Thursday, March 25, 2021

வரலாற்றில் கிண்ணிமங்கலம்

 வரலாற்றில் கிண்ணிமங்கலம்


-- முனைவர் சு.ராஜவேலு 
பேராசிரியர், வரலாற்றுத்துறை 
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி


தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஊர் சொக்கானூரணி இவ்வூருக்கு 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் கிண்ணிமங்கலம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவ்வூரின் சிறப்பு வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களால் பெரிதும் பேசப்பட்டது. இப்பகுதியில் இக்கட்டுரை ஆசிரியர்களில் ஒருவரான திரு. காந்திராஜன் குழுவினர் (திரு. ஆனந்தன் சன்னாசி & திரு. இரா.ச.ராசவேல்) கள ஆய்வு செய்து கிண்ணிமங்கலத்தில் உள்ள ஏகநாதர் ஆனந்தவள்ளி அம்மன் கோயிலின் வளாகத்தில் கற்குவியல்களுக்கு இடையில் இருந்த சில கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர். பின்னர் கல்வெட்டுகளை முனைவர் வேதாசலம் அவர்களின் உதவியுடன் படியெடுத்து இக்கல்வெட்டுகளின் சிறப்பு குறித்து நாளிதழ்களில் வெளியிட்டனர். இக்கல்வெட்டுகள் குறித்தும் மேற்கொண்டு  இம்மடத்திற்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் மற்றும் சில அரும்பொருள்களையும் ஓலைச்சுவடிகளையும் பார்வையிட்டு இவற்றின்  சிறப்பியல்புகளையும் இவற்றின் உண்மை தன்மைகளைப் பற்றியும்  இக்கட்டுரையின் வாயிலாக தெரிவிக்கின்றன.

5.jpg

அண்மைக் காலங்களில் தொல்லியல் ஆர்வலர்களின் பார்வை வைகை ஆற்றின் பண் பாட்டுப் பகுதிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது. கீழடி அகழாய்விற்குப் பின் பல புதிய கண்டுபிடிப்புகள் குறித்து செய்தித் தாள்களில் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் இவற்றை ஆய்வு நோக்கோடு பார்க்கின்ற பார்வை இல்லாமல் ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் அதிகமாக வருவதால் இக் கண்டு பிடிப்புகளின் உண்மைத் தன்மை அவற்றின் சிறப்புகள் குறித்து ஆய்வுலகில் பல்வேறு கருதுகோள்கள் நிலவி வருகின்றன. அவ்வகையில் கிண்ணிமங்கலக் கண்டுபிடிப்புகள் குறித்தும் பல கருதுகோள்கள் நிலவி வருகின்றன. இப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வுகள் செய்து உண்மைத் தரவுகளை கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்திய பின் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

மதுரையிலிருந்து மேற்காக 18 கி.மீ தொலைவில் கொச்சி  தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை எண். 85க்கு அருகில் செக்கானூரிலிருந்து தென் கிழக்காக கிண்ணிமங்கலம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு  மதுரையிலிருந்து வடபழஞ்சி வழியாகவும் செல்லலாம். இப்பகுதியைச் சுற்றிய மலைப்பகுதிகளில் தமிழிக்கல்வெட்டுகள் பல ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏகநாதர் ஆனந்தவள்ளிக் கோயில் அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக லிங்க வடிவு உள்ளது. இருதள நாகர வடிவமைப்பில் அமைந்துள்ள இவ்விமானம் செங்கல் சுதை கொண்டும் கருவறைச் சுவர் கற்றளியாகவும் காணப்படுகிறது. இக்கோயில் கருவறை, இடைகழி, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விஜயநகரத்திற்கும் பிற்பட்ட கலைவேலைப்பாட்டமைப்பில் அமைந்துள்ளது. கோயிலின் மூலவராக இலிங்கத்திருமேனி இருப்பதுடன் இம்மடத்தினை வழிவழியாக நிருவகித்து வந்த மடாதிபதிகளின் சமாதிக் கோயில்களும் இங்கு உள்ளன. இவற்றைத்தவிர விநாயகர் முருகனுக்கான சன்னதிகள் இவ்வளாகத்தில் உள்ளன. தற்பொழுது உள்ள கோயிலின் அருகில் உள்ள திடல் பகுதியே முன்பு மடமாகச் செயல்பட்டதாகவும் தற்பொழுது உள்ள கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டது எனவும் இக்கோயிலை நிருவாகித்து வரும் திரு. அருளானந்தர் குறிப்பிடுகின்றார். இங்கிருந்த மடம் தற்பொழுதும் தொடர்ந்து செயல்படுகிறது. இம்மடம் வழிவழியாக கல்வி கற்பிக்கவும் போர்க்கலைகள் கற்பிக்கப்படும் இடமாகவும் திகழ்ந்து வந்துள்ளது. குறிப்பாக வேளாண்மை, இயற்கையைப் பாதுகாக்கும் முறைகள், நீர் மேலாண்மை, சோதிடம், தமிழ் மருத்துவம், தமிழர் கணிதவியல் இவற்றுடன் போர்க்கலைப் பயிற்சிக்கான களமாகவும் இது திகழ்ந்தது. சோழர் காலத்தில் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் காந்தளூர் சாலை போன்று இம்மடம் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

தமிழி நடுகல் கல்வெட்டுகள்:
இறந்தவர்களின் நினைவாக ஈமச் சின்னங்கள் எடுக்கும் வழக்கம் தென்னகத்தில் தொன்று தொட்டு நிலவி வருகின்றது. பெருங்கற்காலச் சின்னங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பொ.மு. 1500 க்கும் முன்பிருந்து கிடைத்துள்ளன. பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளில் நடுகல் எடுக்கின்ற வழக்கம் பண்பட்ட சமூகத்தின் வளர்ச்சி நிலையில் கிடைக்கின்றன. அவற்றை இறந்த முன்னோருக்கான கோயில்களாக தமிழர்கள் வணங்கினர். சங்க இலக்கியங்களில் நடுகல் வழிபாடு மற்றும் நடுகல் எடுக்கின்ற வழக்கம் பெருமளவில் சுட்டப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாக வரலாற்றுக் காலத்தில் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்களுக்கு குறிப்பாக அரச மரபினருக்கு இறந்த பின் பள்ளிப்படைக் கோயில்கள் எடுக்கின்ற வழக்கம் தொடர்ந்தது. அவ்வகையில் தற்பொழுது  கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்துப் பொறித்த நடுகல் இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்லிற்கான பள்ளிப்படைக் கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அவ்வகையில் நடுகற்கள் வழிபாடு ஈமச் சின்ன வழிபாட்டு வளர்ச்சியில் ஒரு மைல்கல்.

கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு: 
மேற்குறித்த கிண்ணிமங்கலத்தில் உள்ள கோயிலில் கூம்பு வடிவ நெடுங்கல் ஒன்றின் நடுப்பகுதியில் பண்டைத் தமிழி வரிவடிவில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு மீட்டர் உயரமுடைய முப்பட்டைத் தூண் பகுதியின் அடிப்பகுதி போன்ற உள்ள இக்கல் சொரசொரப்பாக வழவழப்பற்ற நிலையில் எவ்வித வேலைப்பாடு அற்ற நிலையில் காணப்படுகிறது. இக்கல்லின் மேல் பகுதி குறுகியும் கீழ்ப்பகுதி தட்டையாகவும் காணப்படுகிறது. கல்லின் நடுப்பகுதிக்கும் சற்று கீழ்  நிலையில் இரண்டு வரிகளில் தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. வெளிர் நிறமுடைய செந்நிறக்கல்லில் மிக கூர்மையான உளி கொண்டு தமிழி  எழுத்துக்களைக் கோட்டுருவாக எழுதியுள்ளனர். இவ்வெழுத்துக்கள் பெரியதாகவும் சீரான நிலையிலும் தமிழகத்தில் கிடைத்த தமிழி நடுகற்கள் போன்று மிக நேர்த்தியாக எவ்வித எழுத்துப் பிழையுமின்றி எழுதப்பட்டுள்ளது. முதல் வரியில் ஏகன் ஆதன் என்றும் இரண்டாது  வரியில் கோட்டம் எனவும் எழுதப்பட்டுள்ளது. இதனை முதலில் படித்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் வேதாசலம் அவர்களும் தமிழ்நாடு தொல்லியல் துறையினரும் மெய் எழுத்துக்களிலும் எகரக் குறியீட்டிலும் புள்ளிகள் இடப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு இதனை எகன் ஆதன் கோட்டம் எனப் படித்தல் வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். இக்கட்டுரை ஆசிரியர் இதனை நேரில் ஆய்வு செய்த பொழுது இக்கல்வெட்டில் எவ்வெழுத்திலும் புள்ளி இடப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். இப்புள்ளிகள் இக்கல்லில் உளியால் சமன் செய்த பொழுது ஏற்பட்ட வெட்டுக்குழிகளின் புள்ளிகளே அன்றி மெய் எழுத்துக்களிலும் எகரக் குறியீட்டிலும் எங்கும் புள்ளிகள் காணப்படவில்லை. எனவே இக்கல்வெட்டை ஏகன் ஆதன் கோட்டம் என்றே படித்தல் வேண்டும். மேலும் இப்புள்ளியில்லா அடிப்படையிலும் உயிர் எழுத்து ஆ வின் பயன்பாடும் இக்கல்வெட்டில் உள்ளதால் இக்கல்வெட்டின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்பதை தொல்லெழுத்தியல் அடிப்படையில் அறிய முடிகிறது. 

1.jpg

எகரக் குறியீட்டின் அமைப்பும் இக்காலத்தில் நிலவிய அமைப்பில் உள்ளது. மேலும் ஆ எழுத்தின் வளர்ச்சி நிலையும் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்பதை சுட்டுகிறது. தமிழி எழுத்துக்களில் தொடக்க நிலையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் நெடில் ஆ காரக் குறியீடு காணப்படுவதில்லை. ஆதன் என்னும் பெயர்ச்சொல் அதன் என அரிட்டாப்பட்டி, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, அழகர்மலை ஆகிய இடங்களில் பயின்று வருகின்றன. இதனை ஆதன் எனப் படித்தல் வேண்டும். இதே போன்று கொடுமணல் மற்றும் கீழடியில் மட்கல ஓடுகளில் ஆதன் என்ற பெயர்ச்சொல் அதன் என்றே கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை அகரக் குறியீடும் கொண்டே எழுதி வந்துள்ளனர்.

கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் கொடுமணல் மட்கலன்களில் ஆகாரக் குறியீடு காணப்படுகிறது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுமணலில் மத்திய தொல்லியல் துறை செய்த அகழாய்வில் உயிர் எழுத்துக்களான அ, ஆ, இ, ஈ ஆகிய குறியீடுகள் ஒரு பானை ஓட்டில் கிடைத்திருப்பது சிறப்புக்குரியது. (நன்றி ஸ்ரீராமன், கண்காணிப்பாளர், இந்திய தொல்லியல்துறை) எழுத்துக்களை எழுதிப் பழக இம்மட்கல ஓட்டை பயன்படுத்தி உள்ளனர். இவற்றின் காலம் கிமு 300க்கும் முற்பட்ட காலமாகலாம். கிமு 3ஆம் நூற்றாண்டளவில் அசோகனுடைய கல்வெட்டுகளில் ஆ கரக் குறியீடு வட இந்தியாவில் பயின்று வருகின்றது. தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் குன்னக்குடி, புகளூர் கல்வெட்டுகளில் ஆதன் என்ற பெயர்ச்சொல்லில் ஆ நெடில் பயின்று வருகின்றது. இதே போன்று புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டில் ஆகொள் என்ற  சொல்லில் நெடில் ஆ  காணப்படுகிறது. மேற்குறித்த நெடில் ஆ குறியிடங்களில் ஆவின் இடப்பக்க கீழ் மேல் வளைவுக் கோடுகள் இரண்டும் வலப்பக்க  நெடுங்கோட்டின் நடுவில் இணைகின்றன. ஆனால் தற்பொழுது  கிண்ணிமங்கல நடுகல் கல்வெட்டில் இப்பக்கக் கோடுகள் இடைவெளி  விட்டு நேர்க்கோட்டின் நடுவில் ஒன்று சேராமலும் மேலும் அசோகன்  கல்வெட்டுகள் மற்றும் தமிழகக் குகைக்கல்வெட்டுகள், புலிமான் கோம்பை  நடுகல் ஆகியவற்றில் நெடிலுக்கான குறியீடு செங்குத்துக் கோட்டின் நடுவில்  காட்டப்பட்டது போன்று அமையாமல் நெடுங்கோட்டின் வலப்பக்கம்  மேல்பகுதிக்கு சற்று கீழாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம்  இக்கல்வெட்டின் காலம் கிமு 200 க்கும் முற்பட்டதாகும் என்பதை உறுதியாகக் கூறலாம். (வட இந்திய அசோகன் கல்வெட்டுகள் கிமு 3ஆம் நூற்றாண்டில் நெடில் ஆ எழுத்தின் வலப்பக்க நெடில் படுக்கைக் குறியீடு செங்குத்துக் கோட்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது எனினும் கிண்ணிமங்கலம் கல்வெட்டிற்கு இதன் காலத்தைச் சிறிது பின்தள்ளி கிமு  200க்கு (முன்னெச்சரிக்கையாக கருத்தில் கொண்டு) காலம் கணிக்கப்பட்டுள்ளது. எனவே முன் ஆய்வாளர்கள் கிண்ணிமங்கலக் கல்வெட்டின் காலத்தை கி.பி.2ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் சென்று இருப்பது மேலோட்டமான பார்வையாகவே படுகிறது. தமிழியின் காலம் கிமு 600க்கும் முற்பட்டதாக அறிவியல் காலக்கணிப்பில் கணிக்கப்பட்ட நிலையில் அதனை கருத்தில் கொண்டு காலத்தை கணிப்பது என்பதும் சாலச்சிறந்தது. எனவே கிண்ணிமங்கலக் கல்வெட்டின் காலம் கிமு 200க்கும் முற்பட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கல்வெட்டின் சிறப்பு:
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இக்கல்வெட்டு சிறப்பிடம் பெறுகிறது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும் ஏகன் ஆதன் கோட்டம் என்பது இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்லிற்காக அமைக்கப்பட்ட கோயில் என்பதைப் புலப்படுத்துகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் இங்கு கிடைத்த 7-8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுதின் துண்டுக்கல்வெட்டு ஒன்று சான்றளிக்கின்றது. கோட்டம் என்ற சொல்லா பல பொருள்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இக்கல்வெ முழுமையான தன்மை கொண்டு இப்பொருளை உளங்கொள்ளுதல் வேண்டும். கோட்டம் என்பது அரசின் ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக  விளங்குகிறது. தொண்டை மண்டலம் 24 கோட்டங்களாக  பிரிக்கப்பட்டன. வரலாற்றுத் தொடக்க காலத்தில் தொண்டை நாட்டில் பல மண்கோட்டைகள் கட்டி அவ்வவ் ஊர்களின் சிறப்பு கருதி கோட்டங்கள் வழங்கப்பட்டன. இக்கோட்டைகள் வட்ட வடிவம் அல்லது  எண்கோண வடிவம் உடையவை. அதன் அடிப்படையில் நாட்டுப் பிரிவுகள் கோட்டங்களாக அழைக்கப்பட்டன. கோட்டம் என்ற சொல் முதன் முதலில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் (கிபி 3ஆம் நூற்றாண்டு) பயின்று வருகின்றது. இக்கல்வெட்டில் இச்சொல் மதுரையிலிருந்த சமணர்களுக்கானப் பள்ளி எனப் பொருள் கொள்ளப்பட்டது.

நிலப்பிரிவைத் தவிர, கோட்டம் குறித்து சங்க இலக்கியங்களில் பல பொருள்கள் இடத்திற்கு ஏற்றவாறு குறிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்காக எழுப்பப்படும் கோயில்களும் இப்பொருளை கொண்டுள்ளன. (சிலம்பு 10,14) கோட்டம் என்பதற்கு வளைவு (நன் 25) நடுநிலை (தேவா 156) உட்கோட்டம், சொற்கோட்டம் (திருக்குறள் 119) அறை (மணி 6,59) பாசறை (சீவ 262) போன்றவையை இங்கு சுட்டலாம். இவற்றுள் கோயிலோடு தொடர்புடையதாகவே பெரும்பாலும் இச்சொல் அமைந்துள்ளது. புறநானூற்றில் முருகன் கோட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றது. (புறம் 299) பட்டினப்பாலை காவேரிப் பூம்பட்டினத்திலிருந்த நிலாக் கோட்டம் பற்றிக் கூறுகிறது. (ப.பா வரிகள் 34-36) கலித்தொகையில் புத்தொளிர் கோட்டம் காமன் கோட்டம் குறித்தும் செய்திகள் உள்ளன. (கலி 82, 109) சிலப்பதிகாரம் புகார் நகரில் இருந்த தருக்கோட்டம், வெள்ளானைக்கோட்டம், புகார் வெள்ளை நாகர் கோட்டம், பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், பாசண்டச்சாத்தான் கோட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. திருச்செங்கோட்டு உயர்வரையில் மங்கல மடந்தைக் கோட்டமும் கொடும்பாளூருக்குத் தெற்கில் மதுரை செல்லும் வழியில் ஐயை கோட்டமும் மதுரை மாநகரில் கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் தேவக்கோட்டம் ஒன்றும் குறிக்கப்பட்டுள்ளன. இடுகாட்டுப் பகுதியில் இருந்த வழிபாட்டு இடங்கள் கோட்டம் என வழங்கப்பட்டதையும் சிலப்பதிகாரம் குறிக்கிறது. (சிலம்பு 5-15) இதனை உறுதி செய்யும் வகையில் இரட்டைக் காப்பியங்களில் மற்றொன்றான மணிமேகலை ஈமப் புறங்காட்டிலிருந்த சக்கரவாளக் கோட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. (மணி 51-166) இவற்றின் காலம் பெரும்பாலும் இறந்தோருக்காக ஈமப் பகுதிகளில் எடுக்கப் கோயில்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் கோட்டம் என வழங்கப்பட்டதை உறுதியாகக் குறிப்பிடலாம்.

கோட்டம் என்பதின் மூலம் இவை வட்ட வடிவ அமைப்புடைய என பொறிஞர் கோமகன் கருதுகின்றார். தூங்கானை மாடக்கோயில் வகை  போன்று இவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே ஏகன் ஆதன் என்பவருக்கு நடுகல் எடுக்கப்பட்டு அதனைச் சுற்றி வட்ட வடிவ கோட்டம் ஒன்றை அமைத்திருக்க வேண்டும் என்பதே தமிழிக் கல்வெட்டின் பொருளாகும். மேலும் இதில் வரும் ஏகன் தந்தை பெயர் அவரது மகன் ஆதன் என்பார். அவர் இறந்தமைக்காக நடுகல் எடுக்கப்பட்டு கோட்டம் அமைக்கப்பட்டது.

கோட்டம் என்பது பெரும்பாலும் இறந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட கோயில் என்ற வகையில் சங்க இலக்கியங்களில் இறந்த அரசர்களின் சில பெயர்கள் துஞ்சிய என்னும் அடைமொழியோடு சொல்லப்படுகிறது. எ.கா. கோட்டம்பலத்துத் துஞ்சிய, கோட்டம்+ அம்பலம்+ துஞ்சிய (இறந்த).

பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் மதிரை (மதுரை) உலவியத்தான் குளத்திற்கு வடக்கில் தாபதப்பள்ளி ஒன்று இருந்ததையும் அதன் உள்ளே வாசி தேவனாரு கோட்டம் ஒன்று இருந்ததையும் முன்பே குறிப்பிட்டோம். இக்கோட்டம் தாபதப் பள்ளியில் இருந்த வாசி தேவனார் என்பவர் இறந்தமைக்காக எடுக்கப்பட்ட கோட்டமாக இருக்கக்கூடும். துறவு நிலை கொண்டு வாழ்வோர் வாழுமிடம் தாபதப்பள்ளி என வழங்கப்பட்டது. கிபி மூன்றாம் நூற்றாண்டளவில் சமணம் தமிழகத்திற்கு வருகின்றது. எனவே மதுரையிலிருந்த தாபதப் பள்ளி சமணப் பள்ளியாகலாம். வடக்கிருந்து உண்ணா நோன்பிருத்தல் சமணர்களின் வழக்கம். அவ்வாறு இப்பள்ளியில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த வாசுதேவனார் என்பவருக்காக எடுக்கப்பட்ட சமாதிக் கோயில் அவரது பெயரால் வாசி தேவனார் கோட்டம் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே கிண்ணிமங்கலத்தில் தமிழ் சமூகத்தைச் சார்ந்த மடத்தில் வாழ்ந்து துறவுநிலை பூண்டு இறந்த ஏகன் ஆதன் என்பவருக்காக நடுகல் எடுக்கப்பட்டு அதனைச் சுற்றிக் கோட்டம் (பள்ளிப்படை) (பொ.மு.) கிமு இரண்ட நூற்றாண்டு அளவில் ஒன்று அமைக்கப்பட்டதை கிண்ணிமங்க கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

வட்டெழுத்து கல்வெட்டு:

2.JPG
கிண்ணி மங்கலம் ஏகநாதர் மடத்தில் கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து அது குறித்து விவரம் தெரியாமல் இருப்பதால் இக்கல்வெட்டு யார் காலத்தில் வெளியிடப்பட்டது என்பது குறித்த விவரங்களை அறிய முடியவில்லை. இக்கல்வெட்டும் கூரிய உளி கொண்டே நான்கு வரிகளில் எழுத்துகள் கீறல்களாக கல்லில் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு;
1. இறையிலியாக 
2. ஏகநாதன் 
3. பள்ளிப்படை 
4. மண்றளி
5. ஈந்தார் 
இவ்வட்டெழுத்துக் கல்வெட்டின் இடப்பக்கம் இரட்டை மீன்களின் கோட்டுருவங்கள் உள்ளன. இவை முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டாக இருக்கக்கூடும். கல்வெட்டின் முடிவில் விளக்கு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. கோட்டம் என அழைக்கப்பட்ட ஏகநாதன் நடுகல் கோயில் 7-8 ஆம் நூற்றாண்டில் பள்ளிப்படை என வழங்கப்பட்டுள்ளதும் இந்நடுக்கல்லைச் சுற்றி மண்ணால் ஆன தளி ஒன்று அமைக்கப்பட்டதும் இக்கோயிலுக்கு இறையிலி கொடுக்கப்பட்டுள்ளதும் இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

வட்டெழுத்து ஓலைச்சுவடிகள்:
ஜீவசமாதி கோயிலாகவே விளங்குவதால் ஏறக்குறைய சங்க காலம் முதல் இப்பள்ளிப்படைக் கோயில் கொண்டு தொடர்ந்து வழிவழி வரும் மடாதிபதிகளால் ஆளுகை செய்யப்பட்டு வருகின்றது. இம்மடத்தில் 
ஓலைச் சுவடிகள் பல காணப்படுகின்றன. அவற்றில் இருந்த  சில  ஓலைச் சுவடிகளில் வட்டெழுத்தால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கள ஆய்வில்  கண்டெடுக்கப்பட்டன. தற்பொழுது இம்மடத்தின் நிருவாகத்தை கவனித்து  
வரும் திரு. அருளானந்தம் அவர்களுக்கு இவ்வட்டெழுத்து ஓலைச் சுவடிகளின் விவரங்கள் தெரியவில்லை. இவரது தந்தைக்கு முன்பிருந்த பாட்டனார் காலத்தில் இருந்த பல ஓலைச் சுவடிகள் மடத்தில் இருந்ததாக அவர் கூறினார். தமிழ் எழுத்துகளில் உள்ள சுவடிகளுக்கு இடையில் இக்கட்டுரை ஆசிரியர்களால் கள ஆய்வில் எடுக்கப்பட்ட இவ்வோலைச் சுவடிகளும் இம்மடத்தின் நீண்ட வரலாற்றை எடுத்தியம்பும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. தமிழகத்தில் இதுவரை வட்டெழுத்தில் ஓலைச் சுவடிகள் கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சில ஆய்வாளர்கள் கருதுவது போல் கிண்ணிமங்கல மடத்தில் கிடைத்த இவ்வோலைச் சுவடிகளோ அல்லது கல்வெட்டுகளோ போலியானவை அல்ல. ஓலைச்சுவடிகளை இக்கட்டுரை ஆசிரியர்களே ஓலைக் குவியலில் இருந்து கண்டெடுத்தனர். மேலும் இம்மடம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகாலமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இங்கு தமிழ்மொழியும் பிற கலைகளும் போர்க்கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன என அறிய முடிகிறது.

எனவே வழி வழியாக இங்கு செயல்பட்டு வந்த ஆவணக்களரியில் ஓலைச்சுவடிகளைப் புதுப்பிக்கும் பணியும் பதிப்பிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. பிற்காலத்தில் வட்டெழுத்து படிக்கவோ எழுதவோ தெரியாத ஒருவர் முன் பதிப்பில் இருந்து வட்டெழுத்து ஓலைச்சுவடியில் உள்ளவாறே அவற்றை ஓலையில் எழுதி தமிழில் தனது பெயரை எழுதி இது ஒரு நகல் என எழுதி உள்ளார். போலியாக இருப்பின் தமிழில் எழுத வேண்டிய அவசியமும் இல்லை நகல் எனச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. எனவே இம்மடத்தில் மேற்கொண்டும் ஆய்வுகள் செய்தால் பல அறிய அரும்பொருட்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துச் சுவடிகளில் பொருள் பொதிந்த பாடல் வரிகள் உள்ளன. இவற்றை பேராசிரியர். சுப்பராயலு அவர்களுக்கும் அனுப்பி வைத்து அவ்வோலைகளில் இக்கட்டுரை ஆசிரியர் படித்தமையை வைத்து ஒப்பு நோக்கப்பட்டது. இப்பாடல்கள் பள்ளிப்படைச் சமாதியில் பூஜிக்கும் நேரத்தில் பாடும் பாடல்களாக இருக்கலாம் எனப் பேராசிரியர். சுப்பராயலு அவர்கள் கருத்து தெரிவித்ததுடன் இப்பொழுதும் அவ்வாறு நடைமுறை உள்ளதா எனக் கேட்டறியும்படி கூறினார். 

இம்மடத்தின் நிருவாகி அருளானந்தரிடம் இக்கோயில் பாடல்கள் ஏதாவது பாடுவீர்களா? அப்படி இருப்பின் எழுதி அனுப்பும்படி கோரியிருந்தேன். அவர் தனது தாத்தா எழுதி வைத்த குறிப்புப் புத்தகத்தை வைத்து ஆண்டுக்கொருமுறை குருபூஜையில் இப்பாடலைப் பாடுவோம் அது நினைவில் இல்லை. இப்பாடல் தமிழில் எழுதப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். ஓலையில் நாங்கள் படித்தறிந்த பாடலும் அவர் எழுதி அனுப்பிய பாடலும் ஒன்றே. எனவே காலங்காலமாக இம்மடத்தில் உள்ளோர் ஓலைச்சுவடிகளில் எழுதி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. பிற்காலத்தில் ஓலைச்சுவடியில் வட்டெழுத்தை அறியாத ஒருவர் ஏற்கனவே இருந்த ஓலையில் இருந்து படி எடுத்துள்ளமையால் இவ்வட்டெழுத்துகளின் சில எழுத்துக்கள் எங்களால் வேறு வகையாகப் படிக்கப்பட்டதும் இவ்வோலைச் சுவடிகள் உண்மைத் தன்மை வாய்ந்தவை என்பதை தெள்ளென தெரிவிக்கின்றது. மேலும் இப்பாடல் ஒவ்வொரு வரியும் 1. நீத்தார் 2. ஏத்தார், 3. காத்தார், 3. கூத்தார், 5. மூத்தார் என முதல் வரியில் தொடங்குவதாகவே அமைகின்றது. இதனை எழுதி அனுப்பிய இன்றைய மட நிருவாகியும் அவ்வாறு தான் தமிழில் எழுதி உள்ளார். ஆனால் ஓலைச் சுவடியில் இடம் இருப்பதின் காரணமாக அவை ஒவ்வொரு வரிகளுக்கும் இரண்டு கோடுகள் இடப்பட்டு தொடர்ச்சியாக எழுதியுள்ளமை இவ்வோலைச் சுவடி போலியானது அல்ல தற்காலத்தில் எழுதப்பட்டதும் அல்ல என்பதும் வழி வழியாக இம்மடத்திலுள்ளோரால் படி எடுத்து நகலாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதும் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் வட்டெழுத்து தெரியாத மடத்து நிருவாகி ஒருவரால் பார்த்து நகல் எடுக்கப்பட்டு தமிழில் எழுதியவரின் பெயரும் இது நகல் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு ஓலைச்சுவடிகள், செப்புப்  பட்டயங்கள் பாதுகாக்கும் ஆவணக் காப்பகம் ஒன்று இருந்துள்ளது என்பதையும் இவ்வோலைச் சுவடி மூலமே அறிய இயலும். இதனை ஆவணக்களரி எனத் தமிழில் இவ்வோலையில் குறித்துள்ளமையின் மூலம் அறிய முடிகிறது. நான்கு கோண நட்சத்திர வரைப்படம் ஒன்று ஆவணக்களரி என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இடையில் வரையப்பட்டுள்ளது. 

இவ்வோலைச் சுவடியின் பின்பக்கங்களில் எதுவும் எழுதப்படவில்லை. இது 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எழுத்தமைதியில் உள்ளமையால் இந்நூற்றாண்டில் மூல ஓலையிலிருந்து வட்டெழுத்துகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். கடந்த 1942ஆம் ஆண்டு இம்மடத்தின் கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அக்காலத்திலும் 1952ஆம் ஆண்டும் மடத்தில் இருந்து பல பொருள்கள் களவாடப்பட்டுள்ளன. இவற்றுள் 55 செப்புத் தகடுகளும் ஓலைச்சுவடிகளும் அடங்கும். எஞ்சிய சில ஓலைச்சுவடிகள் மட்டுமே தற்பொழுது இம்மடத்தில் உள்ளன. இச்செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும் இருந்திருப்பின் இம்மடத்தின் தொன்மையான வரலாற்றை மேலும் அறிந்திருக்க இயலும்.

3.jpg

ஓலைச்சுவடிகளில் உள்ள வட்டெழுத்து வாசகம்:
முதல் ஓலை :-
1. நீத்தார் நெடுங்கோளம் நின்வெளி நீள்தாயம் || ஏத்தார் 
2. எங்கோளம் எங்குலத்தார் எம்பூரம் || காத்தார் கார-
3. ணத்தார் கரமேவி என்புலமே || கூத்தார் கர 
4. மேவி கொண்டாங்கே ஏகிடவே || மூத்தார் முதம்

இரண்டாவது ஓலை:- 
மறை முற்றாய் மலர்ந்திடவே பூத்தார் புனல் ஏம்பும் 
பூமரையாய் பூணட்டும்

தமிழில் எழுதியுள்ளவை:
1. இது ஏகநாத குருமடத்து ஆவணகளரி செப்போலை நகல் 
2. பள்ளிப்படை மந்திரம்

இண்டாவது ஓலைக்கட்டுச் சுவடியில் இருந்த வட்டெழுத்து ஓலைச்சுவடிகள்

4.jpg
முதல் ஓலை:-
1. தம் முன்னோர் இழியிய நா பழிசொற் கேளா பாண்டியர் எ-
2. ழினியர் இறை காத்த ஏகநாத பள்ளி ஆசான் மெய்மொழி 
3. இறையனார்க்கு நாட்டாற்று புற அமிர்த பராக்கிரம நல்லூர் 
4. வெள்ளாள குயில் குடியான்மார்கள் பரிவட்டனை கடமையாக

இரண்டாவது ஓலை:-
5. பத்துயாண்டுக்கொரு முறை ஆநிரை அறுபத்தும் அதற்கொப்ப  
6. கூளமூம் கிண்ணிமங்கல ஏகனாத மடத்துக்கு யீந்தார் 
7. கிண்ணிமங்கல காராள குடியானமார் மாவூத்து வேலப்பனோடு 
8. சங்கிராம சாலையில் ஏகனாத மட

மூன்றாவது ஓலை:-
9. சேவடிகள் கொடுபித்தார் செக்காணூரணி குணவான் சாத்தா 
10. செக்குரல் செய்வித்தான், யாவும் பரிவட்டனை கடமை இது 
11. பரிவட்டனை கடமை உ (தமிழில்) சிலா சாதன பட்டய

நகலுக்கு நகல்

மூன்றாவது ஓலையின் பின்பக்கம்:-
12. எழுதினது 62வது குருவழி தோன்றல் அ.மகாலிங்கம் பிள்ளை

இது மூன்று ஓலைச்சுவடிகளை உடையது. முதல் இரண்டு ஓலைகள் நான்கு வரிகளை உடையவை. மூன்றாவது ஓலையில் மூன்று வரிகளில் வட்டெழுத்தில் எழுதி உள்ளனர். வட்டெழுத்து முடிந்தவுடன் தமிழில் எழுதி உள்ளனர். ஏறக்குறைய 18ஆம் நூற்றாண்டில் பிற்பகுதி எழுத்தமைதியில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இவ்விரண்டு ஓலைச்சசுவடி வட்டெழுத்துக்களும் ஒரே காலத்தில் நகல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

இப்பொழுது இருக்கும் மடத்தின் நிருவாகி அருளானந்தம் 67வது குரு பரம்பரையில் வந்தவர். இவருக்கு முன்பாக கீழ்குறித்த ஐந்து நிருவாகிகள் இம்மடத்தில் இருந்துள்ளனர். 
அருளானந்தரின் தந்தையார் முத்துராமலிங்கம் (66), 
இவரது தந்தையார் நாட்டுத்துரை என்கிற சங்காரனந்தம் (65), 
இவரது தந்தையார் சுந்தரானந்தம் (64), 
இவரது தந்தையார் முத்தானந்தம்(63),  
இவரது தந்தை கருணானந்தம் என்கிற அ.மகாலிங்கம் (62) 
இவ்வோலைச் சுவடியில் குறிக்கப்பட்டிருக்கும் அ.மகாலிங்கம் என்கிற கருணானந்தம் என்பவர் 62 வது குரு பரம்பரையை சார்ந்தவர். இவர் 1812 ஆம் ஆண்டு மறைந்துள்ளார். எனவே இவ்வோலைப்  பட்டயங்கள் இவரது காலத்தில் அதாவது 18ஆம் நாற்றாண்டின் இறுதி காலத்தில் நகல் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வோலை ஆவணத்தின் மூலம் கிண்ணி மங்கலம் ஏகநாத மடத்திற்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை குயில்குடியைச் சார்ந்த வேளாளர்கள் பசுக்கள் 60ஐ தானமாக தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். நெல்லும் கூளமாக அளித்து வந்துள்ளனர். கிண்ணி மங்கல காராளர்கள் இம்மடத்திற்கு வரும் சாதுக்களுடன் ஆண்டிப்பட்டிக்கு தெற்கிலுள்ள மாவூத்து வேலப்பன் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்வர். இவர்கள் செல்லும் பெருவழி சங்கிராம சாலை என வழங்கப்பட்டது. அத்துடன் செக்கனூரில் இருக்கும் எண்ணெய் வணிகர் இம்மடத்திற்கு (பரிவட்டனை) செய்யப்படுதல் வேண்டும் என்பதை இவ்வோலை ஆவணம் குறிப்பிடுகிறது.

மதுரை நாயக்கர் கால கல்வெட்டு:
இக்கோயில் வளாகத்தில் கிடைத்துள்ள மற்றொரு கல்வெட்டு 1722 ஆம் ஆண்டைச் சார்ந்தது. இது 43 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. உள்ளூர் கல்தச்சரால் எழுதப்பட்டுள்ளதால் எழுத்துகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளன. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் பெயர்கள் கால வரிசையாக இக்கல்வெட்டில் இடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டிலும் இக்கோயில் பள்ளிப்படை சமாதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு உரிமையுடையது என்பதையும் குறிக்கிறது.  இக்கல்வெட்டில் பாண்டிய மன்னவர்களின் ஒருவரான நெடுஞ்செழியன் பெயரும் பராந்தக பாண்டியனின் பெயரும் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள தொடர் பின்வருமாறு விடையாவும் நெடுஞ்செழியன் பராந்தக பாண்டியன் பட்டயத்தில் கண்டபடி எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியம் என இக்கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து இம்மடம் ஆவணக்கூடமாக செயல்பட்டு வந்திருப்பதாலும் இங்கு ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய வகையில் நகல்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளமையாலும் செப்புப் பட்டயங்கள் திருடு போய்விட்டமையாலும் உறுதியாக மதுரை நாயக்கர் கல்வெட்டு போலி என சொல்ல இயலாது. 

நாயக்க மன்னர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கும் இக்கல்வெட்டு போலியானதாக இருப்பின் அவர்களின் மரபை மட்டும் எப்படி சொல்ல முடியும்? இக்கல்வெட்டில் போலியான தொடருக்கான செய்திகள் எவையும் இல்லை. மேலும் இக்கல்வெட்டில் நிலக்கொடை பற்றிய செய்திகள் எவையும் இல்லை. ஏற்கனவே அரசுக்கு வருகின்ற வருவாய் மடத்திற்கு வழங்கப்பட்ட செய்தி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலத்தில் எழுதப்பட்ட போலியான ஒன்றாக இருப்பின் வரி வசூல் செய்யும் உரிமை மட்டுமே குறிக்கப்பட்டிருக்க இயலாது.

எனவே பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடையின் அடிப்படையில் இக்கொடையும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு குறிக்கப்பட்டுள்ள பராந்தக நெடுஞ்செழியன் 9ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னராக இருக்கக்கூடும். பராந்தகப் பாண்டியன் வேறு நெடுஞ்செழியன் வேறாக இருக்க இயலாது. வேள்விக்குடிச் செப்பேடு மத்திய தொல்லியல் துறையாலும் பிற கல்வெட்டு ஆய்வாளர்களாலும் உண்மையான செப்பேடு என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேள்விக்குடிச் செப்பேடே போலியனது எனக் கல்வெட்டு ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் சொல்வது முற்றிலும் ஏற்படையது அன்று. வழி வழி பேசப்படும் மரபுகளைக் குறித்த இலக்கியங்களும் இருக்கின்ற வகையில் மதுரை நாயக்கர்களுக்கு தங்களுக்கு முன்பு ஆட்சி செய்த பாண்டியர்கள் குறித்து தெரியாது என்பது கற்பனையான வாதமாகவே உள்ளது. முதலாம் இராஜராஜன் காலத்தில் வழங்கப்பட்ட ஆணைமங்கலக் கொடை மீண்டும் அவனது பின்னோன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மீண்டும் வழங்கப்பட்டதை சிறிய லெய்டன் செப்புப்பட்டயம் குறிப்பிடுகின்றது. இதே போன்று பழைய கல்வெட்டுப் படிகளின் அடிப்படையில் பல கோயில்களில் கொடைகள் மீண்டும் புதுப்பிக்கப் பட்டதையும் தமிழகத்தின் பல கல்வெட்டுகள் குறிக்கின்றன. 

போலியான செப்பேடு அல்லது கல்வெட்டுகளை கண்டுபிடிப்பது எளிது. அவ்வாறான சான்றுகளில் எழுத்துப்பிழைகளுடன் சொற்பிழைகள் மட்டுமின்றி அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகளும் உயர்வு நவிற்சி அணியில் புராண கதைகளை அடி ஒற்றிக் காணப்படும். இது போன்ற செப்பேடுகள் கொங்குப் பகுதியில் கிடைத்துள்ளன. எனவே திரு. சாந்தலிங்கம் கருதுவது போல் இக்கல்வெட்டு போலியானது என்பது  முற்றிலும் தவறானது. இதன் தொடர்ச்சியாக இங்கு கிடைத்த பிற கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் போலி எனக் கூறுவதும் மேற்குறித்த  தரவுகளின் அடிப்படையில் தவறான கணிப்பாகவே தெரிகிறது. மதுரை  நாயக்கர் காலக் கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு.

கல்வெட்டு வாசகம்: 
1. சுப ஸ்ரீமன் மகா மண்டலீஸ்வரன் 
2. பாஷைக்கு தப்புவராய கண்டன் கண்ட நாடு 
3. கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டி 
4. மண்டல பிரதிட்டாச்சாரியன் 
5. சோழமண்டல ஸ்தாபனாச்சாரி - 
6. யன் யீளமும் கொங்கும் கொச்சியும் 
7. குடகமும் யாப்பணமும் எம்மண்டலமும் 
8. திரைக்கொண்டருளிய அசுபதி கெசபதியான பிர(பு)
9. ல தேவமகராச மல்லிகார்ச்சுன ராயர் வெங்கடபதி 
10. ராயர் விருப்பாச்சிராயர் முசுகுந்தராயர் வசந்த 
11. ராயர் மாதேவ வெங்கிடகிருஷ்ணராயர் ராமராயர் 
12. நரசிங்கராயர் பிரபுடராயர் கொட்டியும் 
13. நாகம நாயக்கர் விசுவநாத நாயக்கர் முத்து கிருஷ்ண 
14. நாயக்கர் விசய வீரப்ப நாயக்கர் முத்து வீரப்ப 
15. நாயக்கர் முத்து விசய நாயக்கர் 
16. திருமலை நாயக்கர் முத்து வீரப்ப நாயக்கர் 
17. சொக்கநாத நாயக்கர் ரெங்க கிருஷ்ண 
18. முத்து வீரப்ப நாயக்கர் விசயரங்க சொக்கநாத நாயக்கர் 
19. ராச்சிய பரிபாலனம் செய்யும் நாளில் 
20. கலியுக வருசம் 4823 மேல் 
21. ஆடி மாதம் (13) தீ தெட்சிணாயனத்து 
22. மேல் சாலிவாகன சகாப்தம் (1644) 
23. மேல் செல்லாநின்ற கொல்லம் வருசம் (897) 
24. ... புனர்பூச சுபதியாக சுபதினத்தில் 
25. சமூகம் மீனாட்சி நாயக்கவர்கள் ஆகோசேத்திரத்தில் 
26. மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி சன்-
27. னதியில் கிண்ணிமங்கலம் ஸ்ரீலஸ்ரீ 
28. ஏகநாத குருமடத்தார்க்கு தன்ம சிலா சாதனப் பட்டயம் 
29. நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு 
30. திரல் விடையாவும் நெடுஞ்செழியன் பரா-
31. ந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்-
32. டபடி குடும்பத்தாரின் வாரிசுதாரர்களால் 
33. ஆதாயம் கையாடிக் கொண்டு இவர்களின்
34. குல ஆசார வழக்கப்படி பூஜித்து பரிபாலனம் 
35. செய்து வரவும் மடப்புறத்தில் பரம்பரை சம்பி-
36. ரதாயப்படி பள்ளிப்படை சமாதி வைத்து வ-
37. ணங்கி வரவும் இம்மடத்தார்க்கு மட்டுமே கர்-
38. ணபரம்பரை பூர்வீக பாத்தியதை உண்டு 
39. பிறகுலத்தார் யாவருக்கு எவ்வித பாத்தியதை-
40. யும் இம்மடத்தில் இல்லை என்பதுமான இத்தன்மத்துக்கு 
41. விகாதம் செய்த பேர் சிவசன்னதியில் விளக்கை 
42. நிறுத்தியவன் போற பாவத்துக்குள்ளாவான்

மேற்குறித்த கல்வெட்டின் மூலம் விஜய நகர மன்னர்களின் வரிசைப்பட்டியலும் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களின் மரபு  பட்டியலும் குறிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த பாண்டியர் கால செப்புப்பட்டய அடிப்படையில் கொடைகள் இப்பள்ளிப் படை சமாதிக் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்தில் நிலவிய பல்வேறு வரிகள் குறித்த செய்தியும் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இம்மடம் பூர்வீகமாக தனியார் வசம் இருந்துள்ளமை இம்மடத்தில் கிடைக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை இக்கல்வெட்டும் உறுதி செய்கின்றது. கர்ணபரம்பரையாக என்பது இம்மடத்தில் வழி வழியாக ஏகநாதன் காலத்திலிருந்து தலைமை ஏற்றிருந்த நிருவாக குருமரபினைக் குறிப்பதாக அமைகிறது. இத்தருமத்தை நிறுத்தியவர் விளக்கை அணைத்தவர் எனக் குறிக்கும் ஓம்படைச் சொல். இப்பகுதியில் விளக்கேற்றும் வழக்கம் தொடர்ந்து நிலவி வருவதைக் காட்டுகிறது.

தமிழகத்தின் பாழி மற்றும் பள்ளிப்படைக் கோயில்கள்:
சங்க காலத்தைச் சார்ந்த மன்னர்களான கோப்பெருஞ்சோழனுக்கும், ஔவைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. நடுகல்லை பீலிசூட்டிய பிறங்கு நிலை நடுகல் என அகநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகின்றது. நடுகல்லை மக்கள் வழிப்பட்டனர். தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை, தாதப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொற்பனைக்கோட்டை ஆகிய ஊர்களில் கிடைத்த நடுகற்களே இந்திய அளவில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பழமையான நடுகற்களாகும். தாதப்பட்டி நடுகல்லில் இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல் பாழிய் என்றே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தமிழிக் கல்வெட்டுகளில் சொல்லப்படுகின்ற பாழி, அதிட்டானம், கல் கஞ்சனம் போன்றவை இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட ஈமப்படுக்கைகள்  பொருளையே சொல்கின்றன. இவ்வியற்கையான குகைத் தளங்களில்  பெரிதும் சிறிதுமாக ஒழுங்கற்ற நிலையில் இறந்தவர்களின் நினைவுச்  சின்னங்களை அமைக்கும் மரபை தமிழர்கள் பெருங்கற்கால காலத்தில்  அமைத்தனர். பெருங்கற்காலச் சின்னங்களில் இவ்வாறான குகைப் படுக்கைகளும் ஒரு வகையாகும். இவை பாழி என வழங்கப்பட்டு பின்னர் பள்ளியாகி வரலாற்றுக் காலத்தில் பள்ளிப்படை என பெயர் மாற்றம் பெற்றன. இதனை தாதப்பட்டி நடுகல்லின் மூலமும் படுக்கைகளின் அமைப்பு மூலமும் அறிய முடிகிறது. துறவறம் பூண்டவர் இயற்கையான குகைகளில் தங்குவதற்கான வசதிகள் இக்குகைகளில் இல்லை.  இறந்தவர்களின் படுக்கைகள் மழை நீர் உட்புகாதவாறு குகை விளிம்புகள் வெட்டப்பட்டன. இவ்வாறே பெருங்கற்காலச் சின்னங்களும் இயற்கையின் சீற்றத்தால் அழியாமல் இருக்க வட்டக்கற்களும் கற்குவியல்களும் சமவெளிகளில் அமைக்கப்பட்டன. பெருங்கற்கால ஈமச் சின்ன வகைகளே பாழி என வழங்கப்பட்டது. பிற்காலத் தரவுகளை வைத்து இப்படுக்கைகள் சமணத் துறவிகள் வாழ்விடம் என சில ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறிவருவதும் தமிழி எழுத்தை தமிழகத்திற்கு எடுத்து வந்தவர்கள் சமணர்களே எனச் சொல்வதும் புதிய தரவுகளின் மூலம் ஏற்கக் கூடிய நிலையில் இல்லை.

கீழடி, பொருந்தல், கொடுமணல் அகழாய்வுகளின் மூலம் பெறப்பட்ட அறிவியல் காலக் கணிப்பு தமிழி எழுத்திற்கு கிமு 6ஆம் நூற்றாண்டு என தெளிவு வந்த பிறகும் தொடர்ந்து இயற்கையான குகைத் தளங்களில் உள்ள படுக்கைகளும் தமிழி கல்வெட்டுகளும் சமணர்களுக்கு உரியவை எனக் கூறுவது அறியாமையின் வெளிப்பாடாகவே விளங்குகிறது.

நடுகல் எடுக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் சமூகத்தில் உயர் நிலையில் இருந்த அரசர்களுக்கு சமாதிக் கோயில்கள் எடுக்கும் வழக்கமும் ஏற்பட்டன. பாழி என்ற நிலையிலிருந்து பள்ளிப்படைகள் உருவாகின. இவை பள்ளிப்படைக் கோயில்கள் என வழங்கப்படும். கோயில்கள் போன்ற அமைப்பில் அரசர்களின் பள்ளிப்படைகள் அக்காலத்தில் இருந்தன. பொதுவாக இவ்வகைக் கோயில்களின் கருவறைகளில் சிவனுக்குரிய லிங்க அமைப்பு காணப்படும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பகுதிகளிலும் இறந்த மன்னர்களுக்கு பள்ளிப்படைக் கோயில்கள் எடுக்கும் வழக்கம் நிலவியது. 

கர்நாடகத்தில் இவ்வகைக் கோயில்களை பரோக் ஷ வினயம் என்றும் ஆந்திராவில் சிவாயதனம் எனவும் அழைப்பர். தென்னிந்தியப் பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பால் தென்கிழக்காசிய நாடுகளிலும் இதுபோன்ற பள்ளிப்படைக் கோயில்கள் இருந்தன. இதனை தேவராஜா வழிபாடு எனக் குறிப்பிடுவர். இவை யாவும் இறந்தவர்கள் துயில் கொள்ளும் இடம் என்னும் பொருளில் அமைந்தவை. இவை வைதீகத்திற்கு உட்பட்ட கோயில்கள் அல்ல.

தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பள்ளிப்படைக் கோயில் வேலூருக்கு அருகில் சோழபுரம் என்ற இடத்தில் உள்ளது. இவ்வூர் வேலூரிலிருந்து ஊசூருக்கு அருகில் இன்றைய புகழ் பெற்ற  பொற்கோயிலுக்கு மேற்கில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் ..ற்குப் பகுதியில் வயல்வெளிகளுக்கு இடையில் பல்லவர் காலத்தில் குறுநில மன்னராக விளங்கிய பிருதுவி கங்கரையன் என்பவருக்காக அவரது மகன்  இராஜாதித்யன் என்பவர் பள்ளிப்படைக் கோயிலைக் கட்டியுள்ளார்.  தன்னுடைய தந்தையை பள்ளிப்படுத்திய இடத்தில் அதீதகரகம் எனக்  கூறப்படும் பள்ளிப்படைக் கோயில் ஒன்றும் அதன் அருகில் சிவாலயம் ஒன்றும் எடுப்பிக்கின்றார். இதே போன்று காளஹஸ்திக்கு அருகில் தொண்டைமானாற்றூர் என்ற இடத்தில் சோழமன்னன் பராந்தக சோழனின் தந்தையும் விஜயாலய சோழனின் மகனுமான ஆதித்த  சோழனுக்கு பள்ளிப்படைக் கோயிலொன்று உள்ளது.  தொண்டைமானூற்றூரில் ஆதித்த சோழன் இறந்தமையால் இவர் தொண்டமானாற்றூர் துஞ்சிய தேவர் என வழங்கப்படுகின்றார்.

இதனை அடுத்து சோழப் பேரரசன் பராந்தகனுடையை மைந்தன் அரிஞ்சய சோழனுக்குப் பள்ளிப்படைக் கோயிலொன்று வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலைக்கு அருகில் மேல்பாடி என்ற இடத்தில் பொன்னையாற்றின் கரையில் அமைந்துள்ளது. சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்தில் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் பாலாற்றின் கரை வழியாக இப்பகுதிக்கு படைகளுடன் வந்து பராந்தக சோழனின் மைந்தன் இராஜாதித்யன் தலைமையில் இருந்த சோழர் படைகளை தாக்குகின்றார். இறுதியாக தக்கோலம் என்ற இடத்தில் இராஜாதித்யன் மூன்றாம் கிருஷ்ணனால் கொல்லப்படுகின்றார். இராஜாதித்யனின் தம்பிகள் கண்டாரதித்தன் மற்றும் அரிஞ்சயன்.  பராந்தக சோழனுக்கு பின் கண்டராதித்தனும் அவருக்குப் பின் அரிஞ்சயனும் பட்ட மேற்கின்றான். அரிஞ்சயன் முதலாம் இராஜராஜானின் பாட்டனாவார். அரிஞ்சயன் இறந்த பின் அவருக்கு பள்ளிப்படை ஒன்றை மேல்பாடியில் முதலாம் இராஜாராஜ சோழன் கட்டுகின்றார்.

மேல்பாடியில் உள்ள அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை சிறிய கற்றளியாகும். இக்கோயிலில் உள்ள கல்வெட்டு பள்ளிப்படையான அரிஞ்சிகை ஈஸ்வரம் என இக்கோயிலைக் குறிப்பிடுகின்றது. இக்கோயிலுக்கு அருகில் வடக்குப் பகுதியில் சிவனுக்காக தனியாக மற்றொரு கோயில் ஒன்று உள்ளது. பொதுவாக பள்ளிப்படைக் கோயில்கள் சிவன் கோயிலுக்கு அருகில் தனியாக சிறிய கோயில்களாக அமைந்திருக்கும். 

தமிழகத்தில் மிக அதிகமான பள்ளிப்படைக் கோயில்கள் இருந்த பகுதி சோழர்களின் பூர்விக ஊரான பழையாறைப் பகுதியாகும். தாராசுரம் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று இப்பகுதியிலிருந்த பள்ளிப்படைக் கோயில்களைக் குறிக்கின்றது. இப்பள்ளிப்படைக் கோயில்களில் குறிப்பிடத்தக்க பள்ளிப்படைக் கோயில் முதலாம் இராஜேந்திர சோழனை வளர்த்த பேரரசி பஞ்சவன் மாதேவிப் பள்ளிப்படையாகும். தாராசுரத்திற்கும் பழையாறைக்கும் இடையில் அமைந்துள்ள இராமநாதன் கோயில் என்னுமிடத்தில் பஞ்சவன் மாதேவிக்காக இராஜேந்திர சோழன் பள்ளிப்படைக்கோயிலொன்றை  எழுப்புகின்றான்.

சோழப் பேரரசர்களில் முதலாம் இராஜாராஜனின் பள்ளிப்படைக் கோயில் கும்பகோணம் அருகிலுள்ள உடையாளூர் என்ற இடத்தில் உள்ளதாகக் கூறுவர். இவ்வூரிலுள்ள பால்குளத்து அம்மன் கோயில் தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டின் அடிப்படையில் இவ்வூரில் தான் இராஜராஜன் இறந்திருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது. மேலும் இவ்வூருக்கு அருகில் தான் இராஜாராஜனின் தளபதி கிருஷ்ணன் இராமனின் அமண்குடி என்னும் ஊரும் உள்ளது. இராஜாராஜன் முதுமைக் காலத்தில் இப்பகுதியில் தங்கி இருந்திருக்க வேண்டும். மேற்கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் மூலமே அவற்றை உறுதி செய்ய இயலும்.

இராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழனின் பள்ளிப்படைக் கோயிலொன்று காஞ்சிபுரத்துக்கு அருகில் பிரம்மதேசம் என்ற இடத்தில் இருப்பதாகக் கருதுவர். பிரம்மதேசம் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று இராஜேந்திரசோழனின் மனைவி வீரமாதேவி என்பவர் தனது கணவர் இராஜேந்திர சோழன் இறந்தபின் அவர் இறந்த இடத்தில் நெருப்பை மூட்டி தீப்பாய்ந்து உயிர் விடுகின்றாள். அரசி வீரமாதேவியின் மனம் சாந்தியடைய அவளது அண்ணன் இக்கோயில் பகுதியில் தண்ணீர் பந்தல் ஒன்றை வைக்கின்றார். எனவே இராஜேந்திர சோழனின் பள்ளிப்படை காஞ்சிபுரத்திற்கு அருகில் இருந்துள்ளது. இக்கல்வெட்டு உள்ள பிரம்மதேசம் கோயில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதைக் கல்வெட்டு உறுதி செய்வதால் இக்கோயில் இராஜேந்திர சோழனின் பள்ளிப்படையாகக் கருத இயலாது. 

இதே போன்று விக்கிரமசோழனின் பள்ளிப்படைக் கோயில் ஒன்றை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகில் பள்ளிப்படை என்னும் பெயரில் ஊர் ஒன்றும் உள்ளது. தென் தமிழகத்தில் பாண்டியர்களும் இறந்தவர்களுக்கு அவர்களது நினைவாக பள்ளிப்படைக் கோயில்களை கட்டுவித்து வழிபட்டனர்.

பாண்டிய நாட்டில் திருச்சுழியில் சுந்தரபாண்டியன் பள்ளிப்படைக் குறித்து கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தற்பொழுது கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிண்ணிமங்கலம் பள்ளிப்படைக் கோயில் இந்தியாவின் பழமையான பள்ளிப்படையாகத் திகழ்ந்தது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. மேற்குறித்த தரவுகளின் மூலம் கிண்ணிமங்கலத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பள்ளிப்படை சமாதி கோயில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளதும் இங்கு கிடைத்துள்ள வட்டெழுத்துக்  கல்வெட்டும் ஓலைச்சுவடிகளும் இம்மடத்தின் பழமையைக்  குறிப்பிடுவதுடன் மதுரை நாயக்கர் காலம் வரை சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதையும் அறிய முடிகிறது. எனவே கிண்ணிமங்கலம் ஊரிலுள்ள பள்ளிப்படைக் கோயில்  இந்தியாவின் பழமையான பள்ளிப்படைக்  கோயிலாகவும் வைதீகத்திற்கு அப்பாற்பட்ட மட அமைப்பைக் கொண்டு  தமிழர்களுக்கான மடமாக குறிப்பாக வேளாண் சார்ந்த மக்களின்மடமாக  விளங்கி வருகின்றது என்பதையும் அறிய முடிகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் இம்மடம் நலிவுற்று தனது சிறப்பை  இழந்துள்ளது. இம்மடத்தின் தற்போது உள்ள நிருவாகி அருளானந்தம் பல  செவி வழிச் செய்திகளை கள ஆய்வின் போதும் குறிப்பிட்டார். அவற்றின் பல வரலாற்றுச் செய்திகளும் இம்மடத்தில் தொன்று தொட்டு சமூக சேவைகளும் கல்விச் சேவைகளும் ஆற்றி வந்துள்ளமையை அறிய முடிகிறது.  இம்மடத்தில் தமிழ்ச் சமூகம் சார்ந்த பல கலைகள் தொடர்ந்து கற்றுக் கொடுக்கப்பட்டன. இவை தற்பொழுது நடைபெறுவதில்லை. அக்கலைகள் குறித்து உரிய ஆவணங்கள் கிடைப்பின் இம்மடத்தின் வரலாற்றை மேலும் அறிவதற்கு ஏதுவாக அமையும்.


--------------------------
நன்றி:  'சாசனம்' தொல்லியல் ஆய்வு இதழ் 


No comments:

Post a Comment