Wednesday, June 1, 2022

அச்சுப் புரட்சியும் உலகளாவிய பதிப்பு முயற்சிகளும்



   —   முனைவர் க. சுபாஷிணி 


குட்டன்பெர்க் என்ற பெயர் பதிப்பகம் அல்லது ஆய்வுலகம் மட்டுமன்றி அச்சு நூல்களைக் கையில் எடுத்து அதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒரு பெயர். யோகானஸ் குட்டன்பெர்க் (Johannes Gensfleisch zur Laden zum Gutenberg) என உலகளாவிய அளவில் அச்சுப் புரட்சியின் தந்தை என அறியப்படுகின்ற  குட்டன்பெர்க் அவர்களது பிறந்த இல்லம் மற்றும் அருங்காட்சியகம் ஜெர்மனியின் மைன்ஸ் நகரில் அமைந்திருக்கின்றது.  



இவர் பிறந்த தேதி சரியாக அறியப்படவில்லை என்றாலும் 1400 ஆம் ஆண்டு வாக்கில் பிறந்தவர் என்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 3 பெப்ரவரி 1468 அன்று அதாவது, தனது அறுபத்து எட்டாவது வயதில் அவர் மறைந்தார். தனது வாழ்நாளில் ஒரு கண்டுபிடிப்பாளராக, ஒரு பொறியியலாளராக, அச்சுப் பணியாளராக, பதிப்பாளராக, தச்சராக எனப் பல துறைகளில் தடம் பதித்தவர் இவர். இவரது அச்சுயந்திரக் கண்டுபிடிப்பு  ஐரோப்பாவுக்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தி அது உலகம் முழுவதும் பரந்து விரிந்து உலகளாவிய அளவில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தக் காரணமாகியது.

இவரது அச்சு இயந்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் இத்தாலியின் ரோம் நகரத்தில் மையம் கொண்டிருந்த வாட்டிகன் அரசை எட்டியது. ஐரோப்பா மட்டுமன்றி உலகம் முழுவதும் பைபிள் அச்சாக்கம் செய்யப்பட்டு அவை உலகம் முழுவதும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கத்தோலிக்க அரசுக்கு தோன்றியது. இதன் காரணமாக அச்சு இயந்திரங்கள் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டு கப்பலில் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட வரலாற்று நிகழ்வும் நிகழ்ந்தது.




இதன் தொடர்ச்சியில் இந்தோனேசியாவிற்குச் செல்வதற்காக வந்த ஒரு கப்பல் கேரளாவின் கொச்சின் பகுதியில் நிறுத்தப்படவே அங்கிருந்த பாதிரிமார்கள் அந்த அச்சுயந்திரம் தங்களது தமிழ் நிலத்து சமயப் பணிகளுக்குத் தேவை என்ற காரணத்தினால் அதனைக் கேட்டுப் பெற்று தமிழின் முதல் அச்சு நூலை உருவாக்கினர். அதற்கு முன்பே 'கார்டிலா' என்ற ஒரு நூல் ரோமானிய தமிழ் உச்சரிப்புடன் என்ற வகையில் வாட்டிகனில் அச்சிடப்பட்டது.  'தம்பிரான் வணக்கம்' என்ற நூலே தமிழில் வெளியான முதல் அச்சு நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. இது நடந்த காலம் கி.பி 16ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டமாகும்.

யோகானஸ் குட்டன்பெர்க்  தொழில் ரீதியாக அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் என்றபோதிலும் அவரது செயற்பாடு மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்டது என்பதை மறுக்க இயலாது. ஆய்வுலகம் இதனை Gutenberg Revolution என்று சிறப்பித்துக் குறிப்பிடுகின்றது. இதற்குக் காரணம் நூல் வாசிப்பு என்பது ஐரோப்பாவைப் பொறுத்தவரை தேவாலயங்களிலும் அரசவை மற்றும் அரசு சார் அமைப்பிலும் மட்டுமே என்ற நிலை மாறி எல்லாத் தரப்பு மக்களும் தாள்களில் அச்சு நூல் வடிவில் கொண்டுவரப்பட்ட எழுத்துப் படிமங்களை வாசிக்கக்கூடிய வாய்ப்பை அது உருவாக்கியது எனலாம்.



இந்தியச் சூழலை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில், மிகக் குறைந்த அளவில், சமூகத்தில் உயர் சாதி என அறியப்பட்டோரும் அரசுகளில் மட்டுமே என்ற வகையில் ஓலைச்சுவடிகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்தன. ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதும், அதனை மறுபதிப்பு செய்வதும், அதனை எழுத்தாணியால் கீறி எழுதி தயாரிப்பதும் சுலபமான காரியமாக இல்லை. இதுவும் ஒருவகையில் சுவடிகள் எல்லோரையும் சென்றடைவதற்குத் தடையாக அமைந்தது எனலாம். இந்தச் சூழலில் அச்சு இயந்திரங்களைக் கொண்டு பெரிய எண்ணிக்கையில் நூல்களை இயந்திரத்தின் வழியாக பல பிரதிகளை அச்சாக்கம் செய்யும் முயற்சி நடைமுறைக்கு வந்தபிறகு பொதுமக்களும் நூல்களை வாங்கி அல்லது நூலகங்களிலிருந்து பெற்று வாசிக்கக் கூடிய வாய்ப்பு என்பது பரவலாக்கம் கண்டது.


தனது அச்சு இயந்திரம் படிப்படியாக பல்வேறு மாற்றங்களை உட்புகுத்தி இன்று நாம் காணும் பேரளவிலான  நிலையை அடைவதைக் காண  இன்று குட்டன்பெர்க் நம்மோடு இல்லை.  ஆனால் அவர் லத்தீன் மொழியில் அச்சாக்கம் செய்து உருவாக்கிய 200 பைபிள் நூல்கள் அவர் காலத்தில் அவர் சாதித்தது பெரிய  சாதனை எனலாம். அன்று 200 பைபிள் நூல்களை அவர் அச்சுப் பதிப்பாக்கம் செய்து முடிக்க மூன்று ஆண்டுகள் ஆயின.

நூல்களை அச்சாக்கம் செய்து முடித்த பின்னரும் கூட அவை மக்களை சென்றடைய சரியான திட்டமிடல் அல்லது முன்னெடுப்பு என்பது அன்று சரியாக இயங்கவில்லை.  அந்த சமயத்தில் கத்தோலிக்க சமய அமைப்பு அச்சு ஊடகத்தின் வழியே மக்களைச் சென்றடைய முடியும் என்ற எண்ணத்தை உறுதியாக நம்பியதால் பெருமளவில் பதிப்புகளைத்  தயாரித்து வினியோகிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு அடுத்த நூற்றாண்டு ஜெர்மனியில் தோன்றி பின்னர் படிப்படியாக விரிவாக்கம் கண்ட லூத்தரன் சீர்திருத்தக் கிறித்துவம் தனது கருத்துக்களை வெளியிடவும் அச்சு எந்திரத்தின் துணையை நாடி அதனைப் பயன்படுத்திக் கொண்டது.  கிபி 1500 ஆண்டு வாக்கில் ஏறக்குறைய எட்டு மில்லியன் நூல்கள் ஐரோப்பாவில் இயந்திரங்களால் பதிக்கப்பட்டிருந்தன.

மார்ட்டின் லூத்தர் வாட்டிகன்  கத்தோலிக்க அமைப்புக்கு எதிராக தனது 95 கருத்துகளை தாளில் அச்சுப் பதிவாக்கி தேவாலயத்தின் வாசலில் 1517ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ஆணி அடித்து ஒட்டி வைத்தார். கத்தோலிக்க தேவாலயத்தில் பழமைவாத சிந்தனைகள் மற்றும் அங்கு நிலவும் பிரச்சினைகளை அறிவார்ந்த வகையில் எதிர்க்கும் வகையில் அவரது கருத்துகள் அமைந்திருந்தன. இந்த அறிக்கை அக்காலகட்டத்தில் அச்சுப்பதிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஏறக்குறைய மூன்று லட்சம் அறிக்கைகள் 1517 முதல் 1520 வரையிலுமான காலகட்டத்தில் ஐரோப்பா முழுமையுமே விநியோகிக்கப்பட்டன.

சமய நிறுவனங்களின் கொள்கை பிரச்சாரத்திற்கு மட்டுமன்றி படிப்படியாக அச்சு இயந்திரங்களின் பயன்பாடு என்பது மருத்துவம், கல்வி அறிவியல் என்ற வகையில் விரிவாக பயன்படுத்தப்பட்டது. இதன் காரணத்தால் மொழிகளின் இலக்கணத்தில் சீர்திருத்தங்களும் சீரமைப்பு முயற்சிகளும் நிகழ்ந்தன.

இன்று நாம் ஒவ்வொருவரும் நாம் விரும்பும் வகையில் நூல்களை வாங்கி வாசிப்பது எளிமையான ஒரு நிகழ்வாக மாற்றம் கண்டுள்ளது. தகவல்களும் செய்திகளும் எல்லோருக்கும் பொது என்ற வகையில் கருத்துப் புரட்சியை எல்லா மக்களுக்கும் கொண்டு சேர்த்ததில் அச்சு இயந்திரங்களே அடிப்படையாகின்றன.

தமிழக் கல்வி சூழலிலும் கல்லூரி பாடத் திட்டங்களிலும் அச்சுப் பதிப்பாக்கத்தின் வரலாறு மற்றும் அது படிப்படியாக கண்ட வளர்ச்சியும் முன்னேற்றங்களும்  பற்றிய செய்திகளும் யோகானஸ் குட்டன்பெர்க் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் இணைக்கப்பட வேண்டும். இது கல்வித் தளத்தில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆரம்பக்கால அச்சு பதிப்பாக்க செயல்பாடுகள் மற்றும் அச்சு இயந்திரங்கள் பற்றிய அடிப்படை புரிதலை வழங்க நிச்சயம் உதவும்.




No comments:

Post a Comment