Sunday, May 27, 2018

கம்போடியாவில் தமிழர்களும் பௌத்தப் பரவலும்


―  முனைவர். அரங்கமல்லிகா


          ''உலக அளவில் தமிழர்கள் கடல்  நீரோட்ட  ஆமைவழித் தடங்களை அடிப்படையாகக் கொண்டு வணிகம் செய்துள்ளனர். தமிழகத்தை அரசர்கள் ஆட்சி செய்த காலத்திற்கு முன்னரே கடல் வணிகம் சிறந்து நடைபெற்றுவந்தது. குறிப்பாக, கம்போடியாவில் பல்லவர்கள் சேர சோழ பாண்டியர்கள் பயணம் செய்ததற்கு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கடல்வழி பயணம் செய்துள்ளனர்'' என ஒரிசா பாலு கூறுவது கவனத்திற்குரியது.

          தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக கடற்கரை பகுதி கண்டங்களில் தமிழர்களின் வணிகம் அவர்கள் மேற்கொண்ட அரசியல் உறவு கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வரை பரவி இருந்தது.

          கம்போடியாவில் 5ஆம் நூற்றாண்டிலிருந்து பௌத்தம் நிலைத்திருக்கிறது. ஆதிகாலத்தில் இது மகாயான பௌத்தம் என அழைக்கப்பட்டது.13 ஆம் நூற்றாண்டிலிருந்து பழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் தேரவாத பௌத்தம் கம்போடியாவில் நிலைத்திருப்பதாகக் கூறுவர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கம்போடியா தமிழ் சைவ வைணவ சமயங்களை உள்வாங்கியிருக்கிறது. தமிழர்கள் குறிப்பாக, இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, முறையே சமண, பௌத்த மதங்களினுடைய எழுச்சி தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பதற்கான இலக்கியச் சான்றுகளாக இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் மாசாத்துவன் என்ற வணிகரும் மாநாயக்கன் என்ற வணிகரும் முறையே கடல் கடந்து வாணிகத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் பௌத்தமும் அங்கே சென்றிருக்க வாய்ப்பிருக்கின்றது என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

          இதற்கு கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில் ஒரு சான்றாக அமைகிறது. அங்கோர்வாட் இரண்டாம் சூர்யவர்மன் (கி.பி1113-1150) என்பவரால் கட்டப்பட்டது. இந்தக் கோவில் பல்வேறு சிலைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபங்களின் கூரைகள் பாம்புகளின் உடல்களையும் சிங்கம் அல்லது கருடனின் தலைகளைக் கொண்ட உருவங்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிறிய கோவில்களும் அங்கே இருப்பதைக் காணமுடிகிறது. இரண்டாம் சூர்யவர்மன், வர்மன் என்ற பல்லவ மன்னனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் அங்கோர்வாட்டில் பெருமாள் கோயிலைக் காட்டியவர் ஆவார். இவர் கெமர் பேரரசின் சிறந்த அரசராக விளங்குவதற்கு இந்தக் கோவில் கட்டிடக் கலையே சான்றாக இருக்கின்றது. போரின் மூலம் இந்த இடத்தைக் கைப்பற்றிய சூர்யவர்மன், சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் இந்தக் கோயிலைக் கட்டி முடிக்க முயன்றிருக்கிறார். சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்றுச் சுவரே சுமார் 3.6கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் இதன் பிரமாண்டத்தைக் கற்பனை செய்துகொள்ளலாம். அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்தக் கோயில் அமைந்திருப்பதனால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்த்துக்கீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது. இந்தக் கோயில் போன்ற ஒன்றை இப்போது கட்ட வேண்டும் என்றால் 300 ஆண்டுகள் ஆகும் எனப் பொறியாளர்கள் கூறுகிறார்கள். கோயில் கட்டி முடித்த சில காலங்களில் மன்னர் இறந்துவிடவே அதன் பிறகு ஆறாம் ஜெயவர்மன் காலத்தில் இந்தக் கோவில் 'புத்த' கோயிலாக மாறி இருக்கிறது. 

          பழங்காலத்தில் வைணவக் கோயிலாக இருந்த இந்த வழிபாட்டுத்தலம் புத்த வழிபாட்டுத் தலமாக எவ்வாறு மாறியது என்பது இந்தக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.          

          பழங்காலத்தில் கம்போடியாவில் ஃபூனான் முதல் அங்கோர் வரை பௌத்தத்தின் வரலாற்றை விளக்கமாகப் பேச முடியாது என்றாலும் பௌத்தம் இங்கு வந்த பிறகு புத்தரின் வரமுத்திரை மற்றும் பரிநிர்வாண நிலை கொண்டு கம்போடியாவில் பௌத்தம் இருந்ததை உணர்ந்து கொள்ளமுடிகிறது. இங்கே தேரவாத பௌத்தம் பழக்கத்தில் இருந்தது என்பர். இதற்கு தாய்லாந்தில் இருந்த தேரவாதம், ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்து சமூகத்திலிருந்து மன்னர்கள் வெவ்வேறு நாடுகளில் ஆட்சியைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்கள் பௌத்தத்தை ஆதரித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதனால்தான் எங்கெல்லாம் பௌத்தமும் சமணமும் பேசப்பட்டனவோ அங்கெல்லாம் சைவமும் வைணவமும் பேசப்பட்டிருக்கின்றன. பௌத்த அறிஞர்கள் வைணவத்தை மகாயான பௌத்தம் என்று அழைப்பர். கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடங்கி 12ஆம் நூற்றாண்டு வரையில் பௌத்தம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்த அடிப்படையில் அது தேரவாத பௌத்தமாக வெளிநாடுகளிலும் பரவி இருந்திருக்கிறது. தேரவாதம் என்பது

1.  திரிலக்கனம்
2.  அனிச்சா
3.  துக்கா
4.  அநாத்மா
5.  எண் வழி மார்க்கம்
6.  12 நிதானங்கள்
பற்றிய தொகுப்பு ஆகும். இதனை கம்போடிய அரசு நடைமுறையில் காணமுடிகிறது என ஆய்வியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இலக்கியத் தரவுகளின் படி, 'திரிபிடகம்' அறியப்பட்டிருக்கிறது. அங்கோர்வாட் கோயில் தமிழர்களின் கோயில் கலை வரலாற்று அடையாளமாக இருந்தாலும் அது கட்டிடக் கலை, மன்னர்களின் படையெடுப்பு, மன்னர்களின் சிறந்த நிர்வாகம் முதலியவற்றைப் பேசக்கூடிய கெமர் பேரரசின் வரலாற்று ஆவணமாக இருந்தாலும் அதற்குப் பிறகு 7ஆம் ஜெயவர்மனின் ஆட்சியில் இது புத்த வழிபாட்டுத் தலமாக மாறியிருக்கிறது என்று கருத்துச் சொல்லப்படுகிறது. 



ஆனால், கிபி. முதல் நூற்றாண்டிலிருந்து கிபி.6ஆம் நூற்றாண்டு வரை தென்கிழக்கு ஆசியா முழுவதும் பௌத்தம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதற்குத் தமிழர்களின் வணிகப் பயணமே காரணமாக இருக்கிறது. இக்காலகட்டத்தில்தான், ஃபூனான் வம்சத்தினரை கம்போடிய அரசர் என அழைக்கின்றனர். கிபி முதல் நூற்றாண்டிலிருந்து கம்போடிய அரசர்கள் ஃபூனான் வம்சத்தினர் என அழைக்கப்பட்டாலும் கம்போடியாவில் வடக்கும் தெற்கும் முரண்பட்டே இருந்திருக்கின்றன. கம்போடியாவின் ஒரு பகுதி ஜாவாவின் ஒரு பிடிக்குள் இருந்திருக்கிறது. 8ஆம் நூற்றாண்டில் ஜாவாவிலிருந்து வந்த இளவரசன் கம்போடியாவை ஜாவாவிடமிருந்து பிரித்து தனிநாடாக்கி ஆளத் தொடங்கியவன்தான் 2ஆம் ஜெயவர்மன். கெமர் கலாச்சாரம் அவரிலிருந்து தொடங்குவதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த ஆட்சியில் மக்கள் எளிமையான வாழ்வுக்குரியவர்களாக இருந்திருக்கிறார்கள். பௌத்தத் துறவிகளாக வாழ ஆசைப்பட்டுள்ளனர். பௌத்தத் துறவிகளாக வாழும் விருப்பமுள்ள இளைஞர்கள் இருந்திருக்கிறார்கள். பௌத்த வழிபாடு பெரிதாக இல்லை என்று கூறுகின்றனர். எனினும், தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து சென்ற மன்னன் மற்றும் பல்லவ மன்னர்கள் இங்கே ஆட்சி செய்ததனால், தமிழர்களுடைய அரசாட்சியும் அங்கு வாழக்கூடிய பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது, தமிழகத்தில் மறைக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன் இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருப்பதனால், தமிழகத்தினுடைய பல்வேறு வேளாண் சார்ந்த தொழில்முறையும் அங்கே அறிமுகப்படுத்தி தமிழ் நாகரீகத்தை உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இந்தச் சூழலில், கம்போடியாவில் பௌத்த மதத்தைப் பொறுத்தவரையில் தாய்லாந்து, பர்மா, இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள இந்தத் தேரவாத பௌத்தம் கம்போடியாவில் தா ப்ரோம் கோயிலில் நுழைந்தவுடன் தூணில் செதுக்கப்பட்டுள்ள புத்த சிற்பம் அமைந்திருப்பதைக் கொண்டு இந்தியாவினுடைய ஆளுகையில் உள்ள பௌத்தம் கம்போடியாவிலும் நிலைபெற்றிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அத்துடன், 'கம்போடியாவில் ஆட்சி செய்துவந்த 30 மன்னர்களின் பெயர்கள் தமிழ் இன வழித்தோன்றலான நந்திவர்மன் என்ற பெயர் இருந்துவருகிறது இதில் கம்போடிய நாட்டின் வரலாற்றில் தமிழக மன்னர்கள் வருகை புரிந்ததற்கான குறிப்புகள் புத்தக வடிவில் உள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌண்டையன் என்ற மன்னன் வருகை புரிந்ததற்கான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன' என்று ஒரிசா பாலு குறிப்பிடுவதைக் கொண்டு காஞ்சிபுரம் பௌத்தத்தின் அடையாளம் சார்ந்ததை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதே போல, 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பல்லவ மன்னர்கள் கம்போடியாவில் ஆட்சி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறுகிறார். அதில் ஒன்றாக, தமிழகத்தின் காஞ்சிபுரம் கல்வெட்டில் கம்போடியாவில் இருந்துவந்த பல்லவ வழித் தோன்றல்களான நந்திவர்மனின் மகனுக்கு 13 வயதில் முடிசூட்டு விழா நடத்தப்பட்டதற்கான குறிப்புகள் காஞ்சிபுரம் கல்வெட்டில் உள்ளது என்றும் கூறுகிறார்.



          ''தா ப்ரோம் கோயிலைக் கட்டத் தொடங்கிய ஏழாம் ஜெயவர்மன் புத்த மதத்தினன். அவனுக்குப் பின் வந்த இந்துவான இரண்டாம் இந்திர வர்மன் அக்கோயிலைக் கட்டி முடித்தான். முதலில் செதுக்கப்பட்ட புத்தர் சிற்பத்தின் சம்மணக் கால்களை மடக்கி இந்துக் கடவுள் போலும் அது தோற்றமளிக்க வைக்கப்பட்டுள்ளது. உடைப்போ சிதைப்போ இல்லாமல் சிலை இரு மதத்தின் கடவுள்களாகவும் விளங்குவதைப் புத்த, இந்து மதங்கள் ஒன்றின் மீது மற்றொன்று கவிந்தாற் போல் உறவு கொண்டிருந்ததன் உருவகமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கம்போடியாவிலுள்ள அங்கோர் கோயில்களைக் கட்டிய மன்னர்கள் புத்த, இந்து மதங்களின் வம்சாவளியினராக ஒரு தொடர்ச்சியைக் கொண்டிருந்தனர். இரண்டு மதங்களுக்குமிடையே சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டிருக்கலாம் எனக் கொண்டாலும் கொண்டும் கொடுத்ததுமான ஒரு நீண்ட உறவு அங்கு நிலவி வந்துள்ளதை அறிய முடிகிறது. ஆனால் கம்போடியாவில் இவ்விரு மதங்கள் புகுமுன் அங்கிருந்த மதம், அதன் சடங்குகள், புராணங்கள் என்பன பற்றியெல்லாம் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரைக் கிடைக்கவில்லை'' என்று கோ.ஜெயக்குமார் கூறுகிறார்.  

          ''மகேந்திர வர்ம பல்லவன் காலத்துக் கல்வெட்டில் திருமால் அவதாரங்களில் ஒன்றாக புத்தர்பிரான் போற்றப்பட்டுள்ளார். ராஜசிம்ம பல்லவன், சீன வணிகர் வழிபட்ட நாகைபட்டினத்தில் புத்தவிகாரம் நிறுவினார். சிவபெருமானை இறைஞ்சி மங்கலம்பாடி இயற்றிய மிருகச்சகடிகம் என்ற நாடக நூலை எழுதிய சூத்திரிகன், நூலின் இறுதியில் பௌத்த சமயத்தின் புகழைப் பாடியுள்ளார். தேவாரத் திருமுறைகளைத் தொகுத்துத் திருநெறித் தமிழைப் பரவச் செய்த ராஜராஜ சோழன், நாகையில் புத்தவிகாரம் கட்டி ராஜராஜ பெரும்பள்ளி என்று பெயரிட்டான். காஞ்சி நகர அரசன் சீனத்திலும் ஜப்பானிலும் கிபி 6ஆம் நூற்றாண்டில் பௌத்தத்தைப் பரப்பி அழியாப் புகழ் பெற்றான். காஞ்சியைச் சேர்ந்த திக்நாகர் மிகப்பெரிய பௌத்த ஆசிரியர். இவர் மாணவரே காஞ்சித் தமிழரும் நாளந்தா பல்கலைக்கழகத் தலைமை பேராசிரியருமான தருமபலார்(கிபி.528-560). சீத்தலைச் சாத்தனார், புத்தத்ததர், புத்த நந்தி, சாரிபுத்தர் போன்ற தமிழ் பௌத்தர்கள் பாலி மொழியை நன்கு பயின்று பௌத்த சமய நூல்களில் பெரும் புலமை பெற்றிருந்தனர். கலையிலும் சிறந்து விளங்கினர்'' என்பதிலிருந்து பௌத்த நெறி எல்லா நாடுகளுக்கும் பரவி இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

          அயோத்தி தாசர், பேராசிரியர் க.அப்பாதுரையார், ஆகியோர் தமிழ் பௌத்தத்தை முன்னெடுத்து இலங்கையிலிருந்து பௌத்தத்தைக் கற்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார்கள். அயோத்திதாசர் இந்துமதத்தை அந்த மதத்திலிருந்து அடிப்படைக் கருத்துகளை விமர்சித்து பௌத்தத்தோடு தொடர்புப்படுத்தி தமிழ் பௌத்தத்தை அடையாளப்படுத்தினார். அதற்குத் தமிழ் இலக்கியத்திலுள்ள மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம் புராண இதிகாச காப்பியங்களிலுள்ள தத்துவங்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கான விளக்கங்களைப் பௌத்தம் சார்ந்து ஒரு புதிய அணுகுமுறையைக் கண்டுபிடித்து தமிழ் பௌத்தத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் பௌத்தம் நாடு கடந்து பயணப்பட்டிருந்தாலும் தமிழர்களின் வாழ்வியலோடு அது தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. அன்பையும் அறத்தையும் போதிக்கக்கூடிய பௌத்தம் புத்தருடைய அடிப்படை ஒழுக்கம் சார்ந்த சிந்தனைகளின் கருத்தியலாகவே பார்க்கப்படுகிறது. தனிமனித விடுதலையும் எல்லா உயிர்களிடத்தும் இரக்கத்தோடு இருப்பதையும் முன்னிலைப்படுத்தும் பௌத்தம் தென்கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பௌத்தம் இந்தியாவின் தாயகம் என்றாலும் அது இலங்கை, பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளிலேயே அதிகமாக வழிபாடு கூடிய பயிற்சியுடன் பழக்கத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

          எனவே, வணிகத்தாலும் தமிழர் மரபுகள் கம்போடியாவில் நிலைப்பட்டிருப்பதைத் தமிழுக்கும் பௌத்தத்திற்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள தேரவாத பௌத்தமும் பயன்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புத்தரின் சிந்தனைகள் பேசப்பட்டாலும் அறஹந்த் நிலையடைந்த புத்தர் பௌத்தச் சிந்தனைகளை எழுதி வைத்துப் பேசவில்லை. அவருடைய சீடர்கள் தொகுத்த தொகுப்பே திரிபிடகமாக அறியப்பட்டிருக்கிறது. பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுகவேண்டிய விநயம், தம்மம் குறித்துப் பேசுகிறது இந்நூல். புத்தருடைய பழைய கொள்களைகளைப் பின்பற்றி வரும் பௌத்த மதத்திற்கு தேரவாத பௌத்த மதம் என்றும் புத்தர் காலத்திற்குப் பின்னால் புதிய கொள்கைகளைக் கொண்ட பௌத்த மதத்திற்கு மகாயான பௌத்தம் என்றும் பெயரிட்டு இரு பெரும் பிரிவாக பௌத்தத்தைப் புழக்கத்தில் கொண்டுவந்துள்ளனர்.

          கப்பலில் பயணம் செய்வோருக்குத் துன்பத்திலிருந்து நல்லோரைக் காப்பாற்றுவதற்காக மணிமேகலா தெய்வம், காதல் தெய்வமாக இருந்ததைத் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலைச் சுட்டிக்காட்டுவதைப் போல கம்போடியாவிலும் மணிமேகலை கடல் தெய்வமாக நம்பப்படுகிறாள். தேரவாத பௌத்தம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. ஆனால், புத்தரின் நினைவாகப் பல ஸ்தூபிகளையும் விகாரங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. மனித இனத்தை மேம்படுத்த நல்லொழுக்க விதிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பஞ்சசீலங்களும் எண்வகை மார்க்கங்களும் பன்னிரண்டு நிதானங்களும் நான்கு உண்மைகளும் பௌத்தத்தின் நடைமுறையை உறுதிப்படுத்துகின்றன. 

          சீலம் அதாவது ஒழுக்கம், சமாதி அதாவது மன ஒருமை, பஞ்சா அதாவது விழிப்புணர்வு ஞானம் ஆகிய மூன்றும் மனம் சார்ந்த ஒழுக்கத்தையும் நற்காட்சி, நற்சிந்தனை, நற்சொல், நற்செயல், நல்முயற்சி, நல்மன ஒருமை, நல்ல பேரின்பம் ஆகிய எட்டையும் வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கத்தையும் இது விரிவாகப் பேசுகிறது. வாழ்வில் துன்பம் இருக்கிறது. துன்பம் நீக்க முடியும். துன்பம் தோன்றக்கூடியது என்றாலும் அதை நீக்குவதற்கு உரிய வழியும் உண்டு என நான்கு உண்மைகளை மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன், பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு. வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் எனப் பன்னிரண்டை நேரிடையாகவும் மறைமுகமாகவும் கடைப்பிடிக்கவேண்டிய அவசியத்தை மணிமேகலையின் மூலம் அறியமுடிகின்றது. எனவே, கம்போடியாவைப் பொறுத்தவரையில் புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரித்தல் மந்திரத் தந்திரங்களைப் பயன்படுத்துதல் ஆகியன மகாயானப் பிரிவின் ஓர் அம்சமாகக் கருதுவதால், இந்து சமய யோக நெறிகளைப் போலப் பின்பற்றி புத்தரின் கோட்பாடுகள் பேசப்படுகின்றன. இது வைணவத் தலமான அங்கோர்வாட் பௌத்த தலமாக மாறியதாகக் கூறப்படும் கருத்திலிருந்து மாறுபட்டு இரண்டாம்-மூன்றாம் நூற்றாண்டுகளில் சமணமும் பௌத்தமும் தென்கிழக்காசிய நாடுகளில் பரவியதனால் அது பௌத்தத் தலமாகவே அறிந்துகொள்ள முடிகிறது.

          தமிழர்கள் குறிப்பாக பழங்குடியினர் மற்றும் வணிகர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் பிழைப்பிற்காகக் கடல் கடந்து பயணப்பட்டாலும் அவர்கள் காஞ்சியை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாற்றுப் படி பௌத்தத்தைக் குறிப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என அறிய முடிகிறது. தமிழரின் பண்பாட்டு அடையாளம், மீட்டுருவாக்கம் செய்வதற்கு அங்கோர்வாட் கோயில் ஒரு பெரிய சான்றாக அமைகிறது.  

பயன்பட்ட நூல்கள்:
1.தமிழ்மணம்
2.தமிழ்ப் பண்பாட்டில் பௌத்தம்-முனைவர். பிக்கு போதிபாலா முனைவர் க.ஜெயபாலன், உபசாகர் இ.அன்பன்
3.கம்போடியாவில் நிலைத்து நிற்கும் தமிழர் மரபு-ஒரிசா பாலு



படம் உதவி: 
விக்கிபீடியா (அங்கோர்வாட்)  
தேமொழி (பல்லவ மன்னர்கள்)


________________________________________________________________________
தொடர்பு: முனைவர். அரங்கமல்லிகா (arangamallika@gmail.com)


No comments:

Post a Comment