Showing posts with label புலவர் ஆ.காளியப்பன். Show all posts
Showing posts with label புலவர் ஆ.காளியப்பன். Show all posts

Wednesday, June 15, 2022

"தொல்காப்பியர் பிள்ளைத் தமிழ்"



தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
                இயற்றிய
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்




தாலப்பருவம்:
"தாலப்பருவம் அல்லது தாலாட்டு"
பிள்ளைத்தமிழில் மூன்றாம் பருவம் தாலப்பருவம் ஆகும்.   இது குழந்தையின் ஏழாம் திங்களில் நிகழ்வது ஆகும்.   தால் என்பது நாக்கு.   நாக்கை அசைத்துக் குழந்தை பேசிப் பழகும் பருவம் மேலும் நாக்கை அசைத்துத் தாலாட்டிக் குழந்தையைத் தூங்க வைப்பதும் இப்பருவமாகும்.   பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஒரு பருவமாக விளங்கும் தாலாட்டு.    நாளடைவில் தனியொரு சிற்றிலக்கியமாக உருப்பெற்றது எனலாம் (சான்றாக மாரியம்மன் தாலாட்டு போன்றன).

பாடல்— 1:
          உந்தி [83] முதலா  முந்துவளித் தோன்றி                                                      
                    உரசு நாவால் தோன்றிய ஒலியே
          செந்தமிழ் எழுத்தெனச் செப்பினர் புலவர்
                    சேர்த்தே பாடினர் உன்னைத் தாலாட்டி
          முந்தித் தாயே கற்றிடச் செய்தாள்
                    முக்கனி மொழியைத் தாலாட்டி என்றும்
          தீந்தமிழுக்(கு) இலக்கணம் ஆனது தாலாட்டு
                    தீதறக் கற்றனர் தெளிந்து புலவோர்கள்                      
          முந்தையர்  குலத்தின் பெருமை யோடு
                    முன்னோர் வாழ்வியல் நெறிமுறை கூறி
          சந்தவிசை பாடி ஆட்டினர் தொட்டிலையே
                    சிறுகண் மூடி சிறுவா உறங்காயோ
          அந்தமிலா ஐவகை இலக்கணம் உரைத்தவனே
                    அதங்கோட் டாசாற்கு அரில்தப உணர்த்தியவா
          செந்நாப் போதார் உன்வழிக் குறளை
                    உரைக்கச் செய்தவா தாலோ தாலேலோ         [1]

குறிப்பு:  83  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
உந்தி— மூலாதாரம்; முந்துவழி— மேலேவரும் காற்று; தீந்தமிழ்— தீம்+தமிழ் இனிமையான தமிழ்; அந்தம்— அழிவு முடிவு; அரில்தப— மயக்கம் நீங்க

இதன்பொருள்:
உந்தியிலிருந்து காற்றுத் தோன்றி மேலே வரும் போது நாவால் உரசப்பட்டு ஒலியாக மாறுகிறது. இந்த ஒலிகளைச் செந்தமிழ் எழுத்துகள் என்று செந்தமிழ்வாணர்கள்   கூறினார்கள். அந்த எழுத்துக்களைச் சேர்த்துச் சொற்களை உருவாக்கினர். முதன்முதலாக தாயால் நாவை அசைத்துப் பாடிய பாட்டே தாலாட்டு எனப்பட்டது. இதைத்தான்  தாய்மொழி என்று கூறுவர். இத்தாலாட்டே  முக்கனி மொழிக்குத் தொடக்க இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்தைக் குற்றமறக் கற்றுத்தெளிந்தவர்களே புலவர்கள் எனப்பட்டனர். அவர்கள் நம்முன்னோர்களின் குலப்பெருமையோடு வாழ்வியல் நெறிமுறைகளையும் இசையோடு பாடி தாலாட்டுச் செய்கிறார்கள். தாலாட்டித் தொட்டிலை ஆட்டுகின்றார்கள். எனவே சிறுகண்மூடிச் சிறுவா உறங்காயோ? அழிவில்லாத ஐந்து இலக்கணங்களை உரைத்தவனே! அதங்கோட்டாசான் தடைகளுக்கு விடைகூறி இலக்கணத்தை மயக்கமின்றி  உணர்த்தியவனே! திருவள்ளுவரையும் உன்வழியிலேயே குறளை இயற்ற வைத்தவனே! தாலோ தாலேலோ

இலக்கணக்குறிப்பு:
உரசு நா— வினைத்தொகை; செந்தமிழ், முக்கனி, தீந்தமிழ்,சிறுகண் செந்நாப்போதார் — பண்புத்தொகைகள்; அந்தமிலா— ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்;  உன்வழி— ஆறாம் வேற்றுமைத்தொகை

__________________________________________

பாடல்— 2:
          தமிழர் வாழ்வைக் களவு கற்பெனத்
                    தனித்தனி பிரித்துத் துறைபல தந்தவனே!  
          தண்டமிழ் நிலத்தை நான்காய்ப் பிரித்துத்
                    தனித்தே ஐவகை ஒழுக்கத்தை நிறுத்தியவா
          தமிழர் பெருமையைத் தரணிக்கு உரைத்தவா!
                    தலைவன் தலைவி அறத்தொடு நிற்றலும்
          தோழியும் பாங்கனும் உற்றிடத் துதவலும்
                    தாயர் இருவர் தன்மை உரைத்தவனே!
          இமிழ்கடல் சீற்றத்தால் இறந்தன நூலெலாம்
                    எனினும் உன்நூல் இறவாது மீண்டதே
          இடைகடைச் சங்கத்தார்க்கு இலக்கணம் தந்தவா!
                    எங்கள் காப்பியா தாலோ தாலேலோ      
          அமிழ்தாம் தமிழுக்கு அரணாய் உள்ளவா!
                    ஐவகை நிலத்தின் தெய்வம் உரைத்தவா!
          அணிக்குத் தலைமை உவமை என்றவா!
                    அனைத்தும் அறிந்தவா தாலோ தாலேலோ         [2]

அருஞ்சொற்பொருள்:
தரணி— உலகம்; தாயர் இருவர்— செவிலித்தாய்;  நற்றாய்; பாங்கன்— தோழன்;  இமிழ்கடல்— ஒலியை உடைய கடல்; அரணாய்— பாதுகாப்பாய்

இதன்பொருள்:
தமிழர் அகவாழ்க்கையைக் களவென்றும் கற்பென்றும் பிரித்து, அதை விளக்கத்  துறைகளாகப் பிரித்துக் கூறியவா! தமிழர் வாழும் நிலப்பகுதியைக் குறிஞ்சி முதலாக நான்காய்ப் பிரித்தவா! அதேசமயம் ஒழுக்கத்தை ஐந்தாகக் கூறியவா! தமிழர் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொன்னவனே! தலைவன் தலைவியர்  பேசிக்கொள்ளும் இடத்தினையும், தோழியும் தோழனும் தலைமக்கள் காதல் வளர உதவி செய்தலையும் நற்றாய் செவிலித்தாய் இருவர் தன்மைகளையும் உரைத்தவா! முன்னொரு காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால்  அனைத்து நூல்களும் மறைந்தன. ஆனால் உன்நூல் மட்டும் இறவாமல் மீண்டது. அதுவே இடைச் சங்கத்தார்க்கும், முதற்சங்கத்தார்க்கும் (ஏன் இக்காலத்தார்க்கும்) இலக்கண நூலைத்திகழத் தந்தவனே! எங்கள் தொல்காப்பியனே! நாவினை அசைத்துப் பேசாயோ! தமிழ் தமிழ் என்று சொல்லச் சொல்ல அமிழிதாக மாறும் தமிழ் மொழிக்குப் பாதுகாப்பாக விளங்குபவனே! ஐவகைத்திணைக்கும் உரிய தெய்வங்களை எடுத்துக்  கூறியவா! அணிகளுக்கெல்லாம் முதன்மையானது உவமையணி என்றவா! அனைத்தும் அறிந்த ஆன்றோனே! தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
களவு கற்பு, தலைவன் தலைவி— உம்மைத்தொகைகள்; தண்டமிழ்— பண்புத்தொகை;  தோழியும் பாங்கனும்— எண்ணும்மை; இமிழ்கடல்— இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை; உன்நூல்— ஆறாம் வேற்றுமைத் தொகை.

__________________________________________

பாடல்— 3:
          பிரிவுகள் என்பது பாலையின் உரிப்பொருள்
                    களவிலும் கற்பிலும் இருவேறு நிலையிலும்
          பிரிவுக்கு இலக்கணம் பற்பல சொன்னவனே
                    பொருள்வயிற் பிரிதலும் உண்டென மொழிந்தவா!
          உரித்தென மொழிந்தாய் ஓதலும் காவலும்
                    உயர்ந்த தூதும் ஒருவழி உண்டென்றாய்
          உரிய காலத்தை ஓதினாய் அன்றே
                    ஒருவழித் தணத்தலும் உடந்தான் ஓதியவா!
          உரிமை கோரார் உயர்ந்த மங்கையர்
                    மடல்மேல் ஏறவும் கடல்மேற் செல்லவும்
          உடன்போக்கும் ஒருவகைப் பிரிவாய் உரைத்தவா!
                    உள்ளம் உவக்கத் தாலோ தாலேலோ
          பரத்தையர் பிரிவால் ஊடலும் வந்தால்
                    பற்பல வாயில்கள் பலவாய்த் தேற்றுவதைப்
          பலவகை மொழியால் பாங்காய் உரைத்தவா!
                    பாரோர் மகிழத் தாலோ தாலேலோ         [3]                

அருஞ்சொற்பொருள்:
ஒருவழித்தணத்தல்— உடன்போக்கு; பார் உலகம்; வாயில்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் சிறு பிணக்கு ஏற்படும்போது உடன்பாடு செய்பவர்கள்

இதன்பொருள்:
பிரிவு என்பது பாலைத்திணையின் உரிப்பொருள். இது களவு, கற்பு என்ற இருவேறு நிலைகளிலும் நடைபெறும் எனப் பிரிவுக்கு இலக்கணம் சொன்னவனே! பொருள் தேடச் செல்லும் பிரிவு, கற்பதற்காகவும் நாட்டைக்காப்பதற்காகவும், தூது செல்வதற்காகவும் பிரியும் பிரிவுகள் உள்ளன.  உடன்போக்கையும் ஒரு பிரிவாகக் கூறயவனே! பெண்கள் மடல் ஏறுதல் வழக்கம் இல்லை. அதேசமயம் பெண்கள் தனியாகக் கலம் ஏறி கடல்கடந்தும் செல்வதில்லை என்றுஇலக்கணம் உரைத்தவா! நாங்கள் உள்ளம் மகிழும்படி கண்ணுறங்காயோ! கற்புக்காலத்தில் பரத்தையர்ப்பிரிவால் தலைவி ஊடும்போது பலவகையான வாயில்கள் பல்வேறுமுறையில் தேற்றுவர்கள் என உரைத்தவனே! உலகமக்கள் மகிழும்படித் தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
ஓதலும் காவலும்— எண்ணும்மை      

__________________________________________

பாடல்— 4:    
          ஒலியைக் கணக்கிட உரைத்தாய் மாத்திரை
                    ஒருவிர லோடு பெருவிரல் சேர்த்து
          ஓசை செய்தல் ஒருமாத் திரையாம்
                    ஒருவர் இயல்பாய்க் கண்ணிமைத் தலுமாம்
          ஒலிக்கும் மாத்திரை ஒருநான்கு கூறாம்
                    ஒலிக்க மனதால் நினைத்தல் காலாம்
          ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால்
                    விடுத்தல் ஒன்றென விளம்பினர் தமிழர்
          ஒலிக்கும் எழுத்தைக் குறில்நெடில் ஒற்றென
                    ஒலிக்கும் அலகால் ஒருபெயர் வைத்தவனே!
          ஒன்றே குறிலாம் இரண்டே நெடிலாம்  
                    ஒற்றே அரையென ஓதிய புலவன்நீ
          வலிமெலி இடையென வகுத்தாய் எழுத்தினை
                    வாய்பாட்டில் நீளும் எழுத்தின் இலக்கணம்
          வருமிசை நூலில் காண்க என்றவனே!
                    வல்லோர் மகிழத் தாலோ தாலேலோ         [4]            

இதன் பொருள்:
எழுத்துக்கள் உச்சரிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட மாத்திரை என்னும் அலகினை உரைத்தாய்.   சுட்டு விரலோடு பெருவிரலைச் சேர்த்துச் சொடுக்க ஆகும் நேரமே ஒருமாத்திரை நேரமாகும்.  அதைக்கூட நான்கு கூறாக்கி எழுத்தை உச்சரிக்க நினைப்பது கால் மாத்திரை, இருவிரல்களையும் சேர்ப்பது அரை, முறுக்குதல் முக்கால், விடும்போது ஒருமாத்திரை ஆகும் என எடுத்துச் சொன்னவர்கள் நம்தமிழர்கள். ஒலிக்கும நேரத்தை வைத்துக்  குறில்,நெடில், ஒற்று எனப்பெயர் வைத்தவனே!  ஒரு மாத்திரை பெறுவது குறில் என்றும்,இரண்டு மாத்திரை நேரம் ஒலிப்பது நெடில் என்றம், அரைமாத்திரை அளவு ஒலிப்பதை ஒற்று என்றும் வகுத்துக் காட்டிய புலவன் நீயே!  ஒற்று எழுத்தினை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று வகுத்துக் காட்டினாய்! வாய்ப்பாட்டில் நீண்டு ஒலிக்கும் எழுத்தின் அளவுகளை இசை நூலில் கண்டுகொள்க என்றவனே! வல்லோர் மகிழத்தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:  
ஒரு விரல்,பெருவிரல்— பண்புத்தொகைகள்; நினைத்தல்,ஊன்றல் தொழிற்பெயர்கள். வலிமெலி இடை உம்மைத்தொகை
   
__________________________________________

பாடல்— 5:    
          எல்லா எழுத்தும் பிறக்கும் இடமும்
                    எடுக்கும் முயற்சியும் தொகுத்துச் சொல்லியவா
          எண்ணிய சார்பாய் இருக்கும் மூன்றும்
                    அதனதன் முதலே அடிப்படை என்றவனே!
          எல்லா [102] எழுத்தும் வெளிப்படக் கிளந்து
                    சொல்லிய பள்ளி எழுதரும் என்றவனே!
          அகத்தெழு வழிஇசை அரில்தப நாடி
                    அளபிற் கோடல் அந்தணர் மறையென்றாய்
          எல்லா[103] எழுத்திலும் இருபத்தி ரண்டே
                    சொல்லுக்கு முதலாம் என்று சொல்லியவா!
          இருபத்து நான்கே இறுதியில் வருவதொடு    
                    இடைநிலை மயக்கமும் இயம்பிய காப்பியனே!
          எல்லாப் புணர்ச்சியும் இயையும் போது
                    இடையில்[118] சாரியை வருவதை உரைத்தாயே
          எல்லாம் தொகுத்து தொகைமரபு உரைத்தவா!
                    எல்லாரும் மகிழத் தாலோ தாலேலோ         [5]        

குறிப்பு: 102,103 118 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.

இதன் பொருள்:
முதலெழுத்து, சார்பெழுத்து ஆகிய எல்லா எழுத்துகளும் பிறக்கும் இடமும், ஒலிக்கும் முயற்சியும்    ஆகிய அனைத்தையும் தொகுத்துச் சொல்லியவா! சார்பெழுத்துகள்அதன்அதன் முதல் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு வரும் என்றவனே! எல்லா எழுத்துகளும் முன்பு கூறிய பிறப்பிடங்களிலிருந்து பிறக்கும் ஓசை காற்றினால், வெளிப்படக் கேட்குமாறு சொல்லும்போது உள்ளே உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் இலக்கண நூல்களில் காணப்படும்  என்றவனே!  முப்பத்து மூன்று எழுத்துக்களில்  இருபத்து இரண்டு எழுத்துகள் மொழிக்கு முதலிலும், இருபத்து நான்கு எழுத்துகள் மொழிக்கு இறுதியிலும் வரும் என்று கூறியதோடு மொழிக்கு இடையில் எந்த எந்த  எழுத்துகளோடு எந்த எந்த  எழுத்துகள் சேர்ந்து  வரும் என்று கூறியவா!  எல்லா வகைப் புணர்ச்சியிலும் சாரியைகள் இடையிலும் வருவதை உணர்த்தியவா! இவற்றை எல்லாம் தொகுத்து தொகைமரபு என்னும்  இலக்கணம் உரைத்தவா எல்லோரும் மகிழத் தாலோ தாலேலோ !
   
இலக்கணக்குறிப்பு:  
எழுத்தும்— முற்றும்மை; அகத்தெழு— ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை; தொகை மரபு— இருபெயரொட்டுப் பண்புத்தொகை

__________________________________________

பாடல்— 6:                                  
          எல்லா ஈற்றுக்கும் சாரியை உரைத்து
                    இருவகைப் புணர்ச்சிக்கும் இலக்கணம்  இயம்பியவா!
          இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
                    வல்லெழுத்து மிகமென இலக்கணம் வகுத்தவனே!  
          எல்லாப் பருவத்தும் உழைத்தான் என்பதை
                    பனிவளி வெயில்மழை  யுடன்அத்துச் சாரியை
          இயைந்து வருமென எடுத்துக் காட்டியவா  
                    இலக்கணத் தூடே பண்பாடு பகன்றவா!
          எல்லாச் சொல்லிலும் எகரமும் ஒகரமும்
                    ஈற்றலில் வாராது என்று இயம்பியவா!
          எல்லா ஈற்றுக்கும் எடுத்துக் காட்டுடன்
                    இலக்கணம் சொன்னாய்த் தாலோ தாலேலோ                                        
          நல்லது அல்லாச் சொல்லுக்குக் கூட
                    நற்றமிழில் இடக்கர் அடக்கல்  என்றவனே!
          நல்லதல்லா மலத்தைப் ‘பகர ஈ’ என்றவனே!
                    நாங்கள் மகிழ தாலோ தாலேலோ         [6]        

அருஞ்சொற்பொருள்:  
வழி— காற்று; ஊடே— இடையே; பகறல்— கூறுதல்

இதன்பொருள்:
வேற்றுமை, அல்வழி என்னும் இருவகைப் புணர்ச்சிகளிலும் உயிரீறு மெய்யீறு குற்றியலுகர ஈறு என எல்லா வகை ஈறுகளுக்கும் சாரியை கூறியவனே! இகர இறுதி பெயர் சொல்லின்(அப்படி இப்படி எப்படி) முன்னர் வல்லெழுத்து மிகும் என இலக்கணம் வகுத்தவனே! தமிழன் பனி, காற்று, வெயில், மழை என்னும் எல்லாப்பருவ காலத்திலும் உழைத்தான் என்பதை அத்துச் சாரியை கூறும் போது சான்றுகூறியவனே! இவ்வாறு இலக்கணம் கூறும்போது  இடையிடையே தமிழ்ப் பண்பாட்டையும்  கூறியவனே! எந்தச் சொல்லுக்கும் இறுதியில் எகரமும் ஒகரமும் வாரா என்று கூறியவனே! இவ்வாறு எல்லா ஈறுகளுக்கும் இலக்கணம் சொன்னவனே! மலத்தை  ‘பீ’ என்று கூறாமல் இடக்கர் அடக்கலாகப்  ‘பகர ஈ’ என்றவனே! நாங்கள் மகிழத் தாலோ தாலேலோ.

இலக்கணக்குறிப்பு:  
ஈற்றுக்கும் — முற்றும்மை; இருவகை,நற்றமிழ்— பண்புத்தொகைகள்; பனிவழிவெயில் மழை— உம்மைத்தொகை;  இலக்கணம் சொன்னாய்— இரண்டாம் வேற்றுமைத்தொகை

__________________________________________

பாடல்— 7:
          எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டலென
                    எல்லா அளவையும் எடுத்துச் சொன்னவனே!
          எள்ளையும் கொள்ளையும் நெல்லையும் குறித்தே
                    எல்லா நிலத்தார் உணவைக் கூறியவா!  
          கண்ணியும் மாலையும் தாரும் பூத்தானே
                    கழுத்திலும் மார்பிலும் அணிகையில் வேறாமே
          காலம் இடத்திற்கு முன்பின் பொதுவெனக்
                    காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ
          விண்ணும் [1589] மண்ணும் வளியொடு நெருப்பும்
                    வான்மழை நீரும் கலந்த உலகத்தில்
          பெண்ணும் ஆணும் நீங்கிய அலியை
                    பேடியெனக் கூறியே மரபினைப் போற்றியவா  
          பெண்ணைப் பெற்றோர் கொடுப்பக் கொள்ளாது
                    பாங்கன் பாங்கியைத் தூதாய் விடுத்து
          பெண்ணுடன் போதல் உடன்போக் காமென
                    பேசிய காப்பியா தாலோ தாலேலோ         [7]        

குறிப்பு:  1589  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.
           
அருஞ்சொற்பொருள்:
கண்ணி —  தலைமாலை;  தார் — மார்பணிமாலை; வளி — காற்று;  பாங்கன் — தோழன்; பாங்கி — தோழி

இதன்பொருள்:
அளவைப் பெயர்களாகிய எண்ணல், எடுத்தல் (நிறை) நீட்டல், முகத்தல் என்று எல்லா வற்றையும் எடுத்துச் சொன்னவனே! எள்,கொள், நெல் என்ற சொற்களால் ஐவகை நிலமக்களின் உணவுகளைக் குறித்துக் கூறியவா! கண்ணி, மாலை, தார் என்பன யாவையும் பூக்களால் ஆன தொடர்களே, இருப்பினும் தலையில் அணியும்போது கண்ணி என்றும், கழுத்தில் அணியும் போது மாலை என்றும், மார்பில் அணியும்போது தார் என்றும் பெயர்களைப் பெறுகின்றன. இவற்றின் வேறுபாடுகளை எல்லாம் உரைத்தவனே!   இடத்திற்கும்   காலத்திற்கும் முன் பின் என்ற சொற்கள் பொதுவாக வரும் என்று காட்டிய காப்பியனே தாலோ தாலேலோ! வானமும்,நிலமும், காற்றும்   நெருப்பும்  நீரும் கலந்த சேர்க்கையே உலகம் என்றவனே! அவ்வுலகத்தில் ஆண் தன்மையும், பெண்தன்மையும் அற்ற பிறவியைப் பேடி என்று கூறி மரபினைக் காத்தவனே! தலைவியின் பெற்றோர்களால் கொடுக்கப்படாத போது, தோழியையும் தோழனையும் தூதாக விடுத்துப் பெண்ணை    அழைத்துக்கொண்டு செல்லுதலை உடன்போக்கு என்று கூறிய காப்பியனே! தாலோ தாலேலோ.

இலக்கணக்குறிப்பு:  
எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் உம்மைத்தொகைகள்; எள்ளையும், கொள்ளையும் — எண்ணும்மை

__________________________________________

பாடல்—8:    
          ஈருயிர் [140 ]சேர்ந்தால் இடையில் தோன்றும்
                    எழுத்தைக் கூட ‘ய்.வ்’  என்றவனே!
          எழுதும் போது மகரம்  வரும்முறை
                    உட்பெறு புள்ளி உருவாகும் என்றவனே[143]
          ஆரிய மொழியை அண்ட விடாது
                    அன்றே காத்தவனே  அதையும் மீறினால்
          அம்மொழிக்  கிளவி அவ்வெழுத் தொரீஇ
                    எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்றவனே [884]  
          சீரிய புலவர் அவையில் கேட்ட
                    தடைக்கு விடையைத் தகும்படி உரைத்தவனே!
          திருவிற் பாண்டியன் திருமுன் அரங்கேற்றத்
                    தொடங்கிய காப்பியா தாலோ தாலேலோ![பாயிரம்]
          ஊரொடு[1031] தோற்றம் உரித்தென மொழிந்து
                    உலாத்தோன்ற ஒருவித் திட்டவனே!  உன்னை
          ஊரில் உள்ளதேரில் வைத்து இழுப்போம்
                    உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ             [8]        

குறிப்பு:  பாயிரம் மற்றும் 140, 143, 884, 1031 என்பன தொல்காப்பிய நூற்பாக்களைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
மகரம் ம் என்னும் மெய்யெழுத்து; கிளவி—சொல்;சீரிய- சிறந்த

இதன்பொருள்:
புணர்ச்சியில் வருமொழி முதலிலும் நிலை மொழி ஈற்றிலும் உயிர் எழுத்துகள் வரும்போது அவற்றை உடன்படுத்த ய், வ் என்னும் எழுத்துகள் தோன்றும் என்றவனே! எழுதும் போது மகரக்குறுக்கத்திற்கு உள்ளே புள்ளி  உருவாகும் என்றவனே! அன்றே ஆரிய மொழியைத் தமிழில் கலக்க விடாது   காத்தவனே! அதையும் மீறிய எழுதவேண்டும் என்ற சூழ்நிலையில் அவ்வெழுத்துகளின் வரிவடிவத்தை நீக்கி தமிழ் ஒலிக்கு ஏற்றாற் போல் மாற்றி எழுதவேண்டும் என்றவனே! சிறந்த புலவர்கள் வீற்றிருக்கும்  நிலந்தரு திருவில் பாண்டியன்  அவையில் புலவர்கள் வினவிய வினாக்களுக்கெல்லாம் விடைகளைக் கூறி நூலினை அரங்கேற்றம் செய்தவனே! சிற்றிலக்கியங்களில் ஒன்றாகிய உலா இலக்கியம் தோன்ற அடிப்படை  இட்டவனே! ஊரில் உள்ள நாங்கள் அனைவரும் ஒருங்குகூடி உள்ளமாகிய தேரில் வைத்து இழுப்போம். ஆகவே உள்ளம் மகிழ்ந்து தாலோ தாலேலோ.
 
இலக்கணக்குறிப்பு:
ஒரீஇ – சொல்லிசை அளபெடை        
   
__________________________________________

பாடல்—9:        
          ஒன்பதின் மீதுனக்கு நாட்டம் உள்ளதால்
                    ஓரதி காரத்தை ஒன்பதியல் ஆக்கினையோ
          ஓராயிரத் தறுநூற்று பதினொரு நூற்பா
                    உரைத்தாய் என்றே ஒத்துக் கொண்டோமே
          ஒன்பதி னோடு ஒருநூறு ஆயிரம் [463]
                    ஒட்டி வருவதை உரைத்தாய் இலக்கணத்தால்
          தொண்ணூறு தொள்ளா யிரமாகும் முறையைத்
                    துளைந்து உரைத்த தொல்காப் பியனே
          நன்றாய் சோற்றை ஆக்கல் போல
                    நவின்றாய் இலக்கணம் கிளவி ஆக்கத்தில்
          நம்தமிழ் வாழ நல்லரண் அமைத்த
                    நற்றமிழ்ப் புலவா தாலோ தாலேலோ
          உந்தன் நூலை நூலெனத் தொடங்கி
                    நூலென முடித்த நுனித்தகு புலவோனே
          உனக்கீடாய் இனியொரு நூலை படைக்க
                    உள்ளா ரிலையே தாலோ தாலேலோ             [9]    

குறிப்பு:  463  என்பது  தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
துளைந்து—ஆய்ந்து

இதன்பொருள்:
ஒன்பதின் மீது உனக்கு அளவிலா நாட்டம் இருப்பதால்தான் என்னவோ ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளாய் அதனால் நூற்பாக்களின் எண்ணிக்கையும் 1611  ஆக உள்ளதோ? மேலும் புணர்ச்சியில் ஒன்பது என்ற எண்ணை மட்டும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளாய். தொண்ணூறு தொள்ளாயிரம் தோன்றும் முறைகளை ஆயந்து  கூறிய  தொல்காப்பியனே! குருணை, கல், கறுப்பு அரிசி இவற்றை எல்லாம் களைந்து உணவு சமைப்பதைச்  சோறு ஆக்கல் என்பர். அதை மனத்தில் கொண்டே சொல் அதிகாரத்தின்  முதல்  இயலைக் கிளவி ஆக்கம் என்று பெயர் வைத்தவனே! நம் தமிழ் மொழியின் காப்பரண் ஆக தொல்காப்பியம் தந்த புலவா!  தாலோ தாலேலோ. உன்றன் நூலை நூல் மரபு என நூலில் தொடங்கி,  புலவர் கூறிய நூலே என நூலில் முடித்த  கூர்த்த அறிவுள்ளவனே தாலோ தாலேலோ!

இலக்கணக்குறிப்பு:
நம் தமிழ்—ஆறாம் வேற்றுமைத்தொகை; நல்லரண்—பண்புத்தொகை; உன்றன் என்பது உந்தன் என எதுகைக்காக எழுத்தப்பட்டது. இலை—இல்லை என்பதன் இடைக்குறை
9 இன் சிறப்பு — விளக்கம்:  
9உடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும்  'விடையின் கூட்டுத்தொகை 9ஆகவே வரும்'
சான்று:  9x9  =81 → 8+1= 9;  8x9  =72 → 7+ 2 = 9

9 உடன் எந்த எண்ணை கூட்டினாலும்  'விடையின் கூட்டுத்தொகை கூட்டப்பட்ட எண்ணாக இருக்கும்'
சான்று:   9+ 9  =18→1+8= 9;   9+ 7  =16 →   1+6= 7

அதனால்தான் சிறப்பு தலைமை எனும் பொருள்தரும் ஓரெழுத்து ஒரு மொழியாகிய ஐ யை ஒன்பதாவது எழுத்தாகத் தமிழ் நெடுங்கணக்கில் வைத்துள்ளனர். இக்காரணத்தினாலேயே அய் என எழுதக்கூடாது என்கிறோம். அக்காரணம் பற்றியே தொல்காப்பியர் ஒவ்வொரு அதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாகப் பிரித்துள்ளார்.

திருமூலரும்  இவ்வாறே திருமந்திரத்தை  ஒன்பது உட்பிரிவுகளைக் கொண்டதாகச்செய்துள்ளார்.
ஒவ்வொரு பிரிவும் ஒரு ‘தந்திரம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தந்திரங்களும், ஆகமங்கள் ஒன்பதின் சாரமாக அமைந்துள்ளன. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.   எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.  புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும்.   தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று  மதிப்பிடுவார்கள்.    பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்!
ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.  நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.        
(5-27-20222)    
__________________________________________

பாடல்—10:
          களவல ராயினும்[1061] காமத்துப் படினும்
                    கண்ட ஊரார் காதொடு பேசினும்
          கட்டினும் கழங்கினும் வெறியாட்டு அயர்தலும்
                    செவிலிக் கூற்று நிகழும் என்றவனே!
          களவில்  பழகிய காதலர் இருவர்
                    காவிலும் பூம்பொழில் சோலையில் சேர்ந்தே
          கனவில் மிதந்தது போதுமென்றே கற்புக்காக
                    கடிமணம் புரிவர் என்று சொன்னவனே!
          அளவிற்கும்[170] நிறையிற்கும் மொழிமுத லாகி
                    உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தென
          அகரவுகரம் கசதப நமவ என்றவனே!
                    அனைத்தும் அடக்கி இலக்கியம் சொன்னவனே
          உளமகிழ்ந் துன்னைப் போற்றினோம் ஐயனே
                    உவந்து நீயும் தாலோ தாலேலோ
          ஒருபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா
                    பெற்றதால் உன்னை தாலோ தாலேலோ             [10]        
           
குறிப்பு:  170,  1061 என்பன   தொல்காப்பிய நூற்பாவைக் குறிக்கும்.

அருஞ்சொற்பொருள்:
அலர்— ஊரார் தூற்றிப் பேசல்; கட்டு—கட்டாக உள்ள ஓலைச்சுவடி பார்த்துக்கூறல்; கழங்கினும்— கழற்சிக்காயின் எண்ணிக்கையை வைத்துக் கூறல்;  வெறியாட்டு— வேலன் மீது வந்து கூறல்; கா—பூங்கா; கடி மணம்—திருமணம்

இதன்பொருள்:
தலைவனும் தலைவியும்  பழகுவதை ஊரார் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போதும், காமம் மிகுதியால் தலைவியின் உடலில் தோன்றும் நிறவேறு பாட்டின் போதும், ஊர் மக்கள் தங்களுக்குள் கமுக்கமாகப் பேசிக் கொள்ளும் போதும்,    ஓலைக்கட்டு,கழற்சிக்காய்,இவற்றின மூலமும் வேலன் வந்து ஆடிச் சொல்லும் போதும் செவிலி கூற்று நிகழும் என்றவனே! காதலர் இருவரும் பூங்காவிலும், சோலையிலும் சேர்ந்து சுற்றி மகிழ்ச்சியாக இருந்தது  போதும் என்று திருமணம் செய்து கொள்ளுவர் என்று கூறியவனே! அளவைகளாகிய எண்ணுதல் முகத்தல் நீட்டல் மற்றும் நிறுத்தல் முதலிய அளவுப் பெயர்கள் மொழிக்கு முதலாக வரும் போது வரக்கூடிய எழுத்துகளை அ, உ, க,ச,த,ப,ந,ம,வ என்னும் ஒன்பது எழுத்துகளும் வரும் என்றவனே! இவற்றையெல்லாம் உள்ளடக்கி தமது நூலை இலக்கியம் போல் கூறியவனே!  எங்கள் உள்ளம் மகிழ்ந்து போற்றினோம் தலைவா நீயும் உள்ளம் மகிழ்ந்து நாவை அசைத்துப் பாடுவாயாக!எந்தப் பிறவியிலும் எங்களை தீயவை தீண்டாமல் இருப்போம். ஏனெனிலே பழிசேராத உன்னை நாங்கள் மகவாகப் பெற்றுள்ளோம். தாலோ தாலேலோ

இலக்கணக்குறிப்பு:
கட்டினும் கழங்கினும் எண்ணும்மை; பூம்பொழில்- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை; தீண்டா — ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்                        
   
__________________________________________
தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன்
அலைபேசி:  9788552993  
    

Tuesday, February 23, 2021

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து 

-- புலவர் ஆ.காளியப்பன்  


உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்துத் தோன்றியது. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன. 

(ஃ) – அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த எழுத்தை ஆய்தம் என்னும் பெயரால் குறிப்பிடுவது வழக்கம்.  இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும்.  தமிழ் எழுத்துக்களை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர்.

ஆய்தம் என்பது பெயர்ச்சொல். ஆய்தல் என்பது வினைச்சொல். ஆய்வுரை நுணுகிப் பார்ப்பது. ஆய்தல் என்னும் உரிச்சொல் இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது. 
 
“ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம் (உரியியல்) ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராய்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துக்களை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துக்களை நுண்மையாக்கிக் காட்ட இந்த ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண்கிறோம். 
 


சைகையில்  கொஞ்சம் என்பதை   காட்டும்போது மூன்று விரல்கள் (பெருவிரல்,சுட்டுவிரல் நடுவிரல்) முன்னால் நீட்டி இருப்பதைப்போல ஃ என்னும் எழுத்தின் வடிவம் இருக்கும்.இதன்பொருள் கொஞ்சம் குறைவாக, நுணுக்கமாக என்பதையும் இந்தச்சைகையால் தான் காட்டுவோம். அந்த மூன்றுவிரல்கள் வடிவிலேயே ஆய்த எழுத்து உள்ளது.   
ஃ என்னும் எழுத்தின் தமிழ் சைகை - 

இரண்டு புள்ளிகள் கண்ணாகவும் மூன்றாவது புள்ளி நெற்றிக் கண்ணாகவும் உள்ளதாக  ஆசிவக  மதத்தார் கூறுவர்.  புள்ளி அண்டத்தைக் குறிக்கிறது என்றும் முட்டையைக் குறிக்கிறது என்றும் கூறுவர். எழுத்தெனப் படுப அகரமுதல னகர இறுவாய் என எழுத்துகளுக்கெல்லாம் அகரத்தை முதலாகக் கூறுவர். அந்த அகரத்திற்கும் முதலாக இருப்பதே ஆய்தப்புள்ளியே. அதனால் முதலில் எழுதிப்பழகும் குழந்தைகளை முட்டை முட்டையாக எழுதச் சொல்லுகின்றனர். எல்லாக் குழந்தைகளும் இயல்பாக முதலில் முட்டையையே வரைகின்றன. எனவே ஆதியாய் உள்ளதும் ஆதியில் உள்ளதும் ஆய்த எழுத்தே. மூன்று புள்ளிகளையும் சூலத்தின் மூன்று முனைகளாகக்கருதலாம். இதுவே நாளடைவில் வேலாகவும் உருமாறியதாகக் கொள்ளலாம். சுழியத்தை சுழுமுனைக்கும் ஒப்பிட்டுக் கூறுவர்.

தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

அஃகேனம் ஆய்தம் தனிநிலை புள்ளி
ஒற்றிப் பால ஐந்தும் இதற்கே என்று ஆய்த எழுத்தின் பெயர்கள் உள்ளதை அறியலாம்.

ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.  அஃகான் என்றே தொல்காப்பியரும் கூறுவதோடு, எல்லா எழுத்துகளையும் விட ஆய்த எழுத்துப்பற்றியே அதிக நூற்பாக்களை எழுதி உள்ளார். 

உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது. 




தமிழ் நெடுங்கணக்கு வரிசையில்  அ,ஆ----- ஔ என்று உயிர் எழுத்துகளைப் படுக்கை வரிசையாக வைத்து ஔ வின்முடிவில் ஃ என்ற ஆய்த எழுத்தை வைத்தனர். அதை அஃகன்னா என்று படிப்பர் உயிர் எழுத்துகளை வரிசையாக வைத்தவர். க் ,ங்,-------ன் மெய் எழுத்துகளை நெடுங்கிடையாக வைத்தனர். உயிர் எழுத்துகளை படுக்கை  வரிசையாக வைத்து ஆய்த எழுத்தை  நெடுங்கிடையாக உள்ள மெய் எழுத்துகளுக்கு இடையில் வைத்தனர். எனவே ஆய்த எழுத்தை படுக்கை வரிசையாக உள்ள உயிரெழுத்தாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் நெடுங்கிடையாக உள்ள மெய்யெழுத்தாகவும் எடுத்துக் கொள்ளலாம்.   இதன்பொருள் ஆய்த எழுத்து உயிர் எழுத்தும் அன்று மெய்யெழுத்தும் அன்று எனினும் அவற்றின் வேறுமாகாது. என்பதை உணர்த்த அவற்றிற்குத் தனியாக வைத்துத் தனிநிலை என்ற பெயரும் வைத்தனர். அ வையும் க் ஐயும் சேர்த்து ஒலிப்பதுபோல் அஃ க்கன்னா என்ற ஒலிப்பையும் தந்தனர். 

தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே
 அளபெடை அல்லாக் காலை யான.

‘உயிருறுப் புயிர்மெய் தனிநிலை எனாஅக்
       --  ----- ----------- -------                                                           
அசைசீர் தளைதொடைக் காகும் உறுப்பென
     வசையறு புலவர் வகுத்துரைத் தனரே.’

     தனிநிலை ஒற்றிவை தாமலகு பெறூஉம்
     அளபெடை ஆகிய காலை யான.

என்பர்  காக்கைபாடினியாரும். 
இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து , முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. 

ஆய்த எழுத்தைப் பெரும்பாலும் மெய்யெழுத்தாகவே எண்ணப்படுதலால் மெய்யெழுத்தின் பெயராகிய ஒற்று புள்ளி என்ற பெயர்களாலும் ஆய்தமும் அழைக்கப்படும். ஆய்தம் ஒற்று எழுத்தாகவே கருதப்படுவதை கீழ்வரும் நூற்பாக்களால் அறியலாம்.

'உயிரள பெடையும் ஒற்றள பெடையுமென்
றாயிரண் டென்ப அளபெடை தானே.’

ங ஞ ண ந ம ன வயலள வாய்தம்
அளபாங் குறிலிணை குறிற்கீ ழிடைகடை
மிகலே யவற்றின் குறியாம் வேறே.' (நன்னூல்92) நன்னூலும்

‘ஙஞண நமன வயலள ஆய்தம்
ஈரிடத் தளபெழும் ஒரோவழி யான.’என்னும்யாப்பருங்கலமும்  ஆய்த எழுத்தை ஒற்று எனக்குறித்ததை அறியலாம்.

'ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
வேறல கெய்தும் வியின வாகும் என்கிறார் காக்கைப்பாடினியார். 

‘ஆய்தம் ஒற்றெனப் பெற்றசை யாக்குமென்
றோதி னாருள ராகவும் ஒண்டமிழ் 
நாத ராயவர் நாநலி போசையிற்
கேது வென்றெடுத் தோதினர் என்பவே.’ என்ற பாடலும் இதே கருத்தை உணர்த்துகிறது. 

ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. 




போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். 

உணவு சமைத்தலுக்கு முக்கிய கருவியாகிய அடுப்புக்கல் முக்கூட்டுப் போல் உள்ள அந்த வடிவில் இருப்பதாலும் ஆய்த எழுத்து என்றனர். வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு. ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன (சங்கநூல் சொல்லடைவு 1967).   சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது பொருந்தாது.

வரிவடிவையும் ஒலிவடிவையும் குறிக்க ஆய்த எழுத்து அரிதாகத் தோன்றும் ஒலிக்குறிப்பை எழுத்தால் எழுதிக்காட்ட இயலாது.  அந்தமாதிரி இடங்களில் ஆய்தம்  எழுத்தைப் போட்டு எழுதுவோம்.  கன்னங்கரேல் என்பதை கஃறு  என ஆய்த எழுத்தைப் போட்டு எழுதிக்காட்டுவர்.  இக்காலத்தில் பிறமொழி (திசை)ச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃப், புரூஃப் என்றெல்லாம் எழுதிவருகிறோம்.

ஈறு இயல் மருங்கினும் இசைமை தோன்றும் (தொல் எழுத் 39) 

உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப்பு எல்லாம் எழுத்தின் இயலா                                                   
ஆய்தம் அஃகாக் காலை யான (தொல் எழுத். 40)

இதன்பொருள்,  
இஃது, அவ்வொருமொழி ஆய்தத்திற்கு ஓர் இலக்கணம் உணர்த்துகிறது.

ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும்,   ஓசையின் கண்ணும்,   சிறுபான்மையாய்த் தோன்றும்  குறிப்பு மொழிகளெல்லாம்  ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டும் எழுத்துப்போல நடவா. (அஃது எக்காலத்துமோவெனின், அன்று)   அவ்வாய்தம் தன் அரைமாத்திரை அளபாய்ச் சுருங்கி நில்லாது (அவ்வுருவம் இசையது மிகுதியும் உணர்த்துதற்கு)   

எ - டு: `கஃறென்றது' என்பது உருவு, `சுஃறென்றது' என்பது இசை.

சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்துவெளிப் படுத்த ஏனை மூன்றும்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்

இஃது, சார்பிற்றோற்றத் தெழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல என தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்-சிலவற்றைச் சார்ந்துவரின் அல்லது தமக்குத் தாமே வரும் இயல்பு இலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பின் பிறப்போடு சிவணி ஒத்த காட்சியில் தம் இயல்பு இயலும்- தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிறப்பிடத்தே பிறத்தலொடு பொருந்தி அவ்விடத்தே தமக்குரிய இயல்பில் நடக்கும்.

'ஒத்தகாட்சி' என்றதனான், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தலை வளியாற் பிறத்தலின், உயிரொடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்குமென்பது கொள்க. `தம்மியல்பியலும்' என்றதனான், அளபெடையும் உயிர்மெய்யும் தமக்கு அடியாகிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க. 

வடமொழியில் நுட்பமான ஒலி ஹ என்று கூறப்படுகிறது. அதைக் காட்டிலும் மிக நுட்பமான ஒலியைத் தமிழில் தரவல்லது ஆய்தம் என்று  டாக்டர் மு.வரதராசனார்   குறிப்பிடுகிறார். (மொழி நூல், ப. 55). 

தொல்காப்பியர் ஆய்தத்தைத் தனிமொழி, புணர்மொழி என்ற இருவகை மொழிகளில் வைத்து விளக்குகிறார். (தனிமொழி - ஒருசொல்; புணர்மொழி - இருசொல்.) 

தனிமொழி ஆய்தம்: 
ஆய்தம் ஒரு தனிக்குறிலுக்கும் வல்லின உயிர்மெய்க்கும் நடுவே வரும். (எ.டு) எஃகு, கஃசு, பஃது, அஃகு. 
(எஃகு - ஒரு வகை உலோகம் ; கஃசு - கால் பலம் கொண்ட எடையளவு ; பஃது - பத்து, அஃகு - சுருங்கு) 

இச்சொற்களில் தனிக்குறிலின் முன்னர் வரும் ஆய்தம், தனது நுண்ணிய ஒலியால் தன்னை அடுத்து வரும் வன்மையான ஓசையுடைய வல்லின எழுத்துகளை உரசொலிகளாக (Fricatives) மாற்றி விடுகின்றது என்று மொழிநூலார் கூறுகின்றனர். 

உரசொலி என்றால் என்ன என்பதைக் காண்போம்; 
கீழ்க்காணும் எடுத்துக் காட்டுகளில் ககரம் எவ்வாறு ஒலிக்கிறது எனப் பாருங்கள்.
கடல் ---Kஒலி,  தங்கம் ---g, அகம் ---h

இம்மூன்றில் இரு உயிர் ஒலிகளுக்கு நடுவே (அ+க்+அ+ம்) வரும் ககரம் நுண்மையாகி h ஒலியைப் பெறுகிறது. இதுவே உரசொலி எனப்படும். ஆய்தமும் இவ்வாறே தன்னை அடுத்து வரும் வல்லின மெய்யின் வன்மையை மாற்றி மென்மையாக்கி (உரசொலியாக்கி) விடுகிறது. ஆய்தம் இடம்பெறும் சொற்களை உச்சரித்துப் பார்த்து இந்த உண்மையை நீங்களே உணரலாம். 

புணர்மொழி ஆய்தம்:
தொல்காப்பியர் புணர்மொழி ஆய்தம் பற்றி இரு விதிகளைத் தந்துள்ளார்.
வகர மெய்யில் முடியும் அவ், இவ், உவ் என்ற மூன்று சுட்டுச் சொற்களின் முன்னர் வல்லினம் வரும் பொழுது, வகரமெய் ஆய்தமாகத் திரியும். (தொல். எழுத்து. 379) 
(எ.டு) அவ் + கடிய = அஃகடிய 

1.  தனிக்குறிலை அடுத்து ல், ள் என்று முடியும் சொற்களுக்கு முன்னர் வல்லின மெய்களை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால், ல் என்பது ற் என்றும், ள் என்பது ட் என்றும் திரியும். இவ்வாறு திரிவதோடன்றி, ல், ள் ஆகிய இரண்டும் ஆய்தமாகவும் திரியும். (தொல். எழுத்து. 369, 399) புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது)
2.  மொழியிடை ஆய்தம் - எஃகு, கஃசு (தொடி எடையில் நான்கில் ஒருபங்கு - நிறுத்தலளவைப் பெயர்)
3.  புணரியல் ஆய்தம் - கஃறீது (கல்+தீது), மஃடீது (மண்+தீது)
4.  உருநோக்கு ஆய்தம் - மண் கஃறென்றது (மண் கல் போல் கெட்டியாயிற்று)
5.  இசைநாக்கு ஆய்தம் - அருவி கஃறென்றது (அருவி 'கல்' என ஒலித்தது)

அஃகல் - இது முற்றாய்தம் மேலும் தொல்காப்பியர் காலத் தமிழில், குறில் எழுத்தை அடுத்துக் கான் என்னும் எழுத்துச் சாரியை வரும்போது இடையே ஆய்தம் தோன்றி வழங்கியுள்ளது. இவ்வழக்கைத் தொல்காப்பியத்திலேயே காணலாம். 
ம + கான் = மஃகான். (தொல். எழுத்து. 28) 

ஆய்த எழுத்தை முற்றாய்தம்.ஆய்தக்குறுக்கம் என இருவகையாகக் கூறுவர்                                                                       
முற்றாய்தம்:
எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். 

ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது. இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது.                           
(எஃகு = வேல், கஃசு = தொடி, கஃசு என்பன நிறுத்தலளவைக் குறியீடுகள்,  கஃடு = கள், பஃது = பத்து,  பஃறி = கட்டுமரம்) வல்லினவகையா வரும் ஆய்தம் ஆறு. 

உயிரோடு புணரும்போது ஆய்த எழுத்து தோன்றுதல் உண்டு.  அவ்+கடிய= அஃகடிய. வ் ஆய்தமாறியது திரிதல் விகாரம்அ+கான்=அஃகான் ஆய்த எழுத்துத்தோன்றியது விரித்தல் விகாரம் ஆக முற்றாய்தம் எட்டு.

ஆய்தக்குறுக்கம்:
இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது. கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். 

கல்+தீது, முள்+தீது என்று நிலைமொழி ஈற்றில் லகர,ளகரங்கள் நிற்க வருமொழி முதலில் தகரம்(த்) வந்தால் நிலைமொழி ஈற்றில் உள்ள லகர,ளகரங்கள் ஆய்த(ஃ) எழுத்தாக மாறும்.   வருமொழியில் லகரத்தின் முன்வந்த தகரம் றகரமாகவும் ளகரத்தின் முன்வந்த தகரம் டகரமாகவும் மாறும்.  இவ்வாறு புணர்ச்சியால் வந்த ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரை அளவாக ஒலிக்கும். இதற்கு ஆய்தக்குறுக்கம் என்றுபெயர்.  ல ள ஈற்றுஇயைபின் ஆம் ஆய்தம் அஃகும் (நன்னூல்எழுத்97). 

ல ள ஈற்றியைபினாம் ஆய்தம் எஃகும் (நன்னூல்எழுத்97)

குறில்வழி லளத்தவ் வணையின் ஆய்தம்                                   
ஆகவும் பெறூஉ மல்வழி யானே (நன்னூல்எழுத்228)


திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம்:
திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. 
இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை.   எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. 

எனவே அதனைத் தனியே குறிப்பிட்டு தெய்வப்புலவர் திருவள்ளுவர் எடுத்துக்காட்டுத் தந்துள்ளார்.   இதை உணர்த்த வள்ளுவர் திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு  இரண்டு முறைகளிலும் திருக்குறளைப் படைத்துள்ளார் என்பதை எண்ணி பெருமகிழ்வு கொள்ளலாம்.

இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை.  எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. 
ஆனால் வள்ளுவர் நமக்கு ஆய்த எழுத்தின் இயல்பைத் தம் குறள்மூலம் உணர்த்துகிறார். 

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49)

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் 
உயிர்க்கிறுதி ஆகி விடும் (476)

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை (1014)

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக்கொள்கிறோம்.


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி (226)

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை 
யாண்டும் அஃதொப்ப தில் (363)                                                       

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) 
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414)

இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுக்கொள்கிறோம்.


இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர். 

மாற்றுக் கருத்து முனைவர் தமிழப்பன் எழுதிய "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்" என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார்.  


ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார். 

எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம். 

எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கீழும் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது.

ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. 

ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்று கொள்வதும் தவறாகாது,  அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் ஆய்தம் மூன்றுபுள்ளியும் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றும் கொள்ளலாம்.    குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்பதும் இங்கு சுட்டத்தக்கது.  



புலவர் ஆ.காளியப்பன்  
தலைவர்,  தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் 
amuthankaliappan@gmail.com; 9788552993 
www.tholkappiyam.org