Sunday, October 31, 2021

கலைஞர்: மிக உயர்ந்தவர்



  —  ஆலடி எழில்வாணன்


Kalaignar: The Great, by M.Farook 
- கலைஞர்: மிக உயர்ந்தவர், பாரூக்
எமரால்டு பதிப்பகம் 



தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் தனது ஆற்றலால் நான்கு தலைமுறைகளின் வளர்ச்சிக்கு நேரடிக் காரணமாக இருந்தவர் கலைஞர். இனிவரும் காலமும் தமிழ் உலகம் இவர் புகழ்பாடும். அப்படிப்பட்ட மாபெரும் தமிழ் சகாப்தமான கலைஞர் மு.கருணாநிதி பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த, கைக்கு அடக்கமான, ஆழமான புத்தகம் முனைவர் M Farook எழுதிய “Kalaingar: The Great”.
 
எமரால்டு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 130 பக்கங்கள் கொண்ட இந்தப்  புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தகவல் களஞ்சியம். திராவிட இயக்கத்தின் கூர்வாள் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களின் அணிந்துரையும், வளர்ந்து வரும் அரசியல் ஆளுமை விசிக திரு.ஆளூர் ஷாநவாசு அவர்களின் முன்னுரையும் இந்தப் புத்தகத்தின் தாக்கத்தை உணர்த்தும்.
 
எளிய ஆங்கிலத்தில் லைஞரின் வலிமையான வாழ்க்கையை, சாதனையை, சோதனையை 15 அத்தியாயத்தில் அழகாகக் கோர்த்துள்ளார் ஆசிரியர் பாரூக். அரிய பல சுவராசியத் தகவல்களோடு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வாசகரை ஒரு சாட்சியாக, பார்வையாளராக இணைக்கிறார், சிறக்கிறார். ஆசிரியரின் எழுத்தும், நடையும், கோர்வையும் அவரது மொழி ஆளுமையை விட தலைவர் கலைஞர் மீது இவருக்குள்ள பற்று மற்றும் இவர் கலைஞரின் தீவிர ரசிகர் என்பதை கலைஞர் பாணியில் உள்ளங்கையில் நெல்லிக்கனி என வெளிப்படுத்துகிறது.
 
நான் ரசித்த, வியந்த சில அத்தியாயங்களை மட்டும் உங்கள் கவனத்துக்கு எனது விமர்சனமாகப் பதிவிடுகிறேன்.
 
Kalaingar: A Promised Dravidian Messiah:
இந்த அத்தியாயத்தில் கலைஞர் திராவிட இயக்கத்தில் பெரியார், அண்ணாவுக்கு அடுத்து மூன்றாவது முக்கிய அத்தியாயமாக பரிணாமம் பெற்றதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறார். குறிப்பாக சுயமரியாதை சிந்தனை, பகுத்தறிவு, மொழிப் பற்று, மாநில உரிமை இவற்றை உள்வாங்கிய சமூகநீதி சிந்தனை, 1971ல் இட ஒதுக்கீட்டை மாற்றியது, 69% இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டது, 1989ல் வி.பி.சிங் அரசால் அதை நடைமுறைப்படுத்தியது, 2006-2011 காலங்களில் உள் ஒதுக்கீடு எனப் போராடாமல் பெற்ற உரிமைகள், இறுதிவரை NEETடை தமிழகத்தில் அனுமதிக்காமல் அரணாக இருந்தது என கலைஞரின் சாதனைகளைக் கூறுகிறார்.
 
Kalaingar's Landmark, Land Reforms:
உழுபவனுக்கு நிலம் சொந்தம்; குடியிருப்பவருக்கு வீடு சொந்தம். பண்ணையார், நாட்டாண்மை என்றழைக்கப்பட்ட பெரும்நிலத்தாரிடம் இருந்து நிலங்களை நிலமில்லா விவசாயிகளுக்கு வழங்க பல சட்டங்களை இயற்றினார் கலைஞர். பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் சார்பில் “திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம்” 1952ல் நிறுவப்பட்டது. ஊதியம், நிலம்-நீர் உரிமை எனப் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
1. 1969 - Tenancy Land Record Act
2. 1969 - Agriculture Labour Fair Wages Act
3. 1970 - Land Reforms Act
4. 1971 - Agricultural University Act
5. 1971 - Conferment of Ownership of Homestead Act
உயர் வகுப்பினரிடமிருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விவசாய நிலங்கள் செல்லக் காரணியாக இருந்தார் தலைவர் கலைஞர்.
தரிசுநில மேம்பாட்டுத் திட்டம்,
இரண்டு ஏக்கர் இலவச நிலம் திட்டம்,
எல்லாம் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
Kalaingar: A Versatile Wordsmith:
தமிழ் இலக்கியத்துக்காக கவிதை, கடிதம், திரைக்கதை, கதை, தன்வரலாறு, வரலாற்றுக் காவியம், நாடகம் மற்றும் வசனம் என எல்லாவிதங்களிலும் கைதேர்ந்த படைப்பாளியாக வலம் வந்தார் கலைஞர்.
ஐம்பெரும் காப்பியங்களான
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி
வளையாபதி குண்டலகேசி
ஆகியவற்றை முழுமையாக வாசித்து உள்வாங்கியவர் கலைஞர். அவரின் எழுத்து மற்றும் பேச்சுகளில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும். 
 
தமிழ்த்தாய் வாழ்த்தை எல்லா அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பாட வைத்த பெருமை கலைஞரையே சேரும்.
இறுதியாக தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடிய “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலின் ஆசிரியர் கலைஞரே.
உலகப்புகழ் நாடக ஆசிரியர் ஷேகஸ்பியர் எழுதியது 38 நாடகங்கள்; தலைவர் கலைஞர் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கை 34 என்ற இந்தத் தகவல் ஆச்சரியம் மட்டுமல்ல; அதற்கும் மேல்!
 
Wality 69 Fountain pen:
கலைஞர் பயன்படுத்திய எழுதுகோல் Wality 69 Fountain pen. வாழ்க்கையில் பெரும்பான்மையாக இந்த எழுதுகோலைத்தான் அதிகமாக உபயோகித்தார். சூன் 30, 2001 நள்ளிரவில் கலைஞரைக் கைது செய்து, ஒரு குற்றவாளியைக் கையாள்வது போலக் கையாண்டனர் ஏவல்துறையினர். அப்போது அவர் சட்டையை இழுத்துப் பிடித்துத் தூக்கிய போது கலைஞரின் சட்டைப்பை பகுதி கிழிந்தது. ஆனால் அந்த Wality 69 Fountain pen அவரைவிட்டுப் பிரியவில்லை.
 
Battle of Marina:
திருவாரூர் பள்ளியில் தலைமையாசிரியர் கஸ்தூரி அய்யர் அவர்களிடம் தனது 12 வயதில் போராடித்தான் வகுப்பில் நுழைந்தார் கலைஞர். அவர் இறந்த பிறகும் போராடித்தான் மெரினாவில் தனது உன்னதத் தலைவர் அறிஞர் அண்ணா அருகில் அடக்கம் செய்யப்பட்டார்; வாழ்நாள் போராட்டக்காரர் தலைவர் கலைஞர் அவர்கள். புத்தக ஆசிரியர் 2010ஆம் ஆண்டு புதிய சட்டமன்றம் கட்டும் பணி நடக்கும்போது நடந்த ஒரு நிகழ்வை இந்த அத்தியாயத்தில் அழகாக விவரிக்கிறார். இரவு சுமார் 10.00-11.00 மணிக்கு செயலாளர் திரு.ராமசுந்தரத்திடம் அண்ணா நினைவிடம் செல்வோம் என்றார். அவர்கள் இருவரும் மற்றும் சில காவலர்களும் பயணிக்கின்றனர். அண்ணா சமாதியில் இருவரும் தேநீர் அருந்தியபடியே உரையாடுகின்றனர்.
கலைஞர்: அண்ணா சமாதியில் என்ன வாசகம் இருக்கிறது தெரியுமா ?
ராமசுந்தரம்: தெரியும் அய்யா, “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது!"
கலைஞர்: அமைதியாக “எனக்கும் இங்கேதான் உறங்கணும்”
சில நிமிட அமைதி நிலவுகிறது.
ராமசுந்தரம்: அது எல்லாம் இப்போ எதுக்கு அய்யா பேசணும், நாம கிளம்பலாம் ரொம்ப லேட் ஆயிடுச்சி.
கலைஞர் நினைவிடத்தில் இன்று பொறிக்கப்பட்டுள்ள வாசகம் “ஓய்வு எடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்”.
 
எளிமையான உரையாடல் காலம், சூழல், இடம் காரணமாக அதனை ஆழமான உரையாடலாக்கியது. கலைஞரின் இறுதி ஆசையை நிறைவேற்றத் தயங்கிய அதிமுக தலைமையை சட்டத்தால் வென்றது கலைஞர் கட்டிக்காத்த இயக்கமான திமுக. லண்டன் West Minister Abbeyக்கு நிகராக மெரினாவின் அண்ணா சதுக்கத்தை ஒப்பிடுகிறார் ஆசிரியர் ம.பாரூக்.
 
இந்தப் புத்தகத்தில் நான் வியந்து ரசித்த சில சொல்லாடல்கள், இவற்றை அந்த அத்தியாயத்தில் அழகாகச் சேர்த்து தனது கருத்துக்கும் முலாம் பூசியுள்ளார் ஆசிரியர்.

Quotes:
Turn in any direction you like, caste is the monster that crosses your path, Ambedkar.

Tamil Nadu is a paragon of administrative innovation among Indian states, Amartya Sen.

Merely because water in the sea evaporates, it does not become a desert; merely because the river mingles into the sea, they do not dry up.

He who controls others may be powerful, but he who masters himself is mightier still.

Sleep is a symbol of peace and rest: it symbolizes innocence, purity and peace of mind.

Cowards die many times before death; the valiant never taste of death but once, Julius Caesar.

History of Dravidian movement has not been written yet. It has entered into a new phase now.

Forgive your enemies but never forget their names, John F Kennedy.

I have lived a peru vazhvu.

Kalaingarist:
சமீபத்திய அரசியல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலால் எனது வாசிப்பு சற்று குறைந்தாலும் சில வாரங்களாக இந்தப் புத்தகம் என்னோடு பயணித்தது. திராவிட இயக்கத்தின் துருவ நட்சத்திரமான தலைவர் கலைஞர் பற்றி ஆங்கிலத்தில் வாசித்தது மனநிறைவாக இருந்தது. காட்டாற்று வெள்ளத்தை அணை போட்டு அதன் வலிமையைக் காட்டலாம், கலைஞர் போன்ற மாபெரும் ஆளுமைக்கு இந்தப் புத்தகம் அவரின் தாக்கத்தை உணர்த்தும் ஓர் அணை. இந்தத் தாக்கத்தை அணையாமல் இருக்கவைப்பது திராவிட இயக்கக் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ளவர்களின் கடமை.

தலைவர் கலைஞர் பற்றி பேராசிரியர் பாரூக் எழுதிய KALAIGNAR : THE GREAT
அருமையான புத்தகத்தைத் திறனாய்வு செய்ததில் மனநிறைவை அடைந்தேன். 



-------------------

Saturday, October 30, 2021

மெக்காலே மகாத்மாவா?


 — முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி


மெக்காலே.jpg

இந்தியாவின் தற்போதைய மதச் சார்புள்ள அரசாங்கம், சென்ற ஆண்டில் அறிமுகப்படுத்திய புதிய கல்விக் கொள்கைத் திட்டம் நாடு முழுவதும் பெரிய விவாதங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. மதத்தைத் திணிக்கும் ஒரு கல்வி முறையாக இது பரவலான எதிர்ப்பைச் சந்தித்தாலும், அரசாங்கம் அதை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்தப் புதிய கல்விக் கொள்கை தற்காலத்தில் எதிர்கொண்ட எதிர்ப்புகளை விடவும், பிரிட்டிஷ் ஆட்சியின்போது மெக்காலே கொண்டுவந்த கல்விச் சீர்திருத்தம், அது மதச்சார்பற்றது என்றாலும், அந்நாளில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.

இது குறித்துப் புதிய கோடாங்கியில் பல அறிஞர் பெருமக்களும் விளக்கம் அளித்திருந்தனர். "மொந்தை புதுசு கள்ளு பழசு" என்ற தலைப்பிட்ட (2020, செப்டம்பர்) கட்டுரையில், மெக்காலேயின் கல்வித் திட்டம் குறித்தும் அலசப்பட்டு இருந்தது. இக்கட்டுரையின் சில கருத்துக்களும், பகுதிகளும் இணைய தளங்களில் பதிந்த போது அவை பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்தன. 

மெக்காலேவின் கல்விச் சீர்திருத்தங்கள் சட்டமாக்கப் பட்டதை வைத்து, அவரை மகாத்மா அளவுக்குப் புகழ்ந்தவர்களும் உண்டு. அதேநேரம் அவர் இந்தியாவை மிகவும் இழிவாகக் கருதியவர் என்றும், இந்தியப் பண்பாட்டுக்கும், இந்தியப் பாரம்பரியக் கல்வி முறைக்கும் எதிரானவர் என்றும் அவரை எதிர்ப்பவர்கள் கட்டமைக்கும் கருத்துக்களின் உச்சமும் உண்டு. மெக்காலேவை எதிர்ப்பவர்கள், அவர் கூறியதாக, மிக முக்கியமான குற்றச்சாட்டின் ஒரு சான்றாகச் சுட்டிக்காட்டுவது இதுதான்.

“நான் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளேன். அங்கே ஒரு பிச்சைக்காரர் கூடக் கிடையாது. ஒரு திருடர் கிடையாது. மிக்க வளமான நாடு. உயர்ந்த ஆன்மீக மதிப்பீடுகள் கொண்ட நாடு. அதை வென்று அடிமைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு முதலில் அதன் இந்த வலிமையை உடைத்துத் தகர்த்தாக வேண்டும். அதனுடைய முதுகெலும்பாக உள்ள அதன் ஆன்மீக கலாச்சார மதிப்பீடுகளைத் தகர்க்க வேண்டும். அதற்கு நான் முன்வைக்கும் திட்டம் என்னவென்றால் அதன் பண்டைய கல்விமுறையை முதலில் தகர்க்க வேண்டும். அதனிடத்தில் ஆங்கிலக் கல்விமுறையை வைத்தால் தங்களுடைய கலாச்சாரம் முதலியவைதான் உயர்ந்தது என்கிற சுய பெருமிதத்தை அவர்கள் இழப்பார்கள்”

மேலுள்ள சொற்றொடரை மெக்காலே, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் 2.2.1935 அன்று பேசியதாக மெக்காலே எதிர்ப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.

மெக்காலே இவ்வாறு கூறவில்லை என்று இதற்கு முன்பாகவே பல விளக்கங்கள் வெளியிடப்பட்டு விட்டன. ஆனாலும் மிகத் தந்திரமான ஃபோட்டோ ஷாப் தொழில்நுட்பத்துடன், அந்நாளில், அதாவது 1835 ஆம் ஆண்டு வெளியானதாக, மேற்கூறிய கருத்தை இணையதளத்தில் வெளியிட்டு, அதுதான் மெக்காலேவின் இந்தியாவைப் பற்றிய உண்மையான கருத்து என்ற புரளியைப் பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

தாமஸ் பாபிங்டன் மெக்காலே (1800 - 1859) இங்கிலாந்தின் கிராமமான லைசெஸ்டர்ஷயரில் 25.10.1800 அன்று பிறந்தவர். எளிமையான குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த மெக்காலே, சிறுவயதிலிருந்து மிகவும் புத்திக்கூர்மை உள்ள மாணவராகத் திகழ்ந்தார். அறிவுத் தரம் உயர்ந்தோரில் ஒருவராக அவர் 1926 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டுள்ள "300 அறிவாளிகள்" (The Early Traits of 300 Genius) என்ற நூலில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டார். ஐம்பத்து ஒன்பது ஆண்டுக் காலமே வாழ்ந்த அவர், இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. அதே நேரம் தனது கல்வியின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவிகளை அடைந்தவர். அவரது மதிநுட்ப ஆலோசனைகளுக்காகப் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டின்கின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 1834 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டு இந்தியாவுக்கு வந்து, பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரலின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மெக்காலே, அதன் பிறகு 1838 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து திரும்பினார். 

மெக்காலே இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் பேசியதாகக் குறிப்பிடப்பட்ட நாளில் (2.2.1835 அன்று) அவர் இங்கிலாந்தில் இல்லை. இந்தியாவில், கல்கத்தாவில் தான் இருந்தார். கல்கத்தாவில், பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலின் ஆளுநர் மாளிகையில், இந்தியக் கல்வி முறை குறித்து, பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் மற்றும் உயர்மட்டக் குழுவினர் முன்பு மெக்காலே நடத்திய விவாதங்கள் அவ் ஆணையத்தின் நடவடிக்கைக் குறிப்பில் உள்ளன. அவற்றில் 2.2.1835 ஆம் நாளில் இந்தியக் கல்வி முறை குறித்து மெக்காலே பேசியிருக்கிறார். அந்த உயர்மட்டக் குழுவில் மெக்காலே பேசாத ஒரு கருத்தை, அவர் இங்கிலாந்தின் பாராளுமன்றத்தில் பேசியதாக, அதுவும் இந்தியப் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்று பேசியதாக, மேற்குறிப்பிட்ட பேசாத பேச்சை வெளியிட்டுள்ளனர். சரி, கல்கத்தாவில் மெக்காலே என்னதான் பேசினார் என்பதைக் காணப் புகுமுன், அது தொடர்பான வரலாற்றுப் பின்னணியைக் காண்போம்.

மெக்காலே இந்தியா வருவதற்கு முன், இந்தியக் கல்விமுறை சமஸ்கிருதம் மற்றும் பாரசீகம் (அரேபியம்) ஆகிய இரு மொழிகளை மட்டுமே சார்ந்திருந்தது. இந்து மதத்தின் இரு பிறப்பாளர்கள் என்று கூறப்படும் பிராமண, பனியா, சத்திரியர், காயஸ்தர், காத்ரிஸ் என்னும் உயர் சாதியினருக்கு மட்டும் கல்வி சமஸ்கிருத மொழியிலும், பத்தன், அராபியர், மதம் மாறிய இருபிறப்பாளச் சாதியினருக்கு அரேபியக் கல்வியும் சாத்தியமாகி இருந்தது. உணவு உற்பத்தியில் கடும் உழைப்பாளிகளான சூத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும், ஆதிவாசிகளுக்கும், மகளிருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. 1817 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிறித்துவ அமைப்புப் பள்ளி தான், முதன் முதலில் ஆங்கில மொழியில் கற்பித்தது. வில்லியம் கேரி (1761 - 1834) என்பவரால் கல்கத்தாவில், ராஜாராம் மோகன் ராயுடன் சேர்ந்து இந்தத் தனியார் ஆங்கிலப் பள்ளி தொடங்கப்பட்டது. அங்கும் இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டது. வில்லியம் கேரி இறந்த ஆண்டில்தான் (1834) மெக்காலே இந்தியா வந்தடைந்தார். மெக்காலேவின் முதல் திட்டமே இந்தியக் கல்வி முறையில் சமஸ்கிருதம், அரபிய மொழிகளை நீக்கி, ஆங்கில வழிக் கல்வி முறையைப் புகுத்துவது தான்.

அதற்கான காரணத்தைத்தான் கல்கத்தாவில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் 2.2.1835 அன்று மெக்காலே பேசினார். அப்போது இந்தியக் கல்வி முறையின் பயிற்று மொழி குறித்து அவர் கூறும் பொழுது, இந்தியக் கல்வி முறையின் பயிற்று மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். அவர் தனது உரையில், "இந்தியாவில் அதுவரையில் பழங்காலக் கல்வி முறைகள் சமஸ்கிருத மொழியிலும், அராபிய மொழியிலும் இருந்தன. இந்த இரண்டு முறைகளும் இந்தியாவின் வருங்கால இளைய தலைமுறையினர்க்கு ஏற்றதல்ல" என்று கூறினார். அதற்கான காரணத்தை, மெக்காலே இப்படிக் கூறுகிறார்.

"சமஸ்கிருத மொழி நூல்களிலிருந்து திரட்டி இருக்கக்கூடிய வரலாற்றுத் தகவல்கள் அனைத்தும், இங்கிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பள்ளியில் கொடுக்கப்படும் சுருக்கமான பாடங்களுக்கு முன்னால் மதிப்பற்றவை என்பது தனது மிகையற்ற நம்பிக்கை. மேலும், ஐரோப்பிய நாடுகளின் மதிப்புமிக்க இலக்கியங்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் அரபு, சமஸ்கிருத மொழியின் செய்யுள்கள் இல்லை. அப்படி இருக்கிறது என்று சொல்லக்கூடிய கீழை நாட்டு மொழிகளின் வல்லுநர் ஒருவரைக் கூட நான் சந்தித்ததில்லை" 

இதுதான் மெக்காலே 2.2.1835 அன்று கல்கத்தாவிலுள்ள கவர்னர் ஜெனரல் மாளிகையில் இந்தியக் கல்வி முறை குறித்துப் பேசிய குறிப்புகளில் இடம் பெற்றிருக்கும் வாசகங்கள். இனி வருவதும் மெக்காலே பேசியவை தான்.

 "ஆடு மாடுகளைக் கொல்வது என்னும் காலாவதியாகிப் போன வேதக் கருத்துக்களை மொழிவதிலும், ஒரு கழுதையைத் தொட்டுவிட்டுத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதில் தங்கள் இளமையைக் கழித்துக் கொண்டிருக்கும் மாணவர்களை ஆசை காட்டி இழுப்பது இந்திய அரசாங்கத்தின் வேலை அல்ல" (இதில் கழுதை என்னும் சொல்லுக்கு மெக்காலே ஆங்கிலத்தில் பயன் படுத்திய Ass என்னும் பதத்திற்கு வேறு பொருள்களும் உண்டு). 

"இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருங்கால இந்தியாவை உருவாக்க இந்திய மாணவர்களுக்குக் கணிதம், அறிவியல், நிலவியல் போன்ற பாடங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைக் கற்பிப்பதில் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்" என்று மெக்காலே உறுதியாகக் கூறினார். ஆங்கிலக் கல்வி முறையைச் சார்ந்திருப்பது தான் எதிர்கால இந்தியாவிற்கு நல்லது என்றும், சுதந்திரமான அரசியலும், அப்படிப்பட்ட பிரதிநிதித்துவம் உள்ள அரசாங்கத்தை வகுத்தல் என்ற ஒரு கருத்தியலை உருவாக்குவதும் தான் எதிர்கால இந்தியாவுக்குத் தேவை என்பதும், எதிர்கால இந்திய அரசியல்வாதிகள் சுதந்திர உணர்வின் மகத்துவத்தை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதும் மெக்காலேவின் கருத்துக்களாக இருந்தன (Macaulay's Minutes on Education, 2.2.1835).

இதற்கு முன்பும், இங்கிலாந்துப் பாராளுமன்றத்திலும், மெக்காலேவின் குரல் இந்தியாவுக்கான உண்மையான விடியலை அடிப்படையாகக் கொண்டிருந்தது. “இந்திய மக்கள், மோசமான நிர்வாகத்தில் நமக்குக் கட்டுப்பட்டவர்களாக இருப்பதைக் காட்டிலும், நம்மிடமிருந்து சுதந்திரம் பெற்று நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படுவதுதான் நமக்கு நல்லது” என்று 1832 ஜூலை 10ஆம் நாள் நடைபெற்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் (இங்கிலாந்தில்) மெக்காலே கூறினார்.

1832 இல், தான் ஆற்றிய உரையில் மெக்காலே பின்வரும் கருத்துக்களையும் கூறினார்: “கடுமையான தண்டனைச் சட்டத்தைக் காட்டிலும் மென்மையான தண்டனைச் சட்ட அமைப்பு முறையில்தான் நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். பிராமணர்களுக்கு மென்மையான சட்ட விதிகளும், சூத்திரர்களுக்குக் கடுமையான சட்ட விதிகளும் இருப்பதுதான் தற்போதைய ஆட்சி அமைப்பு முறைகளில் மிக மோசமான ஒன்று. சாதி வேறுபாடுகளாலும் புரையோடிப் போயுள்ள பாரபட்சமான அணுகுமுறைகளாலும் இந்தியா ஏற்கெனவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.” என்று பிரிட்டிஷ் பேரரசு, இந்திய நிர்வாகத்தை ஏற்குமுன்பே, அதாவது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தின் போது பேசப்பட்டது என்ற உண்மை, மெக்காலேவின் எதிர்காலப் பார்வை எத்தனை சமத்துவமானது என்பதை நிரூபிக்கும். அதுமட்டுமல்ல, 1848-ஆம் ஆண்டில் 'கம்யூனிஸ்ட் அறிக்கை' வெளிவரும் முன்பே சமத்துவத்தை, அதுவும் சாதி ஒழிப்பின் சமத்துவ அரசியலைப் பற்றி மெக்காலே பேசினார் என்பதும் கவனிக்கத்தக்கது. இனவெறி நாட்டின் சிந்தனை, இதுவரையும் மேற்கத்தியர்கள் புரிந்துகொள்ள முடியாத சாதிவெறியைப் பற்றியும், அதை அழித்தொழிக்கும் வழியைப் பற்றியும் மெக்காலே வழி வெளிப்பட்டது என்பதும் கூட இந்தியாவைப் பொறுத்தவரைப் புதுமையானது தான். புத்தர், திருவள்ளுவர் ஆகியோருக்கு அடுத்துப் பேசப்பட்ட சமத்துவச் சிந்தனை மெக்காலேவுடையது என்பதையும் இந்தியச் சிந்தனையாளர்கள் முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், இந்தியாவுக்கு வந்த பின்னர் மெக்காலே மேலும் பேசினார்.

 “நாம் அவர்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருப்பதற்காக இந்திய மக்களை அறியாமையிலேயே சிக்குண்டு வைத்திருக்கப் போகிறோமா? அல்லது விழிப்புணர்வுக்கான ஆவலைத் தூண்டிவிடாத அறிவைக் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது விழிப்புணர்வைத் தூண்டிவிட்டு அதற்கு உரிய வடிகால் இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோமா? நமது அமைப்பு முறையின் வரம்புகளைக் கடந்து இந்திய மக்களின் மனம் விசாலமடையலாம்; அதாவது நிர்வாகத்தின் மூலம் நமது மக்கள் சிறந்த அரசை அமைத்துக் கொள்வதற்கான தகுதியைப் பெறுமளவுக்கு நமது சிறந்த அரசு நமது மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும். அதற்கான கல்வி ஐரோப்பிய மொழி மூலம் வழங்கப்பட வேண்டும். அதனால், எதிர்காலத்தில் ஐரோப்பியக் கல்வி நிலையங்களுக்கான தேவை ஏற்படலாம். அப்படிப்பட்ட ஒருநாள் என்றாவது வருமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதைத் தடுப்பதிலோ, தாமதப்படுத்துவதிலோ நான் ஈடுபடவே மாட்டேன். ஆனால், அப்படி ஒருநாள் வந்தால், அதுதான் ஐரோப்பிய வரலாற்றின் பெருமைக்குரிய நாளாக இருக்கும்” என்று கூறியதன் மூலம், 1835 ஆம் ஆண்டிலேயே மெக்காலேவின் சமத்துவச் சிந்தனை, இந்தியச் சுதந்திர உணர்வுக்கு வித்திட்டதை எப்படி மறக்கவும், மறைக்கவும் முடியும்?

இந்திய மக்களுக்குக் கல்வி வழங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் கொடுக்குமாறு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் உத்தரவிட்டபோது, அதிகாரிகளிடையே மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. ஒரு தரப்பினர் அன்று நடைமுறையில் இருந்த அரேபிய மற்றும் சமஸ்கிருதக் கல்வியைத் தொடரும்படி வலியுறுத்தினர். மெக்காலேயின் தலைமையிலான மற்றொரு தரப்பினர், அறிவியல் களத்தில் விரைந்து முன்னேறுவதற்காக ஆங்கிலக் கல்விதான் தேவை என வலியுறுத்தினர். அரேபிய, சமஸ்கிருதக் கல்வியில் மோகம் கொண்டுள்ள தனது சக அதிகாரிகளைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக, அன்று அவர் பேசியது 15 ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தின் நிலையைப் பரிகசிப்பதாக இருந்தது:
“15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் எழுத்துகளுக்குப் புத்துயிர் கொடுப்பதற்காக மேற்கத்திய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை நினைவுபடுத்துகிறேன். அந்தக் காலகட்டத்தில், வாசிக்கத் தக்க கருத்துகள் அனைத்தும் தொன்மையான கிரேக்க மற்றும் ரோமன் மொழிகளில்தான் இருந்தன. நமது மூதாதையர்கள், துசைடிடஸ் (Thucydides), பிளாட்டோ, டெசிடஸ் ஆகியோரின் மொழிகளைப் புறக்கணித்திருந்தால், இன்றுள்ள நிலையை இங்கிலாந்து எட்டியிருக்குமா?” 

இந்திய மாணவர்களுக்குச் சுதந்திர உணர்வும், விடுதலை உணர்வும், சமத்துவம் நிறைந்த அரசியல் உணர்வும் ஊட்டக்கூடிய கல்வி முறை தேவை என்ற மெக்காலேவின் கருத்து, அவர் வெறும் கல்விப் புரட்சிக்கு மட்டுமல்ல, இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா என்று மெக்காலேவை மகாத்மாவாக முன்மொழியும் கூற்றுகளும் உண்டு. அதற்கு அணிகலனாக, மெக்காலேவின் எளிமையை விரும்பும் பண்பைச் சுட்டிக்காட்டுகிறார் கல்வியாளர் டி ஷியாம் பாபு. அரசாங்கத்தின் மகத்தான கவுரவ முத்திரையான (லார்ட்) பட்டத்தைத் துறந்தவர் என்றும், இந்தியத் தன்மையிலிருந்து (சாதி, சமத்துவமின்மை) மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட "இந்தியக் குற்றவியல் சட்டத்தினைத் (இந்தியன் பீனல் கோடு - Indian Penal Code)" தனது கடும் உழைப்பால் வடிவமைத்து நடைமுறைக்குக் கொண்டு வந்தவர் என்றும், இந்திய ஆட்சிப் பணி முதல் பல நிர்வாகப் பணி அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்தியப் பணிச் சேவை (இந்தியன் சிவில் சர்வீஸ் - Indian Civil Services) அமைப்பை வடிவமைத்தவர் மெக்காலே என்றும் ஷியாம் பாபு கூறுகிறார். இந்தியாவில் நவீனச் சட்டங்கள் அவதாரம் எடுக்கவும், நவீன இந்தியா உருவாக்கத்திற்கும் உயிர்நாடியானவர் மெக்காலே என்பது, இந்திய வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கரின் கருத்து. ('விடுதலைக்கு வித்திட்ட மகாத்மா மெக்காலே'; சந்திர பான் பிரசாத் கட்டுரை. தமிழில் ராஜலட்சுமி சிவலிங்கம் /minnambalam.com/  29.10.2017/ / livemint.com / indianexpress.com).

உயர்மட்டக் குழுவில் இருந்த சில ஆங்கிலேயர்கள், தங்கள் அனுபவங்களைக் கொண்டு, மெக்காலேவின் கல்விமுறை பலத்த எதிர்ப்பைச் சந்திக்க நேரும் என்று எச்சரித்த போதும், இந்தியாவின் கல்வி முறை இங்கிலாந்தின் கல்வி முறையையும், ஆங்கில மொழியைச் சார்ந்தும் இருப்பதை மெக்காலே உறுதிப்படுத்தினார். மெக்காலேவின் கல்வி முறையைச் சனாதனிகளும் கடுமையாக எதிர்த்தனர். அவற்றைப் புறந்தள்ளிய மெக்காலே, அன்றைய அரசாங்கத்தின் பலத்தால், தான் தயாரித்திருந்த சீர்திருத்தக் கல்வியைச் சட்டம் ஆக்கினார். இதற்காக மெக்காலே கல்விமுறைக் குழுவினரோடும், இந்தியச் சனாதனிகளோடும் பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. 

மெக்காலே, இந்து சனாதன வாதிகளுடன் மூன்று கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தில், இந்தியர்கள் அனைவருக்கும் (அனைத்துச் சாதியினர், மகளிர்) கல்வி கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அதைச் சனாதன வாதிகள் முழுமையாக மறுத்தனர். கல்வி என்பது பார்ப்பனர்கள் மற்றும் மேல் சாதி மக்களுக்கு மட்டுமே என்று அவர்கள் தங்கள் வாதத்தை வைத்தனர். இந்த முதல் கட்டப் பேச்சு வார்த்தையே பலகட்டமாக நீடித்தது. பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் எல்லோருக்கும் கல்வி என்ற நிலைப்பாட்டில் மெக்காலேயும், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கமும் உறுதியாக இருந்ததால் சனாதன வாதிகளுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. 

இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சினையில் கணிதத்தையும், அறிவியலையும் சேர்க்க வேண்டுமென்று மெக்காலே கூறியதற்குச் சனாதன வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேத, புராண, இதிகாசங்களைக் கற்பித்தால் போதும் என்பது அவர்களுடைய வாதம். இதுவும் பல கட்டப் பேச்சு வார்த்தைகளுக்கு உள்ளானது. மெக்காலே, வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி ஓட்ட முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். அதை வைதீக பிராமணர்கள் இறுதி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை. இறுதியாக ஆங்கிலேயர்கள் தனிப்பட்ட அரசு ஆணை ஒன்றைக் கொண்டு வந்து அறிவியல், கணிதம் சார்ந்த கல்வி முறையை வலுக்கட்டாயமாக ஏற்படுத்தினர். அதையும் எதிர்த்துப் பிராமணர்கள் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்கும், அரசருக்கும் மனுக்களை அனுப்பினார்கள். ஆனாலும் அது பயனளிக்கவில்லை. 

மூன்றாவது கட்டமாகப் பயிற்று மொழி எந்த மொழியில் இருக்க வேண்டும் என்ற விவாதத்தில் மெக்காலே அரேபியம், சமஸ்கிருதத்தை விடுத்து ஆங்கில மொழியைத் தெரிவு செய்தார். ஆனால் வைதிகர்களின் தேர்வு சமஸ்கிருத மொழியும், அது உயர் வகுப்பினர்க்கு மட்டுமே கற்றுத் தர வேண்டும் என்பதாகவும் இருந்தது. அதற்கு ஒத்துக் கொள்ளாத மெக்காலே, பிரிட்டிஷ் பேரரசில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்திய நவீனக் கல்விமுறையை இந்தியர்கள் அனைவருக்கும் விரிவாக்கினார். 

இந்தியர்களின் கல்விக்காக மெக்காலே எவ்வளவு போராடியுள்ளார் என்பது அவரது அறிக்கை வழியாக வரலாற்றிலும் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாகவே வைதிகச் சமுகம் இன்றுவரையும் மெக்காலேயின் கல்வி முறையையும், அவரையும் குறை சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி படித்தவர்கள் மெக்காலேவின் குழந்தைகள் என்று கூடக் கேலியாக அழைக்கப்பட்டனர். இது மெக்காலேவிற்குக் குழந்தை இல்லாத நிலையைச் சுட்டிக் காட்டுவதாக நினைத்துச் சொல்லப் பட்டது தான். ஆனால் ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் குழந்தைகள் மட்டும் இல்லை. மகாத்மா காந்தி, பண்டிதர் நேரு, முகமதலி ஜின்னா, டாக்டர் அம்பேத்கர் போன்ற மகத்தான தலைவர்கள் கூடத் தங்களின் கல்வியை இங்கிலாந்தில் படித்தவர்கள்; இங்கிலாந்தின் சட்டம் படித்தவர்கள்; இங்கிலாந்தின் நீதிமன்றங்களில் பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள். மகாத்மா ஜோதிராவ் புலேயின் ஆங்கிலக் கல்வி தான் அவரையும், அன்னை சாவித்திரி புலேவையும் கல்வித் தந்தை, தாயாக்கி மகா ஆத்மாக்கள் என்று போற்ற வைத்தது. பண்டிதர் அயோத்திதாசரும் அவரது முன்னோர்களும் ஆங்கிலக் கல்வி பெற்றிருந்ததையும், அப்படி இவர்கள் எல்லாம் பெற்ற கல்விச் சிந்தனைகளே, இந்தியச் சமுதாயத்தைச் சமத்துவத்தை நோக்கி மாற்றி அமைத்ததையும் நாடறியும். மெக்காலேவின் கல்வி முறையும், பயிற்சியும் தான் இந்தியாவுக்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு அவர்களுக்கு அடிப்படைத் தளத்தை அமைத்துக் கொடுத்திருந்தன.

மெக்காலே இந்தியத் தன்மை முழுவதையுமே இழிவாகக் கருதினார் என்றும், இந்தியாவிற்கு வரும் போது இந்தியாவைப் பற்றி ஒரு சார்பு எண்ணத்துடனும், இந்தியாவுக்கு அருள் புரிய வேண்டும் என்ற ஒரு தெய்வீகத் தன்மையுடனும் நினைத்துக் கொண்டு வந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது. இதற்குக் காரணம், "இந்துக் கடவுள்கள் கோரமான உருவத்துடனும், பயங்கரம், அருவருப்பு நிறைந்ததாகவும் உள்ளன. அறியாமையும், பழிப்புக்கு இடமாகும் கணபதி போன்ற உருவங்களும் கடவுளாக இருக்கின்றன" என்று அவர் கருத்து தெரிவித்ததுதான். முப்பதடி உயரமுள்ள மன்னன், முப்பதாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்று கூறும் இந்திய வரலாறும், மனிதர்கள் காலிலும், தலையிலும் முளைத்த கதையும் யாருக்குத் தேவை? இந்த உலகம் பாற்கடலால் சூழப்பட்டது என்று கூறும் நிலவியலின் மொழி அமைப்பின் புனிதம் என்னவாக இருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார் (English Education Act, 1835 - Macaulay's Minute upon Indian education, wikipedia.org).

இந்து மதம் குறித்தும், கடவுள்கள் குறித்தும், வேதங்கள் குறித்தும் மகாத்மா ஜோதிராவ் புலே, அயோத்திதாசப் பண்டிதர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் இவர்களெல்லாம் என்ன கூறினார்களோ, இதே கருத்தைத் தான் இவர்களுக்கு முன்பாகவே மெக்காலே கூறினார். அது மட்டுமல்லாமல் இந்தியக் கல்விமுறையில், மேற்கூறிய இந்தியத் தலைவர்கள் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்ததைத் தான், அதற்கு முன்பே மெக்காலே உறுதிப்படுத்தி, அதைச் சட்டமாகவும் ஆக்கினார். இவை எல்லாம் தாமஸ் பின்னி என்பவர் தொகுத்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வழி பல பாகங்களாக வெளியிடப்பட்ட "மெக்காலேவின் கடிதங்கள்" நூலில் இடம் பெற்றுள்ளவை (online publication May 2010/cambridge.org).

மெக்காலே செய்தது உண்மையில் ஒரு கல்விப் புரட்சி தான். இப்படிப்பட்ட ஒரு புரட்சியைக் கொண்டு வந்தவரைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட விளைவுகள் (இந்திய விடுதலை உட்பட) குறித்தும் ஏதும் சொல்லாமல், தங்கள் மதத்தையும், கடவுளையும் அவர் இழிவுபடுத்தினார் என்ற இந்துத்துவப் பார்வையை மட்டுமே கொண்டு, மெக்காலே மேல் சேற்றை வாரி இறைத்தது தான் அப்படிச் செய்தவர்கள் ஏற்படுத்திய விளைவுகள். மெக்காலே சொல்லாததை எல்லாம் அவர் கூறியதாக அவர்களால் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவையெல்லாம் இந்துத்துவக் கருத்தியல் அடிப்படையில் தொகுக்கப்பட்டு, அவை "விடியல் கதிர்" என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து, பின்வந்த நாட்களில் இந்தியப் பத்திரிகைகளை ஆக்கிரமித்தன (The Awakening Ray, vol.4 - No.5, Published by Gnostic Centre/'Niti', Indian Magazine in 2002). இணையதளங்களில் புகுந்து விளையாடும் இணையதள வாதிகளால் (நெட்டிசன்கள்) இவை இன்னும் பரவலாக்கப்பட்டன. 

இவற்றின் விளைவால் "மெக்காலே வின் கல்விப் புரட்சி என்பது இந்தியாவின் பண்பாட்டைக் கேவலப்படுத்திய செயல் என்றும், இந்தியாவின் முதுகெலும்பாக இருந்த இந்திய மரபுவழிக் கல்விமுறையை நொறுக்கியது தான் மெக்காலேவின் சாதனை என்றும்" கூறும் அளவுக்கு மெக்காலே எதிர்ப்பு வாதம் சென்றது. இதைப் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான எல். கே. அத்வானியும் படித்து விட்டு மெக்காலேவைப் பற்றிக் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமும் இதே கருத்திலேயே, தொலைக்காட்சி கருத்து விவாதங்களிலும் பேசி இருக்கிறார். இதற்கான அடிப்படை என்பது மெக்காலே இந்து மதம், வேதம், கடவுள்கள் குறித்துக் கருத்து தெரிவித்தது தான். ஆனால் இதன் மறுபக்கம் வேறு விதமாக உள்ளதை, "மெக்காலேவின் இகழ்ச்சியான பேச்சு ஒருபோதும் நிகழவில்லை" என்ற தி வயர் இணையத்தின் ஆய்வுக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது (19 2.2017 இல் பதிப்பிக்கப்பட்டது. thewire.in).


இந்தியச் சனாதனப் பாதுகாவலர்கள் தான் முதன்முதலில் ஆங்கிலக் கல்வியைப் பயின்றனர். அதற்கு முன்பு அரேபிய மொழியையும் அவர்கள் பயின்றனர். ஆட்சியாளர்களின் தாள் பணிவதும், பிறரைத் தன் தாள் பணிய வைப்பதுமே அவர்களின் இலக்காக இருந்தது. சமஸ்கிருதமோ, அரேபியமோ, ஆங்கிலமோ அதுவரை உயர் சாதியினருக்கு மட்டுமே இருந்து வந்த கல்வியை, 1834 ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும், அதாவது அனைத்துச் சாதியினருக்கும், மகளிர்க்கும் என்று மடை திறந்த வெள்ளமெனக் கல்வியைப் பாய்ச்சியதாலேயே, மெக்காலே இந்தியச் சனாதனிகளுக்கு வேண்டாதவர் ஆகிவிட்டார். மெக்காலேவால் கொண்டுவரப்பட்ட ஆங்கிலக் கல்வியைப் பயின்று, பின்னர் அவரையே திட்டித்தீர்த்த சனாதனிகள் போல், கல்வி மறுக்கப்பட்டவர்களும் சேதியறியாது மெக்காலே மேல் கடும் விமர்சனம் வைக்கின்றனர். ஆங்கிலக் கல்விப் பாகுபாடு சாதிகளுக்குள் மறைவாக நிலவ, கிராமம் - நகரக் கல்வியில் அது வெளிப்படையாக நிலவுகிறது. ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள் அதிகார மையம், உயர் வணிகம், உலக மயமாக்கல் என்று பவனி வரும்போது, மாநில மொழி கற்றவர்கள் பின்தங்கும் நிலை இன்றும் உள்ளது. இப்படிப் பின் தங்கியவர்களும் தங்கள் நிலைக்குக் காரணமாக்குவது மெக்காலேவைத்தான். இருமொழிக் கொள்கையை அறிஞர் அண்ணா காலத்திலிருந்து (1968) நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கல்வியை ஏற்று, ஆங்கிலத்தை மூன்றாம் நிலைக்குக் கொண்டு சென்று, இந்தியர்களை மெக்காலே காலத்திற்கு முன் இருந்த நிலைக்குக் கொண்டு செல்வதையா "இந்தியா ஒளிர்கிறது" என்று சொல்ல முடியும்? அறிவுப் பாதையைத் தடுத்து நிறுத்துவதே சனாதனமும், இந்துத்துவமும் என்ற சிந்தனை எப்போது ஒளிரத் தொடங்கும்?

அனைவருக்கும் கல்வி என்ற நிலையைக் கொண்டு வந்த மெக்காலே, சட்டத்தின் முன் அனைவரையும் சமம் ஆக்கினார். இந்தியாவில் வர்ணமும், சாதியும், வந்தேறி நாட்டாண்மையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் கோலோச்சி வந்த இருண்ட காலத்தை, இந்தியக் குற்றவியல் சட்டம் மூலமாக (ஐபிசி) 1835 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி மனு தர்மம் என்னும் அதர்மத்தைச் சட்டத்தின்முன் செல்லாக்காசு ஆக்கினார் மெக்காலே. பூர்வகுடி மக்கள் கல்வி கற்று, நிர்வாகத்தில் பங்கேற்பதற்காக "இந்திய சிவில் சர்வீஸ்" என்னும் அமைப்பை உருவாக்கினார் மெக்காலே. இந்தியாவில் சாதியினால் ஒடுக்கப்பட்டுப், பழிவாங்கப்பட்ட மக்கள், கல்வி கற்று, உயர் நிலைப் பதவிகளை அடையவும், அரசாங்கத்தில் இடம்பெற்றுத் தங்களைத் தாங்களே நிர்வகிக்கவும், நிர்ணயிக்கவும் வேண்டும் என்ற மெக்காலேவின் விருப்பத்தைக் கல்வி மறுக்கப்பட்ட பல்லாயிரம் பேர் நிறைவேற்றினர். 

மெக்காலேவின் எதிர்பார்ப்புக்குச் சரியான இந்தியக் கல்வியாளர் ஒருவரைக் கூற வேண்டுமானால், உச்சமாக அண்ணல் அம்பேத்கரைத் தான் கூறமுடியும். அம்பேத்கரின் ஆங்கிலக் கல்வியும், வெளிநாட்டுக் கல்வியும் அவரைச் சமத்துவத்தின் உயரத்தில் ஏற்றி வைத்தன. புத்தரிடம் இருந்து பெற்ற சமத்துவப் பார்வையை அனைவருக்கும் விரிக்க அம்பேத்கருக்குப் பெருந்துணையாக இருந்தது அவர் கற்ற கல்வியே. அதுவே அவரை ஒரு நாட்டுக்கான அரசியலமைப்பை உருவாக்க வைத்தது. எங்கிருந்தோ வந்து சமத்துவத்தைச் சட்டப்பூர்வமாக்கிய மெக்காலேவின் எண்ணச் சிதறல்கள் அதில் குவிந்து கிடந்தன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பக்கங்களில் மெக்காலே, அம்பேத்கர் முகங்களைச் சமத்துவ வாதிகள் காணமுடியும். 

மேற்கத்தியக் கல்வி முறையும், அதன் கல்வி நிறுவன அமைப்புகளும் இந்தியாவை உலகத்தோடு கைகோர்க்க வைக்கும் என்ற மெக்காலேவின் சிந்தனை, அம்பேத்கரிடம் இருந்ததை அரசியலமைப்பின் பக்கங்களைப் புரட்டினால் அறியமுடியும். இருவருக்கும் இடையில் கருத்தியல் ரீதியான ஒற்றுமையுடன், வெளிப்படையான ஒற்றுமையையும், இருவரின் மேற்கத்திய பாவனைகளில் காணமுடியும். எப்போதும் நூல்களைக் கையோடு வைத்திருக்கும் பிம்பங்களாக அடையாளப் படுத்தப் படும் புகழ்பெற்ற இருவரில், மெக்காலேவையும், அண்ணல் அம்பேத்கரையும் தான் உலகம் சிறப்புடன் அடையாளம் காட்டும். வர்ணம், சாதியினால் சனாதன பூமியாக்கப்பட்ட இந்தியாவை, சமத்துவப் பூமியாகக் கட்டமைத்த அந்த இருவருமே இந்தியாவிற்கு வழிகாட்டிகள். இருவருமே இந்தியாவின் மகாத்மாக்கள்.

-----------------










Tuesday, October 26, 2021

மயங்கா மரபின் எழுத்துமுறை!

மயங்கா மரபின் எழுத்துமுறை!


—   முனைவர். ப.பாண்டியராஜா



          ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் நம் தமிழ்மொழி எழுதப்பட்ட எழுத்து முறைக்குப் "பிராமி' என்று பெயர். இதைத் தமிழ் பிராமி, தமிழி என்றும் சொல்வர். இந்தப் பிராமி எழுத்து முறையில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கம் இல்லை. மேலும் எகர, ஒகர உயிர்/உயிர்மெய் எழுத்துகளுக்கு வேறுபாடு கிடையாது. "கொடி' என்பதை இடத்துக்கேற்றவாறு, "கொடி' என்றோ அல்லது "கோடி' என்றோ படித்துக்கொள்ள வேண்டும். தமிழ் தெரிந்தவர்களுக்கு இது குழப்பமாக இருந்ததில்லை போலும்.

          இன்றைக்கும் Raman என்பதை நாம் ராமன் என்று படிக்கிறோம், ஆனால், இந்தப் பெயரைக் கேள்வியுறாத வேறுநாட்டார், இதனை ரமன்ரமான்ராமான் என்று படித்துக் குழப்பமடைவதுண்டு. கடலமககளசினமதநதைவயல ஆகியவற்றை நாம் கடல், மக்கள், சினம், தந்தை, வயல் என்று சரியாகப் படித்துவிடுவோம். "அந்தத் தெருவில் தெர் சென்றது' என்பதை "அந்தத் தெருவில் தேர் சென்றது' என்று குழப்பமில்லாமல் படித்துவிடலாம். "கொழுநன் மீது கொபம் கொண்டாள்' என்பதனை, "கொழுநன் மீது கோபம் கொண்டாள்' என்றும் படித்துவிடுவதில் சிரமம் இல்லை. எனவேதான், பண்டைய தமிழ் எழுத்துகளில் புள்ளிகளோ, எ/ஏ, ஒ/ஓ வேறுபாடோ இல்லை.


          ஆனால், தமிழ் தெரியாதவர்கள் இதனைப் படிக்கும்போது மெத்தத் தடுமாறுவர் என்பது உண்மை. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த சமண, புத்தத் துறவிகளுக்கு இது பேரிடராக இருந்திருக்கும். எனவே, தமிழில் எழுதப்பட்டதைப் படிக்கும்போது அவர்கள் பெரிதும் குழம்பியிருந்திருப்பர். இந்தக் குழப்பத்தைத் தீர்த்துவைக்க முனைந்தவர் தொல்காப்பியர். அவர்தான்,
                    மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
                    எகர ஒகரத்து இயற்கையும் அற்றே (எழுத்.நூன்.15,16)
என்று தொல்காப்பியத்தில் எழுதி வைத்துள்ளார். இதற்கு, மெய்யெழுத்துகள், மேலே புள்ளிபெறும்எகர/ஒகர உயிர்/உயிர்மெய் எழுத்துகளும் அவ்வாறே புள்ளிபெறும் என்பது பொருள். எனவே, "செடி', "கொன்' என்பவற்றை நெடிலாகச் "சேடி', "கோன்' என்றும், "செ', "கொ' ஆகிய எழுத்துகளுக்கு மேல் புள்ளி வைத்தால், அவற்றைக் குறிலாகச் "செடி', "கொன்' என்றும் படிக்க வேண்டும் என்பது தொல்காப்பிய(ர்) விதி. 

          ஆனால், இந்தப் புள்ளிமுறை தொல்காப்பியர் காலத்துக்கும் முன்னர் இருந்து, அவற்றைத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறாரா அல்லது இந்த முறை தொல்காப்பியராலேயே ஏற்படுத்தப்பட்டதா என்பது கேள்வி.

          தொல்காப்பியர் தனது இலக்கண நூலில், தமக்கு முன்னர் இருந்த பல மரபுகளைக் குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடும்போது, அவர் அந்த மரபைக் கூறி, "என்ப', "என்மனார் புலவர்', "மொழிப' என்று குறிப்பிடுவார். காட்டாக,
                    பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப (எழுத்நூன்:8/2)
                    வல்லெழுத்து என்ப க, ச, ட, த, ப (எழுத்நூன்:19/1)
                    கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் (எழுத்நூன்:6/2)
என்ற நூற்பாக்களைப் பார்க்கலாம். 

          இவ்வாறாக, "என்ப' என்பது 145 இடங்களிலும், "என்மனார்' என்பது 75 இடங்களிலும், "மொழிப' என்பது 87 இடங்களிலும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால், புள்ளிகளைப் பற்றிக் கூறுமிடத்து,
                    மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்
                    எகர ஒகரத்து இயற்கையும் அற்றே
என்று இந்நூற்பாக்களைத் தன்கூற்றாகவே கூறியிருப்பதை உற்று நோக்க வேண்டும். புள்ளிமுறை தொல்காப்பியருக்கு முன்னர் இருந்திருந்தால் அவர் இந்நூற்பாக்களை,
                    மெய்யின் இயற்கை புள்ளிபெறும் என்ப
                    எகர ஒகரமும் அற்றென மொழிப
என்பது போன்று அமைத்திருந்திருப்பார். 

          இதற்குச் சான்றாக இன்னொன்றையும் காட்டலாம். தொல்காப்பியத்துக்குச் சிறப்புப் பாயிரம் என்ற முன்னுரையை அளித்திருப்பவர் பனம்பாரனார் என்ற புலவர். அவர் தொல்காப்பியரைப் பற்றிக் குறிப்பிடும்போது,
                    மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி,
                    தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி
என்று குறிப்பிடுகிறார். 

          "மயங்கா மரபின் எழுத்துமுறை' என்பதற்கு, மெய்ப்புள்ளிஎகர/ஏகார, ஒகர/ஓகார வேறுபாடுகள் இன்றி, மயக்கம் (ambiguity) தருகிற எழுத்து முறையில், புள்ளியை அறிமுகப்படுத்தி, இந்த மயக்கங்களைத் தீர்த்து வைத்தவர் என்று பொருள்கொள்வது சிறப்பாகும். தொல்காப்பியருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குப் பின்னர் தோன்றிய உரையாசிரியர்களின் காலத்தில் இந்த எழுத்துமுறையின் வரலாறு வெளிப்படாத காரணத்தால், இத்தொடருக்கு வேறுவிதமான பொருள் கூறிச் சென்றனர் எனலாம். 



நன்றி: தினமணி தமிழ்மணி



தொடர்பு: முனைவர்.ப.பாண்டியராஜா
pipiraja@gmail.com
http://sangacholai.in
tamilconcordance.in/




“இந்திரனே சாலுங் கரி”


- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி



     மேற்குறிப்பிட்ட தலைப்புக்கு ‘இந்திரனே தக்க சான்று’ என்று பொருள் கொள்கின்றனர் உரையாசிரியர்கள். அப்படியானால், ‘இந்திரன்’ என்பவன் யார்? என்று கேள்வி எழுகிறது. வேதத்தில் சொல்லப்பட்டு, வைதீக வழி முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவனாகச் சுட்டப்படும் இந்திரனைத்தான் வள்ளுவர் கூறுவதாகப் பொருள் கொள்கின்றனர். அதைத்தான் ‘அகல் விசும்புளார் கோமான்’ (அகன்ற வான் உலகத்தார்க்குத் தலைவன்) என்று குறிப்பிட்டுள்ளதாக வேதகால இந்திரனை நிறுவச் சான்றாகக் கொள்கின்றனர். எப்படிப்பட்ட இந்திரனாக, வேதகால இந்திரனை நிறுவ முற்படுகிறார்கள் என்றறிய வள்ளுவரின் அந்தக் குறளைக் காண்போம்.
          “ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
          இந்திரனே சாலுங் கரி” (குறள் - 325)

(இதன் பொருள்: ஐம்பொறிகளையும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) அடக்கினவனது வல்லமைக்கு, அகன்ற வானுலகத்தார்க்குத் தலைவனான இந்திரனே தக்க சான்றாகும் – புலவர் குழந்தை உரை).

     திருக்குறளில் பாயிரமாகக் கொள்ளப்படும் முதல் நான்கு அதிகாரங்களுள், மூன்றாவதில் நீத்தார் பெருமை எனும் அதிகாரத்தில் ஐந்தாவது பாடலாக இக்குறள் இடம் பெற்றுள்ளது. இதில் சான்றாகக் கொள்ளப்படும் இந்திரன் யாரென்றால் அவன் வேதகால இந்திரன் என்றும், அவனே ஐம்பொறிகளை அடக்கினவன் என்றும் பெரும்பாலானோர் கருத்துரைக்கின்றனர்.

     வேதத்தின் வழியும், புராண இதிகாசங்களின் படியும் இந்திரன் இந்தியா முழுமையும், தமிழ் மக்களுக்கும் சேர்த்து நன்கு அறிமுகமானவன் தான். ஆனால் ஐம்புலன்களையும் அடக்கிய ஒருவனுக்கு இந்திரனே சான்றாவான் என்றால் அனைவருமே நகைப்பை அடக்க நீண்ட நேரமாகும். ஒரு புலனைக் கூட அடக்காத ஒருவனை ஐந்து புலன்களையும் அடக்கிய ஒருவனுக்குச் சான்றாகச் சொல்ல முடியுமா? அதையும் வள்ளுவரே சொல்லுகிறார் என்றால் அவர் எப்படிப் பொய்யில் புலவர் ஆவார்?

     வேதகால இந்திரனைப் பற்றிப் புராணங்களும், வேதங்களும் என்ன கூறுகிறதென்றால் அவன் சுராபானம் அருந்துபவன்,  தன் இந்திர தேசத்தில் அரம்பை, ஊர்வசி, இரதி போன்ற பேரழகிகளை ஆசைநாயகிகளாக மட்டுமல்ல, அவர்களை முனிவர்களின் தவத்தைக் கலைக்க ஏவிவிட்டுக் காரியம் சாதிப்பவன் என்றும் கூறுகின்றன. மேலும் பிற அழகிய  பெண்கள், அவர்கள் வேறு உலகத்தில் இருந்தாலும் கூட அவர்களைத் தன் பதவி அதிகாரத்தால் அல்லது தந்திர வித்தையால் எப்படியும் அடைபவன் என்றும் கூறுகின்றன. இன்றைய இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி பல்வேறு சட்டப்பிரிவுகளில் தண்டனை பெறும் அளவிற்கு அத்துணைக் காரியங்களையும் வேதகால இந்திரன் செய்துள்ளதாகவும் இந்தியாவின் பன்மொழிப் புராணங்களும் பெருமை பொங்கக் கூறுகின்றன.

     அவற்றுள் ஒன்றுதான் கௌதம முனிவரின் மனைவி அகல்யா என்னும் பேரழகியை இந்திரன் சுகித்த கதை. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்டவளே அகல்யா (தமிழில் அகலிகை). இவள் அழகு கண்டு பிரம்மனே பிரமித்து நிற்க, இந்திரனும், கௌதம முனிவரும் அவளை அடையத் தயாராகினர். இதனால் பிரம்மன் ஒரு போட்டியை வைக்க, அதில் வென்ற கௌதமர் அகலிகையை மணந்தார். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் கௌதமரின் ஆசிரமத்திற்கு நடுநிசியில் சென்ற இந்திரன், சேவலாக மாறிக் கூவவும், விடிந்துவிட்டது என்று நினைத்து கௌதமர் ஆற்றுக்குச் செல்ல, முனிவரின் உருவமாக மாறிய இந்திரன் அகலிகையை அடைந்தான். திரும்பிவந்த கௌதமர் இருவரையும் கண்டுச் சாபமிட அகலிகை கல்லானாள். இந்திரன் உடம்பெல்லாம் அவன் கொண்ட காமத்தின் அடையாளமாகப்  பெண்குறிகளாக மாறின. இந்திரன் சாப விமோசனம் வேண்ட, பிறர் கண்களுக்கு அவை கண்களாகவே தெரியும் என்று கௌதமர் கூற, இந்திரன் ஆயிரங்கண்ணுடையான் என்ற பெயர் பெற்றான்.

     இதேபோல இந்திரப் பட்டம் எய்திய நகுடனைப் பாம்பாக மாற்றிய அகத்தியரின் செய்கையையும், சியவனர் என்ற முனிவரோடு பகைகொண்டு இறுதியில் அசுவினி தேவதைகளுக்காக இரங்கித் தோற்றதையும், சம்வர்த்தனின் யாகத்தை எதிர்த்த இந்திரன் பின் அவரின் தவ வலிமைக்கு அடங்கிப் போனதையும், அகத்தியரின் பன்னிரண்டு ஆண்டு வேள்வியை எதிர்த்துப் பின், தலைமைப் பதவியைக் காக்க, அவரிடமே இந்திரன் சரணடைந்த கதையையும் மகாபாரதம் கூறுகிறது. 

     அதாவது, வேதங்களிலும், புராண, இதிகாசங்களிலும், உபநிடதங்களிலும் குறிப்பிடப்படும் வேதகால இந்திரன் ஐம்பொறிகளில் ஒன்றின் ஆசையைக் கூட அடக்காதவனாகவே அறியப்படுகிறான். இப்படிப்பட்ட இந்திரனை ஐம்பொறிகளையும் அடக்கியவனாக அடைமொழியுடன் கூற யாருக்குத் துணியும்? ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதிய பெரும்பாலான தமிழ்ப் புலவர்கள் அப்படித்தான் எழுதியுள்ளனர். ஆனால் வைதிகத்திற்கு ஆதரவாக நின்று, முழுமையான அறங்கூறும் திருக்குறளை முழுக்க முழுக்க வைதீகப் போர்வை போர்த்தி உரையெழுதிய பரிமேலழகர், இக்குறளில் உண்மையை ஒளிக்காமல் குறிப்பெழுதியுள்ளார். ஐம்புலன் அவியாது சாபம் பெற்றுக் கொண்டு, ஐம்புலன் அவித்தவனின் ஆற்றலை உணர்த்தியவன் இந்திரன் என்று கூறுகிறார். இங்கு, ஐம்புலன் அவித்தவனாக அவர் குறிப்பிடுவது கௌதம முனிவரைத்தான். ஆனால் அவரும் புலன்களை அடக்கியவர் அல்லர் என்பது அவர் அகலிகையை விரும்பி மனைவியாக ஏற்றார் என்பதில் இருந்தே விளங்கும்.

     ஆனாலும் அவரை ஐந்தவித்தானாகக் கொள்ளலாம் என்றும், கௌதம முனிவரைப் போன்ற வானப்பிரஸ்தர்கள், மனைவியோடு ஓய்வுக்காலத்தில் கூடுவது காமத்திற்காக இல்லை என்றும் மகாபாரதத்தை (அனுசாசனபர்வம் - துணைப்பிரிவு) மேற்கோள் காட்டித் தமிழ் லெக்சிகன் தொகுத்தவர்களில் ஒருவரான பி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் (திருக்குறள் - அறத்துப்பால் - பாலருரை, 1939) தன் உரையில் கூறுகிறார். இப்படி எதனையாவது மேற்கோள் காட்டி ஆரிய தர்மத்தை உயர்த்திப் பிடிப்பதையே தொழிலாகக் கொண்டு ஆரிய பிராமணர்கள் நிறைய எழுதி வைத்துள்ளனர். நிறைய தமிழ்ப் புலவர்களும் அதை வழிமொழிந்து எழுதியுள்ளனர்.

     ஆனால் பரிமேலழகருக்கும் முன்னதாக எழுதப்பட்ட பழைய உரைகளில் வைதிகம் உயர்த்திப் பிடிக்கப்படவில்லை. ஆனாலும் எதிர்ப்பு வன்மையாக இல்லை. வேறு ஒருவர் தவம் செய்தால் தன்னை மிஞ்சிவிடக் கூடும் என்று இந்திரன் அஞ்சினான் என்பதையே திருவள்ளுவர் இந்திரனைச் சான்றாகக் கூறியதன் விளக்கமாக மணக் குடவர் உரைக்கிறார். அப்படித் தவம் செய்பவரைத் திலோத்தமை போன்றோரை அனுப்பித் தவம் அழித்தவன் இந்திரன் என்பதால் அவனைச் சான்றாகக் கூறினார் என்று காலிங்கர் உரை கூறுகிறது. பதினான்காம் நூற்றாண்டின் முன் வரை திருக்குறளுக்குத்  தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பருதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய பத்துப் புலவர்கள் உரை எழுதியுள்ளனர். இவை பழைய உரைகள் எனப்படுகின்றன. இவற்றுள் மணக்குடவர், பருதி, பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் எழுதிய உரைகளே அச்சில் வெளிவந்துள்ளன. (உ.வே.சா. தன்னுடைய பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தேடுதலில், பதினெட்டு உரைகளைக் கண்டதாகக் கூறுகிறார். மீதிப் பதின்மூன்று உரைகள் என்னவாயின என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் அவர் பழிசுமத்துவது வரகுண பாண்டியன் மீது).



     1812-ஆம் ஆண்டில் எல்லீஸ் வெளியிட்ட திருக்குறள் நூலில் இந்திரனைப் பற்றிய கதையை அவர் வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் இருந்து எடுத்து மேற்கோள் காட்டுகிறார். அக்கதை கம்பராமாயணத்து பாலகாண்டத்தின் அகலிகைப் படலத்தில் சிறிது மாற்றம் பெறுவதையும் (ஆயிரம் மாதர்க்குள்ள அறிகுறி உனக்குண்டாக என்பது சாபம்) எல்லீஸ் சுட்டிக்காட்டுகிறார். இன்னும் இக்குறளுக்குத்  தத்துவ போதசுவாமி, கவிராய பண்டிதர் கருத்துகளையெல்லாம் மேற்கோள் காட்டியபின்னர், சமணர்களின் பார்வை இதிலிருந்து வேறுபட்டதாகக் கூறுகிறார் எல்லீஸ். நீத்தார் என்றும், துறவோர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவது கௌதம முனியைப்போல் மனைவியோடு இல்லறம் நடத்துபவரை அல்ல என்பது சமணர் கருத்து. மேலும், அப்படியே கதைக்காக இருந்தாலும் கூட சாபங்கள் எதையும் அவர்கள் அளிக்க மாட்டார்கள். அதுவும் இதுபோன்று வக்கிரமான சாபங்களை நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.  இப்படியான ஒரு சாபக்கதையை கூறி ஐந்தவித்தவனுக்குச் சான்றாக வள்ளுவர் கூறியிருக்க வாய்ப்பேயில்லை என்ற சமணர்களின் கருத்தையும் பதிவு செய்கிறார் எல்லீஸ்.
 
     திருவள்ளுவர் குறிப்பிட்ட இந்திரனை, வேதகால இந்திரனாகப் பெரும்பான்மை உரையாசிரியர்கள் கூறுவதால், தொன்மங்கள் எல்லாம் வரலாறாக மாறிவிட்டன. இந்திரன் தமிழ் நிலத்துத் தெய்வம் என்றும், புகார் நகரில் கொண்டாடப்பட்டதாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே அதற்குச் சான்று என்றும் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.  ஆனால் இந்திரன் என்பது தமிழ்ச் சொல் அல்ல, தமிழில் வேந்தன் என்பதைக் குறிக்க வடமொழியில் (பாலி) உருவாக்கப்பட்ட சொல். வேந்தன் மருதநிலத் தமிழ்த் தெய்வம். “வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்கிறார் தொல்காப்பியர் (தொல்.951). ஆகவே திருவள்ளுவர் குறிப்பிட்ட இந்திரன், வேதகால இந்திரன் அல்ல. அது வேறொருவர். திருவள்ளுவர் வேறொருவரை அல்லது வேறொரு கதையை மனதில் கொண்டு, இந்திரன் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று தேவநேயப் பாவாணர் தன் திருக்குறள் மரபுரையில் குறிப்பிடுகிறார்.

     அப்படி யாராவது ‘இந்திரன்’ என்ற பெயருக்குப் புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார்களா என்றொரு வினா இதுவரை தேடலாகவே இருந்துவந்தது. அந்த வினாவிற்கு விடை அளித்தவர் ஒரே ஒரு புலவர்தான். அவர்தான் பண்டிதர் அயோத்திதாசர்.

     இந்திரன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயர் என்கிறார் அயோத்திதாசர்.  அவர் மேலும் கூறுவதாவது. புத்தரின் ஆயிரம் பெயர்களில் (சகஸ்திர நாமம்) இந்திரனும் ஒன்று. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் ஆசையை அடக்கியவர்களையே ஐந்திரன் என்று குறிப்பிடுவர். வடமொழி அட்சர பேதத்தால் ஐ, இ ஆகத் திரிந்து, ஐந்திரன் என்பது இந்திரன் என வழங்கியது. இத்தேசமெங்கும் புத்தரையே இந்திரனெனப் பூசித்து அரசமரத்தடியிலும், அறப்பள்ளிகளிலும் இந்திர விழா கொண்டாடப்பட்டது. இந்திரனைக் கொண்டாடியவர்கள் இந்தியர். கொண்டாடுந் தேசம் இந்திய தேசம். இந்திரியத்தை வென்றான் என்ற பொருளில் ‘இந்தியத்தை வென்றான்’ என்று அருங்கலைச் செப்பு கூறுகிறது. ‘இந்தியக் குஞ்சரத்தை ஞானப் பெருங்கயிற்றினால் பூட்டியவர்’ என்று அறநெறிச் சாரம் கூறுகிறது. “இந்திரன் எனப்படும் இறைவன் நம் இறைவன்’ என்று மணிமேகலை கூறுகிறது. அனைத்து ஆசைகளையும், குறிப்பாகப் பெண்ணாசையை முற்றும் துறந்தவர்களே இந்திரர்களாக அறியப்படுவர் என்று சீவக சிந்தாமணியும் கூறுகிறது. ஆகவே இந்திரன் என்று வள்ளுவர் குறிப்பிடுவது கௌதம புத்தரையே. அவரே ஐந்தவித்தவனின் ஆற்றலுக்கு எடுத்துக்காட்டானவர் என்று பண்டிதர் கூறுவதை ஏற்றால் காவிப் பிரச்சனை தீரும். இங்கு இன்னொன்றும் கவனிக்கப்பட வேண்டியது. காவி நிறம் வைதிகத்தின் அடையாளம் அல்ல. அது புத்தர் உடுத்திய ஆடை நிறம். சமண, பௌத்தத்தின் கருத்துக்கள் தொடங்கி அனைத்தையும் கபளீகரம் செய்துகொண்ட வைதிகம் இன்று காவி வண்ணத்தில் புகுந்திருக்கலாம். ஆனால், அதற்குரியவர் புத்தர் என்ற முறையில் திருவள்ளுவருக்குக் காவி வண்ணம் அணிவிப்பது, அயோத்திதாசர் கூறுவதுபோல் திருவள்ளுவர் புத்த சமயத்தினர் என்று ஏற்றுக்கொள்வ தாகத்தான் பொருள். 


துணை நின்ற நூல்கள்:
1.  G.U. Pope, Thirukkural, 2018, சாரதா பதிப்பகம், சென்னை.
2.  க. அயோத்திதாசப் பண்டிதர், திரிக்குறள்., 2015, மெத்தா பதிப்பகம், சென்னை.
3.  ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, 2000, இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை.
4.  புலவர் குழந்தை, திருக்குறள், 2007, பூம்புகார் பதிப்பகம், சென்னை.
5.  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி, திருக்குறள்–அறத்துப்பால், 1939, திருச்சி.
6.  திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும், 1967, கழகம், சென்னை.
7.  ப.மருதநாயகம், எல்லீசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி, 2009, சீதைப் பதிப்பகம், சென்னை.
8.  திருக்குறள் பன்முக வாசிப்பு, 2009, மாற்று, சென்னை.
9.  மருதமுத்து, திருக்குறள் – தமிழ்த் தேசிய அரசியல் நூல், 2013, போர்க்கொடி பதிப்பகம், சென்னை.
10. தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளம். 


முனைவர் சிவ. இளங்கோ,
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்ட நகர்,
புதுச்சேரி – 605 011.
பேசி: 99940 78907.
Mail ID:   ilangosiva57@gmail.com


-------

மொழிபெயர்ப்பாளர் பண்பாடுகளிடையே பாலம் கட்டுபவர்



— முனைவர் ஆனந்த் அமலதாஸ்


நூல் ஒன்றை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எடுத்துச்செல்வது உலகெங்கும் ஒரு பெரிய பணியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய நாட்டில் பல மொழிகள் பேசுபவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் கூடி வாழும்பொழுது மொழிபெயர்ப்பு அன்றாட வாழ்வின் எதார்த்த நிலையாகிறது. எடுத்துக்காட்டாக, டில்லியில் வாழும் தமிழர் வீட்டில் தமிழ் பேசுவார், தெருவில் இந்தி பேசுவார், அலுவலகத்தில் ஆங்கிலம் பேசுவார். அதேபோல சென்னையில் வாழும் வங்காளர் வீட்டில் பங்களா, தெருவில் தமிழ், அலுவலகத்தில் ஆங்கிலமாக இருக்கும். இங்கே ஏதோ ஒரு வகையில் மொழிபெயர்ப்பு நடந்துகொண்டே இருக்கிறது.

மேலும் நமது நாட்டில் பிற மொழியில் உள்ள நூட்களை ஆங்கில மொழிபெயர்ப்பால் அறிமுகமாக்கிக் கொண்டிருக்கின்றோம். இருபதாம் நூற்றாண்டில் நடந்த பல்வேறு சீர்திருத்தங்களும் நமது நாட்டின் நூட்களை அயல் நாட்டார் ஆங்கிலத்தில் அமைத்துக் கொடுத்ததால் அதன் துணைநாடி நமது தலைவர்கள் நமது பண்பாட்டைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் உருவாக்கிய “இன்டாலஜி” என்ற துறை முக்கியத்துவம் பெற்றது.

இன்றைய அளவில் புலம்பெயர்ந்த அல்லது அயல் நாட்டோடு தொடர்பு கொண்டுள்ள தமிழர்கள் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. ஒரு சில எடுத்துக்காட்டுகள் அதற்குச் சான்று. ஜெர்மன் கவிதைத் தொகுப்பைத் தமிழில் மொழியாக்கம் செய்து வத்சலா விஜயகுமார் வெளியிட்டார். (2007). “மகாத்மா காந்தியின் ஐந்து நொடிகள்” என்று வால்டர் எரிக் சேபர் (1948) எழுதிய ஜெர்மன் வானொலி நாடகத்தை “கூத்துப்பட்டறை” நாடகக்குழு தமிழில் அரங்கேற்றியது. நானே பல தமிழ் நூட்களை – அபிராமி அந்தாதி, கந்தர் அநுபூதி, நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து 100 பாடல்கள், சித்தர் பாடல்கள் போன்றவற்றை - ஜெர்மனில் மொழி பெயர்த்துள்ளேன்[1].

மொழிபெயர்ப்புக்கு எதிர்ப்பு:
மூல நூலின் சிறப்பை மொழிபெயர்ப்பில் கொண்டுவர முடியாது; அதனால் மொழிபெயர்ப்பெல்லாம் இரண்டாம் தரம் என்ற பழைய கருத்து மாறிக் கொண்டிருக்கிறது. “மொழிபெயர்ப்பு சமுக்காளத்தின் மறுபக்கம்”, “மொழிபெயர்ப்பவன் காட்டிக்கொடுக்கும் துரோகி” (இத்தாலிய பழமொழி - Traduttore, traditore).  “கவிதையை மொழி பெயர்க்க முடியாது. அதனால் கவிஞர்கள்தான் மொழியின் பாதுகாவலர்கள்” (டாக்டர் ஜான்சன்). “கவிதையை மொழிபெயர்ப்பில் வாசிப்பது ஒரு பெண்ணைத் திரைவழியாய் முத்தமிடுவதற்குச் சமம்” (Chaim Bialik).

மொழிபெயர்ப்பு கோட்பாளர்கள் இத்தகைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் மொழிபெயர்ப்பு புதிதாக ஆக்கும் ஆற்றல் கொண்டது, புதிய விளக்கம் கொடுக்கும் திறனுடையது. அது மாற்றுக்கருவுயிர்ப்புக்கு இடம் அளிக்கிறது. மொழிகளும் இலக்கியமும் தொடர்ந்து ஒன்றோடொன்று இணைந்து செயல்படும் போது மனுக்குலத்தின் வரலாற்று வளர்ச்சியைத் தெளிவுபடுத்துகிறது[2]. 

மொழிபெயர்ப்பாளர் பண்பாடுகளிடையே பாலம் கட்டுபவர்:
மொழிபெயர்ப்புப் பணி வரலாற்றில் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்தது. ஐரோப்பாவில் ரிச்சர்ட் பர்ட்டனை (Sir Richard Francis Burton 1821-1890) அதிகம் கொண்டாடுகின்றனர்[3].    23 மொழிகள் கற்றவராகவும், இந்தியா, அரபு நாடுகள் போன்ற இடங்களுக்குச் சென்று முப்பதுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பைக் கொடுத்தவர். அவரது காம சூத்திர நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கோடிக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின என்பர்.

இவர் ஐரோப்பாவின் மனநிலைக்கு எடுத்துக்காட்டாக முன் வைக்கின்றனர். ஐரோப்பாவின் அறிவுதேடும் முயற்சிக்கு முன்னோடி. ஐரோப்பிய சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர். எராஸ்மஸ் சொல்வது போல, “அவர் கட்டிய நூலகத்திற்கு உலகத்தைத் தவிர வேறு எந்த எல்லையும் இல்லை” (“a library which has no other limits than the world itself.”). கான்ஸ்டன்டைன் (Constantine the African (c.1020-1087) பல நாடுகளுக்குச் சென்று 40 ஆண்டுகளாக சேகரித்த இலத்தீன் நூட்களை எல்லாம் “மோந்தே கசினோவில்” (உரோமை நகருக்கு அருகில்) வைத்ததாகச் சொல்வார்கள்[4].

ஐரோப்பாவில் எல்லோருக்கும் இலத்தீன் வாசிக்கத் தெரியாது. அதனால் மொழிபெயர்ப்பு தேவைப்பட்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சி மொழிபெயர்ப்பால் நிகழ்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் தெரிந்த சாதாரண மனிதன் அரபு, சமஸ்கிருத, பாரசீக மொழிகளில் இருந்த நூட்களை வாசித்து அறிந்து கொள்ள முடிந்தது[5]. 

மொழிபெயர்ப்பாளர் பல பண்பாட்டின் பங்காளிகள்:
மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் மற்ற பண்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாது, மற்ற பண்பாட்டோடு இணைந்து வாழ முடியாது. தற்சமயம் பன்முகப் பண்பாட்டுப்பார்வை என்ற குரல் ஒலிக்கிறது. சிலர் தமது மொழிபெயர்ப்பால் பல பண்பாட்டை இணைத்துப் பாலம் கட்டியதால் இது சாத்தியமாகிறது. சாதாரண மக்கள் பிற பண்பாட்டில் தோன்றிய நூட்களைத் தங்கள் சொந்த மொழியிலேயே வாசிக்க முடிகிறது. அதனால் அவர்கள் கண்ணோட்டம் விரிவடைகிறது. பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கெடுக்க, உலகளாவிய பொதுநலத் திட்டத்தைப்பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கிறது.

இரண்டாவதாக, மொழி பெயர்ப்பாளர் நூட்களின் மற்றொரு உலகில் நுழையும் பொழுது அவர்களுக்குள்ளும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. எங்கெல்லாம் ஒருவர் மற்றொருவரைத் திறந்த மனத்தோடு சந்திக்கின்றனரோ அதை ஒரு மாற்றம் நிகழும் நேரம் என்று சொல்லலாம். இந்த உண்மை மனிதர்களைச் சந்திக்கும்பொழுது மட்டும் அல்ல, நூட்கள் போன்ற மற்ற பொருட்களுக்கும் பொருந்தும். ஒரு நூலைச்சந்திக்கும் வழியாக நாம் நம்மையே புதிதாகக் கண்டு கொள்கிறோம். நாம் சந்திக்கும் தோழர் நமது உண்மையான நிலையை ஒரு கண்ணாடிபோல காட்டுவது போல, ஒரு நூலும் நாம் யாரென்றும், நம்மையே விமர்சனத்திற்குட்படும் தன்னறிவையும் காட்டும். 

நாம் திறந்த மனத்துடன் அணுகும்பொழுது, நாம் வாசிக்கும் நூலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் நமது கண்ணோட்டம் மாறும். நூட்கள் ஒரு புது தொலை நோக்குப் பார்வையை, புதிய சிந்தனைகளை, சிலசமயம் வியப்பிற்குரியதாகவும், சில சமயம் நமது மரபையும் கூட கேள்வி கேட்கும் அளவிற்குத் தூண்டி விடலாம். நாம் ஒரு நூலிலிருந்து கண்டுணர்ந்த சிந்தனை மற்றொரு சூழ்நிலைக்கு அழைத்துச்செல்லும். சொற்களும், நூட்களும், புதிதான உள்ளர்த்தம் பெறும். இவ்வாறு நூட்களே ஆசிரியர்களாக மாறும். இந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட நபரில் மட்டும் நிகழ்வதல்ல, நமது சூழ்நிலையிலும், உள்ளதனைத்திலும் நிகழும். ஒரு நூலை வாசித்த பிறகு நமது உலகமே வேறுபட்டுத் தெரியும். ஏனெனில், நமது முந்திய புரிதலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழிமுறையில் ஏற்படும் சில இடர்ப்பாடுகள்:
சமமதிப்புப் பொருள்கொண்ட சொற்களைத்தேடல்?
இது பண்பாட்டை இணைக்கும் முயற்சியில் நாம் கையாளும் முறையைப் பொருத்திருக்கிறது. ஒரு கருத்தை ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப் பின்னணியில் வைத்து வரையறை செய்துவிட்டு, அதற்குச் சமமான கருத்தை மற்றொரு பண்பாட்டில் தேடினால் அங்கே அது கிடைக்காது. இந்த முயற்சி வெற்றி பெறாது. அப்படியே தொடர்ந்து செய்தால் ஒரு பண்பாட்டின் உயர்ந்த நிலையைத் தூக்கிப்பிடித்து மற்றொரு பண்பாட்டோடு போட்டிக்கு இட்டுச்செல்லும்.

இந்தத் தவற்றை தவிர்ப்பதற்கு ரெய்மோன் பணிக்கர் (1918-2010) பரிந்துரைத்த முறை பயனாக இருக்கும். அவர் கூறுவது போல நாம் என்ன தேட வேண்டும் என்பது: homeomorphic equivalents- functional similarity.   அதாவது, சம பொருள்தரும் சொற்களைத் தேடாமல், சம பணிசெய்யும் சொற்களைத் தேடலாம். எடுத்தக்காட்டாக, ஐரோப்பாவில்; - ‘பிலாசபி’ – என்ற சொல் என்ன பணியைச் செய்கிறதோ அதே பணியை இந்திய மரபில் பல்வேறு சொற்கள் சேர்ந்து செய்கின்றன: தர்சனா, பிரஞ்ஞா, ஞானம், ஆன்வீக்சிகி – இவை சமஸ்கிருதத்தில் உள்ளவை; தமிழில் - மறைஞானம், மெய்ஞானம், காட்சியியல் (தொல்காப்பியம்), மெய்யியல் போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம்[6].    

மற்றுமொரு எடுத்துக்காட்டு: நம்பிக்கை வாதிகளின் சமூகத்தை “எக்ளேசியா” (ecclesia) என்பது மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தும் சொல். இது மற்ற பண்பாட்டில் அறியப்படாத ஒன்றல்ல. பௌத்தத்தில் சங்கா (sangha) என்பதும், இஸ்லாமியர் “உம்மா” (Umma) என்பதும்  “எக்ளேசியா” வின் “ஹோமியோமோர்பிக் ஈக்குவலன்ட்”. ஆனாலும் கூட “எக்ளேசியா”வும் “உம்மா”வும் “சங்கா”வும் சமம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொன்றுக்கும் உரிய தனித்துவத்தை இங்கு மறுக்க வில்லை. அந்த அந்தச் சமூகத்தில் இச்சொற்கள் சம பணியைச் செய்கின்றன.

இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டில் உருவான தனித்துவம் பெற்ற ஒரு கருத்தியலை எப்படி மற்றொரு பண்பாட்டிற்கு எடுத்துச்செல்வது? சில சமயங்களில் ஒரு சொல்லைப் பல சொற்களால் பதிவு செய்யவேண்டியிருக்கும். அப்பொழுதுதான் அதன் தனித்துவம் தெளிவாகும். அப்படி ஒரு சொல்லுக்குப் பல சொற்கள் விளக்கம் தருமானால், அது மொழிபெயர்ப்பல்ல, பொழிப்புரையாக மாறும். ஜெர்மானிய சிந்தனையாளர் மத்தியில் (Lüder, Paul Thieme, Jan Gonda)  ஒரு விவாதம் எழுந்தது:‘ரித’ (rta)  என்ற சமஸ்கிருத சொல்லை உண்மை (Wahrheit)  என்று மொழி பெயர்த்தார்கள். ஆனால், அதன்வழி அச்சொல்லின் முழு பொருளும் தெளிவடையவில்லை. ரித என்பது “உண்மை” மட்டுமல்ல. அதனால் பவுல் ஹாக்கர் சொல்வது கொஞ்சம் தெளிவு கொடுத்தது. பல்வேறு கருத்தியல்களை மொழி பெயர்க்கும்பொழுது அவைகளின் ஒன்றிணைப்பை அல்ல, அவற்றின் உட்பொருளை (Wortinhalt)  வெளிக்கொணர வேண்டும் என்பது[7].    

இந்தியாவில் நூற்றுக்கணக்கான வகையில் இராமாயணத்தைப் பதிவு செய்துள்ளார்கள். வால்மீகியின் மூல நூலிலிருந்து அப்படியே மொழி பெயர்க்கவில்லை. இத்தகைய மொழிபெயர்ப்பில் மூல கதை சூழ்நிலைக்கேற்ப, பல்வேறு மரபுகளுக்கு ஏற்ப, புதிய உருப்பெற்று தொடர்ந்து வந்திருக்கின்றது. ஏ. கே. இராமானுஜன் சொல்வது போல, “மூல நூல் என்று ஒன்று இல்லை. இக்கதையை ஒரு நூலில் அடக்கிவைத்திருந்தாலும் கூட,  இக்கதைக்கு வேலி ஏதும் இல்லை. இராமாயணத்தையோ, மகாபாரதத்தையோ யாரும் முதல் தடவையாக வாசிப்பதில்லை. கதைகள் எப்போதும் ஏற்கனவே இங்கே இருந்துகொண்டே இருக்கின்றன” [8].    

ஒரு நூலைத் தவறாகப்புரிதல்:
மொழி பெயர்ப்பாளர்களுக்கு எதிராக இன்னுமொரு குற்றச்சாட்டு இருக்கிறது. தவறாகப் புரிந்து கொள்வது ஒரே மொழி பேசும் அறிஞர்கள் மத்தியிலும் உண்டு. பிற மொழியினர் செய்யும் மொழிபெயர்ப்பில் மட்டும் உண்டு எனச்சொல்ல முடியாது. இந்தக் கேள்விக்கு கடமர் (Gadamer) கொடுக்கும் விளக்கம் கவனத்திற்குரியது. ஒவ்வொரு புரிதலிலும் “முன்கூட்டிய மன நிலை” (prejudice – pre-judgment) என்று ஒன்று உண்டு. நாம் வாசிக்கையில் முன்கூட்டிய மன நிலையோடுதான் தொடங்குகிறோம். அது தன்வளர்ச்சியில் தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருக்கும். யாரும் வெற்றிடமான அல்லது வெட்டவெளியான மனத்தோடு தொடங்குவதில்லை. ஏதாவது ஒரு முந்திய பின்னணியில்; பதிவான மனநிலையோடுதான் தொடங்குகின்றோம்.

ஓரியன்டலிசம் (Orientalism) என்ற கண்ணோக்கு:
பண்பாட்டுப் பரிமாறல் முயற்சியில் பொதுவாகவே ஓர் எதிர்மறையான பார்வை உண்டு. இது எட்வர்ட் சயத் எழுதிய நூலிலிருந்து இது வலுவடைந்தது. மேற்கத்திய சிந்தனையாளர் பார்வை இஸ்லாமிய உலகைக் கட்டுப்படுத்தும் அரசியல் நோக்கம் கொண்டது என்பது[9].    இத்தகைய பார்வை காலனிய ஆதிக்கத்தோடு எங்கும் பரவலாகப் பார்க்கப்பட்டது. முக்கியமான எடுத்துக்காட்டு ஐரோப்பியர் அமெரிக்காவை சூறையாடியதிலிருந்து தொடங்குகிறது.

1492 ஆம் ஆண்டில் கொலம்பஸின்; கடல் பயணத்தோடு இது தொடங்குகிறது. இதைச் சுருக்கமாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு என்ற நூல் சித்தரிக்கிறது[10].  “ஒரு புதிய மும்மூர்த்திகள் பழங்கால போர்வீரன்-வெற்றியாளர் என்ற சொல்லாடலை மாற்றி அமைக்கின்றனர்: அறிஞர்-மதகுரு-வியாபாரி என்ற மும்மூர்த்திகள். முதலில் அறிஞர் வந்து நாட்டின் விவரங்களைச் சேகரிப்பார்; பிறகு சமயகுரு வந்து ஆன்மீக அளவில் ஒன்றிணைப்பார்; பிறகு, வியாபாரி செல்வம் சேகரிக்க தொடங்குவார்” [11].

ஏன் மற்றவர்களைப் பற்றிப் படிக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கேள்விக்குப் பலவிதமாக பதில் சொல்லலாம். சில காலங்களில் மற்றவர்களைத் தோற்கடிப்பதற்காக, அவர்கள் கோட்பாட்டை மறுப்பதற்காக, மனம் மாற்றுவதற்காக ஆராய்ச்சியில் ஈடுபடலாம். ஆனால் எல்லா முயற்சிகளையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டியதில்லை. மற்றவர்களை நன்கு புரிந்து கொள்ள, மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள, மற்றவர்களோடு இணைத்துப் பாலம் கட்ட முயன்ற ஆய்வாளர்கள் அநேகர் உண்டு. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த–வாழ்கின்ற திறந்த மனம்கொண்ட சில ஆய்வாளர்களை இங்குக் குறிப்பிடலாம். Wilfred Cantwell Smith [12], Raimon Panikkar [13],  J. L. Mehta [14] , Wilhelm Halbfass [15], A. K. Ramanujan [16],   R. Balakrishnan [17] -  இவர்கள் உண்மையிலேயே இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே பாலம் கட்டியவர்கள்.

ருட்யார்டு கிப்லிங் (Rudyard Kipling) சொன்னதை இப்பொழுது ஏற்றுக்கொள்ள முடியாது: “கிழக்கு கிழக்குதான்; மேற்கு மேற்குதான்; இவை இரண்டும் ஒருநாளும் இணையாது, சந்திக்காது.” சமூக வலைத்தளம் நிறைந்த உலகில் பண்பாடுகளிடையே செய்திகள் மிக விரைவாக பரவுவதைப் பார்க்கிறோம். இன்று உலகச் சந்தையைப் பற்றி, உலகளாவிய நெறிமுறை பற்றிப் பேசுவதைச் சாதாரண அளவில் கணிக்கப்படுகிறது.

இன்றைய அளவில் பண்பாடுகளுக்கிடையே எழுப்பிய சுவர்களும் வேலிகளும் மாற்றி அமைக்கப்படுகின்றன. இருந்தாலும் இதன் பின்னணியில் பண்பாட்டின் தனித்துவத்திற்காகவும் போராடும் போர்க்குரலும் பலமாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால், முன்பு கிப்லிங் சொன்னதைப் புதிய பண்பாட்டு மோதலின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான அடையாளத்தைத் தேடி அலைகின்றனர். மேற்கத்திய நாடுகள் தாங்கள் அடைந்த ஆதிக்க நிலையின் செல்வாக்குத் தலையணையில் சாய்ந்து கொண்டு அனுபவிக்கலாம். இருப்பினும் இந்தப்பண்பாட்டு மோதலின் தாக்கம் அவர்கள் அடையாளத்தைப் பற்றியும் கேள்வி கேட்க வைக்கிறது[18].

இந்நிலையில் நம்மிடம் எழும் முக்கிய கேள்வி இது: நம்மைவிட வேறு உலகைச் சார்ந்தவரை,  பண்பாட்டால் வேறுபட்டவரைப் புரிந்து கொள்ள முடியுமா? எப்போதும் தவறாகத்தான் புரியமுடியுமா? ஏனெனில் நமது முன்புரிதல் வேறுபட்டிருக்கிதே? அதனால் இந்த முயற்சியை முழுதும் கைவிட்டு விடவேண்டுமா? அப்படி ஒதுங்கிப்போவது இன்றைய சூழ்நிலையில் சாத்தியமில்லை. அதாவது சந்தைகள் உலகமயமானபின், வலைத்தளவழி செய்திபரவும் நிலை எதார்த்தமான அளவில் ஒதுங்கி இருக்க வாய்ப்பில்லை. பண்பாட்டுப் பலாத்காரமின்றி, மற்றவரைப் புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டு, அத்தகைய வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் மொழிபெயர்ப்பு-அரசியல்:
ஒரு இந்திய மொழியில் உள்ள நாவலை (புதினத்தை) மற்றொரு மொழிக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சி குறைந்து கொண்டே போகிறது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு அதிகரித்து உள்ளது. மராத்தியிலிருந்து கன்னடத்திற்கோ, தமிழிலிருந்து மலையாளத்திற்கு எடுத்துச் செல்வது இயற்கையானது, சுலபமானதும் கூட. ஆனால் இந்திய மொழி நாவல் ஆங்கிலம் போன்ற உலக மொழியில் வெளிவரும் பொழுது அதன் ஆதிக்கச் செல்வாக்கும் பொருளாதார வளமும் அதிகரிக்கிறது. மேலும் இன்றைய இன்றைய  இந்திய இளைஞரிடம் உள்ள மனப்பான்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தால் இன்னொரு இந்தியமொழி கற்பது தேவையற்றதாகிறது. உலகளாவிய ஒரு மொழி கற்றால் போதும் என்பது இன்றைய தலைமுறையின் எண்ணமாகத் தெரிகிறது[19]. 

இரண்டாவதாக, புத்தகங்கள் அழகியல் உலகில் மட்டும் இயங்குவதில்லை. மக்கள் பொதுவாக பத்திரிக்கையில் விளம்பரம் பார்த்து, வலைத்தளங்களில் விமர்சனம் பெற்ற புத்தகங்களை வாசிக்க விரும்புகின்றார்கள். புத்தகங்களும் மற்ற பொருட்களைப்போல விற்பனைக்கு விளம்பரம் பெருகுகின்றன. ஆனால் எந்தப் புத்தகம் மொழி பெயர்க்கப்படவேண்டும், அதிக விளம்பரத்திற்கு உட்படுத்த வேண்டும் என யார் முடிவு செய்வது? மேலும், பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில்  உள்ளவர்கள்  ஆங்கில ஆசிரியர்கள் எழுதிய நூல்களையே விரும்புவார்கள். இரபீந்திரநாத் நூட்களை ஆங்கில வடிவில் கொடுத்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் ஆங்கில நூட்கள் அதிகம் இங்கே இறக்குமதியாகுகின்றன. 

இந்திய நாட்டு எழுத்தாளர் நூட்களை ஐரோப்பியர் நமது சமூக சூழ்நிலையை அறிந்து கொள்ள வாசிக்கின்றனர். இதைத் தவிர்க்க முடியாது. ஆனால் இத்தகைய உலகமயமான புதிய உலக கட்டமைப்பில் நாம் ஒரே பக்கமாக பார்க்கும் கைதிகளாக இருந்து விடுவோமோ என்ற அச்சமும் ஆபத்தும் உண்டு[20]. 

நாட்டார் மரபை மொழிபெயர்க்கும் ஆராய்ச்சியாளர் கடமை:
எழுத்துருவம் பெற்ற ஒரு நூலை மொழிபெயர்ப்பதற்கும் வாய்மொழி மரபை மொழி பெயர்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. மூலப்பண்பாட்டின் கனவுகள், கதைகள், புராணங்கள், சின்னங்கள், சடங்குகள் போன்றவை வாய்மொழி மரபின் “நூட்கள்” எனலாம்.

இங்கு எழும்  கேள்வி கவனத்திற்குரியது. நாட்டார் மரபை மொழிபெயர்க்க முடியுமா என்பது மட்டுமல்ல, வாய்மொழி மரபில் ஒரு குறிப்பிட்ட நிலையான நூல் வடிவம் இல்லை. அது மாறிக்கொண்டே இருக்கும். அதனால் பல்வேறு ஓலைச்சுவடிகள், வேறுபட்ட விளக்கங்கள் கொண்டுள்ளன. சடங்கு முறைக்குட்பட்ட மரபு இன்னும் அதிகமாக மாறிக்கொண்டே இருக்கும்[21].   மூல நூல் என்பது ஒருவர் மனப்பாடமாக வைத்திருந்ததைத் திரும்பத் திரும்பச் சொல்வதை நாட்டார் மரபு ஆராய்ச்சியாளர் பதிவு செய்கிறார். அந்த மரபின் ஆசிரியர் தெரியாது. ஆனால் மொழிபெயர்த்தவர் பெயரில் இது வெளியாகும்[22].  

இறுதியாக ஓர் எச்சரிக்கை:
ஒரு வரலாற்று நூலை வாசிக்க முன்பு அதை எழுதியவரின் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர் பதிவு செய்யும் வரலாற்று நிகழ்வுகள் அவரது சிந்தனைக் கட்டமைப்பைப் பொருத்திருக்கிறது. மீன்பிடிப்பவர் எத்தகைய வலை வைத்திருக்கிறார் என்று தெரிந்தால் அவர் எத்தகைய மீனைப் பிடிப்பார் என்று முன்னதாகவே சொல்லி விடலாம். அவர் கடலின் எந்தப் பகுதியில், எந்த நேரத்தில், வலை வீசுகிறாரோ அதைப் பொருத்துத்தான் அவருக்குக் கிடைக்கும் மீன் வகைகளும் இருக்கும். அதுபோலத்தான் வரலாற்று நிபுணர்கள் நமக்குக் காட்டும் உலகமும் அமைந்திருக்கும். இதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் விதிவிலக்கு அல்ல.


References:
1. Anand Amaladass, Abhirami Antati. Die weibliche Dimension der Gottheit.  Eine indische Perspektive, Verlag Mueller-Speiser, Anif/Salzburg, 2004; Siva, der Tanzende Gott (2004), Mein Gott ist ein Dieb, Vishnu-Hymnen der tamilischen Alvar-Tradition, (2004); Siva Tanzt in Südindien (2009).

2. Dilip Chitre, “Translating Sensibility”, in Culture and the Making of Identity in Contemporary India. Edited by Kamala Ganesh & Usha Thakkar, Sage Publications New Delhi, 2005, p. 127.

3. Iliya Troyanov’s novel The Collector of Worlds (Weltensammler, 2006).

4. Daniel J. Boorstin, The Discoveries.  A History of Man’s Search to Know His World and Himself. Penguin Books, 1982, 492.

5. Daniel J. Boorstin, p. 549 –550.

6. Raimon Panikkar, “Satapathaprajna: Should We Speak of Philosophy in Classical India?  A Case of Homeomorphic Equivalents.” In: Contemporary Philosophy. A New Survey. 1993. Vo. 7, 11-67.

7. “Zur Methode der philologischen Begriffsforschung”, in Paul Hacker. Kleine Schriften. Hrg von Lambert Schmithausen, Franz Steiner Verlag GMBH, Wiesbaden 1978, 18-33.

8. A.K.Ramanujan, “Three Hundred Ramayanas”, in The Collected Essays of A.K.Ramanujan, Edited by Vinay Dharwadker, Oxford University Press, 1999, p. 158.

9. Edward W. Said, Orientalism.  Western Conception of the Orient, (1978) Penguin Books, 1995.

10. Tzvetan Todorov, The Conquest of America: The Question of the Other, trans. Richard Howard, New York: Harper and Row, 1984.

11. Fred Dallmayr, Beyond Orientalism.  Essays on Cross-Cultural Encounter, Rawat Publications, Jaipur & New Delhi 1996, p. 7.

12. C.W Smith, Islam in Modern History, New American Library, New York 1957 and On Understanding Islam, The Hague: Mouton 1981.

13. Raimon Panikkar, Myth Faith and Hermeneutics, Paulist Press, New York 1978 and The Intrareligious Dialogue, Paulist Press, New York, 1978.

14. J. L. Mehta, India and the West: The Problem of Understanding (Chico, Calif.: Scholar Press, 1985 and Philosophy and Religion: Essays in Interpretation, New Delhi: Manoharlal, 1990.

15. W. Halbfass, India and Europe: An Essay in Understanding, Albany: State University of New York Press, 1988;  Tradition and Reflection: Explorations in Indian Thought Albany: State University of New York Press, 1991.

16. A. K. Ramanujan, “Is there an Indian Way of Thinking? An Informal Essay”, in McKim Marriot, ed. India through Hindu Categories, Delhi: Sage Publications, 1990; Folk Tales from India: A Selection of Oral Tales from Twenty-Two Languages, New York: Pantheon Books, 1991.

17. R. Balakrishnan, The Journey of a Civilization. Indus to Vaigai, RMRL, Chennai, 2019.

18. Dallmayr, p.134.

19. Meenakshi Mukherjee, “The Novel In India, In English and in English Translation”, in Culture and the Making of Identity in Contemporary India, edited by Kamala Ganesh and Usha Thakkar, Sage Publications, New Delhi, 2005, 112.

20. U. R. Anantamurthy, “What does Translation Mean in India?” in Culture and the Making of Identity in Contemporary India, edited by Kamala Ganesh and Usha Thakkar, Sage Publications, New Delhi, 2005, p. 133.

21. Kailash C. Baral, “Translating the Oral: Transltability and Cultural Dynamics”, in Indian Folklore Research Journal. No. 9, Dec. 2009, p. 30.

22. Ibid. 33.


----