Monday, March 15, 2021

ஓர் அமெரிக்கப் பெண்மணியின் குப்பைக்காரி உத்தியோகம்

 ஓர் அமெரிக்கப் பெண்மணியின்  குப்பைக்காரி உத்தியோகம் 


-- முனைவர் சிவ இளங்கோ,  புதுச்சேரி


மிஸ் காதரீன் மேயோ (American historian - Katherine Mayo, 1867-1940) என்பவர் ஓர் அமெரிக்கப் பெண்மணி. இவர் 1925 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா வந்தார். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் இந்திய மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அமெரிக்க மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில், கப்பலில், அன்றைய பம்பாய்த் துறைமுகம் வந்து இறங்கிய அவர், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்குச் சென்றார். மகாத்மா காந்தி உட்படப் பல்வேறு ஆளுமைகளைச் சந்தித்துப் பேட்டி கண்டார். பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், பிரிட்டிஷ் இந்தியாவில் தான் கண்டவற்றை, கேட்டவற்றைத் தொகுத்து ஒரு நூல் எழுதினார். அதற்கு "மதர் இந்தியா" என்று பெயரிட்டார் (இது பின்னர் இந்திய மொழிகளிலும் வெளியானது. தமிழில் அன்னை இந்தியா, இந்திய மாதா, இந்தியத்தாய்). 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நூல் வெளியாகி இங்கிலாந்திற்கும், இந்தியாவிற்கும் அதன் பிரதிகள் வந்தடைந்தன. அந்நூல் இந்தியாவில் விடுதலைப் போராட்டக் காரர்களின் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இங்கிலாந்திலும், இங்கிலாந்தின் பிற காலனி நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் ஆதரவும், எதிர்ப்பும் கூடிய பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

Katherine_Mayo_1928_mother_india.jpg

இலண்டன் ஜோனாதான் கேப்பு என்ற புகழ்பெற்ற புத்தக நிறுவனம் 1927ஆம் ஆண்டில் மதர் இந்தியா (அன்னை இந்தியா) என்னும் நூலைப் பதிப்பித்தது. அன்றைய இங்கிலாந்தின் பேரரசர், பிரதம அமைச்சர், இந்தியாவின் வைஸ்ராய் (கவர்னர் ஜெனரல்) ரீடிங் பிரபு, பிரிட்டிஷ் இந்தியக் காவல்துறை உயர் அதிகாரி ஜே. எச். ஆதாம், பிரிட்டிஷ் இந்தியப் பொதுச் செய்தி நிறுவன இயக்குநர் ஜான் கோட்மன், இந்திய ஐக்கிய மாகாணங்களின் ஆளுநர்கள் உட்படப் பல்வேறு பிரிட்டிஷ் இந்திய உயர் அதிகாரிகளும் அந்நூலை வெகுவாகப் புகழ்ந்து உரைத்தனர். இங்கிலாந்தின் முக்கியமான பத்திரிகைகளான நியூ ஸ்டேட்ஸ்மேன், ஸ்பெக்டேட்டர், லண்டன் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளும் 'இந்தியாவைப் பற்றித் திறந்த மனதுடன் உண்மைகளை எடுத்துரைத்த நூலாக' இந்திய மாதாவைக் குறிப்பிட்டன. 

இந்தியர்களைப் பற்றி ஓரளவு அனுதாபத்துடன் கூடிய பார்வையைக் கொண்ட அமெரிக்காவிலும் இந்நூல் வெளியிடப்பட்டு, அமெரிக்கப் பொதுக்கருத்தை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் அமெரிக்காவில் மிகப் பரவலாகப் படிக்கப்பட்ட, பெருவாரியாக விற்பனையான புத்தகமாகவும் 'அன்னை இந்தியா' திகழ்ந்தது. 'இந்திய மெய்ஞானம் வெறும் சகதிக்குழி' என்றும், 'இந்தியச் சமூக அமைப்பின் சீரழிவை வெளிக்கொணர்ந்த துணிவுள்ள புத்தகம்' என்றும், 'நிச்சயமாக இதுதான் புத்தகம்' என்றும் நியூயார்க் டைம்ஸ், தி சர்வே போன்ற அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகைகள் கருத்துரைத்தன. அதேநேரம் நியூ ரிபப்ளிக் போன்ற இந்தியருக்குச் சாதகமாகப் பேசும் ஒரு சில அமெரிக்கப் பத்திரிகைகள் மேயோவின் மேலாதிக்கப் பார்வையை விமர்சித்தும் எழுதின.

இந்தியர்களின் போக்கில் இந்நூல் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டது. 'இது ஒரு சாக்கடை மேற்பார்வையாளரின் அறிக்கை' என்றார் காந்தியடிகள் (யங் இந்தியா, 15.9.1927). சுகாதாரப் பிரச்சினைகளில் மேயோ ஈடுபாடு கொண்டவர் ஆதலால், இந்தியாவின் சுகாதாரமற்ற சமுதாய வாழ்க்கைகளை நேரடியாகப் பார்த்தறிந்து வந்தமையால், தன் வேலையைக் 'குப்பைக்காரி உத்தியோகம்' என்று அவரே தன் நூலில் குறிப்பிட்டு இருந்தமையே, காந்தியடிகள், 'சாக்கடை மேற்பார்வையாளர்' என்று குறிப்பிடுவதன் மூலம் தன் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், 'தந்தை இந்தியா: அன்னை இந்தியாவிற்கு ஒரு பதில்' என்ற தலைப்பில் சி. எஸ். ரங்கய்யர், 1928 ஆம் ஆண்டில் ஒரு நூல் எழுதினார். 'மேயோவின் நூல் இந்தியாவிற்கும், இங்கிலாந்துக்கும் பகைமையை வளர்க்கும் நூல்' என்று 'தந்தை இந்தியா' உறுதியாகக் கூறியது. 'கண்ணாடி வீடும் கல்லெறிதலும்' என்ற தலைப்பில் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த 'அமிர்த பஜார் பத்திரிகை' (24. 12.1927) தலையங்கம் தீட்டியது. 'வெறி பிடித்து ஓடும் ஒரு நாகரீகத்தின் வினோத கதை' என்று ஒரு நூலைக் கன்னையா லால் கௌபா என்பவர் லாகூரில் இருந்து 1929 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இப்படி இந்தியா முழுவதிலும் இருந்து மேயோ எழுதிய அன்னை இந்தியா நூலுக்குப் பெரும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் இருந்தன. சரி, அப்படி என்னதான் எழுதிவிட்டார் மேயோ, அவரது அன்னை இந்தியா நூலில்?

சுருக்கமாகக் கூறினால் இந்தியருடைய வறுமைக்கும், அறியாமைக்கும், கல்விக் குறைவிற்கும், தைரியமின்மைக்கும், அடிமைப் புத்திக்கும் காரணம் அவர்கள் அதிகமாகச் சிற்றின்பத்தில் உழன்று கிடப்பது தான் என்று கூறியிருந்தார் மேயோ. சிற்றின்பப் பிரியர்களின் மோகத்தால், இந்தியச் சமுதாயத்தில் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் விபச்சாரம் பெருகி இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் இந்தியாவில் பெண்ணடிமை உச்ச நிலையில் இருப்பதையும் குறிப்பிட்டார். மேலும் குழந்தைத் திருமணத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பாலியல் கொடுமைகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் விரிவாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால் விதவை நிலை அதிகமாவதைப் பற்றியும் அவர் நிறைய புள்ளிவிவரங்களுடன் கூறியிருந்தார். இவை அத்தனையும் பார்ப்பனர்களின் மேலாதிக்கத் தன்மை காரணமாக, கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்தியாவில் நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார். இதைப்பற்றி பெரும்பான்மையான மக்கள், பெரிய சிந்தனை ஏதும் இல்லாமல், அதற்கு அடிமைப்பட்டுப் போவதையே தங்கள் வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பதாகவும் அவர் தனது அன்னை இந்தியா நூலில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்துமதத்தின் சாதிக் கட்டுப்பாடுகள் குறித்துக் கூறும் போது, பிராமணர்கள் இந்துப் புராணங்களையும், வேதப் புத்தகங்களையும் மேற்கோள் காட்டி, சமூகத்தில் தங்களுக்கென்று ஒரு மேல் நிலையை வரித்துக்கொண்டு, அந்நிலையைத் தங்கள் சுயநலத்திற்கும், சுய மேம்பாட்டிற்கும் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் மேயோ விரிவாக எழுதியிருந்தார். இந்த முயற்சியில் ஒரு பெருவாரியான மக்கள் தொகை எவ்வாறு மனித நிலையில் இருந்து கீழே இறக்கப்பட்டுத் தீண்டப்படாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள் என்பதையும் அவர் விரிவாகக் கூறியிருந்தார். 

மேயோ எழுதிய 'அன்னை இந்தியா' என்னும் நூல் வெளியிடப்பட்ட செய்தி, 1927 ஆம் ஆண்டு ஜூலை மாதக் கடைசியில் இந்தியாவுக்கு எட்டியவுடன், நாடு முழுவதும் ஒரு பெரும் புயலை எழுப்பியது. அது தம்முடைய நாகரீகம், நடத்தை இவற்றைக் களங்கப்படுத்தும் செயல் என இந்தியர்கள் கருதினர். இவ் வெளியீட்டினால் ஆங்கிலேயரை உள்ளூர சந்தேகித்ததுடன், அரசியல் சட்டச் சீர்திருத்தம் கோரும் இந்திய வாதங்களை அவமதிப்பது தான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்றும் இந்தியர்கள் கருதினர். இந்தியா ஓர் ஆன்மீகப் பூமி என்று அமெரிக்கர்களை நம்ப வைத்து அதன்மூலம் கிடைக்கும் அனுதாபத்தைக் கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரம் விரைவில் இந்தியாவில் முடித்து வைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தியப் பிரச்சாரம் முன்னரே தொடங்கப் பட்டிருந்தது. சுவாமி விவேகானந்தர் தொடங்கி, அன்னை இந்தியா நூல் அமெரிக்காவில் வெளியான காலத்தில், அங்கு இதுபோன்ற பிரச்சாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லாலா லஜபதிராய், பண்டித மதன் மோகன் மாளவியா வரை இந்தப் பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டு வந்தனர். இந்த நேரத்தில் மேயோ எழுதி வெளிவந்த அன்னை இந்தியா என்ற நூலால், 'இந்திய மெய்ஞானம் வெறும் சகதிக்குழி' என்ற கருத்துரை அமெரிக்கப் பத்திரிகைகள் மூலம் பரவிய நிலையில், இந்திய ஆன்மிகத்தின் அடிநாதமான வைதிகக் குடுமிகள் எல்லாம் தங்கள் கூந்தலை அள்ளி முடியத் தொடங்கின. 

இதனால் மேயோவின் இந்தியப் பயணத்தின் நோக்கத்தையே சந்தேகத்துப் பல குரல்கள் எழுந்தன. இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கம், இந்திய ஏழை மக்களுக்குப் பாதுகாவலனாக விளங்குவதாகவும், அதனால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் தொடர்வதே நல்லது என்ற ஒரு பொதுக்கருத்தை அமெரிக்காவில் ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிடப்பட்ட சதியே, மேயோவின் இந்தியப் பயணம் என்று காந்தி உட்படப் பலரும் கருத்துரைத்தனர். பனியாக்களின் குரலே இப்படி என்றால் பிராமணப் பார்ப்பனர்களின் கூச்சலைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை என்ற அளவில் கண்டனங்கள் எழுந்தன. முதல் உலக யுத்தம் முடிந்த உடனேயே பிரபல அமெரிக்கப் பத்திரிகை ஆசிரியர்களையும், அரசியல் விமர்சகர்களையும் இந்தியாவிற்கு வரவழைப்பது என்றும், அதன் விளைவாக, அவர்கள் அமெரிக்கா திரும்பியதும் இந்தியாவில் ஆங்கிலேய அரசாட்சியைப்  பற்றிப் புகழ்ந்து, பிரச்சாரம் செய்வார்கள் என்றும் ஆங்கிலேய அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தார்கள் என்றும் மனோரஞ்சன் ஜா என்பவர், தனது 'காதரீன் மேயோவும் இந்தியாவும்' என்ற நூலில் (பக். 28-49) குறிப்பிடுகிறார். மேயோவிற்கு முன்னர், பியர் லோட்டி என்ற பிரெஞ்சுக்காரர், 1899 ஆம் ஆண்டு தொடங்கி நான்கு ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்தியா முழுக்கப் பயணம் செய்து, தான் சந்தித்த அனுபவங்களை 'Sans les Anglais' என்ற தலைப்பில் பிரெஞ்சு நூலாக வெளியிட்டார். இது ஆங்கிலத்தில் 'India without the English' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் இல்லாத இந்தியா என்று தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இதுவும் பிரிட்டிஷ்காரர்களே இந்தியாவைத் தொடர்ந்து ஆள்வதற்காகத் திட்டமிட்டு எழுதப் பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பிரிட்டிஷ்காரர்கள், தொடர்ந்து இதுபோன்ற சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது இந்திய மதவாதிகளின் குற்றச்சாட்டாக இருந்தது (தினகரன் செல்லையா, முகநூல், 12.3.2021).

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவே, பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் துணையுடன் அரசாங்கச் செலவிலேயே மேயோ இந்தியா முழுவதிலும் பயணித்தார் என்றும், அவரது முழுப் பயண விவரங்களும், சந்திப்புகளும் முன்னரே ஆங்கிலேய அதிகாரிகளால் திட்டமிடப்பட்டவை என்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இதற்காகச் சில ஆங்கிலேய கனவான்களுடன் "பழக்கம்" செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது என்ற அளவில்கூட மேயோ குற்றம் சாட்டப்பட்டார் (ஜா, பக். 33). இந்த அடிப்படையில் இந்திய வைசிராயும், உயர் அதிகாரிகளும் மேயோவிற்கு வழி காட்டினர் என்றும், மேயோவின் கட்டளைக்கு அரசு இயந்திரம் காத்திருந்தது என்றும், ஆங்கிலச் செய்தி நூலகம் (அமெரிக்கா), அயல் விவகார அலுவலகம், பிரிட்டிஷ் இந்திய அலுவலகம் ஆகியவை மேயோவிற்கு அதிக அளவில் உதவின என்றும் இந்தியக் குற்றச் சாட்டுகள் எழுந்தன (ஜா, பக். 38).

இதற்குப் பக்க பலமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் பணிகளைப் பாராட்டி மேயோ கூறியவற்றை மேற்கோள் காட்டினார்கள். இந்திய நாட்டுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலந்தொட்டு ஆங்கிலேயர்கள் செய்துள்ள நன்மைகள் யாவை என்பதைப் பற்றி மேயோ இப்படிக் கூறி இருந்தார்.  "இந்து மரபுகள், பழக்கங்கள் ஆகியவற்றின் பிடிவாதத் தடைகளையும் மீறி, இந்திய மக்களுக்குக் கல்வி வசதி அளிக்க ஆங்கிலேயர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், பஞ்சத்தை ஒழிப்பதற்கும், இந்திய விவசாயத்தையும், தொழில் துறையையும் நவீனப் படுத்துவதற்கும், ரயில் பாதைகள் அமைத்து மின்சாரத் திட்டங்கள் கொணர்ந்து நீர்ப்பாசன வசதிகள் செய்வதற்கும் காட்டிய ஆங்கிலேயரின் கொள்கைகள், அவற்றின் வெற்றி, சுயாட்சிக் கலையில் இந்தியர்களைப் பயிற்று விக்கும் பொருட்டு அரசியல் அமைப்பில் திருத்தங்கள் ஆகியவற்றைத் தொடங்க ஆங்கிலேயர் உண்மையான மனதுடன் செய்த முயற்சிகள்" ஆகியவற்றைப் பாராட்டி அந்த நூலில் மேயோ கூறி இருந்தார். இப்படி இருந்தும் 'இந்தியா ஏன் தாழ்ந்த நிலையில் இருக்கிறது?' என்ற கேள்வியை எழுப்பி, அதற்குப் பதிலாக "அது ஆங்கிலேயரின் குற்றமல்ல என்றும், இந்திய மக்களின் சோம்பேறித்தனம், உதவி இல்லாமை, சுயத் தன்மை இன்மை, சுய ஆர்வம் இன்மை, தொடர்ந்த நம்பிக்கையின்மை, தொடர்ந்து செயலாற்றும் சக்தி இன்மை, உற்சாகமின்மை, வாழும் சக்தியின் பலவீனம்" ஆகியவை தான் அந்தக் குற்றத்திற்குப் பொறுப்பு என்றும், அதற்கும் அடிப்படை மத வழி தொடரும் அடிமை மனப்பான்மை என்றும், ஆங்கிலேயக் காவல்துறை உயர் அதிகாரியான ஜே. எச். ஆதாமின் கருத்தை வழிமொழிந்து எழுதியிருந்தார் மேயோ. அன்னை இந்தியா நூலுக்கு எழுந்த எதிர்ப்பைப் பற்றிப் பிரசங்கம், பத்திரிகைகள் மூலம் கருத்துரைத்த மேயோ, "புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பல இந்தியர்களை வேதனைக்குள் ஆழ்த்தும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும், இந்தியர்களிடம் கொண்ட அன்பால் அல்ல - அவர்களுடைய அல்லல்களைக் கண்ட பின்புதான் அவதிப்படும் மக்களுக்கு உதவும் ஆர்வம் ஏற்பட்டது" என்றும் கூறினார். "ஒரு சாதாரண இந்தியனின் பொது வாழ்க்கையைப் பற்றிய உண்மைச் சித்திரத்தை அமெரிக்கர்களுக்கு அளித்து, தம்முடைய நாட்டுக்குச் சேவை செய்யும் மற்றொரு சந்தர்ப்பத்தைப் பெறுவதுதான் அன்னை இந்தியா எழுதத் தூண்டிய முக்கிய நோக்கம்" என்பது தான் மேயோவின் கருத்தும், பதிலுமாக இருந்தது.

காதரீன் மேயோ இந்தியா வந்தபோது, முதலில் சென்ற இடம் கொல்கத்தா. அங்குள்ள பிரசித்தி பெற்ற காளி கோயிலையும் அங்கு நடந்த நிகழ்வுகளையும் பார்த்த மேயோ நடுநடுங்கி விட்டார். முதலில் காளிதேவியின் தோற்றமே அவரைத் திகிலுக்கு உள்ளாக்கி விட்டது. ரத்தம் தோய்ந்த தொங்கும் நாக்கு, கையில் ரத்தம் சிந்தும் அறுபட்ட மனிதத் தலை, மற்றக் கைகளிலும் ஏகப்பட்ட கொடூரமான ஆயுதங்கள் என்று இருக்கும் காளியைப் பார்த்து, 'ஏன் இப்படி' என்றதற்கு, பெரும் கடவுளின் மனைவியான காளிக்குச் 'சதா நாசம் செய்வதும், அழிப்பதும், ரத்தம் சிந்துவதுமே தலையாய வேலை' என்ற பதிலில் ஆடிப்போன மேயோ, 'இதெல்லாமா கடவுள் வேலை' என்று நினைத்துக் கொண்டதை எழுத்தில் வடித்தார். 

இதைவிடவும் அவரை அதிரவைத்த ஒரு நிகழ்வை இப்படிக் குறிப்பிடுகிறார் மேயோ. "கோயிலுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த இரு குருக்களில் ஒருவர் ஆட்டுக்குட்டியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். மற்றொருவர் தன் கையிலிருந்த கூரிய கத்தியால் ஒரே வெட்டில் இரண்டு துண்டாக்கி விட்டார். ஆட்டுக்குட்டியின் உடலிலிருந்து ரத்தம் ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது. காளிதேவிக்கு முன்னால் இடி முழக்கம் போல் மேள வாத்தியமும், கணீர் கணீர் என மணி ஓசையும் ஒருபக்கம் காதைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. கூட்டத்திற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண் கூட்டத்தை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னால் விரைந்து வந்தாள். சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து அங்கு சிந்திக்கிடந்த இரத்தத்தை நாக்கினால் நக்கினாள். இவ்விதம் செய்தால் தனக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை அப்பெண்ணுக்கு உண்டு. இன்னும் சில நிமிடங்களுக்குள் இன்னொரு பெண் வந்து தன்னுடைய சேலையின் ஒரு மூலையை அந்த ரத்தத்தில் நனைத்துக்கொண்டு அப்புறம் நகர்ந்தாள். இதன் பின் பல நாய்கள் வந்து அந்த ரத்தத்தை நக்கிக் கொண்டிருந்தன. இவ்விதமாக ஒவ்வொரு நாளும் நூறிலிருந்து இருநூறு ஆட்டுக் குட்டிகள் வரை பலியிடப்பட்டு வருகின்றன" (இந்திய மாதா,பக். 5,6).

மேயோ இந்தியா வந்து முதன்முதலாகக் கொல்கத்தா நகரில் காளி கோயிலுக்குப் போனதற்குக் காரணமே சுவாமி விவேகானந்தர் தான். அவர் அமெரிக்காவில் இந்தியாவின் ஆத்மசக்தி, துவைதம், அத்வைதம், வேதாந்தம் என்றெல்லாம் உரையாற்றி, உலகின் மிகச் சிறந்த ஆன்மிகப் பூமியாக இந்தியாவைப் படம்பிடித்துக் காட்டி இருந்தார். 'எனது குருநாதர்' என்ற தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றிய போது, அவரது குருநாதரான ராமகிருஷ்ண பரமஹம்சர் சேவை புரிந்து வந்த கோவிலான காளி கோயில் பற்றியும் மிக உருக்கமாகப் பேசினார். அதை அமெரிக்கப் பத்திரிகைகளும் பிரமாதமாக எழுதின. இதையெல்லாம் கேட்டும், படித்தும் சொக்கிப் போனவர்கள், பக்தி மார்க்கத்தில் இந்தியாவை இமயமலை போல் பார்த்தனர். அதையே நேரில் காண வந்த மேயோவின் கதி, இந்தியாவில் தங்கியிருந்த பல நாட்களின் இரவில் பயத்தினால் தூக்கம் இழந்ததுதான். அக்கோயிலில் உயிர்ப்பலி நிகழ்த்தியவர்களும் பிராமணர்களே. அக்கோயிலை மேயோவுக்குச் சுற்றிக் காட்டி விளக்கமளித்த ஹல்தார் குடும்பமும் பிராமணக் குடும்பம்தான். கோயிலில் நிகழ்ந்ததை இந்திய மாதா நூலில் எழுதியதற்கு மேயோவைப் 'பன்னாடை', 'குப்பைக்காரி', 'சாக்கடை இன்ஸ்பெக்டர்' என்றெல்லாம் வரிந்துகட்டியதும் பிராமணர்களும் அவர்களின் அடிவருடிகளும் தான்.

காளி தேவி என்னும் பெண் கடவுளைப் பெரும் கடவுளாகக் கொண்ட இந்தியாவில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளை மேயோவின் நூல்வழிப் படித்த அமெரிக்கர்கள் பலரும் தங்களின் இரவுத் தூக்கம் போய்விட்டது என்று புலம்பித் தீர்த்தனர். "நூலின் ஒவ்வொரு வார்த்தையும் அச்சமூட்டுவதாக இருந்தது; ஆபாசக் கோரங்கள் நடமாடும் ஒரு கூடம்; அறிந்து செய்யாத கோரங்கள்; நூலைப் படித்த அன்று இரவு தூங்க முடியவில்லை" என்பதெல்லாம் அமெரிக்கப் பத்திரிகைகளில் மதிப்புரை எழுதியவர்களின் கருத்துகள். "ஒரு பெண்ணாகவும், இந்துவாகவும் பிறப்பதுதான் ஒரு மனித உயிருக்கு நிகழக் கூடிய மாபெரும் துரதிர்ஷ்டம்" என்று நியூயார்க் டைம்ஸில் மதிப்புரை வார்க்கப்பட்ட நூலின் ஆசிரியரான மேயோ, இந்தியப் பெண்களின் அவல நிலை குறித்துக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:

"பன்னிரண்டு வயது உள்ள ஓர் இந்தியச் சிறுமியை எடுத்துக் கொள்வோம். உடம்பில் எலும்பும் தோலும் தவிர வேறொன்றுமில்லை. அச்சிறுமியோ கல்வி பயிலாதவள். அறிவைப் பெறாதவள். தேக சௌக்கியத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை எவரும் அச்சிறுமிக்குக் கற்பிக்கவில்லை. இந்நிலைமையில் அவள் ஒரு குழந்தையைப் பெற்று விடுகிறாள். கணவன் என்ன சொல்லுகிறானோ அதன்படி ஆட வேண்டியதே அவளுடைய பாடம். இப் பாடம் தான் அவள் பெற்றோரிடம் இருந்தும், மற்றவரிடமிருந்தும் கற்றுக்கொண்டது. இளம் பிராயத்தில் உள்ள ஒரு சிறுமி, உடலில் போதிய சக்தி இல்லாத ஒரு சிறுமி, படும் பிரசவ வேதனையை நாவால் எடுத்துரைக்க இயலாது. இவ்வித வேதனைக்குப் பின் பிறக்கும் குழந்தை உயிருடன் ஜீவித்திருப்பது அரிது. கல்யாணமாகி ஒரு வருடத்திற்கு உள்ளேயே சில பெண்களுடைய உடலில் பலவித மேகரோகங்கள் (பால்வினை நோய்கள்) பரவி, அதன் பயனாக அவர்களுடைய கர்ப்பப்பை கெட்டுவிடுகிறது. ஒரு பெண்ணுக்கு வெகு சிறு வயதிலேயே மணம் செய்விக்கப்பட்டது. பத்து வயது ஆனவுடன் அவளைப் பெற்றோர், புருஷன் வீட்டுக்கு அனுப்பினர். அங்குப் புருஷன் கொடுத்த தொந்தரவை அவளால் சகிக்க முடியவில்லை. மிகவும் மிருகத்தனமாகவே புருஷன் அவளை நடத்தினான் எனக் கூறவேண்டும். தன்னுடைய மனதிற்கு ஏற்றவாறு அவள் நடந்து கொள்ள வில்லை ஆகையால் அவளை அடிப்பது வழக்கம். நாளடைவில் அச்சிறுமி மிகவும் மெலிந்து விட்டாள். புருஷனுடைய கொடுமை சகிக்க முடியவில்லை. எழுந்திருக்கவும் சக்தியற்று வீட்டின் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தாள். இனி அவளை வீட்டில் ஒரு நிமிஷ நேரம் கூட வைத்திருக்கக் கூடாது என எண்ணிய புருஷன், அவளைத் தன் தோளின் மீது தூக்கிக் கொண்டு மனித சஞ்சாரம் இல்லாத ஒரு வனத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பினான். பெண்களைப் புருஷர்கள் மிகவும் கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். இந்தியாவின் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும் பெண்களின் விஷயம் இது போலவே தான் இருக்கிறது. இது சம்பந்தமாக ஒரு பிரபல ஆங்கிலேய ஸ்திரீ வைத்தியரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் என்னிடம் கூறியதாவது: இந்தியப் பெண்களில் உடல் வலிமை உள்ளவர்களைப் பார்ப்பதென்பது மிகவும் துர்லபம். அதிகமாகச் சிற்றின்பத்தில் ஈடுபடுவதும், புருஷர்கள் பெண்கள் விஷயத்தில் கொஞ்சமும் இரக்கமின்றி நடந்து கொள்வதுமே இதற்குக் காரணம். புருஷர்களில் பெரும்பாலோருக்கு மேகரோகம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று தடவைகளுக்கு அதிகமாகவே புருஷர்கள், பெண்களுடன் புணர்ச்சி செய்கிறார்கள்" (இந்திய மாதா, பக். 20,28,67,71,73).

இந்திய மகளிர் இந்த அளவிற்குத் துன்பத்திற்காளாவதற்குக் காரணம் குழந்தை மணம் தான். "இளமையிலேயே மணம் செய்து, இளமையிலேயே உலக இன்பத்தை அனுபவித்து விட்டு, இளமையிலேயே மடிந்து விடுவதுதான் இந்தியர்கள் உடைய வாழ்வின் நோக்கமாய் முடிந்துவிடுகிறது...இந்தியர்களுடைய சராசரி வயது 23 தான். இதற்குக் காரணம் சுகாதாரமின்மை தான் என டாக்டர் ஹரி பிரசாத் என்பவர் கூறுகிறார்" என்று மேயோ குறிப்பிடுகிறார் (இந்திய மாதா, பக். 38,58). இந்திய அரசாங்கத்தின் 1921-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் குழந்தை மணம் குறித்து, "இந்தியாவில் உள்ள ராஜீய வாதிகள் ஏதேதோ சமூகச் சீர்திருத்தம் செய்து விட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இந்தியாவில் பால்ய விவாகம் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றது. ஒரு பெண் பக்குவ தசை அடைந்த சில நாட்களுக்குள் அவளுடன் புருஷன் சம்போகம் செய்துவிடுகிறான். அவளுடைய தேகம் சரிவரப் பக்குவமடையாது இருக்கும் முன்னரே, அவளுக்குச் சரீரத்தில் போதிய வலிமையும், சக்தியும் மேம்படுவதற்கு முன்னரே, புணர்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவதால், அவள் உடல் வலிமை அற்று வெகு சீக்கிரத்தில் நோயாளி ஆகி விடுகிறாள்" என்று அரசாங்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது (இந்திய மாதா, பக். 55).  

சரி, இந்தியாவை ஆளும் ஆங்கிலேயே அரசாங்கம் இந்தக் கொடுமைகளுக்கு என்ன பரிகாரம் செய்தது? பெண்ணடிமை ஒழிப்பு என்ற நிலையில் பிரிட்டிஷ் அரசாங்கம் குழந்தை மணத்தைத் தடுக்க நினைத்தாலும் அதன் கரத்தை இரு விலங்குகள் சூழ்ந்திருந்தன. ஒன்று, இந்தியர்களின் மதம் தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில்லை என்பது பிரிட்டிஷ் பேரரசின் கொள்கை. இரண்டாவது, நடைமுறைப்படுத்த முடியாத எந்த சட்டத்தையும் அரசாங்கம் அனுமதிப்பதில்லை. உடன்கட்டை ஒழிப்பு, தீ மிதித்தலுக்குத் தடை போன்ற சில சீர்திருத்தங்களைப் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்திருந்தாலும், நடைமுறையில் அது அவ்வளவாகச் சாத்தியம் இல்லாமல் போனதற்கு இவைதான் காரணம். என்றாலும், 1891ஆம் ஆண்டு பெண்களின் திருமண வயதை 12 ஆகத் தீர்மானிக்கும் சட்டம் இந்திய மத்திய சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் வைதிகர்களின் ஆத்திரம் அரசாங்கத்தின் மீது வசையாகப் பொழிந்தது. சட்டத்தைச் சட்ட சபை உறுப்பினர்களே மதிக்கவில்லை. குழந்தை மணக் கொடுமைகள் தொடர்ந்தன. பிறகு ஒவ்வோர் ஆண்டும் இது குறித்து சட்டசபையில் விவாதம் தொடர்ந்து நடந்தது. மதம், முன்னோர் வழக்கம் என்ற இரு கேடயங்கள் வைதிகர்களுக்குப் பேராயுதமாய் இருந்தன. சீக்கியரான சர்தார் பகதூர் கேப்டன் ஹீரோசிங் பிரார் என்ற சட்டசபை உறுப்பினர் பேசும் போது, 'ஒன்பது, பத்து வயது உள்ள பெண்ணையும், பத்துப் பன்னிரண்டு வயதில் உள்ள ஓர் ஆணையும் மனைவி, புருஷன் என அழைப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' என்று கேட்டதற்குச் சபையில் 'இல்லை, இல்லை' என்ற கூக்குரல் எழுப்பப்பட்ட பெருமைக்கு உரிய உறுப்பினர்களைக் கொண்டதுதான் இந்தியச் சட்டசபை. (இந்திய மாதா, பக். 57). 

இந்தியச் சட்ட சபையில் மேற்கூறிய தீர்மானம் நிறைவேறாமல் போனதற்கு வைதீகர்கள் சொல்லும் காரணத்தைச் சட்டசபையில் உறுப்பினர்கள் கூறும்பொழுது, "பெண்ணின் சம்மதம் கேட்டுத் திருமணம் முடிப்பது மதத்திற்கு முற்றிலும் விரோதமானது; பலபேர் கொண்ட குடும்பத்தில் நன்னடத்தையுடன் ஒரு பெண்ணை வயது வரும் வரை வைத்துக் காப்பாற்ற முடியாது; மணம் முடிவதற்குள் ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால் அவளை மணமுடிக்க முடியாது" என்று இதுபோன்ற காரணங்களை வைதிகர்கள் அடுக்கிக்கொண்டே போனபோது, (இந்திய மாதா, பக். 45) இதற்கான பதில் ஆங்கிலேயர்களிடம் இல்லாமல் போனது. தன்னைத்தானே 'காட்டுமிராண்டி' என்று சொல்லிக் கொள்பவனைப் பார்த்து 'நீயும் மனிதன் தான்' என்று எத்தனை முறை வாய் ஓயாமல் சொல்ல முடியும்? என்பதுதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்திருக்க முடியும். இதற்குப் பின்னரும், 1925ஆம் ஆண்டு இந்தியா சட்டசபையில் பெண்களின் திருமண வயதை பதினான்கு ஆக நிர்ணயிக்கக் கொண்டு வரப்பட்ட மசோதாவும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானது. திவான்பகதூர் டி. ரங்காச்சாரி, பண்டித மதன் மோகன் மாளவியா, எம். கே. ஆச்சார்யா மற்றும் சில பார்ப்பன உறுப்பினர்களும் எதிர்த்துப் பேசினர். திரு ஆர். கே. சண்முகம், எம். அரிவிலாஸ் சாரதா, அமர்நாத் தத்தர் ஆகியோர் ஆதரித்துப் பேசியும், வைதீகத்தின் அருளால், மசோதா காகித அளவிலேயே நின்று போனது. (இந்திய மாதா, பக். 45-49).

குழந்தை மணத்தை விடக் கொடுமையான இன்னொரு இந்தியப் பண்பாடு தேவதாசி முறை. இது குறித்த விவாதங்களும் இந்தியா சட்டசபையில், மேயோவின் இந்திய வருகைக்கு முன்பாகவே நிகழ்ந்திருந்தன. இந்தியக் கோயில்களில் உள்ள தேவதாசி முறைகளைப் பற்றி மேயோ இவ்வாறு குறிப்பிடுகிறார். "இந்தியாவின் பல பாகங்களில், முக்கியமாக சென்னை மாகாணத்திலும், ஒரிசா பிரதேசங்களிலும் உள்ள இந்துக்கள் ஏதோ சில தேவதைகளைத் திருப்திப்படுத்தும் பொருட்டு, தங்களுக்குப் பிறக்கும் அடுத்த குழந்தை பெண் குழந்தையாய் இருக்குமாயின், அதைக் கோயிலுக்கு, கடவுளின் பொருட்டுக் கொடுத்து விடுகிறோம் என ஒரு பிரார்த்தனை செய்து கொள்வதுண்டு. அல்லது தான் மிகவும் அன்பாக வளர்த்துவரும் ஒரு குழந்தையைக் கோயிலுக்குக் கொடுத்து விடுவதென நிச்சயம் செய்து கொள்வதும் உண்டு. இவ்விதம் கோயிலுக்குத் தத்தம் செய்யப்படும் பெண்களுக்குக் கோயிலில் நாட்டியமும், சங்கீதமும் கற்பிக்கப்படுகின்றன. அனேகமாய் அப்பெண்ணுக்கு வயது ஐந்து ஆன உடனே, கோயில் குருக்கள் அவளிடம் விபச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறான்" (இந்திய மாதா, பக். 59). இப்படிப்பட்ட தேவதாசி முறை ஒழிப்பு மசோதா, எத்தனை எதிர்ப்புக்கு உள்ளானது என்றும், சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தேசபக்தர்கள் அதைக் கடுமையாக எதிர்த்ததும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்கிற பெண்மணியின் எதிர்ப்புக்குரல் சென்னை மாகாணச் சட்டசபையில் பதிவானதும் பலரும் அறிந்த செய்திதான்.

இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நிலவிய இந்தியச் சமூகங்களின் அவல நிலைகளை நேரில் கண்டு நூல் எழுதியமைக்காக மேயோ பெற்றுக்கொண்ட கண்டனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் அவருடைய கருத்துக்கு ஆதரவில்லாமலும் போகவில்லை. 'இந்திய மாதா' தமிழ்ப் பதிப்பு வெளியான அதே ஆண்டிலேயே, கோவை அ. அய்யாமுத்து மேயோவின் கருத்துக்களை ஆதரித்துக் குடியரசு இதழில் தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அவை, "மேயோ கூற்று மெய்யா - பொய்யா?" என்ற தலைப்பில் நூலாகப் பல பதிப்புகள் வெளிவந்தது. 1935 ஆம் ஆண்டில் ஈரோடு உண்மை விளக்கம் பிரஸ் வெளியீடாக இந்நூலை வெளியிட்ட தந்தை பெரியார், மேயோ சொன்னவை அனைத்தும் நீண்ட காலமாகப் பல பெரியோர்களும், சுற்றுலாப் பயணிகளும் கூறியவைதான்; கபிலர், திருவள்ளுவர், முதற்கொண்டு விவேகானந்தர், காந்தி அடிகள் வரை இச்சீர்கேடுகள் இந்தியாவில் நிலவி வருவதைச் சுட்டிக்காட்டி உள்ளனர்; எனவே இதை மீண்டும் சுட்டிக் காட்டிய மேயோவைக் கண்டனம் செய்வதை விட்டுவிட்டு, அக்குறைகளைக் களைய வழி தேட வேண்டும் என்று அந்நூல் முன்னுரையில் தந்தை பெரியார் கூறியிருந்தார். இதே கருத்தைத் தனது நூல் முழுவதும் வலியுறுத்தி உள்ள கோவை அய்யாமுத்து தனது நூலின் இறுதிப் பக்கத்தில் இப்படிக் கூறி முடிக்கிறார்.

".....இதைத்தான் மேயோவும் கூறியுள்ளார். நீங்கள் அதை அறியாமல் வெம்பி வீழ்ந்தீர்கள். பார்ப்பனியத்தில் நீங்கள் சிக்குண்டு கிடப்பதால் உங்கள் பொருளையும், நேரத்தையும் சடங்குகளிலும், கோயில்களிலும், அர்ச்சகர்களிலும், உற்சவங்களிலும், தாசி, வேசிகளிலும் வீணாக்குகிறீர்கள். ஆண்டவன் பெயரால் மிருகங்களைப் பலி கொடுக்கிறீர்கள். பிள்ளை வரத்திற்காகக் கற்பை இழக்கிறீர்கள். தீர்த்தம், தீர்த்தம் என்று மலத்தைக் குடிக்கிறீர்கள். இதை எடுத்துக் காட்டினவர்களைக் குப்பைக்காரி என்று குறை கூறினீர்கள். வெறும் பேச்சுப் பேசி வெட்கமுறுகிறீர்கள். சின்னஞ் சிறுமிகட்குச் சிறுவயதிலேயே விவாகம் செய்து சிற்றின்பத்தாலே சீர்கெட்டுப் போனீர்கள். விபச்சாரம் வேணும் வேணும் என்றீர்கள். விபச்சாரத்தைத் தேவர்களும் கைக் கொண்டு உள்ளார்கள் என்று புராணம் படிக்கிறீர்கள். பெண்களை அடிமை கொண்டீர்கள். அவர்களுக்குக் கல்வி மறுத்தீர்கள். சிறைப்படுத்தினீர்கள். விதவைத் தன்மையை ஏற்படுத்திக் கொடுமைப்படுத்தி அவர்களது கற்பழித்தீர்கள். கருவழித்தீர்கள். சிசுக்கொலை புரிந்தீர்கள். கர்ப்பிணிகளைக் கவனியாமல் வற்புறுத்தினீர்கள். பூணூல் பார்ப்பானின் பாதம் வருடினீர்கள். உங்கள் பெண்டு பிள்ளைகளையும், பொருள்களையும், சகல சுகபோகங்களையும் பார்ப்பனனுக்கு மனு சட்டப்படி சொந்தம் ஆக்கினீர்கள். பஞ்சமர்களை வஞ்சகமாய் நடத்தினீர்கள். அவர்களுக்குக் கல்வி, நல்ல உணவு, நல்ல உடை, நல்ல குடிசை மறுத்தீர்கள். இன்னும் எவ்வளவோ சொல்லுக்கு அடங்காத ஊழல்களையும், ஆபாசங்களையும், மூடத்தனங்களையும் நீங்கள் ஆபரணமாகப் பூண்டுள்ளீர்கள். இவைதான் நீங்கள் கட்டிய வீடு. இவற்றினின்று நீங்கள் என்று விலகுகிறீர்களோ, இத்துன்ப வீட்டை என்று நீங்கள் தகர்த்து எறிகின்றீர்களோ, அன்றுதான் உங்கள் "கர்மபலன்" உங்களை விட்டு அகலும். அன்றுதான் நீங்கள் சுயராஜ்ய வீரர்கள் ஆவீர்கள்".

இன்றைக்கு 96 ஆண்டுகளுக்கு முன்பு காதரீன் மேயோ இந்தியா வந்த 1925 ஆம் ஆண்டு, இந்திய வரலாற்றில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. அகில இந்திய அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில்தான், இன்னொரு வலதுசாரி இயக்கமாக ராஷ்ட்ரிய சேவா சங்கம் உருப்பெற்றது. அதே காலத்தில்தான் இடதுசாரிச் சிந்தனைகளும், இயக்கங்களும் தோன்றத் தொடங்கின. இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் மாநாடு கான்பூரில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையில் நடந்தது. தமிழ்நாட்டில் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் தோன்றி, நீதிக் கட்சியாக நிலைபெற்று, இரட்டை ஆட்சி முறையில் பங்கேற்றது. குடியரசு இதழ் வழி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கினார். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கல்வியை முடித்துப் பாரிஸ்டர் பட்டத்துடன் 1923 இல் இந்தியா திரும்பிய டாக்டர் அம்பேத்கர், அடிமை விலங்கொடிக்க முன்வந்து சுய உதவி, சுயமுயற்சி, சுயமரியாதை என்ற கொள்கை முழக்கங்களுடன் பம்பாய் மாகாண நகரங்களில் 1925 ஆம் ஆண்டில் தன் புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார். 1928ல் இந்தியாவின் எதிர்காலம் குறித்து ஆராய வந்த சைமன் குழுவை, சுயமரியாதை இயக்கம் தவிர, அனைத்து இயக்கங்களும் நிராகரித்த நிலையில், டாக்டர் அம்பேத்கர் அக்குழுவிடம் 23.10.1928 அன்று சாட்சியம் அளித்தார் (தனஞ்செய் கீர், பக். 70-94, 164). இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் மேயோ வின் வருகை 1925 ஆம் ஆண்டிலும், அவரது இந்திய மாதா என்னும் நூல் வெளியீடு 1927 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தன. இந்தியச் சமூகம், அமெரிக்கர்களால் அறியப் பட்டிருந்ததை விட மிகப் பிற்போக்குத் தனமாக இருப்பதையும், அதற்கு வைதீக மதம் காரணமாக இருப்பதையும் அறிந்து அதையே தனது நூலில் எழுதினார். மேலும் நிறவெறி, இனவெறி என்பதை மட்டுமே அறிந்திருந்த மேற்கு உலகம், இந்தியாவின் சாதியக் கட்டமைப்பைச் சரிவரப் புரிந்து கொள்ளாத நிலையிலும், மனித உரிமை என்ற நோக்கில் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தின் அவசியம் குறித்தும் மேயோ எழுதினார். அமெரிக்க வெள்ளையர்களின் புராட்டஸ்டண்ட் ஆதிக்கத்தால் கத்தோலிக்கர்களையும், கறுப்பர்களையும் விமர்சித்து எழுதிய மேயோவின் போக்கு, அவரது இந்தியப் பயணத்திற்குப் பின்னர் மனித உரிமைக் குரலாக மாறி இருந்தது. குறிப்பாக இந்தியாவின் இடதுசாரிச் சிந்தனைகளுக்குக் காதரீன் மேயோ நூல்களில் ஆதரவு நிறைந்திருந்தது. அதனால் அது மத உணர்வுகளுக்கு எதிராகக் கற்பிக்கப்பட்டது. வைதிகம் கூறும் வர்ணாசிரம அடிப்படையில் இந்திய மக்களை எடைபோடும் அன்னிபெசன்ட் அம்மையாரின் பார்வை மேயோவிடம் இல்லை என்பதே காந்தி போன்ற மதச் சீர்திருத்த வாதிகளும் மேயோவை எதிர்க்கக் காரணமாயிற்று. இந்த எதிர்ப்பில் விளைந்த விவாதங்கள், இந்தியாவில் சமூக மாற்றத்தை நோக்கிய ஒரு கருத்துப் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தன என்பதை மேற்கண்ட வரலாற்றுச் செய்திகள் தெளிவாக்குகின்றன. அதற்காக மேயோவிற்கும், அவரது நூல்களுக்கும் நன்றி செலுத்துவதை இந்தியக் கடமையாகவே கருதலாம்.


சான்று நூல்கள்:
1. காதரீன் மேயோ, இந்திய மாதா, 1927, (முதல் பக்கம் இல்லாததால் வெளியிட்டவர் பற்றிய குறிப்பு இல்லை. பின்னட்டை நூல் விளம்பரம் ஒன்றில், திருநெல்வேலி முத்தையா பிரசில் அச்சடிக்கப்பட்டதாகக் குறிப்பு உள்ளது). 

2. கோவை அ. அய்யாமுத்து, மேயோ கூற்று மெய்யா பொய்யா? (மூன்றாம் பதிப்பு), 1935, உண்மை விளக்கம் பிரஸ், ஈரோடு. 

3. மனோரஞ்சன். ஜா, காதரீன் மேயோவும் இந்தியாவும், தமிழாக்கம் வெங்கட சாமிநாதன், 1987, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 

4. தனஞ்செய். கீர், டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, 1992, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமை கட்சி, சென்னை.

5. விக்கிபீடியா-https://en.m.wikipedia.org


----------------



No comments:

Post a Comment