Wednesday, July 7, 2021

திராவிடம் ....

-- மா.மாரிராஜன்


திராவிடம் என்பது தமிழின் அடையாளப் பண்பாட்டுச் சொல்.... 
தமிழை மட்டுமே குறிப்பிடும் ஒரு சொல்.... 
வேற்று மாநிலத்தவர்கள் தமிழர்களைக் குறிப்பிடப் பயன்படுத்திய ஒருசொல்.... 
இப்பெருமைமிகு சொல்லை.... 
இன்றைய அரசியல் காழ்ப்புணர்ச்சியில் கொத்துக்கறி போடுகிறார்கள்.... 

ஏதோ கால்டுவெல் வந்துதான் இச்சொல்லைக் கண்டுபிடித்து தமிழர்களை வஞ்சித்தார் என்று ஒரு வாதம்!!  இச் சொல்லின் தோற்றம் எங்கே? எப்போது?

தமிழ் மொழியைத் தமிழ் என்று சங்க  இலக்கியங்கள் கூறும்.  ஆனால்  வடநாட்டார் எவ்வாறு கூறுவார்கள்? 
சிறப்பு "ழ" தமிழில் மட்டுமே உண்டு. ஆகவே அவர்கள் தமிழை... 
தமிள, தமிட, த்ரமிள, த்ராவிட  என்றார்கள்.  

தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே திராவிடம் என்ற சொல் இருந்தது.  அது தமிழை மட்டுமே குறித்தது. பழம் பெருமைச் சொல்..
ஆரியம் என்னும் சித்தாந்த கோட்பாட்டிற்கு எதிர்வினையாற்ற பெரியார்.  திராவிடம் என்னும் சித்தாந்தத்தை முன் மொழிந்தார்.  இந்தத் திராவிடம் என்னும் சொல் தெலுங்கரையோ கன்னடரையோ குறிக்கவில்லை. தமிழரை மட்டுமே குறித்தது.

இன்றும் எந்த ஒரு கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ  தம்மைத் திராவிடர் என்று கூறுவதில்லை.  ஆனால், தமிழர்கள் மட்டுமே தன்னை ஒரு திராவிடர்  என்று  கூறுவார்கள்.  இவ்வாறு கூற தமிழருக்குத்தான்  உரிமையும் உண்டு, பாரம்பரியப் பெருமையும் உண்டு.  தென்னகத்து மொழிகள் என்ற பொதுப்பிரிவில் இம்மூன்றும் தமிழுடன் சேர்ந்து திராவிட மொழிகள் என்றழைக்கப்பட்டது.  ஆனால், திராவிடம் என்பது தமிழ் மட்டுமே, எப்போதிருந்து..?

தேவநேயப் பாவாணர் கூறுகிறார்;
வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். 
எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம், எனத் திரிந்தது. 
ள - ட, ம - வ, போலி. த்ரவிடம் என்பது மெய் முதலாதலின் தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது (திராவிடத்தாய் - பக்கம் 8). 

mari6.jpeg

மேலும் பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப்பெயர்களும் பெரும்பாலும் அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. கா : ஈழம், கடாரம், சீனம், யவனம்.

தமிழம் - த்ரமிள(ம்) - த்ரமிட(ம்) - த்ரவிட(ம்) த்ராவிட(ம்) என்னும் முறையில், தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும்.  தமிழம் என்பது தமிள - தவிள - தவிட என்று பிராகிருதத்தில் திரிந்தபின்பு, தமிள தவிட என்னும் வடிவங்கள் த்ரமில, திரமிட, த்ரவிட என்று வடமொழியில் திரிந்ததாக, பண்டிதர்  கிரையர்சன் (Dr. Grierson) கூறுவர்.  எங்ஙனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை (ஒப்பியன் மொழி - பக்கம் 28).

mari5.jpeg
 
ஆக திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் ஒரு சொல்.... 
திராவிடம் என்ற சொல்லின் பயன்பாடு; மற்றும் தமிழ் மொழியை வேறு இனத்தவர்கள் எவ்வாறு அழைத்தார்கள்? 
இதன் பழமையும் பெருமையும் எங்கெல்லாம் உள்ளது?
வரலாறு மற்றும் தொல்லியல் சான்று என்ன?
ஒரு நீண்ட பட்டியலே உள்ளது .... 

அத்திக்கும்பா கல்வெட்டு, ஒரிசா புவனேசுவரம் அருகே உதயகிரி குடவரை ஒன்றில் அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்டது  அத்திக்கும்பா கல்வெட்டு. அக்கல்வெட்டில்  கலிங்க அரசன் காரவேலன் பற்றிய சாதனைகளைக் கூறும்போது கல்வெட்டின் 11வது வரி.... 

Hathigumpha inscription.jpg
mari1.jpeg
"ஜநஸத பாவநம் சதேரஸஸ ஸதகதம் பித்தி தமிர தேஹ ஸங்காதம்"

தன் நாட்டுக்குத் தொல்லையாக இருந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை ஒழித்தான்.
(Epigraphia Indica. Vol. 20.No. 7 )

'தமிழ்' என்னும் சொல்லை 'தமிர' என்று கல்வெட்டுக் கூறுகிறது.  தமிழ் மொழி பற்றி பிறமொழி ஆவணங்கள் குறிப்பிடும் காலத்தால் மிக மூத்த தொல்லியல் சான்று இது.  இக்கல்வெட்டின் காலம் கி.மு.2.

mari3.jpeg

பாண்டியன் பராந்தகன் வீரநாரயணின் தளவாய்புரம் செப்பேடு.  காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.  செப்பேட்டின் வாசகங்களை இயற்றிய ஒருவரை  வடமொழிப்பகுதி 'பாண்டிய த்ரமிடர்' என்கிறது. அவரையே தமிழ்ப் பகுதி தமிழ் பாண்டியன் என்கிறது. ஆக,  வடமொழியில் த்ரமிட என்றால் தமிழ் என்பதே உறுதியாகிறது.

mari2.jpeg

mari4.jpeg

அதே செப்பேட்டில் வாசகங்களைச் செதுக்கிய தச்சரை வடமொழியில் 'திரமிளா பரணன்' என்றும், தமிழ்ப்பகுதியில் தமிழாபரணன் என்றும் செப்பேடு கூறுகிறது (பாண்டியர் செப்பேடுகள் பத்து) 

ஆக, த்ரமிட, திரமிளா  என்னும் வடமொழிச் சொற்கள் தமிழ் மற்றும் தமிழர்களையே குறிப்பிடுகிறது.

வடமொழியில் தமிழ் எவ்வாறு  குறிக்கப்பட்டது என்பதை  ஒரு சில தரவுகள் மூலம் பார்ப்போம்..

1.காமிகாகமம்
என்னும் ஆகம  நூல்..
அர்ச்சனா விதி படலம்...

தினசரி பூஜையைத் திராவிட பாஷையிலும்( தமிழ்)  அதன்பிறகு சமஸ்கிருத மொழியிலும், பிறகு மற்ற மொழிகளிலும்  பாடல் ஆடல் முதலியவற்றை நிகழ்த்த வேண்டும்.
"ஊர்த்வம் த்ராவிட பாஷாங்கம் கானம் ந்ருத்தயுதம் து வா
ஸம்ஸ்க்ருதாத் அனபப்ரம்சம் நானா ஸ்வர ஸமன்விதம்
யத் அஷ்டாதச பாஷோத்தம் கானம் வா பரிகல்பயேத்"

ஆகமநூல் குறிப்பிடும் திராவிட பாஷா என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது..

2. சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பௌத்த நூலான  'லலிதாவசுத்திர' என்னும் நூல் குறிப்பிடும் 'திராவிட லிபி' என்பது  தமிழ் எழுத்துகளைக்  குறிக்கிறது.

3. சமண இலக்கியமான சமயவங்க சுத்தா என்னும் நூல் 18 வகை எழுத்துருக்களைக் குறிக்கிறது. இந்நூல் குறிப்பிடும் தாமிலி என்னும் எழுத்துரு தமிழைக் குறிக்கிறது.

4. பாலி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சம் என்னும் நூலில் தமிழைக் குறிக்க  "தமிள" என்னும் சொல் பயன்பட்டுள்ளது.

5.  ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்ட ஸ்வேதாம்பர சைனர் என்னும் நூலில் "தமிட" என்னும் சொல் தமிழைக் குறிக்கிறது. 

6. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்னும் முனிவர் மதுரையில் ஒரு சங்கம் ஒன்றை நிறுவினார். இதன் பெயர் திராவிட சங்கம். தமிழ்ச் சங்கம் என்பதை வடமொழியில் 'த்ராவிடா  ஸங்கா' என்கிறார்.

7. கி.பி.6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதாமி தூண் கல்வெட்டு தமிழர்களை 'த்ரமிள' என்கிறது.

8. சைனக் கணங்கள் என்னும் நூல் தமிழை 'த்ராவிள' என்கிறது.

9. தமிழ் திருவாய்மொழியின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தமிழ் 'த்ரமிட' என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது.

10. கி.பி. 3 ஐ சேர்ந்த பௌத்த மகாயான லலித விஸ்தாரத்தில் புத்தர் கற்ற மொழிகளில் ஐந்தாவது மொழியாக "த்ராவிடி" என்னும் மொழி கூறப்படுகிறது. இது தமிழையே குறிக்கிறது.

11. கி.பி.6. ஆம் நூற்றாண்டு. வராகமிகிரர் எழுதிய நூலில் தமிழை "த்ரவிட" என்று கூறுகிறார்.

12. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. குமரிலப்பட்டர் எழுதிய தந்திரவர்த்திகா என்னும் நூல் தமிழ் மொழியை, திராவிடாந்திரா பாஷா என்கிறது.

13. கி.பி.7 ஆம் நூற்றாண்டு. பட்டபாணான் எழுதிய காதம்பரி என்னும் உரைநடை காவியத்தில் ஒரு பெண் காளிகோவிலில் ஒரு தமிழ் துறவியைச் சந்தித்ததை, "ஜரத் த்ரவிட தார் மிகஸ்ய" என்பதில் 'த்ரவிட' என்பது தமிழைக் குறிக்கிறது.

14. ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்கிறார்.

15. ஆழ்வார்களின் பாடல்களில் தமிழ் பாசுரங்களை  "திராவிட வேதம்" என்று ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றனர்.

16. கி.பி.10. புலவர் நாகவர்மா எழுதிய சாந்தோம்பதி என்னும் கன்னடக் கவிதை நூலில் தமிழை " திராவிடந்திர பாஷா " என்கிறார். ஒரு கன்னட நூல் தமிழ் மொழியை இவ்வாறு கூறுகிறது.

17. கி.பி.13 பால்குரி சோமநாதப் புலவர் எழுதிய தெலுங்கு காவிய நூலான பண்டீதராத்ய சரிதம் என்னும் நூலில்,  "அருதெந்னட்லியம் பரவ தேசம்பு வருசயி த்ராவிட பாஷா சாங்கமுக" என்று ஸ்ரீ சைலத்துக்குச் செல்லும் தமிழகப் பக்தர்கள் தமிழ் மொழியில் பாடிக்கொண்டு சென்றார்கள். ஒரு தெலுங்கர், தான் எழுதிய தெலுங்கு மொழியில் தமிழைத் திராவிடா பாஷா என்கிறார்.

18. கி.பி.14.ஆம் நூற்றாண்டில் கங்காதேவி எழுதியது 'மதுரா விஜயம்' என்னும் சமஸ்கிருத நூல். தமிழகத்தை 'த்ராவிடதேசம்' என்று கூறுகிறது.  கங்காதேவி ஒரு தெலுங்கர். அவர்  தமிழகத்தைத் திராவிட தேசம் என்கிறார்.

19 . கி.பி.10  ஆம் நூற்றாண்டு சமண ஆகம நூலான சுருதாவதாரம் என்ற நூலில் அதன் ஆசிரியர்,  பூதபலி என்பவரைக் குறிப்பிடும்போது "தஸ்தௌ பூதபலிரபி மதுராயாம் த்ராவிட தேஸான்",  அதாவது, திராவிட தேசமான மதுராவிலேயே (மதுரை) பூதபலி தங்கி இந்நூலை இயற்றினான் என்கிறார். மதுரையை  த்ராவிட தேசம் என்று நூல் தெளிவாகக் கூறுகிறது.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மதுரையை திராவிடதேசம் என்றழைக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட வடமொழி இலக்கியங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டு அறிஞர்கள் தமிழர்களைத் திராவிடர் என்றுதான் குறிப்பிட்டனர். திராவிடம் என்பது தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகொண்ட ஒரு சொல். இதை ஏற்காதவர்கள் தமிழின் வரலாற்றுப் பெருமையும் ஏற்க மறுக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய வரலாற்றுச் சொல்லைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது தமிழன் ஒவ்வொருவரின் கடமையாகும்.


References:
1.தேவநேயப் பாவாணர்; திராவிடத்தாய்.
2. ப.சண்முகசுந்தரம். உலகமொழிகளில் தமிழ்ச்  சொற்களும் இலக்கணக் கூறுகளும்.
3. Epigrphia Indica Vol. 20.
4. பாண்டியர் செப்பேடுகள் பத்து.
5. தொல்லியல் ஆய்வாளர் சு.இராஜவேலு உரையாடலில்  - திராவிடக்குறிப்பு

--

2 comments:



  1. தமிழ் இருக்க திராவிட என்கிற அயன்மைச் சொல்லும்

    தமிழர் இருக்க திராவிடர் என்கிற திரிபுச் சொல்லும் தேவையற்றது!

    ReplyDelete