தனது சுய முயற்சியின் காரணத்தினாலும் வரலாற்றின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் ஒரு தனி மனிதர் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி செயல்படுத்த முடியும் என சாதித்துக் காட்டியவர் சென்னை விருகம்பாக்கத்தில் கடல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய திரு. ஹேமச்சந்திரன் அவர்கள். அவர் இன்று காலமானார் என்ற அதிர்ச்சியான செய்தி கிட்டியது. அவருக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் அஞ்சலிகள்.
வரலாற்று அறிஞர் கடலோடி நரசையா தான் எனக்கு இவரை முதலில் அறிமுகப்படுத்தியவர்; சென்னையில் விருகம்பாக்கத்தில் இருக்கின்ற கடல் அருங்காட்சியகத்தை உருவாக்கி இந்த அருங்காட்சியகத்தைச் செயல்படுத்தி வந்தார் திரு. ஹேமச்சந்திரன் அவர்கள். அவரது அருங்காட்சியகத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினரோடு நந்தனம் உட்பட 3 கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களையும் ஒருங்கிணைத்து ஒரு வரலாற்றுச் சுற்றுலாவை முன்னர் ஏற்பாடு செய்திருந்தோம். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய தமிழக அருங்காட்சியகங்களின் ஆணையர் டாக்டர்.சண்முகம் இஆப (தற்போது முதலமைச்சரின் தனிச் செயலர்களில் ஒருவர்) நேரில் வந்திருந்து மாணவர்களுக்கு உரையாற்றினார்.
தான் பணி ஓய்வு பெற்ற நாளிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மிகத்தீவிரமாக கவனத்துடன் பக்கிங்ஹாம் கால்வாய், கலங்கரை விளக்கங்கள், தமிழக கடற்கரையோர எச்சங்கள், பல்வேறு வகை ஆவணங்கள் எனத் தனது சொந்த சேகரிப்பாக ஒரு அருங்காட்சியகத்தை தானே உருவாக்கியவர்.
அருங்காட்சியகத்தில் உள்ள ஆவணங்கள் வரலாற்று மாணவர்களுக்கும் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் நிச்சயமாக பயன் அளிக்கக்கூடியவை.
இவரது பணிகளைப் பாராட்டி தமிழக அரசின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை அவரது சேகரிப்புக்களுக்கு முறையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்
அருங்காட்சியக முகவரி:
THE MARITIME HERITAGE MUSEUM, NO 8, ELANGO NAGAR ANNEXE, VIRUGAMBAKKAM, CHENNAI 600092.
-முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
No comments:
Post a Comment