"அட்சய திருதியை" என்ற கரும்புச்சாறு திருவிழா!
— தேமொழி
சித்திரை மாதத்து வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவது அக்ஷய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்).
அட்சய / அக்ஷய என்றால் குறைவற்ற என்ற பொருள்; திருதியை என்றால் 3 ம் நாள் என்பதாகும்.
இது நாட்காட்டியில் பழைய முறையில் வானியல் அடிப்படையில் நாட்களைக் கணக்கிடும் முறையில் அமைகிறது.
வளர்பிறை (சுக்கில பட்சம்/நிலவொளி அதிகரிக்கும் நாட்கள்) மற்றும் தேய்பிறையில் (கிருஷ்ண பட்சம்/நிலவொளி குறையும் நாட்கள்) நாட்கள் அமாவாசை (அல்லது) பௌர்ணமி அடுத்த நாள் முதலாக துவங்கிக் கொண்டு கணக்கிடப்படுவது வழக்கம்.
இவ்வாறு தொடங்கும் வரிசையில் மூன்றாவது நாள் திரிதியை எனக் குறிப்பிடப்படும். 1. பிரதமை, 2. துவிதியை, 3. "திருதியை", 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அல்லது) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
தீபாவளியைப் போலவே சமணர்களிடம் இருந்து வைதீக சமயத்தார் உள்வாங்கிக் கொண்டதே அட்சய திருதியை பண்டிகை எனலாம்.
சமணத்தில், அட்சய திருதியை நாளில் சமணத்தின் முதற் தீர்த்தங்கரரான ரிஷபநாதர் தமது ஓராண்டு கடுந்துறவு வாழ்வை நிறைவுசெய்து ஊர் திரும்பிய பின்னர், ஹஸ்தினாபுரம் அரசரான ஷ்ரேயான்ஸ் அவர்களால் தமது குவிந்த கைகளில் ஊற்றப்பட்ட கரும்புச் சாற்றைப் பருகிய நாளாக இந்நாள் கருதப்படுகிறது.
முதற் சமணத் தீர்த்தங்கரரான ரிஷபநாதர் ஹஸ்தினாபுர ஷ்ரேயான்சிடமிருந்து கரும்புச்சாற்றைப் பெறும் காட்சி (விக்கிப்பீடியா படம்)
ஹஸ்தினாபூர் சமணக் கோவில் சிற்பங்கள்
'வர்ஷி தப' என்றும் சமணர்கள் இவ்விழாவைக் குறிப்பிடுவது வழக்கம். ஓராண்டு முழுவதும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் உண்ணா நோன்பு இருக்கும் வர்ஷி தப எனப்படும் நோன்பைக் கடைப்பிடிப்போர், இந்த நாளில் பாரணை செய்து (கரும்புச் சாற்றை அருந்தி) தமது தபசை நிறைவு செய்கின்றனர். இந்நாளில் சமணர்கள் உண்ணாநோன்பு இருப்பதும் வழக்கமே; ஆன்மீகம் வழிகாட்டும் புலனடக்கப் பயிற்சிதான் நோன்பு என்பதன் அடிப்படை நோக்கம் (எனக்கு அது வேண்டும், எனக்கு இந்த வரம் வேண்டும் என்பது போன்ற தவமிருப்பது அதன் தவத்தின் அடிப்படை நோக்கம் அல்ல). ஆகவே புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு மேற்கொண்டதை வெற்றிகரமாக முடித்த கொண்டாட்ட விழாவே சமண சமயத்தாரின் அக்ஷய திருதியை என்ற கரும்புச்சாறு பருகும் திருவிழா!
வழக்கம் போலவே வைதீக சமயம் இந்நாளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பல புராணக் கதைகள் கொடுத்துள்ளது.
No comments:
Post a Comment