—— தேமொழி
சமயம் பரப்பும் நோக்கில் அமைந்திருந்த ஐரோப்பியரின் தமிழக வருகை, தொன்று தொட்டு காலந்தோறும் தமிழகத்தில் இருந்துவந்த தமிழின் நிலைக்கும், தமிழ்க்கல்வியின் நிலைக்கும் ஒரு திருப்புமுனையாக இருந்தது. ஐரோப்பியர் தங்களது சமயப்பணி வளர்ச்சிக்காக தமிழறிய எடுத்துக் கொண்ட அணுகுமுறையும், தொழிற்புரட்சியின் காரணமாக உருவாகிய அச்சுநூல் பதிப்பிக்கும் முறையும் ஒருங்கிணைந்ததில் தமிழின் வளர்ச்சியும் தமிழ்க்கற்பித்தலின் வளர்ச்சியும் ஐரோப்பியர் வருகையால் ஒரு புதிய பரிணாமத்தை எட்டியது. தமிழின் வரலாற்றில் அது ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்பதுவே முனைவர் க. சுபாஷிணியின் ஆய்வின் முடிவு.
ஜெர்மனியில் வாழும் நூலாசிரியர் தனது தமிழறிவையும், தமிழாய்வு ஆர்வத்தையும், ஜெர்மானிய மொழியறிவையும், ஜெர்மனி மற்றும் மற்றபிற ஐரோப்பிய நாடுகளின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், அரசின் ஆவணச் சேமிப்புக் கருவூலங்கள் ஆகியனவற்றைத் தக்கபடி பயன்படுத்திக் கொள்ள அவருக்குக் கிடைத்த வாய்ப்பையும் நழுவவிடாததால், தமிழ் குறித்த இந்த ஆய்வுநூல் கூறும் கருத்துக்களை உலகம் அறிவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.அயல்நாடுகளில் வாழும் தமிழர் எவ்வாறு தங்கள் சூழ்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் குறித்த புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தலாம் என்பதைச் செயலில் காட்டும் வழிகாட்டியாக இருப்பதற்கு க. சுபாஷிணியைப் பாராட்டலாம். நூலுக்கு இத்துறையின் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன் முன்னுரை அளித்திருக்கின்றார். இந்த நூலால் நாம் அறியும் செய்திகள் என்ன?
நூலின் முதல்பகுதி, கிறித்துவ சமயத்தின் வரலாற்றில் புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட ஜெர்மன் பாதிரியார் மார்ட்டின் லூதரால் புராட்டஸ்டண்ட் சமயப்பிரிவு உருவானதை விளக்குகிறது. ஜெர்மானிய புராட்டஸ்டண்ட் பாதிரியார்களுக்கு டேனிஷ் அரசு அளித்த ஆதரவும் அடுத்து கிட்டியது. ஐரோப்பிய கிறித்துவ சமயத்தின் இப்புதிய சீர்திருத்த கிறித்துவப் பிரிவினரின் சமயம் பரப்பும் நோக்கமும், ஆர்வமும், தேவையும் அவர்களைக் கடல்வழிப் பயணமாக தமிழகத்தின் தரங்கம்பாடியில் கொண்டு வந்து சேர்க்கிறது. இவர்களுக்கும் முன்னரே போர்த்துக்கீசியர் ஆதரவில் கத்தோலிக்க கிறிதுவப் பிரிவினர் தமிழகத்தில் தங்கள் இறைப்பணியைத் துவக்கியிருந்த நிலையில், தரங்கம்பாடி நகரை ஒரு நுழை வாயிலாகக் கொண்டு இந்தியாவில் 1706 ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஆதரவுடன் ஜெர்மானிய லூதரன் புராட்டஸ்டண்ட் சமயம் காலூன்றிய வரலாற்றைச் சுருக்கமான ஆனால் செறிவுள்ள அறிமுகமாகத் தருகிறார் சுபாஷிணி. இப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள நீளமான பட்டியல் ஒன்று காலக்கோட்டில் வரிசைப்படுத்தும் தரவுகள் மூலம் இறைப்பணிக்காக 1706 இல் தொடங்கி, முதலில் தமிழகம் வந்த பாதிரிமார்களில் சீகன்பால்க் (Bartholomäus Ziegenbalg) முதற்கொண்டு, பாதிரிமார் பலரின் வாழ்க்கைக் குறிப்புகளையும் நம்மால் அறிய முடிகிறது. இக்குறிப்புகள் மூலம் அவர்களின் இறைப்பணி சிறிது சிறிதாகத் தமிழகத்தில் தரங்கம்பாடியில் இருந்து கடலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, சென்னை எனப் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடைந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இத்திருச்சபையினரின் சமயம் பரப்பும் பணி தமிழகத்தில் கல்வி கற்பிக்கும் போக்கில் ஏற்படுத்திய மாற்றத்தை விவரிக்கிறது அடுத்த பகுதி. மக்களைச் சென்றடைய மக்களின் மொழியினை அறிவதற்கு வேண்டிய இன்றியமையாமை உணர்ந்த கிறித்துவ இறைப்பணியாளர்களான சீகன்பால்க், கரூண்ட்லர், சூல்ட்ஷே, ரைனுஸ் போன்றவர் தமிழ்க் கல்வி கற்கத் துவங்கியதுடன், தாம் தெரிந்துகொண்டவற்றை அடுத்து வரப்போகும் இறைப்பணியாளர்களுக்கு உதவும் நோக்கில் தமிழ் அரிச்சுவடி, சொற்களஞ்சியங்கள், இலக்கணநூல்கள், மக்களின் சமூக வாழ்வியல் குறித்த செய்திகள் என நூல்களாகத் தொகுக்கத் துவங்கியதை விவரிக்கிறார் ஆய்வாளர். இவர்களின் நூலாக்கப்பணிகளும், தொழில் நுட்ப உதவியுடன் அச்சுநூலாக்கி அவற்றை வெளிக்கொணரும் முயற்சியே நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்துவிட்டதை நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
இறைப்பணியின் தொடர்ச்சியான ஒரு பகுதியாக கல்விப்பணியையும் முன்னெடுத்திருந்தனர் கிறித்துவ திருச்சபையினர். அவர்கள் நடத்திய இலவச கிறித்துவ பள்ளிக்கூடங்கள், அவை இயங்கிய காலஅட்டவணை, அவை கொண்டிருந்த பாடத்திட்டங்கள், ஆண்களுக்கான பள்ளிகள், பெண்களுக்கான பள்ளிகள் என 18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் திருச்சபையினர் மேற்கொண்ட கல்விப் பணிகளையும் விரிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ்க்கல்வியுடன், சமயக்கல்வியும், டேனிஷ், போர்த்துக்கீசிய மொழியும் கூட கற்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வி மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட மக்களுக்கும் கல்வி வழங்குவதில் அக்கறை காட்டினர் ஐரோப்பிய பாதிரிமார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கக்கூடிய பள்ளிகளும், தங்கும் விடுதிகளுடன் கூடிய பள்ளிகளும், மாணவர்களுக்கு இலவச உணவு, உடை மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் சீகன்பால்க் காலம் முதலே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவருக்கு இலக்கணப்பிழையின்றி உரையாடுவது வளர்ச்சியின் பகுதியாக இருக்கிறது. ஆனால், பிறமொழியைப் பயில விரும்புவோருக்கு மாற்றுமொழியின் இலக்கணப் பயன்பாடு ஒரு சவாலாக அமைந்துவிடுகிறது. மேலும் தமிழில் பேசும் மொழியும் இலக்கிய நடையும் வெவ்வேறாக இருப்பதும் அயல்மொழிக்காரர்களுக்கு தமிழைக் கற்பதில் தடங்கல்கள் அதிகம். ஆதலால் இவ்வாறு சமயப்பணி செய்யும் நோக்கில் தமிழகம் வரும் அயலார் எவருடைய முதல் முயற்சிகள் பெரும்பாலும் தங்களைப்போல தமிழைக் கற்கவிருப்போருக்கு தமிழைக் கற்றுத்தர உதவும் இலக்கண நூல்களாக, அகராதிகளாக, சொற்களஞ்சியங்களாக மொழிகற்றலுக்கு குறிப்புதவி தரும் நூல்களாக அமைந்துவிட்டிருக்கிறது. பொதுமக்களின் பேச்சுமொழிக்கேற்ப சமயப்பரப்புரை செய்ய பேச்சுத் தமிழைக் கற்பதும் தேவையாக இருந்துவிடவே, பேச்சுத்தமிழைக் கற்கும் முறைக்காகவும் நூல்களையும் அகராதிகளையும் உருவாக்கியுள்ளார்கள். ஆகவே ஐரோப்பியர் விவிலியத்தையும், இறைநெறி நூல்களையும் மட்டுமே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள் என்ற எண்ணம் நமது மேம்போக்கான புரிதலாக அமைந்துவிடுகிறது.
திருச்சபையினரின் பணிகளை ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவையும் பணிக்கடமையாக பாதிரிமார்களுக்கு இருந்துள்ளது. இது இறைப்பணிக்கு ஆதரவு தந்த டென்மார்க் அரசரின் கட்டளை. அவ்வாறு அவர்கள் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதன் வாய்ப்பாக நம்மால் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழக மக்களின் வாழ்க்கைமுறை என்னவென்று சமூகவியல் கோணத்தில் அறியவும் முடிகிறது. சமயம் என்ற அடிப்படையில் வசதியான வாழ்க்கைமுறையைக் கொண்டிருந்தவராக பிராமணர்கள் இருக்க, அவர்கள் உருவாக்கும் பொய்கள் மூலம் தமிழர் ஏமாற்றப்படுவதாக தமது கருத்தை சீகன்பால்க் (1714 ஆம் ஆண்டின் நாட்குறிப்பு) ஆவணப்படுத்தியுள்ளார். மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் பரப்புரையை இவர் மேற்கொண்ட பொழுது, அதற்காக இவரைக் கொல்ல தீட்டப்பட்ட சூழ்ச்சியில் இருந்தும் உயிர் தப்பியுள்ளார் என்பதையும் அறிகிறோம். ஆசாரக்கோவை நூல் அக்கால மக்கள் வாழ்வில் முக்கிய இடம்பெற்றிருந்ததும் அவரது குறிப்பால் தெரிகிறது. சமயம், சமூகவியல், மக்களின் பண்பாடு, வாழ்வியல் முறைகள் ஆகியவற்றைத் தமிழ் இலக்கியங்கள், இலக்கியம் என்ற கோணத்திலோ வரலாறு என்ற கோணத்திலோ பதிவு செய்ததே இல்லை. நமக்கு சராசரி வெகுமக்கள் வாழ்வின் நிலை, அவர்கள் வாழ்ந்த சூழ்நிலை அறிவதற்கு வாய்ப்பிருந்ததில்லை. இறைவன் அல்லது அரசன் இவர்களைப் போற்றிப்பாடுவதற்கு மேல் இலக்கியவாதிகள் அக்கறை காட்டாத நிலையால் தமிழிலக்கிய உலகில் நாம் இழந்தது அதிகம். சிலப்பதிகாரம் மூலம் இளங்கோவடிகள் செய்த வழிகாட்டுதலை சமய மறுமலர்ச்சி காலம் கைவிட்டுவிட்டதன் விளைவு அது. லூதரன் இறைப்பணியாளர்கள் பதிவுகளால் அக்குறை சற்றே சரி செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பியர் மத்தியில் இந்தியாவில் வாழ்பவர் நாகரிகமற்ற பண்பாட்டை உடையவர்கள் என்ற கருத்து நிலவியிருந்திருக்கிறது. அக்கருத்துக்கு முற்றிலும் மாறாக இலக்கியம், மொழி, மருத்துவம், கலை ஆகியவற்றில் இந்தியர் சிறப்புற்று இருந்தனர் என்பதை நேரடியாக அறிந்து கொண்ட மறைப்பணியாளர்கள் தாங்கள் அறிந்ததை தங்கள் எழுத்துகள் மூலம் ஐரோப்பிய மக்களுக்கு அறிவித்ததில் பெரும்பங்காற்றினர். முதலில் வந்த சீகன்பால்க் மலபார் (தமிழகம்) மக்களையும், தமிழையும் குறித்து ஐரோப்பாவிற்கு அனுப்பிய கடிதம் வழி இதை அறிவதற்கு முடிகிறது. அக்கடிதத்தில் நம்மில் பலர் எண்ணியிருப்பது போல மலபார் மக்கள் காட்டுவாசிகள் அல்லர், அவர்கள் பண்பட்ட மொழியைக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய அரசியல் எல்லைகளுடன் கூடிய இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்னர் வந்தவர் இந்த ஐரோப்பியர்கள் என்பதால், அவர்கள் ஆவணங்களில் அவர்களது தென்னிந்தியப் பகுதிக்கான பயணக்குறிப்பு ‘தமிழ்நாடு’ அல்லது ‘மலபார்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது வியக்க வைக்கும் தகவல். மேலும், தமிழகத்தில் இறைப்பணியாற்ற வருபவர்களை அவர்கள் தக்க முறையில் தயார்படுத்த விரும்பியதன் காரணமாக ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் தமிழைப் பாடமாக பயிற்றுவிக்க முயற்சியும் மேற்கொண்டனர்.
இவர்கள் தமிழக மருத்துவம், நோய் தீர்க்கும் மூலிகை ஆகியவற்றைக் குறித்தும் அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டிருந்தனர். இறைப்பணியாளர்களில் பெரும்பாலோர் அவர்களது இருபதுகளின் பிற்பகுதியில் இந்தியாவில் பணியேற்று, 40 வயதுக்குள் மறைந்து விடும் நிலையே இருந்திருக்கிறது. மீண்டும் திரும்பி தங்கள் நாட்டிற்குச் சென்றவரின் எண்ணிக்கையோ அல்லது ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகள் என நீண்ட காலம் வாழ்ந்தவரின் எண்ணிக்கையோ குறைவு. புதிய தட்பவெப்ப சூழ்நிலை கொண்ட நாட்டில், புதிய உணவுமுறை வாழும் முறை ஆகியவை அவர்களை உடல்நலக் குறைவைத் தொடர்ந்து எதிர்கொள்ள வைத்ததுள்ளது. தங்கள் உடல்நலத்திற்காக இந்திய மருத்துவம் மற்றும் நோய் தீர்க்கும் முறைகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது வாழ்க்கையின் கட்டாயமாக இருந்தது. கரூண்ட்லர், பிரெசியர், வால்த்தர் போன்று மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட பாதிரிமார்கள் மருத்துவம் குறித்த சுவடிகளையும் சேகரித்தனர். அவற்றை தங்கள் நாட்குறிப்புகளில் குறிப்பிட்டனர். வருங்காலத்தில் அவர்களைப் பின்பற்றி தமிழகத்தில் இறைப்பணிக்காக வருபவருக்கு இக்குறிப்புகள் உதவக்கூடும் என்பது அவர்களது நோக்கம் என்று சுபாஷிணி சுட்டிக் காட்டுகிறார். அத்துடன் இறைப்பணியாளர்கள் தாங்கள் நடத்திய பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ உதவியும், அவர்களும் மருத்துவம் குறித்து பயிற்சி பெறவும் ஏற்பாடு செய்துள்ளனர் என்பதும் தெரிகிறது.
தமிழ்நூல் பதிப்புத் துறையின் முன்னோடிகள் ஐரோப்பியர் என்பதனை விளக்கும் முகமாக, ஐரோப்பியரின் வருகையால் ஓலைச்சுவடியில் இருந்து தமிழ், அச்சுநூல்கள் என்ற புதியவழியில் அடி எடுத்து வைத்தது என்பதற்கான சான்றுகளாக ஐரோப்பிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்களால் வெளியிடப்பட்ட நூல்கள் குறித்த தரவுகளை நூலில் ஒரு அத்தியாயமாகத் தொகுத்தளிக்கிறார் சுபாஷிணி. ஒரு தகவல் குறிப்பு தொகுப்பு நூலாக தமது நூல் பயன்படக்கூடிய அளவில், நூலின் இப்பகுதியில் சீகன்பால்க், க்ரூண்ட்லர், சூல்ட்ஷே, ப்ரெஸ்ஸியர், வால்த்தர், சர்ட்டோரியஸ், ஃபேப்ரிக்குஸ், ரோட்லர், ரைனுஸ், க்ரவுல் ஆகியோரின் நூல்கள் குறித்த தொகுப்பையும் முக்கியமான நூல்களையும், தரங்கம்பாடி அச்சுக்கூடம் வழியாக அச்சிடப்பட்ட நூல்கள் குறித்த தகவலையும் தொகுத்து வழங்குகிறார். தரங்கம்பாடியில் 1712 ஆம் ஆண்டில் சீகன்பால்க் அச்சகம் ஒன்றை உருவாக்கினார். இந்த அச்சுக்கூடத்தில் வெளியிடப்பட முதல் தமிழ்நூல் பைபிள்.
பைபிளின் புதிய ஏற்பாட்டை சீகன்பால்க் தமிழில் மொழிபெயர்த்து தரங்கம்பாடி அச்சகம் வழியே அச்சிட்டு 1714 இல் வெளியிட்டுள்ளார். சீகன்பால்க் எழுதிய நூல்களில் “Grammatica Damulica” என்ற தமிழிலக்கண நூல், “Genealogie Der Malabarishen Gotter” (மலபார் கடவுளர்கள் / தமிழ்க் கடவுளர்கள்) என்ற ஜெர்மானிய மொழி நூல்கள் குறிப்பிடத்தக்கவை. சீகன்பால்க் தாமும் உடன் பணியாற்றிய இறைப்பணியாளர்களும் தமிழில் எழுதியதாகவும், தமிழுக்கு மொழிபெயர்த்ததுமாக தமது கடிதமொன்றில் குறிப்பிட்ட 32 தமிழ் நூல்களின் பட்டியலை நூலாசிரியர் இறுதியில் இணைப்பாகக் கொடுத்துள்ளார். கத்தோலிக்க வீரமாமுனிவர் எழுதிய இலக்கண நூலும் 1718 ஆம் ஆண்டில் தரங்கம்பாடி அச்சுக்கூடத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் பிரெட்ரிக் காமரெர் என்பவரால் ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் 1803 லேயே ஜெர்மனியில் அச்சுநூலாக வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துப்பணி அச்சுப்பதிப்புப்பணி மூலம் தமிழ் வளர்ச்சி புதுப்பரிமாணத்தை எட்டியதை இந்த அத்தியாயம் மிக விளக்கமாகத் தரவுகள் பலவற்றுடன் விளக்குகின்றது.
அத்துடன் இந்நூலின் பின்னிணைப்பாக மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், மற்ற கிறித்துவ சமயப் பிரிவுகளில் இருந்தும் தமிழகத்தில் இறைப்பணி செய்யும் நோக்கில் வந்தோர் 16 ஆம் நூற்றாண்டு முதற்கொண்டு எவ்வாறு தமிழ் வளர்ச்சியில் பங்கேற்றனர் என்ற தகவல் தொகுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்பகுதி இத்துறையில் ஆய்வு செய்வோருக்கு இன்றியமையாத ஒரு பகுதி. இப்பகுதியில் ஆரம்பக்கால தமிழ் அச்சுநூல்கள் குறித்த வரலாறும் ஐரோப்பியர் வருகை எவ்வாறு ஓலைச்சுவடித் தமிழ் அச்சுப்பதிப்புகளாக திசைதிரும்பின என்பதை அறிவதற்கு நல்வாய்ப்பாக அமைகிறது. 15 ஆம் நூற்றாண்டின் அச்சு எந்திரம் உருவாக்கிய தொழிற்புரட்சியும், 20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியும் விளைவித்த சமூகப்புரட்சிகளால் கல்வியும் மொழியும் பலரையும் சென்றடைய இந்த மாற்றங்கள்தானே உறுதுணையாக அமைந்துவிட்டிருக்கிறது.
போர்த்துக்கீசிய பாதிரியார் அண்டிறிக்கி அடிகளார் (Henrique Henrique) முன்னெடுப்பில் 1578 இல் வெளியான, 16 பக்கங்கள் கொண்ட ‘தம்பிரான் வணக்கம்’ (Christian doctrine in Tamil) என்று லத்தீன் மொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அச்சுநூலாக பதிப்பிடப்பட்ட நூலே தமிழில் வெளிவந்த முதல் அச்சுநூல். இந்திய மொழியில் முதலில் அச்சுநூல் வெளியானதும் தமிழில்தான். இவர்கள் தவிர்த்து ராபர்ட்-டி-நோபிலி, வீரமாமுனிவர் எனத் தன்னை குறிப்பிட்டுக் கொண்ட கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி போன்ற கத்தோலிக்கப் பிரிவு ஐரோப்பியர் ஆற்றிய தமிழ்ப்பணிகளும் என்றும் தமிழக வரலாற்றில் நிலைத்து நிற்பவை. இக்கால தொழில்நுட்ப வளர்ச்சியில் அச்சுநூல்கள் எண்ணிம வடிவ மின்னூல்களாக மாறிய திருப்புமுனையுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பொழுது, ஐரோப்பியர் கொணர்ந்த அச்சுநூல் பதிப்பு இயந்திரம் தமிழ் மொழி வளர்ச்சிக்குக் கொடுத்த தாக்கம் எளிதாகப் புரியும்.
தமிழின் வரலாற்றில், தமிழகத்தில் வரலாற்றில் விடுபட்ட பகுதிகளை, நாம் அறிந்திராத மக்களின் சமூக வாழ்வியல் குறிப்புகளை அறிவதற்குத் தமிழகத்தில் இறைப்பணியாற்றிய ஐரோப்பிய திருச்சபையினரின் நூல்களின் மூலமும் ஆவணக்குறிப்புகள் மூலமும் அறிவதற்கு வேண்டியத் தேவை இருப்பதை இந்த நூலைப்படிப்பதன் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஐரோப்பியர் பாதிரிமார்கள் கிறித்துவ சமயத்தை கீழை நாடுகளில் பரப்ப வந்தவர் என்ற குறுகிய நோக்கில் மட்டும் நாம் புரிந்து கொண்டிருப்பது இந்திய, தமிழக வரலாற்றிற்கு இழப்பு என்பதை ஆய்வாளர் எச்சரிப்பதை நூலைப்படித்து முடித்த பின்னர் உணர முடிகிறது. தொடர்ந்து தமிழர் தம் வரலாற்றை நிறைவு செய்யும் நோக்கில் நம் கவனத்தை அயல்நாட்டார் பதிவு செய்தவற்றில் இருந்து அறிந்து கொள்ளும் வண்ணம் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அவர்கள் எழுத்து வடிவில் விட்டுச் சென்ற தரவுகளில் நம் வரலாற்றின் பகுதிகள் நம் கவனத்திற்கு வராமல் அவரவர் நாடுகளின் ஆவணச் சேகரிப்புகளில் உள்ளன. ஆய்வாளர் சுபாஷிணி போன்றோரை முன்மாதிரியாகக் கொண்டு அயலகத்தில் வாழும் ஆய்வார்வமும் தமிழார்வமும் உள்ளவருக்கு நல்லதொரு வாய்ப்பு. குறிப்பாகத் தமிழகத்தில் வணிகத்தொடர்பு அல்லது சமய பரப்பல் என்று ஆர்வம் காட்டிய ஐரோப்பிய நாடுகளான போர்த்துகல், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்த் (ஹாலந்த்), டென்மார்க், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் தமிழர் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஐரோப்பிய-தமிழக ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.
நூலறிமுகம்:—
நூல்: ஜெர்மன் தமிழியல் — நெடுந்தமிழ் வரலாற்றின் திருப்புமுனை
ஆசிரியர்: முனைவர் க. சுபாஷிணி
வகை: ஆய்வு நூல்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு: நவம்பர் 2018
விலை: ரூ 200
ISBN: 9789386820754
தொடர்பு: தேமொழி (jsthemozhi@gmail.com)
நன்றி - சிறகு: http://siragu.com/தமிழ்-வளர்ச்சியில்-ஐரோப்/