Saturday, December 16, 2017

தமிழகத்தின் கிராமியக்கலைகள்


——   தேமொழி
பொய்க்கால் குதிரை ஆட்டம்


    அழகாக அலங்கரிக்கப்பட்ட குதிரைக்கூடு ஒன்றை இடையில் கட்டிக் கொண்டு, கால்களில் ஒரு அடிக்கும் சற்று உயரமான மரக்கால்களைக் கட்டிக் கொண்டு, அரசன் அரசி போல அலங்கரித்துக் கொண்டு, அவர்கள் குதிரை சவாரி செய்து உலாப் போவது போலப் பாவனை செய்து கொண்டு ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரை ஆட்டம். பொய்யான மரக்காலில் ஏறி நின்று ஆடும் பொழுது கால்களால் எழுப்பப்படும் ஒலி குதிரையின் குளம்பொலியை ஒத்திருப்பதாலும், குதிரைக் கூட்டினாலும் இந்த நாட்டுப்புறக்கலை இவ்வாறு அழைக்கப்படுகிறது.

 
    குதிரைக்கூடு எடை குறைத்ததாக இருக்கவேண்டும் என்பதால் மூங்கில், காகிதக்கூழ், சாக்கு, துணி இவற்றால் வடிவமைக்கப்பட்டிருக்கும்.  அழகிய வர்ணங்கள் பூசப்பட்டு கண்ணாடித்துண்டுகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருக்கும்.  இதனைத் தோளின் வழி மாட்டி நாடாவால் தொங்கவிட்டு, இடையில் சுமந்து கொண்டு ஆடுவர். இத்துடன் மரக்காலில் ஏறி சமன் செய்து கொண்டே அதனால் குளம்பொலி ஓசையை  எழுப்பிக் கொண்டு குதிரையைப் போல துள்ளல் நடை போடுவதற்கும், உலாப் போவது போல ஒய்யார நடை போடுவதற்கும் நெடுநாள் பழக்கமும் பயிற்சியும் தேவை.  மதுரைப் பகுதியில் பொய்க்கால் கட்டாமல், காலில் சலங்கை மட்டும்  கட்டி ஆடும் வழக்கமும் உண்டு. அதனைப் பொய்க்குதிரையாட்டம் என அழைப்பர். பொய்க்கால் குதிரை ஆட்டத்திற்கு புரவியாட்டம், புரவிநாட்டியம் என்றப் பெயர்களும் உண்டு.

    சிலப்பதிகாரக் கடலாடு காதைப் பாடல்களில் மரக்கால் கட்டிக் கொண்டு, தன்னைக் கொற்றவையாகப் பாவித்து மாதவி ஆடிய நடனக் குறிப்புண்டு. அவ்வாறே, தலைவன் தலைவியை மணமுடித்துத் தருமாறு ஊராரின் கழிவிரக்கத்தைப் பெறும் நோக்கில் பனைமடலால் உருவாக்கிய பொய்க்குதிரைக் கூட்டை அணிந்துகொண்டு ஊர்வலம் வரும்  மடலேறுதல் முறையைத் தொல்காப்பியம் பதிவு செய்துள்ளது. அக்காலத்தின் மரக்கால் ஆட்டமும், பொய்க்குதிரை ஏற்றமும் வேறுவகையில்  பரிணாம வளர்ச்சிபெற்று  தற்காலத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமாக உருவாகியுள்ளது எனக் கருதலாம். 


    இன்றைய குதிரைக் கூட்டைக் கட்டிக்கொண்டு ஆடும் நடன முறை தஞ்சை மண்ணில் சென்ற நூற்றாண்டில் தோன்றியது. திருவையாற்றில் வாழ்ந்த இராமகிருஷ்ண நாயுடு என்ற தச்சர் இன்றைய வழக்கில் உள்ள  பொய்க்கால் குதிரைக்கூட்டை வடிவமைத்து, தஞ்சை மராட்டிய இசைக்கலைஞர்களை இசையமைக்கச் செய்து பொய்க்கால் குதிரையாட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தார். முன்னர் கோந்தளம் எனப்படும் இரட்டை முகத்தோல் கருவியினைக் கொண்டு பக்க இசையமைத்த முறை கைவிடப்பட்டு, இந்நாட்களில் நையாண்டி மேளத்தின் பின்னணி இசைக்கேற்ப நாட்டியமாடப்படுகிறது. குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல் ஆகிய அடவுகளைச் செய்தவண்ணம் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து முன்னும் பின்னும் அசைந்து ஆடுவர்.

    கோயிலும் சமூகமும் சார்ந்த கலையாக இக்கலை வளர்ந்தாலும் இதற்குக் கரகம், காவடி போன்ற வழிபாட்டுக்கலை என்ற பின்னணி கிடையாது. திருவிழாக்களிலும் ஊர்வலங்களிலும் மக்களை மகிழ்விக்க ஆடப்படுகிறது. இக்காலத்தில் சமய எல்லைகளைக் கடந்து இஸ்லாமிய கிறித்துவ சமயவிழாக்களில் மட்டுமின்றி, நாட்டுப்புறக்கலை என்ற மறுமலர்ச்சி பெற்று மேடையில் கலைநிகழ்ச்சிகளிலும் நடத்தப்படுகிறது. குடும்பக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்ட இக்கலையைக் கற்க பிறரும் ஆர்வம் கொண்டாலும் இந்நாட்களில் பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞர்களின் எண்ணிக்கை அருகி வருகிறது.

---

கரகாட்டம்


    தமிழர்கள் வாழ்வியலோடும், வழிபாடுகளோடும் இணைந்த நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று கரகாட்டம். மண்ணாலோ, செம்பு, பித்தளை, வெண்கலம், ஐம்பொன் போன்ற உலோகங்களினாலோ உருவாக்கப்பட்ட  சிறுகுடம் ஒன்று  ஆட்டத்தின் தேவைக்கேற்ப பல வகைகளில் மலர்கள், கிளி ஆகியன கொண்டு  ஒப்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட குடம், கலசம்  அல்லது  கரகத்தினைத் தலையில் ஏந்தி  கீழே விழுந்து விடாமல் சமன் செய்து  இசைக்கேற்ப  அடவுகள் பிடித்து ஆடப்படும் ஆட்டம்  கரகாட்டம் என்று அழைக்கப்படுகிறது.


    "வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்" எனச் சிலப்பதிகாரத்தின்  கடலாடு காதை வரிகள் குறிப்பிடும் மாதவி ஆடிய நடனங்களில் ஒன்றான குடக்கூத்து கரகத்தின் முன்னோடி எனவும் காட்டப்படுகிறது.  இலக்கியங்கள் கூறும் ஏழுவகைக் கூத்துகளில் ஒன்றாகவும்  குடக்கூத்து வகைப்படுத்தப் படுகிறது. கலைகளை வளர்த்தெடுத்த  தஞ்சை மாவட்டத்தில், தஞ்சையின்  அடையாளம் கரகாட்டம்.  தஞ்சையில் மட்டும் 1000 கரகாட்டக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதாகவும் கூறப்படுகிறது.


    கரகாட்டத்திற்கு முருக வழிபாட்டின்  காவடியாட்டம் போன்றதொரு வழிபாட்டுப் பின்னணியுமுண்டு.  அம்மன் கோவில் திருவிழாக்களில், அம்மனின் நீராட்டத்திற்குக் குடங்களில் நீரெடுத்து தலையில் ஏந்தி ஊர்வலமாக வருவோர் அருள் வந்து ஆடும் வழக்கமுண்டு. இந்த நடனம்  நாளடைவில் இசைக்குத் தகுந்தவாறு அடவுகள் செய்யும் கரகாட்ட நடன வழிபாட்டு முறையான சக்தி கரகமாக மாறியுள்ளது.  முன்னர் டம்மானம், தம்முறு போன்ற இசைக்கருவிகளை இசைத்து ஆடும் பக்தர்களின் உக்கிரத்தை அதிகரிக்கும் இசை இசைக்கப்படும் வழக்கமிருந்தது.

    நாளடைவில் நையாண்டி மேளம் பக்க இசைக்கு மாற்றம் பெற்றுள்ளது கரகாட்டக்கலை.   தஞ்சாவூர் நையாண்டி மேளத்திற்கென்று  ஒரு நாட்டுப்புற இலக்கணமும் உண்டு.  ஒரு நையாண்டி மேளக்குழுவில் 2 தவில், 2 நாதஸ்வரம், 1  பம்பை, 1 கிடுகிட்டி இடம்பெறும். மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் ஆகிய அம்மன் கோயில் வழிபாடுகளில் சக்திக் கரகமெடுத்தல் என்னும் சடங்கு தவறாமல் இடம்பெறும்.  நீர் நிரம்பிய கலசத்தின் வாயில் தேங்காய் வைத்து, கூம்பு வடிவில் மலர் கொண்டு அலங்கரித்த கரகத்தினைக்  கொண்டு வரும் பூசாரி அருள் வந்து ஆடுவது வழக்கம்.  அம்மன் விழா முடியும் வரை இந்தக் கலசமே அம்மனாக, சக்தி கரகமாக  வழிபடப்படும்.  தை மாதம் துவங்கி  ஆடி மாதம் வரை விழாக்கள் தொடரும்பொழுது கரகாட்டம் அவற்றில் இடம் பெறும்.

    இத்தகைய  வழிபாட்டுமுறை தவிர்த்து, தலையில் கரகம் வைத்த கரகம் விழாத வகையில்  ஏணிகளில் ஏறுவது இறங்குவது போன்ற சில பல வித்தைகளையும் இணைத்து இரசிகர்களை மகிழ்விக்கும் கலையென்ற  மற்றொரு கோணமும் கரகாட்டத்திற்கு உண்டு. இது  ஆட்டக் கரகம் எனவும் அழைக்கப்படும்.  பெரும்பாலான கரகாட்ட நடன வழக்கத்தில் உள்ளது தக்கையில் செய்யப்பட்ட பச்சைக்கிளியை கலசத்தின் உச்சியில் பொருத்திய பூவால் அலங்கரிக்கப்பட்ட செப்புக்கரகமே. ஆட்டக் கரகத்தின் அமைப்பு மற்றும் அலங்காரத்தை வைத்துத் தோண்டிக் கரகம், செம்புக் கரகம், அடுக்குக் கரகம் என்ற பல கரக வகைகளும் உண்டு.  கால் நூற்றாண்டிற்கு முன்னர் கரகாட்டத்தில் 52 அடவுகள் இடம் பெற்றனவென்றாலும்,  தற்பொழுது ஆடப்படும் கரகாட்டங்களில் சுமார்  6 அடவுகள் மட்டுமே இடம்பெறுகின்றன. இந்நாளில் பல்வேறுபட்ட தொழில்முறை நடனக்கலைஞர்களும் கரகாட்டத்தை தங்கள் நடனத்தின் ஒரு பகுதியாக அமைத்து மேடை நிகழ்ச்சிகளில் ஆட விரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

 
[படங்கள் உதவி: Labeled for reuse pictures]
________________________________________________________________________

தொடர்பு: தேமொழி <jsthemozhi@gmail.com>
No comments:

Post a Comment