— முனைவர் ஆனந்த் அமலதாஸ்
தமிழில் காட்சியியல் என்பது ஆங்கிலத்தில் “பிலாசபி” என்று சொல்வதற்கு “சமமான” சொல் எனலாம். தத்துவம் சமஸ்கிருதச் சொல். ‘காட்சியர்’ என்றால் ‘அறிவாளி’, ‘சிந்தனையாளர்’ என்று பொருள். பிலாசபருக்குச் சமமாகச் சொல்லலாம்.
நம்பிக்கையும் பகுத்தறிவும் (Faith and Reason):
மெய்யியல், தத்துவம், பிலாசபி என்பதும் கூட மக்கள் மத்தியில் தெளிவற்ற நிலையில் உள்ளது. அரசியல் தலைவர்கள் அனைவரையும் ‘பிலாசபர்’ என்று பொதுவாகச் சொல்லி விடுவோம். அதில் தவறில்லை. ஆனால் எந்தப் பொருளில் அந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம் என்று தெரிந்திருப்பது முக்கியம். இல்லையென்றால் ஏதோ அர்த்தமில்லாமல் பேசுவது போல ஆகும்.
“ஆழமாக அலசிப் பார்த்த வாழ்வு அர்த்தமுள்ள வாழ்வு”, என்பது சாக்ரட்டீஸ் கூற்று (An examined life is worth living). அப்படி என்றால் அடிப்படைக் கேள்விகளைக் கேட்க வேண்டும். ஒரு கட்டெறும்புக்கு எத்தனை கால்கள் உண்டு? இது அடிப்படைக் கேள்வி இல்லை. இந்த மைக்ரோ போன் எப்படி வேலை செய்கிறது? தெரிந்தவர்களைக் கேட்டால் விளக்கம் சொல்வார்கள். இது அடிப்படை கேள்வி இல்லை.
ஆனால், இந்த வாழ்க்கைக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா? எத்தனையோ பேர் சுட்டுக் கொல்லப் படுகிறார்களே, அவர்கள் வாழ்வு அத்தோடு முடிந்து போய் விட்டதா அல்லது பின்பு ஏதும் நடக்குமா? இந்தப் பிரபஞ்சத்திற்குத் தொடக்கம் உண்டா, முடிவு என்று ஒன்று உண்டா? இதெல்லாம் அடிப்படைக் கேள்விகள். இதற்கு விவிலியத்தையோ, குர்ஆனையோ, கீதையையோ சான்று காட்டிப் பதில் சொன்னால் அதற்கு இறையியல் என்று சொல்வதுண்டு. பகுத்தறிவு அளவில் சான்று வைத்து பதில் அளித்தால் அதை மெய்யியல் என்பர். இந்த இரண்டையும் பிரித்துக் காட்டலாம். ஆனால் அவை முரண்பாடானவை என்று சொல்ல முடியாது.
கருப்பு பிடிக்குமா காவி பிடிக்குமா என்று கேட்டார் ஒருவர். எனக்குக் கருப்பும் பிடிக்கும் காவியும் பிடிக்கும். இரண்டும் இயற்கையின் நிறங்கள், நமக்குக் கிடைத்த கொடைகள். இவற்றை இப்பொழுது தனியார் மயமாக்கிவிட்டு எது வேண்டும் என்றால் என்ன சொல்வது. அதுபோல்தான் நம்பிக்கையும் பகுத்தறிவும்.
நம்பிக்கை இன்றி பகுத்தறிவாளர்களும் வாழ முடியாது. பகுத்தறிவின்றி நம்பிக்கை வாதிகளும் தங்கள் நம்பிக்கையை விளக்கமுடியாது. ஆனால் எங்கு பகுத்தறிவு முடிகிறது, எங்கு நம்பிக்கை தொடங்குகின்றது என்பதைக் கூறுதல் கடினம். அந்த எல்லைக் கோட்டை தீர்மானிப்பது சுலபமில்லை. ஆதி சங்கரரும் தாமஸ் அக்குவினாவும் பக்கம் பக்கமாக அதுபற்றி எழுதியுள்ளார்கள்.
நம்பிக்கையும் பகுத்தறிவும் ஒன்றுக்கொன்று நிறைவு செய்கிறது. நம்பிக்கை இல்லாமல் பகுத்தறிவு மட்டும் குணமளிக்காது, மீட்பு கொடுக்காது, முழுமை தராது. பகுத்தறிவு இல்லாமல் நம்பிக்கை மட்டும் செயல் பட்டால் மனிதத்துவம் போய்விடும், மனிதாபிமானமும் மறைந்து விடலாம். மனிதம் இல்லாத விண்ணக விளக்க உரை (heavenly metaphysics) நமக்குத் தேவையில்லை. அர்த்தமுள்ள வாழ்வை மேற்கொள்ள இரண்டும் வேண்டும்.
கருத்தளவில் தெளிவு வேண்டும்:
கருத்துத் தெளிவு இல்லை என்றால் குழப்பத்திற்கு இட்டுச்செல்லும். இப்பொழுது தமிழ் ஊடகங்களில் திருக்குறளில் பதிவான ஒரு பாடலுக்குப் பல விளக்கங்கள் கொடுக்கின்றனர். அது ஒருவரை ஒருவர் அவமதித்து, ஏன், கொச்சைப் படுத்தியும் வருகிறது. இது தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை தருவதாகச் சொல்ல முடியாது. காரணம், இது கருத்துத் தெளிவில்லாத நிலை.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது குறள் கூறும் கோட்பாடு. இங்குச் சர்ச்சைக்கு உள்ளானது ‘சமத்துவம்’ என்ற கருத்துக் கோட்பாடு. சமத்துவம் என்பதற்கு நம்பிக்கை அடிப்படையில் விளக்கம் கொடுக்கலாம். அல்லது பகுத்தறிவு வழியாகவும் விளக்கம் தரலாம். இரண்டுக்கும் முரண்பாடு இல்லை.
கிறித்துவ மரபில் வந்தவர்கள் விவிலியத்தைச் சான்று காட்டிச் சமத்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள். மனிதன் கடவுளின் சாயலால் படைக்கப்பட்டவன் என்பது விவிலிய வாக்கு. அதன் பார்வையில் மனிதனின் தனித்துவமும் மகத்துவமும் அடங்கி உள்ளது. இந்த நம்பிக்கை கொண்டவர்களுக்கு மனிதர்கள் சமத்துவம் பெற்றவர்கள்.
மற்றவர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். பரவாயில்லை. சமய சாயம் பூசாமல் பேசலாம். குறள் சமயம் சாரா நூல். அதனால் வேறு விளக்கம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவின் பார்வையில், மெய்யியல் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.
மெய்யியல் வரலாற்றில் 'பெர்சன' (person) என்ற கருத்து உண்டு. அதைத் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது பகுத்தறிவும் சுதந்திர உள்ளமும் (intelligence and free will) இயல்பாகக் கொண்ட தனிப்பட்ட ஒன்றை (substance), மனிதரை person என்று சொல்வது. Person and personality are different. இவை இரண்டையும் குழப்பி விடக்கூடாது. “பெர்சனாலிட்டி” என்றால் தனி ஒரு மனிதனின் தனித்துவம்; ஒருவரின் 'டெம்பரமென்ட்', 'கேரக்டர்' பற்றி பேசுவது. ‘பெர்சன’ என்பது இதற்கும் அடிப்படையாக உள்ளது.
பெர்சன் என்பதை முக்கியமான மூன்று அம்சங்களை அடையாளமாக வைத்து விளக்கம் கூறலாம்.
ஒன்று: தனித்துவம் - “யுனீக்” - இதை டியூப்ளிகேட் பண்ண முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அதை “க்ளோனிங்” செய்ய முடியாது.
இரண்டு: பகிர்ந்து கொள்ள முடியாதது: - incommunicable – அணுவைப் போல இதை உடைக்க முடியாது, கரைக்க முடியாது, மற்றொன்று இதை விழுங்க முடியாது. அதனால்தான் நெருங்கிய நண்பர்களைக்கூட நம்மால் முழுதும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
மூன்று: subsistence – to be on one’s own. தானாகவே இருக்கிற தன்மை கொண்ட நிலை. பகுத்தறிவு உள்ள மனிதனின் இயல்பு இங்கே மையம் கொண்டுள்ளது.
“நான்” என்பதையும் கூட இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று: மற்றவர் பார்வைக்கு உட்பட்டது. என்னுடைய செயல்களின் வழியாக, நான் என் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறையில், எனது மனப்போக்கின் வழியாக மற்றவர் என்னைப் பார்க்க முடியும். இது உயிர் நிலையின் மையம். நம் சொந்தப் பொறுப்புணர்வுக்கும் மையம்.
மற்றொன்று: பார்வைக்கு அப்பாற்பட்டது. அடிப்படையில் பகிர்ந்து கொள்ள முடியாதது. இந்த மையத்தைத்தான் “அண்டலாஜிக்கல் பீயிங்” என்று சொல்கிறோம்.
நாய்க்குத் தனிப்பட்ட இயல்பு உண்டு. ஆனால் அதை ஒரு “பெர்சன்” என்று சொல்ல முடியாது. அது பகுத்தறிவும் சுதந்திர உள்ளம் கொண்ட பொருட்கூறு அல்ல.
2000 ஆண்டுகளுக்குப் பின்னும் திருக்குறளைப் பற்றிப் பல விமர்சனங்கள் நடக்கின்றன. அது ஒரு தொகுக்கப்பட்ட நூல். பல் வேறு பழமொழிகளை, நீதிச் சொல்லாடல்களைத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது என்பர். இது சில ஐரோப்பிய அறிஞர்களின் கருத்து.
விவாதத்திற்காக இந்தக் கருத்தை நாம் ஏற்றுக் கொண்டாலும் கூட, இதைத் தொகுத்தவர் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தோடு மூன்று பகுதியாகப்பிரித்து, 133 அதிகாரங்களாக அமைத்து ஒரு நூலாக வடிவம் கொடுத்திருக்கிறார். அவர் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் செய்திருக்க வேண்டும். அப்பொழுது உள்ள சமுகச் சூழ்நிலைக்குப் பதில் சொல்லும் குறிக்கோளோடு செய்திருக்க வேண்டும்.
எவருமே குறிக்கோள் இல்லாமல் ஒரு வேலையைத் தொடங்குவதில்லை. ஒரு எழுத்தாளன் அல்லது வணிகன் திட்டம் ஏதும் இல்லாமல் தன் வேலையைத் தொடங்க மாட்டான். பிரபாகரன் என்ற மீமாம்ச சிந்தனையாளர் (ஏழாம் நூற்றாண்டு) கூறிய வாக்கை மேல்நாட்டு இன்டாலஜிஸ்டுகள் அடிக்கடி சுட்டிக்காட்டி இந்திய மரபின் அடையாளமாகக் கூறுவார்கள். “ஒரு பயனைச் சிந்தித்துத் தெளிவாக குறி வைக்காமல் ஒரு முட்டாள் கூட ஒரு வேலையைத் தொடங்க மாட்டான் என்பது. “பிரயோஜனம் அநுத்திஷ்ய ந மந்தோ’பி ப்ரவர்த்ததே, ” என்பது மீமாம்சாவின் (slokavārtika) சொல்லாடல்.
வள்ளுவர் அப்பொழுது இருந்த சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய கோட்பாட்டுக்கு மாற்றுக் கண்ணோட்டம் தருகிறார். அவருக்கு உதவிய மூலநூல்கள் என்னவென்று தெரியவில்லை. ஆனால் குறளின் கண்ணோட்டம் வைதிக கோட்பாட்டுக்கு முரணானது என்பது தெளிவு. அதில் மாற்றுக் கருத்து இல்லை.
No comments:
Post a Comment