தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
இயற்றிய
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்
தாலப்பருவம்:
"தாலப்பருவம் அல்லது தாலாட்டு"
பிள்ளைத்தமிழில் மூன்றாம் பருவம் தாலப்பருவம் ஆகும். இது குழந்தையின் ஏழாம் திங்களில் நிகழ்வது ஆகும். தால் என்பது நாக்கு. நாக்கை அசைத்துக் குழந்தை பேசிப் பழகும் பருவம் மேலும் நாக்கை அசைத்துத் தாலாட்டிக் குழந்தையைத் தூங்க வைப்பதும் இப்பருவமாகும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஒரு பருவமாக விளங்கும் தாலாட்டு. நாளடைவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது எனலாம் (சான்றாக மாரியம்மன் தாலாட்டு போன்றன).
பாடல்— 1:
உந்தி [83] முதலா முந்துவளித் தோன்றி
உரசு நாவால் தோன்றிய ஒலியே
செந்தமிழ் எழுத்தெனச் செப்பினர் புலவர்
சேர்த்தே பாடினர் உன்னைத் தாலாட்டி
முந்தித் தாயே கற்றிடச் செய்தாள்
முக்கனி மொழியைத் தாலாட்டி என்றும்
தீந்தமிழுக்(கு) இலக்கணம் ஆனது தாலாட்டு
தீதறக் கற்றனர் தெளிந்து புலவோர்கள்
முந்தையர் குலத்தின் பெருமை யோடு
முன்னோர் வாழ்வியல் நெறிமுறை கூறி
சந்தவிசை பாடி ஆட்டினர் தொட்டிலையே
சிறுகண் மூடி சிறுவா உறங்காயோ
அந்தமிலா ஐவகை இலக்கணம் உரைத்தவனே
அதங்கோட் டாசாற்கு அரில்தப உணர்த்தியவா
செந்நாப் போதார் உன்வழிக் குறளை
உரைக்கச் செய்தவா தாலோ தாலேலோ [1]
குறிப்பு: 83 என்பது தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.
அருஞ்சொற்பொருள்:
உந்தி— மூலாதாரம்; முந்துவழி— மேலேவரும் காற்று; தீந்தமிழ்— தீம்+தமிழ் இனிமையான தமிழ்; அந்தம்— அழிவு முடிவு; அரில்தப— மயக்கம் நீங்க
இதன்பொருள்:
உந்தியிலிருந்து காற்றுத் தோன்றி மேலே வரும் போது நாவால் உரசப்பட்டு ஒலியாக மாறுகிறது. இந்த ஒலிகளைச் செந்தமிழ் எழுத்துகள் என்று செந்தமிழ்வாணர்கள் கூறினார்கள். அந்த எழுத்துக்களைச் சேர்த்துச் சொற்களை உருவாக்கினர். முதன்முதலாக தாயால் நாவை அசைத்துப் பாடிய பாட்டே தாலாட்டு எனப்பட்டது. இதைத்தான் தாய்மொழி என்று கூறுவர். இத்தாலாட்டே முக்கனி மொழிக்குத் தொடக்க இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்தைக் குற்றமறக் கற்றுத்தெளிந்தவர்களே புலவர்கள் எனப்பட்டனர். அவர்கள் நம்முன்னோர்களின் குலப்பெருமையோடு வாழ்வியல் நெறிமுறைகளையும் இசையோடு பாடி தாலாட்டுச் செய்கிறார்கள். தாலாட்டித் தொட்டிலை ஆட்டுகின்றார்கள். எனவே சிறுகண்மூடிச் சிறுவா உறங்காயோ? அழிவில்லாத ஐந்து இலக்கணங்களை உரைத்தவனே! அதங்கோட்டாசான் தடைகளுக்கு விடைகூறி இலக்கணத்தை மயக்கமின்றி உணர்த்தியவனே! திருவள்ளுவரையும் உன்வழியிலேயே குறளை இயற்ற வைத்தவனே! தாலோ தாலேலோ
இலக்கணக்குறிப்பு:
உரசு நா— வினைத்தொகை; செந்தமிழ், முக்கனி, தீந்தமிழ்,சிறுகண் செந்நாப்போதார் — பண்புத்தொகைகள்; அந்தமிலா— ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்; உன்வழி— ஆறாம் வேற்றுமைத்தொகை
__________________________________________
பாடல்— 2:
தமிழர் வாழ்வைக் களவு கற்பெனத்
தனித்தனி பிரித்துத் துறைபல தந்தவனே!
தண்டமிழ் நிலத்தை நான்காய்ப் பிரித்துத்
தனித்தே ஐவகை ஒழுக்கத்தை நிறுத்தியவா
தமிழர் பெருமையைத் தரணிக்கு உரைத்தவா!
தலைவன் தலைவி அறத்தொடு நிற்றலும்
தோழியும் பாங்கனும் உற்றிடத் துதவலும்
தாயர் இருவர் தன்மை உரைத்தவனே!
இமிழ்கடல் சீற்றத்தால் இறந்தன நூலெலாம்
எனினும் உன்நூல் இறவாது மீண்டதே
இடைகடைச் சங்கத்தார்க்கு இலக்கணம் தந்தவா!
எங்கள் காப்பியா தாலோ தாலேலோ
அமிழ்தாம் தமிழுக்கு அரணாய் உள்ளவா!
ஐவகை நிலத்தின் தெய்வம் உரைத்தவா!
அணிக்குத் தலைமை உவமை என்றவா!
அனைத்தும் அறிந்தவா தாலோ தாலேலோ [2]
அருஞ்சொற்பொருள்:
தரணி— உலகம்; தாயர் இருவர்— செவிலித்தாய்; நற்றாய்; பாங்கன்— தோழன்; இமிழ்கடல்— ஒலியை உடைய கடல்; அரணாய்— பாதுகாப்பாய்
இதன்பொருள்:
தமிழர் அகவாழ்க்கையைக் களவென்றும் கற்பென்றும் பிரித்து, அதை விளக்கத் துறைகளாகப் பிரித்துக் கூறியவா! தமிழர் வாழும் நிலப்பகுதியைக் குறிஞ்சி முதலாக நான்காய்ப் பிரித்தவா! அதேசமயம் ஒழுக்கத்தை ஐந்தாகக் கூறியவா! தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொன்னவனே! தலைவன் தலைவியர் பேசிக்கொள்ளும் இடத்தினையும், தோழியும் தோழனும் தலைமக்கள் காதல் வளர உதவி செய்தலையும் நற்றாய் செவிலித்தாய் இருவர் தன்மைகளையும் உரைத்தவா! முன்னொரு காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் அனைத்து நூல்களும் மறைந்தன. ஆனால் உன்நூல் மட்டும் இறவாமல் மீண்டது. அதுவே இடைச் சங்கத்தார்க்கும், முதற்சங்கத்தார்க்கும் (ஏன் இக்காலத்தார்க்கும்) இலக்கண நூலைத்திகழத் தந்தவனே! எங்கள் தொல்காப்பியனே! நாவினை அசைத்துப் பேசாயோ! தமிழ் தமிழ் என்று சொல்லச் சொல்ல அமிழிதாக மாறும் தமிழ் மொழிக்குப் பாதுகாப்பாக விளங்குபவனே! ஐவகைத்திணைக்கும் உரிய தெய்வங்களை எடுத்துக் கூறியவா! அணிகளுக்கெல்லாம் முதன்மையானது உவமையணி என்றவா! அனைத்தும் அறிந்த ஆன்றோனே! தாலோ தாலேலோ!
இலக்கணக்குறிப்பு:
களவு கற்பு, தலைவன் தலைவி— உம்மைத்தொகைகள்; தண்டமிழ்— பண்புத்தொகை; தோழியும் பாங்கனும்— எண்ணும்மை; இமிழ்கடல்— இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை; உன்நூல்— ஆறாம் வேற்றுமைத் தொகை.
__________________________________________
பாடல்— 3:
பிரிவுகள் என்பது பாலையின் உரிப்பொருள்
களவிலும் கற்பிலும் இருவேறு நிலையிலும்
பிரிவுக்கு இலக்கணம் பற்பல சொன்னவனே
பொருள்வயிற் பிரிதலும் உண்டென மொழிந்தவா!
உரித்தென மொழிந்தாய் ஓதலும் காவலும்
உயர்ந்த தூதும் ஒருவழி உண்டென்றாய்
உரிய காலத்தை ஓதினாய் அன்றே
ஒருவழித் தணத்தலும் உடந்தான் ஓதியவா!
உரிமை கோரார் உயர்ந்த மங்கையர்
மடல்மேல் ஏறவும் கடல்மேற் செல்லவும்
உடன்போக்கும் ஒருவகைப் பிரிவாய் உரைத்தவா!
உள்ளம் உவக்கத் தாலோ தாலேலோ
பரத்தையர் பிரிவால் ஊடலும் வந்தால்
பற்பல வாயில்கள் பலவாய்த் தேற்றுவதைப்
பலவகை மொழியால் பாங்காய் உரைத்தவா!
பாரோர் மகிழத் தாலோ தாலேலோ [3]
அருஞ்சொற்பொருள்:
ஒருவழித்தணத்தல்— உடன்போக்கு; பார் உலகம்; வாயில்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் சிறு பிணக்கு ஏற்படும்போது உடன்பாடு செய்பவர்கள்
இதன்பொருள்:
பிரிவு என்பது பாலைத்திணையின் உரிப்பொருள். இது களவு, கற்பு என்ற இருவேறு நிலைகளிலும் நடைபெறும் எனப் பிரிவுக்கு இலக்கணம் சொன்னவனே! பொருள் தேடச் செல்லும் பிரிவு, கற்பதற்காகவும் நாட்டைக்காப்பதற்காகவும், தூது செல்வதற்காகவும் பிரியும் பிரிவுகள் உள்ளன. உடன்போக்கையும் ஒரு பிரிவாகக் கூறயவனே! பெண்கள் மடல் ஏறுதல் வழக்கம் இல்லை. அதேசமயம் பெண்கள் தனியாகக் கலம் ஏறி கடல்கடந்தும் செல்வதில்லை என்றுஇலக்கணம் உரைத்தவா! நாங்கள் உள்ளம் மகிழும்படி கண்ணுறங்காயோ! கற்புக்காலத்தில் பரத்தையர்ப்பிரிவால் தலைவி ஊடும்போது பலவகையான வாயில்கள் பல்வேறுமுறையில் தேற்றுவர்கள் என உரைத்தவனே! உலகமக்கள் மகிழும்படித் தாலோ தாலேலோ!
இலக்கணக்குறிப்பு:
ஓதலும் காவலும்— எண்ணும்மை
__________________________________________
பாடல்— 4:
ஒலியைக் கணக்கிட உரைத்தாய் மாத்திரை
ஒருவிர லோடு பெருவிரல் சேர்த்து
ஓசை செய்தல் ஒருமாத் திரையாம்
ஒருவர் இயல்பாய்க் கண்ணிமைத் தலுமாம்
ஒலிக்கும் மாத்திரை ஒருநான்கு கூறாம்
ஒலிக்க மனதால் நினைத்தல் காலாம்
ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால்
விடுத்தல் ஒன்றென விளம்பினர் தமிழர்
ஒலிக்கும் எழுத்தைக் குறில்நெடில் ஒற்றென
ஒலிக்கும் அலகால் ஒருபெயர் வைத்தவனே!
ஒன்றே குறிலாம் இரண்டே நெடிலாம்
ஒற்றே அரையென ஓதிய புலவன்நீ
வலிமெலி இடையென வகுத்தாய் எழுத்தினை
வாய்பாட்டில் நீளும் எழுத்தின் இலக்கணம்
வருமிசை நூலில் காண்க என்றவனே!
வல்லோர் மகிழத் தாலோ தாலேலோ [4]
இதன் பொருள்:
எழுத்துக்கள் உச்சரிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட மாத்திரை என்னும் அலகினை உரைத்தாய். சுட்டு விரலோடு பெருவிரலைச் சேர்த்துச் சொடுக்க ஆகும் நேரமே ஒருமாத்திரை நேரமாகும். அதைக்கூட நான்கு கூறாக்கி எழுத்தை உச்சரிக்க நினைப்பது கால் மாத்திரை, இருவிரல்களையும் சேர்ப்பது அரை, முறுக்குதல் முக்கால், விடும்போது ஒருமாத்திரை ஆகும் என எடுத்துச் சொன்னவர்கள் நம்தமிழர்கள். ஒலிக்கும நேரத்தை வைத்துக் குறில்,நெடில், ஒற்று எனப்பெயர் வைத்தவனே! ஒரு மாத்திரை பெறுவது குறில் என்றும்,இரண்டு மாத்திரை நேரம் ஒலிப்பது நெடில் என்றம், அரைமாத்திரை அளவு ஒலிப்பதை ஒற்று என்றும் வகுத்துக் காட்டிய புலவன் நீயே! ஒற்று எழுத்தினை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று வகுத்துக் காட்டினாய்! வாய்ப்பாட்டில் நீண்டு ஒலிக்கும் எழுத்தின் அளவுகளை இசை நூலில் கண்டுகொள்க என்றவனே! வல்லோர் மகிழத்தாலோ தாலேலோ!
இலக்கணக்குறிப்பு:
ஒரு விரல்,பெருவிரல்— பண்புத்தொகைகள்; நினைத்தல்,ஊன்றல் தொழிற்பெயர்கள். வலிமெலி இடை உம்மைத்தொகை
__________________________________________
பாடல்— 5:
எல்லா எழுத்தும் பிறக்கும் இடமும்
எடுக்கும் முயற்சியும் தொகுத்துச் சொல்லியவா
எண்ணிய சார்பாய் இருக்கும் மூன்றும்
அதனதன் முதலே அடிப்படை என்றவனே!
எல்லா [102] எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரும் என்றவனே!
அகத்தெழு வழிஇசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறையென்றாய்
எல்லா[103] எழுத்திலும் இருபத்தி ரண்டே
சொல்லுக்கு முதலாம் என்று சொல்லியவா!
இருபத்து நான்கே இறுதியில் வருவதொடு
இடைநிலை மயக்கமும் இயம்பிய காப்பியனே!
எல்லாப் புணர்ச்சியும் இயையும் போது
இடையில்[118] சாரியை வருவதை உரைத்தாயே
எல்லாம் தொகுத்து தொகைமரபு உரைத்தவா!
எல்லாரும் மகிழத் தாலோ தாலேலோ [5]
குறிப்பு: 102,103 118 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.
இதன் பொருள்:
முதலெழுத்து, சார்பெழுத்து ஆகிய எல்லா எழுத்துகளும் பிறக்கும் இடமும், ஒலிக்கும் முயற்சியும் ஆகிய அனைத்தையும் தொகுத்துச் சொல்லியவா! சார்பெழுத்துகள்அதன்அதன் முதல் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு வரும் என்றவனே! எல்லா எழுத்துகளும் முன்பு கூறிய பிறப்பிடங்களிலிருந்து பிறக்கும் ஓசை காற்றினால், வெளிப்படக் கேட்குமாறு சொல்லும்போது உள்ளே உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கண நூல்களில் காணப்படும் என்றவனே! முப்பத்து மூன்று எழுத்துக்களில் இருபத்து இரண்டு எழுத்துகள் மொழிக்கு முதலிலும், இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியிலும் வரும் என்று கூறியதோடு மொழிக்கு இடையில் எந்த எந்த எழுத்துகளோடு எந்த எந்த எழுத்துகள் சேர்ந்து வரும் என்று கூறியவா! எல்லா வகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் இடையிலும் வருவதை உணர்த்தியவா! இவற்றை எல்லாம் தொகுத்து தொகைமரபு என்னும் இலக்கணம் உரைத்தவா எல்லோரும் மகிழத் தாலோ தாலேலோ !
இலக்கணக்குறிப்பு:
எழுத்தும்— முற்றும்மை; அகத்தெழு— ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை; தொகை மரபு— இருபெயரொட்டுப் பண்புத்தொகை
__________________________________________
பாடல்— 6:
எல்லா ஈற்றுக்கும் சாரியை உரைத்து
இருவகைப் புணர்ச்சிக்கும் இலக்கணம் இயம்பியவா!
இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வல்லெழுத்து மிகமென இலக்கணம் வகுத்தவனே!
எல்லாப் பருவத்தும் உழைத்தான் என்பதை
பனிவளி வெயில்மழை யுடன்அத்துச் சாரியை
இயைந்து வருமென எடுத்துக் காட்டியவா
இலக்கணத் தூடே பண்பாடு பகன்றவா!
எல்லாச் சொல்லிலும் எகரமும் ஒகரமும்
ஈற்றலில் வாராது என்று இயம்பியவா!
எல்லா ஈற்றுக்கும் எடுத்துக் காட்டுடன்
இலக்கணம் சொன்னாய்த் தாலோ தாலேலோ
நல்லது அல்லாச் சொல்லுக்குக் கூட
நற்றமிழில் இடக்கர் அடக்கல் என்றவனே!
நல்லதல்லா மலத்தைப் ‘பகர ஈ’ என்றவனே!
நாங்கள் மகிழ தாலோ தாலேலோ [6]
அருஞ்சொற்பொருள்:
வழி— காற்று; ஊடே— இடையே; பகறல்— கூறுதல்
இதன்பொருள்:
வேற்றுமை, அல்வழி என்னும் இருவகைப் புணர்ச்சிகளிலும் உயிரீறு மெய்யீறு குற்றியலுகர ஈறு என எல்லா வகை ஈறுகளுக்கும் சாரியை கூறியவனே! இகர இறுதி பெயர் சொல்லின்(அப்படி இப்படி எப்படி) முன்னர் வல்லெழுத்து மிகும் என இலக்கணம் வகுத்தவனே! தமிழன் பனி, காற்று, வெயில், மழை என்னும் எல்லாப்பருவ காலத்திலும் உழைத்தான் என்பதை அத்துச் சாரியை கூறும் போது சான்றுகூறியவனே! இவ்வாறு இலக்கணம் கூறும்போது இடையிடையே தமிழ்ப் பண்பாட்டையும் கூறியவனே! எந்தச் சொல்லுக்கும் இறுதியில் எகரமும் ஒகரமும் வாரா என்று கூறியவனே! இவ்வாறு எல்லா ஈறுகளுக்கும் இலக்கணம் சொன்னவனே! மலத்தை ‘பீ’ என்று கூறாமல் இடக்கர் அடக்கலாகப் ‘பகர ஈ’ என்றவனே! நாங்கள் மகிழத் தாலோ தாலேலோ.
இலக்கணக்குறிப்பு:
ஈற்றுக்கும் — முற்றும்மை; இருவகை,நற்றமிழ்— பண்புத்தொகைகள்; பனிவழிவெயில் மழை— உம்மைத்தொகை; இலக்கணம் சொன்னாய்— இரண்டாம் வேற்றுமைத்தொகை
__________________________________________
பாடல்— 7:
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டலென
எல்லா அளவையும் எடுத்துச் சொன்னவனே!
எள்ளையும் கொள்ளையும் நெல்லையும் குறித்தே
எல்லா நிலத்தார் உணவைக் கூறியவா!
கண்ணியும் மாலையும் தாரும் பூத்தானே
கழுத்திலும் மார்பிலும் அணிகையில் வேறாமே
காலம் இடத்திற்கு முன்பின் பொதுவெனக்
காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ
விண்ணும் [1589] மண்ணும் வளியொடு நெருப்பும்
வான்மழை நீரும் கலந்த உலகத்தில்
பெண்ணும் ஆணும் நீங்கிய அலியை
பேடியெனக் கூறியே மரபினைப் போற்றியவா
பெண்ணைப் பெற்றோர் கொடுப்பக் கொள்ளாது
பாங்கன் பாங்கியைத் தூதாய் விடுத்து
பெண்ணுடன் போதல் உடன்போக் காமென
பேசிய காப்பியா தாலோ தாலேலோ [7]
குறிப்பு: 1589 என்பது தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.
அருஞ்சொற்பொருள்:
கண்ணி — தலைமாலை; தார் — மார்பணிமாலை; வளி — காற்று; பாங்கன் — தோழன்; பாங்கி — தோழி
இதன்பொருள்:
அளவைப் பெயர்களாகிய எண்ணல், எடுத்தல் (நிறை) நீட்டல், முகத்தல் என்று எல்லா வற்றையும் எடுத்துச் சொன்னவனே! எள்,கொள், நெல் என்ற சொற்களால் ஐவகை நிலமக்களின் உணவுகளைக் குறித்துக் கூறியவா! கண்ணி, மாலை, தார் என்பன யாவையும் பூக்களால் ஆன தொடர்களே, இருப்பினும் தலையில் அணியும்போது கண்ணி என்றும், கழுத்தில் அணியும் போது மாலை என்றும், மார்பில் அணியும்போது தார் என்றும் பெயர்களைப் பெறுகின்றன. இவற்றின் வேறுபாடுகளை எல்லாம் உரைத்தவனே! இடத்திற்கும் காலத்திற்கும் முன் பின் என்ற சொற்கள் பொதுவாக வரும் என்று காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ! வானமும்,நிலமும், காற்றும் நெருப்பும் நீரும் கலந்த சேர்க்கையே உலகம் என்றவனே! அவ்வுலகத்தில் ஆண் தன்மையும், பெண்தன்மையும் அற்ற பிறவியைப் பேடி என்று கூறி மரபினைக் காத்தவனே! தலைவியின் பெற்றோர்களால் கொடுக்கப்படாத போது, தோழியையும் தோழனையும் தூதாக விடுத்துப் பெண்ணை அழைத்துக்கொண்டு செல்லுதலை உடன்போக்கு என்று கூறிய காப்பியனே! தாலோ தாலேலோ.
இலக்கணக்குறிப்பு:
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் உம்மைத்தொகைகள்; எள்ளையும், கொள்ளையும் — எண்ணும்மை
__________________________________________
பாடல்—8:
ஈருயிர் [140 ]சேர்ந்தால் இடையில் தோன்றும்
எழுத்தைக் கூட ‘ய்.வ்’ என்றவனே!
எழுதும் போது மகரம் வரும்முறை
உட்பெறு புள்ளி உருவாகும் என்றவனே[143]
ஆரிய மொழியை அண்ட விடாது
அன்றே காத்தவனே அதையும் மீறினால்
அம்மொழிக் கிளவி அவ்வெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்றவனே [884]
சீரிய புலவர் அவையில் கேட்ட
தடைக்கு விடையைத் தகும்படி உரைத்தவனே!
திருவிற் பாண்டியன் திருமுன் அரங்கேற்றத்
தொடங்கிய காப்பியா தாலோ தாலேலோ![பாயிரம்]
ஊரொடு[1031] தோற்றம் உரித்தென மொழிந்து
உலாத்தோன்ற ஒருவித் திட்டவனே! உன்னை
ஊரில் உள்ளதேரில் வைத்து இழுப்போம்
உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ [8]
குறிப்பு: பாயிரம் மற்றும் 140, 143, 884, 1031 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.
அருஞ்சொற்பொருள்:
மகரம் ம் என்னும் மெய்யெழுத்து; கிளவி—சொல்;சீரிய- சிறந்த
இதன்பொருள்:
புணர்ச்சியில் வருமொழி முதலிலும் நிலை மொழி ஈற்றிலும் உயிர் எழுத்துகள் வரும்போது அவற்றை உடன்படுத்த ய், வ் என்னும் எழுத்துகள் தோன்றும் என்றவனே! எழுதும் போது மகரக்குறுக்கத்திற்கு உள்ளே புள்ளி உருவாகும் என்றவனே! அன்றே ஆரிய மொழியைத் தமிழில் கலக்க விடாது காத்தவனே! அதையும் மீறிய எழுதவேண்டும் என்ற சூழ்நிலையில் அவ்வெழுத்துகளின் வரிவடிவத்தை நீக்கி தமிழ் ஒலிக்கு ஏற்றாற் போல் மாற்றி எழுதவேண்டும் என்றவனே! சிறந்த புலவர்கள் வீற்றிருக்கும் நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் புலவர்கள் வினவிய வினாக்களுக்கெல்லாம் விடைகளைக் கூறி நூலினை அரங்கேற்றம் செய்தவனே! சிற்றிலக்கியங்களில் ஒன்றாகிய உலா இலக்கியம் தோன்ற அடிப்படை இட்டவனே! ஊரில் உள்ள நாங்கள் அனைவரும் ஒருங்குகூடி உள்ளமாகிய தேரில் வைத்து இழுப்போம். ஆகவே உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ.
இலக்கணக்குறிப்பு:
ஒரீஇ – சொல்லிசை அளபெடை
__________________________________________
பாடல்—9:
ஒன்பதின் மீதுனக்கு நாட்டம் உள்ளதால்
ஓரதி காரத்தை ஒன்பதியல் ஆக்கினையோ
ஓராயிரத் தறுநூற்று பதினொரு நூற்பா
உரைத்தாய் என்றே ஒத்துக் கொண்டோமே
ஒன்பதி னோடு ஒருநூறு ஆயிரம் [463]
ஒட்டி வருவதை உரைத்தாய் இலக்கணத்தால்
தொண்ணூறு தொள்ளா யிரமாகும் முறையைத்
துளைந்து உரைத்த தொல்காப் பியனே
நன்றாய் சோற்றை ஆக்கல் போல
நவின்றாய் இலக்கணம் கிளவி ஆக்கத்தில்
நம்தமிழ் வாழ நல்லரண் அமைத்த
நற்றமிழ்ப் புலவா தாலோ தாலேலோ
உந்தன் நூலை நூலெனத் தொடங்கி
நூலென முடித்த நுனித்தகு புலவோனே
உனக்கீடாய் இனியொரு நூலை படைக்க
உள்ளா ரிலையே தாலோ தாலேலோ [9]
குறிப்பு: 463 என்பது தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.
அருஞ்சொற்பொருள்:
துளைந்து—ஆய்ந்து
இதன்பொருள்:
ஒன்பதின் மீது உனக்கு அளவிலா நாட்டம் இருப்பதால்தான் என்னவோ ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளாய் அதனால் நூற்பாக்களின் எண்ணிக்கையும் 1611 ஆக உள்ளதோ? மேலும் புணர்ச்சியில் ஒன்பது என்ற எண்ணை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளாய். தொண்ணூறு தொள்ளாயிரம் தோன்றும் முறைகளை ஆயந்து கூறிய தொல்காப்பியனே! குருணை, கல், கறுப்பு அரிசி இவற்றை எல்லாம் களைந்து உணவு சமைப்பதைச் சோறு ஆக்கல் என்பர். அதை மனத்தில் கொண்டே சொல் அதிகாரத்தின் முதல் இயலைக் கிளவி ஆக்கம் என்று பெயர் வைத்தவனே! நம் தமிழ் மொழியின் காப்பரண் ஆக தொல்காப்பியம் தந்த புலவா! தாலோ தாலேலோ. உன்றன் நூலை நூல் மரபு என நூலில் தொடங்கி, புலவர் கூறிய நூலே என நூலில் முடித்த கூர்த்த அறிவுள்ளவனே தாலோ தாலேலோ!
இலக்கணக்குறிப்பு:
நம் தமிழ்—ஆறாம் வேற்றுமைத்தொகை; நல்லரண்—பண்புத்தொகை; உன்றன் என்பது உந்தன் என எதுகைக்காக எழுத்தப்பட்டது. இலை—இல்லை என்பதன் இடைக்குறை
9 இன் சிறப்பு — விளக்கம்:
9உடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் 'விடையின் கூட்டுத்தொகை 9ஆகவே வரும்'
சான்று: 9x9 =81 → 8+1= 9; 8x9 =72 → 7+ 2 = 9
9 உடன் எந்த எண்ணை கூட்டினாலும் 'விடையின் கூட்டுத்தொகை கூட்டப்பட்ட எண்ணாக இருக்கும்'
சான்று: 9+ 9 =18→1+8= 9; 9+ 7 =16 → 1+6= 7
அதனால்தான் சிறப்பு தலைமை எனும் பொருள்தரும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய ஐ யை ஒன்பதாவது எழுத்தாகத் தமிழ் நெடுங்கணக்கில் வைத்துள்ளனர். இக்காரணத்தினாலேயே அய் என எழுதக்கூடாது என்கிறோம். அக்காரணம் பற்றியே தொல்காப்பியர் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரித்துள்ளார்.
திருமூலரும் இவ்வாறே திருமந்திரத்தை ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டதாகச்செய்துள்ளார்.
ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
(5-27-20222)
__________________________________________
பாடல்—10:
களவல ராயினும்[1061] காமத்துப் படினும்
கண்ட ஊரார் காதொடு பேசினும்
கட்டினும் கழங்கினும் வெறியாட்டு அயர்தலும்
செவிலிக் கூற்று நிகழும் என்றவனே!
களவில் பழகிய காதலர் இருவர்
காவிலும் பூம்பொழில் சோலையில் சேர்ந்தே
கனவில் மிதந்தது போதுமென்றே கற்புக்காக
கடிமணம் புரிவர் என்று சொன்னவனே!
அளவிற்கும்[170] நிறையிற்கும் மொழிமுத லாகி
உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தென
அகரவுகரம் கசதப நமவ என்றவனே!
அனைத்தும் அடக்கி இலக்கியம் சொன்னவனே
உளமகிழ்ந் துன்னைப் போற்றினோம் ஐயனே
உவந்து நீயும் தாலோ தாலேலோ
ஒருபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா
பெற்றதால் உன்னை தாலோ தாலேலோ [10]
குறிப்பு: 170, 1061 என்பன தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.
அருஞ்சொற்பொருள்:
அலர்— ஊரார் தூற்றிப் பேசல்; கட்டு—கட்டாக உள்ள ஓலைச்சுவடி பார்த்துக்கூறல்; கழங்கினும்— கழற்சிக்காயின் எண்ணிக்கையை வைத்துக் கூறல்; வெறியாட்டு— வேலன் மீது வந்து கூறல்; கா—பூங்கா; கடி மணம்—திருமணம்
இதன்பொருள்:
தலைவனும் தலைவியும் பழகுவதை ஊரார் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போதும், காமம் மிகுதியால் தலைவியின் உடலில் தோன்றும் நிறவேறு பாட்டின் போதும், ஊர் மக்கள் தங்களுக்குள் கமுக்கமாகப் பேசிக் கொள்ளும் போதும், ஓலைக்கட்டு,கழற்சிக்காய்,இவற்றின மூலமும் வேலன் வந்து ஆடிச் சொல்லும் போதும் செவிலி கூற்று நிகழும் என்றவனே! காதலர் இருவரும் பூங்காவிலும், சோலையிலும் சேர்ந்து சுற்றி மகிழ்ச்சியாக இருந்தது போதும் என்று திருமணம் செய்து கொள்ளுவர் என்று கூறியவனே! அளவைகளாகிய எண்ணுதல் முகத்தல் நீட்டல் மற்றும் நிறுத்தல் முதலிய அளவுப் பெயர்கள் மொழிக்கு முதலாக வரும் போது வரக்கூடிய எழுத்துகளை அ, உ, க,ச,த,ப,ந,ம,வ என்னும் ஒன்பது எழுத்துகளும் வரும் என்றவனே! இவற்றையெல்லாம் உள்ளடக்கி தமது நூலை இலக்கியம் போல் கூறியவனே! எங்கள் உள்ளம் மகிழ்ந்து போற்றினோம் தலைவா நீயும் உள்ளம் மகிழ்ந்து நாவை அசைத்துப் பாடுவாயாக!எந்தப் பிறவியிலும் எங்களை தீயவை தீண்டாமல் இருப்போம். ஏனெனிலே பழிசேராத உன்னை நாங்கள் மகவாகப் பெற்றுள்ளோம். தாலோ தாலேலோ
இலக்கணக்குறிப்பு:
கட்டினும் கழங்கினும் எண்ணும்மை; பூம்பொழில்- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை; தீண்டா — ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
__________________________________________
தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
அலைபேசி: 9788552993