Saturday, January 29, 2022

திருவள்ளுவ மாலை: ஒரு மீள்பார்வை

--  நா.முத்துநிலவன்


திருவள்ளுவ மாலை எனும் நூல், திருக்குறளின் பெருமைகளையும்,  திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து  எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.  ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி  எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற்  சிறப்பு. திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். இடைக்காடர் ஔவை யார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன – எனும் இந்த வரிகளும் இக்கட்டுரைக்கான ஆதார நூலும் விக்கிப்பீடியாவில் உள்ளன. திருக்குறளை ஆழ்ந்து படித்தவர்கள், திருக்குறளைப் புகழ்ந்து(?) எழுதப்பட்ட திருவள்ளுவமாலை என்னும் நூலைப்பற்றி அறிந்திருப்பார்கள்.

திருவள்ளுவமாலை என்னும் நூல், திருக்குறள் தோன்றி சுமார் ஆயிரம் ஆண்டு  கழித்துத் தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை எழுதியவர் ஒருவரா, பலரா என்னும் சந்தேகம் எழுவதோடு, திருக்குறளின் மூலக் கருத்துகளுக்கு முற்றிலும் முரணான கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது என்பதால் இது பற்றிய ஆய்வை இக்கட்டுரையின் வழி முன்வைக்கிறேன். 

திருதராட்டிர ஆலிங்கனம்:
மகாபாரதக் கதையில் “திருதராஷ்டிர ஆலிங்கனம்” என்றொரு தொடர் வரும். இறுதிப் போரில் தன்மகன் துரியோதனனைக் கொன்ற பீமனை, பிறகு பழி வாங்க நினைப்பான் துரியோதனன் தந்தையான திருதராட்டிரன். ஆனால், கண்பார்வையற்ற தன்னால் அவனுடன் போரிட்டுக் கொல்ல முடியாது என்பதால், பீமனை அருகில் அழைத்து, இருகரங்களாலும் பீமனை நெருக்கி அணைத்தே கொல்லத் திட்டமிடுவான். வழக்கம்போல இதனை முன் உணர்ந்த கண்ணன், தந்திரமாகத் தடுத்துவிடுவான் என்றாலும், இப்படி “நெருக்கி அணைத்தே கொன்று விடத் திட்டமிடுவது” என்னும் பொருளில் “திருதராட்டிர ஆலிங்கனம்” என்னும் தொடர், இன்றும் மக்கள்  வழக்கு உரையாடலில் கூட சொல்லப்படுகிறது.  திருவள்ளுவ மாலைக்கும் இந்தத் தொடர் பொருந்தும்! அதாவது குறளில் இல்லாததையும் பொல்லாததையும் இருப்பதாகச் சொல்லி புகழ்ந்தே இழிவுபடுத்தி திருக்குறளின் புகழைக் கெடுத்து விடுவது! இது எல்லாருக்கும் புரிந்துவிடாது என்பதே இந்நூலைத் தொகுத்தவர்களின் உளவியல் அறிவு! இன்று வரை,  திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து எழுதப்பட்டதான பொதுப் புத்தியே இதற்குச் சான்று! 

திருவள்ளுவ மாலை என்னும் பொய் மாலை:
திருவள்ளுவ மாலையில், (நாலடி கொண்ட  நேரிசை/இன்னிசை வெண்பா 53 உடன், குறட்  பாக்கள் 2 சேர்த்து) மொத்தம் 55 வெண்பாக்கள்  உள்ளன.  இதில் –  முதல் வெண்பா அசரீரி (ஆளற்ற ஒலி) எழுதியதாக உள்ளது! இரண்டாம் வெண்பா – கலைமகள் எழுதியதாக உள்ளது  மூன்றாம் வெண்பா – இறையனார் எழுதியது. இதிலிருந்தே இது எந்த அளவிற்கு மிகையானது என்பது புரியும். இறையனார் என்னும் பெயரிலான புலவர் ஒருவர் சங்க இலக்கியமான குறுந்தொகையில் ஒரு பாடல் எழுதியதாக உள்ளது. (பாடல் எண் – 02) இதில் இறையனார் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, பெரிய புராணத்தில் (படலம் – 52, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்) என ஒரு கதை உள்ளது. இதை  வைத்து, “திருவிளையாடல்” என்றொரு திரைப்படமும் வந்தது! உண்மையில் சங்கக்  குறுந்தொகை அடிக்குறிப்பில் இப்படி எதுவும் இல்லை!, நாகேஷ் – தருமியும் இல்லை, சிவாஜி கணேச – சிவனும் இல்லை!  “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீர – ஏ.பி.நாகராஜனின் புகழ்பெற்ற வசனமும் இல்லை! இதற்கு, கரந்தைப் பாவலர் பாலசுந்தரம் எழுதிய ஓர் இலக்கிய நாடகமே ஆதாரம்! இந்தப் பெயரோடு திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல் என்ன கதை!  இந்தக் கதைக்குரிய இறையன் பெயரைத் திருவள்ளுவ மாலையில் சேர்த்தது நல்ல நகைச்சுவை! (இறையனார் வேறு எந்த சங்கப்  பாடலும் எழுதியிருப்பதாகவோ, சங்கம் பற்றிய பற்பல கற்பனைகளுக்கு இடம்தந்த இறையனார் அகப்பொருள் என்னும் பிற்கால இலக்கண நூல்தவிர திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடந்ததாக வேறெந்த ஆதாரமும் இல்லை!)  

நான்காம் வெண்பா – உக்கிரப் பெருவழுதி எனும்  மன்னன் எழுதியதாக உள்ளது. ஆனால் இந்த மன்னன் எழுதியதாக சங்கஇலக்கியத்தில் இரண்டு பாடல்கள் நற்றிணை(98) அகநானூறு(26) உள்ளன. இரண்டுமே அகப்பாடல்கள்!  (https://ta.wikipedia.org/s/twd) எனில் இதையும் நம்புவதற்கில்லை! எனினும் இதைத் தொகுக்க உதவியிருக்கலாம். அதோடு பாடல் ஒன்றையும் எழுதியிருக்கலாம் என்று வேண்டுமானால் ஏற்கலாம் என்றாலும் காலக் குழப்பம் நீடிக்கிறது. அப்படி வைத்துக் கொண்டாலும், அந்த சங்கப்  புலவர்கள் 49பேர், மற்றும் இந்த நால்வர் ஆக 53தானே வரவேண்டும். 55பேர் திருவள்ளுவ மாலையில் எழுதியிருக்கிறார்களே என்றும் குழப்பம் வருகிறது. ஏனெனில் அதே நூலில் (இறையனார் அகப்பொருளில்) உள்ள “கடைச்சங்கப் புலவர்கள்” பட்டியலில் உள்ள பலர் பெயர் இந்த  திருவள்ளுவ மாலையில் இல்லை! அதில் இல்லாத பலர் பெயர்கள் இதில் உள்ளன! அட என்னடா! இந்த மதுரைக்கு (நகரில் அரங்கேற்றப்பட்ட திருவள்ளுவ மாலை நூலுக்கு) வந்த சோதனை!

இந்த நூல், பலபெயர்களில் ஒருவர் அல்லது  ஒரு குழுவினரே பலபெயர்களில் எழுதியிருக்கலாம் என்று நான் சொல்வதற்கான ஆதாரங்கள் – வள்ளுவர் பாடாததை யெல்லாம் பாடியதாகப் புகழும் பாடல்கள் பல உள்ளன.  வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என முப்பாலே பாடியிருக்க, அவர் பாடாத நான்காம் பொருளான வீடும் குறளில் உள்ளதாகப் புகழ்வது “அறம் முதலாகிய மும்முதற் பொருள்” என,  தொல்காப்பிய (செய்யுளியல் நூற்பா-102) தமிழ்நெறியில் எழுதப்பட்ட திருக்குறளில், வட மொழியில் உள்ள (தர்ம அர்த்த காம மோட்சம் எனும்) நான்காவது பொருளான வீடுபேறு இல்லை!  ஆனால் திருக்குறள் வீடுபேறு எனும் நான்காம் பொருளையும் பாடி இருப்பதாகப் பெருமையோடு பாராட்டும் பத்து வெண்பாக்கள் இதில் உள்ளன (திருவள்ளுவ மாலை பாடல் எண்கள் –  7, 8, 19, 20, 22, 33, 38, 40, 44, மற்றும் 50) பத்துப் பொய்களில் குத்து மதிப்பாய் ஒரே ஒரு பொய்யைப் பார்ப்போம்;  

அறம்பொரு ளின்பம்வீ டென்னும் அந்நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார். 
              (பாடல் 8: மாமூலனார், திருவள்ளுவ மாலை)

இதற்கு விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன். வடமொழி வேதம் சொன்னதையே வள்ளுவர் பாடினார் என்பது வர்ண தர்மத்தை வலியுறுத்தியே வேதமும், மனு(அ)தர்ம நூலும், பகவத்கீதையும் பாடியிருக்க, இவற்றுக்கு எதிரான “மனித சமத்துவத்தை”  வலியுறுத்தியே வாழ்வியல் பாடியிருக்கும் வள்ளுவரை வேதம் சொன்ன வழிகளைத் தமிழில் பாடியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன? இப்படியான ஒன்பது வெண்பாக்கள் உள்ளன.  (பாடல் எண்கள் –  2, 4, 15, 18, 28, 30, 32, 37 மற்றும்  42) இதற்கும் ஓர் உதாரணம் பார்ப்போம்; 

அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதவழுக் கற்ற துலகு.
              (பாடல் 37:  மதுரைப் பெருமருதனார், திருவள்ளுவ மாலை)

வள்ளுவர் மனிதரே அல்ல, தெய்வத்தன்மை வாய்ந்தவர் எனப்புகழ்வது  – மிகையாகப் புகழ்வது நம் காலத்திலும் சாதாரணமாக நடப்பதுதான். என்றாலும் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாடலே அல்ல அல்ல அதையும் தாண்டி புனிதமானது” என, (கமலகாசன் போல) இதில் 9பாடல்கள் உள்ளன. இதுவும் வள்ளுவரின் இயல்புக்கு மாறானதுதான். அவர் சொல்வன்மையில் எதை எந்த அளவுக்கு எப்படிச் சொல்லவேண்டும் என்றவர். ஆனால் அவரைப் புகழ்கிறேன் பேர்வழி என்று இவர் மனிதரே அல்ல, தெய்வத்தன்மை பொருந்தியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன? பாடல் எண்கள் – 1, 3, 6, 21, 28, 36, 39, 41, 49 இப்படி உள்ளன. இதற்கும் ஓர் உதாரணம் பார்ப்போம்; 

பொய்ப்பால பொய்யேயாயப் போயினபொய் அல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
              (பாடல் 49: தேனீக்குடிக் கீரனார், திருவள்ளுவ மாலை)

ஒருசில அருமையான பாடல்களும் உள்ளன வெறும் பொய்யைச் சொன்னால் எப்போதுமே பருப்பு வேகாதல்லவா? எனவே பொய்யைக் கொஞ்சம் உண்மை கலந்தும் தருவதுதானே உலக நடப்பு! இந்தக் கருத்துக் கேற்ப நல்ல சில பாடல்களையும் – திருக்குறளின் உண்மையான பெருமைகளைச் சொல்வதான பாடல்களும் இதில் உள்ளன. கபிலர் பாடல் அப்படி நல்லவிதமாகவே உள்ளது பாடலைப் பாருங்களேன்;

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.
              (பாடல் 5: கபிலர், திருவள்ளுவ மாலை)

வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது. 

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நூல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஒரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர். எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை. 

தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் ‘வீடு’ பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் கு.ச.ஆனந்தன்.  நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ள அறிஞர் மு.அருணாசலம் அவர்களும் திருவள்ளுவமாலை திருக்குறளுக்குப் பெருமை சேர்க்காத வண்ணம் பொய்யாகத் தொகுக்கப்பட்டது என்னும் பொருளிலேயே கருத்துரைக்கிறார்.

எனவே, திருக்குறளை அதன் மூலம்கொண்டு மட்டுமே அறிவது நல்லது. மிகையாகப் புகழ்வதும் தவறு, பழிதூற்றுவதும் தவறு என்பதை, திருக்குறளையும் திருவள்ளுவ மாலையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தால் புரியும் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு  (குறள்–423)


நன்றி:
வளரும் கவிதை:  நா.முத்துநிலவன் 

தீக்கதிர்: திருவள்ளுவ மாலை எனும் தில்லுமுல்லு மாலை
 நா.முத்துநிலவன்




Friday, January 28, 2022

முழு அரிச்சுவடி சொற்றொடர்

முழு அரிச்சுவடி சொற்றொடர்

 -- தேமொழி 


எல்லா எழுத்து (ஆங்கிலத்தில் pangram, தமிழில் முழுவெழுத்து அல்லது 'முழு அரிச்சுவடி சொற்றொடர்')  என்பது ஒரு மொழியின் அரிச்சுவடியிலுள்ள அனைத்து எழுத்துக்களாலும் அமைக்கப்பட்ட சொற்றொடரைக் குறிக்கும். இது அச்செழுத்தின் வடிவத்தைக் காட்ட, அச்செழுத்து கருவியை பரிசோதிக்க, கையெழுத்து, வனப்பெழுத்து மற்றும் தட்டச்சுத் திறனை வளர்க்கவென பாவிக்கப்பட்டது. 

சில எடுத்துக் காட்டுகள்:
ஆங்கிலத்தில்,  "The quick brown fox jumps over the lazy dog"  (எல்லா 26 எழுத்துக்களும்).
டச்சு மொழி, "Lynx c.q. vos prikt bh: dag zwemjuf!" (26 எழுத்து சிறப்புச் சொற்றொடர் எல்லா 26 எழுத்துக்களுடன்).
இடாய்ச்சு மொழியில், "Victor jagt zwölf Boxkämpfer quer über den großen Sylter Deich".
பிரெஞ்சு மொழியில், "Portez ce vieux whisky au juge blond qui fume" (எல்லா 26 எழுத்துக்களும்).



ஆங்கிலத்தில்,  "The quick brown fox jumps over the lazy dog" என்ற எல்லா 26 எழுத்துக்களும் நாம் புதிய எழுத்துரு (font) ஒன்றை தரவிறக்கம் செய்கையில் அதன் சிறப்பைச் சோதித்து முடிவெடுக்க கொடுத்து இருப்பார்கள்.  அது போல அண்மையில் நீச்சல்காரன் ராஜாராமனும்  தமிழ் எழுத்துருக்களுக்கு அதன் மாதிரி வடிவம் அளித்து உதவி இருந்தார். அவரது சொற்றொடர் தேர்வு "யானையின் காதில் தமிழ் பேசியது யார்?"(பார்க்க நீச்சல்காரன் தளம்: https://oss.neechalkaran.com/tamilfonts/?index=0)



ஆங்கிலத்தில் புதிதாக எழுத்துரு  ஒன்றை உருவாக்க இந்த ஒற்றை வரியை உருவாக்கினால் போதும். "The quick brown fox jumps over the lazy dog"  என்ற இச்சொற்றொடரை வைத்துப் புதிய எழுத்துருவை உருவாக்கி விடலாம்.



ஆனால் தமிழில் அப்படியொரு சொற்றொடர் இதுவரை பயன்பாட்டில் இல்லை. எவரேனும் "The quick brown fox jumps over the lazy dog" என்ற ஆங்கில முழு அரிச்சுவடி சொற்றொடர் போல அனைத்து தமிழ் எழுத்துக்களையும் அமைக்க உதவும்  ஒரு சொற்றொடர் உருவாக்க முடிந்தால் அவர்களுக்குப் பரிசு அளிப்பதாக நார்வே வாழ் தமிழரான வள்ளுவர் வள்ளலார் வட்டம் மின்னச்சன் திரு.இங்கர்சால் அவர்கள் அறிவித்திருந்தார். 

அதற்கு உதவியாக எழுத்துகளின் வடிவம் குறித்த ஒரு படம் செய்தியும் பகிர்ந்து உதவியிருந்தார். தேவைப்படும் தகவலும் குறிப்புதவிகளும் அளித்திருந்தார். 

தமிழ் ஒருங்குறி எழுத்துக்களை  வகைப்படுத்தும் முறை மாறுபட்டது, அவை வடிவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும்.  அவ்வகைகளை சுருக்கமாக இவ்வாறு காட்டலாம் = ஂ, ா, ி, ீ, ு, ூ, ெ, ே, ை, ொ, ோ, ௗ, ௌ  

உயிரெழுத்து = அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
மெய்யெழுத்து = க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்
ஆய்தெழுத்து = ஃ
துணைக்கால் = கா, ஙா, சா, ஞா, டா, ணா, தா, நா, பா, மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா
மேல்விலங்கு = கி, ஙி, சி, ஞி, டி, ணி, தி, நி, பி, மி, யி, ரி, லி, வி, ழி, ளி, றி, னி
மேல்விலங்குச்சுழி = கீ, ஙீ, சீ, ஞீ, டீ, ணீ, தீ, நீ, பீ, மீ, யீ, ரீ, லீ, வீ, ழீ, ளீ, றீ, னீ
கீழ்விலங்கு = கு, டு, மு, ரு, ழு, ளு
இறங்குகீற்று = ஙு, சு, பு, யு, வு
ஏறுக்கீற்று = ஞு, ணு, து, நு, லு, று, னு
பின்வளைகீற்று = கூ
கீழ்விலங்குச்சுழி = டூ, மூ, ரூ, ழூ, ளூ
ஏறுகீற்றுக்கால் = ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ, னூ
இறங்குகீற்றுச்சுழி = சூ, ஙூ, பூ, யூ, வூ
ஓர்க்கொம்பு = கெ, ஙெ, செ, ஞெ, டெ, ணெ, தெ, நெ, பெ, மெ, யெ, ரெ, லெ, வெ, ழெ, ளெ, றெ, னெ
ஈர்க்கொம்பு = கே, ஙே, சே, ஞே, டே, ணே, தே, நே, பே, மே, யே, ரே, லே, வே, ழே, ளே, றே, னே
சங்கிலிக்கொம்பு = கை, ஙை, சை, ஞை, டை, ணை, தை, நை, பை, மை, யை, ரை, லை, வை, ழை, ளை, றை, னை
ஓர்க்கொம்புக்கால் = கொ, ஙொ, சொ, ஞொ, டொ, ணொ, தொ, நொ, பொ, மொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ, றொ, னொ
ஈர்க்கொம்புக்கால் = கோ, ஙோ, சோ, ஞோ, டோ, ணோ, தோ, நோ, போ, மோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ, றோ, னோ
இணைக்கால் = (ஊ, கெள, செள)
ஓர்க்கொம்பு இணைக்கால் = கௌ, ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, தௌ, நௌ, பௌ, மௌ, யௌ, ரௌ, லௌ, வௌ, ழௌ, ளௌ, றௌ, னௌ

எழுத்துக்களின் பட்டியல்: 
ஃ ஆ இ ஈ ஊ ஏ ஐ ஔ கு கூ கெ க்ஷ ஙூ சூ ஞ ஞூ டி டீ டூ ணீ ணூ தா  து நி பூ மூ யூ ர ரூ லீ வூ ழூ றே னை ஜு ஜூ ஸ ஷ ஹ

தமிழுக்காக உருவாக்கப்படும் 'எல்லா எழுத்து' சொற்றொடரில் இந்தப் பண்புகள் அனைத்தும் இருக்கவேண்டும் என்பது முயற்சியின்  நோக்கம் 


படத்தில் குறிப்பிட்டிருந்த எழுத்துக்கள் பரிந்துரைக்காக  மட்டுமே. தமிழில் பரவலாகப் பயன்பாட்டில் இருக்கும் இருக்கும், சமஸ்கிருத சொற்களை எழுதப் பயன் கொள்ளப்படும் எழுத்துக்களும் இவற்றில் அடக்கம். 

உதாரணத்திற்கு கெ இதில் வரும் துணை ெ எழுத்தை வைத்து ஙெ, செ, ஞெ, டெ, ணெ... வரிசை முழுவதும் எழுதிவிடலாம். சொற்றொடர் அமைக்க கெ-க்கு பதில் ஙெ, செ, ஞெ, டெ.. இதில் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆரஞ்சு நிறக்  குறியீடுகள் அனைத்தும் அந்த வகை வகையே.  அந்த வரிசையில் உள்ள எழுத்து எது வேண்டுமானாலும் இடம் பெறலாம். 

எனது முயற்சியில் எல்லா எழுத்து: முழு அரிச்சுவடி சொற்றொடர்:
கிரந்த எழுத்துக்கள் உள்ளிட்ட எல்லா எழுத்து சொற்றொடர்:
தமிழ் ஔவை, ஈழ பழுவூர் ஸ்ரீமயூரபுருஷன் வீட்டில், லீவு நாளான மூன்றாம் தேதி ஞாயிறு ஏழு மணி விருந்துக்கு, டிஃபன் ஸ்பெஷல் பக்ஷணங்களாக, சூடான இட்லி பூரி ஊத்தப்பம் ஆமவடை கூட்டு ஹல்வா நுங்குஜூஸ் ஐஸ்டீ சாப்பிட்டாள். 

தமிழ் நெடுங்கணக்கு 247 எழுத்துகள் எல்லா எழுத்து சொற்றொடர்:
"ஈவது விலக்கேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண், ஊக்கமது கைவிடேல், மூதுரை ஔவை கூறிய ஆத்திசூடி நூலின் தீஞ்சுவை மொழி, அஃதே எங்கள் பூவுலக நெறி.



தமிழ் எழுத்துரு முழுமையும் உருவாக்க உதவியாக 100 எழுத்துக்கள் அடங்கிய முதல் சொற்றொடர் இது என்ற பாராட்டு பெற்ற என்னுடைய முயற்சி: "தமிழ் ஔவை, ஈழ பழுவூர் ஸ்ரீமயூரபுருஷன் வீட்டில், லீவு நாளான மூன்றாம் தேதி ஞாயிறு ஏழு மணி விருந்துக்கு, டிஃபன் ஸ்பெஷல் பக்ஷணங்களாக, சூடான இட்லி பூரி ஊத்தப்பம் ஆமவடை கூட்டு ஹல்வா நுங்குஜூஸ் ஐஸ்டீ சாப்பிட்டாள். இந்த சொற்றொடரில் மொத்த எழுத்துக்கள் 100, மொத்தச் சொற்கள் 29".   தேர்வு பெற்ற  இந்த சொற்றொடர் மிகவும் குறைந்த நீளத்தில் எளிய சொற்களில் இருந்ததாகப் பாராட்டப் பட்டது குறிப்பிடத்தக்கது (பார்க்க: https://www.facebook.com/photo?fbid=4886681414703176&set=a.207894635915234). 
---




கிரந்த சொற்கள் தவிர்த்த எளிமையான தூய தமிழ் முழுவெழுத்துச் சொற்றொடருக்கு என்னுடைய முயற்சி: "ஈவது விலக்கேல், ஏற்பது இகழ்ச்சி, ஐயமிட்டு உண், ஊக்கமது கைவிடேல், மூதுரை ஒளவை கூறிய ஆத்திசூடி நூலின் தீஞ்சுவை மொழி, அஃதே எங்கள் பூவுலக நெறி." இந்த சொற்றொடரில் மொத்த எழுத்துக்கள் 68, மொத்தச் சொற்கள் 19 (பார்க்க: https://www.facebook.com/photo/?fbid=4891175977587053&set=a.207894635915234). 
---

இந்தச் சொற்றொடர்களில்  உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்தெழுத்து, துணைக்கால், மேல்விலங்கு, மேல்விலங்குச்சுழி, கீழ்விலங்கு, இறங்குகீற்று, ஏறுக்கீற்று, பின்வளைகீற்று, கீழ்விலங்குச்சுழி, ஏறுகீற்றுக்கால், இறங்குகீற்றுச்சுழி, ஓர்க்கொம்பு, ஈர்க்கொம்பு, சங்கிலிக்கொம்பு என தமிழின்  'எல்லா எழுத்து வடிவங்களும்' இருக்கின்றன.  முழுவெழுத்து சொற்றொடர் உருவாக்க கிடைத்த வாய்ப்பில் மகிழ்கிறேன்.




 

Thursday, January 27, 2022

வீரமங்கை வேலு நாச்சியார் கல்வெட்டு

வீரமங்கை வேலு  நாச்சியார் கல்வெட்டு

-- கடலூர் ந. சுந்தரராஜன்

சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் தமிழ்க் கல்வெட்டு

தமிழகத்தில் சிவகங்கை சமஸ்தானத்தின் ஆட்சிப் பொறுப்பினை தனது கணவரான முத்துவடுகனாதரின் மறைவிற்குப் பின்னர் வேலுநாச்சியார் கவனித்துக் கொண்டார். மன்னர்  இறந்ததினால் குழப்பநிலை ஆங்கில ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி போன்ற நிலைகளைச்  சமாளித்து மருதுபாண்டியர் மந்திரி தாண்டவராயப் பிள்ளை ஆகியோரின் துணையோடு1776  வரை ஆட்சி செய்தார்.

வேலுநாச்சியார் காலக் கல்வெட்டு ஒன்று சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள சக்கந்தி என்ற ஊரில் பிள்ளையார் கோவிலில் கண்டறியப்பட்டு சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

          ஸ்ரீ சக்கந்தி அய்யா முத்து 
          வடுகனாத தேவரய்யா அவர்கள் 
          பாரியாள் வேலு நாச்சி 
          யாரவர்கள் உபயம் 




சிவகங்கை ராணி சக்கந்தியில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு உபயமாக செய்ததன் நினைவாக இக்கல்வெட்டு வெளியிடப்பட்டிருக்கலாம்.  இந்தியாவின் விடுதலைப்போராட்டத்திற்கு எனக் குரல்கொடுத்த முதல் தமிழ் பெண்ணரசி சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் தமிழ்க் கல்வெட்டு
வெளியிட்ட கல்வெட்டு என்பது இதன் சிறப்பு. 





வீர மங்கை வேலு  நாச்சியார் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுக்  கொண்டு வரப்பட்ட விதம்:
அருங்காட்சியகம் சிவகங்கை நகரில் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்த காலம், ஆண்டு 1997-98. இருக்கை கூட இல்லா நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை  அலுவலர் அலுவலக மேசையில் ஒரு நாற்காலி ஒரு மரப்பெட்டி உடன் ஒண்டு குடித்தனம் தொடங்கிய காலகட்டம். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் வட்ட வடிவில் இருக்கும். தமிழ் வளர்ச்சி அலுவலகம் எதிரே சமூக நலத்துறை இருந்தது.  அங்கே பாலு என்ற இளைஞர் பணிபுரிந்தார். "சார், எங்கள் ஊர் சக்கந்தி, அது வேலு நாச்சியார் பிறந்து வளர்ந்த ஊர். நீங்கள்  வந்தால் நன்றாக  இருக்கும்,"  என்றார். 

எனது வெள்ளை நிற ஸ்கூட்டியில் பாலுவுடன் பத்துக் கிலோமீட்டர் பயணித்து சக்கந்தி கிராமத்தை அடைந்த போது சூரியன் கோபம் கொண்டு மேற்கில் கருமேகங்கள் இடையே ஓடத் தொடங்கினான்.  இது தான் பிள்ளையார் கோயில் என்றார் பாலு.  ஒரு கருவறை மற்றும் மண்டபத்துடன் கூடிய அமைப்பு. கோயில் உள்ளே செல்ல ஒன்றே கால் அடி நீளம் ஓர் அடி நீளம் முக்கால் அடி உயரம் கொண்ட படிக்கட்டுக்  கல் இருந்தது. "பாலு இந்தக் கலை  திருப்பிக் கவிழ்த்துப் போட முடியுமா?"  என்றேன்.  உதவிக்கு எங்கிருந்தோ கடப்பாரை உடன் வந்த தன்னார்வலர் திருப்பிப் போட்டபோது அதில் எழுத்துக்கள் இருப்பது தெரிந்தது. அதை கோவை  இலை போட்டுத்  தேய்த்த பின்தான் படிக்க முடிந்தது.  

அந்த கல்வெட்டில்   "ஸ்ரீ சக்கந்தி அய்யா முத்து வடுகத் தேவரய்யா பாரியாள் வேலு நாச்சியார் உபயம்" என்ற வரிகள் இருந்தது இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளது.  பாலு என்று அழைத்து சற்றே புருவம் உயர்த்தினேன்.  உடனே பாலு "அந்தக் கல்லை சார் ஸ்கூட்டில வைங்க" என்றார்.

மாலை சூரியன் தொடுவானத்தைத்  தொட்டு விடத்  துடித்தான். என் ஸ்கூட்டி புகை கக்கிப்  புறப்படும் போது, "சார், வழியில் காட்டு மாடு இருக்கும் பார்த்து போங்க என்றார்". "காட்டு மாடென்றால்??!!" என்று இழுத்தேன்.அது வீட்டில்  வளர்க்கும் மாடுதான்,  காட்டில்  தங்கிவிட்டால்  காட்டு மாடாக  மாறி மனிதர்களையும்  முட்டித்  தாக்கும்" என்றார். காட்டு மாடு பயத்துடன் சிவகங்கை வந்து அடைந்தேன். மாவட்ட ஆட்சியரிடம் கல்வெட்டு செய்தியைத்  தெரிவித்த போது, "பரவாயில்லையே!!! மியூசியமே திறக்கவில்லை  அதற்குள் கல்வெட்டு சேர்த்து விட்டீர்களே," என்றார். 

[ந. சுந்தரராஜன் காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், கடலூர் - 1]


Sunday, January 23, 2022

மடியதனில் தூங்கு மின்ப மதிவதன!


- சே. பானுரேகா


மடியதனில் தூங்கு மின்ப மதிவதன! 
[மெல்லின வண்ணப்பா]
                 



பணிபுரிய வேண்டு மென்று
  பதமலரை நாடு முந்தன்
    பசுங்கிளியைத் தேடி வந்த 
                  பரந்தாம
  பலவினைக ளாலும் வென்று 
    பருவமக ளான உந்தன்
      படைமுழுதும் யாவும் வென்ற 
                    பதிதேவ
மணிதவழு மார்ப ணிந்த
  மலரணிந்த மேனி ராதை
    மனமகிழ நாடி வந்த 
                   மகிழ்மார்ப
   மனதிலெழு மாசை யன்பு
     மலைமிகவு மேலு முள்ள 
       மடியதனில் தூங்கு மின்ப 
                 மதிவதன
அணிகலனும் சூடி வந்த 
   அழகுமயி லாக நின்ற 
      அறிவுடைய மாது மிந்த
                  அதிதேவி 
   அதிசயமு மாகு மென்று(ம்)
     அடிமுதலு மேனி மின்னும்
      அருமைமிகு மாது நிந்தன்
                 அருளாள
மணிகளிடை யாடு கின்ற 
   மதுவதன மோக னுந்தன்
      மணியிதழும் பாடு மென்ற 
                 மணவாள
   மயிலிறகு மாடு மென்று
     மனமுழுது மாவ லுந்தும்
       மணிமகுட நீல வண்ண 
              மணிமாலே!


இலக்கிய மாமணி,
திருக்குறள் மாமணி,
- சே. பானுரேகா
ஆற்காடு.









Saturday, January 22, 2022

நகைச்சுவை ஒரு “கேட்கத்தக்க எதிர்ப்பு,” தமிழர்கள் அதிகம் சிரிக்க வேண்டும்

— முனைவர் ஆனந்த் அமலதாஸ்




ஒரு குறிப்பிட்ட சமுகத்தைச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை அந்தச் சமூகத்தின் உறவு முறையை அதிகம் வெளிப்படுத்தும். அவர்களின் நகைச்சுவைத் தொகுப்பிலிருந்து அந்தச் சமுதாயத்தின் இயல்பைப் புரிந்து கொள்ள முடியும்; அளவிடவும் முடியும்; அதாவது அந்தச் சமூகத்தில் உள்ளடங்கிய பூசல்கள், அவர்கள் அறிவு அல்லது சமூகவாழ்வு நிலையைக் கணிக்க முடியும். எனவே ஒரு சமுதாயத்தைப் புரிந்து கொள்ள அங்கே எப்படிப்பட்ட நகைச்சுவை அவர்களைச் சிரிக்க வைக்கிறது என்பதும் ஒரு வழி என்று சொல்லலாம். 

படித்தவர்கள் அல்லது நகரத்தில் வாழும் மக்கள் கிராமத்து மக்கள் நகைச்சுவையைச் சுவைக்க மாட்டார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் எல்லாப் பண்பாட்டிலும் மக்களிடம் நகைச்சுவை உணர்வு உண்டு. அது மொழி சார்ந்த சிலேடையாக இருக்கலாம், மதத்தலைவர்களின் முரண்பாடான வாழ்வியலைக் கேலி  செய்வதாக இருக்கலாம் (போதிப்பது ஒன்று செயல்படுவது வேறொன்று), அல்லது செல்வாக்குடைய நிலக்கிழார்களின் பாலியல் உறவின் இரட்டை வேடமாக இருக்கலாம். இது அச்சமுதாயத்தில் மறைந்திருக்கும் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தும். அதனால் ஒதுக்கப்பட்ட ஏழை மக்கள் தங்கள் எஜமானரைப் பற்றிக் கூறும் நகைச்சுவையை அங்கே காணலாம். இத்தகைய நகைச்சுவை ஓரங்கட்டப்பட்ட ஏழைகளின் எதிர்ப்பு ஆயுதம்.

சமஸ்கிருத நாடகங்களில் வரும் நகைச்சுவை பாத்திரத்தை (விதூஷகா) பற்றி அதிகம் ஆய்வுக் கட்டுரைகள் உண்டு. தெனாலி இராமன் கதைபற்றி அதிகம் கேட்டிருக்கிறோம். ஆனால் தமிழ் மரபில் நகைச்சுவை பற்றிய வரலாற்றை அதிகம் ஆவணப்படுத்தவில்லை. 1992-இல் காப்ரியெல்லா பெரோ-லுட்சி (Gabriella Eichinger Ferro-Luzzi, The Taste of Laughter) என்ற ஆய்வாளர் தமிழ் நகைச்சுவையின் சில அம்சங்கள் என்ற நூலை வெளியிட்டார். தமிழின் சமகால இலக்கியங்களை அலசிப்பார்த்து - அதாவது அகிலன், புதுமைப்பித்தன், மரினா போன்றவர்களின் நூல்களிலிருந்தும், ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களிலிருந்தும் நகைச்சுவைத் துணுக்குகளைச் சேகரித்து, ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருக்கிறார். 

இந்த நூலின் முன்னுரையில் மேற்கத்திய நாட்டுச் சிந்தனையாளர்கள் உருவாக்கிய கோட்பாடுகளை விமர்சனம் செய்து அவைகள் முழுமையானது அல்ல என்றும் பதிவு செய்துள்ளார். நவீனக் காலத்தில் அறிவியலோ, தர்க்கமுறை அல்லது மெய்யியலோ அரிஸ்டாட்டிலையும் அவரது மாணவர்களையும் மையமாக வைத்துத்தான் வளர்ச்சி காண முடியும். எடுத்துக்காட்டாக “கதார்சிஸ்” (Catharsis) என்ற கருத்து கிரேக்க துன்பக்கதை மையங்கொண்ட நாடகங்களைப் பார்த்து விட்டு யாருடைய ஆன்மா தூய்மையாக்கப்பட்டது என்று சொல்லச் சான்றுகள் ஏதுமில்லை. அந்தக் கருத்தின் நீண்ட கால வெற்றி அந்தக் கிரேக்கச் சொல்லின் ஈர்ப்பாக இருக்க வேண்டும். சாமானியர்களின் சொற்களஞ்சியத்தில் இல்லாத வார்த்தை அதனுடைய ஞானத்தைக் கண்டு திகைத்துப் போயிருக்க வேண்டும்.

19-ஆம் நூற்றாண்டில் “பிரசர் குக்கரை” முன் மாதிரியாக வைத்து பல்வேறு கருத்தியல்கள் எழுந்தன. அதன்படி நகைச்சுவை மனநிலை சமூக நிலையின் பணியாகும் என்று சொன்னார்கள். பிராய்டுவின் கருத்துப்படி நகைச்சுவை அடைத்து வைக்கப்பட்ட உணர்வுக்கு விடுதலை கொடுக்கிறது. அதாவது, அவர் இதன் மூலம் குறிப்பிடுவது பால் உணர்வையும், பகைமை உணர்வையும் என்பது   எல்லோரும் அறிந்ததே. ஆனால் பாலுறவு தவிர்த்தலும் அமைதி நிலையும் அதிக மனவழுத்த நிலையை விளைவிக்கிறது என்ற கருத்துக்குச் சான்று ஏதும் கிடையாது. நகைப்பு-விகட பேர்வழிகளும்,  நகைப்பையும் கேலிக்கூத்தையும்  செய்யாதவர்களை விடவும்  நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. 

இந்த “கத்தார்ட்டிக்” - “ஹைட்ராலிக்” - உவமைகள் உணர்ச்சியின் தேவைகளைவிட அறிவுத் திறனின் தேவையை விளக்கப் பயன்படலாம். அப்படியானால் நகைச்சுவைக்குப் பகுத்தறிவு ஆதிக்கத்திலிருந்து தற்காலிகமாக ஒரு விடுதலை கொடுக்கலாம். இத்தகைய கருத்தியல்கள் பகுத்தறிவுச் சிந்தனையின் ஆளுமையை மிகைப்படுத்துகின்றன. நெடுநேரச் சிந்தனையால் உண்டாகும் களிப்பைப் பகுத்தறிவு சிந்தனைகளோடு குழப்பி விடுவதாகத் தெரிகிறது. 

மன அழுத்தமும் அதன் விடுதலையும் என்ற அடிப்படையில் எழுந்த உவமை நமது வரையறை  தாண்டிய மனநிலை குறித்து பொருத்தமாக விளக்கம் தரலாம். அப்படிப்பட்ட பணி சார்ந்த நகைச்சுவை கருத்தியல்களைத் தவறென்றும் நிரூபிக்க முடியாது. இதைச் சமூக கட்டமைப்பு வகை சார்ந்த நகைச்சுவைகளை அலசிப்பார்க்கும் பொழுது இந்தக் கருத்தின் அடித்தளம் அற்றவை என்பது தெளிவாகிறது. உலக அளவில் சிறுபான்மையான சமூகங்களே  இத்தகைய சமூகக் கட்டமைப்பு சார்ந்த நகைச்சுவையில் ஈடுபட்டுள்ளனர் என்பதால் பெரும்பான்மையான சமூகங்கள் இதன் பலன் இன்றி எப்படிச் சமாளிக்கின்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக கத்தோலிக்கப் பகுதி ஜெர்மனியில் “கார்னிவல்” கொண்டாடப்படுகிறது. புராட்டஸ்டண்ட் பகுதி ஜெர்மனியில் இந்த விழாவைக் காணமுடியாது. ஆனால் இங்கும் சமூகக் குழப்பமும், மனநிலைக் கோளாறும் அதிகமாகக் காணப்படுகிறது. தென் இந்தியாவில் ஹோலி திருவிழா கொண்டாடப்படுவதில்லை. வட இந்தியாவில் மக்கள் சமூகமாக சேர்ந்து களியாட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதனால் பாதுகாப்பு மூடிகள் தடுப்பு (அடைப்புத் தடுக்கு - Safety Valves) அடிப்படையில் நகைச்சுவையை விளக்கும் கருத்தியல்கள் இதைக் கவனிக்க வேண்டும். 
     
சில கருத்தியல்கள் நகைச்சுவையை “சரி செய்யும் மூடியாக,” “சமாளிக்கும் கருவியாக” பார்க்கின்றன. அதாவது, சோகமாக உள்ளவரைத் தட்டிக்கொடுத்து அவருடைய வருத்தத்தை அகற்ற முடியும். ஒரு கேலி விகடம் சொல்வது பல வழிகளில் ஒன்று. தானாகவே ஒருவர் தனது துயரத்தைப் பற்றி கேலிக்கூத்து செய்கிறார் என்பது வண்டி இழுக்கும் குதிரைக்கு முன் வண்டியை வைப்பது போல் இருக்கிறது. தனது துயர நிலைபற்றி நகைத்துப் பேசுவது என்றால் ஏற்கனவே அவர் தனது சோக நிலையைச் சரிசெய்து கொண்டார்,  அல்லது தான் அவ்வாறு வெற்றிகண்டார் என்று வெளிக்காட்ட விரும்புகிறார். அழுபவர் யாரும் “ஜோக்” சொல்வதில்லை. நகைப்பூட்டிப் பேசுபவர் அப்பொழுதுள்ள நிகழ்விலிருந்து ஒரு நுட்பத்தைப் பெறுகிறார். அது மகிழ்ச்சியானதாகவோ, துயரமானதாகவோ, சமநிலையாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, மழையில்லா காலத்தில் வறட்சியைப் பற்றி ஒருவர் நகைத்தால் அவர் அந்தச் சூழ்நிலையை விளக்குகிறார் என்று பொருள். அதில் அவர் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்  கேட்பவரின் துயரத்தை நீக்குவதற்காக நகைச்சுவை விகடத்தைச் சொல்கிறார் என்பதற்குச் சான்று இல்லை. 

உலக அளவில் பல்வேறு சமூகத்தினர் அவர்கள் மரபில் நகைச்சுவை எந்த அளவில் இடம் பெற்றிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக யூத மரபில் நகைச்சுவையின் பங்கை பீட்டர் பெர்கர் (Peter L. Berger) என்பவர் தனது நூலில் (மீட்பளிக்கும் நகைச்சுவை, 1997) வெளியிட்டுள்ளார். ஏன் யூதர் மத்தியில் அதிக நகைச்சுவை வரலாறு உண்டு என்பதற்கு அவர் கூறும் காரணம் கவனிக்கத்தக்கது.

முதலில், நகைச்சுவையைச் சாதுரியமாகச் சொல்லத் தெரிய வேண்டும். யூத மரபினர் சொல்வடிவம் கொடுப்பதில் தேர்ச்சி பெற்றவர்கள்; இரண்டாவது, யூதர்கள் வரலாற்றில் மிகவும் ஓரங்கட்டப்பட்டவர்கள் - அதனால் அதிகம் துயருற்றவர்கள். அத்துயரைச் சமாளித்து வாழ்வை எதிர்கொள்ள நகைச்சுவை உதவியது. இந்த வரம்பு நிலை அம்சம் நகைச்சுவைக்கு இடம் கொடுத்தது என்கிறார்.

விவிலியத்தில் வரும் ஆபிரகாமின் மனைவி சாரா “யாவே” கொடுத்த வாக்குறுதியைக் கேட்டுச் சிரித்தாள் என்று பதிவாகி உள்ளது. அதாவது, 90 வயதான கிழவி, மலடி என்று சமூகம் பழித்த ஒருத்தி  அந்த வாக்குறுதியைக் கேட்டுச் சிரித்தாள் என்று கூறுகிறது. விவிலிய அறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக சாரவை கடவுள் வார்த்தையில் நம்பிக்கை இழந்ததாகக் குறைகூறி வந்தனர்.

ஆனால் சமகாலப் பெண்ணிய வல்லுநர்கள் அதற்கு வேறு ஒரு விளக்கம் கொடுத்து சாராவை மீட்டெடுத்துள்ளார்கள். சாராவின் சிரிப்பு நம்பிக்கையோடு கொண்டிருந்த எதிர்ப்புக் குரல் என்பர். இத்தனை ஆண்டுகளாக சமூகத்தில் மலடி என்று இழிவுபடவைத்த இறைவனிடம் தனது சிரிப்பால் தனது எதிர்ப்பையும் சுட்டிக் காட்டுகிறாள் என்பது இதன் புதிய விளக்கம்.

இந்த விளக்கம் தமிழர்களான நமக்கு ஒரு பாடமாய் அமையும் என்பதற்காக இந்த விவிலிய எடுத்துக்காட்டு இங்கு இடம் பெறுகிறது. நகைச்சுவையும் நம்பிக்கையும் இணைந்துபோகலாம். ஓரங்கட்டப்பட்டவர்களின் சிரிப்பு அவர்கள் துயரத்தை எதிர்கொள்வது, நம்பிக்கையை உள்ளடக்கியது. நம்பிக்கை இழந்தவர் சிரிக்க மாட்டார்கள்.

தமிழர்கள் விஜயநகர ஆட்சிக்காலம் தொடங்கி, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முழுவதும் அடிமையான நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். சுதந்திரம் பெற்ற பிறகும் அவர்கள் நிலை பெரிதாக மாறிவிடவில்லை. கீழ்வெண்மணியூரில் ஐம்பது பேர்கள் எரிக்கப்பட்டது நமது காலத்தில் நடந்த நிகழ்வு.  2009-இல் தமிழருக்கு நடந்த இனப்படுகொலை நாம் அறிந்த ஒன்று; அமைதியாகப்  போராடிய தூத்துக்குடி மக்கள் அலங்கோலமாய்ச் சுட்டுக்கொல்லப்பட்டதை மறந்து விட முடியாது. இந்தப்பட்டியல் மிக நீண்டது. 

இன்றைய அளவில் தமிழ் நாட்டில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாறிக் கொண்டிருப்பதற்கு யார் பொறுப்பு? இந்தச் சூழ்நிலையில் “ஆறுவது சினம்” என்று ஒளவையாரைத் துணை தேடுவது பொறுப்பற்ற மனநிலை. இதெல்லாம் தமிழருக்கு எச்சரிப்புத் தரவுகள். இதற்குப் பதில் நம்பிக்கையற்ற நிலை அல்ல. நம்பிக்கையோடு சேர்ந்த சிரிப்பு தேவை. மீண்டெழ முடியும் என்ற நம்பிக்கை. அதன் வழியாக எழுவதுதான் நகைச்சுவை. பொழுது போக்குக்காக சினிமா உலகிற்குத் திரும்புவதை ஏற்றுக் கொள்ள முடியாதது.

முரண்பாட்டைப் புரிதலில் நகைச்சுவை எழும் என்பர். ஆனால் பலர் இந்த முரண்பாட்டு நடைமுறையைப் புரிந்து கொள்வதில்லை. “தமிழ் வாழ்க” என்று கார்ப்பரேசன் கட்டிடத்தில் எழுதிவிட்டு சென்னையில் வாழ்வோரில் மூன்றில் ஒரு பங்கு சேரியில் வாழ்ந்தால் எப்படித் தமிழ் வாழும்? சென்னையின் “கானா” பாடகர்களுக்குப் பரிசு கொடுத்துப் பெருமைப்படுவது ஒரு முரண்பாடு. அவர்கள் வாழ்வது கல்லறையின்/சுடுகாட்டின் பாதையோரங்கள். அவர்கள் பாடல் பயிற்சி பெற்றது இறந்தவரை எடுத்துச்செல்லும் ஊர்வலத்தில் கேட்கும் இசைக்கருவிகளின் முழக்கம். இது தமிழரின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப வேண்டும்.

தமிழ்மொழி உலகின் தொடக்கம் என்று பாடுவது ஒரு பக்கம். இந்தமொழி ஆட்சித்துறையில், நீதித்துறையில், கோவில் மொழியில் இடம் பெறவில்லை, ஆனால் எதிர்க்கப்படுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் எல்லோர் செவியிலும் ஒலிக்கிறது. இருப்பினும் தீண்டாதவர் என ஒதுக்கப்பட்டோர் நிலை வற்றாத நதிபோல் வரலாறு ஓடுகிறது.

மோயிசன் செங்கடலைக் கடந்து இஸ்ரயேல் மக்களை மீட்டார் என்பது விவிலியத்தில் கூறும் பெரிய சாதனை என்பர். ஆனால் நமது நாட்டு நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது ஒரு பெரிய சாதனை அல்ல. நமது நாட்டின் சில தெருக்களில் அடித்தளச் சமமாக நடந்து போவது அதைவிடக் கடினமானது. இந்நிலை நம்மைச் சிரிக்க வைக்க வேண்டும். நம்மிடம் திறமைகளோ அதற்கான வழிமுறைச் சொத்துக்களுக்கோ பஞ்சமில்லை. நம்மிடம் நகைச்சுவை உணர்வுக்குக் குறைவில்லை. அது ஏதோ மேலெழுந்த வாரியாக, பொழுதுபோக்காக அமைந்து விட்டது. சிந்திக்கத் தூண்டவில்லை. தன்னம்பிக்கையுடன் சிரிக்கத் தூண்டவில்லை. அதனால்தான் நாம் நம்பிக்கையோடு அதிகம் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

அழகியலின் சுருக்கம்:
அழகியல் என்றதும் மூன்று அம்சங்களை நினைவூட்டுகிறது. 
ஒன்று: அழகை விரும்பிய ஆர்வமான தேடல்;
இரண்டு: நகைச்சுவையால் அடிக்கடி மனம் விட்டுச் சிரித்தல்; 
மூன்று: நெருக்கமான உறவு தேடும் தீர்க்கமுடியாத தாகம். 
எந்த ஒரு சமூகமும் - நம்பிக்கை வாதிகளோ அல்லது பகுத்தறிவுவாதிகளோ - மறுக்க முடியாத ஒரு வாழ்க்கை அனுபவம்.

அழகைத் தேடும் உணர்வு என்பது சிதறிக்கிடக்கும் வாழ்வு அம்சங்களின் பின்னால் புதைந்து மறைந்திருக்கும் முழுமையைக் காணும் திறமை என்று பொருள். உண்மையான அழகின் அனுபவம் நமது புலன்களை மழுங்கும் அளவிற்கு மயக்கத்தில் தள்ளுவதல்ல. மாறாக அழகிய பொருட்கள், எழில்மிகு இயற்கை சூழ்நிலையில் பதுங்கியிருக்கும் முரண்பாடான அசிங்கத்தைக் கண்டுணர நமது புலன்களைக் கூர்மையாக்குகிறது. அழகைக் கண்டு அனுபவிக்கத் திறமை கொண்டவர்தான் அதற்கு முரணான அநாகரிகத்தை, அநீதியை, அடிமைப்படுத்தும் தீயசக்தியைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனாலும் கூட நமது அழகு அனுபவத்தைச் சீர்படுத்துவதற்கு நகைச்சுவை இயல்பும் வேண்டும். வரலாற்றில் சர்வாதிகாரிகள் அனைவரும்; நகைச்சுவையாளரை, கேலிச்சித்திரம் வரைபவரை அடக்கி வைப்பார்கள். ஏனெனில்; அவர்கள் அழகு வடிவத்தில் தோன்றும் மனித விலங்கின் ஆடையற்ற அம்மணமான நிலையை வெளிக்காட்டி விடுவார்கள்.

நமது அழகு தேடும் உணர்வு சிறப்பான எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்வது என்று புரிந்து கொண்டால், நமது தோல்விகளையும், வாழ்வின் பின்னடைவுகளையும் வென்று விடலாம் என்ற நிச்சயமான நிலையைக் கொண்டாடும் நம்பிக்கையைக் கொடுப்பதுதான் நகைச்சுவை. ஆனாலும் கூட அன்புதான் இவற்றை நிறைவு படுத்தும், நெருங்கிய நட்புதான் அதற்கு முழுமை தரும். அன்பில்லை (காதல்) என்றால் இசையும் கூட ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் ஆகும். 

Monday, January 17, 2022

தலையங்கம்: தமிழால் இணைவோம்... தமிழ் வளம் காப்போம்...

தலையங்கம்: தமிழால் இணைவோம்... தமிழ் வளம் காப்போம்...     




வணக்கம்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.   (குறள்:  உழவு -1036) 

அனைவருக்கும் இனிய பொங்கல், தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.
புதிய ஆண்டில் காலெடுத்து வைக்கின்றோம்.  இந்த ஆண்டு நம் அனைவருக்குமே வாழ்வில் வளத்தையும் சிறப்பையும் வழங்க வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆண்டின் தொடக்கம் மகிழ்ச்சியான செய்தியை நமக்கு அளித்தது. 

ஆம். மைசூரில் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்க்கல்வெட்டுகள் தமிழகம் வரவிருக்கின்றன என்ற செய்திதான் அது. இது செய்தியாக மட்டுமில்லாமல், உடனடியாகக் கல்வெட்டுக்களும் ஆரம்பக்கால நிலையில் எடுக்கப்பட்ட மைப்படிகளும் விரைவில் மின்னாக்கம் செய்யப்படவேண்டும். அவை இணையத்தில் வலையேற்றம் செய்யப்பட வேண்டும்; அச்சு நூல்களாக வெளி வரவேண்டும். ஆரம்பத்தில் 60,000 கல்வெட்டுகள் எனப் பேசப்பட்டு வந்த நிலையில் தமிழகக் கல்வெட்டு ஆய்வாளர்கள் சிலர் அடங்கிய குழு நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்து வந்து கொடுத்த தகவலுக்குப் பின்னும், தொடர் ஆய்வுகளுக்குப் பின்னும்  இந்த எண்ணிக்கை ஏறக்குறைய பாதியாகக் குறைந்தது என்பதை நீதிபதி அவர்களின் அறிக்கை வெளிப்படுத்தியது. ஆக, இச்சூழலில்  உடனடியாகக் கல்வெட்டுகளை மின்னாக்கம் செய்யும் ஒரு தனிக்குழுவைத் தமிழக அரசின் தொல்லியல் துறை தனிப்பணிக்குழுவாக  நியமித்து இப்பணியை இவ்வாண்டே முழுமைப்படுத்தி அச்சு வடிவிலும் இணையத்திலும் இவற்றை முதலில் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதே எங்களைப் போன்ற வரலாற்று ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 

இதனை அடுத்து ஜனவரி 12ஆம் தேதியை தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நாள் எனப்பிரகடனப்படுத்தியது. இந்த நாளில் அயலகத் தமிழர்களின் நலன்காக்க நலத்திட்டங்களையும் தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம். நிகழ்ச்சியில் உலகளாவிய தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021 அக்டோபர் மாதம் தொடங்கி நமது செயல்பாடுகளில் சிலவற்றை நினைவு கூர்வோம்;
-சங்க கால நாகரீகம் பற்றிய சான்றுகள் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற  பொற்பனைக்கோட்டை பகுதிக்குச் சென்று அப்பகுதியைப் பற்றிய தகவல்கள் சேகரித்ததோடு அதன் அருகாமை பகுதியில் தொல்பழங்கால ஈமச் சடங்குகள் தொடர்பான இடங்களையும் பார்த்துப் பதிவு செய்து வந்தது தமிழ் மரபு அறக்கட்டளை குழு.

-கீழடி அகழாய்வுக் களத்திற்கு நேரடியாக மாணவர்களையும் அழைத்துச் சென்று ஒருநாள் மரபுப்பயணத்தின் வழி தொல்லியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது நமது குழு.

-அக்டோபர் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை குழுவினர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை கிளையினர் 2022ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ள திட்டங்கள் பற்றிய செய்திகளைப்  பகிர்ந்து கொண்டனர்.  அத்துடன், மதுரை ரயில் நிலையத்திலிருந்து கடந்த காலங்களில் நீக்கப்பட்ட மீன் சின்னத்தை மீண்டும் பொறிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டோம். அதனை உடனடியாகச் செயல்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

-உலக  மரபு வார விழா வாரத்தை 2021, நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை என யுனெஸ்கோ நிறுவனம் பிரகடனப்படுத்தி இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு 19ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு வரலாற்று ஆய்வுரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாள் நிகழ்வும் ஒரு சிறப்பு அம்சத்தை எடுத்துக்கொண்டு ஆராய்ந்ததன் வழி மிக முக்கிய ஆவணங்களாக இந்த ஆய்வுரைகள் உருவாக்கம் கண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் யூட்யூப் வலைப்பக்கத்திலும் அவை இணைக்கப்பட்டன.

-டிசம்பர் மாதத் தொடக்கம் ஐரோப்பியத் தமிழர் நாள் கொண்டாட்டத்துடன் இனிதே தொடங்கியது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஜெர்மனியின் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை 2 ஐம்பொன் சிலைகள் வைத்து திருவள்ளுவருக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்தது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அதே நாளில் ஐரோப்பியத் தமிழர் நாள் விழா  தமிழ் மரபு அறக்கட்டளையினால் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் லிண்டன் அருங்காட்சியகத்திலிருந்து நேரலையாக அருங்காட்சியகப் பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். 

-இலங்கையின் மூதறிஞர் எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் நினைவாக  உலகளாவிய வகையில் ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அக்கினிக்குஞ்சு வார இதழும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பும் இணைந்த வகையில் உலகப் பேரறிஞர்கள் பலரது உரைகளுடன்  இருநாள் கருத்தரங்கம் இம்மாதம் நடைபெற்றது. மூதறிஞர் எஸ்.பொ.  அவர்களைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களைத் தற்கால இளைஞர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி பயனுள்ள வகையில் அமைந்தது.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகப் பிரிவின் வெளியீடாக ` புதிய நூல், `வரலாற்றில் பொய்கள்`  வெளியீடு கண்டது.   நமது ஆய்வு நூல்கள் வெளியீட்டின் வரிசையில் இந்த நூலும் இணைகின்றது.

தமிழால் இணைவோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி    




Saturday, January 15, 2022

தமிழ் முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டம்

-- கோம்பை அன்வர்


நீங்களும் - அதாவது முஸ்லிம்களும் - பொங்கல் கொண்டாடுவீர்களா? என்று சந்தேகமும் ஆச்சர்யமும் கலந்த பல நண்பர்களின் கேள்விகள், எனக்கோ அல்லது என் குடும்பத்தினருக்கோ புதிதல்ல. ஒன்றல்ல, இரண்டல்ல; 16 வகைக் காய்கறிகளுடன் காலகாலமாகப் பொங்கலைக் கொண்டாடிவரும் எங்களுக்கு இது போன்ற கேள்வி வேடிக்கையாக இருக்கும் என்றால் மிகையாகாது.  இருப்பினும் இந்தக் கேள்விக்குப் பல காரணங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அவற்றில் மிக முக்கியமானது இஸ்லாம் மற்றும் தமிழக இஸ்லாமியர் குறித்த தட்டையான புரிதல் ஆகும். இஸ்லாம் குறித்த தட்டையான புரிதலுக்கு பல இஸ்லாமியர்களும் விலக்கல்ல. அதுபோலவே இந்து - முஸ்லிம் வரையறைகளைக் கடந்த தமிழ்ப் பண்பு ஒன்று பொங்கலுக்கு உண்டு என்பதை இந்துக்களிலும் பலர் அறிந்திருப்பதில்லை.

தமிழ் முஸ்லிம்கள் வரலாறு:
டெல்லி சுல்தான்களையும் முகலாயரையும் வைத்துப் பெரும்பாலும் கட்டமைக்கப்பட்ட இந்திய வரலாற்றில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஓர் இஸ்லாமியச் சமூகம் தமிழகம், இலங்கை மற்றும் தென் கிழக்கு ஆசியா வரை பரவிக் கிடப்பதும், அது தனக்கென்று பல தனித்துவக் கூறுகளைக் கொண்டிருப்பதும் பலருக்கும் தெரியாது.  சங்க காலம் தொட்டே தமிழகத்திற்கும் அரேபியா உட்பட்ட மேற்கு ஆசியாவிற்கும் இடையே கடல்வழி வணிகத் தொடர்புகள் இருந்ததைப் பல சங்கப் பாடல்களும், சமீபத்திய அகழ்வாராய்ச்சிகளும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. அரேபியப் பாலைவனத்தில் 7ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் பரவத் தொடங்கிய சமகாலத்திலேயே அது வணிகர்கள் மூலமாக தமிழகத்தை வந்தடைந்தது. இங்கு நிலவிய சமூகச் சூழல், இறைநேசர்கள் எனப்படும் சூபிக்களின் பரப்புரை மற்றும் தமிழக அரசர்களின் ஆதரவுடன் இஸ்லாம் தமிழகத்தில் வேரூன்றியது. இதற்குக் கிட்டத்தட்ட 500 வருஷங்களுக்குப் பிறகே வட இந்தியாவில் இஸ்லாம் ஒரு வலுவான மதமாகப் பரவியது என்ற தகவல் இங்கே முக்கியமானது. அதிலும், அங்கே போர்கள், படையெடுப்புகள் இதில் முக்கியப் பங்கு ஆற்றின. இங்கே வாணிப ரீதியிலான உறவு மிக இணக்கமான ஓர் உறவை உருவாக்கியிருந்தது.  திராவிடக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான பள்ளிவாசல்கள், பிற சமயங்களுக்கு இணையாக தமிழ் இலக்கியத்திற்கு இஸ்லாமியரின் பங்களிப்பு, சிலம்பம் என்று தமிழ் மண்ணோடு இஸ்லாம் ஐக்கியமானது. பன்மைத்துவம் இறைவாக்காக திருக்குரானில் (சூரத்துல் ஹுஜுராத் 49.13) அமைந்திருக்கையில், இது இயல்பானதுதான்.  ஆகவே, தமிழர் திருநாளான பொங்கலையும் தமிழ் முஸ்லிம்கள் இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு கொண்டாடிவருகின்றனர். 

ஊருக்கேற்பக் கொண்டாட்டம்:
இங்கே இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தமிழகம் முழுக்கப் பிராந்தியத்திற்கும், சாதிக்கும் ஏற்ப சின்னச் சின்ன வேறுபாடுகளுடனேயே பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. உதாரணமாக, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சார்ந்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் மற்றும் சைவ பிள்ளைமார் சமூகத்தினர் சங்கு ஊதி பொங்கலைக் கொண்டாடுவார்கள்.  இதுபோலவே விவசாயத்தைச் சார்ந்து வாழும் தமிழ் இஸ்லாமியரிடையே பொங்கல் கொண்டாட்டங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு மாறும். தேனி மாவட்டத்தில் உள்ள எங்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கலுடன் ஆரம்பிக்கும் திருநாள் மதிய விருந்தில் 16 வகைக் காய்கறிகளுடன் களை கட்டும். அன்று மட்டும் கவிச்சி கிடையாது. பரிமாறப்படும் பெரும்பாலான காய்கறிகள் வயலிலிருந்து வந்தவையாக இருக்கும். மாட்டுப் பொங்கல் அன்று பண்ணை மாடுகள் குளிப்பாட்டி அலங்கரித்து, கொம்புக்கு வர்ணம் பூசி ஊரை வலம் வரும். மதுரை மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் பரம்பரை பரம்பரையாக, பங்காளிகளாக, மஞ்சு விரட்டு இன்றும் பங்கேற்கும் முஸ்லிம் குடும்பங்களும் (நாலு வீட்டுக்காரங்க குடும்பம்) உண்டு.  

சுமார் 50/60 ஆண்டுகளுக்கு முன் மேலத்தஞ்சை - கீழத்தஞ்சை என அழைக்கப்பட்ட ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழ்ப்பகுதியின் பெரும்பாலான கிராமங்கள் முஸ்லிம் மிராசுதாரர்களைக் கொண்டது. மிராசுதாரர்கள் என்பவர்கள் நிலச்சுவான்தார்கள், இவர்களின் வாழ்வாதாரமே விவசாயம். “பொங்கல் வருவதற்கு முன்பே, வயலிலிருந்து ஒரு மூட்டை நெல் மட்டும் அறுவடைசெய்து மிராசுதார் வீட்டுக்கு வரும். மூட்டையுடன் ஒரு பெரிய கட்டு அடிக்கப்படாத நெற்கதிர்கள் வரும். சிட்டுக்குருவிகள் சாப்பிடுவதற்காக நெற்கதிர்களை முற்றத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடுவார்கள். நெல்லை அவித்துக் காயவைத்து தை முதல் நாள் சமைப்பதற்கு ஏதுவாக கைக்குத்தல் அரிசியாக மாற்றி, தை முதல் நாள் அதாவது பொங்கலன்று அதை சமைத்து விருந்துண்டு கொண்டாடுவார்கள். இந்தக் கொண்டாட்டத்துக்கு ‘புது அரிசிச் சோறு விருந்து’ என்று பெயர். அக்கம் பக்கம் வீட்டார்களையும் உறவினர்களையும் அழைத்து இந்த விருந்தோம்பல் நடக்கும். கிட்டத்தட்ட கூட்டாஞ்சோறுபோலத்தான் இதுவும். இதுதான் தஞ்சை ராவுத்தர் வீட்டுப் பொங்கல்” என்று நினைவுகூர்கிறார் கூத்தாநல்லூரைச் சார்ந்தவரும், ‘முஸ்லிம் முரசு’ இதழின் முன்னாள் ஆசிரியருமான சடையன் அமானுல்லா.

“ராவுத்தர் வீட்டுப் பொங்கல் என்றால், கவிச்சி இல்லாமலா? ஆகையால், புது அரிசிச் சோறு விருந்துக்கு இறைச்சி ஆணமோ அல்லது தால்ச்சாவோ சமைத்துப் பரிமாறுவார்கள். அனைத்து மிராசுதாரர்களின் வீட்டிலும் புது அரிசிச் சோறு விருந்து ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தாலும், ஒரே நாளில் விருந்து வைத்தால் யாரும் சாப்பிட வர மாட்டார்கள் என்பதால், முதல் மூன்று நாட்களோ அல்லது ஏழு நாட்களோ தங்களுக்குள் கிழமையைப் பிரித்துக்கொண்டு விருந்துபசாரம் நடக்கும். வீட்டில் விருந்து நடப்பதற்கு முன்னால் அந்த முஹல்லாவில் இருக்கும் பள்ளிவாசல் இமாமிற்கும் மோதியாருக்கும் மற்ற பள்ளிவாசல்களின் ஊழியர்களுக்கும் மறக்காமல் தூக்குச் சட்டியில் சாப்பாடு அனுப்பிவைப்பார்கள். இதுதான் தஞ்சை முஸ்லிம்கள் கொண்டாடும் பொங்கல்” என்று அடுக்குகிறார் சடையன் அமானுல்லா.  

மாட்டுப் பொங்கலும் உண்டு:
“அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் நாளன்று, மிராசுதார் வீட்டு உழவு மாடு, கறவை மாடு வில் வண்டி இழுக்கும் மாடுகள் அனைத்தும் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, மதுரை - தேனி மாவட்ட முஸ்லிம்களைப் போல் மாடுகளைக் குளிப்பாட்டி வண்ணச் சாயங்கள் பூசி, நெட்டியால் (pith) செய்யப்பட்ட மாலைகளைக் கழுத்து, கால், நெற்றி என அணிவித்து, மாட்டுக்குப் பொங்கல், வாழைப்பழம், கரும்பு கொடுத்து சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். சிறுவர்கள் மாடுகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, வீட்டுக்கு வீடு மாட்டுக்காகக் கொடுக்கப்படும் வாழைப்பழம், கரும்பு, அகத்திக் கீரைகளை வாங்கி மாடுகளுக்குக் கொடுப்போம். அது ஒரு காலம்” என்கிறார் சடையன் அமானுல்லா. மிராசுதாரர்களோ இல்லையோ, குமரி மாவட்ட முஸ்லிம்களிடம் ‘புது அரிசிச் சோறு விருந்து’ போன்றவை புழக்கத்தில் இருந்துள்ளன.

கிழக்கு ராமநாதபுரம் வட்டார முஸ்லிம்களின் பொங்கல் கொண்டாட்டங்கள் சற்றே மாறுபடுகின்றன. “விளைந்தது வீட்டிற்கு வருவதை வரவேற்க போகி நாளில் வீட்டைக் கழுவிச் சுத்தம்செய்து வைப்பார்கள். தை முதல் நாளன்று புது நெல்லை குத்தி அரிசியாக்கி அதைப் பொங்கல் வைப்பர். இதன் பெயர் பாச்சோறு. புத்தரிசியை உரலில் இடித்து, துள்ளும் பக்குவம் வந்தவுடன் அத்தோடு கருப்பட்டி அல்லது வெல்லம் கலந்து அதைக் கொழுக்கட்டைபோல் பிடித்து வைப்பர். இதன் பெயர் துள்ளுமாவு. பாச்சோற்றுடன் துள்ளுமாவு வைத்து ஏழு அல்லது பதினோரு கண்ணி  வைத்துக் கட்டப்பட்ட மரிக்கொழுந்தையும் வைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி பிரார்த்தித்துவிட்டு அதனை அனைவருக்கும் பகிர்ந்துண்ணக் கொடுப்பர்.

வீட்டில் நெல்லைச் சேமித்து வைக்கும் மரசலின் நான்கு மூலைகளிலும் சிறிது பாலை ஊற்றி ஊதுபத்தி கொளுத்தி வைத்து இறைவனிடம் வேண்டியபின் புது நெல்லைக் கொட்டி சேமித்து வைப்பர். வீட்டில் மாடு கன்று வைத்திருப்போர் அவற்றைக் குளிப்பாட்டி செந்துருக்கப் பொட்டு வைத்து கொம்பிற்கு வர்ணம் பூசி, படைத்த பாச்சோற்றில் அதற்கான பங்கையும் வாழை இலையில் வைத்துக் கொடுத்து மகிழ்வர்” என்கிறார் முதுகுளத்தூரைப் பூர்விகமாக கொண்ட வரலாற்று ஆய்வாளர் ஜாகிர் ஹுசைன்.  இது போன்று ஊர் ஊருக்கு, சிறு மாற்றங்களுடன் விவசாயத்தோடு ஒன்றிப்போன தமிழ் முஸ்லிம் சமுதாயம் பொங்கலை இஸ்லாமிய நெறிக்குள் கொண்டாடிவருகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடல் கடந்து தென் கிழக்கு ஆசியாவில் வணிகம் செய்தவர்கள் தமிழ் முஸ்லிம்கள். இப்படி வெளிநாடு சென்ற இடத்திலும் கொண்டாட்டம் தொடரும். மலேசியாவின் ஈப்போ நகரில் உள்ள தமிழ் முஸ்லிம் சமுதாயம் பொங்கலைக் கொண்டாடிவருகின்றனர்.

மலேசியத் தமிழ் முஸ்லிம்கள் கொண்டாட்டம்:
இவ்வாறு பரவலாக தமிழ் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாடினாலும் இதிலிருந்து மாறுபட்டவர்களும் உண்டு. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, தட்டையான புரிதலுடன், அரபுக் கலாச்சாரத்தை இஸ்லாமிய வழிமுறைகளாக குழப்பிக்கொள்ளும் இயக்கவாதிகளின் பிரச்சாரத்தால் இத்தகு கொண்டாட்டங்கள் அந்தந்த வீட்டோடு முடங்கியதும் உண்டு. ஆனால், காலம் மாறுகிறது. திராவிட இயக்கமும், தமிழக அரசும் அதனை மதம் கடந்த தமிழர்த்  திருவிழாவாக முன்னிறுத்துவதும் இந்த மாற்றத்திற்கான முக்கியமான காரணம் ஆகும்.

வரலாற்று ஆய்வாளர் ஜாஹிர் ஹுசைன் கூற்றுப்படி, “மார்க்கத்தை ஏற்ற பின்னே எங்களுக்குக்  கிடைத்தவைதான் நோன்புப் பெருநாளும் தியாகத் திருநாளும். அதற்கும் மூத்த எங்களின் பண்பாட்டுத் திருநாள் பொங்கல் என்பதை நாம் மறந்துவிட முடியாது. பொங்கல் தமிழர்கள் நம் அனைவருக்குமான திருநாள். எங்களின் பண்பாட்டு வேர்களை எதன் பெயராலும் பட்டுப்போகச்செய்ய முடியாது.” அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்களும் பண்பாட்டுத் தளத்தில் மாற்றங்களைக் கோருகின்றன. முன்னெப்போதையும்விட பொதுச் சமூகத்துடன் பிணைந்து நிற்பதை விரும்பும் முஸ்லிம் சமூகம் தனக்கான பண்பாட்டு வேர்களை மீண்டும் தேடிப் பிடிக்கிறது. மதரீதியிலான பிளவுகளைப் பரப்பப்படும் அரசியலுக்கு மொழிரீதியிலான ஒற்றுமை மூலம் அது பதில் கொடுக்கிறது. தமிழ்ப் பொங்கல் இனி கூடுதலாகத் தித்திக்கும்!

 


------------


Friday, January 14, 2022

ஆநிரைகள் ஆரோக்கியம் காக்கும் திருவிழா



-- இரா. முத்துநாகு


பண்டிகைகள்தான் தனித்தனித் தீவுகளாய் இருக்கும் மனிதர்களை இணைக்கும் பாலங்கள். மனிதர்களுடன் கால்நடைகளையும் இணைக்கும் பண்டிகை என்றால் அது, பொங்கல் திருநாள் மட்டுமே. இதனால்தான், தங்களைக் காக்கும் கடவுளுக்கு விழா எடுத்துக் கொண்டாடுவதைப் போல தங்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் ஆடு, மாடுகளையும் கொண்டாடுகின்றனர். 

வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்து செம்மண் செஞ்சாந்து வண்ணமிடும் வழக்கம் சிமென்ட் பெயின்ட் வருகையால் நிறம் மாறிவிட்டாலும், கால்நடைகளை கொண்டாடுவதில் சமரசம் செய்துகொள்வதில்லை கிராமத்து எளிய மக்கள். இவர்களின் அந்தக் கொண்டாட்டத்தில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

மலைகளில் தொழு அமைத்து மேய்ந்திடும் மாடுகளை தை மாதம் முதல் நாள் தங்கள் ஊரில் உள்ள தம்பிரான் கோயிலுக்கு ஓட்டி வருவதுடன் தொடங்குகிறது அந்தக் கொண்டாட்டம். அடுத்து, மாடுகள் அனைத்துக்கும் மூங்கில் இலை, வெள்ளைப் பூண்டு, சுக்கு நெருஞ்சி இலை, வெற்றிலை, மிளகு, கோழிமுட்டை தலைசுருளிவேர், உயிருடன் உள்ள கோழிக்குஞ்சு, யானை நெருஞ்சி, வேலமரத்துப்பட்டை மஞ்சள், பெருங்காயம் இவைகளை வேப்பெண்ணெய் ஊற்றி அரவை செய்து அதை உருண்டையாக திரட்டுகிறார்கள். இது கால்நடைகளுக்கான மருந்து உருண்டை மருந்து அரைப்பதை ஆணும் பெண்ணும் பாகுபாடின்றி செய்கின்றனர். 

உருண்டை திரட்டுதல் முடிந்ததும், அந்த மருந்து உருண்டைகளைத் தட்டில் வைத்து, தலையில் சுமந்தபடி செங்கரும்பால் பந்தலிட்ட தம்பிரான் கோயில் வாசலுக்குச் சுமந்து வருகின்றனர் பெண்கள், பூசாரி மருந்து தட்டுகளை இறக்கி வைக்கவும், அனைவரும் மருந்து உருண்டைகளையும், தம்பிரான் கோயிலுக்குள் அடைத்து வைத்துள்ள மாடுகளையும் வணங்குகின்றனர். 

ஊர் பெரியவர்கள் சாமி கும்பிட்டு முடிக்கவும், சாமியை மீண்டும் வணங்கி மருந்து உருண்டைகளை எடுத்துக் கொடுக்கிறார் பூசாரி. காளைகளை வளர்ப்பவர்கள், அதை வாங்கி 'தம்பிரான் காளை' என்ற கோயில் காளையின் வாயில் திணிக்கிறார்கள். பின்னர் அனைத்து மாடுகளுக்கும் கொடுக்கிறார்கள். கன்றுகளுக்கு மருந்தினை தண்ணீர் ஊற்றிக் கலக்கி, கொட்டம் என்ற மூங்கில் தூம்பான பாத்திரத்தின் உதவியுடன் கடைவாயில் திணித்து ஊற்றுகின்றனர். மருந்து கொடுப்பதை யாரும் பார்க்கக்கூடாது என்பதால் திரைச்சீலையின் பின்தான் இது நடக்கும்.

இந்த நிகழ்வின்போது கோயில் முன்பாக வரிசையாக அமர்ந்துள்ள பெரியவர்கள் புல்லாங்குழல் இசைக்கின்றனர். இசைக்கு மாடுகளும் இசையும்தானே. மருந்து கொடுக்கும் போது திமிறும் மாடுகள், குழலிசை கேட்டதும் உருகி அமைதியாகின்றன. இதன் பின்னர் தொழுமாடுகளுக்குச் சாம்பிராணி புகை காட்டும் பூசாரி, விபூதியை மாடுகள் மீது திணித்து, 'பிணி நீக்கட்டும்' என்று அருள்வாக்கு சொல்வதோடு நிறைவடைகிறது இந்தத் திருவிழா. 

"விவசாய வேலைக்கான மாடுகளை மலை மாடுகளிலிருந்தே தை மாதப் பிறப்பன்று தேர்ந்தெடுக்கிறோம். அன்றைய தினம் ஈன்ற காளை கன்றுகளை தம்பிரான் காளைக்காக நேர்ந்து விடுவோம். ஆண்டுக்கு ஒருமுறை இந்த மருந்தைக் கொடுப்பது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது. இந்த மருந்தைக் கொடுப்பதால் மாடுகளுக்கு எந்த நோய்த் தாக்குதலும் வருவதில்லை. அதேபோல் மனிதர்களுக்கும் தம்பிரான் கோயில் முன்பாக கிண்டப்படும் மருந்துக்கழியை சாப்பிட்டால் நோய் வராது என்பது எங்களது நம்பிக்கை" என்கிறார் தேனி மாவட்டத்தில் இருக்கும் வீரச் சின்னம்மாள்புரம் ஊர் பெரியவரான சீனிவாசன். உண்மைதான் என்பதுபோல் மணிகள் குலுங்கத் தலையசைக்கின்றன அருகில் நிற்கும் மாடுகள்.

-----




பொங்கலுக்கு சிறப்பான தனித்துவம் உண்டு

-- தொ. பரமசிவன்


old pongal pic.jpg
தமிழகத்தில் கொண்டாடப்படும் வேறு எந்தப் பண்டிகையையும் விட பொங்கலுக்கு சிறப்பான தனித்துவம் உண்டு. இரண்டு அம்சங்களில் பொங்கல் மற்ற பண்டிகைகளில் இருந்து வேறுபடுகிறது. முதலாவதாக இது ஒரு தேசிய இன திருவிழா. சாதி, சமயங்களுக்குள் மற்ற பண்டிகைகள் சிறைப்பட்டுக் கிடக்க பொங்கல் மட்டும் ஓர் இன திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  இரண்டாவதாக பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு இறப்பு தீட்டுக்கள் கிடையாது. ஒரு வேளை பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும் மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.

சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் பொங்கலுக்கு படைக்கப்படுபவை. இவை உயர் சாதியினர் என சொல்லப்படுபவர்கள் விலக்கப்பட்டவை. இன்றும் இவை பெரும் கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்குச் சாட்சி.

தைப்பொங்கலை அடுத்து தென்மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழா "சிறுவீட்டுப் பொங்கல்". மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலமிட்டு சாணத்தில் பூ சொருகி வைக்கும் பழக்கம் உண்டு. பீர்க்கு, பூசணி, செம்பருத்தி ஆகிய பூக்களே சாணத்தில் செருகப்படும். மாலையில் வாடிவிடும் இந்த பூக்களைச் சாணத்துடன் சேர்த்துக் காய வைத்து விடுவார்கள். பொங்கல் முடிந்து 8 - 15 நாட்கள் கழித்து சிறு வீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். பெண் பிள்ளைகளுக்காகவே வீட்டுக்குள் களி மண்ணால் ஆன சிறு வீடு கட்டப்படும். பொங்கல் அன்று சிறுவீட்டு வாசலில் பொங்கலிடப்படும். பிறகு பொங்கலையும் பூக்களால் ஆன எழுத்துகளையும் பெண்கள் ஆற்றில் விடுவர்.

"மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்" எனும் திருப்பாவை பாடல் பலரும் அறிந்ததாகும். ஆனால் சங்க இலக்கியங்களில் தை நீராடல் குறித்தும் குறிப்பிடப்படுகிறது. "தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி" என்கிறது பரிபாடல். இங்கே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது, ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளை குறிப்பிடவில்லை. மதிநிறைந்த நன்னாள் என்றுதான் குறிப்பிடுகிறார். மதி நிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி. எனவே திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது. தைப்பூசம் என்பது தைப்பௌர்ணமி. தமிழ் மாதங்கள் அனைத்தும் பௌர்ணமியிலிருந்தே தொடங்குகின்றன. எனவே தைப்பூசம் என்பதுதான் தமிழ்ப் புத்தாண்டு. மார்கழி நீராடலில் தொடங்கும் திருப்பாவை நோன்பு தை நீராடலில் முடிகிறது. இந்த காலகட்டம்தான் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் காலகட்டம்.

தமிழ்ப் புத்தாண்டு பற்றி பேசுகிற இரு தரப்பாரும் இந்த விஷயத்தில் விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நமது பண்பாடு குறித்த தெளிவுடன் தான் நாம் தமிழ்ப் புத்தாண்டு குறித்த விஷயத்தை அணுக வேண்டும்.

உழைக்கும் மக்கள், வீட்டுப் பெண்களின் நம்பிக்கைகள் சார்ந்து கொண்டாடப்படும் இந்திய திருவிழாக்கள் தமிழர்களின் நன்றி உணர்வை வலியுறுத்துபவை. வெப்ப மண்டல நாடுகளில் அறுவடைத் திருநாட்கள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. மற்ற பண்டிகைகளில் நாம் பிரார்த்தனைகளை முன்வைக்கிறோம். வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் முன் வைக்கிறோம். ஆனால் அதற்கு மாறாக பொங்கலில் நமது வாழ்க்கைக்கு அடிப்படையான உழவர்களுக்கும் சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இப்படி பல்வேறு அம்சங்களில் மாறுபட்டு விளங்குகிற பொங்கலைக் கொண்டாட வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.
[தொ.ப. அவர்கள் நூலிலிருந்து...]

குறிப்பு:
"19 ஆம்ம் நூற்றாண்டு பொங்கல் விழா" புகைப்படத்தை வழங்கியவர் தோழர் காந்தி பாலசுப்பிரமணியன்
Gandhi Balasubramanian  https://www.facebook.com/gandhibl அவர்களுக்கும்
தொ. பரமசிவன் அவர்களது இந்த குறிப்பை தட்டச்சு செய்து வழங்கியவர்  புதுவை தோழர் சிவ இளங்கோ
Siva Ilango https://www.facebook.com/siva.ilango.7 அவர்களுக்கும்
நன்றி.

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்





வாழ்க்கைக் கணக்கு

வாழ்க்கைக் கணக்கு

WhatsApp Image 2022-01-09 sivabalan.jpeg
படம்: சிவபாலன்
பாடல்: அமீர் 


வாழ்க்கைக் கணக்கு

-- அமீர்

ஒரு முற்றிய ரோஜா
மேனி கருத்து
கூனி நடந்து
அந்திவானின் ஒளியில்
லாபக்கணக்கு பார்க்கிறது

லாபமென்று எதைச் சொல்ல?
நட்டமென்று எதைச் சொல்ல?

பள்ளிக்குப் போகாமல்
பஞ்ச பிழைப்புக்கு ஓடிய
பிஞ்சு பருவத்தில்
உழைப்புக்கு
லாபமென்று தொடங்கிய
நட்ட  கணக்கு எண்ணிக்கை
செழித்து வளர்ந்தது

கட்டிக்கொண்ட கணவன்
வெட்டிக்கொண்டு போனதில்
கண்டபடி நட்டம்

கொட்டிவளர்த்த பிள்ளைகளும்
கைகழுவிக் கொண்டதில்
நட்டமோ நட்டம்

பிறந்தது முதல்
இடைவிடா பயணத்தில்
பருவமெல்லாம் நட்டம்

நிலவறை நோக்கிய
பயணத்தில்
நடக்காமல் போவது மட்டுமே
இவளுக்கு லாபம்....

"இப்படி
இயங்கியவளை யான் காணவே
என்ன தவம் செய்துவிட்டேன்" என்று
பழைய கவியின் பாடல்
நினைவுக்கு வந்ததால்...

அதிசயிக்கிறேன்
காதல் கொள்கிறேன்
உழைப்பைத் துணையாக்கிய
இந்த அறுபதைக் கடந்த
அழகியைப் பார்த்து !!!



ameer .jpgsivabalan.jpg
--------------------------------

காணும் பொங்கலும், சிறு வீட்டுப் பொங்கலும் தமிழர் பண்பாட்டின் அடையாளமா ?

-- முனைவர் வே.கட்டளை கைலாசம்



”காணும்பொங்கல் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகவும், சிறுபெண்கள் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடும் விழாவாக சிறுவீட்டுப் பொங்கலும் உள்ளது”

"தமிழர்கள் கொண்டாடும் திருவிழாக்களில் தலை சிறந்ததாகவும், தனிச் சிறப்புடையதாகவும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது" இயற்கை வளங்கள் நிறைந்த தமிழகப் பகுதிகளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த தமிழர்கள் இயற்கையை வழிபடுவதையும், இயற்கைக்கு நன்றி செலுத்துவதையும் தம்முடைய பழக்க வழக்கமாகக் கொண்டிருந்தனர். அப்படியாக தமிழர்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவித்து "உழவுக்கு வந்தனை செய்வோம்" என்பதற்கிணங்க இயற்கையில் விளைந்த நெல், கரும்பு, வாழைக்காய், கனி, தானியங்களை இயற்கை தெய்வமான சூரியனுக்குப் படைத்து உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பசு, கன்று காளைமாடு போன்ற உயிரினங்களையும் சிறப்பிக்கும் வகையில் அவற்றிற்கும் விழா எடுப்பதே இன்றுவரை தமிழர்களின் பண்பாடாக இருந்து வருகிறது.

இந்தப் பண்டிகையை  மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், சிறு வீட்டுப் பொங்கல், என தை மாதத்தில் அடுத்தடுத்து ஒவ்வொரு வகையில் தமிழர்களால் கொண்டாடப்படுவது ஏன்? இப்பொங்கல் ஆரம்பக் காலத்தில் எப்படிக் கொண்டாடப்பட்டது?

தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்று பொங்கல் விழா,  "பொங்கல்" என்பது கஞ்சி வடிக்காது சமைத்த அன்னம் என்பதாகும், பொங்குதல், செழிப்பின் வெளிப்பாடு, மிகுதியினால் வெளிவருவது, செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போகாமல் சரியளவு நீர் வைத்துச் சமைத்து, பருப்புக் குழம்புடன் உண்பது பொங்கல் மரபு, "பருப்புக் கேட்கும் பச்சரிசிச்  சோறு, செருப்புக் கேட்கும் சித்திரை மாத வெயிலில் " என்பது பழமொழி..

தை மாதம் முதல்நாள் தமிழர்களால் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது, சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் மகரசங்கராந்தி எனப்படுகிறது, பிற மாநிலத்தவர் சூரிய வழிபாட்டு நாளை  மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர், தமிழர்கள் பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர், சிலப்பதிகாரம் திங்களையும், ஞாயிரையும், மாமழையையும் போற்றி  வணங்கித் தொடங்குகின்றது.

தமிழர் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டு வரும் மரபினர், தை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வந்த தமிழரின் இலக்கியங்கள் 'தைஇத் திங்கள் தண் கயம் படியும் பெருந் தோட் குறுமகள்' (நற்றிணை - 80) என்று நற்றிணையிலும், 'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' (குறுந்தொகை-196) என்று குறுந்தொகையிலும்,  'தைஇத் திங்கள் தண்கயம் போல' (புறநானூறு -70, ஐங்குறுநூறு-84)' என்று புறநானூற்றிலும்,  ஐங்குறுநூற்றிலும் பதிவு செய்துள்ளன, 'தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ' (கலித்தொகை-59)  எனக் கலித் தொகையும் கூறுகிறது.

தமிழர் கொண்டாடும் பொங்கல் விழாவினை ஐந்து நிலைகளில் காண முடிகிறது,  மார்கழி இறுதிநாள் போகி என்று கூறி பழையன கழிந்து புதியன புகுத்துகின்றனர், தை மாதம் முதல் நாளன்று தைப் பொங்கல் விழா, இதனையடுத்து உழவுக்குத் துணைநின்ற மாடுகளுக்கு நன்றி செலுத்த மாட்டுப்பொங்கல் என்றும், அதற்கு அடுத்த நாள் பெரியவர்களைக் கண்டு ஆசிபெற்று வருவதைக் காணும் பொங்கல் என்றும் கூறுகின்றனர். சிறு பெண்கள் சிறிய வீடு அமைத்துப் பொங்கலிடும் சிறு வீட்டுப் பொங்கல் பெரும்பாலும் பூச நட்சத்தரத்தன்று கொண்டாடுவது வழக்கம்,  தை மாதத்தின் வேறு நாட்களிலும் தென்மாவட்டத்தில்  குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

காணும் பொங்கல்:
உற்றார், உறவினர்கள் நண்பர்கள் எனப் பலரையும் கண்டு மகிழ்வது "காணும் பொங்கல்".  இந்தநாளில் வயதில் முதியவர்களை வணங்கி அருள் பெறுவது வழக்கம், உழைப்பாளிகள் கலைஞர்கள் எனப் பலரும் நன்றி தெரிவிக்கும் நோக்கில் தமக்கு உதவியவர்களைக் கண்டு வருவர்,  அவர்களும் அன்பையும் பரிசையும் வழங்கி வாழ்த்துவர்,  குறிப்பாக இது பொங்கல் படி கொடுத்தல் என்றே கூறப்படுகிறது,

கிராமங்களில் நாதசுர வித்துவான் போன்ற பல கலைஞர்களும்,  ஊரின் பொது வேலைகளைச் செய்வோர்களான லாந்தர் விளக்கு (மின்சாரம் வரும் முன் இருந்த கல்தூண் விளக்கு) ஏற்றுவோர், தெருக்களைச் சுத்தம் செய்வோர், மந்தை மேய்ப்போர் (ஊரின் மாடுகளை மேய்ப்போர்),  நாட்டார் தெய்வப் பூசாரிகள், ஊர்களில் துணி வெளுப்போர், முடி திருத்துவோர் எனப் பல தொழிலாளர்கள் ஊராரிடம் பொங்கப்படி பெறுவது வழக்கமாக இருந்தது. காணும் பொங்கல் என்பது தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இருந்துள்ளது, ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகள், மலைப்பகுதிகளுக்குப் பொங்கல் சோற்றினை எடுத்துக்கொண்டு குடும்பத்தோடும், நண்பர்களோடும் உண்டு மகிழ்வர் என்று கூறினார்.

சிறுவீட்டுப் பொங்கல்:
சங்க இலக்கியத்தில் சிறுவயதுப் பெண்கள் சிற்றில் கட்டி விளையாடுவதை 'பொய்தல்' 'வண்டல்' 'சிறுமனை' என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இன்றும் சிறு வயது உடைய அனைவரும் ஆற்றங்கரையில், கடற்கரையில் சிற்றில் கட்டி விளையாடுவதைக் காணலாம்,  சிறுமிகள் சிறுவீடு கட்டுவது என்பது சிறப்பான நிகழ்வு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் இதனைக் காணலாம்,  "சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி" என்று குறுந்தொகை கூறும் பாடலில் கடற்கரையில் சிறு வீடுகட்டி விளையாடிய போது   தலைவனோடு ஏற்பட்ட நட்பு என்பாள் தலைவி, ஆண்டாள் நாச்சியார் சிற்றிலைக் கண்ணன் "கண்ணன் உடைக்கும் படர் ஓசையை வெள்ளை நுண் மணல் கண்டு சிற்றில் விசித்திருப்ப வீதிவாய் ......" என்பர்.

பெரியாழ்வார் பாடலில் "சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே" என திவ்யபிரபந்தத்தில் கண்ணனின் விளையாட்டினைப் புனைந்துள்ளார். தமிழில் பிள்ளைத் தமிழ் இலக்கியம் தோன்றிய போது பெண்பால் பிள்ளைத்தமிழில் "சிற்றில்" என்ற தலைப்பில் பத்துப் பாடல்கள் பாடப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மரபில் பெண்கள் சிறுவீடு கட்டி விளையாடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இன்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சிறுவீடு கட்டி சிறுவீட்டுப் பொங்கல் விடுவதைக் காண முடிகிறது, மார்கழி மாதத் தொடக்கத்தில் இருந்தே பெண் பிள்ளைகள் வீட்டின் முன்னர் கோலமிட்டு சாணிப் பிள்ளையார் வைப்பர். அப்பிள்ளையாருக்கு பூசணி பூ வைப்பது வழக்கம். தை மாதப் பொங்கலுக்குப் பின்னர் வரும் பூச நட்சத்திரத்தில் பொதுவாக சிறு வீட்டுப் பொங்கல் விடுவர். தங்களுக்கு உகந்த நாட்களையும் தேர்ந்தெடுப்பர்.

வீட்டின் முற்றத்தில் குறுமணலால் சுவர் போல் கட்டி சிறு வீடு அமைப்பர். சிலர் காவியைக் கொண்டு சிறு வீட்டினை வரைவர். சிறுவீட்டுப் பொங்கல் அன்று பெண் பிள்ளைகள் பட்டாடை அணிந்து பொங்கல் விழா போலவே பொங்கலிட்டு மகிழ்வர். வீட்டின் முன்னர் தொடர்ந்து வைத்து வந்த சாணிப் பிள்ளையாரை எருவாகத் தட்டி வைத்திருப்பர். சிறு வீட்டுப் பொங்கலன்று அவற்றை எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்து விடுவ. சிறு பெண்கள் கூடி மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு விழாவாக சிறு வீட்டுப் பொங்கல் உள்ளது எனத் தமிழர்களின் பண்பாட்டில் பொங்கல் விழா இவ்வாறாகவே கொண்டாடப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இயற்கை நமக்களித்த செழிப்பினை கொண்டாடும் வகையிலும், அமைந்திருக்க வேண்டிய பொங்கல் கொண்டாட்டங்களை எரிவளி அடுப்பிலும், மின்சார அடுப்பிலும் புகையில்லா பொங்கல் என்று அடுப்பங்கரையிலேயே நவீன பொங்கலிட்டு தமிழர் திருநாளைக் கொண்டாடும் மக்களும் நம் மத்தியில் இன்றும்  இருக்கிறார்கள். காலத்திற்கு ஏற்ப கலாச்சாரத்தை மக்கள்  மாற்றினாலும், எந்தக் காலத்திலும் கலாச்சாரமும், அதன் அடிப்படையும் மாறாத ஒன்று.. அதற்கு அடையாளம் நம்முடைய தமிழ் இலக்கியங்களும், சுவடுகளுமே, மேலும் அவற்றைத் தம்முடைய தலையில் வைத்துத் தாங்கி நிற்கும் தமிழ்ச் சான்றோர்களுமே. இவ்வாறு தமிழர் பண்பாட்டின் அடையாளமாக நம் மத்தியில் நம்முடைய பல்வேறு செயல்பாடுகள் இருந்துகொண்டே இருக்கிறது நம்மையும் அறியாமலே!!!!!!!


முனைவர் வே. கட்டளை கைலாசம்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்  
ம.தி.தா.இந்துக் கல்லூரி
--------