Saturday, July 31, 2021

கிழக்கு மலேசியா சபாவில் பூமிபுத்ரா தமிழர்கள்


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் சபாவிற்குச் சென்றார்கள். சபாவிலேயே வாழ்ந்து, நிரந்தரவாசிகளாகி விட்டனர். அந்த வகையில், தமிழர்கள் பலர் கடசான், மூருட், பாஜாவ் பெண்களைத் திருமணம் செய்து வாழ்கின்றனர். இந்தப் பெண்களில் பலர் கிறிஸ்துவப் பெண்களாகும். 

muthukrishnan.jpg
ஒரு தமிழருக்கும் ஒரு கடசான் அல்லது பாஜாவ் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை, பூமிபுத்ரா தகுதியைப் பெறுகிறது. மலேசிய அரசியலமைப்பின் 160A (6)(a) சட்டப்பிரிவின் கீழ் அந்த விதி சொல்லப் படுகிறது.

தமிழர்கள் சிலர் சீனர் அல்லது கடசான் பாரம்பரியங்களுடன் ஐக்கியமாகி விட்டனர். அவர்களில் சிலர் பாஜாவ் பெண்களை மணந்து, இஸ்லாம் சமயத்திற்கு மாறி உள்ளனர்.

சபாவில் 12,600 இந்தியர்கள் உள்ளனர். தமிழர்கள் 3,200. இவர்களின் நலன்களுக்காக ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் பெயர் சபா இந்தியர் சங்கம். 

1960-களில் மலேசியக் குடியேற்ற வாரியம், தீபகற்ப மலேசியாவிலிருந்து இந்தியத் தொழிலாளர்களைச் சபா ரப்பர் தோட்டங்களுக்குக் கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழர்களின் எண்ணிக்கையும் கூடியது. 

இருப்பினும் வேலை ஒப்பந்தம் முடிந்ததும் பலர் திரும்பிச் சென்று விட்டனர். குறைவான எண்ணிக்கையில் மட்டுமே சிலர் தங்கினர். அப்படித் தங்கியவர்கள் பின் நாட்களில் சபா பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பலர் பூமிபுத்ரா தகுதியைப் பெற்று உள்ளனர்.

தீபாவளி, வைகாசி, தைப்பூசம் போன்ற திருவிழாக்களை இன்று வரை கொண்டாடுகின்றனர். வேறு சமயங்களுக்கு மாறிய தமிழர்கள் கிறிஸ்துமஸ், பெரிய வெள்ளி, நோன்புப் பெருநாள் போன்ற திருநாட்களைக் கொண்டாடுகின்றனர்.

தமிழர்கள் எங்கே சென்றாலும் அங்கே ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விடுகிறார்கள். அந்த வகையில் சபாவிலும் ஒரு தனித்துவமான தமிழர்ச் சமுதாயம் உருவாக்கப்பட்டு உள்ளது.


சான்றுகள்:
1. One Indian man, who calls himself as Huang Poh Lo, proclaims in an advertising banner that he is The World’s Only Indian Chinese Calligrapher. - http://www.nst.com.my/life-times/showbiz/sunday-gaiety-1.178092
2. Ethnic Indians may be few in Sabah, but Deepavali is a 1Malaysia celebration. - http://insightsabah.gov.my/article/read/648/ 
3. The Sabah Indian Association
4. If one of the parents is a Muslim Malay or indigenous native of Sabah as stated in Article 160A (6)(a) Federal Constitution of Malaysia; thus child is considered as a Bumiputra. - http://en.wikipedia.org/wiki/Bumiputra/


-

Friday, July 30, 2021

மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை


-- முனைவர் ப.பாண்டியராஜா


மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடியது மதுரைக்காஞ்சி என்னும் பாடல். பத்துப்பாட்டு நூல்களுள் ஆறாவதாக அமைந்த இப்பாடல், 782 அடிகளைக் கொண்டு பத்துப்பாட்டின் பாடல்களுள் மிகப் பெரிய பாடலாக அமைந்துள்ளது. இதன் பெயருக்கேற்றவாறு, இப்பாடல் 202 அடிகளில் அன்றைய மதுரை நகரின் அமைப்பை மிக விரிவாக எடுத்தியம்புகிறது. இதிலிருந்து மதுரை நகரின் உட்பகுதி ஏறக்குறைய 2000 ஆண்டுகாலமாக, மிகப்பெரும் மாற்றங்களுக்கு உட்படாமல் இருந்து வந்திருக்கிறது என அறிகிறோம்.
மதுரைக்காஞ்சி காட்டும் மதுரையைப் பார்ப்பதற்கு முன்னர், இன்றைய மதுரையின் உட்பகுதியை ஓரளவு உற்று நோக்குவோம். மதுரையின் மையப்பகுதியாக இருப்பது மீனாட்சியம்மன் கோவிலாகும். இது 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் கொண்டு ஏறக்குறைய ஒரு சதுர வடிவில் சுற்றுச்சுவருடன் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுச் சுவருக்கு உட்புறமான நான்குபக்கங்களிலும் தெருக்கள் உள்ளன. இவை ஆடி வீதிகள் எனப்படும். இவை அமைந்திருக்கும் திசையினைப் பொருத்து, இவை (கிழக்கு ஆடி வீதி) கிழக்காடிவீதி, தெற்காடிவீதி, மேற்காடிவீதி, வடக்காடி வீதி என்று அழைக்கப்படும். இந்தச் சுற்றுச்சுவருக்கு நான்கு திசைகளிலும் வாசல்களுண்டு. மேலும் இந்தச் சுற்றுச்சுவர்களுக்கு வெளிப்பக்கமாக நான்கு திசைகளிலும் தெருக்கள் உள்ளன. இவை சித்திரை வீதிகள் எனப்படும். இவையும் கிழக்குச் சித்திரைவீதி, தெற்குச் சித்திரை வீதி எனத் தாம் இருக்கும் திசைகளைப் பொருத்துப் பெயர்களைப் பெறும். இந்தச் சித்திரை வீதிகளுக்குச் சற்றுத் தள்ளி நான்கு பக்கங்களிலும் தெருக்கள் உண்டு. அவை ஆவணிமூல வீதிகள். இந்த ஆவணிமூல வீதிகளுக்குச் சற்றுத்தள்ளி நான்கு பக்கங்களிலும் மாசி வீதிகள் உள்ளன. இந்த மாசிவீதிகளுக்குச் சற்றுத்தள்ளி நான்கு பக்கங்களிலும் வெளிவீதிகள் உள்ளன.
இந்த வீதிகளின் அமைப்பைக் காட்டும் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.


சங்ககால மதுரையில் நகரின் மையப்பகுதியாக அரசனின் அரண்மனை இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். இதைப் பரிபாடல் அடிகளால் அறிகிறோம். அரண்மனையைச் சுற்றி ஆடி வீதிகள், சித்திரை வீதிகள், ஆவணிமூல வீதிகள் இருந்திருக்கின்றன. ஆவணிவீதிகளுக்குச் சற்றுத் தள்ளி வெளியே நகரின் கோட்டை அமைந்திருக்கிறது. கோட்டையைச் சுற்றி அகழி இருந்திருக்கிறது. அகழியை ஒட்டி நான்கு பக்கங்களிலும் வெளிவீதிகள் இருந்திருக்கின்றன. அதாவது இன்றைய மாசி வீதிகள்தான் பாண்டியர் காலத்து வெளிவீதிகள். இதற்குச் சான்றுகள் இன்றும் இருக்கின்றன.
முதலாவதாக, மேல ஆவணிமூல வீதிக்கும், இன்றைய மேல மாசி வீதிக்கும் இடையில் ஒரு சிறிய வீதி மேலப் பாண்டியன் அகில் தெரு என்ற ஒரு பெயரில் இருக்கிறது. அகழி என்பது அகழ் ஆகிப் பின்னர் அது அகில் ஆகிவிட்டது. அகழி என்பது கோட்டைக்கு வெளியில் இருப்பது. எனவே பாண்டியர் காலத்தில் மேல ஆவணி மூல வீதிக்கும், மேல மாசி வீதிக்கும் இடையில் கோட்டையும், கோட்டைக்கு வெளிப்புறமாக, மேல மாசி வீதியைத் தொட்டுக்கொண்டு அகழியும் இருந்திருக்கவேண்டும். எனவே இன்றைய மேலமாசிவீதி அன்றைய வெளிவீதி என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். சங்க கால மதுரையின் மேற்கு எல்லை இதுவே. இதேபோல் மற்ற மூன்று பக்கங்களிலும் கோட்டையும் அகழியும் இருந்து, கோட்டை இடிக்கப்பட்டு அகழி தூர்க்கப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. இப்போது அந்தத் தெருக்கள் பெயர் மாற்றம் பெற்று அடையாளம் அற்றுப்போய்விட்டன. வடக்கே சங்கீத விநாயகர் கோவில் தெரு, வித்துவான் பொன்னுசாமி பிள்ளை தெரு எனப் பெயர் மாற்றம் பெற்ற இந்த வடக்குப் பாண்டியன் அகிழ்தெரு, முதலில் பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அகழியைச் சரியாக மூடாததால் தெரு பள்ளமாக இருந்தபோது இந்தப் பெயர் பெற்றது எனலாம். தெற்குப் பக்கத்தில் இதன் பகுதி ஜடாமுனிகோவில் சந்து எனப் பெயர்பெற்றிருக்கிறது.
கிழக்குப்பக்கம் பாண்டியர் கோட்டை இருந்ததற்கான இரண்டு அடையாளங்கள் இன்றும் உள்ளன. கீழஆவணி மூலவீதியிலிருந்து கீழமாசிவீதிக்குச் செல்லும் தெரு இப்போது அம்மன் சன்னதித் தெரு எனப்படுகிறது. இந்தப் பகுதியின் நடுவில் ஓர் உயரமான வாயில் இருக்கிறது. இதற்கு விட்டவாசல் என்று பெயர். அதாவது, நாயக்கர்கள் பாண்டியன் கோட்டையைத் தகர்த்தபோது இடிக்காமல் விட்டுவிட்ட வாசல்பகுதி இது. வரலாற்றுப் புகழ் மிக்க இந்த அமைப்பு இன்று ஆக்கிரமிப்பாளர்களால் பொலிவிழந்து பார்ப்போரின் கண்களிலிருந்து நீரை வரவழைக்கும் நிலையில் உள்ளது. இந்த வாசலின் உயரே ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. 1935-ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் முதலாம் நாள் அன்றைய நகர் நிர்வாகப் பொறியாளராக இருந்த ஜி.எம்.பிலிப் என்பவரால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு Ancient Monument என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறது.
THIS STRUCTURE WAS FORMERLY THE EASTERN GATE WAY OF THE OLD PANDIAN FORT. ANY PERSON DESTROYING, DEFACING, REMOVING, ALTERING OR IN ANY WAY INJURING ANY PART OF IT OR CAUSING IT TO BE SO DAMAGED WILL BE PROSECUTED. (S.D) G.M.PHILIP. 1-2-35. EXECUTIVE ENGINEER
“இந்தக் கட்டிடம் முன்னர் பண்டைய பாண்டியன் கோட்டையின் கிழக்கு வாயிலாக இருந்துள்ளது. இதை அழிக்கவோ, சிதைக்கவோ, உருமாற்றம் செய்யவோ அல்லது எவ்விதத்திலேனும் இதற்கு ஊறு விளைவிக்கவோ செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்பதே அச் செய்தி. குறைந்தது 700 ஆண்டுக்காலப் பழமையைக் கொண்ட இந்த ஒப்பற்ற வரலாற்றுச் சின்னம் நம்மவர்களாலேயே இப்போது பாழ்படுத்தப்பட்டிருப்பதைப் பாருங்கள்.

இந்த வாயில் ஒரு மன்னனின் கோட்டை வாயிலாக இருந்தது என்னும் அளவுக்கு அழகும் பொலிவும் உள்ளதாகத் தோன்றவில்லை என்பது உண்மையே. ஆனால் இது பல அழிவுகளைச் சந்தித்திருக்கிறது என்பதை நினவிற்கொள்ளவேண்டும். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
இப்போது கிழக்குக்கோபுரம் என்று அழைக்கப்படும் வாயிலே சங்ககாலப் பாண்டியர் காலத்தில் பாண்டியர் அரண்மனைக்கு முதன்மை நுழைவாயிலாக இருந்தது. இதனுள் நுழைந்து நேரே சென்றால் மன்னனின் அரசவை இருந்திருக்கும். களப்பிரர்க்குப் பின்னர் வந்த இடைக்காலப் பாண்டியர் காலமான 7-ஆம் நூற்றாண்டில் இதுவே சிவன் கோவில் சன்னதியாக இருந்தது. இந்தக் கிழக்குக் கோபுர வாயிலே அன்றைய கோயில் வளாகத்துக்கு ஒரே நுழைவாயிலாக இருந்திருக்கும். எனவே அதற்கு நேரே செல்லும் தெரு கோட்டை மதிலை அடையும் இடத்திலேயே கோட்டைக்குரிய முதன்மை வாசல் இருந்திருக்கும். அதன் பின்னர் பிற்காலப்பாண்டியர் காலமான கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான் அம்மன் சன்னதி உருவாக்கப்படுகிறது அதற்கும் பின்னர் பிற்காலப்பாண்டியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான் இந்த அம்மன் சன்னதி விரிவாக்கம் செய்யப்படுகிறது.
எனவே கோட்டைக்குரிய முதன்மை வாயில் இந்த அம்மன் சன்னதிக்கு நேரே இருக்கும் பண்டைய பாண்டியர் கோட்டை வாயில் அல்ல என்பது புரியும். அந்த முதன்மை வாயில் இன்றைய புதுமண்டபத்துக்கு நேர் கிழக்கே இருக்கும் ராயர்கோபுரமே என்பது தெளிவு. அதனை இப் படம் தெளிவுபடுத்தும்.


படத்தில் வலக்கோடியில் unfinished Gopuram என்று காட்டப்பட்டிருக்கும் பகுதியே சங்க கால மதுரை நகரின் முதன்மை வாயிலாக இருந்திருக்கும். இங்கே இருந்த அந்த அழகும் பொலிவும் மிக்க முதன்மை வாயிலை திருமலை நாயக்கர் இடித்துவிட்டு அதைவிட மேலும் பொலிவுள்ள கோபுரமாகக் கட்ட எண்ணியுள்ளார். மிகவும் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய பக்க மதில்களைக் கொண்ட இரு பெரும் தூண்களை அவர் நிறுவினார். இது இன்றும் 50 அடி உயரத்துக்குக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஏதோ ஒரு காரணத்தால் இந்தக் கோபுரம் முற்றுப்பெறவில்லை. சங்கப் பாண்டியரின் முதன்மை வாயில் இருந்த இடம் இன்று மிகவும் பொலிவிழந்து நிற்கிறதைப் பாருங்கள்.
பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –
ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழமாசிவீதியிலிருந்து கிழக்குக் கோபுரம் நோக்கி -


பாண்டியர் மதுரையின் நுழைவாயிலாக இருந்த இடம் – பின்னர் முடிவுறா ராய கோபுரம் –
ஆங்கிலேயர் காலத்திலும் இன்றும் – கீழ ஆவணிமூலவீதியிலிருந்து கீழமாசி வீதி நோக்கி -
மாசி வீதிகளுக்கும் உட்புறத்தில் பாண்டியன் அகழியும் அதனை அடுத்துக் கோட்டையும் இருந்ததற்கான சான்று இன்னொன்றும் உள்ளது. கீழேயுள்ள படத்தில் நீங்கள் காண்பது இன்றைய கீழமாசிவீதியின் ஒரு பகுதி.

இங்கிருக்கும் கட்டடத்தின் ஒரு பகுதியை நீங்கள் இன்றும் பார்க்கலாம். இங்குக் காணப்படும் வீதியே கீழமாசிவீதி. அதனை அடுத்து வலப்புறம் கருப்பாக இருப்பது அங்கிருந்த அகழியை மூடியதால் ஏற்பட்ட பள்ளம். இதன்மேல்தான் இன்றை கீழமாசிவீதிக் கடைகள் கட்டப்பட்டுள்ளன.


இதே கட்டிடம் மீண்டும் 1880-களில் எடுக்கப்பட்டுள்ளது. கீழமாசிவீதியில் 1990-களில் எடுக்கப்பட்ட அதே இடத்துடன் ஒப்பிட்டுக்காட்டப்பட்டுள்ளது.


எனவே, சங்ககால மதுரை இன்றைய மதுரையின் நான்கு மாசிவீதிகளுக்கும் உட்பட்ட பகுதிதான் என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. கீழேயுள்ள படத்தில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



சிவப்புக்கோடுகள் மதுரையின் கோட்டை மதில்கள். நீலநிறக்கோடுகள் கோட்டைக்கு வெளியே அமைந்த அகழி. இடைக்காலப் பாண்டியர் காலத்துக்கும் முற்பட்ட களப்பிரர் காலத்துக்கு முந்தைய சங்ககாலப் பாண்டியர் மதுரை இதுவேதான். ஆம், இந்தச் சிவப்புக் கோட்டுப் பகுதிதான் 2000 ஆண்டுளுக்கு மேலாய் வாழ்ந்துகொண்டிருக்கும் என்றுமுள தென்மதுரையாய் விளங்கும் மதுரை மூதூர். ஒரே ஒரு வித்தியாசம். சங்ககாலப் பாண்டியர் காலத்தில் நீலக்கோடுகளுக்கு நடுவில் இருந்தது மீனாட்சி கோவில் அல்ல. அது பாண்டியன் கோயிலாக இருந்தது. கோ என்றால் அரசன். இல் என்பது இல்லம். இதுவே சங்ககாலப் பாண்டியர் அரண்மனை.
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும்பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில் 
– பரிபாடல் திரட்டு 7/1-4
என்ற பரிபாடல் அடிகளில் காணப்படுவது போல, தாமரையின் இதழ்களாய் நான்கு பக்கங்களிலும் விரிந்து கிடக்கும் தெருக்களுக்கு மத்தியில் அதன் பொகுட்டைப்போலப் பொலிவுடன் இருந்தது மன்னனின் அரண்மனை. இங்குக் குறிப்பிடும் அண்ணல் என்ற சொல் பாண்டிய மன்னனைக் குறிப்பதாக அனைத்து உரைகாரர்களும் கூறுகின்றனர்.
இதுதான் சங்ககால மதுரை. இது சங்க காலத்தில் எப்படி அமைந்திருந்தது என்பதை மதுரைக்காஞ்சிப் புலவர் கூறுகின்ற வழியே பார்க்கலாம்.
அன்றைய மதுரையின் முதன்மையான நுழைவாயில் இன்றைய எழுகடல் தெருவில் இருக்கும் ராய கோபுரம் ஆகும். இந்த வாயிலை ஒட்டித் தென் வடலாக அமைந்திருக்கும் அகழி நீண்டு படுத்திருக்கும். பூமியின் அடிப்பகுதி வரை ஆழமாக அமைந்திருந்த தெளிவான நீரைக்கொண்ட பெரும் பள்ளம் - மண்ணுற வாழ்ந்த மணி நீர்க் கிடங்கு (மது 351) என்கிறார் புலவர்.
இந்த அகழியை அடுத்து கோட்டையும் வாயிலும் அமைந்திருக்கின்றன.
விண்ணுற ஓங்கிய பல்படைப் புரிசை - (352) வானளவு உயர்ந்து, அதில் பலவிதப் படைகலங்களைக் கொண்ட மதில் என்கிறார் புலவர். அகழியைத் தாண்டி உள்ளே செல்வதற்குரிய பாலத்தை அடுத்து நகருக்குள் நுழையும் வாயில் இருக்கிறது. வையை அன்ன வழக்குடை வாயில் என்கிறார் புலவர். அன்றைய வைகையில் ஓயாமல் தண்ணீரோடிக்கொண்டே இருந்தது. அதைப்போல மக்கள் ஓயாமல் நகருக்குள் செல்வதும், நகரைவிட்டு வெளியே வருவதுமாக ஓயாமல் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவர்கள் முதலில் பார்ப்பது - ஆறு கிடந்தன்ன அகல் நெடும்தெரு - (359) அந்தக் கீழ ஆவணி மூலவீதி தென் வடலாக ஒரு பெரிய ஆற்றினைப் போல அகன்று நீண்டு கிடக்கின்றது. அதன் இரு பக்கங்களிலும் வான் வரை உயர்ந்த, பல சாளரங்களையுடைய நல்ல வீடுகள் இருக்கின்றன. முரசறைவோர் பேரொலியுடன் முரசறைந்து மக்களுக்கு செய்திகளை அறிவித்துக்கொண்டிருக்கின்றனர். மதுரையில் நுழைந்தவுடன் புலவர் நமக்குக் காட்டுவது - ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமம் (365)- ஓவியத்தில் பார்ப்பதைப் போன்ற இரண்டு பெரிய கடைத்தெருக்கள். இவை என்னவாய் இருக்கும்?. நியமம் என்பது அங்காடி. எனவே இவை நாளங்காடி, அல்லங்காடி என்ற பகல் கடைத்தெரு, இரவுக்கடைத்தெரு ஆகிய இரண்டு கடைத்தெருக்கள். இவற்றில் முதலில் நாளங்காடியைப் புலவர் முதலில் குறிக்கிறார் (430). அடுத்து வடக்கு, மேற்கு, தெற்கு ஆவணிமூல வீதிகளைச் சுற்றிவிட்டு மீண்டும் இறுதியில் அல்லங்காடியைக் காட்டுகிறார் (544) எனவே நகரில் நுழைந்து வலப்பக்கம் திரும்பினால் கீழாவணிமூல வீதியின் வடக்குப்பக்கம் இருப்பது நாளங்காடி. அப்படியே ஆவணிமூல வீதியைச் சுற்றி மீண்டும் கீழாவணிமூலவீதிக்கு வந்தால் கீழாவணிமூலவீதியின் தெற்குப்பக்கம் இருப்பது அல்லங்காடி.
இன்று பெருநகரங்களில் கூட்டமான நேரங்களில் காவல் ஊர்திகள் (Police Van) பெரும் வீதிகளில் சுற்றிவருவதுபோல, அன்றைய மதுரையில் கூட்டமான ஆவணிமூல வீதிகளில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றின் நடமாட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. இனிப்புகள், பூக்கள், பூமாலைகள், இடித்த சுண்ணாம்பு, வெற்றிலை, பாக்கு, சங்கைச் சுட்ட சுண்ணாம்புத்தூள் ஆகியவற்றைத் தட்டுகளில் வைத்துக்கொண்டு தலைச்சுமையாக விற்போர் திரிந்துகொண்டிருப்பர்.
அடுத்து, நரைத்த கூந்தலையுடைய முதுபெண்டிர் வீடுவீடாகச் சென்று பூவிற்றுத் திரிகின்றனர். தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்ட இளம்பெண்கள் இளைஞருடன் சிரித்துப்பேசிக்கொண்டிருக்கின்றனர், அந்த நாளங்காடி கடைத்தெருவானது மிகுந்த ஆரவாரம் உடையதாக விழாக்கொண்டாடும் ஊர் போலக் காட்சியளிக்கின்றது.
செல்வர்கள் தேர்களில் அங்குமிங்கும் விரைந்துகொண்டிருக்கிறார்கள். செல்வப் பெண்டிர் தம் வீட்டு மாடங்களில் இருந்தவாறு நகர்க் காட்சிகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறாக, வடக்காவணிமூல வீதியைக் கடந்து மேலாவணிமூல வீதிக்கு வருகிறோம். அங்கு சிவன் கோயில், பௌத்த, அந்தணர், அமண் பள்ளிகள் வரிசையாக அடுத்தடுத்து இருக்கின்றன. அவற்றை அடுத்து மன்னனின் அறங்கூறவையமும், காவிதிப் பட்டம் பெற்றோரின் மனைகளும் இருக்கின்றன. அதையடுத்து வாணிகர் பகுதி தொடங்குகிறது. மலையிலும்,நிலத்திலும், நீரிலும் விளையும் பல்வேறு பண்டங்களாகிய மணிகள், முத்துக்கள், பொன் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, அயல்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களை அங்கே விற்கிறார்கள். அதையடுத்து நாற்பெருங்குழுவினர் கூடுமிடம் இருக்கிறது.
அதையடுத்து, மேலாவணிமூல வீதி முடிந்து, தெற்காவணிமூல வீதி தொடங்குகிறது. இதைக் காட்டும் புலவர்
கோடு போழ் கடைநரும் - மது-511
என்று கூறுகிறார். கோடு என்பது சங்கு. அந்தக் காலத்தில் சங்கை அறுத்து வளையல்கள் செய்வார்கள். இன்றைக்கும் மேலாவணிமூலவீதியில் தெற்கு ஓரத்தில் வளையல்காரத்தெரு இருப்பதைப்பார்க்கலாம். அதையடுத்து தெற்காவணிமூல வீதி தொடங்குகிறது. இன்றைக்கும் அந்தத் தெருவுக்கு நகைக்கடைத் தெரு என்று பெயர். அங்கு நடைபெறும் தொழில்களைப் புலவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்.
---------- ------------ திருமணி குயினரும்,
சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்,
பொன் உரை காண்மரும், --- மது 511-513.
---------------- ------------- அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,
சுடுதலுற்ற நல்ல பொன்னால் விளங்கும் அணிகலன் செய்வாரும்,
பொன்னை (உரைத்து அதன்)மாற்றைக் காண்பாரும்,
அண்மைக் காலம்வரை தெற்காவணி மூல வீதியின் இறுதிப்பகுதியில் மத்தியஸ்தர் கடை உண்டு. ஏதேனும் நகைக்கடையில் வாங்கின தங்கத்தின் மாற்றின் மீது ஐயம் கொண்டால் இந்த மத்தியஸ்தர் கடையில் சரிபார்த்துக் கொள்ளலாம். இதைத்தான் அன்றைய பொன் உரை காண்மர் என்று புலவர் கூறுகிறார். இந்த மத்தியஸ்தர் கடையுடன் நகைக்கடைப் பகுதி முடியும், இன்றைக்கு இது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அன்றைக்கு அங்குத் துணிக்கடைகள், செப்புப்பாத்திரக் கடைகள், பூக்கடைகள், வாசனைப் பொருள்கடைகள் ஆகியவை இருந்திருக்கின்றன. இந்தப் பகுதியை ஒட்டி அண்மைக்காலம்வரை உணவு விற்பனைசெய்யப்பட்டு வந்துள்ளது. அதற்குச் சோற்றுக்கடைத் தெரு என்று பெயர் இருந்தது. பிரபல நாடக நடிகரான தி.க.சண்முகம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நாடகக்கலையின் தலைமையிடமாக மதுரை திகழ்ந்தது. எனவே நாடக நடிகரான கண்ணுசாமிபிள்ளையின் குடும்பம் மதுரை சோற்றுக்கடைத் தெருவில் குடியிருந்தது. எனவே தி. க. சண்முகம் தெற்குச் சித்திரை வீதியில் உள்ள வெள்ளியம்பலம் என்னும் ஆரியவைசிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தனர்” இந்தச் சோற்றுக்கடைகள் சங்ககால மதுரையிலேயே , அதுவும் இதே பகுதியில், இருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார் (மது. 527 - 535). அதன் ஒரு பகுதி இது. .
புகழ்படப்பண்ணிய பேரூன் சோறும்
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன் சோறு தருநர் பல்வயின் நுகர - மது. 533-535
இதையடுத்து அல்லங்காடி இருப்பதாகப் புலவர் குறிப்பிடுகிறார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இது கீழாவணிமூலவீதியின் தெற்குப் பகுதி.
இவ்வாறாக இந்த நான்கு ஆவணிமூல வீதிகளிலும் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்திருப்பதால், அவர்கள் தங்கள் கால்களை உரசிக்கொண்டு நெருக்கியடித்துத் திரிந்துகொண்டிருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர - மது. 522.
ஆக, ஈராயிரம் ஆண்டுகட்கு மேலாக, மதுரை நகரத்தின் மையப்பகுதியான மாசிவீதிகளுக்குட்ட பகுதி சீருடனும் சிறப்புடனும் பெரிதான மாற்றங்களின்றி, நாயக்கர் கால விரிவாக்கத்திற்கு முன்னர் வரை, பொலிவுடன் திகழ்ந்தது என மதுரைக்காஞ்சி மூலம் அறிகிறோம்.





Tuesday, July 27, 2021

வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்

வறல் குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்

-- தேமொழி 
 
ஓய்மா நாட்டை ஆண்ட தலைவன் நல்லியக்கோடன் என்ற வள்ளல்.  நல்லியக்கோடனைப் பாடிப் பரிசில் பெற்று அவனது தலைநகரான கிடங்கில் என்ற ஊரிலிருந்து திரும்புகிறான் பாணன் ஒருவன்.  வழியில் வறுமையில் வாடிய பாணன் ஒருவனைப் பார்த்து வருந்தி, அவனுக்கு உதவுவதற்காக நல்லியக்கோடனைச் சென்று பார்த்து உதவி பெறுவாயாக  என்று வழி கூறி ஆற்றுப்படுத்துகிறான்.  

ஓய்மா நாட்டின்  தலைநகருக்குப் போகும் வழியில் நல்லியக்கோடனின் ஆட்சிக்கு உட்பட்ட எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய நகரங்கள் உள்ளன என்று வழி கூறும் பாணன் வறிய பாணனிடம் கூறுகிறான். வழியில் உள்ள நகரங்களின் அமைப்பையும், நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறையையும் இப்பாடலின் மூலம் விளக்குகிறார் புலவர் நத்தத்தனார் தாம் இயற்றிய சிறுபாணாற்றுப்படை நூலில். 

page 239.JPG
ஆற்றுப்படுத்தும் பாணன், குடும்பத்தோடு எதிர்ப்பட்ட வறிய பாணனிடம் பின்வருமாறு கூறுகிறான்: வழியில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள எயிற்பட்டினம் என்ற  ஊரில் கடல் அலைகள் கொண்டு வந்து ஒதுக்கிய அகில் மரக் கட்டைகள் பார்ப்பதற்கு உறங்குகின்ற ஒட்டகங்கள் போன்று கிடக்கும். அத்தகைய அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி வடிகட்டிய கள்ளை மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு உணவாகக் கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில் கோமான் நல்லியக்கோடனைப் பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப ஆடியும் செல்லும் பொழுது அதைக்கேட்டு  மகிழும் மீனவர்களின் வீடுகள் தோறும், அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் குழல் மீன் சூட்டைப் (நெருப்பில் சுடப்பட்ட குழல் மீன் கருவாடு) பெற்று உண்டு மகிழலாம் என்று கூறுகிறான். இச்செய்திகள் சிறுபாணாற்றுப்படை நூலின்  146 முதல் 163 வரையில் உள்ள அடிகளில் இடம் பெறுகின்றன. 

சிறுபாண் ஆற்றுப்படை:
     பழம் படு தேறல் பரதவர் மடுப்பக்
     கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான்,
     தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி,
     அறல் குழல் பாணி தூங்கியவரொடு,
     வறல் 'குழல் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர்'

சிறுபாணாற்றுப்படையில் நெய்தல் நில மக்களின் உணவாக 'குழல் மீன்' குறிப்பிடப்படுகிறது.  
“வறல் குழல் வயின் வயின் பெறுகுவிர்” (வரி: 163) 
என்று சுடப்பட்ட  குழல் மீனை விருந்தினர்க்கு அளித்து மகிழ்வர் நெய்தல் நில மக்கள் என்று குறிப்பிடும் வரி தமிழ் இணையக் கல்விக்கழகம் சேமிப்பில் உள்ள சிறுபாண் ஆற்றுப்படை ஓலைச் சுவடியில்  அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. 
s113b015-palm leaf.jpg

நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் கொடுத்தவையாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் குழல் மீன் என்பதன் விலங்கியல் பெயர் 'சின்காதாய்ட்ஸ் பைகுலேட்டஸ்' (Syngnathoides biaculeatus). இது ஆங்கிலத்தில் Alligator pipefish என்று குறிப்பிடப்படுகிறது.  குழல் மீன் என்பது கடல் கொவிஞ்சி என்று வழங்கப்படுவதாகவும் தெரிகிறது. 

தமிழகத்தின் கிழக்குக் கரையோரமாக (மன்னார் வளைகுடா மற்றும் பால்க் வளைகுடா பகுதிகளில்) 7 இனங்களைச் சேர்ந்த குழல் மீன்கள் கிடைப்பதாக அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்று கூறுகிறது.  அதில் அதிக அளவில் கிடைப்பது 'சின்காதாய்ட்ஸ் பைகுலேட்டஸ்' என்ற குழல் மீன் வகையாகும். இங்கு ஆழமற்ற கடற்பகுதியில் கடற்செடிகள், கடற்பாசிகள் மற்றும் இறந்த பவளப்பாறைகள் நிறைந்த பகுதியில் குழல் மீன்கள் வாழ்கின்றன.  
Pipe Fish - Syngnathoides_biaculeatus.jpg

மீன்களின் உருளையான, சுமார் முக்கால் அடி வரை வளரும் உருவ அமைப்பை  ஒட்டியே  தமிழ்ப் பெயரும் ஆங்கிலப் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.  இது தனது உருவத்தையும் நிறத்தையும் ஒட்டிய கடற்தாவரங்களுக்கு  இடையே தலைகீழாக மிதந்த வண்ணம் உள்ள, மெக மெதுவாக நீந்தும் மீன். அதன் வேகம் குறைவு என்பதால் எதிரிகளுக்கு உணவாகாமல் தப்பிக்கும் பொருட்டு அதன் உடல்  அமைப்பு சூழலுக்கு ஏற்ப தகவமைந்த நிலையில் உள்ளது. தனது வளையக்கூடிய உடலால் செடிகளையும் பவழப்பறைகளையும் பற்றிக்கொள்ளும். (காணொளி காண்க: https://youtu.be/r5fWUPQOnSA)
___________________________________________________________

உதவிய தளங்கள்:
[1] சிறுபாண் ஆற்றுப்படை ஓலைச் சுவடி, தமிழ் இணையக் கல்விக்கழகம்

[2] Seahorses and pipefishes of the Tamil Nadu coast, Murugan A., Dhanya S., Rajagopal S., and  Balasubramanian T.; Current Science 95(2): 253-260, 2008

[3] Alligator pipefish - From Wikipedia:

[4] காணொளி:
Alligator pipefish (Syngnathoides biaculeatus)  #shorts
-----





Sunday, July 25, 2021

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு


-- முனைவர் க. சுபாஷிணி 


உலகம் முழுவதும் இன்று தொல்லியல் கள ஆய்வுகள் என்பது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற ஒரு துறையாக வளர்ந்து வருகின்றது. தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் பற்றிய செய்திகள் இன்று பத்திரிகை செய்திகள் அல்லது ஆய்வாளர்களின் அறிக்கைகள் என்ற எல்லையைக் கடந்து பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தனிநபர் ஆய்வுகளாகவும்  பதிவுகளாகவும் பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் பதிவுகளாக இக்காலத்தில் வெளிவருகின்றன. 

தமிழ்நாட்டுத் தொல்லியல் செய்திகளை அறிந்து கொள்கின்ற அதேவேளை தமிழ்நாட்டிற்கு வெளியே நடைபெறுகின்ற, அல்லது நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் மனித குலத்தின் தொன்மை பற்றிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது. இத்தகைய அறிவு உலகளாவிய அளவில் மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, மற்றும் நிலைத்தன்மை, போராட்டங்கள், வெற்றி, அரசு உருவாக்கம், இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்கின்ற பல்வேறு மனிதகுல அசைவுகளைப் பற்றி அறிந்துகொள்வதில் தெளிவைத் தருவதாக அமையும்.

தொல்லியல் ஆய்வுகளை மிக நீண்டகாலமாக, செயல்படுத்தி வரும் நாடுகளில் ஒன்று ஜெர்மனி. ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் பல்வேறு அருங்காட்சியகங்களிலும், பல்கலைக்கழக ஆய்வுக் கூடங்களிலும், கண்காட்சி பகுதிகளிலும் மட்டுமன்றி அகழாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளிலேயே அருங்காட்சியகங்களாக அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களைக் கொண்டது ஜெர்மனி. ஒவ்வொரு பெரிய நகரமாகட்டும், சிறு நகரமாகட்டும், கிராமம் ஆகட்டும்... எல்லாப் பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தப் பதிவு கற்கால மனிதர்களின் குடியிருப்பு  ஒன்றினை பற்றியது. 

Pfahlbaumuseum Unteruhldingen - உண்டெரூல்டிங்கன் கற்கால மனிதர்கள் குடியிருப்புகள் அருங்காட்சியகம் ஜெர்மனியின் கொன்ஸ்டன்ஸ்  ஏரிக்கு அருகே உள்ளது. 

இன்று உலகளாவிய வகையில் யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் 111 கற்கால மனிதர்களின் குடியிருப்புகளில் ஒன்றாகவும் இது அமைகிறது.  

ஜெர்மனிக்குத் தெற்கிலும், சுவிசர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளுக்கும் அருகிலேயும் உள்ளது இப்பகுதி. 1853-1854 ஆகிய காலகட்டத்தில்  இந்த ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களது வலைகள் அடிக்கடி தண்ணீருக்கு அடியில் மாட்டிக் கிழிந்து போனதை அவர்கள் அன்றைய நகர அதிகாரிகளிடம் தெரிவிக்க அவர்கள் கடலுக்கடியில் ஆய்வு செய்யும் சிலரை அனுப்பி சோதனை செய்த போது இது மிகப்பெரிய ஒரு கண்டுபிடிப்பாக அமையும் என யாரும் முதலில் எதிர்பார்க்கவில்லை.  வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மனித குல வாழ்விடப் பகுதிகளுள் ஒன்றாக இப்பகுதி இருந்தது என்பதும் அவர்கள் வாழ்வியல் கூறுகள் தொடர்பான ஏராளமான தொல்பொருட்கள் இங்குக் கிடைத்ததும் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தன. 

இங்கு அகழாய்வை நிகழ்த்திய குழுவில் இடம்பெற்றவர்களுள் ஒருவர்  ஃபெர்டினன் கெல்லர்.  இவரே இப்பகுதிக்கு 'Pile Dwelling' எனப் பெயரிட்டு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். 

அடுத்து இங்கு மக்கள் வாழ்ந்த  கி.மு 3000 கால அளவிலான வீடுகள், இங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றி தினம் சில குறிப்புகளாக வழங்குகின்றேன். 

உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு அருங்காட்சியகத்திற்கு நேற்று சனிக்கிழமை 24.7.2021 சென்றிருந்த போது பதிந்த காட்சி.

முகப்புப் பகுதியில் பயணம் தொடங்கும் இடம்


ஏரிக்கு அடிப்பகுதியில் மணலில் புதையுண்ட மக்கள் வாழ்விடப் பகுதி



ஃபெர்டினன் கெல்லர்



"உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 2"
                                    
வீடுகளைக் கட்டி குடியிருப்புகளை உருவாக்க எப்போது மனித குலம் தனது முயற்சியைத் தொடங்கியது என நம் எல்லோருக்குமே எப்போதாவது மனதில் கேள்விகள் எழுந்திருக்கும், அல்லவா?

கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற அகழாய்வுகள் வெளிப்படுத்திய, நாம் அறிந்த தமிழ்நாட்டு அகழாய்வுகள் போல  உலகின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளையும் தெரிந்து கொள்வோமே. இது ஒப்பாய்வுகளுக்கு உதவும் என்பதோடு பொதுவாகவே ஹோமோ சேப்பியன்களான இந்த மனித குலத்தின் வாழ்விடங்கள் உருவாக்கல் என்ற பொதுக் குணத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் அல்லவா? 

ஜெர்மனியின் உண்டெரூல்டிங்கன் பகுதியில் ஏறக்குறைய பொ.ஆ.மு 3917   ஆண்டு காலகட்டம் வாக்கில் உருவாக்கப்பட்ட வீடுகளின் மாதிரிகள் இங்கு உள்ள மிக முக்கிய காட்சிப் பொருள்களாக அமைகின்றன.  காலவரிசைப்படி ஒவ்வொரு வீடுகளும் முன்னர் இப்பகுதியில் மக்கள் அமைத்த வீடுகளின் தொல் படிமங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் மாதிரிகளாக  இங்கே உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் முதலில் வருவது ஹோர்ன்ஸ்டாட் வீடு (Hornstaat Haus).


இந்த வகை வீடுகள் இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுப் பணியின்போது ஏரிக்கு மிக ஆழமான பகுதிகளில் கிடைத்துள்ளன. அடிப்படையில் ஓர் அறை மட்டும் கொண்ட மரத்தாலும் குச்சிகளும் கட்டப்பட்ட வீடுகள். இவ்வகை வீடுகள் கட்டப்பட்ட காலமாக பொ.ஆ.மு. 3917 ஆம் ஆண்டு என ஆய்வாளர்கள் நிகழ்த்திய கரிம ஆய்வுகளின்  வழி உறுதி செய்கின்றார்கள். இந்த வகை வீடுகளின் தொல் படிமங்கள் 1980ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை கான்ஸ்டன்ஸ் ஏரிக்கரையில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவை. இந்த அகழ்வாய்வை பாடன் ஊர்ட்டன்பெர்க் மாநிலத்து வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு அமைப்பு (State office of Historic Monuments) நிகழ்த்தியது.

இந்த வீடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மரத் தூண்கள் 4 - 9 மீட்டர் உயரம் கொண்டவை. சுவர்கள் களிமண்ணால் பூசப்பட்டு மேற்கூரைகள் ரீட் கானரி வகைப் புற்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு மாதிரியாக வைக்கப்பட்டுள்ள இந்த வீடு 1996 ஆம் ஆண்டு முதலில் உருவாக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் 2011 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. 


பொ.ஆ.மு.  3900 எனும்போது இன்றைக்கு ஏறக்குறைய 6000 ஆண்டுக்காலப் பழமையான தொல் எச்சங்கள் என்பதை அறிய முடிகின்றது. ஐரோப்பாவில் தொல் மனிதர்கள் வாழ்ந்த பல இடங்கள் பற்றிய செய்திகள் இன்று நமக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்தப் பகுதியில் கிடைத்திருக்கின்ற இந்தக் குடியிருப்புகளின் எச்சங்கள் நமக்கு இப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் நீண்ட கழிகளையும், களிமண், மற்றும் புல் சருகுகளையும் கொண்டு வீடுகளைக் கட்டும் திறன்களையும் கொண்டிருந்தனர் என்பதையும், ஓரிடத்தில் தங்கி வாழ்வது, உணவுகளைச் சேகரிப்பது என்ற பழக்கங்களையும் கொண்டிருந்தனர் என்பதையும் இந்த அகழாய்வுச் செய்தி உலகுக்கு வெளிப்படுத்தியது.

அடுத்த பதிவில் இங்குக் கிடைத்த மேலும் சில தொல்பொருட்கள் பற்றிய செய்திகளைப் பகிர்கிறேன்.


"உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 3"
                                

தொல் மனிதர்களின் வரலாறு மண்ணுக்குள் மறைந்து கிடக்கின்றது. ஆழமாக நிலத்தைத் தோண்டி அகழாய்வு செய்யும்போது நமக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களின் வாழ்வியல் பற்றிய தொல் எச்சங்கள் கிடைக்கின்றன. அதேபோல கடலுக்கடியில் அகழாய்வு செய்யும் போதும், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் இருக்கின்ற பகுதிகளில் அகழாய்வு செய்யும்போதும் ஏராளமான அரும் பொருட்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

மனிதகுலம் மட்டுமல்ல; மிருகங்களும் சரி, தாவரங்களும் சரி; நீர்நிலைகள் எங்கு இருக்கின்றதோ அங்கேயே வாழ்விடத்தை உருவாக்கிக்கொள்ளும் அடிப்படை பண்பை    ஆய்வுகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் பெருவாரியான அனைத்து நாகரிகங்களும் ஏதாவது ஒரு நதிக் கரையை ஒட்டியே அமைந்திருக்கின்றன. நைல் நதி நாகரிகம்,  வைகை நதி நாகரிகம் போன்றவற்றை இதற்கு  உதாரணமாகக் காட்டலாம்.  அல்லது ஏரிகள் குளங்கள் கடற்கரை அருகே என்ற வகையில் அமைந்திருக்கின்றன.

ஜெர்மனியின்  உண்டெரூல்டிங்கன்   பகுதி தொல்லியல் அகழாய்வின் போது ஏரியின் அடிப்பகுதியில் புதையுண்டு கிடந்த மர வீடுகளைப் பற்றிய செய்திகளை இதற்கு முந்தைய பதிவில் கூறியிருந்தேன். இப்பகுதியில் மரங்களின் அல்லது கழிகளின், புற்களின் எச்சங்கள் மட்டுமே கிடைத்தன என்று எண்ணிவிட வேண்டாம். 

இப்பகுதியில் நடத்தப்பட்ட பல்வேறு கால அகழாய்வுகளில் இங்கு மண்ணால் உருவாக்கப்பட்ட மண்பாண்டங்கள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன கருவிகள், கற்களாலான அணிகலன்கள் மட்டுமன்றி விலங்குகளின் கொம்புகளும் எலும்புகளால் ஆன பொருட்கள் என பல்வேறு தடயங்கள் கிடைத்திருக்கின்றன.

நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் 5000 ஆண்டுகள் பழமையான மரத்தாலான கலங்கள் மட்டுமன்றி மனிதர்கள் பயன்படுத்திய துணி வகைகளும் கிடைத்திருக்கின்றன. பானைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த ரொட்டி துண்டின் படிமங்கள், ஆப்பிள் பழங்கள், சமைத்த அல்லது சுட்ட பயிர்கள் சமைத்த கஞ்சி போன்றவை பதப்படுத்தப்பட்ட நிலையில் பானைகளில் கண்டெடுக்கப்பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகள் இப்பகுதியில் வாழ்ந்த மக்களின் குடியிருப்பு, வாழ்வியல் தன்மை ஆகியவற்றை ஆச்சரியப்படத்தக்க வகையில் நமக்கு விளக்குகின்றன.

அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களான கோடரி, சமைக்கப் பயன்படுத்தும் பானைகள், ஊசிகள், மீன்களைப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட இரும்பு கொக்கிகள் போன்றவையும் கிடைத்திருக்கின்றன. இவை இக்காலத்திலும் நமது வாழ்வியல் தேவைகளுக்கு அடிப்படையாக இருப்பவை தான். இதனைக் காணும்போது அடிப்படையில் மனித வாழ்வு என்பது பெரிய மாற்றத்தை இந்த ஐந்தாயிரம் ஆண்டுகள் கால வாக்கில் அடையவில்லை என்பதைக் காண்கின்றோம்.

நமக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் தான் இன்று நமக்குக் கடந்த காலத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன. 

உடைந்த வகையிலும் முழுமையான வகையிலும் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மண்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன. இவை குறிப்பிடத்தக்க  வடிவத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்ட வகையில் உள்ளன. இப்பகுதியில் பல்வேறு பண்பாட்டுக் குழுவினர் வாழ்ந்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதைக் காட்டும் வகையிலும் இத்தகைய மண்பாண்டங்களின் அமைப்பில் வேறுபாடுகள் இருப்பதையும் காண முடிகின்றது.  பொ.ஆ.மு 3800லிருந்து பொ.ஆ.மு. 1000 வரையிலான (அதாவது இன்றைக்கு ஏறக்குறை 6000லிருந்து 3000 ஆண்டுகள் என) கரிமப் படிம ஆய்வுகள் காட்டுகின்றன.

கற்காலத்தில் அமைக்கப்பட்ட மிக எளிய சமையல் அறை ஒன்றில் வைக்கப்பட்ட நீர் அருந்துவதற்கான கோப்பைகள், பொருட்களை வைப்பதற்கான பாத்திரங்கள், பல்வேறு வகையான மண்பாண்டங்கள், உணவு சாப்பிடுவதற்கான மண்பாண்டங்கள், உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான பாத்திரங்கள் என்பவை உடைந்த நிலையிலும் முழுமையான நிலையிலும் என்ற வகையில் இங்குக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.



இங்குக் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்கள்  இந்த மாநிலத்தின் ஆய்வுக்கூடத்தில்  ஆய்வுக்காகப் பாதுகாக்கப்பட்டாலும் இப்பகுதியில் அமைந்திருக்கின்ற சிறிய அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடைபெற்ற ஏராளமான தொல்லியல் கண்டுபிடிப்புகளில் முழுமையான, அல்லது உடைந்த மண் பாண்டங்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி நாம் இப்பொழுது ஊடகங்களின் வழி கேள்விப் படுகிறோம் அல்லவா.. ? அதேபோல ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் மத்திய ஆசியா போன்ற நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகளில் மண்பாண்டங்கள் ஏராளமானவை கிடைத்துள்ளன என்பது நமக்கு ஆச்சரியமே. அவை அனைத்தும் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன; பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன. எனது ஏராளமான அருங்காட்சியங்களுக்கான பயணங்களின்போது நான் இத்தகைய மட்பாண்டங்கள் பலவற்றைப் பார்த்ததுண்டு. அந்த வகையில் இங்கு உண்டெரூல்டிங்கன் பகுதியில் உள்ள சிறிய அருங்காட்சியகத்திலும் நான் நேரில் கண்ட மண்பாண்டங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.



"உண்டெரூல்டிங்கன்(ஜெர்மனி) கற்கால மனிதர்கள் குடியிருப்பு - 4"
                                      
உணவுதான் உயிர்களுக்கு ஆதாரம். உணவைத் தேடித் தான் உயிரினங்கள் அனைத்துமே பயணிக்கின்றன. அது தாவரங்களாகட்டும்.. விலங்குகளாகட்டும் மனிதர்களாகட்டும்.. எல்லோருமே ஒவ்வொரு நாளும் உணவை மையமாக வைத்துத்தான் வாழ்க்கைப் பயணத்தைச் செலுத்துகின்றோம். 


யாராவது நண்பர்களைப் பார்த்தால் சாப்பிட்டீர்களா..? அல்லது அருந்தத் தண்ணீர் வேண்டுமா..? எனக் கேட்பது உலக மனிதர்கள் அனைவருக்குமே இயல்புதான்.

உணவைச் சார்ந்தே பல்வேறு வணிக முயற்சிகளும் உலகம் முழுவதும் இன்று பரந்து விரிந்து கிடக்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் உணவுப் பொருட்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்போது மட்டுமல்ல.. பண்டைய காலம் தொட்டே கடல் வணிகத்தில் உணவுப்பொருட்களை ஏதாவது ஒரு வகையில் பதப்படுத்திப் பத்திரப்படுத்தி அனுப்பி வைப்பதும் ஒரு கலையாகவே இருந்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மண்பாண்டங்கள் எகிப்தின் செங்கடலோர அகழாய்வுகளில் கிடைப்பதும், ரோமானியப் பேரரசில் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்ட எம்ஃபோரா ஜாடிகள் தமிழகத்தின் அகழாய்வுப் பகுதிகளில் கிடைப்பதும் நாம் அறிந்தது தான்.

வேட்டையாடியும், மண்ணில் புதைந்து கிடக்கும் கிழங்குகளைத் தோண்டி எடுத்தும்,  பழங்களையும் இலைகளையும் பறித்துச் சாப்பிட்டு வாழ்ந்த தொல்  மனிதர்கள் படிப்படியாக ஓரிடத்தில் தங்கி வாழ முயன்றபோது உணவுப்பொருட்களைப் பதப்படுத்திப் பாதுகாத்து வைக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

இப்போது பலரது வீடுகளிலும் இருப்பது போல அன்று குளிர்சாதனப்பெட்டி வீடுகளில் இல்லை அல்லவா...? ஆனாலும் தொல் மனிதர்கள் தொடக்கக் காலத்தில் உணவுகளை ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் சேமிக்க ஏராளமான முயற்சிகளைச் செய்திருக்கின்றார்கள். அவர்களது அன்றைய முயற்சிகளை ஒப்பிடும்போது இன்று நாம் செய்கின்ற முயற்சிகள் குறைவு என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கிழங்குகளைச் சாப்பிட்டது போக மீதத்தைப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.... அன்று பிடித்த மீன்களைச் சாப்பிட்டது போக மீதத்தை மிச்சப்படுத்தி வைக்கவேண்டும்... அதேபோல காய்கறிகளையும் பழங்களையும் நாளைக்குச் சாப்பிட மிச்சப் படுத்தி வைக்க வேண்டும்...

அதுமட்டுமா குளிர்காலம் வந்து விட்டால் உணவைத் தேடுவது சிரமம்... அந்தச் சூழலில் அன்றாடத் தேவைக்கு வேண்டிய உணவைக் கோடைக் காலத்திலேயே சேமித்து வைக்கவேண்டும்... இப்படிப் பல சவால்கள் நமது தொல் மனிதர்கள் சந்தித்தார்கள்.

இதனடிப்படையில் பிறந்ததுதான் பானைகள் உருவாக்கும் தொழில் நுட்பமும் உணவைப் பதப்படுத்தும் தொழில் நுட்பமும், மண்பாண்டங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் நமது சூழலில் இந்திய நிலப்பகுதியில் மட்டும்தானா என்ற கேள்விக்கு  'இல்லை' என்பதே நமக்கு விடையாகக் கிடைக்கிறது. ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் அதேபோல ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் மத்தியக் கிழக்காசிய நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட ஏராளமான தொல்லியல் ஆய்வுகளில் மிக நீண்ட காலமாக மனித குல பயன்பாட்டில் இருந்த மண்பானைகள் பற்றிய செய்திகள் அதிகம் கிடைக்கின்றன. செய்திகள் மட்டுமல்ல.. ஏராளமான மண்பாண்டங்கள் இன்று உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பல்கலைக்கழகக் கண்காட்சி பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கு ஜெர்மனியின் உண்டரூல்டிங்கன் பகுதியில் 1920ம் ஆண்டில் 'Wasserburg Buchau' பகுதியில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வில் மண்பாண்டங்களை உருவாக்கும் அடுப்பும், மண்பாண்டங்களை பத்திரப்படுத்தி வைக்கும் ஒரு வீடும் அவற்றிற்குள் பதப்படுத்திய உணவுப் பொருட்கள்  வைக்கப்பட்ட பல்வேறு மண்பாண்டங்கள் உள்ள வகையில் எனக் கிடைத்தன.

இங்குப் புகைப்படத்தில் காட்டப்படுகின்ற அடுப்பு மற்றும் அருகில் உள்ள வீடு அகழாய்வில் கிடைத்த தொல்லியல் எச்சத்தை அடிப்படையாகக் கொண்டு மாதிரியாக உருவாக்கப்பட்டவை. இத்தகைய வீடுகள் மனிதர்கள் வாழ்ந்த வீடுகள் இல்லை என்றும் இவை மண்பாண்டங்களில் பொருட்களைச் சேகரித்து பதப்படுத்தி வைக்கப்பட்ட தனி வீடுகள் என்றும் இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தின.

உணவு தோல் பைகளிலும், மரத்தாலான பெரிய வட்டவடிவிலான குடுவைகளில், மண்பாண்டங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த செய்திகள் இந்த ஆய்வின்போது வெளிவந்தன. உணவு பதப்படுத்தல் என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன்களும் பயிர்களும் காய்கறிகளும் பண்டைய மக்களால் இங்கு பதப்படுத்தப்பட்ட செய்தி, உணவைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் முறை, மற்றும் மண்பாண்டங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் ஜெர்மனியின் இப்பகுதியில் இன்றைக்கு நான்காயிரம் ஆண்டு வாக்கில் வழக்கில் இருந்தது என்னும் செய்தி வரலாற்று ஆய்வில் ஈடுபடும் நாம் எல்லோருக்குமே ஆர்வம் தரும் ஒரு செய்தி தானே. 

இவ்வளவு குளிர் நிறைந்த ஜெர்மனி போன்ற நிலப்பகுதிகளில் இன்றைக்கு நான்காயிரம் அல்லது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே களிமண் கொண்டு மண்பாண்டங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருந்தது என்பதை அறியும்போது மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நல்ல தட்பவெப்பச் சூழலைக் கொண்ட தமிழ்நாடு போன்ற நிலப்பகுதிகளில் அதே காலகட்டத்தில் அல்லது அதற்கு முன்னரும் கூட இத்தகைய தொழில் நுட்பங்கள் இருந்திருக்க வேண்டிய சாத்தியம் உள்ளது என்ற கருத்தையும் நாம் நோக்க வேண்டியிருக்கின்றது. இதற்குச் சான்றுகளைத் தேட வேண்டிய அவசியம் நமக்கு இருப்பதால் மிக ஆழமான வகையில் அகழாய்வு குழிகளைத் தோண்டி ஆய்வுகளைச் செய்வது இத்தகைய தேடுதலுக்கு நல்ல விடைகளை அளிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.


---

Friday, July 23, 2021

பண்பாட்டுப் புரிதலில் ஒரு மாற்றுக் கண்ணோட்டம்

-- முனைவர் ஆனந்த் அமலதாஸ்


“பண்பாடு” என்பது என்ன என்பதைக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம். பண்பாடு என்பது ஏதோ ஒருவகையான  கட்டிடக்கலை என்று பல கோபுரங்களை மட்டும் எண்ணாமல் அல்லது சித்திரம், சிலைகள், ஆடல் பாடல் கலைகள் என்று குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல் விரிந்த அளவில் கணிக்கும் பொழுது அது நமது வாழ்வை அமைக்கும் அடிப்படை கோட்பாட்டைக் குறிக்கும் எனலாம்.

பண்பாடு மாறிக் கொண்டேயிருக்கும். நிலையான பண்பாட்டு அடையாளம் என்று ஏதும் இல்லை. அதன் சில அடையாளங்களைக் குறியிட்டு அப்படியே சிலையாக்கி அருங்காட்சியகத்தில்  வைத்து விட்டால் அது செத்தது எனலாம். எப்படி ஒரு மொழி பேசப்படவில்லை யென்றால் அது செத்த மொழி என்போமோ அதுபோலத்தான் பண்பாடும்.

இப்படி பண்பாட்டின் சிறப்பை அடையாளப் படுத்தி ஆராய்ச்சியாளர்கள் அட்டவணை போட்டுக் காட்டுவார்கள். அதில் ஒரு தெளிவு இருக்கும். இது உண்மைதான். ஆனால் அப்படி அவைகளை ஆவணக்கூடங்களில் வைத்து விட்டால் இது பெரிதா, மற்றவர்களுடையது பெரிதா என்ற சர்ச்சைக்கு இட்டுச் சென்று பண்பாட்டின் மோதலில் முடியும். அதைத்தான் சாமுவேல் ஹண்டிங்டன் தனது “பண்பாட்டின் மோதல்” (Clash of Civilisation) என்ற நூலில் குறிக்கின்றார்.

ஆனால் பண்பாடு என்பதை உண்மையில் பிரித்துக் காட்ட முடியும். அதற்குத் தனித்தன்மை உண்டு. அதனால் மற்றவர்களோடு உறவு கொள்ளும் இணைப்புப் பாலம் உடைந்து போகவில்லை. ஏனெனில் அந்தத் தொடர்பு உறவினால் தான் வாழ்கிறது, வளர்கிறது. இது தொடர்நிலை. எடுத்துக்காட்டாக, தமிழ்ப் பண்பாட்டுக்கு என்ன அடையாளம் காட்டலாம்? இளங்கோ அடிகளா? கம்பனா?  பாரதியா? பாரதிதாசனா? இவர்களில் யார் தமிழ்ப் பண்பாட்டின் பிரதிநிதி? இவர்கள் ஒவ்வொருவரின் பின்னணி வேறு, சிந்தனை முறை வேறு. ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். இருப்பினும் இவர்கள் தமிழ்ப் பண்பாட்டின் தொடர் உறவின் பங்காளிகள். 

இவர்கள் ஒரு வலையில் உள்ள முடிச்சுகள் மாதிரி. ஒவ்வொரு முடிச்சும் முக்கியம். இந்த முடிச்சுகளை எல்லாம் வெட்டிவிட்டால் வலையே பாழடைந்து விடும். ஆனால் ஒவ்வொரு முடிச்சும் தனியாக இருந்தாலும் அதற்கு மதிப்பு இல்லை. அது போலத் தான் பண்பாட்டின் பங்காளிகளும்.

பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நிலப்பகுதியில் தான் வளரும். குறிஞ்சி மலரோ, மல்லிகை மொட்டோ தானாக மட்டும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், நிலப்பரப்பில்தான் தோன்றும். பண்பாடும் அப்படித்தான். வரலாறு படைப்பவனும் வரலாறு எழுதுபவனும் தனிப்பட்ட மனிதர்கள்தான். ஒட்டுமொத்தமாக எதுவும் எழாது. ஒரு செயற்குழு அமைத்து வரலாறு எழுதுவதில்லை. நமது திணைக்கோட்பாட்டை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தோன்றியது என்பது அதன் தனித்துவம். அதன் பெருமை.

முரண்பாடான கண்ணோட்டம் கொண்டவர்களானாலும் நாம் எல்லோரும் கூடி வாழ முடியும். ஒரே இனத்தவர் என்பதால் மட்டும் அல்ல, ஒரே சமயத்தவர் என்பதால் அல்ல, மனிதப் பண்புள்ளவர் என்பதால். நம்மிடம் ஏற்றத்தாழ்வு உண்டு. கணக்கியல்படி (Mathematically) நாம் சமமானவர்கள் என்றல்ல. சமத்துவம் என்பது திறமைகளின் அடிப்படையில் அல்ல. நாம் தேடும் சமத்துவம் மனிதனின் தனித்துவ மகத்துவத்தின் மதிப்பின் அடிப்படையில் உள்ளது. மனிதர்களாகிய நாம் சமமானவர்கள்  (As persons we are equal). சமுதாய அளவில் ஏற்றத்  தாழ்வு இருக்கலாம். இது நிலையானது அல்ல.  அது மாற்றத்திற்கு உட்பட்டது. ஆனால் தனிமனிதனின் மதிப்பு, அவன் தனித்துவம் நிலையானது. “சொர்க்க வாசலுக்குமுன் தோட்டியும் சரி தொண்டைமானும் சரி” என்பது தே நோபிலி சுட்டிக்காட்டிய ஒரு பழமொழி. இது சாதி-சமயப் பூசல்களிடையே அவர் கொடுத்த பதில். சமூக வேறுபாட்டை, ஏற்றத்தாழ்வை இயற்கையின் நியதி, கர்மம், தெய்வ பராமரிப்பு என்று பலவிதமாய் விளக்கம் கொடுத்தாலும் அடிப்படை உண்மை நிலை ஒன்றுதான்.

முதலில் நமது அடிப்படைத் தேவைகள் நிறைவுபெற வேண்டும். அவை யாவை?  உணவு – உடை – உறையும் வீடு – என்று சொல்வதுண்டு. ஆனால் இவை இருப்பதால் மட்டும் நிறைவான வாழ்வு வந்துவிடாது. மகிழ்ச்சி நிறைந்து வழியாது. ஏனெனில் மனிதன் மனிதனாய் வாழ மனிதனுக்கு இதற்கும் அடிப்படையான தேவைகள் உண்டு. மற்றவர் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்; என்னை மதிக்க வேண்டும்; உறவு கொள்ள இடம் கொடுக்க வேண்டும். அது இல்லாமல் மனிதனாய் வாழ முடியாது. நமது முரண்பாடுகள், எதிர்ப்பு போராட்டங்கள் எல்லாம் இங்குதான் தொடங்குகின்றன. மேல்நிலைக்கு, உயர்படிக்கு ஏற வேண்டும். சமூக அளவில், உணர்ச்சி அளவில், சிந்தனை அளவில், ஆன்மீக அளவில் அது கிடைக்கும் வரை நாம் ஆதங்கத்தோடு அலைந்து கொண்டுதான் இருப்போம்.

ஒரு சமூகத்தில் கூடிவாழும் பொழுது ஓர் அமைப்பு வேண்டும். பல் வேறு பணிகள் செய்ய அதற்கு ஏற்ற ஆட்கள் வேண்டும். உலக வங்கி தொடங்கி, கிராமப் பஞ்சாயத்து வரை  ஒருவர் நிர்வாகப் பொறுப்பில் இருக்க வேண்டும். அவருக்கடியில் பல துறைகளில் மற்றவர் பணி செய்ய வேண்டும். இத்தகைய அமைப்பில் மேலினம், கீழினம் என்பதற்கு இடமில்லை. பல்வேறு தொழிலோ பணியோ செய்யலாம், செய்யவும் வேண்டும். அதனால் தனிப்பட்டவரின் மதிப்பும் தனிமனிதனின் தனித்தன்மையும் இழந்துபோகாது. 

பண்பாடு என்பது தனிமனிதனின் பெருமையை, சிறப்பை நிலைநாட்ட உதவுவதற்கு இல்லை. அப்படி நடக்கின்றது என்றால் அது ஓர் அபத்தம் (Perversion).  தனக்காக போஸ்டர் ஒட்டி, தனது உருவத்தைப் பெரிதாகக் கருதுவதில்தான் பாசிசம் தொடங்குகிறது. 

பண்பாடு ஓர் ஊற்று போன்ற பொதுச்சொத்து. அது இதற்கு மாறாக பணி செய்கிறது. இத்தகைய குறுகிய வேலியைத் தாண்டிக் கட்டமைப்புகளை உடைத்தெறிவது, உலகோடு ஒத்து வாழும் நிலைக்கு, தனது சுயநலக் கோட்பாட்டுக்கு வெளியே வாழ இடம் தேடுகிறது. தனிப்பட்டவர் தளத்திலிருந்து பொதுத் தளத்தைத்  தேடுவது.

ஊற்றுச்சுனை போன்ற பொதுச்சொத்துக்கு விளம்பரம் தேவையில்லை. பிரச்சாரம் செய்து ஆட்கள் சேகரிக்க வேண்டியதில்லை. கோஷம் எழுப்பத் தேவையில்லை.  மதிப்பீடுகள் வேறு, பொதுச் சொத்து (Resources) வேறு. மதிப்பீடுகள் ஆட்களைச் சேகரிக்கும். போதகர்கள் வேண்டும். சமய மதிப்பீடுகளை நிலை நாட்டுவது போல் ஆகிவிடும்.

இந்தியப் பண்பாடு என்பது பல மரபுகளால் உருவாக்கப்பட்ட சொத்து.  பன்மைத்தனம் பெற்றது. ஏதோ ஒரு சமயம், ஓர் இனம், ஒரு சிந்தனைக் கோட்பாட்டால் உருவானது அல்ல. பலரும் இதன் பங்காளிகள், பங்கு அளித்தவர்கள் இடையே வேறுபாடுகள் உண்டு. அதனால் அவர்கள் எதிரிகள் அல்ல. அவர்கள் பண்பாட்டின் ஊற்றுக்கள்.

பல நதிகள் பாய்ந்தோடி கடலில் சங்கமம் ஆவது போல பல மரபுகள், கோட்பாடுகள் சேர்ந்து உருவானது இந்தியப் பண்பாடு. ஒவ்வொன்றும் பண்பாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்திருக்கிறது, செழிப்படைய வழி வகுத்தது, புதிய கண்ணோட்டத்தினை இன்றும் தூண்டுகின்றது.

இப்பொழுது ஐரோப்பாவிலும் பெரிய குழப்பம். அவர்கள் உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் உடைந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு. பிரான்ஸ் நாட்டு சிந்தனையாளர் பிரான்சுவா ஜீலியன் (2017) சொல்வது இது. தொடக்கத்திலேயே ஐரோப்பிய நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி எது, என்பது தெளிவில்லை. ஒரு சிலர் கருத்து: கிறிஸ்துவ நம்பிக்கையும் அதன்வழி எழுந்த பண்பாட்டுக் கோட்பாடு என்றனர். மற்றவர் அதற்கு மாறாக, இல்லை, சமயம் தாண்டிய பகுத்தறிவுப் பண்பாடு (Enlightenment) என்றனர். அவர்களுக்குள் ஒன்றித்த தெளிவு இல்லை. அதனால் முகப்புரை (Preamble) இல்லாமலே ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதன் விளைவு இப்பொழுது தெரிகிறது. சமய நம்பிக்கையும், பகுத்தறிவும் முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் அவை இரண்டும் ஒன்றிணைந்து வாழ முடியும். 

நமது நாட்டில், நம் மத்தியில்; நடப்பதும் அப்படித்தான். நமது பண்பாட்டில் பல்வேறு பங்காளிகள்; அங்கத்தினர்கள் உண்டு. இப்பண்பாட்டின் சொத்து எல்லோருக்கும் சொந்தம். வைதிக மரபு பெரியது. அதற்கென தனிவரலாறு உண்டு. ஆனால் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்ட மற்றவர்களை ஒழிக்கவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் கடவுள் எதிர்ப்புவாதிகளும் கூடிவாழ முடியும், கூடிவாழ வேண்டும். அவர்களை ஒன்றிணைப்பது சமயம் சாராத அறநெறியின் அடிப்படையில் அமையவேண்டும்.

இயற்கையின் சொத்துக்கள், சுற்றம் சூழல் பாதிப்பு, அழிவு பற்றி பலர் கவலை கொண்டுள்ளனர். Bio-diversity அளவு குறைந்து கொண்டே போவது பற்றி பலர் ஆராய்ந்து அதைத்தடுக்க எடுத்து வரும் முயற்சிகளும் பாராட்டுக்குரியது.  அதைப்போல ஏன் கலாச்சார அழிவுக்கு, பண்பாட்டுச் சிதைவுக்கு போதிய எதிர்ப்பு, பாதுகாக்கும் போதிய முயற்சிகள் இன்னும் எழவில்லை என்பது கேள்விக்குறியாய் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக இந்திய இஸ்லாமிய வரலாற்றைக் கவனிக்கலாம். சமய நல்லிணக்கத்திற்கு அவர்கள் பங்களிப்பு அதிகம். ஆல் பிரூனி முதன் முதலாக பாதஞ்சலி யோகம் என்ற சமஸ்கிருத நூலை அரபியில் மொழிபெயர்த்து குர்ஆனோடு நல்லிணக்கம் செய்தார். பிறகு அக்பர் பல்வேறு சமய பிரதிநிதிகளை அழைத்து உரையாடல் பண்பாட்டை உருவாக்கினார். அவருக்குப்பின் தாரா சிக்கோ 50 உபநிடதங்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அதன் வழியாக ஐரோப்பியர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள வழி வகுத்தார். இத்தகைய முயற்சிகள் இஸ்லாமிய மரபின் பங்களிப்பு.

இவ்வாறு இந்திய யூதர்களும்,; கிறித்தவர்களும், பிறகு இங்குக் குடியேறிய பாரசீகர்களும், பல்வேறு வகையில் இந்தியப் பண்பாட்டின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றார்கள். இவர்கள் அந்நியர்கள் என்று சொல்லி இந்தியப் பண்பாட்டின் சொத்து எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம் என ஒரு வர்க்கம் மட்டும் ஆதிக்கம் கொண்டாடும் மனநிலையும் செயல்முறையும் நம்மை ஒன்றிணைத்துக் கூடிவாழ வழிவகுக்காது. அழிவுக்குத்தான் இட்டுச்செல்லும்.



---

Thursday, July 22, 2021

எழுத்துப் பிழையற!



- சொ.வினைதீர்த்தான்


பாடல்:-
          அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
          எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
          விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
          கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.
        (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்,  பாடல் - 2

பொருள்:-
தன்னால் அழிந்தவர்களுக்குப் பிறப்பின்மையை வழங்கும்  முருகனின் பெருமைகளைக் கூறும் பாடல்களை எழுத்துப் பிழை இல்லாமல் இன்று கற்பதை விடுத்துக் கொடியவனாகிய எமன் வீசுகின்ற பாசக் கயிறு நம் கழுத்தைச் சுருக்குப்  போட்டு இழுக்கின்ற அன்று கற்பதால் என்ன பயன்? 
நான் பக்திப் பாடல்களை இன்றைய வாழ்வியல் நெறிகளுடன் பொருத்திப் (Correlate) பார்த்து எண்ணிப்பார்ப்பதுண்டு.
பாடலில் எழுத்துப் பிழையின்றிக் கற்க வேண்டும் அதுவும் இன்றே கற்க வேண்டும் என்று அருணகிரிநாதர் வலியுறுத்துகிறார்.   ஏன் எழுத்துப் பிழையின்றிக் கற்க வேண்டும்? ஒலிப் பிழை, சொற்பிழை, எழுத்துப் பிழை இம்மூன்றும் பொருட் பிழைக்கு வழிவகுக்கும் பொருள் புரியாமல் படித்தால் தெளிவு பிறக்குமா? கற்றதானால் ஆய பயன் விளையுமா? சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவாரே உய்தி அடைவார்!
அடுத்துக்  "கண் கெட்ட பிறகு சூரிய வணக்கமா?" "சாகப் போறபோது சங்கரா சங்கரா என்றால் என்ன பயன்?" "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்றெல்லாம் கூறுவார்கள். எதனையும் உரிய காலத்தில் செயலாற்றினாலே தகுந்த பயன் விளையும்.
"ஒன்றே செய்; நன்றே செய்; இன்றே செய் என்கிறது தமிழ். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். "பருவத்தே பயிர் செய்" என்பதும் ஆன்றோர் வாக்கு.

          அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது
          பொன்றுங்கால் பொன்றாத் துணை
        (குறள் எண்:36)
பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறத்தினை உடனடியாகச் செய்யவேண்டும் என்கிறது வள்ளுவம். நாளை, நாளையென்றால் நாளை நம்முடையதா அல்லது நமனுடையதா என்று தெரியாத வாழ்வு இது.  எனவே கற்கவேண்டியதை உரிய காலத்தில் கற்க வேண்டும். 
முருகன் ஞானம், செல்வம், அறிவு, மகிழ்ச்சி, மன நிம்மதி, இக பர சௌபாக்கியம் ஆகியவற்றின் குறியீடு என்பார்கள். எனவே
எழுத்துப் பிழையின்றிக் கற்பதும் உரிய காலத்தில் கற்பதும் அளவில்லா ஞானத்தையும் செல்வத்தையும் அனைத்தையும் அடைகிற வழி!






எங்கள் எழுத்தறிவிப்போன்

-- சபாரத்தினம்  


என் வீட்டுக்கு 
செய்தித்தாள் போடும் சிறுவனுக்கு
எத்தனை அக்கறை!!!
வீடு முழுதும் எழுத்தறிவு
நிறைந்திருக்க வேண்டுமாம்.
வீட்டின் முன் பகுதியில்
முதன்மைத் தாளும்
நடை பாதையிலும்
தோட்டத்திலும்
இணைப்புத் தாள்களும்
விரிந்து கிடக்கின்றன.
அவனுக்குத் தான் எத்தனை அக்கறை!!!


-- சபாரத்தினம் 





Sunday, July 18, 2021

தலையங்கம்: நூல்களை அறியத் தடையேது? அறிவோம் நூல்களை!

    — முனைவர் க.சுபாஷிணி 

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மற்றுமோர் சமூக நலன் சார்ந்த திட்டம் 'சுவலி' ஒலிப்புத்தக மென்பொருள். இதன் வெளியீடு ஜூலை 18ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. சுவடி நூல்களை ஒலிவடிவத்தில் கேட்டுப் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் இந்தத் திட்டத்தில் கைப்பேசி வழியாக ஒலிவடிவத்தில் இணைக்கப்பட்டு வருகின்றன. 

சுவலி எவ்வகையில் ஒருவருக்குப் பயன்படும்?

அ. நம் சூழலில் சிலருக்குத் தமிழ் நூல்களை வாசிக்க ஆர்வம் இருக்கும்; ஆனால் மொழித்திறன் இல்லாமையால் வாசிக்கத் தெரியாது... இத்தகையோருக்கு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைக் கேட்பதன் வழி நல்ல தரமான நூல்களை அறிமுகப் படுத்துவது

ஆ. பார்வைத் திறனற்றோருக்கு ஏராளமான நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களை ஒலிப்புத்தகமாக அறிமுகப்படுத்துவது

இ. நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் கைவசம் இல்லாத போதும் அவற்றை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு ஒலிப்புத்தகமாக வழங்குவது

ஈ. சிலருக்குத் தூரப்பயணங்களில் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது பாடல்களைக் கேட்பதற்குப் பதிலாக நூல்களை வாசித்துக் கொண்டே செல்லலாம் என்று தோன்றும். ஆனால் ஒலிப்புத்தகமாக இருக்கும் போது அது சாத்தியப்படும்

கைப்பேசி இல்லாதவர்கள் குறைவு என்ற நிலை ஏற்பட்டுவிட்ட இக்காலச் சூழலில் இப்படிப் பல வகையில் உங்களுக்கு சுவலி உதவ முடியும்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் சுவலி திட்டக் குழுவினர் பொது மக்கள் நலன் கருதி தங்கள் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட்டு ஒலிப்புத்தகங்களை உருவாக்கும் பணியில் இணைந்துள்ளனர். மலர்விழி பாஸ்கரன், ப்ரின்ஸ் கென்னத், செல்வமுரளி ஆகிய மூவரது துணையுடன் ஆர்வமிக்க தன்னார்வலர்களுடன் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

    உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஆர்வமுள்ளோர் இப்பணியில் நீங்களும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். ஆரவாரமின்றி அமைதியாக நாம் செய்யக்கூடிய ஒரு சமூகப் பணி இது!

தமிழகத் தொல்லியல் துறையினால் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத் தொடக்கம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டு நிகழ்ந்து வருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகளின் போது  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உறைகிணறுகள், முதுமக்கள் தாழிகள் திறந்த நிலையிலும் மூடிகளுடனும் என்ற வகையில் கிடைத்திருக்கின்றன. இவற்றுக்குள் காணப்பட்ட எலும்புக்கூடுகள், பற்கள் மற்றும் பல்வேறு சான்றுகளை ஆய்வுக் குழு ஆய்வு செய்து வருகின்றது என்ற செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கின்றோம். ஆதிச்சநல்லூர் ஈமக்கிரியைப் பகுதி என்று பரவலாகக் கூறப்பட்ட நிலையில் அதன் அருகேயே சிவகளையில் மக்கள் வாழ்விடப் பகுதி தொடர்பான பல்வேறு ஆதாரங்களும் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இது தமிழகத் தொல்லியல் அகழாய்வு கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்துக்கனவாக அமைகிறது. 

நீண்ட காலமாக அகழாய்வுப் பணிகள் செய்யப்படாமல் இருந்த கொற்கையில் மீண்டும் விரிவான கள ஆய்வுப் பணிகள் தொடங்கியிருப்பதும் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது.

கீழடியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஆய்வுப்பணியில் நம் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அகரம் பகுதியில் அழகிய கொண்டையுடன் கூடிய ஒரு பெண் உருவம் போன்ற தோற்றம் கொண்ட ஒரு மண்பொம்மை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான காலகட்டத்தில் சிகை அலங்காரத்திற்கு முக்கியத்துவம் அளித்து உயர் பண்பாட்டுடன் தமிழ்ச் சமூகம் வாழ்ந்தது என்பதைச் சான்று பகரும்  ஆதாரமாகவும் இது அமைகிறது. இதுமட்டுமல்ல; தொடர்ந்து உறைகிணறுகள், தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள் என ஏராளமான அரும்பொருட்கள் கிடைத்த வண்ணமுள்ளன.

கீழடி மட்டுமன்றி ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை எனப் பல பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகள் தமிழ் வரலாற்றில் முக்கியத்துவம் பெறக்கூடிய பல்வேறு சான்றுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இத்தகைய தொல் பொருட்களின் மரபியல் மரபணு சோதனைகளைச் செய்ய ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மரபணு சோதனை ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கின்றது (https://www.hindutamil.in/news/tamilnadu/688231-sivakalai-excavation-1.html). கரிம ஆய்வுகளை உடனுக்குடன் செய்து தொல்பொருட்களின் காலச் சூழலை நிர்ணயப்படுத்தும் செயல்பாடுகள் இதனால் துரிதப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற அகழாய்வுகளோடு மட்டும் நின்று விடாமல் உலகளாவிய வகையில் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளையும் அவற்றின் போது கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களையும் தமிழக ஆய்வாளர்கள் அயலக ஆய்வறிஞர்களுடனும் இணைந்த வகையில் ஆய்வு செய்யவும், இணைந்த வகையிலான  கூட்டு முயற்சிகளையும் கருத்தரங்கங்களையும்  ஏற்பாடு செய்யவும் தமிழகத் தொல்லியல் துறை  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மரபு அறக்கட்டளை கேட்டுக் கொள்கின்றது.


தமிழால் இணைவோம்!


அன்புடன்

முனைவர்.க.சுபாஷிணி


Thursday, July 15, 2021

அகரம் அழகி



  —  தேமொழி 





   
    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, பிப்ரவரி 2021 முதல் நடக்கும் 7-ம் கட்ட அகழாய்வில், அகரத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் முகம் கொண்ட பொம்மை ஜூலை 15, 2021 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் இரா.சிவானந்தம் மேற்பார்வையில்  அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில், 3 ஆவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் இந்த கழுத்தளவு சுடுமண் பொம்மை கிடைத்துள்ளது.  
    பண்டைக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியதாகக்  கண்டறியப்பட்டுள்ள, அழகிய வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள  சுடுமண்ணாலான இந்தப் பெண் பொம்மையின் காதிலும் நெற்றியிலும் அணிகலன்களுடன், முகத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமும் தீட்டப்பட்டுள்ளது.  இந்தப் பெண்மணியின் தலைமுடி, தலையின் இடப்புறமாக இழுத்து வாரி முடியப்பட்டு பெரிய அளவில் கொண்டை போடப்பட்டுள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சிற்பியின் பார்வையில் மண்பொம்மை குறித்த விளக்கம்:
    பெருந்தச்சர் (ஸ்தபதி) கரு.ஜெயராமன் அவர்களின் கருத்து  — ஆண், பெண் சிற்பங்களைச் செதுக்கும் பொழுது அவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தலை அலங்காரம், புருவம், கண், நெற்றி, உதடு, காதணி, ஆடைகள், கைகளில் வைத்திருக்கும் பொருட்கள், அணிகலன்கள், பெண் எனும் பொழுது மார்பகங்கள், இடை என வேறுபடுத்திக் காட்டுவார்கள். இந்த கழுத்தளவு சிலையினை ஆணா பெண்ணா என்று பார்ப்பதற்கு காதணி, நெற்றி, கண், மூக்கு சிகை அலங்காரத்தை வைத்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. அந்தவகையில் சிகை அலங்காரம் (கொண்டையை) வைத்து சில கருத்துக்களைப் பகிர வேண்டி உள்ளது. பொதுவாக ஆண்களுக்கான கொண்டையானது மேல் முகமாக தூக்கி இருக்குமாறு அமைக்கப்படும். பெண்களுக்கான கொண்டை எனும் பொழுது தலை மட்டத்திலும் அல்லது அதற்குக் கீழாகவும் இருக்குமாறு காட்டப்படும்.  அதற்குக் காரணம் பொதுவாக பெண்களுக்கான கூந்தலானது ஆண்களைவிட அதிக அளவு இருப்பது இயல்பு. அந்த வகையில் அதிக பாரம் கொண்ட முடியைத் தூக்கிக் கட்டும்பொழுது இயல்பாகவே சரிந்து இருக்கும். குறைவான கூந்தலைத் தூக்கிக் கட்டும்பொழுது தலைக்கு மேலே நிற்கும் எனும் காரணத்தால் சிற்பியானவர் பெண் கூந்தலைத் தலை மட்டம் அல்லது அதனை விடக் கீழ் நோக்கியோ இருக்குமாறு அமைப்பார். இதன் காரணத்தால் இந்த அகரம் அகழாய்வில் கிடைத்த சிற்பத்தைப் பெண் சிற்பமாக இருக்கலாம் எனச் சிற்பியின் பார்வையில் முடிவு செய்யலாம்.   மேலும் இச்சிற்பத்தின் கீழ்ப் பகுதியும் கிடைக்கும் பட்சத்தில் அதனை ஆய்வு செய்து ஆணா பெண்ணா என உறுதியிட்டுக் கூறலாம்.
    தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சர், மாண்புமிகு. திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் — “தமிழ்ப் பொண்ணு!” இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள். இந்த ‘ஹேர் ஸ்டைல்’ எல்லாம் அந்தக் காலத்திலேயே அத்துப்படி"   என்று பகிர்ந்து கொண்ட தகவலும் படமும் தந்த ஆர்வத்தில் கணினி மூலம் நான் உருவாக்கிய படங்களை இங்கு கொடுத்துள்ளேன்.  
    இந்தச் சுடுமண் பொம்மையின் காலம் குறித்து  அறிய, மேற்கொண்டு  இது ஆய்விற்கு உள்ளாக்கப்படும்.

நன்றி: பெருந்தச்சர் கரு.ஜெயராமன் அவர்களின் கருத்துரைப் பகிர்வு - முனைவர் ப.தேவி அறிவு செல்வம்

Wednesday, July 14, 2021

வீரக்குடி கரைமேல் முருக அய்யனார் கோயில் கல்வெட்டுக்கள்

-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்



ஏரிக்கரை ஓரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கரைமேல் முருக ஐயனார் திருக்கோயில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் வீரக்குடி என்னும் கிராமத்தில் அருள்மிகு கரைமேல் முருக அய்யனார் கோயில் என்ற பெயரில் உள்ளது.   ஐந்து நிலை இராஜகோபுரம் மற்றும் இருதள விமானத்துடனான கருவறையில் கல் சிலை உருவத்துடன் முருகன் நின்ற கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள் புரிகிறார். கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபம், முக மண்டபம் அதனை அடுத்து வாகனம், கொடிமரம், பலிபீடம் என அமைக்கப்பட்டிருக்கிறது.

கருவறையின் வெளிப்புறச் சுவற்றில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை போன்ற தெய்வங்கள் எழுப்பப்பட்டுள்ளன.  கோயில் வளாகத்தினுள் சோனை கருப்பசாமி, லாடசன்னாசி, பத்திரகாளி, பேச்சியம்மன், ராஜா மந்திரி, கிழவன் கிழவி (நடுக்கல்) என இவர்கள் பரிவாரத் தெய்வங்களாக தனித்தனிச் சன்னிதிகளில் வீற்றிருக்கிறார்கள். மேலும் பத்தடி உயரம் உள்ள சுதையால் ஆன யானை வாகனமும், குதிரை வாகனமும் அமைக்கப்பட்டுள்ளது.  கருவறைக்கு வலது புறத்தில் அரசமரத்தடி விநாயகர் வீற்றிருக்கிறார்.
devi.jpg

வாகன மண்டபத்தில் முருகனுக்கு உரித்தான மயில் வாகனத்துடன், நந்தி மற்றும் யானை வாகனமும் ஒரே மண்டபத்தில் காட்சியளிக்கிறது. கோயிலுக்கு வெளியே கருவறையை நோக்கி கல்லாலான மயில்வாகனம் ஒன்றும் காணப்படுகிறது. கோயிலின் இடது பக்கவாட்டில் அருள்மிகு அரியவன், தூண் உருவமாக காணப்படுகிறார். சிவராத்திரி, வைகாசி விசாகம் தைப்பூசம் , கார்த்திகை ,மாசி களரி எனத் திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயிலானது பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. 

கரைமேல் முருக ஐயனார் திருக்கோயில் கல்வெட்டுக்கள்:
1.1950களில் அம்மிக்கல் ஒன்று இக்கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட செய்தியுடன் அம்மி கல் ஒன்று உள்ளது.
2. ஏழு வரிகள் கொண்ட துண்டு கல்வெட்டு ஒன்று எங்களால் கண்டறியப்பட்டுப் படி எடுக்கப்பட்டது. 
devi1.jpg
கல்வெட்டு செய்தி:
            1. உ முறுக அய்ய துணை
            2. அருகபட்டி
            3. யிறுக்கும் பகவன்
            4. புசாறி மேபடி கோல்வ
            5. மூப்பன் மேபடி கோல்வ
            6. டுகறன் முருக அண்டி
            7. மூப்பன்

இந்தக் கல்வெட்டு செய்தியினை வாசித்துத் தெரிவித்தவர் திரு. இராஜகோபால் சுப்பையா, மூத்த தொல்லியல் அறிஞர். 


----