Saturday, December 16, 2017

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண் - நூல் விமர்சனம்

அம்மா - தமிழகத்தின் இரும்புப் பெண்
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பு: Giri Law Hause, Madurai, Tamil Nadu.



தமிழக அரசியல் தளத்தில் மிக முக்கியப்பங்கு வகித்த ஒரு அரசியல் தலைவர் முன்னாள் தமிழக ஜெயலலிதா அவர்கள். அவர் அரசியலுக்கு வந்த நாள் தொடங்கி இவ்வுலகை விட்டு மறைந்த நாள் வரையிலான அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தவை. ஜெயலலிதா என்ற பெண்மணி ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, பலரும் புகழும் நடிகையாக வளர்ந்து, பின்னர் தமது தொண்டர்களால் 'அண்ணி' என்றும் பின்னர் 'அம்மா' என்றும் புதுப்பரிமாணம் பெற்ற தகவல்களை இந்த நூல் வாசகர்களாகிய நமக்கு வழங்குகின்றது. 

நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல செய்திகள் நாளடைவில் நமது நினைவுகளிலிருந்து நீங்கி விடுகின்றன. பொதுவாக அவ்வப்போது பேசப்படுகின்ற செய்திகள் மட்டிலும் தலைதூக்கி அவ்வப்போது தனது இருப்பைக் காட்டும் போது அவை சிறிது பேசப்பட்டு பின் மீண்டும் நினைவுத் தளத்தின் பின் பக்கத்திற்குச் சென்று விடுகின்றன. ஜெயலலிதா அம்மையாரைப் பற்றிய நினைவுகளும் அப்படித்தான். ஜெயலலிதா என்றால் இன்று நமது நினைவில் கண் முன்னே காட்சியளிப்பது ஒரு நடிகை அரசியல்வாதியான ஒரு நிகழ்வும் பின்னர் அவரது மரணமும், அதன் பின்னனில் இருக்கும் மர்மங்களுமே. அம்மா என்று அழைத்து காலில் விழுந்து வணங்கியவர்களும் ஹெலிகாப்டரில் பறக்கும் போதும் கீழே விழுந்து வணங்கியவர்களும் கூட இன்று அவரது பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி விட்டனர். இந்தச் சூழலில் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை சரிதத்தின் பல முக்கியச் செய்திகளையும் நிகழ்வுகளையும், சங்கடங்களையும், சாதனைகளையும், குற்றங்களையும், முடிச்சு அவிழ்க்கப்படா மர்மங்களையும் தொட்டுப் பேசுகின்றது முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதி யிருக்கும் இந்த நூல். 

ஸ்ரீரங்கத்தின் ரங்கசாமி ஐயங்கார் பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் வேலை கிடைத்து சென்றபோது தனது குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்கின்றார். அங்கு மைசூரில் பிரபல டாக்டர்.ரங்காச்சாரி மகன் ஜெயராமுக்கு மகள் வேதாவைத் திருமணம் செய்து வைக்கின்றார். ஜெயராம் வேதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அவர்களில் ஒருவர் தான் 1948ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி பிறந்த கோமளவல்லி என்ற இயற்பெயர்கொண்ட ஜெயலலிதா. பிறக்கும் போது வசதியாக இருந்த குடும்பம் பின் தந்தையின் ஊதாரித்தனத்தால் மிகவும் கஷ்டப்படும் நிலைக்கு வந்தது. விமானப்பணிப்பெண்ணாக இருந்த சித்தி அம்புஜா அன்று வித்யாவதி என்ற பெயரில் தமிழ்ச்சினிமா உலகில் நுழைந்தார். இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேதாவும் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். சந்தியாவாக மாறினார். பள்ளிப்படிப்பிலும் நடனத்திலும் மிகத்தேர்ந்தவராக இருந்தார் கோமளவல்லி. பின்னர் படிப்படியாக திரைப்படம் , மேடை நாடகங்கள் என அவரது வாழ்க்கை தொடர்ந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதியின் ஆங்கில மொழி நாடகத்தில் அப்போது வாய்ப்பு வந்தது. The Hold truth, The House of the August Moon ஆகிய நாடகங்களில் ஜெயலலிதா நடித்தார். அப்போது அவரோடு நடித்தவர்களில் சோ வும் ஒருவர். இவர்கள் நட்பு அன்றிலிருந்து இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் கன்னட மொழிப்படம் எனத்தொடங்கி தமிழ்ப்பட உலகில் மிக அதிக சம்பளம் பெற்ற கதாநாயகியாகவும் வலம் வந்தவர். 

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் ஏதேச்சையாக நடந்ததுதான் என்றாலும் தனது திறமையினாலும் அறிவுக் கூர்மையினாலும் தனது இருப்பை அவர் தக்க வைத்துக் கொண்டார் என்றே கூறவேண்டும். தனது சமகாலத்து ஏனைய பெண் அரசியல்வாதிகளான, இந்திராகாந்தி அம்மையார், பெனாசீர் பூட்டோ போன்று இவருக்கு அரசியல் குடும்பப் பின்னணி என்பது அமையவில்லை. ஆனால் அதற்கும் மாறாகப் பல குழப்பங்கள் நிறைந்த குடும்பப் பின்னணியே இருந்தது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியல் சூழலில் தனது இருப்பை நிலை நாட்டிக் கொள்ள அவர் எடுத்த முடிவுகளும் செயல்படுத்திய நடவடிக்கைகளும் அவரது வெகுவான நூல் வாசிப்பு தந்த பரந்த விரிவான வாசிப்பின் மூலமாகத்தான் அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அம்மையார் ஜெயலலிதா வாழ்வில் அவர் தானே வலிந்து தனக்கு ஏற்படுத்திக் கொண்ட களங்கம் என்றால் அது அவர் தனது வளர்ப்பு மகனாக சில காலம் தத்தெடுத்த சுதாகரனின் திருமணத்திற்காக அவர் செய்த படோடோபமான கோலாகலத் திருமண நிகழ்வு என்பது மறுக்க முடியாதது. தன்னை ஒரு மகாராணியாக நினைத்துக் கொண்டு அவரும் சசிகலாவின் குடும்பத்தாருமாக அன்று செய்தவையே அவரது தாழ்விற்கு முக்கியக் காரணமாக அமைகின்றது. இன்றளவும் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கரும்புள்ளியாக இருப்பது இந்த நிகழ்வே. இதனை தன் வாழ்வில் அவர் யோசித்துத் தடுத்திருந்தால் தமிழகம் போற்றும் தாயாகத் தமிழ் மக்கள் பலரால் அவர் போற்றப்பட்டிருப்பார். அது நடைபெறாமல் போனதற்கு அவரே முழுக்காரணம் என்று தான் சொல்லவேண்டும். 

தமிழகத்தில் வேறெந்த முதலமைச்சருக்கும் இல்லாத வகையில் 6 முறை முதலமைச்சர் பதவியை வகித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. இவர் ஏற்படுத்திச் செயல்படுத்திய நலத் திட்டங்களால் ஏழை எளியப் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் கிடைத்ததை மறுக்கவியலாது. 5 ரூபாயில் முழுச்சாப்பாடு என்று அம்மா உணவகம் செயல்பட்டபோது முதலில் கேலி பேசியவர்கள் கூட பின்னர் அதனைப் பாராட்டித் தான் பேசினார்கள். கல்லூரி மாணவர்களுக்குக் மடிக்கணினி, பெண்களுக்கு சைக்கிள், திருமணத்திற்குக் காசு, குழந்தைப் பேறு நலன், இலவச மருந்தகங்கள் எனப் பல நலன் திட்டங்கள் இவரால் அமல் படுத்தப்பட்டன. இதனால் தான் இவரது இழப்பை நினைத்து இன்றளவும் ஏழைப் பெண்கள் தங்கள் வீட்டுப் பெண்ணே இறந்து போனது போல நினைத்து வருந்தினர். 

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் சலிக்காமல் அலுக்காமல் முன்னேற்றப்பாதையை மட்டுமே கருத்தில் கொண்டு வெற்றியை நோக்கியே தமது பயணத்தை அமைத்துக் கொண்டவர் அம்மையார் ஜெயலலிதா. தன் வாழ்வில் அவர் எல்லா நேரங்களிலும் புத்தகம் வாசித்தவராகவும், நேரத்தை முறையாகப் பயன்படுத்தியவராகவும் தனது நெருக்கமான வட்டத்தினரால் அறியப்படுகின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகத் திகழ்ந்திருக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியேற்ற பின்னர் இவர் வழங்கிய முதல் உரையே பலரது கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நூலில் அம்மையார் ஜெயலலிதாவைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் நூலாசிரியர் செய்திகளை வழங்கியிருக்கின்றார். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 
  • நூலில் முழுமையாக இடம்பெறும் 2 பேட்டிகள் 
  • நாடாளுமன்ற உரை
  • இவரது மரணம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பு 
  • அப்போலோவில் இறுதி நாட்கள் - புள்ளி விவரத்துடன் தேதி வாரியாக 
  • சொத்துக் குவிப்பு வழக்கின் முழு விபரங்கள் - நீதிபதி குன்ஹா அறிக்கை, மேல்முறையீட்டுத் தகவல்கள் 
  • சொத்து குவிப்பு வழக்கு கால அட்டவணை 
  • முழுமையான சொத்து விவரங்கள், சொத்து மதிப்பு 
  • அவர் பெற்ற விருதுகள்

நூல் ஆசிரியர் சந்திரிகா அவர்கள் ஜெயலலிதா அம்மையாரை நேரில் சந்தித்து அவருடன் சில பணிகளில் இணைந்து செயலாற்றியவர் . சட்டத்துறை வல்லுநர் என்பதால் இந்த நூலை மிகக் கவனமாக ஆதாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே திரட்டி நூலாக வழங்கியிருக்கின்றார். 

கடந்த நூற்றாண்டின் ஆணாதிக்க அரசியல் சூழலில் அம்மையார் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம் என்பது முள் வேலிக்குள் எடுத்து வைத்த அடிகளாகத்தான் அமைந்திருந்தன. எளிமையான பெண்ணாக இருந்து கனவுக்கன்னியாக வளர்ந்து அரசியல் சாணக்கியம் கற்று, தன் தவற்றால் வீழ்ந்து மீண்டு வளர்ந்து தன் இறுதி நாள் வரை அரசியலில் இரும்பும் பெண்மணியாக வலம் வந்தவர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள். இவர் விட்டுச் சென்ற அ.தி.மு.க எனும் அரசியல் கட்சி இன்றைய நடப்புச் சூழலைக் காணும் போது மிகவும் பின் தங்கிச் செல்லும் அபாயத்தை வெளிக்காட்டுகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இரண்டு சகாப்தங்கள் மட்டுமே அ.தி.மு.க என்ற இந்த அரசியல் கட்சிக்கு இருந்த பலங்கள். அடுத்து வரும் இக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் முன்னாள் தலைமையின் செயல் திறமையைக் கருத்தில் கொண்டு திட்டங்களையும் வியூகங்களையும் மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகளையும் முன்னெடுத்தால் மட்டுமே அ.தி.மு.க அரசியல் தளத்தில் தொடர்ந்து நடைபோடலாம். 

முனைவர்.க.சுபாஷிணி

No comments:

Post a Comment