Tuesday, May 3, 2022

ப. சிங்காரம் எழுதிய "கடலுக்கு அப்பால்" என்ற புதினம் ⁠— மதிப்புரை

ப. சிங்காரம் எழுதிய "கடலுக்கு அப்பால்" என்ற புதினம் ⁠— மதிப்புரை 
 
 ⁠— தி.ந.ச.வெங்கடரங்கன்


கடந்துவிட்ட வேறொரு நூற்றாண்டிற்குச் சென்று அந்தச் சூழலில் வாழ வேண்டுமென்றால் அறிவியலால் காலக் கப்பலேதையும்  தரமுடியாது, ஆனால் அதற்கு மாற்றாக அந்தக் காலத்தில் வாழ்ந்த திறமையான எழுத்தாளர்களின் படைப்புகளால் முடியும். அப்படியான ஒரு புதினம் தான் திரு ப.சிங்காரம் அவர்கள் 1950 இல் எழுதிய "கடலுக்கு அப்பால்".


என்ன ஒரு மகத்தான படைப்பு இது!!!

முதல் வரியிலேயே 1945 இல் தமிழர்கள், அதுவும் செட்டிமார்கள் கொடிகட்டிப் பறந்த மலேயா நாட்டின் பினாங்கு நகரத்திற்கு நம்மைப் புலம் பெயர்த்து, அங்கேயே வசிக்க வைக்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயர்கள் வசம் இருந்து, ஜப்பானியர்களிடம் சென்று, ஆங்கிலேயர்களிடமே திரும்பும் சூழ்நிலையில் (1941-1945) செல்கிறது  கதை. 

பினாங்கு நியூ லைன் வீதியில், போருக்கு முன்பு பினாங்கு தெருவிலும் "லேவாதேவி", அதாவது வட்டித் தொழில், செய்து கொண்டிருக்கும் வானாயீனா என்கிற  ஆ.சி.வயி.வயிரமுத்துப்  பிள்ளையவர்களின் மார்க்காவில் "அடுத்தாள்" (மேலாள் என்கிற மேனேஜருக்கு கீழே இருக்கும் ஆள், பெட்டியடிப் பையன்களுக்கு மேலே இருப்பவன்) வேலையில் இருக்கும் "செல்லையா" என்பவன் தான் கதையின் நாயகன். கதை ஆரம்பிக்கும் போது வேலையைவிட்டு நேதாஜி அவர்களின் கட்டளையை ஏற்று ஐ.என்.ஏ (I.N.A.) படையில் லெஃப்டினன்ட் ஆக இருக்கிறான். போர் நிலைமை மாற, நேதாஜி அவர்களும் திடீரென இறந்துவிட, தமிழர்கள்  பட்டாளத்திலிருந்து விலகி, பொது மக்களாக மீண்டும் சிவில் வாழ்க்கைக்கு வருகிறார்கள். "கோலாமூடா" முகாமிலிருந்து திரும்ப வரும் வழியில் ஆங்கிலேயர்களிடம் பிடிபடுவோமோ அல்லது உடனிருந்த ஜப்பானியர்களால் தாக்கப்படுவோமோ அல்லது பாசிச எதிர்ப்பு சீன போராளிகளால் சுடப்பட்டு இறப்போமோ என்று தெரியாமல், ஆனால் தைரியமாக காடுகளைக் கடந்து நகரத்திற்கு வந்து வெவ்வேறு திசைகளுக்குச் சென்று, மாறி இருந்த (மலேயா) நகரத்து வாழ்க்கைக்குள் உட்புக  முயல்கிறார்கள். திரும்ப வந்த (நம்) செல்லையாவுக்கு அவனின் பழைய வேலை கிடைக்கிறதா? தான் காதலித்த முதலாளியின் மகள் "மரகதம்" கிடைத்தாளா என்பதுதான் மீதிக் கதை. 

கதை பினாங்கு நகரத்தைச் சுற்றி நடந்தாலும், மலாய் மற்றும் சீன மொழி வசனங்கள் வந்தாலும் தமிழ்மணத்திற்குக் குறையேயில்லை. வாழ்க்கையில் சோகமான சூழ்நிலையில் இருக்கும் நாயகனிடம் அவனது நண்பன் "மாணிக்கம்" அறிவுரை கூறுவது சாதாரணமாக இல்லாமல் - சிலப்பதிகார வசனங்களுடன், தாயுமானவரின் கதைச்சுருக்கத்தோடு அவரின் பாடல் வரிகளோடு, திருமந்திரச் செய்யுள்களும் சேர்ந்து  தங்குதடையின்றி, எந்த விதத்திலும் நமக்குச் சோர்வைச் சேர்க்காமல், மடைதிறந்த வெள்ளம் போல் வருகிறது. கதையில் போர் உண்டு, நட்பு உண்டு, பினாங்கு நகரக்குறிப்பு உண்டு, காதல் உண்டு, இறப்பு உண்டு, சோகமும் உண்டு. சொந்த மண்ணை, உறவினர்களை, மனைவியை, பெற்றெடுத்த  பிள்ளைகளையெல்லாம் விட்டுவிட்டு, அயல்நாட்டில் தங்களின் உழைப்பை மட்டுமே நம்பி வந்து, அந்தக் காலத்தில் வேலை செய்த பல்லாயிரம் தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது   "கடலுக்கு அப்பால்". 

கதையில் துரோகிகள் கிடையாது. முதலாளிகூட, தன் ஊர், தன் சாதிப் பயல்கள் என்று செல்லையா உட்பட எல்லோரையும் நல்ல முறையில் தான் நடத்துகிறார்.   இளைஞர்களின் பெற்றோர்களிடம் இருந்து அவர்களை அயல்நாட்டிற்கு முதலாளி(கள்) தான் தங்கள் பொறுப்பில் கூட்டிக்கொண்டு வருகிறார்கள், அந்தக் கடமை உணர்ச்சித் தெரிகிறது. இதெல்லாம் சரியாக, சட்டங்கள் இல்லாமல் நடப்பது, ஊர் மற்றும் சாதி இணைப்பால் என்று புரிந்து கொள்ள முடிகிறது.  இதெல்லாம் சரி என்பதில்லை, இப்படித் தான் நடந்திருக்கிறது , அதைத் தெரிந்து கொள்வது அவசியம். இந்தச் சூழ்நிலையில் கூட  உழைப்பிற்கும், நேர்மைக்கும், திறமைக்கும் அதிகமாக மதிப்பு இருந்திருக்கிறது.   பெட்டியடிப் பையனாக வெளிநாட்டிற்கு வந்து, அடுத்தாளாகி, மேலாளாகி, பின் முதலாளியானவர்கள் பலர் என்று கதையில் வருகிறது. இவர்களின் அயல்நாட்டுக் காசில் தான் அப்போதைய தமிழ்நாட்டின் பல ஊர்கள் பிழைத்திருந்திருக்கிறது. என் கொள்ளுத்தாத்தாகூட முதல் உலகப் போர் போது 'மலேயா' கோட்டை வியாபாரம் செய்ய மலாயே சென்று திரும்ப வரவேயில்லை என்று கேள்வி. 

புதினத்தில் வரும் பல தெருக்களையும், இடங்களையும், கூகிள் வரைபடத்தில் தேடித்  தேடிப் பார்த்தேன், பல இடங்கள் எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்றும் இருக்கிறது, எவ்வளவு மாறியிருக்கிறது என்று மலேசியா நண்பர்கள் தான் சொல்லவேண்டும். வெறும் 200 பக்கங்களில் நாற்பதுகளில் இருந்த பினாங்கு நகரத்துத் தமிழர்களின் வீதிகளில் நம்மையும் கூட அழைத்துக் கொண்டு  நடமாடுகிறார் ஆசிரியர். அது அருள்மிகு தண்ணீர்மலையான் கோயில் ஆகட்டும், மலாய் தேசத்து உணவாகட்டும், சீன தின்பண்டம் ஆகட்டும், ஜப்பானியர்களோடு  காட்டில் நடக்கும் சண்டை ஆகட்டும், நாட்டை விட்டு சொந்தப் பந்தங்களை விட்டுப் பிழைப்புக்காக வந்து இருக்கும் இடத்தில் தமிழர்களின் ஆசாபாசங்கள் ஆகட்டும், எல்லாவற்றையும் கொஞ்சக்கூடச் சுவை குறையாமல் கண்முன்னே கொண்டுவந்து விடுகிறார் திரு.  சிங்காரம் அவர்கள். அவரின் அன்றைய காலத்தின் பெண் கதாப்பாத்திரங்கள் தனியாக தெரிகிறார்கள், அவர்களுக்கு ஆசை இருக்கிறது, அது நிறைவேற முடிகிறதோ இல்லையோ, அவர்கள் படித்தும் இருக்கிறார்கள். தமிழில் வெவ்வேறு காலத்திற்கு ஏற்ப நாவல்கள் பல வந்திருந்தாலும், சரித்திரச் சூழலில் ஒரு கற்பனை கதை என்பது மிகக் குறைவு, அதற்காகவே இந்த நாவல் படிக்கப்பட வேண்டிய ஒரு நூலாக ஆகிவிடுகிறது. திரு  ப. சிங்காரம் அவர்களின் இரண்டாவது புனைவான "புயலிலே ஒரு தோணி" புத்தகத்தை அடுத்து படிக்க விரும்புகிறேன் - இந்த இரண்டு நாவல்களைத் தவிர வேறு எதுவும் அவர் எழுதவில்லை என்பது தமிழர்களின்  இழப்பு. 

இந்தப் புத்தகத்தை வாங்கி தவறாமல் முதல் ஏழு பக்கங்களில் வரும் திரு ப. சிங்காரம் அவர்களை, 1984 இல் திரு ந.முருகேசபாண்டியன் சந்தித்த குறிப்பைப்  படித்துவிட்டு கதைக்குள் செல்லவும், அந்த சந்திப்பு குறிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. புத்தகத்தின் கடைசியில் வரும் திரு. சிங்காரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைப் படித்தால் இவ்வளவு எளிமையாக ஒரு மனிதர் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 1920 இல் பிறந்த திரு சிங்காரம், நாற்பதுகளில் பல ஆண்டுகள் இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் வேலைக்காகச் சென்றிருக்கிறார். அங்கே அவர் பார்த்துப் பழகிய மக்களை  உள்வாங்கிய நகர வீதிகளைக் கற்பனையோடு கலந்து நமக்கு விருந்து அளித்துள்ளார். இந்தியாவிற்குத் திரும்பி வந்த சிங்காரம் அவர்கள், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தினத்தந்தி நாளிதழில் செய்தி ஆசிரியராக இருந்திருக்கிறார்.  இந்தியாவில் இருந்த ஐம்பது ஆண்டுகளும் தனக்கென்று ஒரு வீடுகூட  இல்லாமல் ஒய்.எம்.சி.ஏ. விடுதியில் தான் இருந்திருக்கிறார். 


புத்தகத்தைக் கீழே வைக்காமல் ஒரே அமர்வில் படித்த நான் எழுந்தபோது கண்களிலிருந்து இரண்டொரு கண்ணீர்த்  துளிகள் வந்திருந்தன!!!


No comments:

Post a Comment