Showing posts with label நா.முத்துநிலவன். Show all posts
Showing posts with label நா.முத்துநிலவன். Show all posts

Thursday, May 5, 2022

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

  —  நா.முத்துநிலவன்


பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும்  புலவர்களும்!




"திருவிளையாடல்" எனும் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத்தில் வரும் ஓர் உரையாடல் மிகவும் புகழ்பெற்றது -"பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்” இது, இன்றும் பொருத்தமாகவே உள்ளது!

பெரும்புலவர் சிலர், இன்றைய இளைஞர்களின் படைப்புகளைப் பார்த்து, தமிழைத் தப்பும் தவறுமாக எழுதுவதாக வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வருத்தம் ஒரு பக்கம் நியாயம் தான் என்றாலும், தமிழில் எழுத முயற்சி செய்வோரை, தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டிய சூழலில்தான் நாம் வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முயற்சி செய்வோரின் “கொழுந்து" முனையைக் கிள்ளிவிடாமல், செடியின் பழுத்த இலைகளைக் கிள்ளி அந்தச் செடிக்கே உரமாகப் போட வேண்டும்.

எழுதுவோரின் ஆர்வத்தைத் தூண்ட, அவர்தம் பிழையான தமிழைக் கவனமாகப் பார்த்து, ஆக்கவழியில் ஆலோசனை சொல்வதே அவர்தம் படைப்புத்திறனை வளர்க்கும் வழியாகுமே அல்லாமல், “க் ச் சரியா இல்லையே இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்?” என்று ஒரேயடியாகச் சொல்லி அவர்களை மனத்தளவில் ஒடுக்கிவிடுவது சரியல்லவே?

எழுத்துப் பிழையை விடவும் கருத்துப் பிழைதானே நமது கவனத்திற்கும் கண்டிப்புக்கும் திருத்துவதற்கும் உரியது? அதே திருவிளையாடல் புராணப்படத்தில் நக்கீரன் சொல்வதாக வரும் - "சொல்லில் பிழையில்லை,  இருந்தாலும் மன்னித்து விடலாம், ஆனால் கருத்தில்  பிழையிருக்கிறது, அதை ஒருக்காலும் ஒப்ப முடியாது!  எனும்  - உரையாடல் மிகவும் சரியானது. இந்த நக்கீரத்தனம்தான் இன்று தேவை! 

“இந்த எழுத்தாளரின், எழுத்தில் பல இடங்களில் க் ச் இல்லையே! என்ன தமிழ் இது?" என்பது பொருத்தமல்ல என்பதோடு, அதைப் பற்றியே கவலைப்பட்டு, அவரிடம் நல்ல கருத்துகள் நல்ல சிந்தனைகள் வளராமல் செய்துவிடுவதை நாம் ஏற்க முடியாதல்லவா? தப்போ சரியோ நல்ல சிந்தனை தமிழில் எழுதப்பட வேண்டும், எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து கொள்ளலாம். முயற்சியே தடுக்கப்பட்டால் பயிற்சியே அற்றுப்போகுமே?

பன்னாட்டுப் பொருளாதாரம் ஏற்படுத்திவரும் பண்பாட்டுக் குழப்பம் எனும் பெரும் இருட்டில், தமிழ் எழுத முன்வரும் இளைஞர்களின் சிறு பொறியைத் தட்டிக் கொடுத்துத்தானே பெருநெருப்பாக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான நகரங்களில் இருக்கும் பெரிய கடைகள் மற்றும் “பேரங்காடி”(சூப்பர்-மார்க்கெட்-மால்) இல், வாங்குவதும் விற்பதும் தமிழர். விற்கும் பெரும்பாலான பொருள்களும் தமிழ்நாட்டுப் பொருளாகவே இருந்த போதும் விற்பனைச் சீட்டை மட்டும், சுத்தமான-கலப்படமற்றஆங்கிலத்தில்தானே தருகிறார்கள்? தமிழக உணவு விடுதி,  கல்நெய்க்கடை (பெட்ரோல் பங்க்),  தங்குமிடம்,  துணிக்கடை,  நகைக்கடை,  பெரும் வணிக - மையம் எனப் பெருகிக் கிடக்கும் பன்னாட்டுப் பொருளியல் பண்பாட்டின் ஆங்கிலத் திணிப்பை, நமது அரசுகள் “கண்டும் காணாமலும்" இருக்கின்றன. இதில் மத்திய அரசின் இந்தித் திணிப்புக் கொடுமை வேறு இஞ்சி தின்ற குரங்காக இளிக்கும் சமூகத்தில் நாம் எவரிடம் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசுவது? நம் இளைஞர்கள்தானே பெரிய நம்பிக்கை? க் ச் போடும் குழப்பமே பல்லாயிரம் தமிழ்க் குழந்தைகளை அந்நியப்படுத்தி,  ஃபிரெஞ்சு,  ஜெர்மன்,  ஜப்பான் மொழிகளை விருப்பப் பாடமாக்கிவிடும் எதார்த்த நிலையிலிருந்து யோசித்தால் இந்த கசப்பான உண்மை தெரியும். 

திருச்சி மாநகரின் மத்தியப் பேருந்து நிலையம் அருகில்  உள்ள பேரங்காடியில் “உளுத்தங் கஞ்சி குடிக்க விரும்பினால்,  முதலில் பணம் கட்டவேண்டும். (இதுதான் பன்னாட்டு பொருளியல் பண்பாடு / நம் ஊர்க் கடைகளில் சாப்பிட்ட பின் பணம் தரலாம், பெருமுதலாளி நம்மை நம்ப மாட்டார் என்பதன் அடையாளமே இந்த முன்பணம்!).    பணம் கட்டிய பிறகு, “Uluthankanchi-Rs.15-00 என்ற ஆங்கிலச் சிட்டையைப் பெற்றுத் தந்தால்தான் உளுத்தங்கஞ்சியே குடிக்க முடியும் என்கிற போது, ஆங்கிலவழிக் கல்வி பெருகிய இந்த நாளில், இளைஞர்கள் மிகப் பெரும்பாலோர், இணையம், செல்பேசித் தொடர்புகள் அனைத்திலும் ஆங்கிலத்திலேயே புழங்கிவரும் சூழலில், தமிழில் எழுத ஆர்வத்துடன் முன்வரும் இளைஞர்களின் பெரிய குழப்பமே இந்த க் ச் பிரச்சினைதான். எனில், க், ச் விடுபடும் (சந்தி) பிழைகள் பற்றிய தமிழ்ச் சான்றோர் பார்வையில் மாற்றம் தேவை. மாறுவது மரபு, இல்லையேல் மாற்றுவது மரபு என்பதே சரியானது.

பொருள் மாறுபடும் இடங்களில் மட்டும் க், ச் எழுத்துகளில் உரிய எழுத்தைப் போட்டுக் கொள்ளலாம். தொல்காப்பியம்,  நன்னூல் இலக்கணம் காட்டும் எல்லா இடங்களிலும் போட வேண்டியதில்லை “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று,  நன்னூலார் தன் கடைசி நூற்பாவில் சொன்னதை இந்த இடத்தில் பொருத்திக் கொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.

உதாரணமாக - முருகனைக் கும்பிட்டு நிற்பவன், "வேலை கொடு” என வேண்டி நிற்கும்போது "வேலைக் கேட்கிறானா, வேலையைக் கேட்கிறானா?" என்ற குழப்பம் வர வேண்டியதில்லை. சொற்களின் தனிப் பொருளை விடவும் சூழ்நிலை தொனிப் பொருள்தான் முக்கியம் அல்லவா? அப்படிப் பார்க்கும் போது, க் வந்தால் ஒரு பொருள் (வேலைக்கொடு - உன்னிடம் இருக்கும் வேலைக்கொடு) க் வராவிட்டால் வேறொரு பொருள் (எனக்கு ஒரு வேலை கொடு) என இலக்கணத்தைச் சொல்லி அந்த ஏழையை அச்சுறுத்த வேண்டியதில்லை.

இது போல, ஒற்றெழுத்துகள் தேவையில்லாத இடங்களே அதிகம்.

உன்னைக் கேட்கவில்லை - உன்னை கேட்கவில்லை 
எனக்குத் தெரியாது - எனக்கு தெரியாது
தஞ்சைப் பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்
இவற்றில் எந்தப் பொருள் மாற்றமும் இல்லை. இரண்டாம் நான்காம் வேற்றுமை உருபுகள் (ஐ கு), மற்றும் அன்மொழித் தொகை வரும் இடங்களில் வல்லின ஒற்று மிகும் என்பது இலக்கணம். எனினும் இவை இப்போது தேவையற்றுப் போயின. எளிதாகவும் இருக்கிறதல்லவா? (எனக்கு மகள் என்பதே சரி, எனது மகள் என்பது அஃறிணையைக் குறிக்கிறது என நாம் இலக்கணம் சொன்னாலும் எனது மகள்தானே வழக்கில் உள்ளது? அஃறிணையாக அப்பனே மகளைச் சொல்வதா? என்றா கேட்பது? இவை போலும் இடங்களைக் கண்டறிந்து புதிய இலக்கணம் செய்ய வேண்டும். உருபு மயக்கத்தை விட்டு விட்டு, எழுதிப் பழகும் இளைஞர்களுக்கு எளிமைப் படுத்தித்தர வேண்டியதும் அவசியம்.

நமது தமிழ் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் தேவையான இடங்களில் மட்டும்தான் க் ச் ட் த் ப் ற் என்னும் (வல்லினம் மிகும்) ஒற்றெழுத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களைத் தமிழ் எதிரியைப் போலப் பார்க்க வேண்டியதில்லை. 
பின்வரும் தலைப்புச் செய்திகளைப் பாருங்களேன்  — 
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்   — தினமலர்   — 04-01-2021 
கொரோனாவை கட்டுப்படுத்த   — தினகரன்   — 04-01-2021 
இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி  — தினத்தந்தி   — 04-01-2021
7வயது சிறுமியை கொலைசெய்த   — இந்து தமிழ்   — 30-12-2020 
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு   — தீக்கதிர்   — 10-12-2020 
மனைவியை கொலை செய்தவருக்கு   — புதுகை வரலாறு   — 10-12-2020 
அரியலூர் பெரம்பலார் மாவட்ட தேர்தல்   — முரசொலி  — 01-01-2021 
100 பணக்கார பெண்க ளில்   — தினமணி   — மகளிர் மணி-23-12-2020

இச் செய்திகளில் க்  ச் இல்லை , எனினும் பொருள் மாறுபடவில்லை.  எனவே, "இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும் விதவாதன மன்னே " (நன்னூல் -165)  எனும் நூற்பா இதற்கான விதி விலக்கைத் தருவன பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊடகம் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை:
நமது தமிழ்ச் சமூக ஊடகங்களின் பாராட்டுக்குரிய தமிழ் வளர்ச்சிப் பணிகளைக் காணும்போது, நாம் தொடர்ந்து ஆதரவு தருவது அவசியம்.  ஊடகம் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை. அதற்கான இலக்கிய இலக்கணக் கருத்து வளர்ச்சிக்காக முயற்சி செய்வோரை மறக்காமல் பாராட்ட வேண்டும்.  எனினும் சில தமிழ் இதழ்களில், தமிழ் எழுத்துப் பிழைகள் மலிந்திருப்பதையும் மறுக்க முடியாது. தொடர்ப் பிழைகள், பிற மொழிச் சொற்களையே தலைப்புச் செய்தியில் தருவது, தமிங்கிலத்தில் தலைப்புச் செய்திகளைத் தருவது, தமிங்கிலத்திலேயே இதழ்ப் பெயர்கள் தொடர்வது பற்றிய விமரிசனம் தனி!  அது பண்பாட்டு அடிப்படையிலான விமர்சனப் பகுதி! மொழி வளர்ச்சிக்குத் தடையான இலக்கணச் சிக்கலைப் பற்றிப் பேசுவதால், தொடர்புடைய கருத்துக்காகச் சொல்ல நேர்ந்தது.

தமிழ் இளைஞர்களில் மிகப்பெரும்பாலோர் "தமிங்கில" எழுத்தில் தகவல் தந்து - பெறுவதையும், திறன்பேசி, செல்பேசித் தொடர்புகளை (Contact) ஆங்கிலத்தில் வைத்திருப்பதையும் குறைசொல்ல முடியவில்லை. அரசு, பெற்றோர், கல்வித் திட்டங்களில் இவர்களுக்கு வழிகாட்ட வில்லையே! (தமிழாசிரியர் சிலர்கூட இப்படி இருப்பதுதான் நகைமுரண்!)

தொழில் நுட்பம் அறியாமை, தமிழின் மீதான அலட்சியம் இவை மட்டுமே காரணம் என, இதை மேம்போக்காகவும் சொல்லிவிட முடியாது.

தகவல் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் சிலர் தமிழில் எழுத ஆர்வம் இருந்தும், எந்த இடத்தில் க் வரும் எந்த இடத்தில் ச்  வரும்  என்பன போலும் குழப்பத்தில் இருப்பதும் முக்கியக் காரணம். அதோடு வெளிநாடு வாழ் தமிழ்க் குழந்தைகள்  ஆர்வத்தின் காரணமாகத் தமிழ் படிக்கத் தொடங்கும்போது, உயிர் எழுத்து, மெய்யெழுத்துக் கற்ற பிறகும் கூட இந்த ஒற்றெழுத்து (சந்தி) பிழை பற்றிய அச்சமே பெரிதும் தடையாக இருப்பதாக அங்கு வாழும் தமிழ்ப் பெற்றோர் நினைக்கிறார்கள். எனவே, இந்த வல்லினம் மிகும் இடம், மிகா இடம் பற்றிய பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும்.

கூகுளில் “வல்லினம் மிகும் இடம், மிகா இடம்” என்று தேடினால் பெரும் பட்டியலே கிடைக்கும், தமிழறிஞர் பலரும் நமது இலக்கண நூல்களிலிருந்தும் எடுத்துத் தந்து நூல்களை வெளியிட்டு வருகிறார்கள். 

எனினும் பொருள் மாறுகிறதா என்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே எனது கருத்து. 

இல்லையெனில் சந்தி (ஒற்று) பிழை பற்றிய கவலை வேண்டாம் என்பதைப் புதிய இலக்கணமாக ஏற்க வேண்டும். இரண்டு சொற்கள் சந்திக்கும் இடத்தில் தோன்றும் எழுத்து என்பதால் சந்திப்பிழை என்கிறோம். இதற்கும் ஒரு பட்டியல் போட வேண்டும். அந்த வேலை தனி, அதற்கொரு குழு பணியாற்ற வேண்டும்!

கணினியிலும் செல்பேசியிலும் தமிழ் எழுத்துருக்களுக்கான மென்பொருள் பற்றிய அறியாமை ஒரு பக்கம் என்றால், சோம்பேறித்தனம் வேறு அதனோடு சேர்ந்து கொள்கிறது. இது பற்றி நம் நண்பர், கணினித் தமிழறிஞர் திரு நீச்சல்காரன் (எ) ராசாராம் நல்லதொரு முயற்சி எடுத்து “எழுத்துப் பிழை திருத்தி” (வாணி, நாவி) எனும் மென்பொருள்களை உருவாக்கியிருக்கிறார். (பார்க்க - http://vaani.neechalkaran. com/) எனினும் சந்திப்பிழை திருத்தி தரும் தெளிவைவிடவும் சந்தி இலக்கணம் பற்றிய பார்வை மாற்றமே கூடுதல் தெளிவைத் தரும் என்பதே எனது தெளிவு.

கணினி அறிவியல் படிக்கும் பள்ளி, கல்லூரிப் பிள்ளைகளுக்குக் கூட, கணினித் தமிழ் நம் பாடத்திட்டத்தில் இல்லை , தமிழ் மென்பொருள், தமிழ் எழுத்துருப் பயிற்சி ஏதும் தரப்படுவதில்லை என்பது பெருங்கேடு! இருந்திருந்தால் இந்த இலக்கணக் குழப்பம் தீர ஒரு முயற்சியாவது எழுந்திருக்கும். தமிழறிஞரும் கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் முன்முயற்சியில் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டு க செயல்பட்டு வரும் "கணினித் தமிழ்ச் சங்கம்", இதற்கான பயிற்சிகளை ஆண்டு தோறும் கொடுத்து வருகிறது. 

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம், மதுரை உலகத் தமிழ்ச்சங்கம்,  மற்றும் தேனித் தமிழ்ச்சங்கம் போலும் சில அமைப்புகளும், தஞ்சை முனைவர் பா.ஜம்புலிங்கம்,  திண்டுக்கல் தனபாலன், காரைக்குடி முனைவர் மு.பழனியப்பன்,  சென்னை என்னாரெசுப் பெரியார், முதலான தமிழ்க்கணினி அறிஞர்களும், ஏராளமான தமிழ் வலைப்பதிவர்களும் இதனைச் செய்து வருகின்றனர் எனினும் பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே கணினித் தமிழ் எனும் பிரிவைச் சேர்ப்பதுதான் இலக்கண அச்சமற்ற கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல பலனைத் தரும்.

ஆங்கிலம் எனும் ஒரு மொழியே நம் நாட்டுக்குள் வராத காலத்தில் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலில் பொறியியல் அறிவு இல்லையா? எந்திரப் பொறியியல் உள்ளிட்ட (BE-EEE, ECE, CIVIL, CSC) பாடம் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. மொழிப்பாடமும் உயர்கல்வியில் இல்லை ! இதோடு, மருத்துவம் படிக்கும் பிள்ளைகள் மருந்துக்கும் கூட தமிழ் படிக்க வேண்டியதில்லை என்பது, தமிழையும் தமிழரையும் அழிக்கும் செயல் அல்லவா?

இதுபற்றியெல்லாம் முடிவெடுக்க, அரசியல் துணிச்சல் மிக்க அரசு வேண்டும். மொழி-இலக்கண எளிமைக்கான பணிகள் சமூக அரசியல் பொருளியலுடன் தொடர்புடையது. "மௌண்ட் ரோடு" அண்ணா சாலை ஆனபிறகும் துக்ளக் இதழ் பல்லாண்டுகளாக “மௌண்ட் ரோடு" என்றே தனது முகவரியில் எழுதி வந்தது. தந்தை பெரியார் தந்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். அரசாணை வழி நடைமுறைப் படுத்தியபோதும், பத்தாண்டுக்கும் மேலாக பழைய எழுத்துகளை தமிழ்த்திரை உலகம் விடவில்லை என்பதையும் மறந்து விட முடியாது! 

தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைப் பணிகளை அரசுதான் செய்ய முடியும். 

இதைப் புரிந்து மக்களும் செயல்பட வேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க வேண்டாமல்லவா? தும்பைச் சரியாகப் பிடியுங்கள் தமிழர்களே!!






"இலக்கணம் இனிது"
ஆசிரியர்: நா.முத்துநிலவன்
பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு, ஜனவரி 2021

நூலில் இருந்து . . . . . 

Saturday, January 29, 2022

திருவள்ளுவ மாலை: ஒரு மீள்பார்வை

--  நா.முத்துநிலவன்


திருவள்ளுவ மாலை எனும் நூல், திருக்குறளின் பெருமைகளையும்,  திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து  எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.  ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி  எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற்  சிறப்பு. திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து பாடல்கள் உள்ளன. ஐம்பத்து மூன்று புலவர்கள் பாடியுள்ளார்கள். இடைக்காடர் ஔவை யார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன – எனும் இந்த வரிகளும் இக்கட்டுரைக்கான ஆதார நூலும் விக்கிப்பீடியாவில் உள்ளன. திருக்குறளை ஆழ்ந்து படித்தவர்கள், திருக்குறளைப் புகழ்ந்து(?) எழுதப்பட்ட திருவள்ளுவமாலை என்னும் நூலைப்பற்றி அறிந்திருப்பார்கள்.

திருவள்ளுவமாலை என்னும் நூல், திருக்குறள் தோன்றி சுமார் ஆயிரம் ஆண்டு  கழித்துத் தொகுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனை எழுதியவர் ஒருவரா, பலரா என்னும் சந்தேகம் எழுவதோடு, திருக்குறளின் மூலக் கருத்துகளுக்கு முற்றிலும் முரணான கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது என்பதால் இது பற்றிய ஆய்வை இக்கட்டுரையின் வழி முன்வைக்கிறேன். 

திருதராட்டிர ஆலிங்கனம்:
மகாபாரதக் கதையில் “திருதராஷ்டிர ஆலிங்கனம்” என்றொரு தொடர் வரும். இறுதிப் போரில் தன்மகன் துரியோதனனைக் கொன்ற பீமனை, பிறகு பழி வாங்க நினைப்பான் துரியோதனன் தந்தையான திருதராட்டிரன். ஆனால், கண்பார்வையற்ற தன்னால் அவனுடன் போரிட்டுக் கொல்ல முடியாது என்பதால், பீமனை அருகில் அழைத்து, இருகரங்களாலும் பீமனை நெருக்கி அணைத்தே கொல்லத் திட்டமிடுவான். வழக்கம்போல இதனை முன் உணர்ந்த கண்ணன், தந்திரமாகத் தடுத்துவிடுவான் என்றாலும், இப்படி “நெருக்கி அணைத்தே கொன்று விடத் திட்டமிடுவது” என்னும் பொருளில் “திருதராட்டிர ஆலிங்கனம்” என்னும் தொடர், இன்றும் மக்கள்  வழக்கு உரையாடலில் கூட சொல்லப்படுகிறது.  திருவள்ளுவ மாலைக்கும் இந்தத் தொடர் பொருந்தும்! அதாவது குறளில் இல்லாததையும் பொல்லாததையும் இருப்பதாகச் சொல்லி புகழ்ந்தே இழிவுபடுத்தி திருக்குறளின் புகழைக் கெடுத்து விடுவது! இது எல்லாருக்கும் புரிந்துவிடாது என்பதே இந்நூலைத் தொகுத்தவர்களின் உளவியல் அறிவு! இன்று வரை,  திருவள்ளுவ மாலை எனும் நூல் திருக்குறளையும் திருவள்ளுவரையும் புகழ்ந்து எழுதப்பட்டதான பொதுப் புத்தியே இதற்குச் சான்று! 

திருவள்ளுவ மாலை என்னும் பொய் மாலை:
திருவள்ளுவ மாலையில், (நாலடி கொண்ட  நேரிசை/இன்னிசை வெண்பா 53 உடன், குறட்  பாக்கள் 2 சேர்த்து) மொத்தம் 55 வெண்பாக்கள்  உள்ளன.  இதில் –  முதல் வெண்பா அசரீரி (ஆளற்ற ஒலி) எழுதியதாக உள்ளது! இரண்டாம் வெண்பா – கலைமகள் எழுதியதாக உள்ளது  மூன்றாம் வெண்பா – இறையனார் எழுதியது. இதிலிருந்தே இது எந்த அளவிற்கு மிகையானது என்பது புரியும். இறையனார் என்னும் பெயரிலான புலவர் ஒருவர் சங்க இலக்கியமான குறுந்தொகையில் ஒரு பாடல் எழுதியதாக உள்ளது. (பாடல் எண் – 02) இதில் இறையனார் என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, பெரிய புராணத்தில் (படலம் – 52, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்) என ஒரு கதை உள்ளது. இதை  வைத்து, “திருவிளையாடல்” என்றொரு திரைப்படமும் வந்தது! உண்மையில் சங்கக்  குறுந்தொகை அடிக்குறிப்பில் இப்படி எதுவும் இல்லை!, நாகேஷ் – தருமியும் இல்லை, சிவாஜி கணேச – சிவனும் இல்லை!  “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீர – ஏ.பி.நாகராஜனின் புகழ்பெற்ற வசனமும் இல்லை! இதற்கு, கரந்தைப் பாவலர் பாலசுந்தரம் எழுதிய ஓர் இலக்கிய நாடகமே ஆதாரம்! இந்தப் பெயரோடு திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல் என்ன கதை!  இந்தக் கதைக்குரிய இறையன் பெயரைத் திருவள்ளுவ மாலையில் சேர்த்தது நல்ல நகைச்சுவை! (இறையனார் வேறு எந்த சங்கப்  பாடலும் எழுதியிருப்பதாகவோ, சங்கம் பற்றிய பற்பல கற்பனைகளுக்கு இடம்தந்த இறையனார் அகப்பொருள் என்னும் பிற்கால இலக்கண நூல்தவிர திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடந்ததாக வேறெந்த ஆதாரமும் இல்லை!)  

நான்காம் வெண்பா – உக்கிரப் பெருவழுதி எனும்  மன்னன் எழுதியதாக உள்ளது. ஆனால் இந்த மன்னன் எழுதியதாக சங்கஇலக்கியத்தில் இரண்டு பாடல்கள் நற்றிணை(98) அகநானூறு(26) உள்ளன. இரண்டுமே அகப்பாடல்கள்!  (https://ta.wikipedia.org/s/twd) எனில் இதையும் நம்புவதற்கில்லை! எனினும் இதைத் தொகுக்க உதவியிருக்கலாம். அதோடு பாடல் ஒன்றையும் எழுதியிருக்கலாம் என்று வேண்டுமானால் ஏற்கலாம் என்றாலும் காலக் குழப்பம் நீடிக்கிறது. அப்படி வைத்துக் கொண்டாலும், அந்த சங்கப்  புலவர்கள் 49பேர், மற்றும் இந்த நால்வர் ஆக 53தானே வரவேண்டும். 55பேர் திருவள்ளுவ மாலையில் எழுதியிருக்கிறார்களே என்றும் குழப்பம் வருகிறது. ஏனெனில் அதே நூலில் (இறையனார் அகப்பொருளில்) உள்ள “கடைச்சங்கப் புலவர்கள்” பட்டியலில் உள்ள பலர் பெயர் இந்த  திருவள்ளுவ மாலையில் இல்லை! அதில் இல்லாத பலர் பெயர்கள் இதில் உள்ளன! அட என்னடா! இந்த மதுரைக்கு (நகரில் அரங்கேற்றப்பட்ட திருவள்ளுவ மாலை நூலுக்கு) வந்த சோதனை!

இந்த நூல், பலபெயர்களில் ஒருவர் அல்லது  ஒரு குழுவினரே பலபெயர்களில் எழுதியிருக்கலாம் என்று நான் சொல்வதற்கான ஆதாரங்கள் – வள்ளுவர் பாடாததை யெல்லாம் பாடியதாகப் புகழும் பாடல்கள் பல உள்ளன.  வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என முப்பாலே பாடியிருக்க, அவர் பாடாத நான்காம் பொருளான வீடும் குறளில் உள்ளதாகப் புகழ்வது “அறம் முதலாகிய மும்முதற் பொருள்” என,  தொல்காப்பிய (செய்யுளியல் நூற்பா-102) தமிழ்நெறியில் எழுதப்பட்ட திருக்குறளில், வட மொழியில் உள்ள (தர்ம அர்த்த காம மோட்சம் எனும்) நான்காவது பொருளான வீடுபேறு இல்லை!  ஆனால் திருக்குறள் வீடுபேறு எனும் நான்காம் பொருளையும் பாடி இருப்பதாகப் பெருமையோடு பாராட்டும் பத்து வெண்பாக்கள் இதில் உள்ளன (திருவள்ளுவ மாலை பாடல் எண்கள் –  7, 8, 19, 20, 22, 33, 38, 40, 44, மற்றும் 50) பத்துப் பொய்களில் குத்து மதிப்பாய் ஒரே ஒரு பொய்யைப் பார்ப்போம்;  

அறம்பொரு ளின்பம்வீ டென்னும் அந்நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பானோர் பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார். 
              (பாடல் 8: மாமூலனார், திருவள்ளுவ மாலை)

இதற்கு விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன். வடமொழி வேதம் சொன்னதையே வள்ளுவர் பாடினார் என்பது வர்ண தர்மத்தை வலியுறுத்தியே வேதமும், மனு(அ)தர்ம நூலும், பகவத்கீதையும் பாடியிருக்க, இவற்றுக்கு எதிரான “மனித சமத்துவத்தை”  வலியுறுத்தியே வாழ்வியல் பாடியிருக்கும் வள்ளுவரை வேதம் சொன்ன வழிகளைத் தமிழில் பாடியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன? இப்படியான ஒன்பது வெண்பாக்கள் உள்ளன.  (பாடல் எண்கள் –  2, 4, 15, 18, 28, 30, 32, 37 மற்றும்  42) இதற்கும் ஓர் உதாரணம் பார்ப்போம்; 

அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தால் தெளிய – முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
ஓதவழுக் கற்ற துலகு.
              (பாடல் 37:  மதுரைப் பெருமருதனார், திருவள்ளுவ மாலை)

வள்ளுவர் மனிதரே அல்ல, தெய்வத்தன்மை வாய்ந்தவர் எனப்புகழ்வது  – மிகையாகப் புகழ்வது நம் காலத்திலும் சாதாரணமாக நடப்பதுதான். என்றாலும் “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதப் பாடலே அல்ல அல்ல அதையும் தாண்டி புனிதமானது” என, (கமலகாசன் போல) இதில் 9பாடல்கள் உள்ளன. இதுவும் வள்ளுவரின் இயல்புக்கு மாறானதுதான். அவர் சொல்வன்மையில் எதை எந்த அளவுக்கு எப்படிச் சொல்லவேண்டும் என்றவர். ஆனால் அவரைப் புகழ்கிறேன் பேர்வழி என்று இவர் மனிதரே அல்ல, தெய்வத்தன்மை பொருந்தியவர் என்பது அவருக்குப் பெருமையா என்ன? பாடல் எண்கள் – 1, 3, 6, 21, 28, 36, 39, 41, 49 இப்படி உள்ளன. இதற்கும் ஓர் உதாரணம் பார்ப்போம்; 

பொய்ப்பால பொய்யேயாயப் போயினபொய் அல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
              (பாடல் 49: தேனீக்குடிக் கீரனார், திருவள்ளுவ மாலை)

ஒருசில அருமையான பாடல்களும் உள்ளன வெறும் பொய்யைச் சொன்னால் எப்போதுமே பருப்பு வேகாதல்லவா? எனவே பொய்யைக் கொஞ்சம் உண்மை கலந்தும் தருவதுதானே உலக நடப்பு! இந்தக் கருத்துக் கேற்ப நல்ல சில பாடல்களையும் – திருக்குறளின் உண்மையான பெருமைகளைச் சொல்வதான பாடல்களும் இதில் உள்ளன. கபிலர் பாடல் அப்படி நல்லவிதமாகவே உள்ளது பாடலைப் பாருங்களேன்;

தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் – மனையளகு
வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி.
              (பாடல் 5: கபிலர், திருவள்ளுவ மாலை)

வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது. 

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நூல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஒரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர். எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை. 

தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் ‘வீடு’ பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் கு.ச.ஆனந்தன்.  நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியுள்ள அறிஞர் மு.அருணாசலம் அவர்களும் திருவள்ளுவமாலை திருக்குறளுக்குப் பெருமை சேர்க்காத வண்ணம் பொய்யாகத் தொகுக்கப்பட்டது என்னும் பொருளிலேயே கருத்துரைக்கிறார்.

எனவே, திருக்குறளை அதன் மூலம்கொண்டு மட்டுமே அறிவது நல்லது. மிகையாகப் புகழ்வதும் தவறு, பழிதூற்றுவதும் தவறு என்பதை, திருக்குறளையும் திருவள்ளுவ மாலையையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தால் புரியும் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு  (குறள்–423)


நன்றி:
வளரும் கவிதை:  நா.முத்துநிலவன் 

தீக்கதிர்: திருவள்ளுவ மாலை எனும் தில்லுமுல்லு மாலை
 நா.முத்துநிலவன்