Thursday, May 5, 2022

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

  —  நா.முத்துநிலவன்


பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும்  புலவர்களும்!




"திருவிளையாடல்" எனும் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத்தில் வரும் ஓர் உரையாடல் மிகவும் புகழ்பெற்றது -"பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்” இது, இன்றும் பொருத்தமாகவே உள்ளது!

பெரும்புலவர் சிலர், இன்றைய இளைஞர்களின் படைப்புகளைப் பார்த்து, தமிழைத் தப்பும் தவறுமாக எழுதுவதாக வருத்தப்படுகிறார்கள். அவர்கள் வருத்தம் ஒரு பக்கம் நியாயம் தான் என்றாலும், தமிழில் எழுத முயற்சி செய்வோரை, தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டிய சூழலில்தான் நாம் வாழ்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முயற்சி செய்வோரின் “கொழுந்து" முனையைக் கிள்ளிவிடாமல், செடியின் பழுத்த இலைகளைக் கிள்ளி அந்தச் செடிக்கே உரமாகப் போட வேண்டும்.

எழுதுவோரின் ஆர்வத்தைத் தூண்ட, அவர்தம் பிழையான தமிழைக் கவனமாகப் பார்த்து, ஆக்கவழியில் ஆலோசனை சொல்வதே அவர்தம் படைப்புத்திறனை வளர்க்கும் வழியாகுமே அல்லாமல், “க் ச் சரியா இல்லையே இவனெல்லாம் எதுக்கு எழுதுறான்?” என்று ஒரேயடியாகச் சொல்லி அவர்களை மனத்தளவில் ஒடுக்கிவிடுவது சரியல்லவே?

எழுத்துப் பிழையை விடவும் கருத்துப் பிழைதானே நமது கவனத்திற்கும் கண்டிப்புக்கும் திருத்துவதற்கும் உரியது? அதே திருவிளையாடல் புராணப்படத்தில் நக்கீரன் சொல்வதாக வரும் - "சொல்லில் பிழையில்லை,  இருந்தாலும் மன்னித்து விடலாம், ஆனால் கருத்தில்  பிழையிருக்கிறது, அதை ஒருக்காலும் ஒப்ப முடியாது!  எனும்  - உரையாடல் மிகவும் சரியானது. இந்த நக்கீரத்தனம்தான் இன்று தேவை! 

“இந்த எழுத்தாளரின், எழுத்தில் பல இடங்களில் க் ச் இல்லையே! என்ன தமிழ் இது?" என்பது பொருத்தமல்ல என்பதோடு, அதைப் பற்றியே கவலைப்பட்டு, அவரிடம் நல்ல கருத்துகள் நல்ல சிந்தனைகள் வளராமல் செய்துவிடுவதை நாம் ஏற்க முடியாதல்லவா? தப்போ சரியோ நல்ல சிந்தனை தமிழில் எழுதப்பட வேண்டும், எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து கொள்ளலாம். முயற்சியே தடுக்கப்பட்டால் பயிற்சியே அற்றுப்போகுமே?

பன்னாட்டுப் பொருளாதாரம் ஏற்படுத்திவரும் பண்பாட்டுக் குழப்பம் எனும் பெரும் இருட்டில், தமிழ் எழுத முன்வரும் இளைஞர்களின் சிறு பொறியைத் தட்டிக் கொடுத்துத்தானே பெருநெருப்பாக்க வேண்டும்?

தமிழ்நாட்டின் மிகப் பெரும்பாலான நகரங்களில் இருக்கும் பெரிய கடைகள் மற்றும் “பேரங்காடி”(சூப்பர்-மார்க்கெட்-மால்) இல், வாங்குவதும் விற்பதும் தமிழர். விற்கும் பெரும்பாலான பொருள்களும் தமிழ்நாட்டுப் பொருளாகவே இருந்த போதும் விற்பனைச் சீட்டை மட்டும், சுத்தமான-கலப்படமற்றஆங்கிலத்தில்தானே தருகிறார்கள்? தமிழக உணவு விடுதி,  கல்நெய்க்கடை (பெட்ரோல் பங்க்),  தங்குமிடம்,  துணிக்கடை,  நகைக்கடை,  பெரும் வணிக - மையம் எனப் பெருகிக் கிடக்கும் பன்னாட்டுப் பொருளியல் பண்பாட்டின் ஆங்கிலத் திணிப்பை, நமது அரசுகள் “கண்டும் காணாமலும்" இருக்கின்றன. இதில் மத்திய அரசின் இந்தித் திணிப்புக் கொடுமை வேறு இஞ்சி தின்ற குரங்காக இளிக்கும் சமூகத்தில் நாம் எவரிடம் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசுவது? நம் இளைஞர்கள்தானே பெரிய நம்பிக்கை? க் ச் போடும் குழப்பமே பல்லாயிரம் தமிழ்க் குழந்தைகளை அந்நியப்படுத்தி,  ஃபிரெஞ்சு,  ஜெர்மன்,  ஜப்பான் மொழிகளை விருப்பப் பாடமாக்கிவிடும் எதார்த்த நிலையிலிருந்து யோசித்தால் இந்த கசப்பான உண்மை தெரியும். 

திருச்சி மாநகரின் மத்தியப் பேருந்து நிலையம் அருகில்  உள்ள பேரங்காடியில் “உளுத்தங் கஞ்சி குடிக்க விரும்பினால்,  முதலில் பணம் கட்டவேண்டும். (இதுதான் பன்னாட்டு பொருளியல் பண்பாடு / நம் ஊர்க் கடைகளில் சாப்பிட்ட பின் பணம் தரலாம், பெருமுதலாளி நம்மை நம்ப மாட்டார் என்பதன் அடையாளமே இந்த முன்பணம்!).    பணம் கட்டிய பிறகு, “Uluthankanchi-Rs.15-00 என்ற ஆங்கிலச் சிட்டையைப் பெற்றுத் தந்தால்தான் உளுத்தங்கஞ்சியே குடிக்க முடியும் என்கிற போது, ஆங்கிலவழிக் கல்வி பெருகிய இந்த நாளில், இளைஞர்கள் மிகப் பெரும்பாலோர், இணையம், செல்பேசித் தொடர்புகள் அனைத்திலும் ஆங்கிலத்திலேயே புழங்கிவரும் சூழலில், தமிழில் எழுத ஆர்வத்துடன் முன்வரும் இளைஞர்களின் பெரிய குழப்பமே இந்த க் ச் பிரச்சினைதான். எனில், க், ச் விடுபடும் (சந்தி) பிழைகள் பற்றிய தமிழ்ச் சான்றோர் பார்வையில் மாற்றம் தேவை. மாறுவது மரபு, இல்லையேல் மாற்றுவது மரபு என்பதே சரியானது.

பொருள் மாறுபடும் இடங்களில் மட்டும் க், ச் எழுத்துகளில் உரிய எழுத்தைப் போட்டுக் கொள்ளலாம். தொல்காப்பியம்,  நன்னூல் இலக்கணம் காட்டும் எல்லா இடங்களிலும் போட வேண்டியதில்லை “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று,  நன்னூலார் தன் கடைசி நூற்பாவில் சொன்னதை இந்த இடத்தில் பொருத்திக் கொள்வதில் தவறில்லை என்பதே என் கருத்து.

உதாரணமாக - முருகனைக் கும்பிட்டு நிற்பவன், "வேலை கொடு” என வேண்டி நிற்கும்போது "வேலைக் கேட்கிறானா, வேலையைக் கேட்கிறானா?" என்ற குழப்பம் வர வேண்டியதில்லை. சொற்களின் தனிப் பொருளை விடவும் சூழ்நிலை தொனிப் பொருள்தான் முக்கியம் அல்லவா? அப்படிப் பார்க்கும் போது, க் வந்தால் ஒரு பொருள் (வேலைக்கொடு - உன்னிடம் இருக்கும் வேலைக்கொடு) க் வராவிட்டால் வேறொரு பொருள் (எனக்கு ஒரு வேலை கொடு) என இலக்கணத்தைச் சொல்லி அந்த ஏழையை அச்சுறுத்த வேண்டியதில்லை.

இது போல, ஒற்றெழுத்துகள் தேவையில்லாத இடங்களே அதிகம்.

உன்னைக் கேட்கவில்லை - உன்னை கேட்கவில்லை 
எனக்குத் தெரியாது - எனக்கு தெரியாது
தஞ்சைப் பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்
இவற்றில் எந்தப் பொருள் மாற்றமும் இல்லை. இரண்டாம் நான்காம் வேற்றுமை உருபுகள் (ஐ கு), மற்றும் அன்மொழித் தொகை வரும் இடங்களில் வல்லின ஒற்று மிகும் என்பது இலக்கணம். எனினும் இவை இப்போது தேவையற்றுப் போயின. எளிதாகவும் இருக்கிறதல்லவா? (எனக்கு மகள் என்பதே சரி, எனது மகள் என்பது அஃறிணையைக் குறிக்கிறது என நாம் இலக்கணம் சொன்னாலும் எனது மகள்தானே வழக்கில் உள்ளது? அஃறிணையாக அப்பனே மகளைச் சொல்வதா? என்றா கேட்பது? இவை போலும் இடங்களைக் கண்டறிந்து புதிய இலக்கணம் செய்ய வேண்டும். உருபு மயக்கத்தை விட்டு விட்டு, எழுதிப் பழகும் இளைஞர்களுக்கு எளிமைப் படுத்தித்தர வேண்டியதும் அவசியம்.

நமது தமிழ் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளில் தேவையான இடங்களில் மட்டும்தான் க் ச் ட் த் ப் ற் என்னும் (வல்லினம் மிகும்) ஒற்றெழுத்துகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களைத் தமிழ் எதிரியைப் போலப் பார்க்க வேண்டியதில்லை. 
பின்வரும் தலைப்புச் செய்திகளைப் பாருங்களேன்  — 
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்   — தினமலர்   — 04-01-2021 
கொரோனாவை கட்டுப்படுத்த   — தினகரன்   — 04-01-2021 
இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி  — தினத்தந்தி   — 04-01-2021
7வயது சிறுமியை கொலைசெய்த   — இந்து தமிழ்   — 30-12-2020 
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு   — தீக்கதிர்   — 10-12-2020 
மனைவியை கொலை செய்தவருக்கு   — புதுகை வரலாறு   — 10-12-2020 
அரியலூர் பெரம்பலார் மாவட்ட தேர்தல்   — முரசொலி  — 01-01-2021 
100 பணக்கார பெண்க ளில்   — தினமணி   — மகளிர் மணி-23-12-2020

இச் செய்திகளில் க்  ச் இல்லை , எனினும் பொருள் மாறுபடவில்லை.  எனவே, "இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் க ச த ப மிகும் விதவாதன மன்னே " (நன்னூல் -165)  எனும் நூற்பா இதற்கான விதி விலக்கைத் தருவன பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊடகம் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை:
நமது தமிழ்ச் சமூக ஊடகங்களின் பாராட்டுக்குரிய தமிழ் வளர்ச்சிப் பணிகளைக் காணும்போது, நாம் தொடர்ந்து ஆதரவு தருவது அவசியம்.  ஊடகம் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை. அதற்கான இலக்கிய இலக்கணக் கருத்து வளர்ச்சிக்காக முயற்சி செய்வோரை மறக்காமல் பாராட்ட வேண்டும்.  எனினும் சில தமிழ் இதழ்களில், தமிழ் எழுத்துப் பிழைகள் மலிந்திருப்பதையும் மறுக்க முடியாது. தொடர்ப் பிழைகள், பிற மொழிச் சொற்களையே தலைப்புச் செய்தியில் தருவது, தமிங்கிலத்தில் தலைப்புச் செய்திகளைத் தருவது, தமிங்கிலத்திலேயே இதழ்ப் பெயர்கள் தொடர்வது பற்றிய விமரிசனம் தனி!  அது பண்பாட்டு அடிப்படையிலான விமர்சனப் பகுதி! மொழி வளர்ச்சிக்குத் தடையான இலக்கணச் சிக்கலைப் பற்றிப் பேசுவதால், தொடர்புடைய கருத்துக்காகச் சொல்ல நேர்ந்தது.

தமிழ் இளைஞர்களில் மிகப்பெரும்பாலோர் "தமிங்கில" எழுத்தில் தகவல் தந்து - பெறுவதையும், திறன்பேசி, செல்பேசித் தொடர்புகளை (Contact) ஆங்கிலத்தில் வைத்திருப்பதையும் குறைசொல்ல முடியவில்லை. அரசு, பெற்றோர், கல்வித் திட்டங்களில் இவர்களுக்கு வழிகாட்ட வில்லையே! (தமிழாசிரியர் சிலர்கூட இப்படி இருப்பதுதான் நகைமுரண்!)

தொழில் நுட்பம் அறியாமை, தமிழின் மீதான அலட்சியம் இவை மட்டுமே காரணம் என, இதை மேம்போக்காகவும் சொல்லிவிட முடியாது.

தகவல் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் சிலர் தமிழில் எழுத ஆர்வம் இருந்தும், எந்த இடத்தில் க் வரும் எந்த இடத்தில் ச்  வரும்  என்பன போலும் குழப்பத்தில் இருப்பதும் முக்கியக் காரணம். அதோடு வெளிநாடு வாழ் தமிழ்க் குழந்தைகள்  ஆர்வத்தின் காரணமாகத் தமிழ் படிக்கத் தொடங்கும்போது, உயிர் எழுத்து, மெய்யெழுத்துக் கற்ற பிறகும் கூட இந்த ஒற்றெழுத்து (சந்தி) பிழை பற்றிய அச்சமே பெரிதும் தடையாக இருப்பதாக அங்கு வாழும் தமிழ்ப் பெற்றோர் நினைக்கிறார்கள். எனவே, இந்த வல்லினம் மிகும் இடம், மிகா இடம் பற்றிய பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும்.

கூகுளில் “வல்லினம் மிகும் இடம், மிகா இடம்” என்று தேடினால் பெரும் பட்டியலே கிடைக்கும், தமிழறிஞர் பலரும் நமது இலக்கண நூல்களிலிருந்தும் எடுத்துத் தந்து நூல்களை வெளியிட்டு வருகிறார்கள். 

எனினும் பொருள் மாறுகிறதா என்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே எனது கருத்து. 

இல்லையெனில் சந்தி (ஒற்று) பிழை பற்றிய கவலை வேண்டாம் என்பதைப் புதிய இலக்கணமாக ஏற்க வேண்டும். இரண்டு சொற்கள் சந்திக்கும் இடத்தில் தோன்றும் எழுத்து என்பதால் சந்திப்பிழை என்கிறோம். இதற்கும் ஒரு பட்டியல் போட வேண்டும். அந்த வேலை தனி, அதற்கொரு குழு பணியாற்ற வேண்டும்!

கணினியிலும் செல்பேசியிலும் தமிழ் எழுத்துருக்களுக்கான மென்பொருள் பற்றிய அறியாமை ஒரு பக்கம் என்றால், சோம்பேறித்தனம் வேறு அதனோடு சேர்ந்து கொள்கிறது. இது பற்றி நம் நண்பர், கணினித் தமிழறிஞர் திரு நீச்சல்காரன் (எ) ராசாராம் நல்லதொரு முயற்சி எடுத்து “எழுத்துப் பிழை திருத்தி” (வாணி, நாவி) எனும் மென்பொருள்களை உருவாக்கியிருக்கிறார். (பார்க்க - http://vaani.neechalkaran. com/) எனினும் சந்திப்பிழை திருத்தி தரும் தெளிவைவிடவும் சந்தி இலக்கணம் பற்றிய பார்வை மாற்றமே கூடுதல் தெளிவைத் தரும் என்பதே எனது தெளிவு.

கணினி அறிவியல் படிக்கும் பள்ளி, கல்லூரிப் பிள்ளைகளுக்குக் கூட, கணினித் தமிழ் நம் பாடத்திட்டத்தில் இல்லை , தமிழ் மென்பொருள், தமிழ் எழுத்துருப் பயிற்சி ஏதும் தரப்படுவதில்லை என்பது பெருங்கேடு! இருந்திருந்தால் இந்த இலக்கணக் குழப்பம் தீர ஒரு முயற்சியாவது எழுந்திருக்கும். தமிழறிஞரும் கல்வி அலுவலருமான முனைவர் நா.அருள்முருகன் முன்முயற்சியில் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டு க செயல்பட்டு வரும் "கணினித் தமிழ்ச் சங்கம்", இதற்கான பயிற்சிகளை ஆண்டு தோறும் கொடுத்து வருகிறது. 

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம், மதுரை உலகத் தமிழ்ச்சங்கம்,  மற்றும் தேனித் தமிழ்ச்சங்கம் போலும் சில அமைப்புகளும், தஞ்சை முனைவர் பா.ஜம்புலிங்கம்,  திண்டுக்கல் தனபாலன், காரைக்குடி முனைவர் மு.பழனியப்பன்,  சென்னை என்னாரெசுப் பெரியார், முதலான தமிழ்க்கணினி அறிஞர்களும், ஏராளமான தமிழ் வலைப்பதிவர்களும் இதனைச் செய்து வருகின்றனர் எனினும் பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டத்திலேயே கணினித் தமிழ் எனும் பிரிவைச் சேர்ப்பதுதான் இலக்கண அச்சமற்ற கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நல்ல பலனைத் தரும்.

ஆங்கிலம் எனும் ஒரு மொழியே நம் நாட்டுக்குள் வராத காலத்தில் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலில் பொறியியல் அறிவு இல்லையா? எந்திரப் பொறியியல் உள்ளிட்ட (BE-EEE, ECE, CIVIL, CSC) பாடம் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளன. மொழிப்பாடமும் உயர்கல்வியில் இல்லை ! இதோடு, மருத்துவம் படிக்கும் பிள்ளைகள் மருந்துக்கும் கூட தமிழ் படிக்க வேண்டியதில்லை என்பது, தமிழையும் தமிழரையும் அழிக்கும் செயல் அல்லவா?

இதுபற்றியெல்லாம் முடிவெடுக்க, அரசியல் துணிச்சல் மிக்க அரசு வேண்டும். மொழி-இலக்கண எளிமைக்கான பணிகள் சமூக அரசியல் பொருளியலுடன் தொடர்புடையது. "மௌண்ட் ரோடு" அண்ணா சாலை ஆனபிறகும் துக்ளக் இதழ் பல்லாண்டுகளாக “மௌண்ட் ரோடு" என்றே தனது முகவரியில் எழுதி வந்தது. தந்தை பெரியார் தந்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். அரசாணை வழி நடைமுறைப் படுத்தியபோதும், பத்தாண்டுக்கும் மேலாக பழைய எழுத்துகளை தமிழ்த்திரை உலகம் விடவில்லை என்பதையும் மறந்து விட முடியாது! 

தமிழ் வளர்ச்சிக்கான அடிப்படைப் பணிகளை அரசுதான் செய்ய முடியும். 

இதைப் புரிந்து மக்களும் செயல்பட வேண்டும். தும்பை விட்டு வாலைப் பிடிக்க வேண்டாமல்லவா? தும்பைச் சரியாகப் பிடியுங்கள் தமிழர்களே!!






"இலக்கணம் இனிது"
ஆசிரியர்: நா.முத்துநிலவன்
பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு, ஜனவரி 2021

நூலில் இருந்து . . . . . 

No comments:

Post a Comment