Sunday, May 27, 2018

சூரிய மழை பொழிந்த கவிஞன்


―  தமிழ்மைந்தன் சரவணன்


          என் பள்ளி, கல்லூரி நாட்களில் கவிஞர் மு.மேத்தாவின் கவிதைகளின் பால் எனக்கு ஏற்பட்ட தீவிரமான ஈர்ப்புக்குப் பின் மற்ற பிற கவிஞர்கள் எழுதிய புதுக்கவிதை நூல்களையும் வாசிக்கும் ஆர்வம் எனக்குள் பன்மடங்கு வளர்ந்திருந்த சமயம் தான் அந்தக் கவிதைநூலை நூல்நிலையத்தில் கண்டேன். அதன் தலைப்பே "சூரிய மழை " என்று வித்தியாசமாக அமைந்திருந்தது. வாசகனின் மனதிற்குள் ஒரு பிரும்மாண்டமான படிமக் காட்சியை தோற்றிவைத்தது.

          “வாழ்க்கை ராவண வதத்திற்கு என் அம்பறாத்தூளியில் உள்ள சிறு அம்புகளே இந்த கவிதைகள் இதன் கூர்மையும் வலிமையும் துருப்பிடிப்பதைவிட உரசியும் எய்யப்பட்டும் வீர மரணம் எய்தவே விரும்புகின்றன.”

என்று இலட்சிய முழக்கமிட்ட அந்தக் கவிஞனை நினைத்துப் பார்க்கிறேன்.

          எங்கள் ஊரான மண்ணச்சநல்லூரின் நூல் நிலையத்தில் அந்தச் சூரிய மழையில் நான் நனைந்த நாட்கள் பசுமையானவை. என் மரணம்வரை நினைவு சுரங்கத்தில் நீடித்திருப்பவை.  அந்த நூலை வாசித்த சில நாட்களின் பிறகு, திருச்சி தெப்பக்குளம் கடை வீதியில் அமைந்துள்ள பழனியப்பா பிரதரஸ் புத்தக நிலையத்தை நான் கடந்து சென்ற போது " சூரிய மழை " கவிதை நூலைக் கண்டேன் . உடனே அதை வாங்கிய நான் இன்றளவும் அந்த நூலைப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்.


"சூரிய மழை " நூலுக்குப் பிறகு அந்தக் கவிஞர் அனிதா எழுதிய 
"தேரில் வருகிறாள் தேவதை"
"ஒரு ரோஜா பூவும் இரண்டு உதடுகளும்"
"கனவுகள் பூப்பறிக்கும்"
போன்ற கவிதை நூல்களையும் நான் வாசித்த அந்த நாட்கள் இனிமையானவை.  பிற்பாடு வேலை தேடி சென்னை வந்த பின்பு அடிக்கடி ஒரு எண்ணம் எழும் அந்தக் கவிஞன் இப்பொழுது எங்கே என்பதே அது.

"நல்லாம்பள்ளியின் எல்லைக் கல்லே
உலகத்தின் எல்லைக் கல் ஆகி விடுமா" ?
என்று தன் கவிதை நூலில்,  தன் காதல் நாயகியைப் பார்த்து கவிஞர் எழுப்பிய கேள்வியில் இருந்து அவர் பொள்ளாச்சியை அடுத்த சிறு கிராமமான நல்லாம்பள்ளியை சேர்ந்தவர் என்று உணரமுடிந்தது. தமது கவிதை நூலில்  அவரது தொடர்பு முகவரியாக  திருவொற்றியூரை கவிஞர் கூறியிருந்தார். 1982-இல் திருவொற்றியூரில்  தங்கியிருந்தார் என்று நினைக்கிறேன். இப்பொழுது அவர் இருக்கிறாரா ? இருக்கிறார் எனில் இலக்கிய உலகில் ஏன் பங்கேற்கவில்லை ? ஒரு பழைய திரை நட்சத்திரங்களின் இன்றைய வாழ்க்கை குறித்து நம் ஊடகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் தந்து செய்தி வெளியிடுகின்றன. ஒரு இலக்கிய வாதி என்றால்  ஊடகங்கள் மற்றும் மக்களின் இந்த பாரா முகம் ஏன் ? என்பனபோன்ற கேள்விகள் என்னை ஆட்கொள்ளும்.

இந்த கட்டுரையை வாசிக்கும் தமிழர்கள் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள். உங்களுக்கு அவரை பற்றி ஏதேனும் தெரிந்தால் எனக்குத் தொடர்பு கொண்டு சொல்லுங்கள். இந்த பதிவோடு அவரின் கவிதை நூல் முகப்பு அட்டையையும் , கவிஞர் மு.மேத்தாவின் வாழ்த்துரையையும் இணைத்துள்ளேன்.________________________________________________________________________
தொடர்பு: தமிழ்மைந்தன் சரவணன் (saravananmetha@gmail.com)No comments:

Post a Comment