Sunday, March 14, 2021

‘கதை’ப்பிடிக்கப்படுவதற்காக ஓர் உலக நாள்!


‘கதை’ப்பிடிக்கப்படுவதற்காக ஓர் உலக நாள்!

-- அ. குமரேசன்


 
உலகத்தில் கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்தது ஒன்று உண்டு – உலகம்தான் அது! புவியில் மனித இனம் பரிணமித்ததைத் தொடர்ந்து, அது மானுட சமூகமாக உருவெடுத்தற்கு அடிப்படையான காரணம் ஒவ்வொரு மனிதரும் தான் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களுக்குத் தெரிவிக்கத் தொடங்கியதேயாகும். இந்தத் தகவல்தொடர்புச் செயல்பாட்டால்தான் பேரண்ட ரகசியங்களையே ஆராய்ந்து கண்டுபிடிக்கிற அறிவு வளர்ச்சி மனிதர்களின் தனித்துவமாகியது. ஒரு தகவலை அல்லது ஒரு புரிதலை எப்படித் தெரிவித்தார்கள் என்றால் கதையாகத்தான். “என்ன நடந்துச்சு தெரியுமா” என்று அனுபவங்கள் ஒவ்வொன்றையும் “ஆ… ஊ…” என்ற ஒலிக்குறிகளாக, கைகளின் அசைவுகளாக, கால்களின் குதியாட்டங்களாகக் கதையாக்கிப் பகிர்ந்தார்கள். மொழிகள் முகிழ்த்தபின் பேச்சாகவும் எழுத்தாகவும் கதையாடலைத் தொடர்ந்தார்கள். கைகளின் அசைவுகளையும் கால்களின் குதியாட்டங்களையும் நடனங்களாக, நாடகங்களாக உருவெடுக்கச் செய்தார்கள்.

ஆம், கதை சொல்லும் கலை பொழுதைப் போக்குவதற்கானது அல்ல, பொழுதை ஆக்குவதற்கானது. போய்விட்ட பொழுதில் நடந்ததைச் சொல்வதன் மூலம், வரவிருக்கும் பொழுதில் நடக்க வேண்டியதை உணர்த்துகிறது கதை. இன்று வரையில் மனிதர்களின் பேச்சுகள், செய்திகள், கண்டுபிடிப்புகள், தத்துவ விசாரணைகள், வரலாறுகள், வழிகாட்டல்கள் யாவும் கதையாகச் சொல்லி, கதையாகக் கேட்டே நிகழ்ந்துவந்துள்ளன. ஆசைகள், அவலங்கள், வேதனைகள், சாதனைகள், நம்பிக்கை இழப்புகள், புதிய வெளிச்சங்கள் அனைத்தும் கதையாகவே வெளிப்படுத்தப்படுகின்றன.




உணவும் சுவாசமும் போல நாள்தோறும் நிகழ்கிற இந்தக் கதை சொல்லலைக் கொண்டாடுவதற்கென்றே ஓர் உலக நாள் வருகிறது! உலக மகிழ்ச்சி தினம் என்று ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அதே மார்ச் 20, அவ்வாறு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாமலே உலக கதை சொல்லல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது (கதைப்பிடிக்கப்படுகிறது?).

1991ல் சுவீடன் நாட்டில் இலக்கிய அன்பர்களால் “அனைத்துக் கதை சொல்லிகள் நாள்” என்று தொடங்கப்பட்டது. 1997ல் ஆஸ்திரேலியாவில் ஐந்து வார கதைக் கொண்டாட்டம் மேற்கொள்ளப்பட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்கெனவே தேசிய கதை சொல்லிகள் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 2002ல் ஸ்காண்டிநேவியா இலக்கிய ஈடுபாட்டாளர்கள் ‘ராட்டாடோஸ்க்’ என்ற பெயரில், கதை சொல்வதற்கென்றே ஒரு வலைத்தளத்தைத் தொடங்கினார்கள்.

அணில் வளர்த்த கதையுறவு!
நார்வே உள்ளிட்ட நாடுகளின் பாரம்பரியக் கதைகளில் வருகிற ஒரு வகை அணிலின் பெயர் ராட்டாடோஸ்க். உலகமரத்தில் ஏறி இறங்கிக்கொண்டே இருக்கிற அந்த அணில், வானத்தில் பறக்கிற கழுகுக்கும் தரையில் ஊர்கிற பாம்புக்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்துகொண்டிருக்குமாம். உலகமரம், கழுகு, பாம்பு, தகவல் பரிமாற்றம் என்ற உருவகங்கள் இடையறாத கருத்துப் பகிர்வுச் செயல்பாட்டை ஒரு தத்துவமாகச் சொல்கின்றன. அந்த ராட்டாடோஸ்க் அந்த வட்டாரங்களின் நாட்டுப்புறக் கதைகள் முதல் இன்றைய முப்பரிமாணக் கணினி வரைகலைக் கதைகள் வரையில் புத்திசாலி அணிலாக, குறும்புக்கார அணிலாக, சாகச அணிலாக, சதி செய்யும் அணிலாக எனப் பலப்பல கதாபாத்திரங்களில் உலா வந்துகொண்டே இருக்கிறது.

ராட்டாடோஸ்க் வலைத்தளம், கதை சொல்லல் அனுபவத்தையும் அதற்கான தேசிய நாளையும் டென்மார்க், பின்லாந்து, எஸ்டோனியா உள்ளிட்ட மற்ற நாடுகளின் கதைக் காதலர்களிடையேயும் கொண்டுசென்றது. 2003 வாக்கில் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி, உலக கதை சொல்லல் தினம் என்றே அடையாளம் பெற்றது. இந்தியாவிலும் பல கதை சொல்லல் குழுக்கள் இந்த நாளை சிறப்பு ஏற்பாடுகளுடன் கடைப்பிடிக்கின்றன. சிறார் கதைகள் முதல், அரசியல், சமூகம், வரலாறு சார்ந்த ஆழமான படைப்புகள் வரையில் இந்த நாளில் பகிரப்படுகின்றன.

அதற்கேற்ப ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருள் தேர்வு செய்யப்படுகிறது. பறவைகள், பாலங்கள், நிலா, அலைந்து திரிகிறவர், கனவுகள், சுற்றத்தார், ஒளியும் நிழலும், நீர், மரங்கள், வாய்ப்பும் விதியும், அசுரப் பிறவிகளும் இறக்கை நாகங்களும், ஆசைகள், வலுவான பெண், மாற்றம், அறிவார்ந்த முட்டாள்கள், கட்டுக்கதைகளும் புனைவுகளும் காவியங்களும் என்ற தலைப்புகளில் முந்தைய ஆண்டுகளில் கதைகள் பேசப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு பயணங்கள் என்ற மையப்பொருளில் கதைசொல்லிப் பயணம் நடந்தது. உலக அளவில் தொடர்புள்ள கதையாடல் குழுக்களிடையே இந்தக் கருப்பொருள்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் மையக்கரு இனிமேல்தான் தெரியவரும்.

தலைமுறை தலைமுறையாய்
முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கைப் பாடுகளைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று கதைகள்தான் இன்றைய தலைமுறைகளுக்குத் தெரியப்படுத்தி வருகின்றன. இன்றைய தலைமுறைகளின் ஏக்கங்களை நீங்களாவது நிறைவேற்றுங்கள் என்று கதைகள்தான் நாளைய தலைமுறைகளுக்குத் தெரியப்படுத்தப் போகின்றன. கனவுலகத்திற்குள் குழந்தைகளை இட்டுச் செல்லும் மாயக்கதைகள் முதல், நனவுலகத்தை நல்லபடியாக்குவதற்குக் கொண்டுசெல்லும் மகத்தான படைப்புகள் வரையில் இது உயிரோட்டமாகத் தொடர்கிறது.

கொரோனாவால் வீட்டுக்குள் விரட்டப்பட்ட வாழ்க்கையின் கசப்புகளை மாற்றியதில் இணையவழி கதை சொல்லல் நிகழ்வுகளுக்குப் பெரும் பங்கு உண்டு. குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கதை சொல்கிற குழுக்கள் உருவாகி, நேரலைத் தளங்களில் சிறார் இலக்கியங்களை அவர்களிடம் கொண்டுசென்றன. குழந்தைகளுடன் பேசுகிற அத்தைகளும் மாமாக்களும் பாட்டிகளும் தாத்தாக்களும் புறப்பட்டு அவர்களைக் கதைகளால் அணைத்துக்கொண்டார்கள். குழந்தைகளே கதை சொல்கிறார்கள். தாங்கள் படித்த கதைகளைச் சொல்லத் தொடங்கியவர்கள், தாங்களே படைத்த கதைகளையும் சொல்கிறவர்களானார்கள். அந்தக் கதைகள் அச்சுப் புத்தகங்களாகவும், மின்னியல் நூல்களாகவும், அச்சுப் புத்தகங்களிலேயே காணொளி அனுபவத்திற்கு இட்டுச்செல்கிற புதிய தொழில்நுட்பங்களோடும் வெளிவந்திருக்கின்றன.

நண்பர் குழுக்களும், இலக்கிய அமைப்புகளும் ஆழமான கதை சொல்லல் நிகழ்வுகளுக்கு இணையத்தள மேடையமைத்துக் கொடுத்தன. நேரடியாக மக்கள் முன் மேடையேறிக் கதை சொல்லி உணர்ச்சிமயமாக்கியவர்கள் இப்போது இணையத்தள மேடைகளின் நேரலைகளில் தோன்றினார்கள். பார்வையாளர்களின் எதிர்வினைகளை நேருக்கு நேர் காண்கிற அனுபவத்திற்கு நிகராகாது என்றாலும், இடைக்கால மாற்றாக இந்த மேடை கைகொடுத்தது. கதைகள் இடம்பெற்ற புத்தகங்களையும், படைப்பாளிகளின் இதர புத்தகங்களையும் வாசிக்கிற விருப்பம் தூண்டப்பட்டிருக்கிறது.

களமாடுவோர் கவனத்திற்கு
கதையாசிரியர்கள் போலவே கதை சொல்லிகளிலும் தனித்திறனோடு உலா வருகிற நட்சத்திரங்கள் ஒளிர்கிறார்கள். படைக்கிறவர்களுக்கும் கேட்கிறவர்களுக்கும் இடையே அவர்கள் சொற்பாலம் அமைக்கிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, எல்லோருமே ஏதோவொரு வகையில் கதை சொல்லிகள்தான். நடந்தது என்ன என்று கேட்கிறவர்களிடம் நடந்ததை நடந்தபடியே யாரும் சொல்வதில்லை. ஏற்ற இறக்கங்களோடு, உணர்ச்சி கலந்துதான் சொல்கிறோம். அப்படிச் சொல்கிறபோதே எதை வெளிப்படுத்தலாம், எதை உள்ளேயே வைத்துக்கொள்ளலாம் என்று தேர்வு செய்து சொல்கிறோம். இதை இப்படிச் செய்திருந்தால் அப்படியாகியிருக்காது என்ற விமர்சனத்தையும் சேர்த்துச் சொல்கிறோம். நீங்களாவது புரிந்துகொண்டு இனிமேல் சரியாகச் செய்யுங்கள் என்ற நேரடி அறிவுரையோடு அல்லது உள்ளார்ந்த உணர்த்துதலோடு சொல்கிறோம். இப்படி ஏற்ற இறக்கங்களோடும், உணர்ச்சி கலந்தும், தேர்வு செய்தும், விமர்சனம் சேர்த்தும், உணர்த்துவதுதானே இலக்கியம்?

 நாட்டுப்புறக் கதைகள், புராணக் கதைகள், இதிகாசக் கதைகள், வரலாற்றுக் கதைகள், வாழும் காலத்துக் கதைகள், அறிவியல் புனைவுக் கதைகள், உளவியல் புரிதலுக்கான கதைகள் என அனைத்துவகை கதை இலக்கியங்களும் இதைச் செய்துவந்திருக்கின்றன. சமூகத்தைப் பழைய காலத்திற்குத் தள்ளிவிட விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள்தான். பழைய நாட்காட்டிகளுக்குத் திரும்ப முடியாவிட்டாலும் சமூகத்தைப் புதிய தேதிகளுக்குப் போகவிடாமல் இப்படியே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறவர்களும்   கதைபேசும் உத்திகளைக் கையாளுகிறார்கள். பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவன வளாகங்களில் கூட கதை சொல்லல் நிகழ்த்தப்படுகிறது. வெற்றிகரமான அரசியல் தலைவர்களின் உரைகளில் நிச்சயமாகக் கதைகள் இருக்கும். கதை எழுதுகிறவர்களும் சொல்கிறவர்களும் மட்டுமல்லாமல், சமூக மாற்றங்களுக்காகக் களமாடுவோர் எல்லோருமே இதையும் கவனத்தில் கொண்டு கதையாட வேண்டியிருக்கிறது. 



 நன்றி: ‘தீக்கதிர்’ நாளிதழின் ‘வண்ணக்கதிர்’  பதிப்பில் வெளியான நாள் - மார்ச் 14, 2021




No comments:

Post a Comment