பழைய ஆவணங்களைச் சேர்த்துவைக்கும் அறையைக் குறிக்கும். இந்த கெனிசா ஆவணங்களில் இந்தியாவுடன் தொடர்புடைய வணிகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர்களில், ஆபிரகாம் பென் ஈஜு (Abraham Ben Yiju), மட்முன் பி. ஹசன் பந்தர் (Madmun B. Hassan Bundar) ஆகியோர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்களின் கடிதங்கள் ஹீப்ரு மொழியில் உள்ளன. இவற்றில், இந்தியாவைச் சேர்ந்த நகோடா இரமிஷ்ட் (Nakhodah Ramisht), நம்பியார் என்பவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும், மேற்குக் கடற்கரை, குஜராத், கர்நாடகக் கல்வெட்டுகளில் சுட்டப்பெறும் பட்டணஸ்வாமி எனப்படும் நகரத்தலைவர் பற்றிய குறிப்புகளும் இந்த ஆவணங்களில் உள்ளன.

அமெரிக்க எழுத்தாளரான அமிதவ் கோஷ், தம் பயண நூலில் அரேபியரான பென் ஈஜு என்னும் கடல் வணிகரைப்பற்றி எழுதியுள்ளார். பென் ஈஜு சில காலம் இந்தியாவில் தங்கியிருந்துள்ளார். மேலைக்கடற்கரையில் இவருக்கு ஒரு தொழிற்சாலை இருந்துள்ளது. அஷு என்ற ஒரு நாயர் பெண்ணை மணந்துள்ளார். பொம்மா (Bomma)  என்னும் ஓர் அடிமை அவருக்கு இருந்தார். இந்த அடிமை, துளு நாட்டைச் சேர்ந்தவர் எனக்கருதப்படுகிறது. இவ்வணிகருடைய கடிதங்கள் கி.பி. 1132 முதல் கி.பி. 1149 வரை நடந்த நிகழ்வுகளைக் கூறுகின்றன. ஹசன் பந்தர், ஏடன் துறைமுகத்தில் பென் ஈஜுவின் வணிகப்பிரதிநிதியாக இருந்தார்.

இந்திய வணிகர்கள் யார்?

1) நம்பியார்
செல்வகுமார் அவர்களின் கட்டுரையில், மேற்படி இந்திய வணிகர்களைப் பற்றிய செய்திகள் இல்லை. இந்திய வணிகர்களைப் பற்றிய தேடலில் சில கூடுதல் செய்திகள் கிடைத்தன. பென் ஈஜு, ஹசன் பந்தருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஒரு பொதி (வணிகப் பொருள் பொதி?)யினை நகோடா ரமிஷ்ட்டின் கப்பலிலும், மற்றொரு பொதியினை நம்பியார் கப்பலிலும் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார். நம்பியார் என்னும் குடியினர், நாயர் குடியினரைப்போன்றவர். மலபார் பகுதியில், இடைக்காலத்தில், இக்குடியினர் இருவரும் வைசியரைப்போல் வணிகத்தில் ஒருபோதும் ஈடுபட்டவரல்லர். இவர்கள், தற்காப்புக் கலையில் ஈடுபட்டவராவர். எனவே, நம்பியார் என்பவர், மலபார்ப் பகுதியிலிருந்துகொண்டு கப்பல் உடைமையாளராய் பென் ஈஜுவின் வணிகச் செயல்களில் பங்கு கொண்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக, நம்பியார் மங்களூர்ப் பகுதியில் இருந்துகொண்டு பென் ஈஜுவுக்காக அவர் சார்பில் இயங்கியவர் எனலாம். தற்போதைய “பினாமி”  என்பதுபோல. நம்பியார், நாயர் வகுப்பினர் கடல் பயணம் மேற்கொள்ளாதவர் என்பதும், அவர்களுக்குச் சமற்கிருதம் அல்லாது அரபு மொழி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் இந்தக் கருதுகோளுக்கு வலு சேர்க்கும். கூடுதலாக, நகோடா என்னும் சொல்லொட்டு இவர் பெயரில் இல்லை என்பதும், இரமிஷ்ட் என்பார் பெயரில் மட்டுமே நகோடா இணைந்துள்ளதையும் நோக்கவேண்டும். இரண்பீர் சக்கரவர்த்தி என்னும் வரலாற்றாளர், நகோடா என்னும் சொல் “நகூடா”, “நாவித்தகா”   என்னும் சொற்களோடு தொடர்புடையது என்றும், இவை (நகூடர், நாவித்தகர்)  கப்பல் உடை+மையாளராய் வணிகம் செய்தவர்களைக் குறிப்பன என்றும் தம் ஆய்வில் நிறுவுகிறார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  நாவித்தகர் என்பது கப்பலை (மரக்கலத்தை)க் குறிக்கும் “நாவாய்”  என்னும் சொல்லோடு பொருந்துவதாக உள்ளது கருதற்பாலது.)

2) நகோடா இரமிஷ்ட்
நகோடா என்பது கப்பல் உடைமையாளராய் வணிகம் செய்தவரைக் குறிப்பதால், நகோடா இரமிஷ்ட் குஜராத் பகுதியைச் சேர்ந்த இந்திய வணிகர் எனக் கருதப்படுகிறது. ஒரு சில தாள் ஆவணங்கள் குஜராத்திய எழுத்துகளைக் கொண்டுள்ளன என்றும் கருதப்படுகிறது.

2) பட்டணஸ்வாமி
பட்டணஸ்வாமி என்னும் பெயர் துறைமுகத் தலைவர் என்னும் ஒரு பதவிப் பெயராகலாம் என்று கருதப்படுகிறது. கருநாடகக் கல்வெட்டுகளில் இச்சொல் பயில்கிறது என்னும் செய்தியின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் சில கன்னடக் கல்வெட்டுகளிலும், வேறு நூலாதாரங்களிலும் தேடுதலை மேற்கொண்டபோது சில செய்திகள் கிடைக்கப்பெற்றன. போசளர்கள் (ஹொய்சளர்கள்) கருநாடகத்தில் இடைக்காலத்தில் கி.பி. 1346 வரை ஆட்சி செய்தவர்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் பட்டணஸ்வாமி என்னும் பதவி இருந்துள்ளது. இப்பதவியில் இருந்தோர், நகரத் தலைவர்களாய் (இன்றைய “மேயர்”  பதவி போன்றது) இருந்துள்ளனர். இக்காலகட்டத்தில், நகரம் என்பது வணிக நகரம் ஆகும். வணிகச் சந்தைகள் கொண்டது.  நானாதேசிகள், ஐந்நூற்றுவர் போன்ற வணிகக் குழுக்கள் தங்கி வணிகத்தில் ஈடுபட்ட இடங்கள். துறைமுக நகரங்களும் இவற்றில் அடங்கும் எனலாம். வணிகத்தொடர்புள்ள இந்த நகரங்களின் தலைவர்கள் பட்டணஸ்வாமி என அழைக்கப்பட்டனர். இவர்கள் அரசுக்கும் வணிகர் குழுக்களுக்கும் பாலமாய் இயங்கியவர்கள் எனலாம். வணிகத்தின் மூலம் கிடைக்கப்பெறும் வரி வருவாய், வணிகச் சந்தைகள் ஆகியவற்றை மேற்பார்வையிட்டனர் என்றும் கருதப்படுகிறது.

கன்னடக் கல்வெட்டுகளில் பட்டணஸ்வாமிகள்

1 சாமராஜநகரம் வட்டம்-பசவாபுரம் கல்வெட்டு எண் : 236          காலம்-போசளர் : கி.பி 1316
கல்வெட்டு வரி 19,20
..பட்டணசாமி கெம்பசெட்டிய
மக மாத செட்டி ...
...
(கெம்பசெட்டியின் மகன் மாத செட்டி)

2 சாமராஜநகரம் வட்டம்-அரகலவாடி கல்வெட்டு எண் : 301 காலம்: கி.பி 1555
கல்வெட்டு வரி 4,5,6 
வீரநஞ்சராய மஹாராயர குமாரராத சிக்கராயரு
தெரக்கணாம்பிய பட்டணஸ்வாமி பைர செட்டிய
மக திருமலெசெட்டியரிகே கொட்ட கிராம...
(உம்மத்தூர் அரசர் சிக்கராயர் தெரக்கணாம்பி
நகரத்தின் பட்டணசாமி பைரசெட்டியின் மகன்
திருமலை செட்டிக்குக் கொடுத்த கிராமம்)

3 யளந்தூர் வட்டம்-யளந்தூர் கல்வெட்டு எண்: 5 காலம்: கி.பி. 1244
இது தமிழ்க் கல்வெட்டு.
கல்வெட்டு வரி 6
....பட்டணசாமி மகன் சாங்கண்...

4 யளந்தூர் வட்டம்-யளந்தூர் கல்வெட்டு எண்: 62 காலம் போசளர் கி.பி. 1328
கல்வெட்டு வரி 43 
மான்யவாகி பட்டணஸ்வாமிகளு......
5 யளந்தூர் வட்டம்-கணிகனூ கல்வெட்டு எண்: 172 காலம்: கி.பி. 13-ஆம் நூ.ஆ.  இது தமிழ்க் கல்வெட்டு
கல்வெட்டு வரி 4  
.......பட்டணசாமி திருவிளக்கால் பொன் மூன்றும்
வைத்தார்


6 யளந்தூர் வட்டம்-அம்பளி கல்வெட்டு எண்: 210 காலம் போசளர்: கி.பி. 1244           
இது தமிழ்க்கல்வெட்டு
கல்வெட்டு வரி 6
பட்டணசாமி மகன் .....
7 கொள்ளேகாலம் வட்டம்-காமகெரெ கல்வெட்டு எண்: 57  விஜயநகரர் காலம் : கி.பி. 1366
கல்வெட்டு வரி 10,11,12
.....மாம்பள்ளி மொடஹள்ளி, கொங்க
பட்டணத சமஸ்த நானாதேசிகளு ...
பட்டணஸ்வாமி ...

மாம்பள்ளி, மொடஹள்ளி, கொங்கபட்டணம் ஆகிய நகரங்களின் நானாதேசி
வணிகரும் பட்டணசாமிகளும்

8 கொள்ளேகாலம் வட்டம்-காமகெரெ கல்வெட்டு எண்: 62  விஜயநகரர் காலம் : கி.பி. 1354
கல்வெட்டு வரி 10,11,12
...மோடிஹள்ளி சிங்கண நல்லூர
பட்டணஸ்வாமி ராக்கண்ண
சிங்கண நல்லூரின் பட்டணசாமி ராக்கண்ண(ன்) என்பவர்


9 கொள்ளேகாலம் வட்டம்-குரஹட்டி ஹொசூர் கல்வெட்டு எண்: 76  காலம் : கி.பி. 16-ஆம் நூ.ஆ.
கல்வெட்டு வரி 4,5
....ஆலம்பாடி பட்டணஸ்வாமி நஞ்ச...
ஆலம்பாடி என்னும் நகரத்தின் பட்டணசாமி.
அவரது பெயர் “நஞ்ச”  எனத் தொடங்குகிறது.

10 ஹுணசூர் வட்டம்-மரதூர் கல்வெட்டு எண்: 14 காலம்: கி.பி. 15-ஆம் நூ.ஆ.
கல்வெட்டு வரி 1
.... பட்டணசாமி நாகி செட்டி....

மேற்படி கல்வெட்டுகளின் செய்திகள்:
மேற்படி கல்வெட்டுகளிலிருந்து நகரங்களின் தலைவர்களாயிருந்த பட்டணஸ்வாமிகளில் பலர் செட்டிகள் என்னும் வணிகர்கள் என்பது புலனாகிறது. ஒரு கல்வெட்டில், பட்டணஸ்வாமி ஒருவர் நானாதேசி வணிகருடன் சேர்த்துக் குறிப்பிடப்படுகிறார் என்பதையும் காண்கிறோம். எனவே, பட்டணஸ்வாமி என்னும் பதவியிலிருந்தோர் வணிகக் குழுவினரைச் சார்ந்தோரே என்பதாகக் கருதலாம். வணிகராயிருப்பதனால், அவர் அரசுடன் இயைந்து வணிக நடவடிக்கைகளைச் சிறப்புறக் கண்காணித்திருக்கக் கூடும் என்பதும் புலனாகிறது. அரபு நாட்டைச் சேர்ந்த கப்பல் உடைமையாளரான வணிகர்கள், கருநாடகப்பகுதியில் தங்கள் வணிக நடவடிக்கைகளை நகரத்தலைவர்களான பட்டணஸ்வாமிகளின் தொடர்போடு மேற்கொண்டிருக்கவேண்டும் எனக் கருதலாம்.

நன்றி.  துணை நின்றவை:
1. The Mystery of Nambiyar Nakhuda  (from website "Historic Alleys" by Maddy)
2. Sri Kshetra Hombuja (blog)



___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________

Wednesday, August 9, 2017

கங்கைகொண்டசோழபுரச் சலுப்பையும் சாளுக்கியரும்

-- திரு. துரை  சுந்தரம்,  கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


முன்னுரை
தஞ்சாவூரில் இயங்கிவரும் தொல்லியல் கழகம், ஒவ்வொரு ஆண்டும் தொல்லியல் கருத்தரங்கம் ஒன்றைத் தமிழகத்தின் முதன்மையான பல்வேறு ஊர்களில் நடத்திவருகின்றது. தமிழகம் முழுதுமுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ளோர், தம் ஊர்ப்பகுதியின் வரலாற்றிடங்கள் அன்றிப் பிற ஊர்ப்பகுதிகளின் வரலாறு பற்றியும் ஓரளவு தெரிந்துகொள்ள இக்கருத்தரங்கங்கள் துணை செய்கின்றன. பெரும்பாலும், வரலாற்று ஆர்வலர்கள் முதன்மை ஊர்களைப் பற்றி வரலாற்றடிப்படையில் செய்திகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், முதன்மை ஊர்களை ஒட்டியுள்ள பகுதிகளின் உள்ளூர் வரலாற்றுச் செய்திகளையும் நாட்டார் வரலாற்றுச் செய்திகளையும் தெரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பில்லை. அவ்வாறான வாய்ப்பினை மேற்சொன்ன கருத்தரங்கங்கள் தருகின்றன. அண்மையில் ஜூலை மாதம் கங்கைகொண்டசோழபுரத்தில்  நடைபெற்ற தொல்லியல் கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, கருத்தரங்க விழாக்குழுவினர் கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்ப் பகுதியொன்றுக்கு அழைத்துச் சென்று காட்டினார்கள். முதலாம் இராசேந்திரன் எடுப்பித்த கங்கைகொண்டசோழ ஈசுவரம் என்னும் பெரிய கோயிலைப் பற்றிச் சற்று அறிந்திருக்கும் நமக்கு, இராசேந்திரசோழன் போரில் வென்ற சாளுக்கியரோடு தொடர்புள்ள ஒரு சில செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் இப்பயணத்தால் கிட்டியது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.

சலுப்பை-அழகர்கோயில்
கருத்தரங்கப் பார்வையாளர்கள், கங்கைகொண்டசோழபுரத்திலிருந்து இரு பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டோம். பயணத்தில், முன்னுரையில் கூறியவாறு கங்கைகொண்டசோழபுரத்தைச் சுற்றிலுமுள்ள புறவூர்கள வந்தன. கருவாலப்பர்கோயில், சத்திரம், குண்டவெளி, கொல்லாபுரம், இளையபெருமாள் நல்லூர், மீன் சுருட்டி ஆகிய ஊர்கள். சிறிய கிராமத்துச் சாலைகள். இருபுறமும் பசுமையான வயல்வெளிகளை எதிர்பார்த்தால் ஏமாற்றமே. நீரில்லை; அதனால் வயல்களும் இல்லை. “யூகலிப்டஸ்”  என்னும் தைல மரங்களும், சவுக்கு மரங்களும் , முந்திரி மரங்களும் சாலையின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்பட்டன. எளிமையான கிராமங்கள். ஆள் நடமாட்டமின்றி, அரவமின்றிக் காணப்பட்டன. நீர்நிலைகளான குளங்களை வறண்ட குழிகளாய்க் கண்டபோது, கல்வெட்டுகளில், ஆயிரம் ஆயிரம் கலங்களாய் நெல் குவித்த இடைக்காலச் சோழரின் ஊர்களைப்பற்றிப் படித்த செய்திகள் நினைவுக்கு வந்து நெஞ்சை வருத்தின. இளையபெருமாள் நல்லூரை அடுத்து அழகர்கோயில் என்னும் இடத்தை அணுகினோம். மதுரையில் ஓர் அழகர்கோயில் போல இங்கும் ஓர் அழகர்கோயிலா என்னும் வியப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த அழகர்கோயில், வைணவக்கோயில் அல்ல என்றதும் வியப்பு கூடுதலானது.  இது ஒரு சித்தர் சமாதியுற்ற இடம். தோரணவாயிலாகக் கட்டியிருக்கும் நுழைவாயில். "அருள்மிகு ஸ்ரீ துறவுமேல் அழகர் திருக்கோயில்-சலுப்பை"  என்னும் தலைப்பெழுத்து. கருத்தரங்கின் உள்ளூர்ச் செயலராய் இயங்கிய திரு.கோமகன் என்பார், இக்கோயிலைப் பற்றிய சில செய்திகளைக் கூறினார்.

சலுப்பை -  துரவுமேல் அழகர் கோயில் - முகப்பு



சலுப்பை-பெயர்க்காரணம்
கோயில் அமைந்திருக்கும் இடம் சலுப்பை என்னும் பெயரில் அமைந்த கிராமம். இராசேந்திரசோழன் சாளுக்கியரை வெற்றிகொண்டதால் இப்பகுதி, சோழநாட்டின் சளுக்கியகுலநாசனி மண்டலம் என்னும் பெயர் பெற்றது. இப்பெயரின் முதற்பகுதியே சுருக்கப்பெயராய் அமைந்து சளுக்கி என்று வழங்கிற்று. நாளடைவில், சளுக்கி, சலுப்பி என்றாகிப் பின்னர் சலுப்பை எனத் திரிந்து நிலைத்துப்போனது.

துறவுமேல்

துறவுமேல் என்பதற்கான விளக்கம் புதுமையானது. துறவி ஒருவர் இறந்து சமாதியானதால் “துறவு”  என்னும் சொல்லொட்டு வந்தது என நினைத்தோம். அது பிழையானது. “துரவு”  என்பதே சரியான சொல்; துரவு என்பது கிணற்றைக் குறிக்கும் சொல். துரவு என்பது மக்கள் வழக்கில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் சொல்லே. ”தோப்பும் துரவும்”  என்னும் தொடர் நாம் அறிந்த ஒன்று. கல்வெட்டுகளிலும் துரவு என்னும் சொல் காணப்படுகிறது. செவி வழிச் செய்தியின்படி, இப்பகுதி காடாக இருந்தபோது துறவி ஒருவர் இங்கு தவத்தில் இருந்தார். இந்த இடத்துக்கு அண்மையில் ஒரு வைணவக்கோயிலும், ஒரு பார்ப்பனச்சேரியும் அமைந்திருந்தன. ஒரு  நாள், பார்ப்பனச் சேரியிலிருந்து இரு பார்ப்பனப் பெண்கள் கிணற்றில் நீரெடுக்க வந்திருந்தபோது, துறவிக்கருகில் காணப்பட்ட ஒரு குடம், இவர்கள் பார்வையில் பொன்னிறமாகத் தோற்றம் தரவே, அப்பெண்கள் அதை எடுக்க முயன்றனர். தவ நிலையில் இருப்பினும், துறவி இந்நிகழ்ச்சியை உள்ளறிவால் உணர்ந்ததும் தவம் கலைந்துபோனது. துறவியின் சினம் அறமாய் எழுந்து அப்பெண்களை அழித்தது. இறந்த பெண்களிருவரும் கிணற்றில் இரண்டு தாமரை மலர்களாய் மாறினர். தவத்தினால் இறை நிலை எய்த இயலாது தவம் கலைந்துபோனதால் துறவி வெறுப்புற்றுக் கிணற்றுள் ஒன்றிப்போகிறார். கால்நடை மேய்ப்பர்களின் கனவில் தோன்றி தாம் மறைந்த கிணற்றை மூடி வழிபடவேண்டுமென்று கூறுகிறார். அவ்வாறே, கிணறு மூடப்பட்டுப் பீடம் அமைக்கப்பட்டு வழிபடுதல் நடைபெறுகிறது. எனவே, கோயில் கருவறையில் உருவ வழிபாடு இல்லை. பீடம் மட்டுமே உண்டு. துறவி, துரவுமேல் அழகராக வணங்கப்படுகிறார். இவரது வழிபாட்டுச் சடங்குகளில் உயிர்ப்பலி இல்லை. ஆனால், இவரது காவல் தெய்வங்களான வீரபத்திரசாமி, கருப்புசாமி ஆகியோருக்கு உயிர்ப்பலி நடைபெறுகிறது.

கோயிலின் நுழைவுப்பகுதி

 குதிரைச் சிற்பங்கள்
                              
யானைச் சிற்பம்

துரவுமேல் அழகராகிய சித்தருக்குப் பாதுகாப்பாக விளங்கும் யானையின்  சிற்பம் ஒன்று கோயிலின் எதிர்ப்புற வளாகத்தில், ஏறத்தாழ எழுபது அடி உயரத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. சுடுமண்/சுதைச் சிற்பமாகலாம். பழமையான சிற்பம்தான். காலக்கணிப்புக்குச் சான்றில்லை. இந்த யானையும், கோவில் வளாகத்தினுள் உள்ள குதிரையும் இரவில் வேட்டைக்குப் போய்த்திரும்புவதாக நம்பிக்கை. யானைக்கு உதவியாக ஒரு நாயும் உண்டு. ஒருமுறை, பலாக்காயைத் திருடவந்த கள்வனை நாய் குரைத்து இருப்பைக் காட்ட, யானை தன் துதிக்கைகொண்டு கள்வனை வளைத்துப்பிடிக்கிறது. இந்நிகழ்ச்சியை அழகுறக்காட்டும் சிற்பத்தொகுதி நாட்டார் கலை வண்ணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. யானையின் கழுத்தைச் சங்கிலியும், சிறு சலங்கை மணி கோர்த்த கயிறும், சற்றுப் பெரிய மணிகள் கோர்த்த கயிறும் அணி செய்கின்றன. யானையின் முதுகில் (பட்டுத்?) துணி போர்த்தப்பெற்று, உடலின் இருமருங்கிலும் பெரிய மணிகள் (சங்கிலியால் இணைத்தவை) தொங்குகின்றன. மணிகளின் கீழ் இசைக்கருவிகளை இசைத்த நிலையில் பக்கத்துக்கு மூன்றாக ஆறு பூதகணங்கள் அல்லது மனித உருவங்கள் காணப்படுகின்றன. யானையின் இடது கால் கள்வனின் காலை மிதித்துப் பிடித்துத் துதிக்கையால் வளைத்து நெருக்குகிறது. கள்வனின் காலருகில் நாயும் பலாக்காயும் காணப்படுகின்றன. 

யானைச் சிற்பம்

இசைக் கலைஞர்கள்

கள்வன் - யானையின் பிடியில்

காவல் நாய்

சளுக்கியக் காளி
இக்கோயிலின் சிறப்பு ஒன்றுண்டு. சாளுக்கியரை வெற்றிகொண்ட இராசேந்திர சோழன் சாளுக்கியரிடமிருந்து கொண்டுவந்த காளிச் சிற்பம் இக்கோயிலில் உள்ளது. கோயிலின் நுழைவுப்பகுதியிலேயே தனிக் கருவறையில் இச்சிற்பம் உள்ளது. எட்டுக்கைகளுடன், எருமை அரக்கனைக் கொல்லும் “மகிஷாசுர மர்த்தனி” யாக இக்காளி காட்சி தருகிறாள். வழக்கத்தில் எல்லாக் காளிச் சிற்பங்களிலும் காலடியில் எருமைத்தலை இருப்பதாகக் காட்டப்படும். ஆனால், இந்தச் சிற்பத்தில் எருமைத் தலையும் மனித உடலுமாக அரக்கன் காட்டப்படுகிறான். மனித உடலும், எருமைத் தலையும் இணைந்த சிற்ப அமைப்பு சாளுக்கியச் சிற்பக்கலை மரபிலே காணப்படும் என்று திரு. கோமகன் சுட்டிக்காட்டினார். கங்கைகொண்ட சோழபுரத்தின் வடவெல்லைக் காளியாக இச்சிற்பம் வணங்கப்படுகிறது. டாக்டர் மா.இராசமாணிக்கனார், “சோழர் வரலாறு” என்னும் தம் நூலில், இராசேந்திரசோழன் தன் தலைநகரின் நான்கு புறங்களிலும் நான்கு காளிகளை நிறுத்தினான் என்றும், வடவெல்லைக் காளி சலுப்பையிலும், தெற்கெல்லைக் காளி வீராரெட்டி என்னும் கிராமத்திலும் உள்ளதாகக் குறிப்பிடுகிறார். கிழக்கெல்லைக் காளி செங்கல்மேடு என்னும் ஊரிலும், மேற்கெல்லைக் காளி இடைக்கட்டு என்னும் ஊரிலும் உள்ளதாக “நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு”  என்னும் முக நூல் குறிப்பு சுட்டுகிறது.

சளுக்கியக் காளியும் எருமை அரக்கனும்

அகோரவீரபத்திரர்-கருப்பராயர்
அடுத்துள்ள தனிக்கருவறையில் பெரிய உருவத்துடன் அகோரவீரபத்திரரின் சிற்பம். பூசையாளர் கூறியதுபோல், இருளில் வீரபத்திரரின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. வீரபத்திரர் கருவறைக்கு முன்பாகவே, கருப்பராயர் சிற்பம் உள்ளது. வளாகத்தில் சுடுமண் சிற்பங்களாகக் குதிரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

வீரபத்திரர்

துரவு மேல் அழகர்-பீட வடிவில்
கோயிலின் முதன்மைத் தெய்வமாக வழிபடப்படும் துரவு மேல அழகரின் அடையாளமாக வெள்ளித் தகடு போர்த்திய ஒரு பீடம் உள்ளது.

சித்தரின் துரவுப் பீடம்



கலிங்கச் சிற்பங்கள்

அடுத்து நாங்கள் சென்ற இடம் செங்கமேடு என்னும் ஊர்ப்பகுதி. இங்கே, இராசேந்திரசோழனின் வெற்றியின் அடையாளமாகக் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. செந்நிற மணற்கற்களால் ஆன இச்சிற்பங்கள் கலிங்க நாட்டுக் கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவன என்று தொல்லியல் துறை அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது. இன்றைய ஒரிசா மாநிலத்தின் வடபகுதியே அன்றைய கலிங்கநாடு.

கலிங்கச் சிற்பங்கள்


சோழர் காளி
இங்கே, கலிங்கச் சிற்பங்கள் தவிர, தனிச் சிறு கோயிலில் வணங்கப்படும் சோழர் கலைப்பாணிக் காளியின் சிற்பத்தைக் காணும் வாய்ப்புப் பெற்றோம். ஓர் ஆள் உயரத்துக்கும் மேலாக ஓங்கி உயர்ந்து காணப்பட்ட காளிச் சிற்பம் அருமையானதொன்று. தீக்கதிர் முடியும் (ஜ்வாலா கேசம்), எட்டுக்கைகளும் கொண்டவளாக ஆற்றல் வாய்ந்த தோற்றம். வலது காலைக் குத்திட்டு மடித்த நிலையிலும் இடது காலை அரக்கனின் உடல்மீது மிதித்த நிலையிலும் கொற்றவை காணப்படுகிறாள். வலது செவியில் “பிரேதகுண்டலம்”  என்று குறிப்பிடப்பெறுகிற, பிணத்தையே காதணியாகக் கொண்ட அரிய தோற்றத்துடன் கொற்றவை காட்சி தருகிறாள்.

சோழர் காலக் கொற்றவை

கொற்றவையின் செவியில்  ”பிரேத குண்டலம்”




கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றிலும் வரலாற்றுச் சுவடுகள்
வரலாற்றுச் சுவடுகளைத் தம்மகத்தே கொண்ட பல ஊர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் புறவூர்களாக இன்றும் எஞ்சியுள்ளன. கடாரம்கொண்டான், வீரசோழபுரம், வானவன் நல்லூர், சோழன்மாதேவி, விக்கிரமங்கலம் (விக்கிரமசோழமங்கலம்), ஆயுதக்களம், சுண்ணாம்புக்குழி, உள்கோட்டை, யுத்தப்பள்ளம் ஆகியவை அத்தகைய ஊர்கள். பல ஊர்கள், அரசர், அரசியர் பெயரைத்தாங்கியுள்ளன. படைகளுக்கு வேண்டிய ஆயுதங்கள் உருவான ஊர் ஆயுதக்களம்; கட்டடங்கள் கட்ட சுண்ணாம்பைத் தந்தது சுண்ணாம்புக்குழி என்னும் ஊர்; கோட்டை இருந்த இடம் உள்கோட்டை; போர் நிகழ்ந்த இடத்தை நினைவூட்டுகின்ற யுத்தப்பள்ளம். வடநாடு நோக்கிச் சென்ற பெருவழியில் அமைந்த சத்திரம் என்னும் ஊர் தங்குமிடமாகச் சத்திரங்களைக் கொண்டிருந்தது போலும். கங்கைகொண்ட சோழபுரத்தின் மதிற்சுவர்களின் இடிபாடுகளிலிருந்து எடுத்த கற்களே தற்போதுள்ள அணைக்கரையில் அணைகட்டப் பயன்பட்டன என்று கருதப்படுகிறது. கங்கைகொண்டசோழபுரத்தில் இருக்கும் மாளிகைமேடு என்னும் பகுதியில் அகழாய்வு நடத்தப்பெற்று, இராசேந்திரனின் மாளிகை(அரண்மனை) கண்டறியப்பட்டுள்ளது. மேற்சொன்ன புறவூர்களுள் தகுதிபெற்ற ஊர்களில் அகழாய்வு நடைபெற்றால் மேலும் பல வரலாற்றுச் செய்திகள் வெளிப்படும் என்னும் சிந்தனையோடு கங்கைகொண்டசோழபுரத்தின் புறவூர்களைப் பார்க்கச் சென்ற எங்கள் பயணத்தைக் கொற்றவை முடித்துவைத்தாள்.

கட்டுரை ஆக்கத்துக்குத் துணை நின்றவர்க்கு நன்றி.

1.திரு. கோமகன், பொறிஞர், கங்கைகொண்டசோழபுரம்.
2. நம்ம கங்கைகொண்டசோழபுரம் சோழநாடு-முகநூல்
3. தேவர்களம்- வலைப்பூ



___________________________________________________________
  

து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156
___________________________________________________________