Wednesday, May 30, 2018

ஒக்கூர் மாசாத்தியார்


  முனைவர். வீ. ரேணுகா தேவி
மக்களின் வாழ்வியலை, அவர்களின் காதலையும், வீரத்தையும் அகம் புறம் எனப் பிரித்துப் பாடிய இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். காதலும் வீரமும் நாடு, இனம், மொழி கடந்தவை. எனவே அவற்றைப் பாடிய இலக்கியங்கள் உலகில் வாழும் அனைவருக்கும் உரியன. அவை Universal literature.

சங்க இலக்கியங்களாகத் தொடுக்கப்பட்ட பாடல்கள் 2381. ஆசிரியர் பெயர் தெரிந்த பாடல்கள் 2279, அவற்றை பாடிய புலவர்கள் 475, அவர்களில் சிவகங்கை சீமையைச் சேர்ந்தவர்கள்,
1. புலவர் நல்லந்துவனார்
2. அல்லூர் நன்முல்லையார்
3. வெள்ளைக்குடி நாகனார்
4. ஒக்கூர் மாசாத்தியார்
5. ஒக்கூர் மாசாத்துவனார்
6. மாங்குடி மருதனார்
7. கனியன் பூங்குன்றனார்
8. இடைக்காடர்
9. வேம்பற்றூர் குமரன்
10. பாரி மகளிர்
11. கிள்ளி மங்கலம் கிழார்
12. கிள்ளிமங்கலம் சேரகோவனார்
13. இரணியமுட்டத்து பெருங்குன்றூர்க் கொசிகன்

சங்ககாலத்துப் பெண்மணிகள் பலர் கல்வி கேள்வி வீரப்பண்பு முதலிய எல்லாத்துறைகளிலும் சிறந்திருந்தனர். ஒரு நற்றாய், தன் மைந்தனை வேல் கைக்கொடுத்துப் போர்முகத்துக்கு அனுப்புவளாயின், அவள் தன் வீரத்தறுகண்மையை என்னவென்பது. அந்த வீரத்தாயை பாடியவள் வேறுயாருமில்லை அவர் ஒக்கூர் மாசாத்தியார்.

அதியன் பரிசில் நீட்டித்த போது வெகுண்ட அவ்வை நான் ஒன்றும் நீ அளிக்கப் போகும் பரிசுகளுக்காகக் காத்திருப்பவள் அல்ல. நான் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு வரவேற்பு உண்டு. என்னுடைய கல்வி கேள்விகளில் நம்பிக்கை உண்டு. எனவே நான் புறப்படுகிறேன். கற்றார்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதனை 
”மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசை செல்லினும் அத்திசைச் சோறே”
 என்னும் அவ்வையின் வரிகள் அன்றே வெளிப்படுத்தின. 

அக்கால அறிஞர்கள் தம் வயிற்றுப்பாட்டிற்கு வழிகாண்பதே வாழ்க்கை அதற்காகப் பிறரைப் பாடிப்பிழைப்பதே தம்தொழில் என்பதை மறந்து, தவறு கண்டவழி, அத்தவறு செய்தான் அந்நாடாளும் அரசனே யெனினும், அவன் அரசன்; தமக்கு வேண்டும் பொன்னும் பொருளும் அளித்துப் புரப்பவன்; ஆகவே, அவனைக் கடுஞ்சொல் கூறிக் கண்டிப்பதா என எண்ணாது இடித்துக்கூறித் திருத்துவதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.

அத்தகு புலவர் வரிசையிலே வந்தவர் தான் ஒக்கூர் மாசாத்தியார். அவர் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைத்தவை எட்டு. அவற்றுள் ஒன்று புறத்துறை தழுவிய பாடல் ஏனைய ஏழும் அகத்துறைக் கருத்துக்கள் கொண்டவை. குறுந்தொகைப் பாடல்கள் 126, 139, 186, 220, 275 அகநானூறு 324, 381, புறநானூறு 279. அவர் பாடிய பாக்கள் எல்லாவறுள்ளும், தமிழர்க்கும், தமிழ் நாட்டிற்கும் சிறப்பளித்துத் தனக்கும் புகழ் அளித்த பெரும்பாட்டு, புறநானூற்றில் காணப்படும் பாடல் 279.

தமிழ்நாட்டுச் சிற்றூர்த் தெருவொன்றில் நடந்த நிகழ்ச்சி, நாடு காவலுக்கான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலம்; காலை நேரம், ஊர் நடுவே அமைந்திருக்கும் மன்றத்தே உள்ள போர்ப்பறை ஒலிக்கத் தொடங்கிவிட்டது, அதைக் கேட்டாள் ஒரு கிழவி, நாடு காவலுக்கு நம் தொண்டும் இருக்கவேண்டும், நம் குடிலிருந்து ஓர் ஆள் செல்லவேண்டுமே என்று எண்ணினாள் ஏக்கம் மேற்கொண்டாள; காரணம், போருக்குச் செல்லத்தக்க பேராண்மை மிக்க ஆண்மகன் ஒருவனும் அவள் வீட்டில் இல்லை; அவள் ஆண் துணை அற்றவள் அன்று உடன்பிறந்த ஆண்மக்களையோ மணந்த கணவணையோ பெறாதவள் அன்று, அத்தகைய உறவினரைப் பெற்றே இருந்தாள், ஆனால், சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற போரில் கலந்துகொண்டு, பகைவர் யானைப்படையைப் பாழ்செய்துவிட்டுக் களத்திலேயே மாண்டு மறைந்துபோனான் அவள்  அண்ணன், முன்னாள் நடைப்பெற்ற போரில், பகைவர் யானைவரிசைகளை எதிர்த்துப் போரிட்டு இறந்துபோனான் அவள் கணவன், இருந்த ஆண்மக்கள் இருவரும் இவ்வாறு இறந்துவிட்டனர், அவர்கள் இறந்துவிட்டனர் என்று அவள் கவலை கொள்ளவில்லை, இன்று நடைபெறப்போகும் போருக்குத் தானும் ஒரு வீரனை அனுப்பமுடியவில்லையே, என்றே கலங்கினாள், கலங்கி நின்றவள், சிறிது நேரத்துக்கெல்லாம் எதையோ எண்ணிக்கொண்டவள்போல் தெருக்கோடிக்கு விரைந்தோடினாள். அவள் மகன் அங்கே மயிரை விரித்துக் கொண்டு மண்ணில் புரண்டு ஆடிக்கொண்டிருந்தான். ஒரே மகன், ஆடும் பருவம் கடவாத இளைஞன், அவன் கையைப் பிடித்து அழைத்து வந்தாள், வீட்டினுட் கொண்டுசென்று நீராட்டினாள், பெட்டியில் மடித்துவைத்திருந்த தூய வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து உடுத்தினாள், பறட்டைத்தலையில் எண்ணெய் தடவி வாரி முடித்தாள், அவள் முன்னோர் ஆண்ட வேலைக் கையிலே கொடுத்தாள், தெருவிற்கு அழைத்துவந்து, “அதோ, அங்கேதான் நடை பெறுகிறது போர், போ அங்கே விரைந்து” என்று வழிகாட்டி அனுப்பி, அவன் செல்லும் திசை நோக்கி நின்றாள். அவள் வரலாற்றினையும், அன்று அவள் நடந்துகொண்ட செய்கைகளையும் கண்டனர் அத்தெருவார். அவருள்ளம் திடுக்குற்றது. “என்னே இவள் துணிவு! இவள் செயல், அம்ம! அம்ம!! கொடிது!! மறக்குடி மகள் என்பது இவளுக்கே தகும்” என்று வியந்து பாராட்டினர்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டில் எங்கோ ஒரு பகுதியிலிருந்த சிற்றூர்த் தெருவொன்றில் நிகழ்ந்த இந்நிகழ்ச்ச்சியைத் தமிழர்கள் தமிழகம் உள்ள வரையிலும் மறவாதிருக்கச்செய்த மாண்பு மாசாத்தியார்க்கே உரியது.
“கெடுக சிந்தை கடிதிவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தருமே;
மேனுள் உற்ற செரூவிற்கு இவள் தன்னை
யானை எறீந்து களத்தொழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்உ இவள்கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப் பட்டனனே;
இன்றும், செருப்பறாஇ கேட்டு விருப்புற்றூ மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப்
பாறூமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
’செருமுகம் நோக்கிச் செல்க’ என விடுமே” 

வீரச்சுவையை விளங்கப் பாடிய மாசாத்தியார், இன்பச்சுவை சொட்டும் அகப்பாடல் சிலவும் பாடியுள்ளார்; பொருள் கருதிப் பிரித்து சென்ற கணவன் நினைவாகவே இருக்கிறாள் ஒருத்தி; ஒருநாள் மாலைக்காலத்தே, அவளும் அவள் தோழியும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்நேரத்தில், எங்கிருந்தோ வந்த மணியோசை, காலையில் சென்று காட்டில் மேய்ந்து மாலையில் வீடுதிரும்பும் ஆனிரைகளின் கழுத்தில் கட்டிய மணிகளினின்றூம் வந்திருக்கும்; அல்லது காவலர் புடைசூழத் திரும்பிவரும் கணவன் ஏறிவரும் தேரில்கட்டிய மணிகளினின்றும் வந்திருக்கும். ஆகவே, அவளால் ஓசையைக்கண்டு துணிய முடியவில்லை. மணியோசை கேட்கிறது என்றால், அது மிகச் சேய்மையிலிருந்து வந்திருத்தல் இயலாது; அண்மையிலிருந்தே வந்திருத்தல் வேண்டும்; சிறிதுநேரம் கழித்தால் உண்மை விளங்கிவிடும்; ஆனால், அதுவரை காத்திருக்கவிடவில்லை அவள் உள்ளம்; உடனே அறிந்துகொள்ளத் துடித்தாள்; ஆகவே, அண்மையில் கிடந்த உயர்ந்த கல்மீது ஏறி நின்று பார்த்து அறிந்துகொள்ளலாம் வா எனத் தோழியை அழைக்கிறாள். தலைவியின் உள்ளத்துடிப்பையுணர்த்தும் ஒரு செய்யுள்;
“முல்லை யூர்த்த கல்லுய ரேறீக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி!
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்
புல் ஆர் நல் ஆன் பூண்மணி கொல்லோ!
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல்லில் இளையர் பக்கம் போற்ற
ஈர்மணல் காட்டாறு வரூஉம் 
தேர்மணி கில்? ஆண்டு இயம்பிய உளவே.”

தலைவியின் ஆர்வ உள்ளத்தைக்காட்டிய மாசாத்தியார், தலைவனின் விரைவுள்ளத்தையும் அவன் உள்ளம் அறிந்து ஒட்டும் தேர்ப்பாகனையும் நமக்கு அறிவிக்கும் முறைச் சாலச்சிறாந்தது. வந்த வேலை முடிந்ததும், வீடு அடைவதில் பெருவிருப்புடையன் தலைவன் என்பதை அறிவான் பாகன்; ஆகவே, தேரை விரைந்து ஒட்டிவந்து தலை மகளின் வீட்டு வாயிலில் நிறுத்தி, “இறங்குக” என்று தலைமகனை நோக்கிக் கூறினான். அதுகேட்ட தலைவன் வியப்புற்றுக் கூறுகிறான்; “பாக! தேர் ஏறியது தான் எனக்குத் தெரியும்; தேர் ஓடியதாகவே எனக்குத் தோன்றாவில்லை; இதோ, தலைவியின் வீட்டின்முன் நிறுத்தி விட்டு “இறங்குக” என்ற நின் சொல் கேட்டு வியப்புற்றேன்; வாயுவேகம், மனோவேகம் என்பார்களே, அப்படியல்லவோ வந்திருக்கிறது தேர்! ஒருவேளை காற்றையே குதிரையாக மாற்றிப் பூட்டிக்கொண்டனையோ? அல்லது உன் மனத்தையே குதிரையாக மாற்றிப் பூட்டி ஓட்டிணையோ? எவ்வாறு இவ்வளவு விரைவில் வந்தது தேர்?” என்று பாராட்டிக்கொண்டே, தோளோடு தழுவி அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று விருந்தளித்து மகிழ்ந்தான்.
“ஏறியது அறிந்தன் றல்லது, வந்தவாறு
நனியறிந் தன்றே இலனே;……
மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
“இழிமின்” என்றநின் மொழிமருண் டிசினே;
வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ?
மானுரு வாகநின் மனபூட் டினையோ?
உரைமதி; வாழியே! வலவ.”

மழை பெய்துவிட்ட நிலத்தில் தேர்உருளை ஒடிய வழியே, நீர் விரைந்து ஒடுவது ஊர்ந்து செல்லும் பாம்பு விரைந்து பாய்வதுபோலும் என உவமை காட்டுவதும்,
“தண்ணில மருங்கில் போழ்ந்த வழியுள்
நிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேர்.” 

இலக்கியங்கள் எழுந்த காலத்தின் நிலையைக் காட்டும் காலக் கண்ணாடி. பாரதியும், அவ்வையும், மாசாத்தியாரும் இம்மண்ணிலே தான் பிறந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலம் வேறு வேறு. பிற்கால அவ்வை போர்த் தொழில் புரியேல் என்றாள். அவள் தன்முன்னே கணவனை இழந்த மனைவியும், பிள்ளையை இழந்த தாயும், உடன் பிறந்தவர்களை இழந்த சகோதரியும் வந்து நிற்கிறாள். அவர்கள் ஒரு குடி மக்கள். எனவே போர் வேண்டாம் என்கிறாள். பாரதி வாழ்ந்த காலத்தில் அடிமைப்பட்டு, உணர்வற்றுக் கிடந்த மக்களைப் பார்க்கிறார். எனவே ரௌத்திரம் கொள், போர்த்தொழில் பழகு என்கிறார். மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்ப செய்கிறார். எனவே இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தையும், சூழலையும், மக்களையும், அவர்தம் வாழ்வியலையும் எடுத்துரைக்கும் கருத்துப் பெட்டகங்கள். அவற்றை போற்றுவோம் பாதுகாப்போம், தமிழை வளர்ப்போம்.

துணை நூல்கள்:
சங்க இலக்கியங்கள், 2007, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை.
ரேணுகா தேவி. வீ, 2012, சங்கப் பெண்பாற் புலவர்களின் மொழிநடை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

தொடர்பு:
முனைவர். வீ. ரேணுகா தேவி
தகைசால் பேராசிரியர், மொழியியல் துறை
மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.

No comments:

Post a Comment