Sunday, December 31, 2017

தொல்லியல் தடயங்களைத்தேடி-சாலைப்புதூர்


——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
          நண்பர் துரை பாஸ்கரன், தாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருந்த சில பழங்கோயில்களை நினைவு கூர்ந்து, அவற்றை இப்போது சென்று பார்க்கலாமா என்று அண்மையில் கேட்டிருந்தார். தொல்லியல் தடயங்களைத் தேடும் ஆர்வத்தால் ஒப்புக்கொண்டேன். நீண்ட நாள்களுக்குப் பின்னர் இக்கோயில்களின் நினைவு வந்த காரணம் பற்றிக் கேட்டபோது அதன் பின்னணியைக் கூறினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மலையேற்றப் பயிற்சி பெற்ற நண்பர்கள் சிலர் கோவையில் ஒரு குழு அமைத்து இயங்கிவந்தார்கள். அப்போது, குழுவைச் சேர்ந்த ஒருவர், சாலைப்புதூர் அருகில் விண்ணிலிருந்து வீழ்ந்த எரிகற்கள் கிடைப்பதாகக் கூறவே, குழு நண்பர்கள் சிலர் அவற்றைப் பார்ப்பதற்காகச் சாலைப்புதூர் சென்றுள்ளனர்.    அந்நிகழ்வைக் குழுவினருள் ஒருவரான சின்ன சாத்தன் என்பார் தாம் எழுதிய “வனவலம்”  என்னும் நூலொன்றில் ”விண்கற்களைத் தேடி ஒரு பயணம்” என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதில், பயணத்தின்போது பார்த்த ஓரிரு பழங்கோயில்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. அந்த நூலை அண்மையில் பார்க்க நேர்ந்த நண்பர் துரை பாஸ்கரன் மீண்டும் அங்குச் சென்று பார்க்கும் விழைவால் என்னை அழைத்துள்ளார். சென்ற 11-11-2017 அன்று, நண்பரும், நானும் சாலைப்புதூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டோம். அதன் பகிர்வு இங்கே.

பயணம்:
          பல்லடம்-உடுமலை சாலையில் அமைந்துள்ளது சாலைப்புதூர். அங்கே, சாலையோரத் தேநீர்க் கடையில், தொகுப்பாக இருக்கும் பழங்கோயில்களின் இருப்பிடம் பற்றிக் கேட்டறிந்தோம். சாலைப்புதூரிலிருந்து கிழக்கே பிரியும் வண்டித் தடத்தில் எங்கள் நடைப் பயணம் தொடங்கியது. நண்பர், கல்லூரியில் தாவர இயலும் படித்தவர். பறவைகளைக் கண்டறியும் முறையையும் கற்றிருக்கிறார். எனவே, பயணத்தின்போது வழியில் செடிகளைப் பற்றிப் பேசிக்கொண்டும் சில செடிகளை இனம் கண்டு காண்பித்துக் கொண்டும் வந்தார். அண்மைக்கால மழைப்பொழிவினால், வண்டித்தடம் ஒரு மண்பாதை. இரு புறமும் செடிகளும் செடிகளுக்கப்பால் சோளப்பயிரும் சூழ்ந்து பசுமை கூட்டின. நகரத்தின் ஒலி, காற்று மாசுகளினின்றும் நமக்கு விடுதலை அளித்த ஓர் அழகான சூழல்.

அழகான வண்டிப்பாதை

நரிக்கற்களால் அமைந்த வேலிச் சுவர்


          பாதையில் ஒரு சில இடங்களில், பயிர் நிலங்களின் எல்லையாக நிற்கும், கற்களாலான சுற்று வேலிச்சுவர். சிறு சிறு கற்கள்; நெருக்கமாக அடுக்கிச் சுவராக்கியிருந்தார்கள். இவற்றை “நரிக்கல்”  எனக்குறிப்பிடுவர் என்று நண்பர் தெரிவித்தார். பாதையின் இரு புறங்களிலும் பல்வேறு செடிகள். நண்பர் வேலிப்பருத்தி என்று ஒரு செடியைக் காட்டினார். இன்னொரு செடியைச் சூரல் கொடி எனச்சொன்னார். சூரல் கொடியை (செடி?) இப்போதுதான் நான் காண்கிறேன். இந்தச் சூரல் கொடி மிகுந்து காணப்பட்டதால் சூரலூர் என்று தற்போதுள்ள சூலூரின் பெயர் வழங்கியது என்று தொல்லியல்-கல்வெட்டு அறிஞர் பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. கல்வெட்டுகளிலும் சூரலூர் என்றே சுட்டப்பெறுகிறது. பெயர் தெரியாத ஒரு காட்டுச் செடியில், ஊதா வண்ணத்தில் மலர் ஒன்று பூத்திருந்தது ஓர் அழகான காட்சி. வேலிக்கல்லின் மீது ஓர் ஓணான் தலையைத் தூக்கி நின்றுகொண்டிருந்தது.


சூரல் கொடி

வேலிப்பருத்தி

ஊதாப்பூ

வேலிக்கல்லில் ஓணான்

கோயில் வளாகம்:
          பதினைந்து நிமிட நடைக்குப் பின்னர் ஒரு கோயில் வளாகத்தை அடைந்தோம். அங்கே நாலைந்து கோயில்கள் காணப்பட்டன. கோயில்கள் பற்றிக் கேட்டறிய அங்கே எவரும் இல்லை. ஒன்றில் பெரிய குதிரையின் உருவத்தின் அடிப்பகுதியில் இருந்த தற்காலத்துக் கல்வெட்டு, அது, கரையாம்பாளையம் மதுரை வீரன் கோயில் என்றது. கல்வெட்டில் காணப்பட்ட துந்துபி ஆண்டு 1982-ஐக் குறிக்கும். மற்றொரு கோயில் பத்ரகாளியம்மன் கோயில் என்று பின்னர் அறிந்தோம். இக்கோயிலின் விமானம் சாலை அமைப்பைக் கொண்டிருந்தது. இரண்டு அடுக்கு கிரீவப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இன்றி, வெறுமையான சுவர்களே காணப்பட்டன. உச்சியில் மூன்று கலசங்கள். கோயிலின் முன்புறத்தில் உள்ள கல்லாலான விளக்குக் கம்பம் தவிர்த்து கருவறை, மண்டபம் ஆகியன செங்கல் கட்டுமானம். முழுதும் சுண்ணம் பூசப்பெற்று வெண்மை நிறத்தில் காணப்பட்டது. பழங்கோயிலின் ஓரிரு கற்கள் மண்ணில் கிடந்தன. ஒரு மரத்தடியில், பலகைக் கல் பரப்பின்மீது மூன்று சிறு கற்கள், இரு பெரிய கற்கள் என ஐந்து கற்கள் பதிக்கப்பெற்றிருந்தன. எவ்விதச் சிற்பச் செதுக்கல்களும் இல்லாமல் இயல்பாய்க் கற்களை ஐந்து, ஏழு என வரிசையாய்ப் பதித்து வைத்து வழிபடும் வழக்கம் நாட்டுப்புறங்களில் நம் காணும் காட்சிகளுள் ஒன்று. இது பற்றி சக்தி பிரகாஷ் என்பவர் தம் முக நூலில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்:

கோயில் வளாகம்

மதுரை வீரன் கோயில் குதிரை

பொட்டுசாமி 

        ”கொங்குப் பகுதியில் பெருவாரியான ஊர்களில் இன்றளவிலும் மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம்தான் "பொட்டுசாமி". இந்த பொட்டுசாமி நமது தொன்ம வழிபாடான நடுகல் வழிபாட்டின் நீட்சியாகக் கருதலாம்.

          கொங்குப்பகுதிகளில் பொட்டு சாமியை ஊர் மந்தையிலும், குலதெய்வக் கோவில்களிலும், பிள்ளையார் மாரியம்மன் கோவில்களுக்கு நடுவிலும், நடுகற்களின் அருகிலும் காணலாம்.

          பொட்டுசாமியை 1,3,5,7,9 என வரிசையாகக் கூர்மையான கற்களை நட்டு வழிபடுவர் . சில இடங்களில் அதற்கு வெள்ளையடித்தும் , சிவப்பு கருப்பு இட்டும் வழிபடுகின்றனர் . பெரும்பாலும் தனிமேடை அமைத்து அதன்மீது வைக்கப்பட்டுள்ளது.”

          இங்கே ஐந்து கற்களின் வழிபாட்டு வடிவமும் பொட்டுசாமியாகலாம். கோயில் வளாகத்தில் விளக்குக் கம்பத்துடனும், சிங்க ஊர்திச் சிற்பத்துடனும் கூடிய இன்னொரு அம்மன் கோயிலும், மேலும் மூன்று சன்னதிகள் கொண்ட ஒரு வரிசையும் இருந்தன. இந்த வளாகம் முழுதும் பல கோயில்கள் இருந்தும் தொன்மைச் சான்றுகளோ, கல்வெட்டுகளோ இல்லாதது எங்கள் பயண நோக்கத்துக்குப் பயன் விளைவிக்கவில்லை.

மேற்கு சடையம்பாளையம் கண்டியம்மன் கோயில்:
          அடுத்து, ஓர் இருபது நிமிட நடையில், தென்னந்தோப்பு ஒன்றைச் சுற்றிச் சென்ற மண்பாதையில் நடந்தும் ஓர் ஆற்றுப்பள்ளத்தைக் கடந்தும் சென்ற பின்னர் நாங்கள் சென்றடைந்தது கண்டியம்மன் கோயில். இது, சடையம்பாளையம் மூவர் கண்டியம்மன் கோயில் என்றும், தலை கண்டியம்மன் கோயில் என்றும் இரு பெயர்கள் கொண்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் முதன்மையாக விளங்கும் கண்டியம்மன் கோயிலோடு, பஞ்சகன்னியர் சன்னதி, விநாயகர் சன்னதி என இரு சிறு கோயில்கள். கண்டியம்மன் கோயிலின் கருவறை விமானம் ஒரு தளக் கிரீவத்துடனும் சாலை அமைப்பைக் கொண்ட சிகரத்துடனும் காணப்படுகிறது.. நாயக்கர் காலக் கட்டுமானங்களுக்குப் பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் காலத்துக் கட்டுமானச் சாயல் எனலாம். இவ்வகைக் கோயில் விமானங்களில் தளச் சிற்பங்களின் (சுதைச்சிற்பங்கள்) வேலைப்பாடுகளிலும் உருவங்களிலும் அழகோ, திருத்தமோ காணப்படுவதில்லை. மனித உருவச் சிற்பங்களும் இயல்புக்கு ஒவ்வாத நீளங்களில் கைகளையும், கால்களையும் கொண்டு காட்சியழகு சிறிதுமின்றிக் காணப்படுகின்றன. சாலைச் சிகரத்தின் ஒரு புறம், மடியில் மனைவியை இருத்திய தோற்றத்தில் விநாயகர் சிற்பம் உள்ளது. மற்றொரு புறம் மூன்று முனிவர்களின் சிற்பங்கள். ஒரு முனிவர் புலித்தோலின் மீது அமர்ந்திருக்கிறார். புலித்தலை நன்கு புலப்படுகிறது. மற்றொரு புறம் மகரதோரணத்தின் நடுவிலும் ஒரு முனிவர் சிற்பமே காணப்படுகிறது. விமானச் சிற்பங்களில் முனிவர்களின் உருவங்களைத் தவிர கடவுளர்களின் உருவங்கள் இல்லாதது வியப்புக்குரியதாகும்.

மூவர் கண்டியம்மன் கோயில்

நடுகல்லும் சதிக்கல்லும்:
          கோயில் வளாகத்தில் கண்டியம்மன் தவிர மேலும் இரண்டு சிறிய கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்று பஞ்சகன்னியர் சன்னதி என்று பூசையாளர் தண்டபாணி கூறினார். ஆனால், கருவறையில் ஐந்து கன்னியர் சிற்பங்கள் இல்லை. மூன்று ஆண் உருவச் சிற்பங்களும், இரண்டு பெண்ணுருவச் சிற்பங்களும் காணப்படுகின்றன. வீரர்கள் இருவரின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல்லும், வீரர்களின் மனைவிகளின் சதிக்கல்லும் சேர்ந்த ஒரு தொகுதியாக இச் சிற்பங்களைக் கருதலாம். நாயக்கர்காலச் சிற்பங்கள். வீரர்களில் ஒருவர் தன் வலப்பக்கத்தில் வாளைத் தரையில் பதித்துவைத்தவாறு கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளார். இன்னொரு வீரர் தம் இடக்கையைத் தொடையில் பதித்தவாறும் வலக்கையில் ஒரு மதுக்குடுவையைப் பிடித்த நிலையிலும் காணப்படுகிறார்கள். மூன்றாவதாக ஒரு வீரர் தண்டம் போன்ற ஒன்றைத் தரையில் பதித்துவைத்தவாறு கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளார். இவருடைய இடைக்கச்சில் குறுவாள் காணப்படுகிறது. ஆண்கள் இடப்புறமாகவும், பெண்கள் வலப்புறமாகவும் கொண்டை முடிந்துள்ளனர். ஆண், பெண் அனைவரும் காதணிகளும், கழுத்தணிகளும் அணிந்திருக்கிறார்கள். அனைவரது ஆடை அமைப்பிலும் அழகுறக் காட்டப்பட்டுள்ளன. தொல்லியல் தடயங்களைத் தேடி வந்த எங்கள் பயணத்தில் முதன் முறையாக ஒரு நடுகல் தடயம் கிடைத்ததில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட்டன.


நடுகல் - சதிக்கல் சிற்பங்கள்

கல்வெட்டு:
          பூசையாளர், எழுத்துகள் உள்ள இரண்டு துண்டுக் கற்களைக் காட்டினார். எழுத்துகள் இருக்கும் பக்கம் கீழ்ப்புறமாகத் தரையில் மறைந்தவாறு இருக்கவே அவற்றைப் புரட்டித் திருப்பினோம். முதலில் புதிய கல்வெட்டு கிடைத்த என் மகிழ்ச்சி மறைந்தது. காரணம், இந்தக் கல்வெட்டை நானும் நண்பர் தென்கொங்கு சதாசிவமும் 03-10-2013 அன்று ஒரு மாலை நேரத்தில் வந்து பார்த்துச் சென்றுள்ளோம். எழுத்துகள் மிகவும் சிதைந்து போனமையால் படிக்க இயலவில்லை. இருப்பினும் பழைய ஒளிப்படங்கள், இப்போது எடுத்த ஒளிப்படங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்ததில் சில எழுத்துகள் அடங்கிய பாடத்தைக் கீழே தந்துள்ளேன்.

கல்வெட்டுப்பாடம்
முதல் துண்டுக்கல்:

1 ண்ண
2 சோழன்
3 .........
4 ஊரு (ட)
5 டையரா
6 கிய செ
7 நாயனா
8 ர் (ற்) அ
9 ண்ண
10 யனா
11 கு (ள)
12 மகன்
13 த்தொ
14 ம்


 

இரண்டாவது துண்டுக்கல்:

1 ........
2 ..........
3 நானா ட
4 ............ந
5 .............
6 ன
7  ற ட ய


          மேற்படி கல்வெட்டுப்பாடத்திலிருந்து தெளிவான செய்திகள் எவையும் புலப்படவில்லை. எனினும், “உடைய”,  “நாயனார்”,  ”ஊரு”  “மகன்”  போன்ற சில சொற்களைக்கொண்டு யூகமாகப் பொருள் கொண்டால், சோழன் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட ஒருவன் கோயிலுக்குக் கொடை அளித்துள்ளான் எனலாம். “நாயனார்”  என்பது சிவன் கோயில் இறைவனைக் குறிக்கும் சொல். ஆனால் இங்கே அம்மன் கோயிலில் கல்வெட்டு உள்ளது. வேறெங்காவது இடத்திலிருந்து இக்கற்கள் பெயர்த்துக் கொண்டுவரப்பட்டனவா என்னும் ஐயமும் எழுகிறது.

          கண்டியம்மன் கோயிலைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், ஆற்றுப்பள்ளத்தில் சிறு சிறு பானை ஓட்டுச் சில்லுகள் கிடைத்தன. ஆங்காங்கே, இரும்புக்கசடுகளின் (Iron slag) துண்டுகள் கிடைத்தன. பானையோட்டுச் சில்லுகள், வரலாற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்துப் பொருள்களாக அறியப்படுவதால் இப்பகுதியில் பழங்கால வாழ்விடமோ, ஈமக்காடோ இருந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். இரும்புக் கசடுகள் கிடைப்பதால் இப்பகுதியில், இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழில் நடைபெற்றிருக்கலாம் எனவும் கருதலாம். வழியில் யாரோ பிடுங்கியெறிந்த ஒரு காந்தள் செடியைக் காண நேர்ந்தது. சற்றே வாடியிருந்தாலும் அதன் அழகு மங்காத அழகு.

அனுமந்தப் பெருமாள் கோயில்:
          பகல் இரண்டு மணிக்கு மேல் பகலுணவை முடித்த பின், தேநீர்க்கடையில் சந்தித்த சிலரிடம் பேசியதில் பெரியபட்டியில் பழங்கோயில் உள்ளதெனச் செய்தி கிடைத்தது. பெரியபட்டி சென்றோம். அங்கு ஒருவர் சுட்டிய பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். உப்பாற்றின் கரையோரம் கோயில் அமைந்திருந்தது. அநுமந்தப் பெருமாள் கோயில் என்பது பெயர். ஆனால், கோயிலின் பெயர் சொல்ல ஒரு பெயர்ப்பலகை கூட இல்லை. கோயிலுக்குள் குறிப்பிடும்படியாகக் கல்வெட்டுகள் இல்லை. ஒரே ஒரு எழுத்துப் பொறிப்பு எங்களுக்குக் கிட்டியது. கோயிலின் தெற்குச் சுற்றில் மேடை மீது வீற்றிருக்கும் ஒரு நாகச் சிற்பம். சற்றே பெரிதாக இருந்தது. நாகத்தின் உடல் வளைவுகள் மூன்றுடன் தலைப்பகுதியில், காளிங்க நர்த்தனத்தை நினைவூட்டும் வகையில் கண்ணனின் ஆடுகின்ற தோற்றத்துடன் காணப்பட்டது. சதுரப் பீடத்தின் மையப்பகுதியில் ஒரு மனித உருவமும் அதனைச் சுற்றிலும் உள்ள இடைவெளியில் சில எழுத்துகளும் காணப்பட்டன. “அனுமந்”  என்னும் இறுதிச் சொல் படிக்க இயன்றது. இதன் தொடர்ச்சியாக, நாகத்தின் பக்கப்பகுதியில், பீடத்தில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க இயன்றது. முழுப்பாடமும் கீழ் வருமாறு:
அனுமந்தப் பெருமாள் கோயில் - உப்பாற்றங்கரை


நாகச் சிற்பம் - கல்வெட்டுடன்




கல்வெட்டு
கல்வெட்டுப் பாடம்:

1 அனுமந்
2 த ராம
3 ர் பூசாரி
4 சென்ன
5 பெருமா
 6 ள் தாசன்
7 மகன் ரங்
8 கா தாசன்

          கல்வெட்டின் எழுத்துகள் மிகவும் பிற்காலத்து எழுத்துகள். 20-ஆம் நூற்றாண்டெழுத்துகள். சென்னப் பெருமாள் தாசன் என்பவனின் மகன் ரங்க தாசன் என்பவன் அமைத்துக் கொடுத்த நாக சிற்பம் என்பது கல்வெட்டுச் செய்தி. இக்கோயிலைப்பார்த்த பின்னர் ஊர் திரும்ப நினத்தவேளை, பெரியபட்டி ஊருக்குள்ளேயே பாழடைந்த ஒரு கோயில் உள்ளதெனத் தெரியவந்தது. அதுவும் ஒரு பெருமாள் கோயில்.

பெரியபட்டிப் பெருமாள் கோயில்:
          பெரியதொரு வளாகம். கல்லும் மண்ணும் கலந்து கட்டப்பெற்ற சுற்றுச் சுவர். வளாகத்தின் மையத்தில் பாழடைந்த நிலையில், கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகிய மூன்று கட்டுமானங்களைக் கொண்ட வெளிப்புறத்தோற்றம். நுழைவு மண்டபத்தின்  (முன்மண்டபம்) கதவு பூட்டியிருந்தது. பத்தடிக்கும் மேலான உயரமுள்ள ஆறு கல் தூண்கள் முன்மண்டபத்தின் முன்புறம் நின்றுள்ளன. வடக்குத் திருச்சுற்றில் இரண்டு நிலத்தடிக் கட்டுமானங்கள் காணப்பட்டன. கட்டுமானத்தின் மூல வடிவம் முற்றாய்க் கலைந்து வெறும் செங்கற்கூடாகக் காட்சியளித்தது. ஒன்று கிணறு போலத் தோற்றமளித்தது. இன்னொன்று நிலவறைச் சுரங்கம் போலத்தோற்றமளித்தது. (பின்னால் தெரிய வந்த செய்தி என்னவெனில் அவை இரண்டும் சிங்கமுகம் கொண்ட கோயிலின் தீர்த்தக் கிணற்றின் இரு பகுதிகள்).  பூட்டப்பெற்ற கதவின் வழியே பார்த்தபோது உள்ளே ஒரு விளக்கொளி தெரிந்தது.

பெரியபட்டி அரங்கநாதப் பெருமாள் கோயில்

சிங்கமுகக் கிணறு

          கோயிலைப்பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்ட பிறகே ஊர் திரும்பவேண்டும் என்னும் ஆவலில் அருகே கேட்டறிந்து கோயிலின் பரம்பரைப் பூசையாளரைக் காணச் சென்றோம். பெரியபட்டிக்கருகில் உள்ள கள்ளப்பாளையத்தில் அவரது இருப்பிடம். ஐம்பத்தொன்பது அகவையுள்ள பூசையாளர் ஸ்ரீநிவாச ஐயங்கார். இவரது முன்னோர்கள் ஆதித்திருவெள்ளறை சோழியர் வழி வந்தவர்கள். திருவெள்ளறையிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். அவர் கூறிய செய்திகள் இங்கே. கோயிலின் பெயர் அரங்கநாதப் பெருமாள் கோயில். கோயிலுக்கு நிறைய மானிய நிலங்கள் இருந்துள்ளன. தற்போது மிகக் குறைந்த அளவில் நிலம் உள்ளது. அருகில் உள்ள ஆமந்தக்கடவு ஜமீன் நிலக்கொடை கொடுத்துப் புரந்துகொண்டிருந்தது. கோயிலின் அன்றாட வழிபாடுகள் எவையும் நடைபெறுவதில்லை. மேற்படி ஸ்ரீநிவாச ஐயங்காரின் தந்தையார் காலத்திலிருந்தே பூசைகளின்றியும் தக்கப் பேணுதலின்றியும் கோயில் அதன் அழகை இழந்து நிற்கிறது.

          கோயிலின் உள்ளே கருவறை முதலிய இடங்கள் பெரும்பாலும் மரத்தால் ஆன கட்டுமானங்களைக் கொண்டவை. கோயிலின் உள்ளே யாரும் செல்வதில்லை. சிதிலமடைந்த மரக்கட்டுமானங்களால், எந்நேரத்திலும் அவை கீழே வீழும் அச்சச் சூழ்நிலை. இருப்பினும், பூசையாளர் சிறுவயது முதற்கொண்டே உள்ள பழக்கம்கொண்டு நாள்தோறும் காலையில் கோயிலின் உள்ளே விளக்கேற்றி வருகிறார். கோயில், புதுப்பிக்க முன்வரும் புரவலரை எதிர் நோக்கிக் கோயில் காத்திருக்கின்றது.

ஆங்கிலேயர் காலத்து ஆவணம்:
          ஸ்ரீநிவாச ஐயங்கார் 1863-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தைச்  சேர்ந்த ஒரு நில ஆவணத் தாளைக் காட்டினார். இனாம் ஆணையம் (INAM COMMISSION)  வழங்கிய நிலமானியம் பற்றியது. மேற்படி அரங்கநாதர் கோயிலுக்கு வழங்கப்பட்டது. TITLE DEED என்னும் தலைப்பில் வழங்கப்பட்ட இவ்வாவணத்தில் கோயில் என்பதற்குப் “பகோடா”  (PAGODA)  என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1919-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொத்துப்பத்திரம் ஒன்றையும் காட்டினார்.

இனாம் ஆணையத்தின் ஆவணம் - 1863


இனாம் ஆணையத்தின் முத்திரை

அரசு முத்திரை 

1919-ஆம் ஆண்டுப் பத்திரம் 


முடிவுரை:
          பெருமாள் என்றாலே செல்வமுள்ள கடவுள் என்னும் சூழலில், புதுக் கோயில்களை எழுப்ப நினைக்கும் பெரும் செல்வர்கள் ஒன்றிணைந்து இது போன்ற கோயில்களுக்குப் புத்துயிர் வழங்கலாம்.


________________________________________________________________________

தொடர்பு: து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156. 










Saturday, December 30, 2017

த.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களும் தமிழறிஞர்களும் 
பன்னாட்டுக் கருத்தரங்க அறிக்கை






​​
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளை, சென்னை ந. சுப்புரெட்டியார் 100 அறக்கட்டளை, முனைவர் மா. ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன் இணைந்து நடத்திய பன்னாட்டுக் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியங்களும் தமிழறிஞர்களும் என்னும் பொருண்மையிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் 06.12.2017 அன்று கல்லூரியில் நடைபெற்றது. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர். சு. குமரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், “மனித வாழக்கையை இயக்குவன இலக்கியங்கள் என்றும் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலை வெளிப்படுத்தின என்றும் குறிப்பிட்டார். மேலும், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களின் இனமான உணர்வு, பெண்ணியச் சிந்தனை, கடந்தகால கண்ணீர், காதல், வீரம், குடும்ப அமைப்பு, அரசியல் நிலை, பண்பாடு ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி. ஏ. வாசுகி  அவர்கள் தலைமையுரையாற்றினார். ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் வீ. ரேணுகா தேவி அவர்கள் நோக்கவுரையாற்றினார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி ச. பத்மநாபன் அவர்களும் கல்லூரி முதல்வர் முனைவர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. முருகேசன்  அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவில் 263 பேராளர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்ட்து. கல்லூரிச் செயலர் டாக்டர் சி. ஏ. வாசுகி அவர்கள் ஆய்வுக் கோவையின் முதல் தொகுதியை வெளியிட மலாயப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு. குமரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். இரண்டாவது தொகுதியை ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலர் முனைவர் வீ. ரேணுகா தேவி அவர்கள் வெளியிட கலாநிதி ச. பத்மநாபன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாவது தொகுதியை ந. சுப்புரெட்டியார் 100 அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சு. இராமலிங்கம் அவர்கள் வெளியிட தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியின் மேனாள் தமிழ்ப்பேராசிரியர் சு. ஞானப்பூங்கோதை அவர்கள் பெற்றுக்கொண்டார். விழாவின் நிறைவில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் க. பழனிவேல் அவர்கள் நன்றி நவின்றார்.





இலங்கை, மலேயா உள்ளிட்ட அயல்நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர். 

அன்புடன்
பேராசிரியர்.முனைவர் .ரேனுகாதேவி,


செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை

த.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில்

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம்



சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறை, மலேசியா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, ஜெர்மனி, தமிழ் மரபு அறக்கட்டளை ஆகியன இணைந்து  “உலகளாவிய தமிழ் - காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் பொருண்மைகளும் புதுமைகளும்” என்னும் தலைப்பிலான பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கம்  07.12.2017, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கினை அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் தாளாளர் திரு. கி.அபிரூபன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ஆய்வுக்கோவையை வெளியிட்டார். கல்லூரி முதல்வர் முனைவர் வ.பாண்டியராஜன் அவர்கள் கருத்தரங்கிற்கு தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். இளங்கலைத் தமிழத்துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மலேசியா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு.குமரன் அவர்கள் கருத்தரங்க நோக்கவுரை வழங்கினார். சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தமிழ் மரபு அறக்கட்டளைச் செயலர், மதுரை காமராசர் பல்கலைக்கழக தகைசால் பேராசிரியர் முனைவர் வீ.ரேணுகாதேவி அவர்கள் பாராட்டுரை வழங்கினார். இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறைத்தலைவர் திரு. ச.பத்மநாபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

இப்பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு பல்வேறு நாடுகளைச் சார்ந்த 209 ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர்.

கருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் இரண்டு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டன.




இளங்கலைத் தமிழத்துறைத் தலைவர் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.இளவரசு, முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிhpயர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.


அன்புடன்
பேராசிரியர்.முனைவர் .ரேனுகாதேவி,
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை

Friday, December 29, 2017

த.ம.அ பன்னாட்டுக் கருத்தரங்கம் - பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறையும், மலாய்ப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், தமிழ்மரபு அறக்கட்டளை ஜெர்மனியும் இணைந்து 5.12.2017 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.



இதில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளிலிருந்து பல பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உட்பட 200க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்துக் கொண்டு ஆய்வரங்கைச் சிறப்பித்தனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். நிர்மலா அவர்கள் வரவேற்புரையும், கல்லூரிச் செயலர் நா. யசோதா தேவி அவர்கள்  தொடக்கவுரையும் நிகழ்த்தினர். மலாய்ப் பல்கலைக்கழக ஆய்வியல் துறைப் பேராசிரியர் முனைவர் சு. குமரன் தலைமையுரை ஆற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறைத்தலைவர் சிறப்புரை ஆற்றினார். தகைசால் பேராசிரியர் தமிழ்மரபு அறக்கட்டளைச் செயலர் முனைவர்.வீ ரேணுகாதேவி மகிழ்வுரை நிகழ்த்தினர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. முருகேசன் அவர்களும், கல்லூரியின் முன்னாள் மாணவி கவிதாயனி மீ.உமாமகேஷ்வரி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். கருத்தரங்கத்தின் நிறைவாக கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் இரா.சாந்தி அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.

கருத்தரங்கின் ஆய்வுக்கட்டுரைகள் இரண்டு தொகுப்புக்களாக வெளியிடப்பட்டன.




அன்புடன்
பேராசிரியர்.முனைவர் .ரேனுகாதேவி,
செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை

Wednesday, December 27, 2017

தமிழ் வெளியீட்டுக் கழகம் . . .



——   கோ.செங்குட்டுவன்


          அண்மையில், விழுப்புரம் மகாத்மா காந்தி பாடசாலைக்குச் சென்ற நான், அதன் தாளாளர் திரு.பெ.சு.இல.இரவீந்திரன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், பள்ளியின் நூலக அறையினை எனக்குக் காண்பித்தார். அங்கு ஏராளமான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும், இரவீந்திரன் அவர்களின் தந்தையார் திருவாளர். பெ.சு.இலட்சுமணசுவாமி அவர்கள் இருபத்தைந்து,  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்தவை.




          என் பார்வையில் பட்ட நூல்களில் ஒன்று, “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்”–எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியது. ஏராளமானப் புகைப்படங்களுடன் 455 பக்கங்களில் வெளிவந்துள்ள அற்புதமான நூல். 1966 மார்ச்-ல் முதற்பதிப்பைக் கண்ட இந்நூலின் விலை ரூ.9.

          ஆனாலும், அதில் என் கவனத்தைக் கவர்ந்தது, “தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு–அரசாங்கம்” என்றிருந்ததுதான். ஆமாம். தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் தான் இந்நிறுவனம் இயங்கியிருக்கிறது.   1962இல் நிறுவப்பெற்ற தமிழ் வெளியீட்டுக் கழகம் 1966 வரை 136 நூல்களை வெளியிட்டுள்ளது.

          1966ஆம் ஆண்டில் மட்டும், இந்த நிறுவனத்தின் சார்பில் பொருளாதாரம், வரலாறு, அரசியல், உளவியல், தத்துவம், அறவியல், அளவையியல், மானிடவியல், சமூகவியல், புவியியல், புள்ளியியல், விலங்கியல், பௌதிகவியல், மருத்துவம், பொதுநூல்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் 72 நூல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

          இந்தியப் பொருளாதாரம் பற்றி மட்டுமல்லாமல், இங்கிலாந்து பொருளாதார வரலாறு, அமெரிக்காவின் நவீன பொருளாதார வளர்ச்சி, கிரேட் பிரிட்டனில் தொழில் வாணிபப் புரட்சி, கிரேக்க வரலாறு ஆகியவை குறித்தும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

          தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் 101ஆவது வெளியீடான “முற்காலச் சோழர் கலையும் சிற்பமும்” நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள, அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.பக்தவச்சலம் அவர்கள், “தமிழை ஆட்சி மொழியாக அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, தமிழுக்கு ஆக்கம் தேடுகின்ற முறையில், இன்னும் மகத்தான அளவில் தமிழில் நூல்கள் வெளிவர வேண்டும் என்ற கருத்தில் தமிழ் வெளியீட்டுக் கழகம் நிறுவப்பெற்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.

          பரவாயில்லை நல்ல முயற்சிதான். இது எத்தனை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது எனும் விவரம் தெரியவில்லை.

          தமிழ்நாட்டில் காங்கிரசு அரசாங்கம், குறிப்பாக பக்தவச்சலனார் அரசாங்கம் என்றதுமே வேறு மாதிரியான பிம்பங்கள்தான் நம்முன் வந்து நிற்கின்றன. ஆனாலும் இதுபோன்ற நல்ல காரியங்களும் தமிழுக்கு நடந்துதான் இருக்கிறது..! 



________________________________________________________________________
தொடர்பு: கோ.செங்குட்டுவன் <ko.senguttuvan@gmail.com>





Saturday, December 23, 2017

கடவுள்கள்

——  ருத்ரா இ பரமசிவன்.  

 


கடவுள் கனமானவர்.
ஆம்
அது ஒரு சிலுவையின் கனம்.
கடவுள் கூர்மையானவர்
ஆம்
உடம்பில் ஆணிகள்
அறையப்பட்டபோது
தெரிந்தது.
கடவுள் ரத்தமானவர்.
ஆம்
அது அங்கே பெருகியபோது
தெரிந்தது.
அப்போது அவர் சொன்னார்.
கடவுளே
தான் என்ன செய்கிறோம் என்று
இந்தக் கடவுள்களுக்கே
தெரியாது.
இவர்களை மன்னியும்.
இந்த வசனத்தில்
ஒன்றல்ல
கோடி கோடி கடவுள்கள்
இருக்கிறார்கள்.




படம் உதவி: விக்கிப்பீடியா
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/King_of_Kings_statue%2C_Solid_Rock_Church%2C_2008.jpg/1024px-King_of_Kings_statue%2C_Solid_Rock_Church%2C_2008.jpg

________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com) 


Wednesday, December 20, 2017

இழையெடுத்தல் (பிள்ளையார் நோன்பு)


——  முனைவர் கி. காளைராசன்




          வழிவழியாக, வாழையடி வாழையாக முன்னோர் செய்த செயல்களைத் தொன்று தொட்டுச் செய்து வருவதை மரபு என்கிறோம்.  மரபுகளைப் பேணிக்காப்பதில் இந்தியர் அதிலும் குறிப்பாகத் தமிழர் தனியிடம் பெறுகின்றனர்.  தமிழருள்ளும் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது முன்னோர்கள் செய்து வந்தனவற்றை அப்படியே மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து மரபுகளைக் காத்து வருகின்றனர்.‘

          இவ்வாறாக நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறைதான் “பிள்ளையார் நோன்பு“.  இவ்விழாவினைப் “பிள்ளையார் சஷ்டி“ என்றும் “இழை எடுத்தல்“ என்றும் கூறுகின்றனர்.

          பிள்ளையார் நோன்பின் போது வழிபடுவதற்கு என உள்ளங்கைக்குள் அடங்கும் அளவிற்கு ஒரு வெள்ளியிலான பிள்ளையாரைரோ அல்லது தங்கத்தினாலான பிள்ளையாரையோ பிறந்தவீட்டுச் சீராகக் கொடுக்கின்றனர். அந்தப் பிள்ளையாரின் பின்புறத்தில் தங்களது பெயர் முகவரியையும் (initials) பொறித்து வைத்திருக்கின்றனர்.

          பெரிய கார்த்திகை என்றழைக்கப்படும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் மறுநாளிலிருந்து பிள்ளையார் நோன்பு விரதத்தை ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் நாள் முழுதும் விரதமிருந்து மாலைப் பொழுது சாய்ந்ததும் பிள்ளையாரை வழிபடுகின்றனர்.

          ஒவ்வொரு நாள் வழிபாட்டின்போதும் புதுத்துண்டு அல்லது புதுவேட்டியிலிருந்து ஒரு சிறிய நூல் இழையை எடுத்து வைக்கின்றனர். இதனை “இழையெடுத்தல்“ என்கின்றனர். இவ்வாறு 21 நாட்கள் இழையை எடுத்து வைத்து வழிபடுகின்றனர்.  இதனால் 21 சிறிய நூலிழைகள் சேர்ந்து விடுகின்றன.  இந்த இழைகளை ஒன்றாக்கி, வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி பல இழைகளாக நறுக்கி வைத்துக் கொள்கின்றனர். கருவுற்ற பெண்ணிற்கு ஒன்று என்றும் அவளது வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ஒன்று என்றும் கணக்குப் போட்டுக் கொள்கின்றனர். கைம்பெண்களை மட்டும் எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வதில்லை.  எண்ணிக்கையை விடக் கூடுதலாகவோ குறைவாகவோ இழையை நறுக்குவது இல்லை.

          21ஆவது நாள் முடியும் போது சதயநட்சத்திரமும் சஷ்டி திதியும் ஒன்றாக வரும் நாள் இரவு பிள்ளையாரை வழிபட்டு நோன்பினைப் பூர்த்தி செய்கின்றனர். 21 நாட்களும் வழிபடாவிட்டாலும் கடைசிநாள் அன்று நகரத்தார் அனைவரும் எங்கிருந்தாலும் தவறாது பிள்ளையாரை வழிபட்டு இழையெடுத்துக் கொள்கின்றனர்.  வெளிநாட்டில்  உள்ளோரும் ஏதேனும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி இழையெடுத்துக் கொள்கின்றனர்.

          வாக்கப்பட்டுச் (வாழ்க்கைப்படுதல்) சென்ற மகள் வீட்டிற்குப் பொங்கல் தீபாவளி  முதலான பண்டிகைகளுக்கு பிறந்த வீட்டிலிருந்து சீர் அனுப்புவர்.  அதுபோல இந்தப் பிள்ளையார் நோன்பிற்கும் பிறந்த வீட்டிலிருந்து இந்தப் பிள்ளையார் நோன்பினை மேற்கொள்வதற்கான அனைத்துப் பொருட்களையும் வைத்துச் சீர் அனுப்புகின்றனர்.

          குடும்பத்தலைவன் (கணவன்), குடும்பத் தலைவி (மனைவி) மற்றும் பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி வழிபாட்டிற்கான வேலைகளைச் செய்கின்றனர். பிள்ளையார் நோன்பு அன்று, மாலை நேரம் வீட்டினைக் கழுவித் துடைத்துச் சுத்தம் செய்து பூசையறையில் ஒரு பெரிய கோலம் போடுகின்றனர். அதன் பின்னர் பூசைக்குத் தேவையான கருப்பட்டி அப்பம், பொரி, அவல், எள்ளுப் பொரி முதலான 21வகை உணவுப் பொருட்களைப் பிள்ளையாருக்குப் படைக்க எடுத்து வைத்துக் கொள்கின்றனர்.  இதில் ‘எள்ளுப் பொரி‘ விசேடம்.

          பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலும், தீபாவளியன்று எண்ணைப் பலகாரங்களும் சிறப்புடையன.  பிள்ளையார் நோன்பில்  கருப்பட்டியப்பம் சிறப்புடையது. கருப்பட்டியைக் காய்ச்சிப் பாகு எடுத்து அதில் அரிசிமாவையும் சேர்த்து மாவுபிசைந்து அப்பம் சுட்டு வைத்துக் கொள்கின்றனர்.  இவ்வாறு அப்பம் சுடுவதற்கு எண்ணைய்ச் சட்டியில் மாவை ஊற்றுவதற்கு முன்பு சங்கு ஊதுகின்றனர்.  பொங்கல் விழாவின் போது, பால் பொங்கி வரும்போது சங்கு ஊதுவோம், பிள்ளையார் நோன்பின்போது சங்கு ஊதிய பின்னரே அப்பம் சுடுகின்றனர்.

          வீட்டில் உள்ள பழமையான ஏடுகளை எடுத்து, அதில் சுற்றியிருக்கும் நூல்கயிற்றைப் பிரித்து, அந்த நூல்கயிற்றை பச்சரிசியை அரைத்து எடுத்த மாவில் முக்கி எடுக்கின்றனர். அந்தக் கயிற்றை (தும்பு) ஆளுக்கு ஒருபக்கமாகப் பிடித்துக் கொண்டு சுவரில் ஒட்டினார் போல் வைத்துக் கொண்டு,  ஒரு கையினால் சுண்டி விடுகின்றனர்.  இவ்வாறாக பூசையறையில் உள்ள சுவரில் இரண்டு இடங்களில் வீடு போன்று மாக்கோலம் போடுகின்றனர். இதனைத் “தும்பு பிடித்தல்“ என்று குறிப்பிடுகின்றனர்.  தும்பு பிடித்தல் மூலமாகச் சுற்றில் வீடுபோன்றதொரு மாவுக்கோலம் போட்டுவிடுகின்றனர்.

          ஆவாரம்பூ, கண்ணுப்பிள்ளைப்பூ (கண்ணுப்பூளைப்பூ), நெற்கதிர் இவற்றைச் சேர்த்து ஒரு சிறிய ஆவாரங் குச்சியில் கட்டி இரண்டு பூச்செண்டு தயார் செய்து வைத்துக் கொள்கின்றனர்.  இந்த ஆவாரம்பூவில் மொத்தம் 21 உறுப்புகள் உள்ளன.

அதைக் குறித்த பாடல் ஒன்று.

“ஏற்ற இறக்கம் இல்லாத
ஒக்கப் பிறந்தவர் இருவர்
உடன் பிறந்தவர் மூவர்
செக்கச் சிவந்தவர் ஐவர்
செவ்வாழைப்பழம் மூன்று
நமரி வாழைப்பழம் நான்கு
பச்சைப் பாம்புக்குட்டி ஒன்று
படமெடுத்த பாம்புக்குட்டி மூன்று“ 
என்று மொத்தம் 21 உறுப்புகள் ஆவாரம்பூவில் உள்ளன.

          குடும்பத்தின் மூத்த செட்டியார் தலைப்பாகை கட்டிக் கொண்டு கையில் ஆவாரம்பூச் செண்டைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் வருகிறார்.  அவரைப் பின்தொடர்ந்து வீட்டில் உள்ள ஆண்களும் வீட்டிற்குள் வருகின்றனர்.  மூத்த செட்டியார் பூசையறைக்குள் வந்து பிள்ளையார் அருகில் போடப்பட்டிருக்கும் தடுக்கின் மீது அமர்ந்து கொள்கிறார்.  பிள்ளையார் கிழக்குப் பார்த்தபடி இருக்கிறார். பிள்ளையாரை (மேற்குப்)  பார்த்தபடி, வயது மூப்பு அடிப்படையில் எல்லா ஆண்களும் வரிசையாகத் தடுக்கில் அமர்ந்து கொள்கின்றனர்.   பெண்கள் உட்கார்வது இல்லை.

          வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி கருப்பட்டிப் பாகையும் அரிசிமாவையும் பிசைந்து செய்த மாவினால் கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து வைக்கின்றனர்.  இந்தப் பிள்ளையார் பூசையைச் செய்யும் தலைவன் (பெண்கள் இதைச் செய்யக்கூடாது) இந்தக் கருப்பட்டிப் பிள்ளையாரின் மீது 21 நூலிழைகள் கொண்ட திரியைப் போட்டு நெய் ஊற்றி நுனி வாழையிலையை விரித்து வைத்து அதன் நுனியில் வெள்ளி அகல் விளக்கு வைத்து மலர்ச்செண்டு சாற்றி, தீபம் ஏற்றி வைக்கின்றனர். பிள்ளையாருக்குப் பொரியினால் அபிஷேகம் செய்கின்றர்.  அபிஷேகம் செய்யும் போது சங்கு ஊதுகின்றனர்.  கருப்பட்டி அப்பம், பொரி, முதலான 21வகைப் பலகாரங்களை நிவேதனம் செய்து,  தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்கு வைத்துப் படைத்துத் தீபம் காட்டி வழிபடுகின்றனர்.


          வழிபாட்டின் நிறைவாக, இந்த வழிபாட்டினை முன்னின்று செய்யும் குடும்பத் தலைவன், கூம்பு வடிவான பிள்ளையாரின் உச்சியில் தீபம் எறிந்து கொண்டிருக்கும் போது சோதியுடன் சுடரோடு பிள்ளையாரை எடுத்து அப்படியே தனது வாயினுள் போட்டுக் கொள்கிறார்.  அவர் ஒவ்வொரு பிள்ளையாராக எடுத்துக் கொடுக்க, வீட்டில் உள்ளோர் அனைவரும் வரிசையாக வந்து பிள்ளையாரை பெற்றுக் கொண்டு தீபத்துடன் தங்களது வாயில் போட்டுக் கொள்கின்றனர்.  நிறைவாக, பிள்ளையாருக்கு என ஏற்றிவைக்கப்பட்ட பிள்ளையாரையும் குடும்பத் தலைவன் எடுத்து தனது வாயில் போட்டுக் கொள்கிறார்.  வழிபாடு நிறைவடையும் போதும் சங்கு ஊதுகின்றனர்.  இந்த நிகழ்ச்சியை “இழையெடுத்தல்“ என்கின்றனர்.  இவ்வாறு இழை எடுக்கும் போது குடும்பத்தினர் விநாயகர் அகவல் படிக்கின்றனர்.

          இவ்வாறாக இழையெடுத்தல் என்றழைக்கப்படும் இந்தப் பிள்ளையார் நோன்பு விழா இனிதே முடிவடைகிறது.  நோன்பு முடிவடைந்தவுடன், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பட்சணங்களை உண்டு மகிழ்கின்றனர்.

          பூம்புகாரில் தங்களது மூதாதையர்கள் செய்து வந்த வழிபாட்டை அப்படியே இன்றளவும் தாங்கள் கடைப்பிடிப்பதாகக் கூறுகின்றனர்.  பிராமண சமூகத்தினர் ஆண்டுக்கு ஒரு முறை பூணூல் போட்டுக் கொள்வதைக் கட்டாயமாகக் கடைப்பிடிப்பது போல், நகரத்தார் சமூகத்தினர் இழையெடுத்தலைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

“வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ வேண்டிய புத்தி மிகுந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழத் துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே
அப்பம் முப்பழம் அமுதுசெய் தருளிய தொப்பை யப்பனைத் தொழவினை யறுமே“


குறிப்பு: முனைவர்  வள்ளி அவர்கள் பிள்ளையார் நோன்பு குறித்து அளித்த பேட்டி,  வள்ளி அவர்கள் சொல்லியபடி முனைவர் கி. காளைராசன் அவர்களால் பதிவு செய்யப்பட்ட கட்டுரை. 







________________________________________________________________________
தொடர்பு: முனைவர் கி.காளைராசன் (kalairajan26@gmail.com)
http://kalairajan26.blogspot.in/  





Saturday, December 16, 2017

கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்

வெள்ளலூரும் கைக்கோளப் படையும்

 
——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
    கல்வெட்டுகளைத் தேடிச் செய்திகளை வெளியிடும் பணி பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அண்மையில் அறிமுகமான கோவை நண்பர் திரு. தமிழ்மாணிக்கம் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார். வெள்ளலூரில் காசி அப்பச்சி கோயில் என அழைக்கப்படும் ஒரு கோயிலில் நடுகல் சிற்பம் ஒன்றினை மூலவராக வணங்கிவருகிறார்கள்; அதே கோயிலில் ஒரு தனிக்கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது. அச்செய்தியின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் சென்ற 26-08-2017 அன்று, வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் பாஸ்கரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோருடன் காசி அப்பச்சி கோயிலுக்குச் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தார்.

காசி அப்பச்சி கோயில்:
    வெள்ளலூர் ஊரின் எல்லையில், இடையர்பாளையம் சாலையில், சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ள ஒரு சிறு கோயில்தான் காசி அப்பச்சி கோயில். வேப்ப மரங்களுக்கிடையில், எளிமையான சிமெண்ட் தரையுடன் கூடிய சிறு வளாகம். ஒரு புறம் மேடைமேல் வீற்றிருக்கும் பிள்ளையார். இன்னொரு புறம் ஒரு சிறிய அறையைக் கருவறையாகக் கொண்டுள்ள காசி அப்பச்சி கோயில். மூன்றாவதாக நாம் கண்டறிந்த கல்வெட்டுக் கல். காசி அப்பச்சி கோயில் கருவறையில் மூலவராக இருப்பது ஒரு நடுகல் சிற்பம்.

காசி அப்பச்சி கோயில்


புலிகுத்திக்கல்லே வழிபடு தெய்வம்:
    கோவைப்பகுதியில் கால்நடைகளின் பட்டியில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்களில், கால்நடைகளைத் தாக்கவருகின்ற புலிகளுடன் சண்டையிட்டுக் கொன்று தானும் இறந்துபடுகின்ற வீரனுக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கற்கள் நிறைய உள்ளன. அவ்வகை நடுகல் ஒன்றை இப்பகுதியில் கோயிலாக்கியுள்ளனர். நடுகல் வீரன், காசி அப்பச்சி என்னும் பெயரில் வழிபடப்படுகிறான். வழக்கமாகக் காணும் புலிகுத்திக்கல் சிற்பத்தின் கூறுகளே இங்கும் காணப்படுகின்றன. வீரன் தன் வாளைப் புலியின் வாய்ப்பகுதியில் பாய்ச்சுகிறான். புலி தன் பின்னங்கால்களில் நின்றுகொண்டு, முன்னங்கால்களால் வீரனைத் தாக்கும் நிலையில் உள்ளது. அதன் வால் உயர்ந்து நிற்கிறது. வீரன் அணி செய்யப்பட்ட தலைப்பாகை அணிந்திருக்கிறான். தலைப்பாகையில் குஞ்சலம் காணப்படுகிறது. பெரிய செவிகளும் காதணிகளும் நன்கு புலப்படுகின்றன. இடைக் கச்சையுடன் ஆடை அமைந்துள்ளது. படையலோடு வழிபாடு நடக்கிறது.

புலிகுத்திக்கல் சிற்பம் -  வழிபடு தெய்வமாக

வாதப்பிள்ளையார் கோயில்:
     மேடையையே கோயிலாகப் பெற்ற பிள்ளையார், வாதப்பிள்ளையார் என இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறார். மக்கள் தம்முடைய வாத நோய் நீங்கவேண்டி இப்பிள்ளையாரையும் அருகில் அமைந்துள்ள கல்வெட்டு எழுத்துகள் உள்ள தனிக் கல்லையும் சேர்த்து வணங்குகிறார்கள்.

கல்வெட்டு:
    மூன்றடிக்குள் உயரம் கொண்ட ஒரு தனிக்கல். நீள் சதுர வடிவம் கொண்டது. உச்சிப் பகுதியில் மட்டும் வளைவாக வடிக்கப்பட்டுள்ளது. எழுத்துகளின் பதினோரு வரிகள் காணப்படுகின்றன. கோடுகள் செதுக்கப்பட்டுக் கோடுகளுக்கிடையில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்லின் தரைப்பகுதியில் தரைக்குக் கீழே மேலும் சில வரிகள் இருக்கவேண்டும். அந்தப் பகுதியில்தான் கல்வெட்டுச் செய்தி முடிவடைகிறது எனக் கருதலாம். ஏனெனில், வழக்கமாகக் கல்வெட்டுகளின் முடிவில் காணப்படும் “இது பந்மாகேச்வர ரக்ஷை” என்னும் இறுதித் தொடர், இக்கல்வெட்டில், கல்லின் பக்கவாட்டுப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லின் பருமன் சிறியது. எனவே, மூன்று சிறு வரிகளில் “பந்மாகே(ச்வ)ர இரக்க்ஷை” என்னும் தொடர் எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டு
 
கல்வெட்டின் பாடமும் காலமும்:
    கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு. கி.பி. 12-14-ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டின் முகப்புப் பகுதி 

  

1         (ஸ்வஸ்தி)ஸ்ரீ
2         வெள்ளலூர் ஆளு
3         டையார் தென்
4         னூராண்டார் தி
5         ருக்குளம் பெ
6         ரிய நாச்சியா(ர்)
7         வாரம்ம் இ
8         (து)  அன்னதா
9         (ந) சிவபுரியி(ல்)
10     பொற்கோயிற்
11     கைக்கோளர்


 

கல்வெட்டின் பக்கவாட்டுப் பகுதி


1         பந்மாகே
2         ர இரக்
3         க்ஷை


கல்வெட்டுச் செய்திகள்-ஓர் ஆய்வு:
    கல்வெட்டுகள் “ஸ்வஸ்திஸ்ரீ’  என்னும் மங்கலத் தொடருடன் தொடங்குவது வழக்கம். அவ்வாறே இக்கல்வெட்டும் தொடங்குகிறது. ஆனால், கல்வெட்டின் காலத்தைக் கணிக்க உதவும் வகையில், அரசனின் பெயரோ, ஆண்டுக்குறிப்போ காணப்படவில்லை. ”வெள்ளலூர் ஆளுடையார்”  என்பது வெள்ளலூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைக் குறிக்கும் பொதுத்தொடர். ”ஆளுடையார் தென்னூராண்டார்”  என்னும் தொடர், ஊருடன் இணைத்து வழங்கும் இறைவனின் சிறப்புப் பெயரைக் குறிக்கும்.  அந்த வகையில், தென்னூரின் இறைவன் என்பது உணரப்படும். எனில், வெள்ளலூருக்குத் தென்னூர் என்று மற்றொரு பெயரும் உண்டு என்பது புலனாகிறது. இதற்குச் சான்றாகப் பின்வரும் கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம்.

    1 - கல்வெட்டு எண். 213 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
வரி
14 ஆளுடையா
15  ர் தென்னூர்ப்
16  பதியுளாற்கு ஒரு


    2 - கல்வெட்டு எண். 214 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
வரி 
10   ண்டு வேளிலூர்
11    த் தென்னூர் நக்
12   கனார்.....


    3 - கல்வெட்டு எண். 216 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
வரி 
3  .......பேரூர்நாட்டு
4  வெள்ளலூர் ஆளுடையார்
5   தென்னூராண்டார் கோயிற்


    கல்வெட்டில், “அன்னதான சிவபுரியில்”   என்னும் தொடர் காணப்படுகிறது. அன்னதான சிவபுரி என்பது வெள்ளலூருக்கு வழங்கிய மற்றொரு பெயராகும். இதற்குச் சான்றாகப் பின்வரும் கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

    4 - கல்வெட்டு எண். 212 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
வரி 
6   பேரூர் நாட்டு அன்
7   னதான சிவபுரியான
8  வெள்ளலூர்...


    காசி அப்பச்சி கோயில் கல்வெட்டில், ”பொற்கோயிற் கைக்கோளர்”  என்னும் தொடர் உள்ளது. இத்தொடர், கைக்கோள வீரர்களைக் கொண்ட படையினரைக் குறிக்கும். கி.பி. 10-ஆம் நூற்றாண்டுச் சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பல்வகைப் படையினரில் கைக்கோளர் படையினரும் ஒருவர். “பொற்கோயில்”  என்னும் ஒருவகைச் சிறப்பு அடையாளத்தை அல்லது பட்டத்தைச் சிலருக்கு அரசர் வழங்கியிருத்தல் வேண்டும். ஏனெனில், மேற்சொன்ன படையினர் அல்லாது மக்கட்குடிகள் சிலருக்கும் இந்தப் பட்டம் இணைந்து வருவதைக் கீழ்க்காணும் கல்வெட்டு வரிகள் தெளிவாக்குகின்றன.

1) செய்யாறு வட்டம்-திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு. (க.வெ. எண். 112/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 102/1900.)
“பொற்கோயில் கைக்கோளப் பெரும்படையர்க் குடி”

2) திருவண்ணாமலை வட்டம்-செங்கம் ரிஷபேசுவரர் கோயில் கல்வெட்டு. (க.வெ. எண். 118/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 106/1900.)
”பொற்கொற்ற கைக்கோளரும்”

3) காஞ்சிபுரம் வட்டம்-செவ்வல்லிமேடு கயிலாசநாதர் கோயில் கல்வெட்டு. (க.வெ. எண். 45/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 42/1900.)
”இக்கோயிலில் பொற்கோயில் ஆசாரி எழுத்து”
    கோயில், கொற்றம் ஆகிய சொற்கள் அரசு, அரசர், அரண்மனை ஆகியவற்றோடு தொடர்புடையன என்பது கருதத்தக்கது.

    நமது வெள்ளலூர்க் கல்வெட்டிலும் இந்தப் ”பொற்கோயில்”  அடைமொழி பெற்ற கைக்கோளர் குறிப்பிடப்படுகின்றனர். முதன்மைச் சோழர் ஆட்சியில் வழங்கிய இச்சிறப்புப் பெயருடைய கைக்கோளர், கொங்குச் சோழர் ஆட்சியில், கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-14-ஆம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது. சிறப்புப் படைப்பிரிவினரான கைக்கோளர் வெள்ளலூரில் இருந்துள்ளனர் என்பது, வெள்ளலூர் ஊரின் முதன்மையை, சிறப்பைக் காட்டுகிறது எனலாம். ஏனெனில், வெள்ளலூர், பேரூர் நாட்டுப்பகுதியில் சிறப்புப் பெற்ற ஒரு வணிக நகரமாக இருந்துள்ளது; வணிகப் பெருவழியில் அமைந்திருந்தது; உரோமானிய வணிகர்கள் வெள்ளலூர் வழியாக வணிகம் செய்துள்ளனர்; உரோமானிய நாணயங்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. குறு நிலத்தலைவனான ஒரு வேளிரின் தலை நகராக இருந்துள்ளது. அதன் காரணமாகவே “வேளிலூர்”   எனப் பெயர் பெற்ற இந்நகரம் “வெள்ளலூர்”  எனத் திரிந்திருக்கவேண்டும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

    கல்வெட்டில் ”தென்னுராண்டார் திருக்குளம் பெரியநாச்சியார் வாரம்”  என வரும் தொடர், கோயிலைச் சேர்ந்த திருக்குளத்தால் பெறப்படும் வருவாய், நாச்சியார் என்னும் அம்மனுக்கு வேண்டிய வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதைத் தெரிவிப்பதாகத் தொல்லியல் அறிஞர் திரு. பூங்குன்றன் கருதுகிறார்.

தென்னூர் ஆண்டார் -  தேனீசுவரர் – மாற்றம்:
    தென்னூர் என்னும் பழம்பெயர் கொண்ட ஊரில் கோயில்கொண்ட  இறைவர் தென்னூர் ஆண்டார் என வழங்கப்பெற்றார். காலப்போக்கில், பழம்பெயர்கள் பெருஞ்சமயத்துத் தாக்கத்தினால் வடமொழிப் புனைவு பெற்றுத் தம் பழமையை இழந்தன. எடுத்துக் காட்டாக, தென்கொங்கில் கடத்தூரில் மருதமரத்துடனான தொடர்பால் “மருதுடையார்”  என்று பெயரமைந்த இறைவன் “மருதீசர்” என்றும், பின்னர் “அர்ஜுனேசுவரர்”  என்றும் மாற்றுப்பெயரால் அழைக்கப்பெற்றது வடமொழித் தாக்கத்தால்தான். ”அர்ஜுனம்” என்பது மருத மரத்தைக்குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். இவ்வாறே, தென்னூராண்டார்,  தேனீசுவரர் ஆனார். அதற்கேற்பப் புனைவுகள் ஏற்பட்டிருக்கவேண்டும். ”தினமலர்”  நாளிதழின் இணையதளமான “கோயில்கள்”  என்னும் தளத்தில், ”தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது”  என்னும் செய்தி காணப்படுகிறது. இது புனைவே அன்றி வேறென்ன?

அன்னதான சிவபுரி-பெயர்க்காரணம்:
    நமது வெள்ளலூர்க் கல்வெட்டில் அன்னதான சிவபுரி என்னும் பெயர் உள்ளது. இப்பெயர் வெள்ளலூருக்கு எவ்வாறமைந்தது என்பது ஆய்வுக்குரியது. ஆனால், ”வெள்ளலூர் ஆளுடையார்” எனக் குறிப்பிடும் கல்வெட்டு, ”அன்னதான சிவபுரியில் பொற்கோயில் கைக்கோளர்” என்றும் குறிப்பிடுவதால், கோயில் அமைந்திருந்த பகுதி வெள்ளலூர் என்றும், கைக்கோளர் இருந்த பகுதி (வெள்ளலூர் நகரத்தின் வேறொரு பகுதி) அன்னதான சிவபுரி என்றும் வழங்கியிருக்கவேண்டும் எனக் கருதலாம்.

தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள் தம்முடைய “ஊரும் பேரும்”  நூலில்,
”அன்னதானத்தால் அழியாப் புகழ் பெற்ற
வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர் விளங்குகின்றது என்று
கூறலாகும். ” 

என்று குறிப்பிடுகிறார். எனவே, வள்ளலூர் என்பது வெள்ளலூர் என மருவியது என்பர்.

வெள்ளலூருக்கு இன்னொரு பெயர்:
    வெள்ளலூருக்கு இன்னொரு பெயரும் உண்டு என்பது தெரியவந்துள்ளது. அண்மையில், இங்குள்ள கரிவரதராசப்பெருமாள் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பெற்றுக் குடமுழுக்கு நடந்தேறியது. அப்போது கருவறை விமானத்தின் ஜகதிப்படையில் கல்வெட்டுகள் புலப்பட்டன. அதில் ஒரு பகுதியில், வெள்ளலூருக்கு ”அதிராசராசச் சருப்பேதிமங்கலம்”  என்று பெயர் வைத்த செய்தி காணப்படுகிறது. அதிராசராசன் (அதிராஜராஜன்) என்பவன் வீரகேரள அரசன். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1069-1092.  அவனை அடுத்து வந்த அரசர்களின் ஆட்சிக்காலத்தில், வெள்ளலூரைப் பிராமணர் குடியிருப்பாக ஆக்கியிருக்கலாம். பிராமணர் குடியிருப்பு “சதுர்வேதி மங்கலம்”  என்று அழைக்கப்பட்டது. சில கல்வெட்டுகளில், “சருப்பேதிமங்கலம்”  எனவும் பயின்றுவரும்.

மேற்படி கல்வெட்டின் பகுதியின் பாடம்:

1         ட்டு .......(ஸ்ரீ க்ருஷ்ண) பட்ட ஸோமையாஜியார்..............
2         க்களுக்கு .......பேரூர் நாட்டு வெள்ளலூரான அதிராசராசச்
3         சருப்பேதிமங்கலம் என்று தங்களுக்கு (வேண்டு) பிராமண(ர்)
4         .....குளத்துக்கு நான்கெல்லை ஆவது கீழ்பாற்கெல்லை
5         ............................................................................................................

அதிராசராசச் சருப்பேதிமங்கலம் - குறிப்புள்ள கல்வெட்டு

காசி அப்பச்சி கோயில் கல்வெட்டின் முழுச்செய்தி:
    வெள்ளலூரில் அன்னதான சிவபுரியில் இருக்கும் பொற்கோயில் கைக்கோளர் படையினர், வெள்ளலூர் சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தென்னூர் ஆண்டாருக்குத் திருக்குளம் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதாகவும், குளத்தின் வருவாய் அம்மன் வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கல்வெட்டு எழுதிவைத்துள்ளனர் என்பதாகவும் கொள்ளலாம். இந்தத் தன்மத்தைக் கோயிலின் நிருவாகத்தில் இருக்கும் பந்மாகேசுவரர் கண்காணித்துப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர் ஆவார் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

முடிவுரை:
    வெள்ளலூர், பழங்காலத்தில் பன்முகச் சிறப்புகளைப் பெற்ற ஒரு நகரமாக இருந்துள்ளமை புலப்படுகிறது. கோவை என்னும் கோவன்புத்தூர் உருவாவதற்கு முன்னரே கிரேக்க வணிகர்கள் வந்து போன நகரமாக இருந்துள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டளவிலேயே வெளிநாட்டு வணிகத்தொடர்புடையதாய் விளங்கிற்று என அறிகிறோம். இங்கு, பிராமணச் சதுர்வேதி மங்கலம் ஒன்று இருந்துள்ளது என்பதையும் அறிகிறோம்.

________________________________________________________________________

தொடர்பு: து.சுந்தரம் <doraisundaram18@gmail.com>
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.