Monday, August 30, 2021

தமிழர்களின் வீரத்திற்கும் ஆட்சித் திறத்திற்கும் ஓர் அடையாளம் மாமன்னர் இராஜேந்திர சோழன்

 -- முனைவர் க. சுபாஷிணி

தமிழர்களின் வீரத்திற்கும் ஆட்சித் திறத்திற்கும் ஓர் அடையாளம் மாமன்னர் இராஜேந்திர சோழன்



காணொளி


சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம் நடத்திய மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாளான ஆடித்திருவாதிரையை அரசு விழாவாக்கிய தமிழக அரசுக்குப் பன்னாட்டுத் தமிழர்களின் பாராட்டுவிழா நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் சார்பில் முனைவர் க. சுபாஷிணி வாசித்த வாழ்த்துரை:

இணைய வெளி அவையில் இணைந்திருக்கும்  சான்றோர்கள் அனைவருக்கும் எனது வணக்கம். கிபி 11ம் நூற்றாண்டில் தமிழர்களின் வீரத்தையும் ஆட்சித் திறத்தையும்  இன்றளவும் பறைசாற்றும் ஓர் அடையாளம் மாமன்னன் ராஜேந்திர சோழன். 

கங்கை கொண்ட சோழீஸ்வரத்தில்  மாமன்னன் ராஜேந்திரச் சோழன் அரியணை ஏறிய ஆயிரமாண்டான 2014ம் ஆண்டு  முதல் திரு.கோமகன் தலைமையிலான கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமமும் ஊர் மக்களும் இந்நாளை விழாவாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

ஆடித் திருவாதிரை  நாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பிடிக்கும் ஒரு நாள். தனக்கு நிகரில்லா ஒப்பற்ற ஆளுமை பொருந்திய ராஜேந்திர சோழன் பிறந்த நாள் ஆடி  திருவாதிரைத் திருநாள். இந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தொல்லியல் துறை அமைச்சர் ,மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் ஆகியோருக்கு இத்தருணத்தில் பாராட்டுக்களைப் பதிவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அவரது ஆட்சிக் காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் எனப் படம் பிடித்துக் காட்டுகின்றன.   தனது தந்தை ராஜராஜ சோழனின் அடியொற்றி  கங்கை வரை வெற்றி கண்டு  சோழ அரசின் நில எல்லையை  மேலும் விரிவாக்கி வெற்றி கண்டவன் ராஜேந்திர சோழன். அதுமட்டுமன்றி  அன்றைய மலாயாவின் கடாரத்திற்கும்  தனது படைகளை அனுப்பி  கடல்கடந்து தமிழ் அரசை நிலைநாட்டியவர் மாமன்னன் ராசேந்திரன். 

ராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் காணப்படும் கங்கை படையெடுப்பில் அவரது படைகள் வென்ற ஊர்களாக இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்தின் சித்திரக்கூடா நகரம், பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா, கோசலை நாடு அதாவது இன்றைய ஜார்கண்ட் மாநிலம் , ஒடிசா மாநிலத்தின் பஞ்சப்பள்ளி, காஞ்சம் மாவட்டம்,  ஒட்டவிஷயம், தக்கணலாடம் அதாவது இன்றைய பீகாரின் ஒரு பகுதி, மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியான தண்டபுத்தி ஆகிய பகுதிகளும் அடங்கியிருப்பதை அடையாளம் காண்கிறோம். 

அண்மையில் நான் நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழக நூலகத்தின் அனுமதி பெற்று பெரிய லைடன்  மற்றும் சிறிய லைடன் செப்பேடுகளை ஆய்வு செய்து வந்தேன். இவை ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் அறியப்படுகின்றன. அதில் பெரிய லைடன் செப்பேடுகள் எனப்படுபவை ராஜேந்திரன் காலத்தில் எழுதப்பட்டவை. 21 செப்பேடுகளைக் கொண்டது இது. ராஜேந்திர சோழனின் அரசு முத்திரை போடப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சோழ மன்னர்களின் பரம்பரையை விவரிக்கும் மிக முக்கிய ஆவணம் இது என்பது தமிழ்நாட்டு வரலாற்று அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட ஒன்றே.  ஆடித் திருவாதிரை நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு  இந்த லைடன் செப்பேடுகளை மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்று இத்தருணத்தில்  வேண்டுகோள் முன்வைக்கின்றேன். 

இந்தப் பாராட்டு விழாவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும்  சிங்கப்பூர் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்திற்கும் அதன் செயற்குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
நன்றி.

-- முனைவர்.க.சுபாஷினிதலைவர்,  தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. 





Saturday, August 28, 2021

பகையின் எல்லை……

                                     
-- முனைவர் எஸ். சாந்தினிபீ


சேலத்தில் சின்னதிருப்பதி என்ற ஓர் இடம் இருக்கிறது அஸ்தம்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சி போகும்  சாலையில் மணற்காடு தாண்டிய பின் வருவது சின்னதிருப்பதி. சாலையின் வலது பக்கம் இடது பக்கம் இரண்டையும் சேர்த்து குறிப்பிடுகிறது.  இதனை அடுத்து கன்னங்குறிச்சி, அதற்கும் வடக்கே மலைகள் தான். சேலத்தின் அழகும் பெருமையும் சுற்றி உள்ள மலைகள்தான்.

 சாலையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கம் மேலாகவும் உயர்ந்தும் மேடாகவும் சாலையின் வலது பக்கம் கிழக்குப் பக்கம் கீழாகவும் அமைந்துள்ளது புவியமைப்பு. வலதுபக்கம் சந்திரன் கார்டன் என்கின்ற ஒரு பகுதி வருகிறது, அந்த குறுக்குத் தெருவில் சற்றே உள்ளே நடந்தால் பொருளாதார வளமையைச் சொல்லும் பெரிய பெரிய வீடுகள். அவற்றின் இடையே   இடிபாடுகளுடன் கூடிய ஒரு கோயில் இருக்கிறது. பார்வைக்கும் கட்டிட அமைதிக்கும் சற்று பழையதாகவே தெரிகிறது.

ஒரு பிரதான சாலையில் அமைந்திருக்கும்  ஒரு கோயில் இப்படிக் கேட்பாரற்று காணப்படுகிறது. அதே நேரத்தில் தினமும் கூட்டிப் பெருக்கி கோலமிட்டு அவ்வப்போது சூலத்தில் வைக்கப்படும் எலுமிச்சைப் பழங்களும் மாற்றப்பட்டுக் காணப்படுகிறதே என்கின்ற ஒரு தேடல் என்னுள் எழுந்தது. மெல்ல அதை விசாரிக்க சில வியப்புக்குரிய தகவல்கள் கிடைத்தன .  

இந்த கோவில் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானது அவர்களுக்குள் இருக்கும் பங்காளி சண்டையின் காரணமாக இப்படி இடிபாடுகளுடன் காணப்படுகிறது. ஆனாலும் குலதெய்வம் என்பதால், தெய்வ குற்றத்திற்கு அஞ்சி இந்த காளி கோயிலை முற்றிலும் ஒதுக்காமல் அதைச் சுத்தப்படுத்திக் கோலமிட ஆள் அமர்த்தி உள்ளனர். அவ்வப்போது அவர்கள் இந்த கோயிலுக்கு வருவதும் உண்டு. குடும்பத்தார் தங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டுச் செல்வதும் உண்டு. ஆனால் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இக்கோயில் பல ஆண்டுகளாக இப்படியே பட்ட மரம் போல் பாழாகிறது.
Photos by S. Chandnibi.jpg

இதைப் பார்க்கும்போது சில வரலாற்று நிகழ்வுகள் என் மனதிற்குள் வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது சுதந்திரத்திற்கு முன் வலங்கை இடங்கைப் பிரிவினர் நமது சமுதாயத்தில் மிகக்கடுமையாகத் தங்களுக்குள் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர்.  அவர்களுக்குள் ஏற்பட்ட வேறுபாட்டின் காரணமாக ஒரே கோவிலில் அவர்கள் கடவுளை வணங்கும்  நேரம், பூசைக்கான நேரம், ஆடல் பாடல் காலநேரம், விழாக்களுக்கான நேரம் எல்லாமே வேறுவேறாக அமைத்துக் கொண்டனர் . 

சற்று காலத்தே முன்னோக்கிச் சென்றால் சோழர் ஆட்சியின் கடைசி காலத்தில் வலங்கை இடங்கையினரின் சண்டை சச்சரவுகள் ஆரம்பமாகி விட்டதை அறிய முடிகிறது. பதினோராம் நூற்றாண்டில், பேரரசன் முதலாம் ராசராசனின் காலத்தில் இருவருமே வேறு வேறு படைப்பிரிவினராக கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றனர். ஆனால் 13-ம் நூற்றாண்டில் சுமுக சூழல் மாறி பூசல்களில் இறங்கினர். சண்டை, வெறும் சொல்லாடலோடு நிற்காது கைகலப்பு, குத்து, வெட்டு, கொலை என்று வளர்ந்தது.
 
 பின்னர் வந்த விஜயநகர மன்னர்களின் காலத்திலும் இவர்களின் சண்டைகள் மிக அதிகமாக தென்படுகிறது.   அவை கோவில்களிலும் வணங்கும், தெய்வங்களின் மேலும் அதிகமாகவே எதிரொலித்தன. கோயில் எரிப்பு,கோயிலைக் கொள்ளையிடுதல் போன்று எல்லைதாண்டியது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. 20-ம் நூற்றாண்டின் தெருக்களில் இவர்களின் சண்டைகளும் கொலைகளும் அதிகமாகியதைத் தடுக்க வேண்டிப் பார்த்த இடத்தில் சுட்டுத் தள்ள ஆங்கில அரசு உத்தரவு போட்டதைப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் தனது சோழர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

வரலாற்றின் விட்டகுறை தொட்டகுறை போலும்  பங்காளி சண்டையில் சேலத்து இக்கோயில் பாழடைந்து கிடக்கிறது. மனிதன் கொள்ளும் பகை கால காலமாக கோயிலையும் கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்பதே தெரிகிறது.



உதவிய நூல்கள்:
1.  K.A.  Neelakanda Sastri  -  Colas, 2nd Edition, University of Madras, 1985, Chennai.
2.  ARE (Annual Reports on Epigraphy)185 of 1921.
3.  ARE 273 of 1939-40, Para- 101.
4.  ARE 1921, Part II, p – 47.



பேராசிரியர் முனைவர் எஸ். சாந்தினிபீ 
அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் 


-------








Monday, August 23, 2021

பாடலுக்குச் சுவைகூட்டும் எதுகையும் மோனையும்



-- திரு. இரா.மகேஸ்வரன்



நல்லா எகனை மொகனையா பேசறாண்டா! ஆனா செயல்ல ஒண்ணும் கிடையாது! என்று சொல்வார்கள்! நமது அரசியல்வாதிகளும் இப்படித்தான் எகனை மொகனையா பேசி நம்மை ஏமாளிகள் ஆக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 

கவிதை படைப்பதில் இந்த எகனை மொகனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கவிதைக்குச் சுவை கூட்டும்.

அத்தகைய எதுகை மோனை பற்றி:
மோனை:
செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும். இதை அடி மோனை என்றும் சொல்வார்கள்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
முதல் அடியின் முதல் எழுத்தும் இரண்டாம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வந்துள்ளதால் மோனை என்பார்கள்.

எதுகை:
அடி தோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில்) நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வர தொடுப்பது அடி எதுகை என்று அழைக்கப்படும்.
  
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இந்த குறட்பாவில் முதல் அடியில் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் இரண்டாம் எழுத்தும் ஒத்து வந்துள்ளது இதனால் இது எதுகை தொடை ஆகும்.

நாலடி கொண்ட சீருள் முதல் இரு சீர்களில் முதலெழுத்து ஒன்றி வர தொடுப்பது இணைமோனை எனப்படும்.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

ஓர் அடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படும்.
 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

ஓர் அடியுள் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

ஓர் அடியுள் முதல் இரண்டு மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரத்தொடுப்பது கூழை மோனை ஆகும்.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

ஓர் அடியுள் முதல் மூன்று நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துள்நின்று  டற்றும் பசி

ஓரடியுள் முதல் இரண்டு நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது முற்று மோனை எனப்படும்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இதே போல் எதுகையும் 7 வகைப்படும்  மோனையில் முதல் எழுத்து ஒன்றி வந்ததை போல இதில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அந்த வகையில் இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉஎதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை என ஏழு வகைப்படும்.




திரு. இரா.மகேஸ்வரன், 
கல்வி சார் நூலகர், 
பேராதனைப் பல்கலைக்கழகம், 
கண்டி, இலங்கை.




Sunday, August 22, 2021

எதையாச்சும் பேசுவோம்

 






என்னத்தைப் பேசி என்ன ஆகப் போகுது
           பேசிப்பேசி எவ்வளவோ ஆகியிருக்கு

பேசுறதுக்கு எதுவுமே இல்லையே
           பேசுறதுக்கு எவ்வளவோ இருக்கே

பேசினாலும் யார் கேட்கிறது
           எல்லாரும் பேசுறதை நாம கேட்டமா

யாரோ பேசினதைக் கேட்டிருக்கோமே
           நாம பேசுறதை யாராச்சும் கேப்பாங்க

பேசுறதால எதுவும் நடக்காது
           பேசாததால என்னென்னவோ நடக்குது

எதைப் பேசுறது
           எதையும் பேசுவோம்


--அ. குமரேசன்








Monday, August 16, 2021

நிறைவேறியது 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்' தீர்மானம்

-- தேமொழி 


"ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது."

இவ்வாறாக ஒரு  தீர்மானம் முன்மொழியப்பட்டு சுமார் 93 ஆண்டுகள் ஆகின்றன. சீர்திருத்தம் விரும்பிய  தமிழர்களின்  இத்தீர்மானம் பல போராட்டங்கள் மற்றும்  சட்டச் சிக்கல்களுக்குப் பிறகு இப்பொழுது நிறைவேறியுள்ளது. தந்தை 'பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' இதனால் அகற்றப்பட்டுள்ளது.

பார்க்க-தமிழ்நாடு அரசாணை எண் 609: 
மற்றும் படங்கள்: 
archagar.JPG
archagar0.JPG
archagar1.JPG

ஆண்டு 1927-  நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'சேலம் 3-வது அரசியல் மகாநாட்டில்' 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

அவற்றில் ஆறாவது தீர்மானமே -- "ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக் கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது." என்பதாகும்.

மாநாட்டு  நிகழ்வுகள் குறித்து பெரியாரின் 'குடிஅரசு'  இதழில் (13-11-27 பக்கம் - 13) செய்தி வெளியாகி உள்ளது.  அச்செய்தி கீழே வெள்ளுரை வடிவிலும், படமாகவும் இணைக்கப் படுகிறது.  

சேலம் 3-வது அரசியல்  மகாநாடு.

குடி அரசு
13-11-27
பக்கம் - 13

ஆண்டு 1927-  

நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற 
'சேலம் 3-வது அரசியல் மகாநாடு'

சேலம் ஜில்லா 3-வது அரசியல் மகாநாட்டின் தலைவர் அவர்களையும் மற்றய அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சிறப்புடன் வரவேற்பதற்காக வேண்டிய ஏற்பாடுகள் 2 நாள்  முன்னரிருந்தே நடைபெற்றது. நகர்முழுதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்காரமாய் சிங்காரிக்கப்பட்டிருந்தது. மகாநாட்டுத் தலைவர் திரு. வி. ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்களை காலை 9 மணிக்கு சேலம் டவுன் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையிலிருந்து முதல் அக்கிராரம் கடைவீதி வழியாய் பாண்டு வாத்தியங்களுடன் ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டது தலைவர் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களும் வரவேற்பு கமிட்டித் தலைவர் திரு. தம்மண்ண செட்டியார் அவர்களும் முன்னணியிலும் ஈரோடு குடிஅரசு ஆசிரியர் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் அவர்கள், திரு. ஆர். கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள், டாக்டர் வாதராஜலு நாயுடு அவர்கள் பின்னணியிலும், இரண்டு மோட்டார்களில் வரவும், முன்னால் மாணவர்கள் உள்பட பல வாலிப  தொண்டர்கள் அணிவகுத்து வழி விலக்கவும், பிரபலஸ்தர்கள் புடைசூழவும், ஊர்வலம் சுமார் 3000 ஜனங்களடங்கிய பெருங் கோஷ்டியாய் ஜே. கோஷங்களுடன் புறப்பட்டு வந்தது. ஊர்வலம் 11 மணிவரையில் நடை பெற்றது, பின்னர் தலைவர்கள் ஜாகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 

எலெக்டிரி தியேட்டரில் மகாநாடு ஆரம்பம்: 
மகாநாடு பகல் 2 மணிக்கு ஆரம்பம் என்றிருந்தாலும் மகாநாடு ஆரம்பமாக மாலை 3 மணி ஆய்விட்டது, தலைவர் வருவதற்கு முன்னர் கொட்டகையில் பிரதிநிதிகளும் விசிட்டர்களும் நிறைந்து விட்டார்கள், தலைவர் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டு ஆசனத்திலமர்ந்தார். மேடையில் பல இடங்களிலிருந்தும் வந்த வரவேற்புகமிட்டி அங்கத்தினர்களும் தலைவர்களும் நிறைந்திருந்தார்கள். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் முக்கியஸ்தர்கள், திரு பிஞ்சல சுப்பிரமணிய செட்டியார்,  ராவ்சாகிப் எல்லப்ப செட்டியார்  எம்.எல்.சி.,  திரு. ஆர். கே. ஷண்முகம் செட்டியார் எம்.எல்.ஏ.,  திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர்,  டாக்டர் வாதராஜுலு நாயுடு, திரு. தெண்டபாணிபிள்ளை, திருவாளர்கள் டி.  எஸ்.  ஜெகராஜ் பி.ஏ.பி.எல்., கே. நரசிம்மய்யங்கார் பி.ஏ.பி.எல்., எம்.சாமிநாதய்யர் பி.ஏ.பி.எல்., கே. சிவ. சங்கர முதலியார்,  டாக்டர் ரங்கய்ய நாயுடு,  பி. இராஜமணிக்கம் பண்டாரம், டி.வி.பங்காரு செட்டியார், எ. கே. சுந்தரய்ய செட்டியார், கே.எஸ்.  அருணாஜலம் செட்டியார், எஸ். பெரியசாமி முதலியார், என். கே. சடகோப முதலியார், நாமக்கல் உஸ்மான் சாயுபு, புரொபசர் ராமமூர்த்தி, ஆத்தூர் அப்துல் அமித் சாயபு, ஏ.வையாபுரி மண்டாரம், பூபதி கந்தசாமி பிள்ளை, எஸ்.பி.பொன்னுசாமி முதலியார், கே.மாரிமுத்து முதலியார், பாப்பாபட்டி சின்னமுத்து முதலியார், சர்மசந்திர நாயுடு, பி. ஸ்ரீராமலு செட்டியார் பி.ஏ.பி.எல்., சித்தி ராஜு, கோவிந்தசாமி நாயுடு, சிவப்பெருமாள் பிள்ளை, ஒபிளி செட்டியார், கதிர் செட்டியார், ஜெகநாத செட்டியார்,  அங்கமுத்து முதலியார், ஏத்தாபூர் நாராயணா  செட்டியார், பி. சிவராவ் எம்.எல்.சி,  முதலிய முக்கியஸ்தர்கள் வந்தார்கள். 

முனிசிபல் சேர்மனும் வரவேற்பு கமிட்டித் தலைவருமான எஸ்.தம்மண்ண செட்டியார் பிரதிநிதிகளை வரவேற்று தம் பிரசங்கத்தை வாசித்தார். மகாராட்டுக்கு வரமுடியாதவர்கள் அனுப்பிய தந்திகளை வாசித்தார்.

பின்னர் டாக்டர் நாயுடு அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமைவகித்த திரு. வி. ஒ. சிதம்பரபிள்ளை அவர்களைப் பிரேரேபிக்கராவ் சாகிப், எல்லப்ப செட்டியார் ஆமோதிக்க, திருவாளர்கள் வெங்கடாஜல ரெட்டியார், நாமக்கல் ஊஸ்மான் சாயபு, எம். சாமிநாதய்யர், ஆர். கே. ஷண்முகம் செட்டியார், ஈ. வெ. ராமசாமி நாயக்கர் இவர்கள் ஆகரிக்க தலைவர் அவர்கள் கரகோஷத்தினிடையே பதவியை யேற்று தமது அக்கிராசனப் பிரசங்கத்தை வாசித்தார். 
குறிப்பு:- மற்றய நடவடிக்கைகளும் அக்கிராசனப் பிரசங்கமும் அடுத்த வாரம் வெளி வரும். 

நிறைவேறிய தீர்மானங்கள்:
(1) 
இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெறுவதற்கும், ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தலையிட வேண்டியது அவசியமாயிருப்பதால், அதற்கு அநுகூலமாக காங்கிரஸ் விதிகளை அமைத்து சமூகச் சீர்திருத்தம் செய்ய முயலுவதாக காங்கிரஸ் மெம்பர்கள் வாக்குறுதியளிக்குமாறு செய்யவேண்டுமென்று இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

(2) 
வரப்போகும் ராயல் கமிஷன் பார்லிமெண்டு மெம்பர்களடங்கிய ஒரு கமிஷனாக இருக்குமென்று கேட்டு இந்த மகாநாடு வருந்துவதுடன் போதுமான அளவுக்கு இந்தியப் பிரதிநிதிகள் கமிஷனில் இல்லாவிட்டால் தேசத்தாருக்கு கமிஷன் திருப்திகரமாயிருக்கா தென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது. 

(3) 
     (அ) கௌகத்தி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக சட்டசபை மெம்பர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியார் உத்தரவுகள் அனுப்பியதை இந்த மகாநாடு வன்மையகாக் கண்டிக்கிறது. 
     (ஆ) சென்னை காங்கிரஸ் கட்சி மெம்பர்களில் சிலர் மந்திரி பதவி ஒப்புக்கொள்வதற்கு அனுகூலமுடையவராகக் காணப்படுவதால், காங்கிரஸ் கட்சியார் உத்தியோகம்  ஒப்புக்கொள்ளுவது தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமான தென்றும், அடுத்த காங்கிரஸ் உத்தியோகம் ஒப்புக்கொள்ளும்படி தீர்மானம் செய்தால் உத்தியோகம் ஒப்புக் கொள்ள விரும்பும் சட்டசபை மெம்பர்களை ராஜிநாமா செய்யச்சொல்லி மீண்டும் தேர்தலுக்கு நிற்குமாறு தூண்ட வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

(4) 
"காமன் வெல்த்து ஆப் இந்தியா" மசோதாவைப் பரிசீலனை செய்து அது சர்வஜன சம்மதம் பெற ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ தேவையாயிருந்தால் அவைகளைக் குறிப்பிடுமாறு காங்கிரஸ் ஒரு கமிட்டியை நியமிக்கும்படி இம்மகாநாடு தீர்மானம் செய்கிறது. இந்த மசோதா விஷயத்தில் டாக்டர் பெசண்டு எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகளை இம்மகாகாடு மிகவும் பாராட்டுகிறது.

(5) 
     (அ) இந்த நாட்டிலுள்ள ஜனங்களை சமூக  விஷயங்களில் அடிமையாக வைப்பதற்குக் காரணமாயிருக்கும் வருணாசிரம தர்மத்தைப்பற்றி மகாத்மா தென்னாட்டுப் பிரயாண காலத்தில் பிரசாரம் செய்ததற்காக இம்மகாகாடு வருந்துகிறது. 
     (ஆ) தீண்டாமை யொழித்தல், பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் உணர்ச்சியை நீக்கல், முதலியவைகளுக்காக எல்லா இந்துக்களும் பிரசாரம் செய்து சுயமரியாதை உணாச்சியை விருத்தி செய்ய வேண்டுமென்று இந்த மநாநாடு கேட்டுக்கொள்ளுகிறது. தேவையானால் எங்கும் சத்தியாக்கிரக ஆசிரமங்கள் ஸ்தாபனம் செய்யவேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

(6) 
ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்ய வும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

(7) 
தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியார் கங்காணி சபைகள் ஸ்தாபித்து காங்கிரசில் ஆட்கள் சேரமுடியாமல் தடைசெய்திருப்பதையும் ஒரு கட்சியார் தம் கட்சியாருக்கு மட்டும் ஜில்லா தாலுகா கமிட்டிகளில் ஆதிக்க முண்டாகுமாறு சூழ்ச்சி செய்து வருவதையும் இம்மகாநாடு கண்டிக்கிறது.

(8) 
வகுப்பு வேற்றுமைகளும் ஜாதி வித்தியாசங்களும் இருக்கும்வரை எல்லா சமூகத்தாருக்கும் உத்தியோகமும் மற்றும் பதவிகளும் சமமாகக் கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்தமகாநாடு  தீர்மானிக்கிறது.

(9) 
சேலம் ஜில்லாவில் ஒரு பகுதிக்கு மேட்டுர் தேக்கத்திலிருந்து நீர்ப்பாசானத்துக்காக தண்ணீர் விட்டுக்கொடுக்கவேண்டு மென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

(10) 
கிராமங்களில் அதிகப்படியான பாடசாலைகளும் சித்த வைத்திய சாலைகளும் ஸ்தாபிக்கவேண்டியதும் எல்லா ஆரம்பப் பள்ளிக் கூடங்களிலும் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கவே ண்டியதும் மிகவும்  அவசியமென்று இந்த மாநாடு சர்க்காருக்கு வற்புறுத்துகின்றது.
archagar2.jpg
-------------






Sunday, August 15, 2021

மகுடம்

-- ருத்ரா இ பரமசிவன்


எழுபத்தைந்து ஆண்டுகளின்
கனமான சுதந்திரம்
இதோ
நம் ஒவ்வொருவரின் தலையிலும்
சுடர்கிறது
மணிமகுடமாய்!
வரலாற்றின் தியாகத் தருணங்கள்
நம் முன்னே நிழலாடுகின்றன.
தூக்குக்கயிறுகள்
துப்பாக்கி குண்டுகள்
அதிரடியான பீரங்கிகள்
இவற்றில்
மடிந்த இந்திய புத்திரர்கள்
வெறும் குப்பைகளா?
மியூசியங்களில் அவர்கள்
உறைந்து கிடந்த போதும்
அவர்களின் கனவுகள் இன்னும்
கொழுந்து விட்டு எரிகின்றன‌
ஆம்
இன்னும் நமக்கு வெளிச்சம்
தருவதற்குத்தான்!
ஆனால்
ஓ! இந்திய மண்ணின் வேர்த்தூவிகளே
இன்னுமா
நீங்கள் இருட்டில் கிடக்கவேண்டும்?
சாதி மத வர்ணங்கள்
எத்தனை தூரிகைகள் கொண்டு
தீட்ட வந்த போதும்
ஓவியத்தின் வரி வடிவம்
விடியல் கீற்றுகளையே
நம் கண்ணில் இன்னும் காட்டவில்லையே!
இப்போது அந்த மகுடத்தின்
கனம் தெரிகிறதா?
அவை மயிற்பீலிகள் அல்ல‌
அவற்றுள் மறைந்திருப்பது
புயற்பீலிகள்!
உங்கள் சுவாசமாகிப்போன‌
அந்தப் பெருமூச்சுகளில்
நம் மூவர்ணம் படபடத்துப்
பறப்பது
உங்களுக்குத் தெரிகிறதா?
"ஜெய்ஹிந்த்!"



-----

Thursday, August 12, 2021

மிகப்பெரிய எழுத்துகள் கொண்ட மறுகால்தலை தமிழிக் கல்வெட்டு



 -- வே.சிவரஞ்சனி


அறிமுகம்:
தமிழகத்தில் பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் கொண்ட கல்வெட்டுகள் நூற்றுக்கும் மேல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பல கல்வெட்டுகள் தன்னகத்தே சிறப்பு கொண்டவை. அவற்றில் ஒன்று மறுகால்தலையில் உள்ள தமிழிக் கல்வெட்டு. 

அமைவிடம்:
திருநெல்வேலியிலிருந்து சீவலப்பேரி வழியாக 21 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மறுகால்தலை. முன்பு ஒரு காலத்தில் இந்த ஊருக்குச் செல்லும் சாலை தான் திருநெல்வேலியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் பெருவழியாக  விளங்கியது. இவ்வூரின் அருகில் தான் தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. குன்றுகள் நிறைந்த இவ்வூரில் பூவிலுடையார் மலை என்று அழைக்கப்படும் குன்றின் மேற்குப் பக்கத்துத் தரையில் குகை ஒன்று உள்ளது. படுக்கைகளுடன் காணப்படும் இக்குகை பஞ்ச பாண்டவர் படுக்கை என மக்களால் கூறப்படுகிறது. இந்த குகையின் நெற்றியில் அமைந்துள்ள காடியின் கீழ் ஒரு தமிழிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

Marukalthalai inscription1.jpg

தமிழிக் கல்வெட்டு:
இக்கல்வெட்டு முதன்முதலாக 1906 இல் அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஹெமைடு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு ஒரே வரியில் ஆழமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 

Marukalthalai inscription2.jpg

கல்வெட்டின் வாசகம்:
"வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம் "(தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை). இதனை,
"வேண் கோஸிபன் குடுபிதகல காஞ்சணன்" என்று கிருஷ்ண சாஸ்திரி அவர்களும்,
"வேண் கோஸிபன் குடுபித கல் காஞ்சனம்" என்று சுப்பிரமணிய அய்யர், நாராயணராவ், டி.வி.மகாலிங்கம் ஆகியோரும்,
"வெண் காஸிபன் கொடுபித கல் கஞ்சணம்" என்று இரா.நாகசாமி மற்றும் மயிலை.சீனி அவர்களும்,
"வெண் காஸிபன் குடுபித கல் கஞ்சணம்" என்று ஐ.மகாதேவன் அவர்களும் வாசித்து உள்ளதாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2006 இல் வெளியிட்ட தமிழ் - பிராமி கல்வெட்டுகள் என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
நான் இக்கல்வெட்டை நேரில் சென்று காணுகையில்,
"வேண கோஸிபான குடுபிதா கால காஞசாணம" (கல்வெட்டில் உள்ளபடி)
"வெண் கோஸிபன் குடு(ப்)பி(த்)த கல் கஞ்சணம்" என வாசிக்க முடிந்தது.

இக்கல்வெட்டு, ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சவாலாக அமைந்திருந்தது. அதற்கு இக்கல்வெட்டு குறிப்பிடும் "கல் கஞ்சணம்" என்ற சொல்லே காரண‌ம்.  தோராயமாக வெண் காஸிபனால் இந்த குகையில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளப்பட்டதே தவிர, கல் கஞ்சணத்திற்கான உரிய பொருளை ஆய்வாளர்களால் அறிய இயலவில்லை. இந்நிலை ஒரு நூற்றாண்டுக்கும் மேல்  நீடித்தது. 

2017 இல் ஐ.மகாதேவன் அவர்கள் இச்சொல்லின் பொருள் முடிச்சை அவிழ்த்தார். அதாவது, தமிழில் கசணை என்ற பெயர்ச்சொல்லுக்கு "ஈரம், ஈரப்பதம்" என்றும் கசி என்ற வினைச்சொல்லுக்கு "ஈரம் கசிந்து வழிதல்" என்றும் பொருள். மேலும் கஸி என்ற கன்னடச் சொல்லுக்கு "வழிந்து ஓடுதல்" என்று பொருள். இவற்றோடு கஞ்சணம் சொல்லை ஒப்பிட்டு நோக்கினால் "நீர்க் கசிவு வழிந்து ஓடும் தடம்" எனும் பொருள் நேரடியாக கிடைக்கிறது. ஆதலால் இக்கல்வெட்டில் உள்ள கல் கஞ்சணம் என்ற சொல் குறிப்பது குகையின் நெற்றியில் வெட்டப்பட்டுள்ள சல தாரையையே ஆகும். கஞ்சணம் என்ற சொல்லின் முன் கல் என்ற அடைமொழி இட்டதற்குக் காரணம் உண்டு. பெய்யும் மழைநீர் வீட்டின் உள் கசியாதவாறு மேற்கூரையில் சலதாரை ஓடுகளை அமைப்பதுண்டு. வீட்டுக் கழிவுநீரைச் சுடுமண் கலங்கள், குழாய்கள் கொண்டு பழங்காலத்தில் வெளியேற்றப்பட்டதை அகழாய்வு உணர்த்துகிறது. 

இந்த கஞ்சணங்களில் இருந்து இது வேறுபட்டது என்பதை உணர்த்தத்தான் கல்வெட்டில் கல் என்ற அடைமொழி கொண்டு கஞ்சணம் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார். இப்போது கல்வெட்டின் பொருளைப் பாருங்கள், "வெண் காஸிபன் என்பவரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட நீர்வடி விளிம்பு" என்பதே இக்கல்வெட்டு கூறும் செய்தி. கல் கஞ்சணம் பற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு அவர்கள் என்னிடம் கூறியதாவது, கஞ்சம் என்ற சொல்லுக்கு நீர் எனவும் பொருள் உண்டு. வாயின் வளைந்த மேற்பகுதி அண்ணம், அணம் எனப்படுகிறது. அவ்வகையில் குகையின் வளைந்த மேற்பகுதியையும் காரணப் பெயராக அணம் என்ற சொல் குறிப்பதாகக் கொள்ளலாம். எனவே குகையின் வளைந்த மேற்பகுதியில் நீர் வடியாமல் தடுக்க வெட்டப்பட்ட காடியை, கஞ்சணம் என்ற சொல் குறிப்பதாகக் கொள்ளலாம். இது கல்லில் அமைக்கப்பட்டதால் கல் கஞ்சணம் எனப்பட்டுள்ளது.

வெண் காஸிபன் - வெண் காசிபன் இப்பெயர் ஆசீவகத்துடன் தொடர்புடையதாக பேராசிரியர் நெடுஞ்செழியன் கருதுகிறார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, காயன் > காயிபன் > காசிபன் அதாவது காயன் என்ற பெயர்ச்சொல்லில் இருந்து காயிபனும் பிறகு காசிபனும் தோன்றியதாகக் கூறுகிறது. இம்மூன்று பெயர்ச்சொற்களும் ஒரே பொருள் கொண்டவை. காய் என்ற வினைச்சொல்லுக்கு ஒளிர்தல், பிரகாசித்தல் என்று  பொருள் உண்டு.

எனவேதான், நாம் நிலா ஒளிர்தலை நிலா காய்கிறது என்கிறோம். அப்படியென்றால் நிலா ஒளி வீசுகிறது, பிரகாசிக்கிறது என்று பொருள். இது பெயர்ச்சொல்லாக வரும்போது ஒளியன், ஒளி உடையவன், பிரகாசன், பிரகாசிப்பவன் என வரும். ஆகவே வெண் காசிபன் என்ற சொல்லுக்கு வெண்மையான ஒளியை உடையவன் (அ) பிரகாசத்தை உடையவன் என்று பொருள் கூறலாம். இதுபோல் வெண் என்ற முன்னொட்டு கொண்ட சங்ககாலப் புலவர் வெண்கண்ணனார், வெண்கொற்றன், வெண்பூதன்  போன்று சில பெயர்கள் உள்ளன.  சங்ககாலப் புலவர்களுள் ஒருவர் பெயர் காசிபன் கீரன். அத்தியிடம் தேவர்களையும் திரியிடம் அசுரர்களையும் பெற்ற ஒரு முனிவரின் பெயர் காசிபனார். மேலும் தமிழிக் கல்வெட்டுகளில், அழகர்மலை கல்வெட்டில் உள்ள கஸபன், யானைமலை கல்வெட்டில் உள்ள அரட்டகாயிபன், புகளூர் கல்வெட்டில் உள்ள செங்காயபன், தொண்டூர் கல்வெட்டில் உள்ள இளங்காயிபன் ஆகிய  பெயர்கள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

கல்வெட்டின் தனிச்சிறப்பு:
1. ஒரு அடிக்கும் மேல் உயரம் கொண்ட எழுத்துகள். தமிழி கல்வெட்டுகளிலேயே இந்த கல்வெட்டு எழுத்துகள் தான் அளவில் பெரியவை. 
2. இங்கு அசோகன் பிராமி எழுத்தான "ஸி" பொறிக்கப்பட்டு உள்ளது.
3. தமிழ்நாட்டில், ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழி குகைக் கல்வெட்டுகள் ஏதோ ஒரு பழங்கால எழுத்துகளால் வெட்டப்பட்டுள்ளன என்றே ஆய்வாளர்கள் கருதினர். இந்த கல்வெட்டைக் கண்டறிந்த பின்பு தான் பிராமி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளதென முதன் முதலாக தெரிய வந்தது. 

முடிவுரை:
இக்கல்வெட்டு எழுத்துகள் சீராக இல்லாமல் பெரிதும் சிறிதுமாக ஒழுங்கற்று அமைந்துள்ளன. தரைப்பகுதிக்கும் கல்வெட்டுக்கும் இடையில் ஏறக்குறைய 40 அடி உயரம். ஆதலால் படிப்பதற்கு ஏதுவாக பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம். இப்போது தரைப்பகுதி உயர்த்தப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு அமைந்துள்ள பகுதி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


உதவியவை:
1.  தொல்லியல் துறை தகவல் பலகை
2.  ஆவணம் இதழ் 28, தொல்லியல் கழகம், 2017
3.  தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 2006.


sivaranjani.jpg
கட்டுரையாளர்:
வே.சிவரஞ்சனி, rmdsivaranjani2021[at]gmail.com
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு, சேதுபதி அரசு கலைக்கல்லூரி, இராமநாதபுரம்.
ஒருங்கிணைப்பாளர்:
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.

-----


Wednesday, August 11, 2021

மண்ணில் இருந்து மீண்டு வந்த அரிதாரிமங்கலம் நடுகல் வீரன்


-- ச.பாலமுருகன்


வரலாற்று ஆர்வலரும் புகைப்படக் கலைஞருமான திருவண்ணாமலை வெற்றிவேல் அவர்கள் மண்ணில் புதைந்தவாறு இருந்த  புகைப்படத்தை அனுப்பி அதன் இருப்பிடத்தையும் அனுப்பினார். புகைப்படத்தைப் பார்த்தால் பழமையான நடுகல் என்று தெரிந்தது. மேலும் அதன் தலைக்கு மேலே காலியான வெற்றிடம் போல இருந்தது. கல்வெட்டு இருக்கிறதா என கேட்க, ஆம் என்றார் வெற்றிவேல்.  எனக்குச் சந்தேகமாக இருந்தது. இருந்தாலும் நேரில் சென்று பார்த்துவிடலாம் பக்கம் தானே என்று சென்றேன். துணைக்கு எனக்குத் தெரிந்த காஞ்சி வெங்கடாசலம் அவர்களை அழைத்துக்கொண்டேன். 

வெற்றிவேல் கூறிய பள்ளியின் எதிரே உள்ள நடுகல்லை ஆய்வுசெய்த போது மேற்புறம் 5 வரிகளில் கல்வெட்டு இருந்தது. ஆச்சர்யமும் சந்தோஷமும் கலந்த நிலையில் அங்கிருந்த ஊர் மக்களிடம் இந்த நடுகல்லின் முக்கியத்துவத்தைக் கூறினேன். உடனே ஆளுக்கு ஒரு கைபிடிக்க பல நாட்களாக மண்ணில் புதைந்திருந்த நடுகல் தூக்கப்பட்டு, அருகில் இருந்த புளியமரத்தின் கீழ்  நிற்கவைக்கப்பட்டது. அப்போது பார்க்கும் போது பின்பக்கமும் எழுத்துக்கள் இருப்பது தெரியவந்தது. மாலை நேரம் ஆனாலும் அப்போதே அந்த எழுத்தைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நடுகல்லை சுத்தம் செய்து மாவு பூசிப் படியெடுத்துப் பார்த்தால் இந்த நடுகல் முதலாம் பராந்தகன் காலத்திய பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்து என்று கல்வெட்டு முன்பக்கம் இருந்தது. பின்பக்கம் பெருமளவு சிதைந்து இருந்தது.  புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். 

s balu.jpg
அதன் பிறகு மதன், பழனிச்சாமி ஆகியோர்களுடன் மீண்டும் சென்று அந்த நடுகல்லை, அருகிலேயே அனைவரும் பார்க்கும் வண்ணம் நிலையாக ஒரு தளம் அமைத்து நிற்கவைக்கப்பட்டது. இந்த நடுகல்லில் சுவாரஸ்யம் என்னவென்றால் சாலை ஓரமாக சுமார் 20 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், இதை யாரும் பார்க்கவில்லை அந்த ஊரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வெற்றிவேலுக்குத் தகவல் அனுப்ப வெற்றிவேல் எனக்குச் சொல்ல அந்த நடுகல் மீண்டெழுந்தது. இதற்கு முன்னர் இந்த நடுகல் கூட்டுறவு கடை கட்ட பள்ளம் எடுக்கும் போது மண்ணுக்குள் இருந்துள்ளது. அதை எடுத்து சாலையின் மறுபுறம் போட்டுவிட்டனர். வரலாறு எப்படியோ தன்னை மீட்டுக்கொள்ளும் என்பது போல,  அந்த வீரன்  மிகவும் சிரமப்பட்டுப் பல ஆண்டுகளாக மண்ணுக்குள் உள்ளேயும் 20 ஆண்டுகளாக சாலையின் ஓரம் கேட்பாரற்றும் கிடந்தான். இன்று உற்சாகமாக வில்லும் வாளும் கொண்டு காட்சியளிக்கிறான். இந்த காட்சியைப் பார்ப்பது ஒன்றே போதும் எங்களை போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு. 

இந்த நடுகல் கல்வெட்டில் சுமார் 5 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டது.  இதில் உள்ள வீரனின் உருவம், இடது கையில் வில்லும்  வலது கையில் வாளும் கொண்டு போருக்குத் தயார் நிலையில் உள்ளது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது.  இதில் மேற்பகுதியில் 5 வரியிலும் பின்பக்கத்தில் 6 வரியிலும் கல்வெட்டுகள் உள்ளன. 

இந்த கல்வெட்டை படித்தளித்த கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால், இந்த கல்வெட்டு மதிரை கொண்ட பரகேசரி என்ற பட்டம் உடைய பராந்தக சோழனின் முப்பத்துமூன்றாவது ஆட்சியாண்டில் (கி.பி. 940) வெட்டப்பட்டது என்றும் இதில் பல்குன்றக்கோட்டத்து கீழ்வேணாட்டு காந்தளூர் கூற்றத்தைச் சேர்ந்த அதிராக மங்கலம் என்ற ஊரில் நடைபெற்ற ஒரு போரில் ஈடுபட்டு கலிமுகற் பெருங்கருமான் மருமகன் மலையன் என்பவர் இறந்துள்ளான்  என்று அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 

s bala.jpg

அரிதாரிமங்கலம் நடுகல் கல்வெட்டு
1. ஸ்ரீமதிரை கொண்ட கோப்ப
2. ர கேசர பந்மற்மக்கி யாண்
3. டு முப்பத்து மூன்றாவது ப
4. ல் குன்றக் கோட்டத்துக் கீழ் வே
5. ள் நாட்டு காந்தளூர்க் கூற்றத்து அ
6. திரா…
7. கலிமுகற் பெருங்கருமான் மரு
8. மகன் மலையன் அதிராக மங்
9. கலத்து……யப்பன்
10. மங்க…
11. ….
12. ….

இதில் குறிப்பிடும் அதிராக மங்கலம் என்பதே தற்போது அரிதாரிமங்கலம் (இடம்: 12°23'53.1"N 78°59'08.3"E) என்று வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீரனின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நடுகல் ஒருகாலத்தில் மக்கள் வழிபாட்டில் இருந்துள்ளது. பின்பு ஏதோ காரணத்தால் பூமியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டிருந்தது. 

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இதை மீட்டு சீரமைத்து மக்கள் பார்வைக்கும் வழிபாட்டிற்கும் ஏற்றவாறு அமைத்துக் கொடுத்துள்ளனர். இந்த கல்வெட்டை படித்தளித்த சு. ராஜகோபால் கல்வெட்டறிஞர் அவர்களுக்கும்,  இவையனைத்தும் சாத்தியமாக்கிய வெற்றிவேல், விக்னேஷ், அரிதாரிமங்கலம் ஊர்மக்களுக்கும் அன்பான நன்றி. 



------

Tuesday, August 10, 2021

வாசிப்பு: நான்கு எழுத்து மந்திரம்


- முனைவர் ஸ்ரீ ரோகிணி, துபாய்




வேட்டையாடி மாமிசத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில் நெருப்பைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் முதலில் எப்போது பேசத் தொடங்கினார்கள்? மனிதர்கள் மட்டுமே மொழியைப் பயன்படுத்தும் உயிரினமாக இருக்கிறார்கள். விலங்குகளிடம் இருந்து நம்மை தனித்துவமாக்கிக் காட்டுவதும் அதுதான், உரையாடுவதற்கான இந்தத் திறன்தான் பரிணாம வளர்ச்சியில் முக்கியமான நிலைமாறுதலாகக் கருதப்படுகிறது. வாழ்க்கை நிலையில் மாறுதலை ஏற்படுத்தியதில் மற்றவற்றைக் காட்டிலும், உண்மையான அம்சம் இதுதான்.

கதைகளை விவரித்துக் கூறுவதற்கும், சம்பிரதாயங்களை உருவாக்குவதற்கும் நிறைய மொழி அறிவு நமக்குத் தேவைப்பட்டது என்று பேராசிரியர் டாலர்மேன் கூறுகிறார்.  பேசுவதற்கு ஆரம்பக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அநேகமாக அதற்கான முயற்சிகள் உருவாகியிருக்க வேண்டும்.  இந்தப் பேரிடர்க் காலத்தில் காகிதம்  புரட்டும் சதவீதம் அதிகரித்துள்ளது. திரும்பப் பழைய நிலைக்கு  வந்துள்ளது வழக்கொழிந்து போன பழைய பழக்கங்களில் ஒன்றான புத்தக  வாசிப்பும். மேலறிஞர்கள் பலர் ஆய்வின்படி இன்னும் பல இடத்தில் இளைய தலைமுறையினர் இந்த வாசிப்புத் திறனை அதிகரிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

நமக்குக் கிடைக்கும் நாட்குறிப்பு  புத்தகத்தில் முகவரிகள் தொலைபேசி எண்கள் இவற்றோடு நம் அன்றாட நிகழ்வுகளை நினைவலைகளாக எழுதும் பழக்கம் அடியோடு மறக்கப்பட்டு விட்டது.  நம் நினைவலைகளைப் பதிவு செய்வது வேண்டாம் நமக்கு வேண்டியவர்களின் முகவரிகள் தொடர்பு எண்கள் இவற்றை எழுதி வைக்கும் பழக்கம் இன்றும் தேவைப்பட்டாலும் கைத்தொலைபேசியில் தொடர்பு எண் இருந்தால் போதும் மற்ற விபரங்கள் அவ்வப்போது கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று யாரிடமும் எந்த விபரங்களும் இருப்பதில்லை.  தொலைபேசி தொலைந்து விட்டது என்றால் அவருடன் அத்தனை தொடர்புகளும் தொலைந்து போய்விடும். 

நாற்பது ஐம்பது வயதைத் தாண்டியவர்களுக்குப் புத்தகம் வாசித்தல் என்பது இயல்பான ஒன்று 1960 மற்றும் 70களில் பிறந்தவர்களுக்கு வெளியில் சென்று விளையாடுவது வானொலி கேட்பது,தொலைக்காட்சி பார்ப்பது, அதுவும் குறிப்பிட்ட சில நேரங்களுக்கு மட்டும் திரைப்படங்கள் பார்ப்பது, இவற்றோடு புத்தகம் படிப்பது என்பது அதிகச் செலவில்லாத பொழுதுபோக்கு. ஆனால் அப்போது பெற்றோர்களுக்கு நம் பிள்ளைகள் கண்ட புத்தகங்களைப் படித்துக் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற மற்ற பொழுது போக்குகளுக்குக் கொடுத்த அனுமதி புத்தகம் படிக்கும் போது கொஞ்சம் தணிக்கையோடு இருக்கும். பள்ளிகளிலும் பொது இடங்களிலும் வீட்டிலும் புத்தகங்கள் சஞ்சிகைகள் போன்றவை குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் ஆயிரம் தடைகளுக்குப் பிறகே கிடைக்கும். அவர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிப்பது இவர்களை. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான கதைகள் தமிழில் மிகக் குறைவே.

சில குழந்தை பத்திரிகைகள் இருந்தன ஆனால் இவற்றின் மூலம் குழந்தைகளுக்கு என்ன கிடைத்தன என்று கேள்வி எழுகிறது. அப்போதைய குழந்தைகளின் உலகம் பேதைமையும்  அப்பாவித்தனமும் நிறைந்தது அவர்களுக்கு எது நன்மை தரும் இது தீமை என எடுத்துச் சொல்லும் நீதிநெறி கதைகள் வாழ்க்கையில் மாறாத துன்பங்களுக்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கை பெரும் அனாதைச் சிறுவர்கள், வஞ்சிக்கப்பட்ட இளவரசிகள், அழகிய பெண்கள், இடையில் உதவி செய்யும் தேவதைகள், இறுதியில் அவளைக் காப்பாற்றி திருமணம் செய்துகொள்ளும் ஆண், அழகான இளவரசன் இவை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடித்த கதைகள். பல கதைகள் நாவல்கள் நாடகங்கள் திரைப்படங்கள் என இந்தக் கரு வெவ்வேறு சூழல்களில் வடிவங்களில் இன்றும் வந்து கொண்டிருக்கின்றன.

எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்:
மனித உறுப்புகளில் கண் சிறப்பிடம் பெறுகிறது. அந்தக் கண்ணுக்கு இணையாகக் கல்வியை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். நமது முகத்தில் இரண்டு கண்கள் இருக்கின்றன. அந்த இரண்டு கண்களுக்கு இணையாகக் கருதத் தக்கவை எண்ணும் எழுத்தும். அப்படி சிறுவயதில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தினால் தொடங்கப்படும் வாசிப்புப் பழக்கம் வயது ஆக ஆக இயல்பான ஆர்வத்தினால் தொடரவேண்டும். ஆனால் நெருக்கடியான கல்விச்சூழல் புத்தகங்கள் படிப்பதை விட அதிகச் சுவாரஸ்யங்கள் தரும் ஊடகங்கள், தொலைக்காட்சி, இணையம், கைத்தொலைபேசி முகநூல், படவரி (இன்ஸ்டாகிராம்) போன்ற பல ஊடகம் சார்ந்த வசதிகளினால் பொழுது முழுவதும் வேறு எதற்குமே நேரம் இல்லாமல் போய்விடுகிறது.

நகைச்சுவைக்காகச் சொன்னாலும் நம் அக்கம்பக்கத்தினர் யார்  என அறியாது, அமெரிக்காவில் உள்ள முகநூல் நண்பர்களுக்கு வணக்கம் வாழ்த்தும் சொல்வதுதான் இன்றைய நிலைமை. வாசிப்பது மற்றும் நண்பர்களுடன் ஆழ்ந்த நட்பு கொள்வது போன்றவை இல்லாமல் மேம்போக்கான நட்பு தேவை காண வாசிப்பு என வாழ்க்கை தொடர்கிறது. ஆனால் உளவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் வாழ்க்கை அனுபவங்கள் பெற்று பெரியவர்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லும் இரண்டு விடயங்கள்,  படிப்பதற்கு நல்ல புத்தங்கள் மனம் விட்டுப் பேசி பழக நண்பர்கள் கண்டிப்பாக மனித வாழ்க்கைக்கு வேண்டும், இவை இரண்டும் தனிமையைப் போக்கும் அதுமட்டுமல்லாது வாழ்நாள் இறுதிவரை துடிப்போடு வாழ்க்கையை வாழவைக்கும்.

மருத்துவர்கள் அறிவியலாளர்கள் மேலாண்மைத் துறையில் உள்ளவர்களுக்கு வாசிப்பு என்பது வாழ்நாள் முழுக்க தொடரும் என்றாலும் அவர்கள் வாசிப்பு தொழில் சார்ந்து இருக்கும்.  கல்வித்துறையில் மொழி கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆசிரியர்கள் தங்களுக்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தைத் தாண்டி மாணவர்களுக்கு வாசிப்பின் சுவையைச் செய்தாலும் அவர்களுக்குத் தெரிந்த இலட்சியவாத இலக்கியங்கள் கதைகள் போன்றவற்றோடு அதை நிறுத்திக் கொள்கிறார்கள். புனிதப் பிம்பங்களாக வலம் வரும் கதை நாயகர்களைப் படிப்பதற்குத் தற்கால இளைஞர்களுக்குச் சலிப்பு ஏற்படுகிறது. அவர்களைச் சுற்றி நடப்பதைப் பார்த்து பலவற்றையும் அறிந்து கொள்கின்றனர் அவர்களுக்கு லட்சிய வாதங்களை முன்வைக்கும் இலக்கியங்கள் போலித்தனமாக தோன்றுகிறது. 

நவீனகால இடையூறுகளைத் தாண்டி படிக்க முற்படும் இளைஞர்களுக்கு நாம் எத்தகைய வாசிப்பை பழக்கப்படுத்த வேண்டும் என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது.  வாழ்க்கையில் படிப்பதற்கும் அவற்றைச் சுவைப்பதற்கும் ஏராளமான புத்தகங்களும் அவை சார்ந்த அனுபவங்களும் நிறைந்து கிடக்கின்றன.  இவற்றைப் படித்து உணர்ந்து முடிக்க ஒரு வாழ்நாள் போதாது.வாசிப்பு இந்த நான்கு எழுத்து மந்திரம் உலகத்தையே திருப்பிப் போடும் வல்லமை மிக்கது. வாசிப்பை நேசித்துச் சுவாசிப்போம். 




குறிப்பு: உலகப் புகழ் பிரான்சு தமிழ் நெஞ்சம் ஆகஸ்ட் மாதம் 2021 மாத இதழில் வெளிவந்தது. நன்றி.



தமிழ்ப் பணிச் செம்மல்.முனைவர் ஸ்ரீரோகிணி
உலகத் தமிழ் ஆராய்ச்சியாளர்
தலைவர்  - SB,TRG
துபாய், அமீரகம் 
srirohini.mr@gmail.com



-----

“கருக்காத்தம்மன்”

“கருக்காத்தம்மன்”


 -- ஜமுனா இராமஜெயம்




இதயம் ஒரு கணம்
துடிப்பைத் தவற விட்டது!  
ஈரக்கொலை நடுங்கியது, 
கண்ணில் வியர்வை கொட்டியது.  
பசியைப்போக்க உழைக்கும் 
அந்த “அம்மா”வை பார்த்து. 
பட்டாடை உடுத்தி தங்கநகை 
அணிந்தவள் தான் அம்மனா????  
இந்தா வரா பாருங்க 
“கருக்காத்தம்மன்”
வயிற்றுப்பசியாற, 
உழைக்கும் வேளையில், 
மார்போடு அணைத்த படி, 
பசியாறிக் கொண்டிருக்கும் 
தன்  பிஞ்சுக் குழந்தையை சுமந்தபடி..  
                ~ ஜமுனா இராமஜெயம்





Monday, August 9, 2021

இராஜேந்திரச் சோழன் பிறந்த ஆடித் திருவாதிரை

இராஜேந்திரச் சோழன் பிறந்த ஆடித் திருவாதிரை

-- மா.மாரிராஜன்



ஆடித் திருவாதிரை (இந்த ஆண்டு - 05.08.2021) இராஜேந்திரச் சோழன் பிறந்தநாள். 

rajenthiran2.JPG

இராஜேந்திரனின் போர் வெற்றிகளும், கண்ட களங்களும் சற்று அதிகம்தான்.  அனைத்திற்கும் சிகரமாய் ஆய்வாளர்களால்  கொண்டாடப்படுவது  கங்கை வெற்றியை; அப்படி என்ன அதில் சிறப்பு..?

அரசர்கள் போர்களில் வெற்றிபெறுவதும், அவ்விடங்களில் வெற்றித்தூண் (ஜயஸ்தம்பம்) நடுவதும் வழக்கமான ஒன்றுதான். இந்தத் தூண் கல்லால் செதுக்கப்பட்ட ஒன்று. தனது வெற்றியை பறைசாற்றும் ஓர் அடையாளம்.

இராஜேந்திரனும் தனது கங்கை வெற்றியை கொண்டாட ஒரு தூண் நட்டார். கல் தூண் அல்ல. நீர்த்தூண் (ஜலஸ்தம்பம்) தண்ணீர் மயமான தூண்.  கங்கைநீரை சோழபுர ஏரியான சோழகங்த்தில் கொட்டி ஒரு நீர்த்தூண் நட்டு, கங்கை கொண்ட சோழன் என்னும் அழியா புகழ் பெற்றார். 

இந்நிகழ்வுகளை அப்படியே திருவலங்காடு செப்பேடு மற்றும் இராஜேந்திரனது மெய்கீர்த்தி சாசன வரிகள் எடுத்துரைக்கிறது. புதிதாக கட்டமைக்கப்பட்ட  சோழபுரத்தைக் கங்கை நீரால் சிறப்பிக்க முடிவு செய்கிறார். கங்கைநீரை கொண்டு வருமாறு தம் படைத்தலைவனுக்கு ஆணையிடுகிறார்.  அப்படைத் தலைவனும் படையுடன் சென்று வடதேச மன்னர்களை வென்று கங்கை நீரைக் கொண்டு வருகிறார்.  அப்படைத்தலைவனை வரவேற்ற இராஜேந்திரன், தான் அமைத்த சோழகங்கம் ஏரியில் நீர்த்தூண் அமைக்கிறார்.

rajenthiran6.JPG
உலகத்தமிழர்களின் பெருமைமிகு இந்நிகழ்வை, திருவலங்காடு செப்பேட்டின்  109 - 124 செய்யுள்  கூறுகிறது. 
செய்யுள் 109 - 124 வரை உள்ள வடமொழிப் பகுதியின் தமிழாக்கம்:

செப்பேட்டின் 109 வது செய்யுள்:
"பகீரதனின் தவத்தின் வலிமையால்   பூமிக்கு வந்த கங்கை நீரை தன் தோளின் வலிமையால் அந்த கங்கை நீரைக்கொணர்ந்து தன் நாட்டை புனிதமாக்க முயன்றான் இராஜேந்திரன்"

செய்யுள் 110:
"கங்கை நதிக்கரையில் வாழும் பகையரசர்களை வெல்வதற்கு,  வீரத்தில் சிறந்தவனும், பலமான படைகளை உடையவனும்,  அறமறிந்தோரில் முதல்வனுமான தன் படைத்தலைவனுக்கு ஆணையிட்டான்"

செய்யுள் 111:
"பனிமலையிருந்து வரும் கங்கை நீரைப் போல் கல கல என்னும் ஒலி எழுப்பியவாறு  அப்படைத்தலைவனின் குதிரைகள் சென்றது"

செய்யுள் 112:
"யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தால் இராஜேந்திரனின் படைகள் கங்கை நதியை கடந்தது"

செய்யுள் 113:
"யானைகள்,  குதிரைகள், வீரர்கள்,  இவர்கள் எழுப்பிய புழுதி பறந்தவாறு விக்ரமச்சோழனின் (இராஜேந்திரன்) படைகள் எதிரி மண்டலத்தில் நுழைந்தன"

செய்யுள் 114:
"இராஜேந்திரனின் படைகள், இந்திரரதனை முதலில் வென்று சந்திரகுலத்தின்  ஆபரணமாய் திகழும் இடத்தைக் கைப்பற்றியது"

செய்யுள் 115:
"நடைபெற்ற போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட, தண்ட நுனியினை உடைய வெண்கொற்றக்கொடை கீழே விழுந்தது. இது சந்திரனின் பிம்பமே கீழே விழுந்தது போல் இருந்தது"

செய்யுள் 116:
சிபிகுல அரசனின் (இராஜேந்திரன்)  படைத்தலைவன் இரணசூரனை வென்று,  தர்மபாலனின் நாட்டில் நுழைந்தான். பிறகு தேவநதியான கங்கை நோக்கிச் சென்றான்"

செய்யுள் 117:
"அந்த நதிக்கரையில் இருக்கும் அரசர்களை படைத்தலைவன் வென்றான். அவர்களைக் கொண்டு அந்த புனித நீரை தன் தலைவன் மதுராந்தகனுக்காக (இராஜேந்திரன்)  கொண்டு வந்தான்"

செய்யுள் 118:
"கோதாவரி நதிக்கரையை இராஜேந்திர சோழன் அடைகிறார். சந்தனப்பூச்சுகள் கொண்டு நதிக்கரையில் நீராடி முடிக்கிறார். வெற்றியுடன் வரும் தன் படைத் தலைவனை வரவேற்கிறார்"

செய்யுள் 119:
"அவனுடைய வேகமான அந்தப்படை எதிரி அரசனை வென்று,  பெரும் புகழ் மற்றும் இரத்தினங்கள் இவற்றுடன் கங்கை நீரையும் தன் தலைவனுக்காகக் கொண்டு வந்தது"

தன்னுடைய தேசத்தில் சோழகங்கம் என்ற பெயருடையதும்,  கங்கை நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பம் ஒன்றை நிறுவினான் (நீர்மயமான வெற்றித்தூண்)

இனி; இராஜேந்திரனின் மெய்கீர்த்தியில் காணப்படும் கங்கைப்படையெடுப்பில் அவர் வென்ற நாடுகள்:

rajenthiran5.jpg
1. சக்கரக்கோட்டம் — இன்றைய சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சித்திரக்கூடா என்னும் நகரம்.
2. மதுரை மண்டலம் — இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா.
3. நாமனைக்கோனை — இன்றைய ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி என்று யூகிக்கப்படுகிறது.
4. பஞ்சப்பள்ளி — ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ள பஞ்சப்பள்ளி.
5. மாசுனிதேசம் — சட்டீஸ்கர் மாநிலப்பகுதியாக இருக்கலாம்.
6. ஆதிநகர் — ஒடிசா மாநிலத்தின் கான்ஜம் மாவட்டப்பகுதி.
7. ஒட்டவிஷயம் — இன்றை ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி.
8. கோசலை நாடு — இன்றைய ஜார்க்கண்ட் மாநிலம்.
9. தண்டபுத்தி — மேற்குவங்காளத்தின் மேற்குப்பகுதி.
10. தக்கண லாடம் — இன்றைய பீகாரின் ஒரு பகுதி.
11. வங்காளதேசம் — இன்றைய அஸ்ஸாம் , பங்களாதேஷ் நாட்டின் ஒரு பகுதி.
மேற்கண்ட நாடுகளை இராஜேந்திரன் தலைமையிலான சோழர் படை வென்றுள்ளது. இப்படையெடுப்பில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக அந்தந்த நாட்டின் கலைச் செல்வங்களை வெற்றிச் சின்னமாக தமிழகம் கொண்டுவந்தனர்.

rajenthiran4.jpg

அந்நாடுகளில் சோழர்களது சாசனங்களும் பொறிக்கப்பட்டன. ஒட்டரதேசம் என்று சாசனங்களில் குறிப்பிடப்படும் இன்றைய ஒடிசா மாநிலத்தில் கஜபதி மாவட்டத்தில் மகேந்திரகிரி  மலைச்சிகரம் ஒன்றில் மூன்று கற்கோவில்கள் உள்ளன. இவை தர்மர் கோவில்,  பீமன் கோவில், குந்திகோவில் என்று அழைக்கப்படுகிறது.

rajenthiran3.jpg
rajenthiran3.1.jpg
தர்மர் கோவிலின் வாயில் நிலைப்படியில் ஒரு கல்வெட்டுப்பொறிப்பு உள்ளது. வடமொழியில் அமைந்த இக்கல்வெட்டின் தமிழாக்கம்:
"இராஜேதிரன் தனது தோள் வலிமையால் விமலாதித்யனை வென்று மலை மிகுந்த நாடுகளையும் மற்ற நாடுகளையும் கைப்பற்றி கலிங்கபதி போன்றோரை அடக்கி மகேந்திரமலை உச்சியில் விஜயஸ்தம்பத்தை நட்டான்."

இக்கல்வெட்டுப் பொறிப்பின் கீழே சோழர் கால இலச்சினையும் கோட்டோவியமாக உள்ளது. அமர்ந்த புலியின் முன்பாக கயல்கள். தர்மர் கோவிலுக்கு அருகே இருக்கும் குந்தி கோவிலில் மூன்று கல்வெட்டுப் பொறிப்புகள் உள்ளன.

முதல் கல்வெட்டு:
மகேந்திரகிரி மலை உச்சியில் சோழர்கள் விஜயஸ்தம்பம் நட்டது பற்றி பதிவு செய்கிறது.

இரண்டாவது கல்வெட்டு:
இராஜேந்திரனின் படைத்தளபதியான இராஜேந்திர சோழபல்லவரையன் என்னும் ராஜராஜ மராயனுக்கு இக்கோவிலில்  விட்டி வாரண மல்லன் என்ற பட்டத்தை அளித்து (எதிரிகளின் யானைப்படையை வென்ற தலைவன்)  வீர அங்குசம் ஒன்றை வழங்கி சிறப்பித்துள்ளார் சோழப்பேரரசர் இராஜேந்திரன் என்பது பற்றி பதிவு செய்கிறது.

மூன்றாம் கல்வெட்டு:
இப்பகுதியை ஆண்ட விமலாதித்தனை குறிப்பிடும் துண்டு கல்வெட்டு ஆகும்.

வீர அங்குசம் பெற்ற  இராஜேந்திர சோழ பல்லவரையனான இராஜராஜராஜன் மராயன் என்பவரே கங்கை படையெடுப்பின் சோழர் படைத்தளபதி ஆவார். இராஜேந்திரனின் மெய்கீர்த்தி சாசனத்தில் கங்கைநீரை எடுத்த இடம்பற்றி கூறுகையில்; 

"நித்தில நெடுங்கடல் உத்திரலாடமும் வெறிமலர் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்"
நெடுங்கடல் போல் பரந்து நிற்கும் உத்திரலாடம் என்னும் இடத்தில் நறுமணமிக்க மலர்களையுடைய தூய்மையான கங்கை நீரை சோழர் படை எடுத்தது.. இப்பகுதியை ஆண்ட மகிபாலனை சோழர்கள் வென்றார்கள்.

கங்கையில் நீர் எடுத்து வரும் சோழர் படையை இராஜேந்திரன் கோதாவரி நதிக்கரையில் வரவேற்றார். கங்கை நீர் எடுத்த சோழர் படைக்குத் தலைமையேற்றத் தளபதியின் பெயர் விக்கிரமச் சோழ சோழியவரையனாகிய அரையன் ராசராசன். இவரின் பெயரைக் கேட்டவுடன் எதிரி அரசன் ஒருவர் ஓடி ஒளிந்து கொண்டார் என்கிறது ஒரு கல்வெட்டுச் செய்தி.

கங்கை நீருடன் சோழர்படை தாயகம் திரும்பியது. கங்கைநீரால் சோழபுரம் கோவில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. சோழகங்கம் என்னும் ஏரியும் வெட்டி அதில் கங்கைநீரை கலந்தனர்.

இராஜேந்திரனின் கங்கைவெற்றியை பறைசாற்றும் கல்வெட்டுகள்:
கும்பகோணம் (A.r.e.1932 para 13)  "இராஜேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுது" என்ற கல்வெட்டு பதிவு செய்கிறது.
 
எண்ணாயிரம் என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டில்  ( A.r.e. 1931 -32 part 2 para 3)
" உடையார் ஸ்ரீஇராஜேந்திரசோழதேவர்
 உத்ரபாதத்தில் பூபதியாரை ஜயித்தருளி
 யுத்தோத்சவ விபவத்தால் கங்காப்பரிகிரகம் பண்ணி
 யருளின கங்கை கொண்ட சோழனென்னும்
 திருநாமத்தால்...."

உத்ரபாதம் என்னும் உத்திரலாடத்தில் கங்கை அரசர்களை வென்று கங்கை நீரை கொண்டு வந்து கங்கை கொண்ட சோழன் என்னும் பெயர் பெற்ற உடையார் இராஜேந்திர சோழதேவர்.

ஒரு நீண்ட பயணம். இந்தியாவின் வடபகுதி முழுவதும் சோழர்களின் இராஜாங்கம். ஓர் ஒற்றைச் சொல்... தமிழர்களின் வீரத்தையும் தீரத்தையும் பராக்கிரமத்தையும் பறைசாற்றிய அந்த ஒரு சொல்...
"இராஜேந்திரச் சோழன்"


 
Reference; 
சோழர் செப்பேடுகள், முனைவர் க. சங்கரநாராயணன்.
இராஜேந்திரச் சோழன். குடவாயில் பாலசுப்ரமணியன்.
S.i.i.vol 3. Page 424.

புகைப்படம் உதவி:
முனைவர் சிவராமகிருஷ்ணன்; திருச்சி பார்த்தி 



---