Sunday, March 7, 2021

சிங்கப்பெண்ணே வெளியே வா

 சிங்கப்பெண்ணே வெளியே வா


-- நா. சாந்தகுமாரி தமிழரசன்


ஜன்னல் வழியாய் 
விண்மீன் பார்த்தது போதும் 
கதவு திறந்தால் 
காணக் கோடியுண்டு 
சிங்கப்பெண்ணே வெளியே வா......

வாசல் பெருக்கி கோலம் போட்டு 
வீடு துடைத்து தூபம் போட்டு 
பலப்பல பண்டங்கள் படைத்துத் தந்து 
உடுப்பு துவைத்து உலர்த்தி மடித்து 
அலுவல் செல்லும் அகம்படையார்க்குக் 
களைப்பு நீக்கக் காப்பித் தந்தாலும் 
ஊரார் மனைவி என்ன செய்கிறாள் என்றால்..... 
அவள் சும்மாதான் வீட்டிலிருக்கிறாள் என்ற 
ஒற்றைப் பதில் கேட்டு உடைந்துவிடாமல் 
சிங்கப்பெண்ணே வெளியே வா......

ஆக்கலும் நீ அழித்தலும் நீ 
ஐந்தொழிலுக்கும் பிறப்பிடம் நீ 
உணவு சமைப்பதிலே உலகோர்க்கு இதை 
உணர்த்தியவள் நீ 
சக்தி நீ சரித்திரம் நீ 
ஜனனத்தின் பிறப்பிடம் நீ 
மானுடத்தின் மகத்துவம் நீ 
பெண்மையில் பேராண்மை நீ 
சிங்கப்பெண்ணே வெளியே வா......

ஒற்றை மாம்பழத்தை 
உபகாரம் செய்ய உரிமையற்று 
கொடுத்த மாம்பழத்தை 
இறைவன் வழி பெற்றுத் தந்தும் 
ஏற்காத கணவனுடன் 
பெண்ணாய் வாழமுடியாமல் 
பேயாய் வடிவெடுத்த கதை அறியாயோ?...... 
சிங்கப்பெண்ணே வெளியே வா......

உலகில் வாழ்வது உயிர்களின் உரிமை 
உலகோர் இதை மறந்தது அறிவின் மடமை 
எதார்த்தமாய் இறந்த கணவனின் சிதையில் 
கட்டாயமாய்த் தள்ளப்பட்ட 
பெண்களின் கதைத் தொடராமல் 
சிங்கப்பெண்ணே வெளியே வா......

மூன்று வயதுக் குழந்தையும் 
முதுமை பெற்ற கிழவியும் 
தினம் தினம் வன்கொடுமையில் வருந்தியழ 
சட்டங்கள் மட்டும் என்ன செய்யும் 
பார்க்கும் பெண்களெல்லாம் 
பக்கபலமாய் நின்றால் 
ஏய்க்கும் மிருகங்கள் 
இடம் தெரியாமல் ஓடும்.... 
சிங்கப்பெண்ணே வெளியே வா......

விசித்திரப் பெண்ணே 
சரித்திரம் நீ காண 
மகளிர் தின நல்வாழ்த்துகள். 




வாழ்த்துகளுடன்..  
நா. சாந்தகுமாரி தமிழரசன்(தொடுவாய்) 
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், பூம்புகார்க்கல்லூரி.



No comments:

Post a Comment