Monday, May 9, 2022

தாமிரமும் தமிழரும்-- முனைவர் வே. கட்டளை கைலாசம் தாமிரம், இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது. உலோக வகையைச் சார்ந்த இத்தனிமத்தை “செப்பு”, “செம்பு” என்றும் கூறுவர். இதன் மூலக்கூறு வாய்பாடு "CU" என்பதாகும். லத்தீன் சொல்லான "Cuprum" என்பதனை "CU" என்கின்றனர். ஆங்கிலத்தில் "Copper" என்று அழைக்கப்படுகிறது. இதன் அணு எண் 29. மனிதன் முதலில் பயன்படுத்திய இவ் உலோகம் மிகுந்த பயன்பாடு உடையது. தமிழர்கள் இதன் பயன்பாட்டை உணர்ந்து ஆதிகாலம் தொட்டே பயன்படுத்தி வருகின்றனர். 

தமிழ் நிகண்டுகள்:
சொற்களுக்குப் பொருள் தரும் அகராதிகளாகிய தமிழ் நிகண்டுகள், தாமிரம் பற்றிக் கூறுகின்றன. திவாகரம் என்ற தமிழ் நிகண்டு ஐவகையுலோகத்தைப் பற்றிக் கூறும்போது,             
          “ பொன்னும், வெள்ளியும், செம்பும், இரும்பும் அன்ன ஈயமும், ஐவகை யுலோகம்" 
என்று உரைக்கிறது. 
செம்பு பற்றிக் கூறும்போது 
          “சீருமை, தாம்பிரம், கற்பம், செம்பே”          - திவாகரம் - 1042 எனக்கூறும். 
பிங்கலம் என்ற நிகண்டு, 
          "தாமிர மெருவை வடுவே கற்பம் 
          உதும்பரஞ் சீருள் சீருணஞ் செம்பே"          - பிங்க லம் - 1235 
எனச் சுட்டுகிறது. 
நாம தீப நிகண்டு 
          “இரவி யுதும் பரமி ராசிவடுக் கற்ப 
          பெருமவை செம்பு தாம்பிரம்....          - நாம தீப நிகண்டு - 37 
இரவி,  உதும்பரம், இராசி, வடு, கற்பம், எருவை, செம்பு, தாமிரம், ஆகியன செம்பின் பெயர்களாய்க் கையாளப்படுகின்றன.
நாநார்த்த தீபிகை என்ற தமிழ் நிகண்டு தாமிரத்திற்கு, “சிவப்பு", மற்றும் “செம்பு" என இருபொருள் தருகின்றது. - (நாநார்த்த தீபிகை - 575)
அபிதான மணிமாலை செம்பு என்பதற்கு,
           “செம்பு, எருவை, தாம்மிரம், சீருணம், சீருள் 
          உதும்பரம், வடுவொடு, கற்பமுமிதற்கே"           (அபிதான மணிமாலை - 1452) 
எனப் பொருள் தரும். 

இவ்வாறு தமிழ் நிகண்டுகள் தாமிரம் என்ற சொல்லுக்கான பல பொருட்களைத் தருகின்றன. இதனால் தமிழர் வாழ்வில் தாமிரம் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வதை நாம் அறிய முடிகிறது. 

சிந்துச்சமவெளி நாகரிகத்தில் களிமண், தாமிரம் மற்றும் வெண்கலத்தினால் உருவான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இலக்கியங்களில் தமிழர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய உலக்கை, திருகை போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பாத்திரங்கள் பலவற்றைப் பயன்படுத்திய குறிப்புகளும் உள்ளன. செப்புப் பட்டயங்கள், எழுத்தூசி, ஓலைச்சுவடிகள் சட்டங்கள், சிற்பங்கள் போன்ற பலவகைப் பொருட்களிலும் தாமிரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று அறியப்படுகிறது. 

பஞ்ச சபைகள்:
பஞ்சலோகம், பஞ்சவர்ணம், ஐம்பொன் என்பன ஐந்து என்ற எண்ணிக்கையைக் குறிப்பன. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் சேர்ந்ததைப் பஞ்சலோகம் என்பர். கருப்பு, சிவப்பு, பச்சை, வெள்ளை , மஞ்சள் நிறங்களில் கூடிநிற்பது பஞ்சவர்ணம்.


சிவபெருமான் திருநடனம் ஆடிய இடங்களைப் பஞ்சசபை என்பர். 
          "குடதிசை யதனில் மருவுகு ற்றாலம்
                    கோதறு சித்திர சபையாம் 
          குற்றமில் குணக்கின் பழையனூர் மன்றம்,
                    குலநவ ரத்தினமன் றென்பர்; 
          அடல்விடைப் பாகன் நெல்லையம் பதியில்
                    அம்பலம் தாமிர சபையாம்; 
          ஆலவாய் மதுரை வெள்ளியம் பலமாம் 
                    அணித்தில்லைச் செம்பொ னம்பலமே"
                                        (இரட்டையர் தில்லைக் கலம்பம்)

இரட்டையர் தில்லைக் கலம்பகம் கூறும் “தாமிரசபை” நம் தாமிரவருணிநதிக் கரையில் அமைந்து தாமிரவருணிக்குப் பெருமை சேர்க்கிறது. சிவபெருமானே தனக்கான திருநடனத்திற்குத் தாமிரத்தால் ஆன சபையைத் தேர்ந்தெடுத்துள்ளான்.

தமிழ் மருத்துவத்தில் தாமிரம்:
தமிழர்களின் மருத்துவமான சித்தமருத்துவத்தில் தாமிரம் பல மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. "தாமிரபஸ்பம்" என்பது ஒன்று; இதனைத் "தாம்பூர பற்பம்" என்பர். ஒரு செம்பு நாணயத்தைப் பழுக்கக் காய்ச்சிப் புளியிலைச் சாற்றில் பலதடவை துவைத்துப் பிறகு மூசையிலிட்டு இரண்டு தடவை அவ்வுருக்கு முகத்தில் கந்தகத்தைச் சேர்த்து உருக்கவும், பிறகு அதை எடுத்து நொறுங்கப்பொடி செய்து எலுமிச்சை சாற்றில் சுத்தி செய்ய தாம்மிரம் வெளுத்துக் காணும். இதைப் புடமிடப் பற்பமாகும்.  இப்பற்பம் குட்டம் முதலிய சரும நோய்களுக்குக் கொடுக்க குணமாகும். அன்றியும் பல்வலி, மண்ணீரல் வீக்கம், ஈரல் வீக்கம், சூலைப் பிடிப்பு, வாதநோய் முதலிய நோய்களுக்கும் கொடுக்கலாம். ( டி.வி. சாம்பசிவம்பிள்ளை - தமிழ் - ஆங்கில (மருத்துவம்) அகராதி). 

தங்கம், வெள்ளியைவிட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர். தங்கமும் வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பைக் குறிப்பிடுகிறார். அதாவது சிறிதளவு செம்பு சேர்த்தால் மட்டுமே தங்கத்தையும் வெள்ளியையும் பயன்படுத்த முடியும். 
          “தாம்பரத்தாற் சோரிபித்தஞ் சந்நிவழுவைகபம் 
          வீம்பார் பிலீகமந்தம் வெண்மேகம் - தேம்பழலை 
          சூதகநோய் புன்கிரந்தி தோடசுவாசம் கிருமி 
          தாதுநட்டம் கண்ணோய் போஞ்சாற்று”
என்பது தேரையார் வாக்கு. 

இவ்வாறு நோய்கள் தீர்க்கும் மருந்தாக்கத்தில் தாமிரம் தனியிடம் பெற்றுள்ளது. பிற மருத்துவத்தாரும் தாமிரத்தைப் பயன்படுத்தி உயிர்காக்கின்றனர். அன்றாடவாழ்வில் தாமிரத்தின் பயன்பாடு எல்லையற்றது. தமிழர்கள், தாமிரத்தின் பயனை உணர்ந்து தமது வாழ்வியலோடு இணைத்துப் பயன்பெற்று வருகின்றனர். உலகின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதிலும் தாமிரத்திற்குத் தனியிடம் உண்டு. தாமிரவருணி நதிநீரின் அல்வாவைச் சுவைக்கும் நாம், தாமிரத்தின் பயன் உணர்வோம். தாமிரந்தி போற்றுவோம்.


_____________


"தாமிரவருணித் தமிழ் வனம்"
ஆசிரியர்: முனைவர் வே. கட்டளை கைலாசம்
முதற்பதிப்பு: மல்லி பதிப்பகம், டிசம்பர்-2021
விலை: ரூ.50 

நூலில் இருந்து . . . . . 

No comments:

Post a Comment