Sunday, May 13, 2018

திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டுகள்



— து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழுவின் திருவையாறு மரபு நடைப்பயணத்தின்போது (06-05-2018) திருச்சென்னம்பூண்டித் திருக்கடைமுடி மஹாதேவர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். கல்வெட்டுகள் பலவற்றைக் கொண்டுள்ள  வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இக்கோயிலின் நிலைக்காலில் உள்ள கல்வெட்டின் ஒளிப்படம் கீழே தரப்பட்டுள்ளது.  கல்வெட்டின் பாடமும் விளக்கமும் இங்கே:

கல்வெட்டுப்பாடம்:


1    ஸ்வஸ்திஸ்ரீ
2    தெள்ளாற்றெ
3    றிந்த  நந்தி
4    ப்போத்தரைய
5    ர்க்கு யாண்டு
6    18 ஆவது தி
7    ருக்கடைமுடி
8    மஹாதேவர்க்
9    கு இரண்டு நொ
10   ந்தா விளக்கினு
11   க்கு குடுத்த பொ
12   ன் அறுபதின்
13   கழஞ்சு இப்பொ
14   ன் கொண்டு பலி
15   சை ஊட்டினா
16   ல் நாழ்வாய் நா
17   ழி நெய் முட்டாமே





விளக்கம்:
பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன், அவனை எதிர்த்த சோழரையும், பாண்டியரையும் வெள்ளாறு என்னுமிடத்தில் நடந்த போரில் தோற்கடித்ததனால் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று அழைக்கப்பெறுகிறான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 825-850. இவனது 18-ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுதான் நாம் இங்கு காணுவது. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 843.  கல்வெட்டுப்படம் முழுக்கல்வெட்டையும் காட்டவில்லை.  

“ஸ்வஸ்திஸ்ரீ”  என்னும் மங்கலச் சொல்லுடன் கல்வெட்டு தொடங்குகிறது. ஸ்வஸ்திகச் சின்னமும், ஸ்ரீவத்சமும் இணைந்ததுதான் “ஸ்வஸ்திஸ்ரீ”.  இச்சொல் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. சோழ அரசர்கள், பரகேசரி, இராசகேசரி என்னும் சிறப்புப் பெயர்களைத் தம் பெயருடன் இணைத்துக்கொண்டதுபோல், பல்லவர் தம் பெயருடன் போத்தரையர் (போத்தரைசர்) என்னும் சிறப்புப் பெயரை இணைத்துக்கொண்டனர்.  போத்து என்பது ஆண்கன்றினைக் குறிப்பது. பல்லவரின் இலச்சினை நந்தி (காளை) ஆகையால், அரசர்கள் போத்தரையர் என்று சிறப்புப் பெயரை இணைத்துக்கொண்டனர் எனக் கருதலாம். அரசரின் ஆட்சியாண்டு பதினெட்டு என்பது தமிழில் வழங்கும் எண்களின் குறியீட்டில் எழுதப்பட்டுள்ளது (ய=10 அ=8, யஅ=18). கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவரின் பெயர் கடைமுடி மகாதேவர்  என்பது. கடை என்னும் காலின் அடியையும், முடி என்னும் தலை முடியையும் அயனும், மாலும் காணப் பெறாமல் நின்ற காட்சியை இலிங்கோத்பவர் சிற்பத்தில் காண்கிறோம். அதன் அடிப்படையில் திருக்கடைமுடி மகாதேவர் என்னும் பெயர் அமைந்திருக்கக் கூடும். ஆனால், இதே கோயிலின் வேறு கல்வெட்டுகள் இறைவனின் பெயரைத் திருச்சடைமுடி மகாதேவர் என்றும்  குறிப்பிடுகின்றன.

கல்வெட்டு, கோயிலுக்கு நொந்தாவிளக்குக்கு (நந்தாவிளக்கு என்னும் வழக்கும் உண்டு) அறுபது கழஞ்சு பொன் கொடை கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது. இந்தப் பொன் அறுபது கழஞ்சு ஸ்ரீபண்டாரத்தில் (கோயில் கருவூலத்தில்) முதலாக (மூலதனமாக) வைக்கப்படும். அதிலிருந்து கிடைக்கப்பெறும் பலிசையால் (வட்டி) நாள்தோறும் ஒரு நாழி நெய்யைக் கொண்டு விளக்கேற்றப்படும். பலிசை, சில கல்வெட்டுகளில் பொலிசை எனவும் குறிக்கப்பெறும். விளக்கெரிக்கும் செயலுக்குத் தடை ஏற்படக்கூடாது என்பதைக் குறிக்கக் கல்வெட்டில் “முட்டாமே”  (முட்டாமல்) என்று குறித்திருப்பதைக் காணலாம்.



___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.



No comments:

Post a Comment