Wednesday, June 15, 2022

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வள்ளுவமும் விஞ்ஞானமும்

வெ.தோதாத்திரி


ஒப்புரவு அறிதல்:
ஒப்புரவு என்பது கைம்மாறு கருதாத உதவி. பிரதி உபகாரம் எதிர்பார்த்துச் செய்வது ஒப்புரவு ஆகாது. மற்றவர்களுக்கு நம்மால்  இயன்ற  உதவிகளைச் செய்வது, பணத்தால் உதவுவது, உடலால் உதவுவது இதற்குப் பிரதி பயனை எதிர்பாராமல்  செய்ய வேண்டும். இதற்கு உதாரணமாக வள்ளுவர் நான்கு திருக்குறள்களைக் காட்டியுள்ளார்.
    
          கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
          என் ஆற்றும் கொல்லோ உலகு          (211) 
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.

மழை பொழியும் மேகத்திற்கு நாம் என்ன பிரதி பலன் செய்கின்றோம்? ஒன்றுமில்லை. மேகமும் நம்முடைய பிரதி பலனை எதிர்பார்த்து மழை பொழிவதில்லை. மழையைப் பொழிவது மேகத்தின் குணம், இயல்பு. அதே போன்று பிரதி பலனை எதிர்பாராமல் பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.
          ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
          பேரறிவாளன் திரு.          (215)
ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தது போன்றது பேரறிவாளனிடம் உள்ள செல்வம். ஊரார் ஊருணியில் நீரை எடுத்துப் பலவகையிலும் பயன்படுத்துகிறார்கள். அந்த ஊருணிக்கு அவர்கள் எந்தவித கைம்மாறும் செய்வதில்லை. அவ்வாறே பேரறிவாளனிடம் உள்ள செல்வம் ஊராருக்குப் பயன்படும். எத்தகைய கைம்மாறும் பேரறிவாளன் எதிர் பார்ப்பதில்லை.

          பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
          நயன் உடையான் கண்படின்          (216)
ஊரின் நடுவே பயன் மிகுந்த மாம்பழங்கள் பழுத்தாற் போன்றது நற்பண்புடையானிடன் செல்வம் சேர்தல். ஊரின் நடுவே பயன்மிகுந்த மா பலா வாழை போன்ற மரங்கள் கனிகளுடன் இருந்தால் அவற்றை ஊரார் உண்டு களிப்பர். அதற்காக இம்மரங்களுக்கு எவ்வித கைம்மாறும் செய்வது கிடையாது.

          மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
          பெருந்தகையான் கண்படின்          (217)
அனைத்து உறுப்புகளும் மருந்தாகிப் பயன்படத்தவறாத மரம் போன்றது பெருந்தகைமை உடையவனிடம்  செல்வம் சேர்தல். சில மரங்களின் காய்கள், இலைகள், பழங்கள், பட்டை மற்றும் வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படும். அவற்றைத்தக்க  முறையில் உபயோகித்து மக்கள் பயனடைகிறார்கள். இருந்தாலும் அவர்கள் அந்த மரத்துக்கு எந்த வித உதவியோ கைம்மாறோ செய்வதில்லை. அதைப் போலவே பெருந்தகைமையுடையான் தன் செல்வத்தைப் பிறருக்காகவும் பயன்படுத்துவான். இதற்கு அவன் பிரதி  பலனை எதிர்பார்ப்பதில்லை.

கைம்மாறு கருதாமல் செய்யும் உதவி ஒப்புரவு என்று பார்த்தோம். அப்படி உதவி செய்வதால் விளையும் நன்மைகள் யாதென்று பார்த்தோம். உதவி செய்பவர்கள் அந்தப் பலனை எதிர்பார்ப்பதில்லை என்றாலும் அந்த நன்மைகள் தாமாகவே உதவி செய்பவர்களுக்கு வந்து சேரும். விஞ்ஞானம் அவ்வாறே கூறுகிறது. அது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம்.

தன்னையும் தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே எண்ணாமல் பிறரைப் பற்றி எண்ணும் போது நமது மனவழுத்தம் (stress) குறைகிறது. இதனால் நமது ஆரோக்கியம் கூடுகிறது. மற்றவர்களுக்கு உதவும் போது தன்னைப்பற்றிய சிந்தனை (self centeredness) போய்விடுகிறது. இதனால் நமக்கு ஏற்படும் கவலைகளும் போய்விடுகின்றன. மற்றவர்களுக்கு உதவும் போது மூளையில் நம்மை அமைதிப்படுத்தும் endorphins, oxytocin போன்ற  hormones உற்பத்தியாகி நமக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன. அதனால்தான் திரு.இரவீந்திரநாத் தாகூர் அவர்களும் ‘service is joy ’  அதாவது "தொண்டு மகிழ்ச்சி" என்றார். மற்றவர்களுக்குச் சேவை செய்யும் போது நமது கோபம், குரோதம் போன்ற குணங்கள் மறைந்து விடுகின்றன. இதனாலும் நமது ஆரோக்கியம் கூடுகிறது. 

எதிர்மறை எண்ணங்களான, கோபம், பழி வாங்குதல் போன்ற சிந்தனைகள் நம்முடைய ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன.. அந்த உணர்ச்சிகள் வரும் போது நமது நெஞ்சு படபடக்கின்றது.. நமது இரத்த அழுத்தம் கூடுகிறது. நமது ஜீரணம் தடைப்படுகிறது. இவற்றினால் நமது ஆரோக்கியம் கெடுகிறது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்யும் போது மறைந்துவிடுகின்றன. இதனால் நமது ஆரோக்கியம் பேணப்படுகிறது.





No comments:

Post a Comment